Author: Viswanathan

  • நேர்முகம் 11: சாரதி வெங்கடராமன்

    நேர்முகம் 11: சாரதி வெங்கடராமன்

    சாரதி இணைய இதழில் இலக்கிய கட்டுரைகள் எழுதி வருகிறார். விஷ்ணுபுர இலக்கிய வட்டம் கலிஃபோர்னியா விரிகுடா பகுதி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்.

    உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், பின்னணி பற்றி?

    தமிழ்நாட்டில் சிவகாசிக்கு அருகிலுள்ள திருத்தங்கல் எனது சொந்த ஊர். அப்பாவின் பணி நிமித்தமாக என் சிறுவயதிலேயே மதுரையில் குடியேறினோம். பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் சென்ற ஆரம்பக் காலம் வரை முழுக்கவே மதுரைதான். மனதுக்கு மிகவும் நெருக்கமான ஊர். என் மகள் பெயர் மதுரா. 

    அப்பா ஒரு தனியார் மருத்துவமனையில் கம்பவுண்டராக இருந்தார். தாத்தா கோவில் மடப்பள்ளியிலும், பாட்டி ஒரு பட்டாசுத் தொழிற்சாலையிலும் வேலை செய்ய, வீட்டின் ஒட்டுமொத்தப் பொறுப்பும் அம்மாவிடம். சுஜாதாவின் வார்த்தைகளில் சொல்வதானால் ஒரு சரியான ‘மத்யமர்’ வாழ்க்கை. 

    கல்வி மட்டுமே எதிர்காலத்திற்கான திறவுகோல் என்று சொல்லியே வளர்க்கப்பட்டதால், இயல்பாகவே படிப்பிலும் அதன் நீட்சியாக வாசிப்பிலும் ஈடுபாடு வந்தது. இரு தலைமுறைகளின் கடின உழைப்பின் பலனான எனது பொறியியல் பட்டமும், இரண்டாயிரத்துக்குப் பின்னான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் முதலில் சென்னைக்கும் பின்னர் அமெரிக்காவுக்கும் என்னைக் கூட்டிவந்தன.  தற்போது கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில், மனைவி விஜயலஷ்மி மற்றும் மகளுடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறேன்.

    இலக்கிய அறிமுகம், வாசிப்பு படிநிலைகள் குறித்து?

    நான் வளர்ந்த சிவகாசி, மதுரையில் கோவில் திருவிழாக்களும் சினிமாவும்தான் முக்கியமான பொழுதுபோக்குகளாக இருந்தன. வீட்டின் பற்றாக்குறை பட்ஜெட்டில் புத்தகங்களுக்கு இடமிருக்கவில்லை. ஆனாலும் என் வாசிப்பை வீட்டில் ஒருபோதும் தடை செய்ததுமில்லை. சிறுவர் மலர், வாரமலர், விடுமுறையில் உறவினர் ஊர்களுக்குச் செல்லும்போது காமிக்ஸ் புத்தகங்கள், ஏழாம், எட்டாம் வகுப்பு படிக்கும்போதே ராஜேஷ்குமார், சுபா பாக்கெட் நாவல்கள் என என் வயதுக்கு ஏற்றவையா இல்லையா என்றெல்லாம் பார்க்காமல், கைக்குக் கிடைத்த அனைத்தையும் படித்துக்கொண்டிருந்தேன். 


    பத்தாவது படிக்கும்போது என்னுடைய நண்பனின் வீட்டிலிருந்து கல்கியின் சிவகாமியின் சபதம் நாவலைத் தற்செயலாக எடுத்துவந்து படிக்க ஆரம்பித்தேன். அந்த வரலாற்றுப் பின்புலமும், கல்கியின் நடையும் உடனே உள்ளிழுத்துக் கொண்டன. ஒரே இரவில் அதன் முதல் பாகத்தை முடித்துவிட்டு, மறுநாள் காலை ஆறு மணிக்கே அடுத்த பாகத்தை வாங்குவதற்காக அவன் வீட்டிற்குச் சென்று நின்றேன்(“படிக்கிற புள்ள பாடப்புத்தகம் கேட்டு வந்து நிக்குது, நீ இன்னும் தூங்குறியே” என்று வகுப்பின் முதல் மாணவனாகிய என் நண்பனுக்குத் திட்டு வேறு!). அதிலிருந்து கல்கி, சாண்டில்யன் என்று தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.


    பின்னர் விகடன் வழியாக சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் எழுத்துக்களுக்கு அறிமுகமானேன். அவர்கள் மூலமாகவே நவீன தமிழ் இலக்கியம் என்ற முற்றிலும் புதியதோர் உலகிற்கு அறிமுகம் கிடைத்தது. வேலைக்குச் சென்று புதிதாகச் சம்பளம் வாங்க ஆரம்பித்த பிறகு, ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையைப் புத்தகங்களுக்காக ஒதுக்கிவைப்பேன். அப்போது எஸ். ராமகிருஷ்ணன் பரிந்துரைத்த சிறந்த நூறு புத்தகங்களின் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு, சென்னையில் இருந்த புத்தகக் கடைகளுக்குச் சென்று தேடிப் பிடித்துப் புத்தகங்களை வாங்குவேன். அந்தக் காலகட்டத்தில்தான் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பலரையும் படிக்க ஆரம்பித்தேன்.


    நான் வேலை பார்த்த இடங்களுக்கெல்லாம் வீட்டிலிருந்து நீண்ட தூரம் பேருந்திலோ, ரயிலிலோ பயணம் செய்ய வேண்டியிருந்தது. அந்தப் பயண நேரத்தை முழுவதும் வாசிப்பதற்குப் பயன்படுத்திக்கொண்டேன். அந்த முதல் பத்து ஆண்டுகளில் நான் வாசித்த புத்தகங்கள்தான் இன்றுவரை என்னுடைய வாசிப்புப் பழக்கத்திற்கான அடிப்படையாக இருக்கின்றன. இப்போதும் எனது வீட்டிலிருந்து சான் பிரான்சிஸ்கோவிலிருக்கும் என் அலுவலகத்திற்கு செல்ல இரண்டு மணிநேரம் ஆகிவிடும். அந்த நேரத்தை என் வாசிப்பிற்கும், எழுதுவதற்கும் பயன்படுத்திக்கொள்கிறேன்.


    இளவயதிலிருந்தே காந்தி, நேரு போன்ற நேர்நிலை லட்சிய பிம்பங்கள் மீது எனக்கு பெரும் ஆர்வம் உண்டு. பள்ளி இறுதி நாட்களில் படித்த காந்தியின் சத்திய சோதனை எனக்கு மிக விருப்பமான புத்தகம். காந்தியைப் பற்றிப் பெருமிதமாக நான் பேசியதைக் கேட்ட கல்லூரி நண்பன் ஒருவன் டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ் எழுதிய ‘நள்ளிரவில் சுதந்திரம்’ புத்தகத்தைக் கொடுத்து இதைப் படி, அவர்களின் உண்மை முகம் தெரியும் என்று என்மேல் இரக்கமும் எள்ளலுமாகச் சொன்னான். பிரிவினையைச் சமாளிக்க இயலாமல் மவுண்ட் பேட்டன் முன் நேருவும் பட்டேலும் பள்ளிச் சிறுவர்களைப் போல கைகட்டி நின்றார்கள் எனக்கூறும் அந்தப் புத்தகம் எனக்கு அப்போது மிகவும் ஆயாசத்தைத் தந்தது. நல்லவேளையாக பஷீரும் அசோகமித்திரனும் பின்னாளில் ஜெயமோகனுமாக இலக்கியம் வழியாக நான் கண்டடைந்த காந்தி, என் இளவயது கனவுருவத்திற்கு மிக நெருக்கமாக இருந்தார். அரசியல் வரலாறும் வாழ்க்கை வரலாறும் ஆளுமைகளை மதிப்பிடுவதற்கான தகவல்களைத் தான் வழங்குகின்றன. ஆனால் ஒரு மனிதனின் அகச்சிக்கல்கள், அறப்போராட்டங்கள், முரண்பாடுகள் ஆகியவற்றுக்குள் சென்று அவனைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை இலக்கியமே அளிக்கிறது.

    இலக்கிய வாசிப்பு உங்களின் வாழ்க்கைப் பார்வையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து?

    வாழ்க்கை சிலருக்கு எல்லா வாய்ப்புகளையும் எளிதாக்கிவிடுகிறது. சிலருக்கோ அடிப்படைத் தேவைகளுக்குக் கூட எண்ணற்ற தடைகளை விதிக்கிறது. இந்த வேறுபாட்டை மிகச் சிறிய வயதிலேயே நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். திருத்தங்கலில் அரசுப்பள்ளியில் படிக்கையில், என் வயதொத்த பல சிறுவர் சிறுமிகள் பட்டாசுத் தொழிற்சாலைக்கும், தீப்பெட்டித் ஆலைகளுக்கும் வேலைக்குச் செல்வதைக் கண்டிருக்கிறேன். வருடத்திற்கு குறைந்தது இரண்டு மூன்று பெரும் விபத்துகளும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து அங்கு வேலைக்குச் செல்வதுண்டு. அவர்களால் எப்படி மரணத்தை அப்படி இயல்பாக எடுத்துக் கொள்ள் முடிகிறதென்று மிகத் திகைப்பாக இருக்கும். பின்னாளில் யோசிக்கும்போதுதான், அது மரணத்தின் மீதான அச்சமின்மை அல்ல; வேறு வழியில்லாத வாழ்க்கையின் நிர்ப்பந்தம் என்று புரிந்தது.


    மதுரையில் அப்பா பணியாற்றியது ஒரு சிறிய தனியார் மருத்துவமனையில். அந்த மருத்துவமனையில் அதன் உரிமையாளரான சேர்ந்த டாக்டரும், கம்பவுண்டராக அப்பாவும், உதவிக்கு இரு நர்சுகளும் மட்டும் தான். இருபத்தி நான்கு மணிநேரமும் இயங்கும் அந்த மருத்துவமனையின் பிரதான வருமானம் அங்கு வரும் தற்கொலை ‘கேஸ்’களிடமிருந்து தான் கிடைத்தது. போலீஸ் வழக்கு ஆகிவிடுமென்றெல்லாம் பயப்படாமல் விஷம் என்றாலும் தீக்குளிப்பு என்றாலும் எல்லாவற்றையும் அட்மிட் செய்துவிடுவார் அந்த டாக்டர். பணம் மட்டும் கட்டிவிட்டால் போதும். பெரும்பாலான நோயாளிகளை எப்படியும் காப்பாற்றி விடுவார்கள். அப்பாவிற்கு தினமும் மதியமும் இரவும் ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டிய வேலை. அதனால் பள்ளிக்குச் போக வருகையிலும், இரவு உணவு கொண்டு தருவதற்காகவும் நாங்களும் அங்கு செல்வதுண்டு. மரணத்துடன் போராடும் நோயாளிகளிடமும், அவர்களுக்காக அழுகின்ற உறவினர்களிடமும் வேறு மாதிரி பேசுகின்ற அப்பா, வீட்டிற்கு வந்தவுடன் அந்த உணர்வுகளையெல்லாம் சட்டையைக் கழட்டுவது மாதிரி எடுத்து வைத்துவிட்டு எங்களுடன் இயல்பாகச் சிரித்துப் பேசுவது மிக வியப்பாகவும், இதில் எது உண்மை என்ற கேள்வியும் என் மனதில் இருக்கும்.


    மனிதர்கள் வெளியில் காட்டும் முகத்திற்குப் பின்னால், நமக்குத் தெரியாத துயரங்களும் நிர்ப்பந்தங்களும் இருக்கலாம் என்ற புரிதல் இந்த அனுபவங்களிலிருந்து எனக்கு வந்தது. பின்னர் இலக்கியம் அந்த அனுபவங்களைப் புரிந்துகொள்வதற்கான மொழியையும் விரிவையும் எனக்குக் கொடுத்தது. ஒரு மனிதரின் செயல்களை மட்டும் வைத்து அவரை உடனடியாகத் தீர்மானிக்காமல், அவர் எந்தச் சூழ்நிலையிலிருந்து அந்த முடிவை எடுத்தார் என்று பார்க்கும் பழக்கத்தையும் வாசிப்பு வளர்த்தது.


    மற்றொரு எல்லையில் நின்று பார்க்கும்போது, வாழ்க்கை எனக்கு அளித்திருக்கும் வாய்ப்புகளின் பிரம்மாண்டத்தை உணர்வதற்கும் இலக்கிய வாசிப்பே உதவியிருக்கிறது. பள்ளி விடுமுறை நாட்களில், என் சித்தி ஊரான நெல்லையை ஒட்டிய ஆழ்வார் திருநகரிக்குச் சென்றுவிடுவது வழக்கம். தமிழ்நாட்டில் இன்றும் அரையர் சேவை எஞ்சியிருக்கும் மூன்று ஊர்களில் ஒன்று அந்த ஊர். என் சித்தப்பா தான் அங்கு அரையராக இருந்தார். அந்த ஊரின் அருகிலிருந்த, பல வருடங்களாகப் பராமரிப்பின்றிக் கிடந்த அப்பன் கோவில் என்ற ஆலயத்தில் பூசை செய்ய என் சித்தப்பா ஒத்துக்கொண்டார். அவரோடு நானும் சென்று அந்தக் கோவிலை சுத்தம் செய்தேன். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த இடமென்று கருதப்படும் ஒரு மேடை அந்தக் கோவிலுக்குள் உண்டு. வௌவால்களும் எலிப்புழுக்கைகளும் மண்டியிருந்த அந்த இடத்தைச் சரி செய்த அன்று, எனக்கு நம்மாழ்வாரை ஒரு கடவுள் உருவகமாக மட்டுமே தெரிந்திருந்தது. மிகப் பல வருடங்களுக்குப் பின்னர் ஜெயமோகனின் ஒரு கட்டுரையைப் படிக்கையில், இந்திய மரபின் உயர் தத்துவத்தை முதலிரு வரிகளில் கூறி, அடுத்த வரிகளில் தாயுள்ளத்தின் உணர்ச்சி வேகத்திற்குச் சட்டெனப் பாய்ந்து விடும் நம்மாழ்வாரின் கவிதைகள் “பறக்கும் யானை” என உள்ளத்தில் இறங்கின. தமிழ் மரபின் மாபெரும் கவி ஒருவனின் பிறந்த இடத்தைப் அருகிருந்து பார்த்திருக்கிறேன் என்ற உணர்வு அன்று பெரும் சிலிர்ப்பைத் தந்தது.


    நாம் நேரில் பார்த்த பல விஷயங்களின் ஆழமும் அருமையும், அந்தத் தருணத்திலேயே நமக்குப் புரிந்துவிடுவதில்லை. வாசிப்பு நமது கடந்தகால அனுபவங்களுக்குப் புதிய பொருளைக் கொடுக்கிறது. ஒரு பக்கம், மனிதர்களின் துயரங்களையும் நிர்ப்பந்தங்களையும் புரிந்துகொள்ள அது உதவுகிறது. மறுபக்கம், நமக்குக் கிடைத்த வாய்ப்புகளையும், நம்மைச் சூழ்ந்திருக்கும் மரபின் செழுமையையும் உணரச் செய்கிறது. அந்த வகையில் இலக்கிய வாசிப்பு என் வாழ்க்கைப் பார்வையை ஆழமாக மாற்றியிருக்கிறது என நம்புகின்றேன்.

    உங்களுக்குப் பிடித்த தமிழ் மற்றும் பிறமொழி எழுத்தாளர்கள் யார்?

    ஜெயமோகன் எனக்கு எப்போதுமே ஓர் ஆதர்சமான எழுத்தாளர். ஆனால் அவருடைய எழுத்துகளுக்கு நான் கொஞ்சம் தாமதமாகத்தான் அறிமுகமானேன். அதற்கு முன்பே புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ப.சிங்காரம், எஸ். ராமகிருஷ்ணன், சுஜாதா ஆகியோரின் படைப்புகளைப் படித்திருந்தேன். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் சுந்தர ராமசாமி, கி. ராஜநாராயணன், வைக்கம் முகமது பஷீரும் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள்.


    சு.ரா.வின் ஜேஜே சில குறிப்புகள் புத்தகத்தை பக்கத்திற்கு பக்கம் அடிகோடிட்டே வாசித்து முடித்தேன். அதில் வரும் இந்த வரிகள் எனக்கு மிக விருப்பமானவை. “என்னால் இவர்களுடன் உறவாட முடியாது . புழுதிப்பாய்ச்சல் மூளைகள். எனக்கு அளக்கத் தெரியவில்லை. பின்தொடரத் தெரியவில்லை. ஒத்துப்போக முடியவில்லை. கொஞ்சம் கனவுகள்; கொஞ்சம் அசட்டுத்தனம்; கொஞ்சம் புத்தி. இப்படி இருந்தால்தான் என்னால் சமாளிக்க முடியும்.” “உணவுதான் உணவு என்றாகி விட்டது. கனவுகள் உணவல்ல என்று வெகு தீர்மானமாக முடிவு செய்திருக்கிறார்கள்.எனக்கு நேர்மாற்றித்தோன்றுகிறது.”


    ஒவ்வொரு எழுத்தாளரும் தமது படைப்புகளின் வழியாகச் சில தனித்துவமான விழுமியங்களையும் வாழ்க்கைப் பார்வைகளையும் நமக்குள் கொண்டுவருகிறார்கள். ஜெயமோகனின் எழுத்துக்கள் என் வாசிப்பை மேலும் தீவிரப்படுத்தியவை. ஒரு படைப்பை அதன் கதைக்காக மட்டும் வாசிக்காமல், அதன் பின்னால் இருக்கும் வாழ்க்கைப் பார்வை, அறம், வரலாறு, தொன்மம் ஆகியவற்றோடும் இணைத்து வாசிக்கலாம் என்ற புரிதலை அவை ஏற்படுத்தின. விஷ்ணுபுரத்தின் பிரம்மாண்டமும், கொற்றவையின் வரலாற்றுத் தரிசனமும் என்னை உடனே உள்ளிழுத்துக் கொண்டன. ஆனால் அவற்றை விட ஒருபடி மேலாக எனக்கு பின்தொடரும் நிழலின் குரல் பிடித்திருந்தது. மதுரையின் கம்யூனிஸ்ட் எம்பி மோகன் சர்வசாதாரணமாக ஒரு பழைய டிவிஎஸ்50 வண்டியில் தனியாகச் செல்லும் எளிமையைக் கண்டு வியந்திருக்கிறேன். மக்களுக்காகப் போராடியதால் கொல்லப்பட லீலாவதி எங்கள் பகுதியைச் சேர்ந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முகத்தை மட்டுமே பார்த்து வளர்ந்திருந்த எனக்கு, எந்தக் கருத்தியல்வாதமும் அதன் கண்மூடித்தனமான எல்லைக்குச் செல்கையில் அதுவே பல உயிர்களைக் காவு வாங்கும் வன்முறைக்குக் காரணமாகிறது என்பதை அந்தநூல் உணர்த்தியது.


    கி. ராஜநாராயணனின் படைப்புகள் குறிப்பாக கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் ஆகியவை நிலம், மொழி, மக்கள் ஆகியவற்றின் உயிருள்ள தொடர்பைக் காட்டின. வைக்கம் முகமது பஷீரின் படைப்புகள் எளிமை என்பது ஆழமின்மை அல்ல என்பதை உணர்த்தின. நகைச்சுவை, துயரம், அன்பு, வறுமை, மனித அபத்தம் எல்லாவற்றையும் மிக இயல்பாக ஒரே உலகிற்குள் கொண்டுவர முடியும் என்பதை பஷீரிடம் கற்றுக்கொண்டேன். பாத்துமாவின் ஆடு, உப்பப்பவிற்கொரு ஆனை இருந்தது, மதிலுகள், பால்யகால சகி என அவரது எல்லா படைப்புகளுமே மனதிற்கு மிக விருப்பமானவை.


    பிறமொழி எழுத்தாளர்களில் டால்ஸ்டாய்(போரும் அமைதியும், அன்னா கரீனினா) , தஸ்தயெவ்ஸ்கி (கரமசோவ் சகோதரர்கள்), செகாவ் சிறுகதைகள், நிக்கோஸ் கசன்ட்ஸாகிஸ் (Zorba the Greek, The Last Temptation of Christ) ஆகியோரை மிகவும் பிடிக்கும். இந்தியாவின் பிறமொழி எழுத்தாளர்களுடைய படைப்புகளையும் தமிழ் மொழிபெயர்ப்புகளின் வழியாக வாசித்திருக்கிறேன். பொதுவாக நான் தமிழில்தான் வாசிக்க விரும்புகிறேன். தமிழில் அந்தப் புத்தகங்கள் கிடைக்காதபோது ஆங்கிலத்தில் வாசிக்கிறேன்.

    நம் புத்தக குழுவில் உங்கள் வாசிப்பு எப்போதும் விரிவானது. ஒரு படைப்பை அதன் பிரதிக்குள் மட்டும் நிறுத்தாமல் அது எழுதப்பட்ட பின்னணியையும் சேர்த்து வாசிப்பது குறித்து?

    ஒரு சிறுகதையை அந்தக் கதைக்குள் ஆசிரியர் கொடுத்திருப்பதை மட்டுமே கொண்டு மதிப்பிடுவதே சரியான முறை. ஒரு எழுத்தாளனோ அல்லது விமரிசகனோ அப்படிப் பார்ப்பதே சரி. ஆனால் ஒரு வாசகனாக அந்தக்கதைக்கு கொஞ்சம் வெளியேயும் சென்று, அந்த எழுத்தாளனின் ஒட்டுமொத்தக் கதையுலகில் இந்தக் கதை சென்று பொருந்துமிடத்தையும், இந்தக் கதைக்கு முன்னொட்டும் பின்னொட்டுமாக அவர் எழுதிய மற்ற கதைகளையும் சேர்த்துப் பார்ப்பது இன்னும் சிறப்பான வாசிப்பனுபவத்தைக் கொடுக்கின்றது.


    மேலும் ஒரு கதையை அதன் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மட்டுமே கொண்ட தனித்த உலகமாக என்னால் பார்க்க முடிவதில்லை. அது எழுதப்பட்ட காலம், அந்தக் காலத்தின் சமூக அமைப்பு, பொருளாதார உறவுகள், குடும்ப மதிப்பீடுகள், சாதி, பாலினம், அதிகாரம் போன்ற பல அம்சங்கள் கதைக்குள் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ செயல்பட்டுக்கொண்டே இருக்கும்.


    ஒரு கதாபாத்திரம் ஏன் அப்படி நடந்துகொண்டது என்ற கேள்வி எனக்கு முக்கியமானது. இன்றைய மதிப்பீடுகளை மட்டும் வைத்துக்கொண்டு கடந்த கால மனிதர்களைத் தீர்மானிப்பதிலும் தயக்கம் உண்டு. அதே நேரத்தில், ‘அந்தக் காலம் அப்படித்தான்’ என்று எல்லாவற்றையும் நியாயப்படுத்திவிடவும் முடியாது. அந்த இரண்டுக்கும் இடையில் நின்று கதையைப் புரிந்துகொள்ள முயல்வதுதான் வாசிப்பின் சுவாரசியமான பகுதி.

    “நான் ஏன் வாசிக்கிறேன்?” என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

    நம்முடைய சாதாரண வாழ்க்கையின் அன்றாடத்தன்மையிலிருந்தும் அதன் சலிப்பிலிருந்தும் விடுபடுவதற்காகத்தான் வாசிக்கிறேன் என்று சொல்லலாம். அன்றாட வாழ்க்கை ஒரே விதமாக நிகழ்ந்துகொண்டிருக்கும்போது, அந்த ஒரு வாழ்க்கை மட்டும் நமக்குப் போதுமானதாக இருப்பதில்லை. வாசிப்பின் மூலமாக வேறொரு காலகட்டத்தில், வேறொரு நிலப்பகுதியில், வேறுவிதமான மனநிலைகளிலும் குணநலன்களிலும் வாழும் கதாபாத்திரங்களுக்குள் சில மணி நேரங்களாவது நம்மால் வாழ முடிகிறது. நான் பிறக்காத காலங்களிலும், சென்றிராத இடங்களிலும், என்னிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட மனிதர்களின் வாழ்க்கைகளுக்குள்ளும் இலக்கியம் என்னை அழைத்துச் செல்கிறது. அந்த அனுபவம் எனக்கு மிகவும் தேவையானதாக இருக்கிறது.


    வாசிப்பு எனக்குத் தகவல்களை மட்டும் தருவதில்லை. நான் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும் கருத்துகளிலிருந்து என்னை வெளியே இழுக்கிறது. நான் எளிதாகத் மதிப்பிட்டுவிடக்கூடிய ஒருவரின் மனநிலைக்குள் சில நேரங்களாவது என்னை நிறுத்துகிறது.
    சில நேரங்களில் அந்த வாசிப்பு ஆறுதலாக இருக்கிறது. சில நேரங்களில் அது நம்மைத் தொந்தரவு செய்கிறது. நாம் தவிர்க்க விரும்பும் கேள்விகளை நம் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறது. அந்த அமைதியின்மையும் வாசிப்பின் முக்கியமான பயன்தான்.


    இதற்கு ஜெயமோகனின் படைப்புகளையே உதாரணமாகச் சொல்லலாம். அவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் இருந்த பல கதைகளை மிகுந்த ஆர்வத்துடன் திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். ஆனால் டார்த்தீனியம் என்ற கதையை முதன்முதலில் வாசித்தபோது, அது எனக்குள் ஒரு பெரிய நடுக்கத்தை ஏற்படுத்தியது. அந்தக் கதை என்னை அவ்வளவு தொந்தரவு செய்ததால், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அதை மீண்டும் வாசிப்பதற்கான தைரியம் எனக்கு வரவில்லை.


    இதன் இன்னொரு எல்லையாக குமரித்துறைவியைச் சொல்லலாம். அது முழுக்க முழுக்க மங்கலமும் இனிமையும் நிறைந்த ஒரு படைப்பு. அதை மீண்டும் வாசித்தால், முதல்முறை வாசிப்பில் ஏற்பட்ட அந்த இனிமை குறைந்துவிடுமோ என்ற அச்சத்தினாலேயே அதன் மறுவாசிப்பைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன்.


    இப்படி முற்றிலும் வேறுபட்ட இரண்டு எல்லைகளிலும் வாசிப்பு தொடர்ந்து என்னைத் தள்ளிக்கொண்டே இருக்கிறது. நான் நினைத்திருப்பதைவிட உலகம் மிகப் பெரியது; மனிதர்கள் மிகவும் சிக்கலானவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் இலக்கிய வாசிப்பு எனக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

    உங்களுடைய முதல் படைப்பு எப்போது வெளியானது?

    நான் என்னை எப்போதும் ஒரு வாசகனாக மட்டும்தான் கருதுகிறேன். இப்போது எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது; அதற்காக முயற்சியும் செய்து வருகிறேன்.


    நான் வாசித்த ஏதாவது ஒரு படைப்பு மிகவும் பிடித்திருந்தால், அதைப் பற்றி ஒரு கடிதமாக எழுதி ஜெயமோகனின் தளத்திற்கு அனுப்புவது வழக்கம். பூன் காவிய முகாமில் (2022) கலந்து கொண்ட பின்னர், பாஸ்டன் பாலா என்னை எழுதுவதற்கு மிகவும் ஊக்கப்படுத்தினார். உண்மையில் அவருடைய தூண்டுதலில்தான் எம்.டி. வாசுதேவன் நாயரைப் பற்றிய ஒரு கட்டுரையை முதலில் எழுதினேன். அது 2024-ஆம் ஆண்டு சொல்வனம் இதழில் வெளியானது.


    அதற்குப் பிறகு, நான் வாசித்த நாவல்களைப் பற்றிய வாசிப்பு அனுபவங்களையும் மதிப்புரைகளையும் கட்டுரை வடிவில் எழுத ஆரம்பித்தேன். அவை சொல்வனம் இதழில் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

    எழுத்து சார்ந்த உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

    தொடர்ந்து வாசிக்கவும், வாசித்த படைப்புகள் குறித்து முறையாக எழுதவும் விரும்புகிறேன். தற்போது எழுதுவது பெரும்பாலும் இலக்கியக் கட்டுரைகள் மற்றும் விமர்சனங்கள். அவற்றை மேலும் செறிவாகவும், வெறும் நூல் அறிமுகமாக இல்லாமல் படைப்புடன் ஆழமான உரையாடலாகவும் உருவாக்க வேண்டும் என்பது என் விருப்பம்.


    மேலும் எழுதுவது என்னுடைய கருத்துகளை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. அந்தப் படைப்புகளை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ளவதற்காகக்த்தான். வாசிக்கும்போது, கதை சுவாரசியத்தாலோ அல்லது வாசிப்பு வேகத்திலோ நிறைய விஷயங்களை விரைவாகக் கடந்து போய்விடுகிறேன். ஆனால் அதைப் பற்றி ஒரு கட்டுரையாக எழுதும்போது மறுவாசிப்பு செய்ய வேண்டியிருக்கிறது. எழுத உட்காரும்போதுதான் படைப்பு இன்னும் நெருக்கமாகவும் ஆழமாகவும் புரிகிறது. அந்த அனுபவத்திற்காகத்தான் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். அதுவே என்னுடைய முக்கியமான தூண்டுகோலாக இருக்கிறது. உதாரணமாக, ம. நவீனின் பேய்ச்சி பற்றிய கட்டுரையும், சந்திரா தங்கராஜின் கனவிலிருந்து புறப்பட்ட மஞ்சள்நிற முகங்கள் பற்றிய கட்டுரையும் அந்த வகையில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன.


    வாழும்தமிழ் விழாவுக்காகச் சில கதைகளை நான் மொழிபெயர்த்திருந்தேன். அதைத் தொடர்ந்து செய்வதற்கான ஆர்வமும் இருக்கிறது. ஆனால் புனைவு எழுதுவதற்கும் மொழிபெயர்ப்பு செய்வதற்கும் என்னை இன்னும் மேம்படுத்திக்கொண்டு, அதற்காகத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.


    நம் நண்பர்களில் நீங்கள், நிர்மல், விவேக், பாஸ்டன் பாலா எனப் பலர் தங்கள் தொடர் செயல்பாடுகளால் என்னைப் போன்ற பலருக்கும் வினையூக்கியாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

    நேர்முகம் உதவி: பிரமோதினி

  • நேர்முகம் 10 : சங்கர் கோவிந்தராஜ்

    நேர்முகம் 10 : சங்கர் கோவிந்தராஜ்

    சங்கர் ஓவியர். தீவிர இலக்கிய வாசகர். மிச்சிகன் புத்தக வாசிப்பு குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர். ட்ராய் நகரில் வசிக்கிறார். வலைதளம்: https://www.instagram.com/akashganga_art – தொடர்பிற்கு: shansapmail@gmail.com

    உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், பின்புலம் பற்றி ?

    நான் பிறந்து வளர்ந்தது நாமக்கல். கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் படித்து முடித்தேன். என் பெற்றோர் இருவரும் தையல் கலைஞர்கள். படிப்பை முடித்த பிறகு சென்னையில் சிலவருடங்கள் பணியாற்றினேன். கடந்த பதினாறு வருடங்களாக அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டிராய் நகரில் வசிக்கிறேன். Seating நிறுவனத்தில் பணி. எனது மனைவி மலர்விழியும் தகவல் தொழில்நுட்பத் துறையில்  பணிபுரிகிறார். எனக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் ஆதிரா, இளையவள் அத்ரி.

    உங்களுடைய “மண்டலா” வகை ஓவியங்கள் எனக்குப் பிடித்தவை. ஓவிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ?

    ஓவிய அறிமுகம் அம்மாவின் மூலமே எனக்குக் கிடைத்தது. அம்மா மிகத்திறமையாகக் கோலம் போடக்கூடியவர். மார்கழி மாதங்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மா கோலம் போடுவதைக் காணவே விடியற்காலையில் அவர்களுடன் எழுந்துவிடுவேன். முதலில் கண் விரியப் பார்க்க ஆரம்பித்து, பிறகு கோலம் தேர்வு செய்து கொடுத்து, பின்பு வழக்கமாக உள்ள கோலங்களில் வித்தியாசங்களை எப்படி கொண்டுவரலாம் என்று ஆரம்பித்தது. 

    எங்கள் ஊரின் கோவில்களில் மேற்கூரைகளில் மண்டலா வகை ஓவியங்கள் இருக்கும். அமர்ந்து அதைப்பார்த்து நகலெடுத்துப் பொங்கல் தினங்களில் நானும் என் அம்மாவும் சேர்ந்து போடும் கோலம் எங்கள் பகுதியில் மிகப்பிரசித்தம். ஆரம்பத்தில் மண்டலா வகை ஓவியங்களில் என்னை ஈர்த்தது அவற்றின் வடிவமும் ஒழுங்கும் மட்டுமே. 

    பின்னாளில் மண்டலா கலை குறித்து வாசிக்கத் தொடங்கியபோது, அது வெறும் அலங்கார வடிவம் அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன். இந்திய ஆன்மிக மரபுகளில் ஸ்ரீசக்ரம், யந்த்ரம் போன்ற வடிவங்களிலும், திபெத்திய புத்த மரபிலும், மண்டலா என்பது மனதை ஒருமுகப்படுத்தி அகப்பயணத்தை நோக்கிச் செல்லும் ஒரு தியானக் கருவியாகக் கருதப்படுகிறது. அந்தப் புரிதல் சிறுவயதில் கோவில்களின் மேற்கூரைகளில் என்னை ஈர்த்த வடிவங்களை வேறுவிதமாக பார்க்க வைத்தது. பிற்காலங்களில் அதில் நிறைய முயற்சிகள் செய்து பார்த்திருக்கிறேன். 


    அதே சமயம் அம்மா தொடர்ந்து தொடர் கதைகளை வாசிக்கக் கூடியவரும் கூட. கல்கி, கோகுலம், ஆனந்த விகடனில் வரும் தொடர்களைப் படித்துத் தொகுத்து வைக்கக்கூடியவர். அதில் மணியம் செல்வம், மாருதி, சில்பி போன்ற ஓவியர்கள் உருவாக்கிய உலகம் என்னை வெகுவாகவே கவர்ந்தது. இவை இரண்டும் ஓவியத்தைக் குறித்த ஒரு புரிதலைக் கொடுத்த சமயத்தில், எங்கள் ஊரின் திறமையான பில் போர்டு ஆர்டிஸ்ட் ஒருவர் வரைந்த வயதான மூதாட்டியின்(கலைஞன் ஆர்ட்ஸ்) ஓவியம் என்னைத் தூங்க விடாமல் செய்தது. முகங்களில் இருந்த சுருக்கங்கள், சரும தோற்றங்கள் அவற்றிலிருந்த நுட்பங்கள் கதைகளுக்காக வரையப்படும் ஓவியங்களிலிருந்து முற்றிலுமாக வேறாக இருந்தது. அதன் ரகசியத்தை அறிய மனம் உள்ளூர ஏங்கிக்கொண்டு இருக்கிறது, இன்றும் கூட.

    மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அந்த விளம்பரப் பலகையில் புதிய முகங்கள் தோன்றும். ஒவ்வொரு முறையும் அவற்றின் நுட்பங்களை நீண்ட நேரம் நின்று ரசிப்பேன். அந்த அனுபவங்கள் என் ஓவியப் பார்வையை மேலும் விசாலமாக்கின. பிறகு அதை அடைவதற்கான வழிகளைத் தேடினேன். அவர்களிடமே சிறிது காலம் பழகியும் அறிய முயன்றேன், என்னால் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை. நான் இருந்ததோ நாமக்கல். கல்வியைக் குறித்த புரிதல் வேறாக இருந்த ஊர். என்னிடம் திறமை உள்ளதென்பதை எனது பெற்றோர்கள் அறிந்திருந்தும் அதன் போக்கில் செல்ல விட அவர்களுக்கு தைரியம் வரவில்லை. அதைச் சோதித்துப் பார்ப்பதற்கான நேரம் நான் அமெரிக்கா வந்த பிறகே கிடைத்தது. அங்கே ஆரம்பித்து அதற்கான ஆசிரியர்களைத் தேடி அடைய இலக்கியம் எனக்குக் கைகொடுத்தது.

    முதல் ஓவியம் எப்போது வெளியானது ?

    முதல் ஓவியம் பரவலாக அறியப்பட்டது நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது. பாரதியார் ரெளத்திரமாக நிற்கும் ஒரு ஓவியம் வரைந்து மாவட்ட அளவில் வெற்றி பெற்றேன். மாநில அளவில் கலந்து கொள்ள சென்னை சென்ற அனுபவம் சிறப்பாக இருந்தது. பல மாவட்டங்களிலிருந்து வந்த மாணவர்கள் மிகத் திறமையான ஓவியர்களாக இருந்தார்கள். ஓவியத்தின் மீது இன்னும் தீவிரமாக ஈடுபடும் ஆர்வம் அப்பொழுது அதிகமானது.

    பின்னர் ஓவியம் வரைவதற்கு முறையான பயிற்சி எடுத்துக்கொண்டீர்களா?

    கல்லூரி காலங்களிலும் தொடர்ந்து வரைந்து கொண்டிருந்தேன். ஆனால் முறையான பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அப்போது வலுவாக இருக்கவில்லை. பின்னாளில் அமெரிக்கா வந்த பிறகு அதற்கான நேரமும் வாய்ப்பும் அமைந்தது. மிச்சிகனின் பிர்மிங்ஹாம் நகரில் உள்ள BBAC-ல் ஓவியப் பயிற்சியில் சேர்ந்தேன். கேன்வாஸை அணுகுவது, நிறங்களைத் தேர்வு செய்வது, தூரிகைகளின் தன்மையைப் புரிந்துகொள்வது போன்ற அடிப்படை விஷயங்களை அங்குதான் கற்றுக்கொண்டேன். அங்கே என் மனைவியையும் மகளையும் 4’ × 3’ அளவிலான பெரிய கேன்வாஸில் வரைந்தேன். சிறுவயதில் சார்ட் பேப்பர்களில் பெரிய அளவில் வரைந்து பார்த்த அனுபவம் இருந்தாலும், தொழில்முறை நேர்த்தியுடன் பெரிய கேன்வாஸில் ஒரு ஓவியத்தை வரைந்தது  அங்குதான். அந்த ஓவியம் நண்பர்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. அப்போதுதான் எனது கற்றலை அடுத்த கட்டத்திற்கு மிகவும் தீவிரமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் அலுவலக நேரமும் வகுப்பு நேரமும் ஒன்றுடன் ஒன்று மோதியதால், அந்தப் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை.

    அதன் பிறகு ஒன்றிரண்டு ஆண்டுகள் சுயமுயற்சியில் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். நிறைய முயற்சி செய்தும் நான் மனதில் நினைத்திருந்த இடத்தை அடைய முடியவில்லை. அதே காலத்தில் இலக்கியத்தின் மீதான ஈடுபாடும் அதிகரித்தது. ஓவியர்களின் வாழ்க்கை வரலாறுகள், கலை பற்றிய வாசிப்புகள் ஆகியவை ஒரு ஓவியன் எதைத் தேட வேண்டும் என்பதில் எனக்குப் புதிய புரிதலை அளித்தன. எமர்சன் இலக்கிய முகாமில் (பூன், 2022) எழுத்தாளர் ஜெயமோகன் கூறிய ஒரு அறிவுரை மீண்டும் எனக்கான ஆசிரியரைத் தேட வைத்தது. சில ஆசிரியர்களிடம் நான் எதிர்பார்த்த வழிகாட்டுதல் கிடைக்கவில்லை. சிலருக்கு என்னுடைய தேடல் புரியவில்லை. சிலரின் கற்பித்தல் முறை எனக்குப் பொருந்தவில்லை. அப்போது நான் கண்டடைந்தவர்தான் எம். பி. சரவணன் (சித்திரக்காரன்) சார்.

    என்னுடைய திறனையும் தேடலையும் முழுமையாகப் புரிந்துகொண்டு வழிநடத்தும் ஆசிரியராக அவரை நான் பார்க்கிறேன். அவர் எனக்குப் பயிற்சிகளை பட்டியலிட்டு கொடுப்பதில்லை. ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு ஓவியத்தை ஆரம்பித்து, அதை முடிக்கும் வரை அவர் பகிரும் பார்வைகளும் அனுபவங்களும் எந்தப் பாடத்திட்டத்திலும் கற்றுக்கொடுக்க முடியாதவை. நான் அவரிடம் இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பேன். அதே நேரத்தில் அவரது பார்வை நான் வரையும் ஓவியத்தின் மீது இருக்கும். எப்போது என்ன சொல்ல வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதை அறிந்த ஒரு ஆசிரியரின் பண்பு அவரிடம் இருக்கிறது. பல நேரங்களில் என்னை மேலும் வரைய ஊக்குவிப்பதும் அவர்தான். சில சமயங்களில் என்னை அவருக்கு இணையாக வைத்து பேசுவார், அது அவரது பெருந்தன்மை.

    ஒரு நல்ல ஆசிரியர் நமக்கு தொழில்நுட்பத்தை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை நம்முள் இருக்கும் கலைஞனை வெளிக்கொணர உதவுகிறார். அந்த வகையில், என்னுடைய ஓவியப் பயணத்தில் மிக முக்கியமான திருப்பமாக நான் சந்தித்தவர் எம். பி. சரவணன் சார். ஒரு கலையை வெறும் வாழ்வாதாரத்திற்கான கருவியாக மட்டும் அணுகினால், காலப்போக்கில் அதன் ஆன்மாவை இழந்து விடுகிறோம். ஆனால் அந்தக் கலையை நேர்மையாகவும் முழு அர்ப்பணிப்புடனும் அணுகினால், அது நம்முடைய உள்ளார்ந்த தேடலையும் நிறைவேற்றும் வாழ்வாதாரத்தையும் இயல்பாக அமைத்துத் தரும் என்பதே என் நம்பிக்கை. 

    உங்களுக்கு பிடித்த ஓவியர் யார் ?

    கிரேட் மாஸ்டர்ஸ் என்று கருதப்படும் மேற்கத்திய ஓவியர்கள் பால் கோகேன், வான் கோ, பிக்காஸோ, நார்மன் ராக்வெல் போன்றவர்களின் படைப்புகள் மிகவும் பிடிக்கும். அவர்களுடைய வடிவ சிந்தனைகள், வண்ண மொழி, மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் என்னை எப்பொழுதும் கவர்ந்திருக்கிறது. அதே நேரத்தில்  நமது ஊர் ஓவியர்கள் ஆதிமூலம் அவர்களின் ராஜா வரிசை ஓவியங்கள், பாஸ்கரன் அவர்களின் பூனை abstract ஓவியங்கள், MP சரவணன் சித்திரக்காரன் அவர்களின் பெண்கள், மார்க் ரத்தினராஜ் அவர்களின் சமகால ஓவியங்கள், மனோகர் தேவதாஸ் மதுரை ஓவியங்கள் தனித்துவமான கலைமொழியை கொண்டவை. அவற்றில் நமது மண் சார்ந்த நினைவுகள் இருப்பதால் மனதுக்கு மிக நெருக்கமானவை. 

    “எதற்காக வரைகிறேன்?” என்றால் உங்கள் பதில் என்ன ?

    என்னைத் திருப்திப்படுத்திக்கொள்ளவே வரைகிறேன். ஆனால் ஒவ்வொரு முறை ஓவியத்தை முடித்த பிறகும், ஒரு பெரும் அதிருப்தியே எஞ்சுகிறது. வரையும் ஒவ்வொரு தருணத்திலும் எனது எல்லைகளையும் இயலாமைகளையும் எதிர்கொள்கிறேன். நான் நினைத்ததை முழுமையாக வெளிக்கொணர முடியாமல், அந்தக் குறைகளைச் சமரசம் செய்து வேறொன்றை உருவாக்குகிறேன். அதனால் ஓவியம் வரைவது எனக்கு ஒரு படைப்பூக்கமிக்க போராட்டமாகவே இருக்கிறது. நான் ஒன்றை உத்தேசித்து வேறொன்றைப் பெறுகிறேன். ஓவியம் முடிந்த அந்தக் கணத்தில், என்னால் செய்ய முடியாத அனைத்தும் என்னுள் ஒரு வெறுமையை உருவாக்குகிறது. அந்த வெறுமையோடு உரையாடி, அதிலிருந்து என்னை மீட்க  எனக்குத் தெரிந்த வேறொன்றைச் செய்து மனதை புதுப்பித்து அடுத்த ஓவியத்திற்குத் திரும்புகிறேன். நான் உத்தேசிப்பதற்கும் என்னுடைய இயலாமைகளுக்கும் இடையே நிகழும் இந்தப் தேடல், என்னுடைய ஓவியப் பயணத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது என்று நம்புகிறேன். ஒருநாள் நான் நினைத்ததை முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்ற அந்தச் சிறிய நம்பிக்கையும், அதனால் கிடைக்கும் திருப்திக்கான தேடலும்தான் என்னைத் தொடர்ந்து வரைய வைக்கின்றன.

    எழுத்தாளர் ஜே.பி. சாணக்கியா சமீபத்தில், “எதைச் செய்யாமல் உங்களால் இருக்க முடியாதோ, அதுவே நீங்கள்” என்று கூறியிருந்தார். அந்த அளவில் பார்த்தால், வரையாமலும் வாசிக்காமலும் என்னால் இருக்க முடியாது. அவை இரண்டுமே எனது வாழ்வின் இயல்பான வெளிப்பாடுகள்.

    சமீபத்தில் வரைந்த இளையராஜா ஓவியம் மிக அழகாக இருந்தது. அது குறித்து ?

    வேறு எந்த நிற முகங்களை விடவும் கறுத்த முகம் மிகவும் கவர்ச்சியானவை. மேலும் கறுத்த முகங்களில் விழும் ஒளி நமக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும். அவ்வொளி துல்லியமாக இருக்கும். எந்த நிற ஒளி முகத்தில் படுகிறதோ அது அந்த நிறமாகவே பிரதிபலிக்கும், கருமை நிற தோலில் ஒளியும் நிழலும் உருவாக்கும் ஆழம் என்னை மிகவும் கவர்கிறது. பரிட்சார்த்தம் செய்வதற்கு ஏற்ற முகம் கறுத்த முகம். இளையராஜா நம் வாழ்வின் ஒரு பகுதி. இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழகத்தின் புகழ் பெற்ற ஓவியர்கள் அவரது 80வது பிறந்த நாளை முன்னிட்டு இளையராஜாவை வரைந்தார்கள்.ஒவ்வொரு ஓவியரும் அவரை அணுகிய விதம் வியப்பாக இருந்தது. எனக்கு அவரை வரைய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அவருடைய ஆளுமையை கேன்வாஸில் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உடனே வரவில்லை. பிறகு தொடர் பயிற்சி மற்றும் கற்றல் அவரை வரைய தைரியம் கொடுத்தது. ஆனால் வரைந்து முடித்து ஒரு மாதம் கழித்தே எனக்குப் பொதுவெளியில் பகிர தைரியம் வந்தது. வைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏன் என்று தெரியவில்லை. இப்பொழுதும் அவ்வோவியத்தைப் பார்க்கும் பொழுது கூட ஒரு நெருடல் உண்டாவதைத் தவிர்க்க முடியவில்லை. எனது குரு ஓவியர் MP சரவணன் அவர்களின் நுட்பமான அறிவுரைகள் பெரிதும் உதவியாக இருந்தது. அவரது தலையாட்டலுக்காகவே பகிராமல் காத்திருந்தேன். 

    உங்களுடைய ஓவியம் வரையும் முறை என்ன ? (பயிற்சி, இடம், நேரம், ஒரே அமர்வில் வரைவீர்களா? )

    எனது வீட்டின் அடித்தளத்தில் எனக்கான ஒரு கலைக்கூடத்தை அமைத்திருக்கிறேன். நான் அக்ரிலிக் மற்றும் நீர் வண்ண ஓவியங்களை வரைவதால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து வரைவது தான் சுலபம். ஆகவே பெரும்பாலும் அங்கு அமர்ந்து வரைவது தான் வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக வார இறுதியில் நண்பர்களுடன் நேரம் கிடைக்கும் பொழுது Plein-Air (திறந்தவெளிகளில் ஓவியம் வரையும் முறை) செய்துகொண்டும் இருக்கிறேன். தினமும் இரவு தூங்குவதற்கு முன் குறைந்தது அரை மணி நேரமாவது வரைவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். வாரம் ஒரு நாள் எனது குரு சரவணன் அவர்களிடம் இரண்டு மணிநேரம் செலவிடுவேன். அது வெறும் பயிற்சியாக மட்டும் இல்லாமல் ஓவியம் சார்ந்த உரையாடல்களாகவே அமையும். நீர் வண்ண ஓவியங்கள் பெரும்பாலும் ஒரே அமர்வில் வரைந்து முடித்துவிடுவேன். அவை சிறியதாக இருப்பது ஒரு காரணம். மற்றவைகளை பல அமர்வுகளில் சந்தேகங்களை நிவர்த்தி செய்து நிவர்த்தி செய்து, கற்று ஓவியத்தை முடிப்பேன். எனது ஓவிய  கூடத்தில் நிறைவு பெறாமல் இருக்கும் ஓவியங்கள் பல. அவையும் என்னுடன் சேர்ந்து கற்றுக்கொண்டே இருக்கின்றன என்று தோன்றுகிறது. 

    ⁠நீங்கள் இணைய இதழ்களில் தொடர்களுக்கு Illustration ஓவியங்கள் வரைந்திருக்கிறீர்கள். உங்களுடைய விருப்பமான ஓவிய வகைமை எது ? எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் ?

    சிறுவயதில் மணியம் செல்வம் அவர்களின் Illustration ஓவியங்கள்தான் என்னை முதலில் மிகவும் ஈர்த்தன. அதன் பிறகு படிப்படியாக ரியலிசம் வகை ஓவியங்களின் மீது என் கவனம் திரும்பியது. ஒரு கலைஞனாக நமக்கான பாதையைத் தேடத் தொடங்கும்போது பல்வேறு வகைமைகளில் முயற்சி செய்து பார்ப்பது இயல்புதான். அந்த வகையில் இணைய இதழ்களுக்காக இல்லுஸ்டிரேஷன்களும் வரைந்தேன். ஆனால் காலப்போக்கில் அது என் இயல்புக்கு மிகவும் பொருத்தமான ஓவிய முறை அல்ல என்பதை உணர்ந்தேன். நான் ஓவியம் வரைவது மிகவும் பொறுமையும், தொடர்ச்சியான ஈடுபாடும் தேவைப்படும் ஒரு செயல்முறை. ஒரு படைப்பை நான் முழுமையாக திருப்தியடையும் வரை செதுக்கிக்கொண்டே இருப்பேன். ஆனால் illustration ஓவியங்களில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் படைப்பை முடித்து அளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். அந்த அவசரத்தில் தரம் குறைவான ஒரு படைப்பு வெளியாவது எனக்கு விருப்பமில்லை. நேரமின்மையும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகவே என் மனதிற்கு நெருக்கமான ஓவிய வகைமைகள் ரியலிசமும் இம்ப்ரெஷனிசமும் தான். இதில் நேரமும் சிந்தனையும் என் கட்டுப்பாட்டில் இருப்பதுவும் ஒரு காரணம். அதனால்தான் அந்த வகை ஓவியங்களில்தான் நான் அதிக மகிழ்ச்சியுடன் இயங்குகிறேன்.

    ஓவியம் சார்ந்த எதிர்கால திட்டங்கள் என்ன ?

    ரியலிசம் மற்றும் இம்ப்ரெஷனிசம் பாணி ஓவியங்களே எனக்கு மிகவும் நெருக்கமானவை. தற்போது என் பயிற்சியும் சிந்தனையும் அந்தப் பாணிகளை மேலும் செம்மைப்படுத்துவதில்தான் இருக்கின்றன. எதிர்காலத்தில் என் படைப்புகளை கேலரிகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்பது என் கனவு. என்னைப் போன்ற புலம்பெயர் ஓவிய நண்பர்கள் சிலர் இங்கு உள்ளனர். விசா தொடர்பான நடைமுறைகள் காரணமாக பெரிய கேலரிகளை அணுகுவது எளிதல்ல. அதனால் முதற்கட்டமாக எங்களுடைய படைப்புகளை நண்பர்களுக்கும் கலை ஆர்வலர்களுக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு குழுக் கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இலக்கிய அறிமுகம் குறித்து ?

    எனது அம்மாதான் எனக்கு வாசிப்பின் அறிமுகத்தை ஏற்படுத்தியவர். கல்கி, சாண்டில்யன்  எழுத்தை வாசித்து தான் வளர்ந்தேன். சென்னைக்கு வந்த புதிதில் உலக சினிமாக்களின் அறிமுகங்கள் கிடைக்க ஆரம்பித்தன. அவற்றைத் தேடித் தேடிப் பார்த்தேன். அப்படிப் பார்த்ததில் “Central Station” என்கிற பிரேசில் படம் என்னை வெகுவாகக் கவர்ந்தது, பிறகு சாத்தியஜித் ரேவின் “Appu trilogy” யும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இப்படங்கள் நமக்குக் காட்டிய உலகம், மனித மனங்கள் வேறுவகையான உணர்வைக் கொடுத்தது. எனக்குள் ஒரு வேகத்தடையை உருவாக்கி நிதானத்தைக் கொடுப்பதை உணர்ந்தேன். எல்லாவகையான படங்களையும் பார்த்து அவற்றின் பற்றாக்குறையை  உணர்ந்த பொழுது அசோகமித்திரனின்  தண்ணீர் நாவலும், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையும் அவ்வகையான உள நிலையை என்னுள் ஏற்படுத்தியதை உணர்ந்து தீவிர இலக்கிய வாசிப்பில் நுழைந்தேன். 

    உங்களுக்குப் பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள் யார் ?

    எல்லா எழுத்தாளர்களிடம் இருந்தும் எதாவது ஒன்றைக் கற்றுக்கொள்கிறேன். இருப்பினும் அசோகமித்திரன், கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் எனது ஆதர்சங்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷ்ய இலக்கியங்களை வாசித்துக் கலந்துரையாடி வருகிறோம். தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்தை நான் நெருக்கமாக உணர்கிறேன். மனித மனங்களின் சிக்கல்களையும் வாழ்வின் அடிப்படைக் கேள்விகளையும் அவர் அணுகும் விதம் என்னை அவருடன் மிக நெருக்கமாக இணைக்கிறது. ஆல்பர்ட் காம்யு, கஃப்காவும் வாசித்திருக்கிறேன். அவர்களது உலகமும் புரிகிறது, யதார்த்தத்தை உணர்ந்து வாழ உதவுகிறது. அபுனைவுகளில் டி. தருமராஜ் அவர்களின் கட்டுரைகள் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக வரலாற்றை அணுகவும், அதை விமர்சனப் பார்வையுடன் புரிந்துகொள்ளவும் அவரது எழுத்துகள் எனக்கு உதவியுள்ளன.

    நீங்கள் ஒருங்கிணைக்கும் மிச்சிகன் புத்தக வாசிப்பு குழுமம் குறித்து ?

    எனது வாசிப்புப் பயணத்தில் மிச்சிகன் தமிழ் ஆர்வலர்கள் குழு மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. கலையரசி அவர்கள் தொடங்கிய இந்தக் குழு எனக்கு பல நல்ல வாசக நண்பர்களை அறிமுகப்படுத்தியது. ப்ரவீனா, ராம், மலர்விழி மணியம், சின்னையா குறிப்பிடத் தகுந்தவர்கள். லக்ஷ்மண் என் நீண்டநாள் குடும்ப நண்பர். அவரை இந்தக் குழுவில் இணைத்தேன். அவரது வாசிப்பும், குறிப்பாக சிறுகதைகள் பற்றிய பார்வையும் மிகவும் தனித்துவமானது. அது இலக்கியத்தை அணுகுவதற்கு எனக்குப் புதிய கோணங்களைத் தந்தது.பின்னர் மதுநிகாவின் அறிமுகம் கிடைத்தது. அவரது வருகை வாசிப்பில் ஒரு தீவிரத்தையும், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையையும் உருவாக்கியது. இந்தக் குழுவின் மூலம் எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளை வாசித்திருக்கிறோம். பல எழுத்தாளர்களையும் சந்தித்து உரையாடியிருக்கிறோம். தற்போது போரும் வாழ்வும் (War and Peace) வாசிப்பை முடித்துவிட்டு கரமசோவ் சகோதரர்கள் நாவலை நிறைவு செய்யும் நிலையில் இருக்கிறோம். அடுத்ததாக புத்துயிர்ப்பு வாசிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதைத் தவிர இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை “வாசகர் சந்திப்பு” என்ற பெயரில் பூங்காக்களிலோ நூலகங்களிலோ சந்தித்து இலக்கியம் குறித்து உரையாடுகிறோம். லக்ஷ்மண் மூலமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அறிமுகமானது. பூன் முகாம்கள், நண்பர்களின் செயல்பாடுகள் ஆகியவை வாசிப்பிலும் ஓவியத்திலும் தொடர்ந்து இயங்கும் ஊக்கத்தை அளிக்கின்றன. இப்படிப்பட்ட இலக்கியச் சுற்றம்தான் வாசிப்பை என் வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாற்றியது.

    உங்களுடைய சிறுகதைகள் யாவரும், உயிர்மை இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. நீங்கள் நல்ல பாடகரும் கூட. அந்த அனுபவங்கள் குறித்து ?

    தொடர்ந்து வாசிக்கும் ஒருவருக்கு, ஒரு கட்டத்தில் கதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் வருவது மிகவும் இயல்பானது. எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அந்த சமயத்தில் மிச்சிகன் தமிழ் சங்கம் லக்ஷ்மன் தலைமையில் ஒரு எழுதுபட்டறையை ஏற்பாடு செய்திருந்தது. அதில் நான், மதுநிகா மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறுகதைகள் எழுதுவதில் தொடர்ந்து முயற்சிகள் செய்தோம். எங்களுடைய கதைகளை வாசித்து, அவற்றின் பலம், பலவீனங்களைச் சுட்டிக்காட்டி, செம்மைப்படுத்துவதில் லக்ஷ்மன் மிகவும் உதவியாக இருந்தார். அவரது விமர்சனப் பார்வையும் ஊக்கமும், கதைகளை இலக்கிய இதழ்களுக்கு அனுப்பும் தன்னம்பிக்கையை எனக்கு அளித்தது. அப்படித் தரமானவை என்று நான் கருதிய சில கதைகளைப் பல இதழ்களுக்கு அனுப்பினேன். அவற்றில் யாவரும் இதழில் “என்னை கொன்று தின்ன அப்படி ஒரு ஆசையா” என்ற சிறுகதை வெளியானது. (நான் வைத்திருந்த தலைப்பு “அந்தந்தலை”. இதழில் வெளியானபோது தலைப்பு மாற்றப்பட்டது.) உயிர்மை இதழில் “இரைச்சல்” என்ற சிறுகதையும் வெளிவந்தது. பின்னர் “இன்னுமொரு அவள்” என்ற சிறுகதை பெட்னா இலக்கியக் கழகம் நடத்திய போட்டியில் முதல் பரிசைப் பெற்றது. அந்த அங்கீகாரங்கள் தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தை அளித்தன. ஆனால் அதன் பிறகு, வாசிப்பிலும் ஓவியத்திலும் அதிக நேரம் செலவிடத் தொடங்கியதால் எழுத்தில் அதே அளவு கவனம் செலுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் எழுதுவதற்கு ஒரு விதமான தடை என்னுள் உருவாகிவிட்டது. அதைத் தாண்டி மீண்டும் எழுத வேண்டும் என்ற ஆசை இன்றும் இருக்கிறது. 

    இசையும் என் வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. சிறுவயதிலிருந்தே எனக்கு நன்றாகப் பாடக்கூடிய திறன் இருந்ததால், இசையின் மீது இயல்பாகவே ஒரு ஈர்ப்பு உருவானது. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு சில காலம் முறையாக இசையும் கற்றுக்கொண்டேன். ஆனால் கல்லூரி வாழ்க்கை தொடங்கிய பிறகு அதைத் தொடர்ந்து பயில முடியவில்லை. இன்றும் கர்நாடக சாஸ்திரிய இசையின் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் தற்போது ஓவியத்தில் முழு கவனத்தையும் செலுத்த விரும்புவதால், இசையை ஒரு தொழில்முறை முயற்சியாக அல்லாமல், எனக்கான மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறேன். மனம் விரும்பும் நேரங்களில் பாடுவதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

    கலைகளில் ஏ.ஐ தொழில்நுட்ப பயன்பாடு குறித்து உங்கள் பார்வை ?

    ஒரு கலைஞனை பொறுத்தவரை, AI என்பது ஒரு வகையில் குறுக்குவழிதான். மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் இடம் எது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும் என்று நம்புகிறேன். AI எனது ஜனரஞ்சக தேவைகளுக்கு உபயோகித்து கொள்கிறேன், உதாரணத்திற்கு மேடை அலங்காரங்களுக்கு, பதாகைகளுக்கு (flyers), சில சமயங்களில் ஆரம்பகட்ட மாதிரிகளுக்கு, தொழில்நுட்பம் சார்ந்த தேவைகளுக்கு உதாரணமாக ஓவியக் கோட்பாடுகளுக்கு, வரலாறு, அல்லது தகவல்களைத் தேடுவது போன்றவற்றிற்கு பயன்படுத்துகிறேன்.

    ஆனால் என் உள்ளார்ந்த தேடலுக்கோ, ஒரு படைப்பின் ஆன்மாவைத் தேடும் முயற்சிக்கோ AIஐ நான் பயன்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு எனது மண்டலா ஓவியங்களில் AI பயன்படுத்துவதில்லை. சொல்லப்போனால், எட்டு வருடங்கள் முன்பு இந்த தொழில்நுட்பமே பரவலாக பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு வரைந்தவை. இளையராஜா, சித்தார்த்தா ஓவியங்களில் முயற்சி செய்தவை மற்றும் பெரும்பாலான அக்ரிலிக் ஓவியங்களில் நான் முயற்சி செய்தவைகளில் AI ஆல் எப்படியும் உதவி இருக்க முடியாது. ஏனெனில் ஒரு கலைஞனின் அனுபவம், உணர்வு, தயக்கம், தவறுகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் வழியே உருவாகும் படைப்புப் பயணத்தை அது மாற்ற முடியாது. மேலும் AI சில நேரங்களில் தேவைக்கு அதிகமாகவும், சில நேரங்களில் குறைவாகவும் தகவல்களை வழங்கும். மனதில் உத்தேசித்திருக்கும் நுண்ணிய உணர்வை முழுமையாக பிரதிபலிப்பது அரிது. என்னைப் பொறுத்தவரை, AI வாழ்க்கையை நகர்த்தத் தேவைப்படலாம், ஆனால் வாழ அல்ல. அது ஒரு துணைக்கருவி மட்டுமே.

    —-

    நேர்முகம் உதவி: பிரமோதினி

  • நேர்முகம் 9: ஜெயஶ்ரீ

    நேர்முகம் 9: ஜெயஶ்ரீ

    ஜெயஶ்ரீ இலக்கிய வாசகர், ஆசிரியை, தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தில் தீவிர பங்களிப்பாளர், திருத்துநர். 2022 தொடங்கி இதுவரை 800 பதிவுகளுக்கு மேல் தமிழ் விக்கியில் எழுதியிருக்கிறார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசிக்கிறார். தமிழ் விக்கி பக்கம் : https://tamil.wiki/wiki/ஜெயஶ்ரீ

    உங்களுடைய வாசிப்பு படிநிலைகள் குறித்து ? (இளம் வயதில், பள்ளி நாட்களில், கல்லூரியில் வாசித்தது குறித்து).

    சிறு வயதில் அம்புலிமாமா, கோகுலம், காமிக்ஸ், அமர் சித்ரகதா, பஞ்ச தந்திரக் கதைகள்  என்று  வழக்கமான தொடக்கம். நூலகத்தில் பழியாகக் கிடந்து  Enid Blyton, Hardy Boys, Nancy Drew போன்ற சிறுவர் இலக்கியங்கள் வாசிப்பு (இன்றைக்கு Enid Blyton படைப்புகளில் political correctness கேள்விக்குள்ளாக்கப்படுகிறது). டிக்கன்ஸ், டுமா, தாமஸ் ஹார்டி, விக்டர் ஹ்யூகோ போன்ற பிரிட்டிஷ், ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளின் சுருக்கப்பட்ட வடிவங்கள் (abridged version) ஊட்டியில் மிகப் பிரபலம். பள்ளிக்காலத்தில் தீவிரமாக அவற்றைப் படித்ததுண்டு. கல்லூரி நாட்களில் அவை அனைத்தையும் முழு நூல்களாக வாசித்தேன்.’Les Miserables’ போன்ற நூல்களுக்கு உள்ளே எளிதாகச் செல்ல அந்த முதல் வாசிப்பு உதவியது.

    ரஷ்ய இலக்கியங்கள் இலவசமாகக் கிடைத்தன. தமிழில் பதின்ம வயதில் கலைமகள், கல்கி, விகடன்,குமுதம் இதழ்கள், சிவசங்கரி, வாசந்தி, என்று கையில் கிடைத்த அனைத்தையும் வாசித்தேன். பாட்டியும், அம்மாவும் நல்ல வாசகிகள். பாட்டி சொன்ன கதைகள், பாடிய தோத்திர, ராம நாடக, நந்தனார் சரித்திர, தனிப்பாடல்கள், பழமொழிகளால் தமிழ் மொழியின் ருசி மனதில் நிறைந்தது. 

    சுஜாதா, பாலகுமாரன் படைப்புகளில் சில காலம் மூழ்கி எழுந்து,  தி.ஜா, வண்ணதாசன், வண்ணநிலவன், காண்டேகர், தாகூர் படைப்புகள் என்று வாசிப்பின் அடுத்த படியில் மெதுவாக ஏறினேன்.

    தீவிர இலக்கிய அறிமுகம் எப்படி ஏற்பட்டது ? வாசிப்பிற்கென இளம் வயதில் ஆதர்சம் / வழிகாட்டி யாராவது இருந்தார்களா ?

    தீவிர இலக்கியத்துக்கும், பொழுதுபோக்கு இலக்கியத்துக்குமான வேறுபாடு லேசாகத் துலங்கத் தொடங்கும்போது படிக்கக்  கிடைத்த விஷ்ணுபுரம், ஜே.ஜே, சில குறிப்புகள் இரு நூல்களும் என்னைப் புரட்டிப் போட்டன. விஷ்ணுபுரம் வாசிப்பு என்னை தலைகீழாக சுழலில் தள்ளிவிட்டது. என் மிக எளிய இறை நம்பிக்கையாலான உலகம் தகர்ந்து அவநம்பிக்கைக்கும், வெறுமைக்கும் இடையில் சுழன்றது.  சமனப்பட சில மாத காலமும் இரு மறுவாசிப்புகளும் தேவைப்பட்டன. ஜே.ஜே. யின் வடிவம் மிகவும் கவர்ந்தது. சு.ரா. வின் ‘விரிவும் ஆழமும் தேடி’ கட்டுரை நூல் மிக முக்கியமான் திறப்புகளை அளித்து செல்திசையைக் காட்டியது. 

    எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளம் எனக்கு ஒரு புதிய உலகைத் திறந்தது. அங்கிருந்தே செவ்வியல், நவீன, உலக  இலக்கியங்களைப் பற்றிய முறையான அறிமுகம் கிடைத்தது. தேடித்தேடி வாசிக்கத் தொடங்கினேன். மகன்கள் வளர வளர அவர்கள் மூலம்  அமெரிக்க/லத்தீன் அமெரிக்க  இலக்கியங்கள்பால் கவனம் திரும்பியது. 

    என் வீட்டில் பெரியவர்கள் அனைவருக்குமே ஓரளவு வாசிப்புப் பழக்கம் இருந்தது. ஆதர்சம் என்று பாட்டியைச் சொல்லலாம். முதலில் புராணங்கள், பக்தி இலக்கியங்கள், சுத்த சைவமாக பக்த விஜயம், அனுத்தமா, லக்ஷ்மி, குகப்ரியை போன்றவர்களை  மட்டுமே வாசித்து வந்தவர், நான் வளர வளர என்னுடைய தமிழ்ப்பாடங்களைப் படிக்கச் சொல்லி, பாடல்களுக்கு பொருள் சொல்லச் சொல்லி கேட்டு என்னுடன் சேர்ந்து படித்தார். நான் வாசிக்கும்  சிறுவர் நூல்கள், இதழ்கள், வணிக இலக்கியங்கள் எல்லாவற்றையும்  என் கூடவே (எனக்கு முன்னால்)  படித்து, கடைசியில் கணேஷ்-வசந்த் ஜோடிக்கு (குறிப்பாக வசந்துக்கு) பரம ரசிகையாக ஆகிவிட்டார். பாட்டியின் விரிந்து கொண்டே வந்த பார்வையும்,  மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் நெகிழ்வும், பஞ்சுபோல அப்படியே அறியக் கிடைத்த அனைத்தையும்  உறிஞ்சிக்கொண்டு உள்முகமாக நோக்கித் தன்னை வளர்த்துக்கொண்ட  தன்மையும் என்னை எப்போதும் மிக வியக்க வைப்பவை. அம்மா வெண்முரசுக்கும் ‘அறம்’ சிறுகதைகளுக்கும் பரம ரசிகை. மிக  மரபான வாழ்வு வாழ்ந்த இந்த இரு பெண்களும் வாசிப்பால் பெற்ற மன விரிவு அபாரமானது. 

    கல்லூரியின் ஆங்கிலப் பிரிவு பேராசிரியர்கள் மூலம் செவ்விலக்கியங்களை வாசிக்கும் முறை அறிமுகமானது.

    உங்களுக்கு பிடித்த படைப்புகள் குறித்து ?

    தமிழில் வெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம், புதுமைப்பித்தன் படைப்புகள், பசித்த மானுடம், புயலிலே ஒரு தோணி, பொய்த்தேவு, வாஸவேஸ்வரம், ஜெ.ஜெ. சில குறிப்புகள், தண்ணீர், ஆழி சூழ் உலகு,  சாய்வு நாற்காலி, அஞ்ஞாடி,  அரசூர் வம்சம், பிரேம்சந்தின் கோதானம், பால்யகால சகி, மண்ணும் மனிதரும், முதல் சபதம், கசாக்கின் இதிகாசம், ஆரோக்ய நிகேதனம்….

    War and peace, Moby Dick, Les Miserables. Brothers Karamazov, The great gatsby, Little Women,The tale of two cities, Three men in a boat, For whom the bell tolls, Midnight’s Children, The last temptation of Christ, To the Lighthouse, Grapes of Wrath, My name is Red…

    Wordsworth, Shelley, Browning…

    லத்தின் அமெரிக்க மாய யதார்த்தப் புனைவுகள் – One hundred years of solitude, Love in the time of Cholera, Pedro paramo, The Burning Plane இவற்றுக்கெல்லாம் முன்னோடி என்று எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிட்ட Absalom, Absalom (என்று சொல்ல ஆசைதான். பத்துதடவை படித்தால்தான் முழுதாகப் புரியும் போல).

    என்றும் எப்போதும் பாரதி. முதிரா இளமையில்  அறிமுகமான பல படைப்பாளிகளைத் கடந்து  வந்ததுபோல் பாரதியை என்னால் கடந்து  வரவே முடிந்ததில்லை. ஆன்மீக, ஞான, கண்ணன், குயில்பாட்டுகளில்  வெளிப்பட்ட நவவேதாந்தமும் பாரதியின் சாக்தமும் என் மனதுக்கு மிக நெருக்கமானவை..

    தமிழ் விக்கியில் நீங்கள் தீவிர பங்களிப்பாளர். தமிழ் விக்கி உங்களுக்கு அளித்தது என்ன ?

    உண்மையில் தமிழ் விக்கியில் இணையும் முன்பு நான் எதுவுமே எழுதியதில்லை. தொடக்கத்தில் இருந்ததைவிட தமிழ்விக்கிக்கான மொழிவடிவத்தில் இப்போது தேர்ச்சி கூடியிருக்கலாம் என நினைக்கிறேன். 2022 தொடங்கி இதுவரை 800 பதிவுகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன்.  

    தமிழ்விக்கியில் பங்களிக்கத் தொடங்கி ஆறு மாதங்களுக்குள் எனக்கு ஓரளவு நன்றாகத் தமிழ் தெரியும் என்ற எண்ணம் மறைந்து, இதுவரை நான் மேய்ந்தது நுனிப்புல் கூட அல்ல என்று தெளிவானது. எத்தனை நூல்கள், எத்தனை அறிஞர்கள், எத்தனை முயற்சிகள், செயற்கரிய செயல்கள்! சங்க காலம் தொட்டு தமிழ் இலக்கிய, இலக்கண வளர்ச்சியின் குறுக்குவெட்டுத் தோற்றம் மெல்லப் புலனாகத் தொடங்கியது. குறிப்பாகக் கடந்த இரு நூற்றாண்டுகளில் செல்லரித்த சுவடிகளைத் தேடிப் பெற்று  பதிப்பித்த தமிழ்த்தாத்தா, வாழ்நாள் முழுதும் பாடுபட்டு முழு மகாபாரதத்தையும் தமிழில் மொழிபெயர்த்து கும்பகோணம் பதிப்பைக் கொண்டு வந்த ம.வீ. ராமானுஜாச்சாரியார், தமிழில் புறவயமான ஆய்வுமுறையின் முன்னோடி வையாபுரிப் பிள்ளை, யாழ்நூல் இயற்றிய விபுலானந்தர், பாரதியின் படைப்புகள் இன்று கிடைக்கக் காரணமான ரா.அ. பத்மநாபன்.. என்று எத்தனை மகத்தான  Larger than life  வாழ்க்கைகள். தன்னலமற்ற அர்ப்பணிப்புகள்! சொல்லித் தீராது. இன்று நாம் taken for granted ஆகப் பார்க்கும் பலவற்றிற்கும்  பின்னால் உள்ள பெயர் அறிந்த, அறியாதவர்களின் தன்னலமற்ற உழைப்பை வணங்கத் தோன்றுகிறது. 

    தெ.பொ. மீ, வெள்ளைவாரணர், ஐராவதம் மகாதேவன்… என்று போகிற போக்கில் பெயர்களைச் சொல்லியிருக்கிறேன்,  கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஓவ்வொருவரையும் படித்து, ஆவணப்படுத்தும்போது அவர்களது பணியின் வீச்சு மலைக்கச் செய்தது. அவர்களில் சிலரையாவது அறிந்து கொள்ள இந்த அனுபவம் உதவியது. குர்அதுலைன் ஹைதர், பிரேம்சந்த், பங்கிம் சந்திரர்  போன்ற இந்திய இலக்கியவாதிகளின் இலக்கியப் பணிகளை ஆழ்ந்து நோக்கும் வாய்ப்பு கிடத்தது. உபரியாக தினம் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. 

    ஆசிரியர் ஜா.ராஜகோபாலன் (ஜாஜா), உடன் பணிபுரியும் அரவிந்த் ஸ்வாமிநாதன், மதுசூதன் சம்பத், நீலி ரம்யா, லோகமாதேவி போன்றவர்களிடருந்து தினமும் கற்றுக்கொண்டிருக்கிறேன். என் நேர மேலாண்மை மேம்பட்டிருக்கிறது. வெட்டியாகப் பொழுதைக் கழிப்பது குறைந்து, ஒரு 20 நிமிடம் கிடைத்தாலும் ஒரு கட்டுரையைச் சரி பார்க்கலாமே என்றுதான்  தோன்றுகிறது.

    முக்கியமாக, புதிதாக அறிந்துகொள்வது, அறிந்தவற்றை செழுமைப்படுத்திக் கொள்வது என்று அறிதல் அளிக்கும் மகிழ்ச்சியும், இந்தப் பணியில் ஒரு துளியளவாவது பங்களிக்க முடிந்ததே என்ற ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது.

    தமிழ்விக்கியின் பதிவுகளுக்கான விதிமுறைகள் என்ன? பதிவுகள் எப்படி மதிப்பாய்வு செய்யப்படுகின்றன?

    • விரிவான ஆய்வு
    • தகவல்களுக்குத் தக்க வலுவான சான்றுகள்/நம்பகத்தன்மை
    • கறாரான மதிப்பீடுகள்/விதந்தோதுதல் இன்மை. 
    • கலைக்களஞ்சியத்துக்குரிய கச்சிதமான மொழிநடை; 
    • சுருங்கச் சொல்லுதல்

    நான் பங்களிக்கத் தொடங்கியபோது முதல் பதிவு சரியாக அமைய ஒரு மாதத்துக்கும் மேல் எடுத்தது. நம்பிக்கை இழக்காமல் பொறுமையாக பல கட்டங்களாக மதிப்பாய்வு செய்து, ஒவ்வொன்றையும் விளக்கி, பதிவுகளைச்  சீராக்க உதவிய மதுவுக்கு(மதுசூதனன் சம்பத்) என்றும் கடன்பட்டிருக்கிறேன். மெல்ல மெல்ல வடிவமும் உள்ளடக்கமும், மொழியும் பிடிபட்டன.

    “ஏன் இலக்கியம் படிக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு உங்கள் பதில் ?

    தனிமை விரும்பியான (introvert) எனக்கு எனது குறுகிய வாழ்வுக்கு வெளியே இலக்கியம்  மூலம் விரிந்த பலப்பல வாழ்க்கைகளை, நிலப்பரப்புகளை, கலாசாரங்களை, மொழியினூடாகக்  கற்பனை செய்து திளைக்க முடிகிறது. செய்ததையே திருப்பிச் செய்யும் அன்றாடத்தில் இருந்து கொண்டே ஒரு பிரம்மாண்டமான அக வாழ்வு அமைகிறது. நான் பெற்றவற்றில் பெரும்பான்மையும் வாசிப்பின் மூலம் வந்தவையே. 

    இலக்கியம் மனித மனதை, அதற்கும் சமூக அமைப்புகளுக்குமான உறவுகளை, வாழ்க்கையை அது நேர்கொள்ளும்போது ஏற்படும் சிக்கல்களை அறிய முயல்கிறது. ஒரு மனிதனைத் திருத்துவதோ, மனதை மாற்றுவதோ இலக்கியத்தின் நேரடிப் பணி அல்ல. இருந்தும் ஒரு சமுதாயத்தின் பண்பாட்டு அற விழுமியங்களை இலக்கியமே திரட்டி அளிக்கிறது. இலக்கியங்களில் உச்சகட்ட வெளிப்பாடுகளின் தருணங்களில் மனம் சிறிதளவாவது விரியத்தான் செய்கிறது. இலக்கிய வாசிப்பால் ஒரு துளியளவாவது சக மனிதர்களிடம் என் புரிந்துணர்வு ( empathy) அதிகரித்திருக்கிறது என்றே நினைக்கிறேன். அனுபவ எல்லைகள் விரிவடைவதால் சில சமயங்களிலேனும் மற்ற மனிதர்களை அவர்கள் இடத்திலிருந்து புரிந்து கொள்ள உதவுகிறது.

     வாழ்க்கையிலிருந்து இலக்கியம் பிறக்குமானால் அந்த இலக்கியத்திலிருந்து வாழ்க்கைக்கும் சில பாதைகள் இருக்கலாம். நான் லௌகீக உறவுக் கணக்குகளில் சிக்கி வருந்தியிருந்த  காலங்களில் ‘சோற்றுக்கணக்கு’  வெளியானது. மனதுக்குள் கதையைப் பிரித்து மேய்ந்துகொண்டிருந்தபோது சோறு என்பது ஒரு குறியீடு மட்டுமே என்று தோன்றியது. என்  துக்கங்களில் பெரும்பான்மையும் நான் அடுத்தவருக்குப் போட்ட சோறு, அடுத்தவர் எனக்குப் போடாத சோறு என்று நான் மனதில் மாறி மாறிப் போடும் சோற்றுக்கணக்குதானே என்று உணர்ந்த கணம் எனக்கு மிகப் பெரிய அகவிடுதலையைக் கொடுத்தது. அதுபோல ஒவ்வொருவருக்கும் சில தருணங்கள் அமையலாம். இலக்கியம் நீதி போதனை இல்லை. ஆனாலும் இப்படிப்பட்ட தருணங்கள் வாசிப்பின் by products, உபரி நன்மைகள். 

    இறுதியாக என் அன்னைக்கு படுத்தபடுக்கையிலான இறுதி நாட்களில் வெண்முரசு வாசிப்பு தந்த ஆசுவாசமும், நிறைவும்  வாசிப்பு என்ன தரும் எனப் புரியவைத்தது.

    இலக்கியம் சார்ந்து உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன ?

    வாசிக்க வாசிக்க இன்னும் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியல் பெரிதாகிக் கொண்டே போகிறது. இன்னும் நிறைய பிறமொழி இலக்கியங்கள், சமகால, மொழியாக்க நூல்களை வாசிக்க வேண்டும். வாசிப்பை சரியான முறையில் எனக்குள் தொகுத்துக்கொள்ள வேண்டும்.

    கம்பராமாயணத்தை முழுதாகப் பயில வேண்டும்.சங்க இலக்கியங்களையும்  ஷேக்ஸ்பியரையும் ஐயும் ஆழ்ந்து வாசிக்க வேண்டும்.  இறுதியாக தமிழ் விக்கிக்கு என் உடலும், மூளையும்  ஒத்துழைக்கும்வரை பங்களிக்கவேண்டும். 

    நீங்கள் அமெரிக்க பள்ளி கணித ஆசிரியரும் கூட. அமெரிக்க கல்வி முறை குறித்து ஒரு எளிய அறிமுகம் தரமுடியுமா ?

    தொண்ணூறு சதவீதத்திற்கும் மேலான அமெரிக்க மாணவர்கள் அரசு பள்ளிகளில்தான் பயில்கின்றனர். ஒரு பகுதியில் வாழும் குழந்தைகள் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில்தான் சேர முடியும். ஒரு அரசு பள்ளியின் தரம் அந்த பகுதியின் வீடு / ரியல் எஸ்டேட் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணி. தனியார் பள்ளிகள் உண்டு, ஆனால் கட்டணம் மிக அதிகம்.

    கல்வி முக்கியமாக மாகாணங்கள் மற்றும் உள்ளூர் அளவில் நிர்வகிக்கப்படுகிறது. மத்திய அரசின் பங்கு (Federal Department of Education) மிகவும் வரையறுக்கப்பட்டது.

    இங்கே பாடதிட்டங்களை எப்படி முடிவு செய்கிறார்கள் ?

    அமெரிக்க கல்வி முறை inquiry based learning என்னும் உணர்ந்து ஆராய்ந்து கற்கும் முறையை அடிப்படையாகக் கொண்டது.  ஆரம்பக் கல்வி  காட்சி, ஒலி, வாசிப்பு,  மற்றும் உடலியக்கம் சார்ந்த  (Reading, Visual, audio, kinesthetic activities) கற்றல் முறையில் அமைந்தது. மனப்பாடமாகக் கற்பதைவிட புரிதலுக்கே முக்கியத்துவம் உண்டு. வரலாற்று நிகழ்வுகளைக் கற்பதோடு அந்த நிகழ்வுகள், அவற்றின் காரணங்கள், தாக்கங்கள் மற்றும் விளைவுகளைப்  பகுப்பாய்வு (analyze) செய்யும் திறனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மொழிக்கல்வியில் மதிப்பீடுகள்,  வாசிப்புப் புரிதல்(comprehension) , எழுத்துத் திறன் மற்றும் மொழித் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

    பாடத்திட்டங்களை backward design முறையில் அமைக்கப்படுகின்றன. மாநில அளவில் பாடத்திட்டம் வரையறுக்கப்பட்டு, அது பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கல்வியின் தரம் ஒவ்வொரு மாநிலத்துக்குமான பொதுத் தேர்வின் மூலம் (Standardized testing) சோதிக்கப்படுகிறது. வரலாற்றுப்பாடத்தில் சில அம்சங்களைக் கற்பிக்கவோ, பாடத்திட்டத்திலிருந்து நீக்கவோ மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு.

    பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் ?

    ஆசிரியர்களைத் தேர்வு  செய்யும் போது  கற்பிக்கும் பாடம் மற்றும் நிலைக்கான உரிமம் (teacher’s license), கற்பிக்கும் முறை, பாடக்குறிப்புகள் (lesson planning) இவற்றுடன் கண்டிப்பு, மாணவர்களுடனான நல்லுறவைப் பேணல் , பல்வேறு வகையான மாணவர்களை, சூழல்களை வெற்றிகரமாகக் கையாளும் திறமை இவற்றிற்கு முன்னுரிமை. மாணவர்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள அலுவலர்களுக்கும் அவர்களைக் கையாளத்தக்க  ஆளுமை அவசியமாகிறது. 

    உள்ளூர் அதிகாரிகள் உள்ளூர் மக்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற கொள்கையில்தான் அமெரிக்க அரசு இயங்குகிறது. பெரும்பாலான இடங்களில் ஷெரீஃப் (மாவட்ட போலீஸ் அதிகாரி),  மாவட்ட நீதிபதிகள், மாவட்ட அரசு வழக்கறிஞர் (district attorney) ஆகியோர் உள்ளூர் மக்களால் தேர்தல் வழியே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதைப்போலவே அமெரிக்க அரசு பள்ளிகளை மேற்பாற்வையிடும்  கல்வி வாரிய உறுப்பினர்கள் (school education board members) உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த உறுப்பினர்களே பள்ளிக்கான தலைமை அதிகாரிகளை நியமிப்பது, வரவு, செலவை கண்காணிப்பது உள்ளிட்ட பள்ளி நிர்வாக முடிவுகளை எடுப்பார்கள். இந்திய அரசு பள்ளிகளுக்கும், அமெரிக்க அரசு பள்ளிகளின் நிர்வாகத்திற்கும் இருக்கும் மிக முக்கியமான வித்யாசம் இது. தேர்தல் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் (decentralization) முக்கியமான அம்சம்.

    அமெரிக்க கல்வி முறையில் சிறந்த அம்சம் சிறந்தது ? மேம்பட வேண்டிய அம்சம் எது ?

    நடைமுறைச் சிந்தனை, சுய சிந்தனைக்கு ஊக்கமளித்தல், செய்முறைமூலம் கற்றல் (project based learning), உயர்நிலைப்பள்ளியில் பலதரப்பட்ட படிப்புகளுக்கான வாய்ப்பு,  இசை, ஓவியம், கலை, விளையாட்டு போன்ற அம்சங்களுடன் இணைந்த கல்வி முறை, மாற்றுத் திறனாளிகள் மற்றும் நரம்பியல் வேறுபாடுகள் (neurodiverse) கொண்ட மாணவர்களுக்கான பிரத்யேக வசதிகள், சிறப்புப் பாடங்கள், இலவச பள்ளிக்கல்வி, மனப்பாடக் கல்வியை மறுத்தல் என்று பல சிறப்பம்சங்கள் உண்டு. வரலாறு, சமூகவியல் பாடங்களை  மாணவர்களின் சுயசிந்தனை, பகுப்பாய்வு (analysis) கொண்டு  அணுகும் முறை, Conceptual learning over procedural learning- கணிதத்தில் விதிகளை/சூத்திரங்களை மட்டும் கற்பிக்காமல் அவற்றின் மூலம், ஏன், எப்படி எதனால் உருவாக்கப்பட்டன என்பதை  அறியச் செய்தல்,சூத்திரங்களையும்(formula) மனப்பாடம் செய்யத் தேவையில்லை,  அவற்றை உபயோகப்படுத்தி கணக்குக்கு விடைகாணும் திறமை மட்டும் தேவை என்ற  நோக்கு- இவை போன்றவை சிறப்பம்சங்கள்.

    மேம்பட வேண்டிய அம்சமாக மனப்பாடமே தேவையில்லை என்பதன்  மறுபக்கத்தைச்  சொல்லலாம். இளம் வயதில் பெருக்கல் வாய்ப்பாடுகள்  கற்கவேண்டியது அதிகம் வலியுறுத்தப்படாததால் எண்களுக்கிடையே உள்ள தொடர்பு பற்றிய சரியான புரிதல் 30% மாணவர்களுக்கு இருப்பதில்லை (என் அனுபவத்தில்). இது பின்னக் கணக்குகள் தொடங்கி மேல்வகுப்புகளில் கணிதக் கல்வியை மிகவும் பாதிக்கிறது.  எல்லாவற்றையும் மனப்பாடம் செய்வது அவசியமில்லை. என்றாலும்  சில எளிய  அடிப்படை சூத்திரங்களை(formula)  மனப்பாடமாக மனதில் நிறுத்திக் கொள்வதும் அவற்றை நினைவிலிருந்து மீட்டிக் கொள்வதும் பயனுள்ளது என்பது என் கருத்து.  சூத்திரங்கள் மந்திரங்களைப் போன்றவை. உபயோகிக்க, உபயோகிக்க அவை திறந்து கொண்டு மேலதிகப் புரிதலை அளிக்கும். உதாரணமாக செவ்வகத்தின் பரப்பளவு, வட்டத்தின் பரப்பளவு இரண்டு சூத்திரங்களுமாவது  மனப்பாடமாகத் தெரிந்தால் அவற்றைக் கொண்டு பல பல்கோணங்களின்(polygon) பரப்பளவைக் கணக்கிட்டுவிட முடியும். 

    இது என் அனுபவத்தில் நான் அறிந்தது. மற்ற ஆசிரியர்களின் அனுபவம் வேறாக இருக்கலாம். கற்கும் விஷயங்களில் அவற்றின்  நடைமுறைப் பயன்பாட்டை(real life application) இணைதல், தொழிற்கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் போன்றவையும்  அமெரிக்கக் கல்வி முறையின் சிறப்பம்சங்கள்.

    இறுதியாக நீங்கள் செய்யும் இந்த நேர்காணல் பணிக்கு நன்றிகள் பல.. நேர்காணல்களைத்  தொடந்து வாசிக்கிறேன். ஓவ்வொருவரின் படைப்புலகையும்  ஆழமாக அறிய முடிகிறது. தொடருங்கள்!

    —-

    நேர்முகம் உதவி: பிரமோதினி

  • Interview 8: Remitha Satheesh

    Interview 8: Remitha Satheesh

    Remitha Satheesh translates literary fiction from Tamil and Malayalam into English. Her sessions on the poetry of John Keats (2022), Emily Dickinson (2023), and Kamala Das (2024) at the Emerson Literary Camp in Boone left a deep impression on me.

    Remitha’s blog: https://alakananda.wordpress.com/

    A few words about your hometown, studies, family, and work?

    I am from Nagercoil, near Kanyakumari, a small town nestling below the foothills of the Western Ghats. It is a land steeped in history, myth, and folklore; a land that is a feisty blend of two cultures. A true blue Nagercoilite born and brought up there, I identify with both Tamil and Malayali cultures, and I consider myself fortunate to carry that dual heritage.

    I did all my schooling at St.Joseph’s Hr. Secondary School, Nagercoil and graduated in English Language and Literature from Holy Cross College. I hold a Masters from the University of Kerala Institute of English. 

    I now live in Raleigh, North Carolina, with my husband Satheesh, who works in IT. Our two daughters are established in their careers—one in Marketing and Communications, the other in Cybersecurity—and our son‑in‑law is also in IT. I am a Knowledge Management Analyst in a health insurance company.

    How did your literary journey begin?

    Words are my first love. I developed a passion for reading at a very young age, cutting my teeth on Amar Chitra Katha, Chandamama, and Enid Blyton. From there I progressed to abridged versions of classics and then the real deals – Austen, Brontes, Wilde, Hardy and so on. I grew up in a town that sadly did not have a functioning public library. But my school had a pretty decent collection of books and we also had a well stocked ‘book cupboard’ at home. I read anything and everything I could lay hands on. In the personal bookshelf that lived in my mind, Dickens jostled for shelf space with Sidney Sheldon, Shakespeare and Archie were friendly neighbors, while RK Narayan and Mandrake the Magician had a friendly contest about who would get picked that day. Oh, and did I mention the indomitable Gauls who continue to pick my spirits up to this day. As you can see, my reading was not well-rounded, because I sadly neglected to read much regional literature despite being fortunate enough to handle two Indian languages. This is a regret, for which I am now trying to make amends. My serious foray into Tamil and Malayalam literature started quite late in life (with Jeyamohan’s Sotrukanakku and Kamala Das’ Neermathalam Poothakalam) and I am desperately trying to make up for lost time.
    All that love for reading slowly gave me ideas that I could write too and I tried my hand at writing. Literature had become something more than what I simply consumed. I felt I needed to participate too. Gradually, this led me to choose English literature as my chosen field of study. 

    Who are your favorite Tamil and non-Tamil writers / poets ?

    My favorite Tamil writer is undoubtedly Jeyamohan, because of whom my interest in reading Tamil and Malayalam works was not just revived, but was brought back with a burning sense of urgency. 

    If I were to list out my favorite non-Tamil writers, you are in for a long list – Kamala Das/Madhavikutty, Basheer, MT, and ONV Kurup in Malayalam, and in English, John Keats, Shakespeare, Walt Whitman, Emily Dickinson, Marquez, Atwood, Terry Pratchett… some names off the top of my head.

    I also enjoy the works of the Bhakti poets across languages.

    How did you become interested in translation ?

    My interest in translation began with film songs. A couple of friends fell in love with some Tamil and Malayalam songs and asked me to translate some for them. What began as a fun exercise soon sparked an interest in me and I started translating some of my favorite lyrics. I enjoyed doing this a lot, but somehow never thought about translating stories. That came with the growing interest in translating Jeyamohan’s stories  and Vishnupuram’s Literary Circle’s robust promotion of translations. So I took baby steps with Jeyamohan and A. Muthulingam’s short stories. 

    When was your first translated short story published ?

    My first translated short story – Devi by Jeyamohan –  was published in 2021 in Usawa Literary Magazine. 

    “Why do I translate?” – what would your answer be to this question ?

    To put it simply – for the joy of it. If I were to elaborate, I would say that once I got into serious translation, I found I went deeper into the story as I translated. I read between the lines, heard the unspoken words, caught the nuances, lived several lives, and emerged having ‘got’ the story at different levels. Translating made the story richer for me.
    I also feel I am able to share the joy I experienced in a story, with others handicapped by language. There might be things lost in translation, but I was able to carry over something. And I would like to believe that I am making the heartbeat of a story audible in another language. 

    What are your views on using AI technology in creative work ?

    We are heading into unclear and dangerous waters with this question. I would like to consider AI as a tool – a pretty useful one at that. At work, I am compelled to use AI. It definitely makes my hours more productive and significantly cuts down on time and effort. But when it comes to creative writing or translation, I still go the old fashioned way. AI could probably serve as a supporting editor, but things like creativity, intuition, emotional truths, cultural nuances… these I think still are and should remain within the realm of humans. Real art and literature comes from the creator’s lived experience, or the unfettered power of his imagination. I don’t think AI is there yet. Also, where is the joy and the suffering, the agony and the ecstasy that an artist or writer undergoes.

    Your interests beyond translation?

    Beyond translation, I dabble in poetry and playwriting. I used to do a weekly column for an online portal sometime back, where I wrote on various subjects ranging from culture, history, mythology, humor… It was a period when I was able to produce quite a bit of work. I am also interested in exploring world mythology. 

    What are your future plans regarding writing ?

    I am currently waiting for my collection of translated short stories to be published. And I have started working on my next translation – it is a novella. And somewhere in the midst of all this, I hope to come up with a structured script for a couple of mythological stories I have been playing around with. Stories that are just footnotes in the larger epics, but with characters whose stories deserve to be told. 

  • நேர்முகம் 7: அருண் அருணாச்சலம்

    நேர்முகம் 7: அருண் அருணாச்சலம்

    அருண் அருணாச்சலம் ஓவியர். இரா.முருகனின் படைப்புகள் (மிளகு நாவல், சிவிங்கி குறுநாவல்) சொல்வனம் இதழில் தொடராக வந்தபோது பல அத்தியாயங்களுக்கு ஓவியங்கள் வரைந்தார். ஐந்து புத்தகங்களுக்கு அட்டை படம் வரைந்திருக்கிறார். எமர்சன் இலக்கிய முகாம், பூன் (2022) முதல் முறை சந்தித்தேன்.  வலைதளம் : https://www.artstation.com/arun-artist/albums/10066400

    தொடர்புக்கு: aak211th.artist@gmail.com

    உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், பின்புலம் பற்றி ?

    பிறந்து வளர்ந்தது கோவையில். குறிப்பாக கே கே. புதூர் (குப்பைக்கோணம் புதூர்). பள்ளி கல்லூரியும் கோவையில் தான். கோவையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பஞ்சாலைகளை பிரதானமாகக் கொண்டு நிறைய குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. ஆனால் இன்று அப்படி இருப்பது போல தெரியவில்லை. பெரும்பாலான பஞ்சாலைகள் மூடப்பட்டுவிட்டது. எங்கள் குடும்பம் கடந்த மூன்று தலைமுறையாக பஞ்சாலைத் தொழிலாளர்களாக பணிபுரிந்தனர். 

    தற்போது நான் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை பார்க்கிறேன். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் குடும்பத்துடன் வசித்துவருகிறேன். மனைவி சரவண்யா, பத்துவயதிற்கு உட்பட்ட இரண்டு மகன்கள். திகழ்வன் மற்றும் நிலன்.

    ⁠ஓவியம், வரைகலை அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ? 

    நான் முதன் முதலில் வரைந்த ஓவியம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அது ஒரு தண்ணீர் குழாய். பள்ளி பாடநூலில் உள்ள படத்தைப் பார்த்து ஒரு தாளில் வரைந்தேன். அப்போது ஆறு ஏழு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அதன்பின் தொடர்ச்சியாக நிறைய வரைந்து பார்த்து நானே சுயமாக கற்றுக்கொண்டேன். கண்களில் காணும் எல்லா காட்சிகளையும் ஓவியமாக வரைய எப்படி அணுக வேண்டும் என்று  மானசீகமாக திட்டமிட்டுக்கொண்டிருப்பேன். இளமையில் முறைப்படி ஓவிய வகுப்பிற்கு சென்று ஓவியக்கலையை கற்கவில்லை என்றாலும் இயல்பிலேயே ஓவிய அடிப்படைகளை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றல் அமையப்பெற்றது ஒரு நல்லூழ் என்று நம்புகிறேன்.  90’களில் திரைப்பட கட்டவுட்கள் எல்லாமே கையால் வரைந்த ஓவியங்கள் தான். என்னை மிகவும் கவர்ந்தது ஆங்கில திரைப்பட கட்டவுட்கள். கோவையில் சென்ட்ரல் மற்றும் மாருதி திரையரங்குகளில் ஆங்கிலத்திரைப்படங்கள் வெளியாகும். அப்பாவுடன் சைக்கிளில் செல்லும்போது நிப்பாட்டச்சொல்லி கட்டவுட் ஓவியங்களை பார்த்து ரசிப்பேன். எல்லாமே கோவை ஒப்பணக்கார வீதி சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஓவியர்கள் வரைந்தது. கட்டவுட்டின் கீழே ‘சினி ஆர்ட்ஸ்’ என்று கையெழுத்து இடம்பெற்றிருக்கும். அதைப்பார்த்து தான் என் ஓவியங்களிளும் கையெழுத்துப் போட ஆரம்பித்தேன்.

    பின்னர் ஓவியம் வரைவதற்கு முறையான பயிற்சிகள் எடுத்துக்கொண்டீர்களா ? 

    ஆம், 30 வயதுக்கு மேல் தான் என் முதல் ஓவிய வகுப்பு அமைந்தது.  அதன் பின் பல வகுப்புகள், பட்டறைகள் சென்றுள்ளேன். “self learners” என்பவர்களுக்கு நேரடியாக மற்றவரிடம் இருந்து ஒன்றை கற்றுக்கொள்வதற்கு ஒரு விலகல் அல்லது ஆணவம் உண்டு என்று படுகிறது. என் முதல் சவாலே அதைக் கிழித்துக்கொண்டு வெளியே வருவதுதான். “அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் சாத்தியங்கள் மட்டும்தான், சாதனைகள் அல்ல. சாதனைகள் செயல்மூலமே உருவாகின்றன. சாத்தியங்கள் நடைமுறையைச் சந்திக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு வெளியாகிறது.” என் விடாப்பிடிகளை தளர்த்திய ஜெயமோகனின் வரிகள் இவை. 

    புத்தக வாசிப்பு குழுமம் போல ஏதேனும் ஓவிய குழுமத்தில் உறுப்பினராக இருக்கிறீர்களா ?

    சில ஓவிய இணைய குழுமத்தில் உள்ளேன். அடிக்கடி கூட்டு ஓவிய பயிற்சி கூடத்திற்கு செல்வேன்.  அதில் வெவேறு ஓவியர்களின் பயிற்சி முறை மற்றும் செய்முறையை காண்பது எனக்கு பிடிக்கும்.   

    உங்களுக்கு பிடித்த ஓவியர் யார் ?

    பலவகையான ஓவியக்கலை வகைகள் உள்ளது. அதில் என்னுடைய களம் என நான் கருதுவது “இலுஸ்ட்ரேஷன்” வகையை சார்ந்தது. அதில் நான் ஆதர்சமாக நினைக்கும் ஓவியர்கள் தென் கொரியாவை சார்ந்த கிம் ஜுங் கி (Kim Jung Gi). ஓவியத்தில் ஆசாத்தியாமான மானுடத்திறன் பெற்றவர். அவர் உள்ளத்தில் எழும் சித்திரக் கொப்பளிப்பு என்னைக் கவர்ந்தது ஆனால் துரதிஷ்டிரவசமாக 2022இல் தன்  47ஆவது வயதில் பல்வேறு உடல்நல சிக்கல்களால் உயிரிழந்தார். அடுத்து அமெரிக்காவை சார்ந்த நார்மன் ராக்வெல் (Norman Rockwell). நார்மனின் ஓவியங்கள் அமெரிக்காவின் கலாச்சாரத்தை நேரடியாக பிரதிபலிப்பவை. அடுத்து காமிக்புக் ஓவியரான ஃபிராங்க் ஃப்ராசெட்டா (Frank Frazetta).

    முதல் ஓவியம் எப்போது வெளியானது ?

    எழுத்தாளர் இரா. முருகன் எழுதிய சிவிங்கி குறுநாவல் சொல்வனம் இதழில் 2023’இல் வெளியானது அதற்குத்தான் முதலில் சித்திரம் வரைய ஆரம்பத்தேன். அதற்கு முன்பு நான் படித்த கல்லூரி ஆண்டுமலரில் என் ஓவியம் பிரசுரமானது. முதலில் ஒரு நாய் சோபாவில் அமர்ந்திருப்பது போன்ற தத்ரூபமான ஒரு ஓவியம் வரைந்து கொடுத்தேன். நான் சமர்ப்பித்த அசல் படம் திருட்டு போய்விட்டது. அதனால் அவசரமாக டாக்டர் அம்பத்கரின் உருவப்படம் வரைந்து கொடுத்து பின் பிரசுரமானது. நண்பன் இது பார்ப்பதற்கு இயக்குனர் கே. பாலச்சந்தர் போல உள்ளது என்றான். எனக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் அவனுக்கும் தட்டுப்பட்டது சற்று ஏமாற்றம்தான். 

    “வர்தமான்” என்ற உங்கள் புனைப்பெயர் பற்றி ? 

    இந்தியாவின் முதல் கார்ட்டூன் சீரிஸ் பெயர் வர்தமான். சிறுவயதில் இருந்தே மிக அணுக்கமான பெயர். எங்கள் ஊரில் பலருக்கு ‘வரத’ என்று பெயர் இருக்கும், வரதராஜ் வரதாத்தாள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நபருக்கு வரதராஜன் என்ற பெயர் இருக்கும். நான் பார்த்த முதல் கார்டூனும் அதுதான். வளர்ந்த பின் தான் வர்தமான் சமண மதத்துடன் தொடர்புடையதை அறிந்து கொண்டேன்.

    இந்திய புராணங்களை படக்கதையாக கொண்டுவருவதில் உள்ள சவால் என்ன ? 

    மேற்கில் நாம் காணும் விட்ச்(witch) என்ற உருவம் வெவ்வேறு காலகட்டத்தில் பல நூறு ஓவியர்களின் பல ஆயிரம்  ஓவியம் மூலம் திரண்டு அடைந்த ஒரு சித்திரம். ஒரு குச்சியின் மீது அமர்ந்து ஒரு கிழவி பறப்பதை போல ஒரு சித்திரத்தை பார்க்கிறீர்கள். உடனடியாக அது ஒரு மாயக்காரி(witch) என்று பார்வையாளர்களுக்கும் தெரியும்.

    ஆனால் நமக்கு மிகமிக குறைவான இமேஜ் லைப்ரரியே உள்ளது. நம் தொன்ம மற்றும் புராண மாந்தர்கள் (உதாரணம்: கிண்ணரர், கிம்புருடர், கிராதர், பூதங்கள்) களுக்கு என்று ஒரு  இமேஜ் லைப்ரரி உருவாகி வர வேண்டும். எண்ணிப்பாருங்கள்  இன்று திருஷ்டி பொம்மைக்கு  என ஒரு இமேஜ் லைப்ரரி திரண்டு வந்திருக்கிறது. அதுபோல அணைத்து தொன்ம புராண மாந்தர்களும் இமேஜ் லைப்ரரி உருவாகவேண்டுமென்றால் பல ஆண்டு கூட்டு செயல்பாடு தேவைப்படும்.

    “எதற்காக வரைகிறேன்?” என்றால் உங்கள் பதில் என்ன ?

    எதைக்கொண்டும் நிரப்பமுடியாத அகவயமான தீரா வெற்றிடத்தை ஏதேனும் ஒரு கலையை கொண்டே நிறப்ப முடியும் என்று இலக்கியம் வாயிலாக கண்டுகொண்டேன். கைவசம் ஒரு கலை இருப்பது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்!

    உங்களுடைய ஓவியம் வரையும் முறை என்ன ? (இடம், நேரம், ஒரே அமர்வில் வரைவீர்களா? )

    ஆம் வீட்டிற்குள் ஒரே இடத்தில் அமர்ந்துதான் வரைவேன். குறிப்பிட்ட நேரகாலம் என்றில்லை. ஆனால்  ஒவ்வொரு நாளும் ஒரே இடத்தில் அமர்ந்து பயிற்சி எடுப்பேன். வரையும்போது கைபேசியை அறையின் வெளியே வைத்துவிடுவேன். வரையும்போது இசை கேட்பதோ, தொலைபேசியில் உரையாடுவதோ இல்லை. சமீபகாலமாக பெரும்பாலான ஓவியங்களை ஒரே அமர்வில் முடித்து விடுகிறேன். சில ஓவியங்களை மாதக்கணக்கிலும் வாரக்கணக்கில் நாள்கணக்கில் அமர்ந்தும் முடித்திருக்கிறேன். சில சமயங்களில் பூங்காக்களிலும், பொது இடங்களிலும், வனங்களிலும் அமர்ந்து படம் வரைவேன். ஆனால் இவையெல்லாம் தனிப்பட்டவை இதழ்களுக்கானது இல்லை. இதழ்களுக்காக வரையும்போது உரையைப் படித்தவுடனேயே வரைய மாட்டேன். குறைந்தபட்சம் ஒன்று இரண்டு நாட்கள் எண்ணங்களை நொதிக்க விடுவேன். முதலில் எண்ணங்களைக் கொண்டு புத்தியில் வரைந்தெடுப்பேன் painting in the head என்று சொல்லலாம். இங்கு எண்ணங்கள் என்று நான் குறிப்பிடுவது மொழியாலான எண்ணங்கள் கிடையாது அது முற்றிலும் அருவமானது. பின் உள்ளத்தில் திரண்டுவந்த படத்தை வெளியே வார்த்தெடுப்பேன்.

    உங்களுடைய படைப்புகளில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உண்டா ? 

    நான் அடிக்கடி செல்லும் கூட்டு ஓவிய அமர்வுக்கு அறுபது வயதிற்கு மேற்பட்ட ஒரு பெண்மணி வருவார். மேடையில் அமர்ந்திருக்கும் மாடலை  பார்த்து தன் வெண்மையான கான்வாஸில் சிறப்பான உருவப்படத்தை தீட்டுவார். சந்தையில் கண்டிப்பாக குறைந்தது சில நூறு அமெரிக்க டாலர்கள் விற்கக்கூடிய அழகிய கலைப்படைப்பு அது. ஆனால் அவர் அடுத்தவாரம் வரும்போது அதே ஓவியத்தின் மேல் வெள்ளை நிறம் பூசி காயவைத்து புதிய கான்வாஸில் அடுத்த ஓவியம் வரைவதற்கு தயாராவர். இதுவே ஒவ்வொருமுறையும் சுழற்சிமுறையில். 

    நான் கண்டடைந்து என்னவென்றால் ஏ.ஐ மானுடத்திடம் களவாட முயற்சிப்பது மனிதனின் செயல்முறையை. ஒருமுனையில்  படைப்பிற்காக கருக்கொள்ளும்  ஒரு எண்ணம் அல்லது யோசனை மறுமுனையில் அதன் இறுதி விளைவு அல்லது படைப்பு. ஒரு கலைஞனுக்கு எது முக்கியம்? இறுதி விளைவா (படைப்பா) அல்லது இறுதி விளைவிற்கான படைப்புச் செயல்முறையா? ஒரு கலைஞனுக்கு இறுதி விளைவு எந்த அளவிற்கு முக்கியம்? ஒரு கலைஞன் எந்த கணத்தில் கலைஞனாகிறான் ? நடனம் நிகழும்போதா அல்லது இறுதியிலா? இவையெல்லாம் தனிநபர் தெரிவுகள். 

    நான் ஒவ்வொருமுறையும் கலைப்படைப்பில் ஈடுபடுவதற்கு காரணமே அதில் உள்ள படைப்பு செயல்முறைக்காகத்தான். அதில்தான் கற்றல் நிகழ்கிறது என்று படுகிறது. இதில் AI  துணை கொண்டு படங்களை வரைந்தால் பலர் வியக்கும்படி வேண்டுமானால் படைக்கலாம் ஆனால் தன்னளவில் நிறைவின்மை அடைவது கண்கூடு. 

    நீங்கள் புத்தகங்களுக்கு அட்டைப்பட ஓவியம் வரைந்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் குறித்து சொல்லுங்கள்.

    ஒரு ஆர்வத்திற்காக செய்துபார்த்தேன். இதுவரை ஐந்து ஆறு ஆங்கில சுய வெளீயிட்டு புத்தகங்களுக்கு அட்டைப்படம் போட்டுள்ளேன். இவை commissioned art  என்ற வகைமையில் வருவது. ஆட்டைப்படத்தை கோருவோர் சிலருக்கு ஏற்கனவே அதில் என்ன இடம்பெறவேண்டும் எப்படி இருக்கவேண்டும் என்று தோராயமாக ஒரு யோசனை இருக்கும். சிலருக்கு அப்படி முன் யோசனை என எதுவும் இருக்காது. ஆதலால் இந்த வகை அட்டைப்பட ஓவியம் முழுக்க முழுக்க என்னுடைய படைப்பு என்று சொல்லிவிட முடியாது. இரண்டு மனங்களின் ஓத்திசைவு என் வழியாக நிகழ்கிறது என்று சொல்லலாம். 

    ⁠நீங்கள் நல்ல வாசகரும் கூட. இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ? உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள் யார் ?

    எதுவுமே படிக்காமல் எடுத்த எடுப்பிலேயே தீவிர இலக்கியத்தில் நுழைந்துவிட்டேன். என் இருபதுகளில் ஜெயமோகனின் ‘விசும்பு’ அறிவியல் புனைவு சிறுகதைத்தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிவந்தேன். விசும்பு முடிந்த பின்பு ஜெயமோகன் எழுதிய நாவல்கள் என்ன என்று இணையத்தில் தேடி அடுத்து விஷ்ணுபுரம் வாசித்து முடித்தேன். எல்லாமே தற்செயல்தான். ஆனால் தற்செயல்கள் தானாக நிகழ்வதல்ல என்று நம்புகின்றேன். அதன் பின்புதான் இப்படி ஒரு தீவிர இலக்கிய உலகம் இருப்பதைக் கண்டுகொண்டேன். பிடித்த எழுத்தாளர்கள் ஜெயமோகன், கா.நா.சு, சுந்தர ராமசாமி. பிடித்த பிறமொழி எழுத்தாளர்கள் ஜார்ஜ் ஆர்வெல், தால்ஸ்தோய், தாஸ்தோவ்ஸ்கி. 

    ⁠ஓவியம் சார்ந்த எதிர்கால திட்டம் என்ன ?

    சிறார் நூல்களுக்கான பணியில் ஈடுபடும் எண்ணம் உண்டு.

  • நேர்முகம் 6: பிரதீப் பாரதி

    நேர்முகம் 6: பிரதீப் பாரதி

    பிரதீப் பாரதி எழுத்தாளர். மருத்துவத்துறை பின்புலம் கொண்டவர். டெக்சஸ் மாகாணம் டாலஸ் நகரில் வசிக்கிறார். டாலஸ் புத்தக வாசிப்பு குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை டாலஸ் நகர நூலகத்தில் சந்திக்கிறார்கள். இதுவரை 35 சந்திப்புகளை நடத்தி இருக்கிறார்கள்.

    உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், வேலையைப் பற்றி?

    நான் தமிழ்நாட்டில் சிதம்பரம் அருகிலுள்ள சிறகிழந்தநல்லூர் என்ற கிராமத்தில் பத்து வயது வரை வளர்ந்தேன். அதன் பிறகு அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில் என்ற சிறுநகரிலும், பின்னர் சென்னையில் கல்லூரிப் படிப்பையும் முடித்தேன். மேற்படிப்பு படிக்கும் எண்ணத்தில் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தேன். மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

    இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது?

    முன்பே சொன்னதுபோல, சிறு கிராம வாழ்க்கையில் புத்தகங்கள்தான் முக்கியமான பொழுதுபோக்கு. தொலைக்காட்சி இன்னும் பரவலாகாத காலம் அது. தெருவிலிருந்த அக்காக்கள் நூலகத்திற்குச் செல்லும்போதெல்லாம், அவர்களுக்குத் துணையாக என்னையும் அனுப்பிவைப்பார்கள். என் நினைவில், ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே மாலைமதி போன்ற இதழ்களில் வந்த கதைகளைப் படித்துவிட்டு வீட்டில் திரும்பச் சொல்லியிருக்கிறேன்.

    என் கிராமத்திற்கு மிக அருகில்தான் நம்பியாண்டார் நம்பி வாழ்ந்த திருநாரையூர் இருக்கிறது. அவர் பொன்னியின் செல்வன் நாவலில் ஒரு பாத்திரமாக வருகிறார் என்று கேள்விப்பட்டு, ஊரில் இருந்த ஒரு பெரிய மனிதர் வீட்டில் கல்கி இதழ்களிலிருந்து வெட்டி பைண்ட் செய்யப்பட்ட பிரதியை, அவர் வீட்டு திண்ணையில் அமர்ந்தே வாசித்தேன். ஐந்து பாகங்களையும் நான்கு நாளில் படித்திருப்பேன். அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

    இப்போது அதை இலக்கியப் படைப்பாக நான் கருதுவதில்லை. ஆனால், ஒரு வாசகனாக என்னை உருவாக்கிய புத்தகங்களில் அது முக்கியமான இடம் பெற்றிருக்கிறது.

    அதன்பிறகு கிரைம் நாவல்கள், காமிக்ஸ், சுஜாதா, பாலகுமாரன் என்று வாசிப்பு இயல்பாகவே அடுத்தடுத்த படிநிலைகளுக்குச் சென்றது.

    தீவிர இலக்கியம் என்று நான் முதலில் வாசித்ததாக நினைவில் இருப்பது எஸ். ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்.

    எங்கள் ஊர் நூலகத்தில் புதிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் தனியாகப் பூட்டி வைக்கப்பட்டிருக்கும். அப்பா, மாமா போன்ற பெரியவர்கள் வந்து பொறுப்பு எடுத்துகொண்டு கையெழுத்து போட்டு கொடுத்தால்தான் அவற்றை தருவார்கள். நான் படித்த வேகத்தில் அது ஒவ்வொரு முறையும் சாத்தியமாகாது.

    எங்கள் ஊர் நூலகரைப் பொறுத்தவரை, சுந்தர ராமசாமியே இன்னும் “புதிய எழுத்தாளர்” தான். வெளியே இருந்த அலமாரிகளில் புதுமைப்பித்தன், மௌனி, லா. ச. ரா., ஜெயகாந்தன், பாலகுமாரன், கொஞ்சம் அசோகமித்திரன் — பதினெட்டாவது அட்சக்கோடு, மானசரோவர் போன்ற நூல்கள்தான் கிடைக்கும்.

    2006  ஆம் ஆண்டு ஜெயமோகன் எழுதிய பின்தொடரும் நிழலின் குரல் புத்தக அறிமுகம் நிகழ்ந்தது. பின்னர் 2009 ஆம் ஆண்டு முதல் அவரது வலைத்தளம் ஒவ்வொருநாளும் செல்லும் இடமாக இருக்கிறது.

    உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள், கவிஞர்கள் யார்?

    “பிடித்த” என்று சொல்லும்போதே ஒரு முன்முடிவு உருவாகிவிடுகிறது, இல்லையா? மேலும் அது தனிப்பட்ட ரசனை சார்ந்த விஷயமும் கூட.

    தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் உடனே சொல்லக்கூடிய பெயர்கள் ஜெயமோகன், தஸ்தயேவ்ஸ்கி, தாராசங்கர் பந்தோபாத்யாய, ஹெமிங்வே, ஜார்ஜ் ஆர்வெல், கப்ரியல் கார்சியா மார்க்கேஸ். 

    பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே, மீண்டும் மீண்டும் வாசிக்கத் தோன்றும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். கடந்த ஒரு மாதமாக யுலிசிஸ் நாவலை வாசிக்க முயன்றுகொண்டிருக்கிறேன். இந்தப் பட்டியல் முழுமையானதல்ல.

    எனக்கு உவப்பில்லாத எழுத்து என்றால், முக்கியமாக நவீனத்துவ இருத்தலியல் சார்ந்த எழுத்துக்கள். அது என் தனிப்பட்ட பிரச்சனை என்பதை அறிந்திருக்கிறேன்.

    கவிதை குறித்த என் வாசிப்பு இன்னும் மிகவும் குறுகிய எல்லைக்குள்ளேயே இருக்கிறது.

    நீங்கள் ஒருங்கிணைக்கும் டாலஸ் நகர வாசகக் குழுமம் பற்றி சொல்லுங்கள். எப்போது தொடங்கினீர்கள்?

    ஜெயமோகன் 2022-ல் டாலஸ் வந்தபோது வாசகர்களுடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. நீங்களும் அதில் கலந்துகொண்டிருந்தீர்கள். அன்றே ஆறு நண்பர்களின் தொலைபேசி எண்களை வாங்கி ஒரு வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கினோம். ஆனால், அதை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்பது அப்போது தெளிவாக இருக்கவில்லை.

    பிறகு 2024-ல் பூன் தத்துவ முகாமிற்கு மூர்த்தி, பாலாஜி, செந்தில்வேல் போன்ற நண்பர்கள் சேர்ந்து கலந்துகொண்டோம்.

    ஒரு நாள் காலை காபியின் போது, கேரளத்துக்கு வரும் வெளிநாட்டினர் பறவை பார்ப்பதிலிருந்து எப்படி இன்னும் ஆழமான தேடல்களுக்குச் செல்கிறார்கள் என்பதை ஜெயமோகன் அவருக்கே உரிய சாகச மனநிலையுடன் பகிர்ந்துகொண்டார். அதை ஒட்டி நான் கேட்ட கேள்விக்கு, “ஒரு கதை எழுதி பாருங்கள். இல்லையெனில், தீவிரமாக ஏதாவது ஒன்றில் இறங்கி அதை அறிந்துகொள்ளுங்கள்,” என்றார்.

    ஒப்புநோக்க, இரண்டாவது வழி எளிதாகத் தோன்றியது. நண்பர்கள் மூவரிடமும் ஏற்கெனவே அந்த எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் செந்தில் இமைக்கணம் வாசித்துக்கொண்டிருந்தார். அதையே ஒன்றாக வாசித்து, பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நண்பர்கள் நால்வரும் முடிவு செய்தோம்.

    டிசம்பர் 2024 முதல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நூலகத்தில் நேரில் சந்தித்து வருகிறோம். அதன் பிறகு நண்பர்கள் ஒவ்வொருவராக இணைந்துகொண்டனர்.

    எழுத்தாளர் ஜெயமோகனுடன் டாலஸ் வாசிப்பு குழுமம்.

    இதுவரை எத்தனை சந்திப்புகள் நடத்தியிருக்கிறீர்கள்?

    புனைவு இலக்கியம் தொடர்பாக இதுவரை 35 சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. ஒரு கூடுகைக்கு சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் கலந்துகொண்டார்.

    கடந்த ஆண்டு இறுதியில் தீம்புனல் – கம்பராமாயண கூடுகையை நியூஜெர்சியைச் சேர்ந்த நண்பர் பழனிஜோதி “கம்பனின் குகன்” என்ற சிறப்புரை ஆற்றி தொடங்கி வைத்தார். கம்பராமாயண வாசிப்பு தொடர்பாக இதுவரை 22 சந்திப்புகளும் நடந்துள்ளன.

    அதிகபட்சமாக ஒரு சந்திப்பில் எத்தனை வாசகர்கள் பங்கேற்றிருக்கிறார்கள்?

    எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ஒரு சந்திப்பில் சுமார் 20 பேர் வரை கலந்துகொண்டிருக்கிறார்கள். சில சமயங்களில் ஆஸ்டின், சான் அன்டோனியோ, அட்லான்டா போன்ற நகரங்களிலிருந்தும் நண்பர்கள் வந்து இணைந்திருக்கிறார்கள்.

    ஆனால் எண்ணிக்கையைவிட முக்கியமானது வாசிப்பின் தீவிரம். வாசிப்புகோண தீவிரத்தன்மையின் அடிப்படையில் ஒருவர் மூன்று அல்லது நான்கு தனித்துவமான பார்வை கோணங்களை முன்வைப்பது இதுவரை தவறாமல் நடக்கிறது. அதுவே மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.

    உங்கள் வாசிப்புக் குழுமத்தில் என்னென்ன புத்தகங்களை வாசித்திருக்கிறீர்கள்?

    இதற்கு, எங்கள் வாசிப்பு முறை பற்றிச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

    தமிழ் இலக்கியத்தில் முக்கியமான ஒரு படைப்பாளியைத் தேர்ந்தெடுத்தால், அவருக்குக் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாவது ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். பொதுவாக நான்கு கூடுகைகளுக்கு குறையாமல் அவரது படைப்புலகை வாசித்து விவாதிப்போம்.

    அந்த வகையில் புதுமைப்பித்தன், அ. முத்துலிங்கம், அசோகமித்திரன், ப. சிங்காரம், கு. அழகிரிசாமி ஆகியோரின் படைப்புகளை விரிவாக வாசித்துள்ளோம்.

    அசோகமித்திரன் படைப்புலகம் மட்டும் ஆறு மாதங்களுக்கு மேல் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் ஒரு நாவலை மையமாகக் கொண்டு தொடர்ச்சியாக கலந்துரையாடபட்டுள்ளது

    இடையிடையே ஜெயமோகனின் படைப்புகளையும் வாசித்து, அவற்றின் மீது வாசிப்புக் கோணங்களைப் பகிர்ந்துகொள்கிறோம்.

    அண்மையில் நடைபெற்ற நியூயார்க் வாழும் தமிழ் நிகழ்வில் கலந்துகொண்ட எழுத்தாளர்களான திருச்செந்தாழை, ம. நவீன், செந்தில் ஜெகநாதன், அ. வெண்ணிலா, கலைச்செல்வி, அழகுநிலா ஆகியோரின் படைப்புகள் குறித்து மூன்று மாதங்களில் ஆறு சந்திப்புகள் நடத்தினோம்.

    அதேபோல், அமெரிக்கா விஷ்ணுபுரம் வட்டத்தைச் சேர்ந்த நிர்மல் அவர்களின் படைப்புகளை மையமாகக் கொண்டு ஒரு சந்திப்பும், பாலாஜி ராஜூ, சு. வெங்கட், விஜய் ரெங்கராஜன் ஆகியோரின் சிறுகதைகள் குறித்து ஒரு சந்திப்பும் நடத்தினோம்.

    ஒரு எழுத்தாளரை நான்கு சிறுகதைகளில் வாசித்து முடித்துவிட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. ஒரு எழுத்தாளரின் உலகத்துக்குள் நுழைய, அவருடன் சில மாதங்களாவது வாழ வேண்டும் என்பதே எங்கள் எண்ணமாக இருக்கிறது.

    வாசிப்பு குழுமங்கள் வெற்றிகரமாக நடைபெற உங்கள் ஆலோசனைகள் என்ன ?

    திரள்வதின் நெறிகள்” என்று ஜெயமோகன் எழுதிய கட்டுரையை வாசிப்புக் குழும நண்பர் மூர்த்தி ஒருமுறை பகிர்ந்திருந்தார். என் அனுபவத்தின் அடிப்படையில் சில விஷயங்களைப் பகிரலாம்.

    முதலாவது, குறிப்பிட்ட இடமும் நேரமும் என்ற ஒழுங்கு. அதை உறுதியாகக் கடைப்பிடித்துவிட்டால், அந்த ஒழுங்கே நண்பர்களை அழைத்துவரும். ஒரு வாசிப்புக் குழுமத்தை வெற்றிகரமாக நடத்துவது புதிய வாசகர்களைத் திரட்டுவதைக் காட்டிலும், அந்த ஒழுங்கைத் தொடர்ந்து காப்பாற்றுவதில்தான் இருக்கிறது.

    இரண்டாவது, “சரியான வாசிப்பு” என்று ஒன்று இல்லை என்பதை ஏற்றுக்கொள்வது. ஒரு வாசிப்புக் குழுமத்தின் நோக்கமே, நம்முடைய தனிப்பட்ட வாசிப்புக் கோணம் கேள்விக்குள்ளாகவும், நாம் இதுவரை பார்க்காத புதிய பார்வைகளை அறிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பை உருவாக்குவதுதான்.

    மூன்றாவது, ஒரு ஒருங்கிணைப்பாளர் அவசியம். அவருக்குத் திடமான இலக்கியக் கருத்துகள் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அவருடைய கருத்துகள் குழுமத்தின் மீது தேவையற்ற செல்வாக்கு செலுத்தாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

    நான்காவது, அதை ஒரு கொண்டாட்டமாக மாற்றிக்கொள்வது. முதல் ஆண்டு நிறைவில் நாங்கள் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கினோம். குடும்பத்தினரையும் அழைத்து ஒன்றாகச் சந்தித்தோம். அப்போது வாசக நண்பர்களின் இணையர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்:  “அமெரிக்கா வாழ்வில் வார இறுதியில் அரை நாளை இலக்கியத்துக்கு எடுத்து கொள்கிறோம். இவர் வார இறுதியில் இலக்கியக் கூட்டத்துக்குப் போகிறாரே, அதற்காக வீட்டில் நீங்கள் என்னையோ அல்லது குழுமத்தையோ திட்டுவதுண்டா?”

    பெரும்பாலானவர்கள் சிரித்தபடியே, “ஆரம்பத்தில் திட்டினோம். ஆனால் கூட்டத்திலிருந்து திரும்பி வந்த பிறகு அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது எல்லாம் எப்போது தப்பித்து வீட்டுக்கு போவோம் என்று இருப்பவர், இந்தக் கூட்டத்துக்காக மட்டும்இன்னும் இரண்டு வாரம் மீண்டும் சந்திக்க, அதற்குள் இதை எல்லாம் படிக்க வேண்டும் என்று ஆவலாகக் காத்திருக்கிறார். அதைப் பார்க்கும்போது எங்களுக்கே ஒரு விதத்தில் மகிழ்வாக சற்று பொறாமையாக இருக்கிறது” என்றார்கள். 

    அந்த பதிலிலிருந்து நான் புரிந்துகொண்டது ஒன்றுதான். ஒரு வாசிப்புக் குழுமம் என்பது அறிவு/கருத்து பரிமாற்றம் மட்டுமல்ல. அது மகிழ்ச்சியையும் உருவாக்க வேண்டும். அந்தக் கொண்டாட்ட உணர்வு மிக முக்கியம்.

    இறுதியாக, இலக்கியக் கருத்துக்களை விடவும், வாசிப்புப் பார்வைகளை விடவும் முக்கியமானது, நம்மைப் போலவே வாசிக்கும் இன்னொரு உயிரை, இன்னொரு நண்பரைச் சந்திப்பதுதான். இலக்கியக் கருத்துக்கள் எப்போது வேண்டுமானாலும்  மாறலாம். வாசிப்பின் பார்வையும் மாறலாம். ஆனால் வாசிக்கும் நண்பர்கள் அரிதானவர்கள். அந்த அரிய நட்பை, எதன் பொருட்டும் இழக்க வேண்டிய அவசியம் இல்லை.

    ஒரு நல்ல வாசிப்புக் குழுமத்தின் மிகப் பெரிய சாதனை என்பது நல்ல வாசகர்களை  அல்லது மிகச்சரியான வாசிப்பு கோணத்தை உருவாக்குவது அல்ல. நீண்ட காலம் நீடிக்கும் வாசிப்பு நட்புகளை உருவாக்குவதுதான் என்று நம்புகிறேன்.

    உங்கள் வாசிப்பு குழுமத்தில் இணைவது எப்படி? யாரை எல்லாம் இணைத்து கொள்வீர்கள்?

    வாசிக்கும் நண்பர் யார் என்றாலும், வாசிப்பில் எந்த நிலையில் இருந்தாலும், எந்த விதமான வாசிப்புக் கொள்கை கொண்டவர் என்றாலும் அவரை வரவேற்கிறோம்.

    ஆனால் ஏற்கனவே சொன்ன மாதிரி குழுமமாக இயங்க சில அடிப்படை விதிமுறைகள் தேவையாகின்றன

    அதில் முதன்மையானது, குழுமத்தில் எந்தவித முன்முடிவும் இல்லாமல், அரசியல், இலக்கியக் கொள்கைகள், பிடித்த/ பிடிக்காத ஆக்கங்கள் , எழுத்தாளர்கள் என்பதை எல்லாம் தாண்டி , இணைமனம் என்ற அளவில் பரஸ்பர நட்புணர்வை எதிர்பார்க்கிறோம்.

    இணைய விரும்பும் நண்பர்கள் dfwbookclub2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் தொடர்பு எண்ணை பகிர்ந்து கொள்ளலாம்.

    சொல்வனம் இதழில் வெளிவந்த மருத்துவம் குறித்த உங்கள் தொடருக்கு என்ன எதிர்வினைகள் வந்தன?

    ஆரோக்கியம் குறித்து தொடர்ந்து பரவிவரும் சில கருத்துருக்களை வரலாறு, தத்துவம், இலக்கியம் போன்ற சட்டகங்களில் கொஞ்சம் கற்பனை வைத்து பார்க்க முடியுமா என்பதே என் ஆர்வமாக இருந்தது. இன்னும் பரந்த மனித சிந்தனையின் பின்னணியில் அவற்றை இணைத்துப் புரிந்துகொள்ள முடியுமா என்ற தேடலும் அதில் இருந்தது. அதன் அடிப்படையில் தான் தொடருக்கு “மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்” என்று தலைப்பு போடப்பட்டது.

    மருத்துவம் சார்ந்த படிப்பும், பின்புலமும் இருந்தாலும் கூட மேற்சொன்ன சட்டகங்கள் வழியே சில கருத்துருக்களை உசாவிக்கொண்டது எனக்கு தனிப்பட்ட முறையில் அந்தத் தொடரில் மிகுந்த மனநிறைவை அளித்தது. அதன் வழியாக நான் மேற்கொண்ட ஒரு சிந்தனைப் பயணமும் இருக்கிறது.

    இப்படிப்பட்ட தொடரை எழுத வேண்டும் என்ற முதல் எண்ணத்தை விதைத்தது நீங்கள். தொடர்ந்து  எழுத சொல்வனம் பாலா ஊக்கமளித்தார். பிரசுரித்த சொல்வனம் குழுவிற்கு நன்றி. சு. வெங்கட், நிர்மல், விவேக் போன்ற விஷ்ணுபுரம் நண்பர்களுடன் இந்த விஷயங்களைப் பற்றி தொடர்ச்சியான உரையாடல்கள் நடந்துகொண்டே இருந்தன.

    உங்களுடைய முதல் சிறுகதை எது?

    என்னுடைய முதல் பிரசுரமான சிறுகதை இந்த ஆண்டு சொல்வனம் இதழில் வெளியான சுழற்பிரயாணம்.

    அது வடிவ ரீதியாக சிறுகதைதானா என்ற சந்தேகம் எனக்கு இன்னும் இருக்கிறது. எழுதி முடித்த பிறகுதான், அது ஒரு நாவலின் சிறிய துண்டைப் போன்ற உணர்வை எனக்குத் தந்தது, ஒன்றும் செய்வதற்கு இல்லை. இப்போது ஒரு மாதிரி குறுநாவல் என்று சொல்லிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    அது எங்கள் அசோகமித்திரன் வாசிப்புக் கலந்துரையாடலின் விளைவாக உருவானது. அவரது பிரயாணம் சிறுகதை குறித்து தீவிரமான விவாதம் நடைபெற்றது. அதற்கு நான் “அசோகமித்திரனும் அறிவியல் பொருண்மைவாதக் கசப்பும்” என்ற தலைப்பில் ஒரு எதிர்வினை எழுதினேன்.

    அந்தக் கதையை, எனக்கு உகந்த விதத்தில், என் அனுபவத்தின் வழியாக மறுபடியும் நிகழ்த்திக்கொள்ளும் முயற்சியாகத்தான் சுழற்பிரயாணம் உருவானது. குறிப்பாக, பிரயாணம் எனக்குள் உருவாக்கிய ஒரு கசப்புணர்விலிருந்து வெளியேற நான் மேற்கொண்ட படைப்புச் செயல் என்றும் சொல்லலாம்.

    இதைச் சொல்லும்போது, அசோகமித்திரனை உலக இலக்கியத்தின் ஒரு மாஸ்டர் என்ற நிலையில் அவர் மீது எனக்கு இருக்கும்  அளவில்லாத மரியாதையும் பிரியத்தையும் கருத்தில் கொண்டே சொல்கிறேன்.

    இலக்கியம் தவிர மற்ற துறைகளில் உங்கள் ஆர்வம் என்ன?

    வரலாறு, தத்துவம், உளவியல், யோகம் ஆகிய துறைகளில் எனக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் அந்த ஆர்வம் பெரும்பாலும் வாசிப்பின் வழியாகவே உருவானது.

    அதே நேரத்தில், அதை வெறும் வாசிப்பாக மட்டுமே வைத்திருக்காமல், அன்றாட வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் ஒரு கருவியாக மாற்ற வேண்டும் என்ற விருப்பமும் இருக்கிறது.

    உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

    அன்றாட வாழ்க்கை எழுப்பும் சில கேள்விகளும் போதாமைகளும் என் வாசிப்பின் திசையை உருவாக்குவதில் பங்காற்றி இருக்கின்றன. அவற்றுக்கான சில பதில்களை வாசிப்பின் வழியாகக் கண்டடைகிறேன். இதை ஒரு ஒருவழிப் பாதை என்று சொல்லலாம்.

    ஆனால் அதற்கு மாறாக, வாசிப்பதிலிருந்து ஒரு வாழ்க்கையை உருவாக்கி, அதை மீண்டும் அன்றாட வாழ்வில் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. அப்போது அது இருவழிப் பாதையாக மாறுகிறது.

    ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. பிரசுரம், வடிவம் போன்றவை எல்லாம் பொருட்டல்ல. தனிப்பட்ட இந்த இருவழிப்பார்வையை நான், எனது என்று மட்டும் இல்லாமல் ஒரு நிலப்பகுதிக்கு, அதன் கலாச்சாரத்திற்கு விரித்துக் கொள்ளமுடியுமா என்று பார்ப்பதே நோக்கம்.

    அதைச் செய்வேன் என்றும் நம்புகிறேன்.

    முடித்து கொள்வதற்கு முன், நீங்கள் செய்யும் இந்த நேர்காணல் பணிக்கு நன்றி . நேர்காணல்களை தொடந்து வாசிக்கிறேன். இந்த நேர்காணல் வழியே அவர்கள் எழுத்தாளுமையை இன்னும் அணுக்கமாக அறிய முடிகிறது. அது அவர்களின் படைப்புலகை மேலும் ஆழமாக காட்டுகிறது. தொடர்ந்து செய்யுங்கள். நன்றி.

  • நேர்முகம் 5: பாலாஜி ராஜு

    நேர்முகம் 5: பாலாஜி ராஜு

    பாலாஜி ராஜு அமெரிக்காவில் ஒஹாயோ மாகாணத்தில் வசிக்கிறார். கவிஞர். எழுத்தாளர். சொல்வனம், ஆவநாழி, கவிதைகள் இதழ்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். எமர்சன் இலக்கிய முகாம், பூன் (2022) இல் பாலாஜியை முதலில் சந்தித்தேன். வலைதளம்: https://balajirajuwrites.blogspot.com/

    உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், வேலையை பற்றி ?

    பள்ளிப் படிப்பை கரூரில் எங்கள் கிராமமான புலியூர் காளிபாளையத்தின் அருகில், செட்டிநாடு சிமெண்ட் ஆலைக்குச் சொந்தமான தனியார் பள்ளியில் முடித்தேன். எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டு வரை ஒரே பள்ளிதான். பத்தாம் வகுப்பு வரை தென்னைமரங்கள் அணிவகுக்கும் பாதை வழியாக பள்ளிக்கு நடந்தே செல்வேன், பிறகு சைக்கிளில் செல்லத் தொடங்கினேன். கரூர் மாவட்டத்தில் பல காளிபாளையங்கள் உண்டு. கரூர் திருச்சி நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்த ஊர் எங்களுடையது. திருச்சியில் தனியார் கல்லூரியில் இளங்கலையும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதுகலையும் முடித்தேன். 

    முதுகலை முடித்து கரூரில் ஒரு தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் தொழில்நுட்பத் துறையில் ஏழு வருடம் பணியாற்றினேன். 2010ம் ஆண்டு சென்னை சிறுசேரியில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆலோசகராகச் சேர்ந்தேன். நான்கு வருடம் சென்னை வாசம், பிறகு அமெரிக்கா வந்துவிட்டேன். தற்போது கொலம்பஸ் நகரில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலை செய்கிறேன். மனைவி, மகன், மகளுடன் கொலம்பஸை ஒட்டிய புறநகரில் வசிக்கிறேன்.

    பெற்றோர் தம்பி குடும்பத்துடன் கரூரில் எங்கள் கிராமத்திலேயே வசிக்கிறார்கள். தம்பி கரிகாலியில் உள்ள செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் கிளை நிறுவனத்தில் வேலை செய்கிறான்.

    முப்பது வயது வரை எங்கள் ஊரிலேயே இருக்கும் அரிய வாழ்வு எனக்கு அமைந்தது. போகன் சங்கரின் கவிதை ஒன்று இப்படித் தொடங்குகிறது, ‘நகரம் என்பது மாபெரும் திங்கட்கிழமை’. எனக்கும் சென்னை நகரம் குறித்த இதே சித்திரம்தான் எழுகிறது. வார இறுதியில் சென்னை மங்களூர் விரைவு இரயிலில் கரூர் வந்துவிடுவேன். சென்னையில் வசித்த நான்கு வருடங்களும் இதையே வழக்கமாக வைத்திருந்தேன். 

    இந்த இரயில் பயணங்களில் ஏதாவது புத்தகங்களை வாசிப்பேன், பெரும்பாலும் வண்ணதாசன் கவிதைகள். அவர் கவிதைகள் வாயிலாகவே நவீனக் கவிதைகளுடனான அறிமுகம் எனக்கு ஏற்பட்டது.

    என்னுடைய கதைகளின் மாந்தர்கள் எல்லோரும் எங்கள் கிராமத்தில் வீட்டைச் சுற்றித்தான் வாழ்கிறார்கள். இந்த வருடம் ஊரில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன். ‘ஐஸ்கிரீம்’ கதையின் ‘வெள்ளையம்மா’, ‘இருபது ரூபாய்’ கதையின் ‘குணசேகரன்’, ‘உறம்பரையான்’ கதையின் ‘முத்துசாமி தாத்தா’ என எல்லோருடனும் உரையாடினேன்.

    முத்துசாமி தாத்தா’ ஒவ்வொரு வருடம் என்னைச் சந்திக்கையிலும் “அங்கையெல்லாம் நல்ல மழையா?” என்றுதான் உரையாடலைத் தொடங்குவார். இந்த முறையும் தவறாமல் அப்படியே நிகழ்ந்தது. இந்த முறை எல்லோரையும் போலவே தற்போதைய அமெரிக்க அதிபர் குறித்த வியப்பும் அவருக்கு இருந்தது 

    இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள சிற்றூர்களில் இலக்கில்லாமல் மதிய வெயிலில் உலவுவது என் பழக்கம். மனதுக்குள் கதைக் கருக்களின் தருணங்களை அசைபோட்டவாறு, மிதமான வேகத்தில் விட்டேத்தியாக அலைவது அலாதியான ஒரு அனுபவம்.

    கோடைக்காலங்கள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டில் தங்கியதே இல்லை. கிணற்றில் நீந்துவது, வயல் வெளிகளில் அலைவது, மீன் பிடிப்பது, மைதானத்தில் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுவது என்றே என்னுடைய பால்யத்தைக் கழித்திருக்கிறேன். என்னுடைய பால்யத்தையும் இளமையையும் ஒளிரும் வெயிலும், இளையராஜாவின் கிராமிய திரைப்பாடல்களும் முயங்கிய ஒரு வெளியாக அடையாளம் காணலாம்.

    அமெரிக்காவிலும் கோடைக்காலங்களின் பெரும்பகுதியை கிரிக்கெட் மைதானங்களில்தான் செலவிடுகிறேன். விரிந்த வானின் கீழ், பச்சைப் புல்வெளிகளால் சூழப்பட்ட பல்வேறு மைதானங்களில் இருப்பது எனக்குள் உள்ள சிறுவனை உயிர்ப்போடு வைத்திருக்க உதவுகிறது. என்ன, அந்தச் சிறுவன் குடும்பத்துக்கும், இலக்கியத்துக்கும் அளிக்கவேண்டிய நேரத்தை எடுத்து ஒளித்துவைத்துவிடுகிறான். குளிர்காலங்களில்தான் ஒளித்துவைத்த இடத்தை என்னிடம் காட்டுகிறான். அவனுடன் போராடிக்கொண்டேதான் இருக்கிறேன், பெரும்பாலும் என்னை வென்றுவிடுகிறான்.

    இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ? 

    என்னுடைய பெற்றோர் இருவருமே வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை துவக்கத்திலேயே கைவிட்டவர்கள். ஆனாலும் எதையாவது வாசிக்கும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது. என்னுடைய அம்மா பழைய வார இதழ்களில் உள்ள கதைகளை வாசிப்பார். அவர் மூலமாகவே எனக்கும் வாசிப்புப் பழக்கம் உருவானது.

    இளம் வயதிலேயே காமிக்ஸ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருந்தது; அம்புலிமாமாவும் நிறைய வாசித்திருக்கிறேன். முத்து மற்றும் லயன் காமிக்ஸ் வாயிலாக அமெரிக்க வன்மேற்கு நிலத்தின் கதைகளும், வேதாளன், இரும்புக்கை மாயாவி, டெக்ஸ்வில்லர், லக்கி லூக், வேட்டைக்கார வேலு போன்ற மனதில் அகலாமல் நிலைத்திருக்கும் மாந்தர்களும் அறிமுகமானார்கள். காமிக்ஸ் புத்தகங்கள் வாயிலாக கற்பனையான உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தேன். இன்றும் அமெரிக்காவில் காமிக்ஸ் புத்தகக் கடைகள் தென்பட்டால் உள்ளே சென்று ஒரு நோட்டம் விடுவது உண்டு. 

    ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ஆகியோரின் பாக்கெட் நாவல்களை வாசித்திருக்கிறேன். இருபதுகளின் தொடக்கத்தில் முழுமையாக சுஜாதாவின் படைப்புகளில் மூழ்கியிருந்தேன். அவர் மூலமாக ‘சுந்தர ராமசாமி’ எனும் பெயர் அறிமுகமானது. ‘ஒரு புளியமரத்தின் கதை’ நான் வாசித்த முதல் இலக்கியப் படைப்பு. பிறகு என்னுடைய இருபதுகளின் இறுதியில் சாரு நிவேதிதாவின் வலைத்தளம் எப்படியோ என் வாழ்வில் குறுக்கிட்டது. சாருவின் வாயிலாக ஜெயமோகனின் வலைத்தளத்தை வந்தடைந்தேன். இன்று வரை அவர்கள் இருவருடைய தளங்களையும் வாசிக்காமல் என்னுடைய ஒரு நாள் கூட நகர்ந்தது கிடையாது. சுஜாதா வாயிலாகவே வண்ணதாசனும் அறிமுகமானார்.

    உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள், கவிஞர்கள் யார் ?

    தமிழில் ஜெயமோகன், சாரு நிவேதிதா, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், யுவன் சந்திரசேகர், அ.முத்துலிங்கம் ஆகியோருடைய எழுத்து எனக்கு நெருக்கமானது. திருச்செந்தாழையின் கதைகள் பிரமிப்பை அளிக்கின்றன; அவருடைய சிறுகதைகளை பலமுறை மறுவாசிப்பு செய்திருக்கிறேன். உறங்கும் முன் ஜெயமோகனின் ஏதாவது ஒரு சிறுகதையை வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். சொற்களோடு உறங்கச் சென்று சொற்களோடு எழுவது எனக்கு மிகவும் பிடித்தமானது.

    இலக்கிய ஆதர்சங்கள் என ஜெயமோகனையும், சாரு நிவேதிதாவையுமே குறிப்பிடுவேன்.

    அபி, மதார், போகன் சங்கர் என ஆதர்ச கவிஞர்களின் பட்டியல் ஒன்று இருக்கிறது. சமீபத்தில் மதாரின் பரிந்துரையில் தேவதச்சனின் ‘தேதியற்ற மத்தியானம்’ தொகுப்பை வாசித்தேன். அபாரமான கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. அவரையும் இந்த ஆதர்சப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அன்றாட வாழ்வின் எளிய தருணங்களை உயர்ந்த கவிதைகளுக்கே உரிய மாயமான தளங்களுக்கு நகர்த்திச் செல்கிறார். வாசித்த பிறகும் கவிதைகளின் தாக்கம் நீங்காமல் எஞ்சுகிறது. தேவதச்சனின் கவிதைகளுக்குள் இயங்கும் அவருடைய மனநிலை குறித்த பிரமிப்பு எனக்கு உண்டு. இவர்கள் எல்லோரிடம் இருந்தும் கவிதைகள் இயங்கும் தன்மை குறித்து நிறைய கற்றுக்கொள்கிறேன். 

    ஆங்கிலத்தில் சார்லஸ் புக்கோவ்ஸ்கி, வால்ட் விட்மன், எமிலி டிக்கின்சன், மேரி ஆலிவர் ஆகியோருடைய கவிதைகளை வாசித்திருக்கிறேன். மேரி ஆலிவரை நண்பர் விவேக் சுப்ரமணியன் பரிந்துரைத்தார். மேரி ஆலிவருடைய கவிதைகள் வாசித்தவுடன் மனதுக்குள் அமர்ந்துகொள்கின்றன. 

    பெரும்பாலான அயல்மொழிக் கவிதைகளை தமிழ் மொழிபெயர்ப்பின் வாயிலாகவே வாசிக்கிறேன். க. மோகனரங்கனின் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் ‘நீரின் திறவுகோல்’ உலகலாவிய கவிஞர்களின் சிறந்த கவிதைகள் அடங்கியது. மொழிபெயர்ப்புக்கான கவிதைகளின் தேர்வும், அவருடைய மொழியாக்கமும் இணைந்து எழுச்சி மிகுந்த வாசிப்பனுபவத்தை அளிக்கிறது.

    தல்ஸ்தோய், தஸ்தாயெவ்ஸ்கி, ஆன்டன் செகாவ், ரேமண்ட் கார்வெர், ஆல்பர்ட் காம்யூ, எர்னஸ்ட் ஹெமிங்வே, ஒர்ஹான் பாமுக், நிகோஸ் கசந்த்சாகிஸ், குர்அதுல்ஐன் ஹைதர், வைக்கம் முகம்மது பஷீர் ஆகியோருடைய படைப்புகளை வாசித்திருக்கிறேன். பஷீரின் ‘மதிலுகள்’, தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’, ஒர்ஹான் பாமுக்கின் ‘பனி’ ஆகிய நாவல்கள் பிடித்தமானவை.

    பஷீர் குறுநாவல்களில் அங்கதம் மின்னும் நடையில், நேரடியான கூறுமுறையில், எழுச்சி தரும் தருணங்களை அளிக்கிறார். தல்ஸ்தோய் பிரம்மாண்டமான ஒரு உலகைப் படைத்து அதில் கவித்துவமான பல தளங்களை எழுப்புகிறார். தற்போது ‘Lonesome Dove’ என்றொரு அமெரிக்க மேற்கு நிலத்தை களமாகக் கொண்ட நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். சுவாரசியமான நாவல், புலிட்சர் பரிசு வாங்கியிருக்கிறது. இந்த நாவலை யதேச்சையாக நான் சந்தித்த ஒரு அமெரிக்கர் பரிந்துரைத்தார். அவர் அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியப் பின்புலத்தைச் சார்ந்தவர்.

    உங்கள் முதல் கவிதை எப்போது வெளியானது ?

    முதல் கவிதை ‘சொல்வனம்’ இதழில்தான் வெளியானது. 2018 ல் இருந்து கவிதைகள் எழுதுகிறேன். தொடக்கத்தில் ‘வனம்’ இதழுக்கு சில கவிதைகளை அனுப்பினேன், அவர்கள் நிராகரித்தார்கள். பிறகு நிறைய எண்ணிக்கையில் எழுதிய பிறகே கவிதைகளை அனுப்பவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். எனக்குள் இருக்கும் கவிதை வாசகனையும் தொடக்கத்தில் எழுதிய கவிதைகள் திருப்திப்படுத்தவில்லை. என்னுடைய சுபாவம் காரணமாகவும் கவிதைகளை பிரசுரத்துக்கு அனுப்பத் தயங்கினேன். 

    நூறு கவிதைகளை நெருங்குகிறேன். தற்போது எழுதும் கவிதைகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இனி அவ்வப்போது கவிதைகளையும் பிரசுரத்துக்கு அனுப்பலாம் என்று தோன்றுகிறது.

    முதல் சிறுகதை எப்போது வெளியானது ? 

    முதல் சிறுகதை ‘ஐஸ்கிரீம்’ சொல்வனம் இதழில் வெளியானது. 2024 ம் ஆண்டு இறுதியில் கரூர் பயணம் முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பியவுடன் எழுதிய சிறுகதை. ஒரு உருவகக் கதையாக எழுத உத்தேசித்தேன். அமெரிக்க விஷ்ணுபுரம் குழுவின் நண்பர்களால் பரவலாக வாசிப்புக்கு உட்பட்ட கதை. இன்றும் நண்பர்கள் சிலர் அந்தக் கதையை அவ்வப்போது பெருமனதோடு குறிப்பிடுகிறார்கள், அவர்களுக்கு என் நன்றி. 

    எழுத்து வாழ்வின் தொடக்கத்தில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் பெரிய வாசலைத் திறந்து வைத்திருக்கும் சொல்வனம் இதழுக்கு எப்போதும் என் மனதில் ஒரு இடம் உண்டு.

    கவிதை, சிறுகதை என இரண்டு வடிவங்களிலும் எழுதுகிறீர்கள்.  கவிதை அல்லது சிறுகதை என ஒரு படைப்பிற்கான வடிவத்தை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் ?

    கவிதைகள் எழுதும் செயல் தர்க்கத்தை உதறி, முழுக்க கற்பனையின் துணைகொண்டும், உள்ளுணர்வினாலும் நிகழ்கிறது. கவிதைக்கான தருணங்களை அடையாளம் காண்பதை ஒரு விழிப்புணர்வு நிலை என்றும் கருதலாம். தொடர்ச்சியாக கவிதைகளை வாசிக்கையில், எழுதிக்கொண்டிருக்கையில் காணும் காட்சிகள் அனைத்திலும் ஏதேனும்  படிமங்களும், கவிதைக்கான கருக்களும் தென்பட்டு மனம் மயங்கி நிற்கும் இனிய நிலை அமைகிறது.

    பல தருணங்களில் எழுதிய கவிதைகள் அர்த்தமற்ற உளறல்களாகவும், அரற்றல்களாகவும் இருப்பது உண்டு. ஆனால் கவிதைக்கான எல்லாக் குரல்களுக்கும் செவிசாய்த்தல் அவசியமானது என்று நம்புகிறேன். இனி வரும் கவிதைகளுக்கான உரமாகவும் இத்தகைய கவிதைகள் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அபூர்வமாக முழுக் கவிதையும் உதித்தவுடன் துல்லியமான சொற்களுடன், எந்த மாற்றமும் தேவைப்படாமல் அமைவதும் உண்டு. 

    அலுவலகத்தின் பரபரப்பான சூழல்களுக்கு இடையிலும் கவிதைக்கான கருக்கள் இடைமறிப்பது உண்டு. தோன்றும் கருக்கள் அருவமாக, கனவின் ஒரு துளி போல பிரக்ஞையில் இருந்து முழுமையாகக் கரைந்து போவதும் உண்டு.

    கவிதைக்கான கரு உதித்தவுடன் அதற்கே உரிய வார்த்தைகளும், கட்டுமானமும் வந்து அமர்ந்துகொள்கிறது. அப்போது மனம் ஒருவகை தானியங்கித்தன்மையுடன் முதல் வரைவை எழுதிவிடுகிறது. உடனடியாக திறன்பேசியில் தோன்றியவற்றை எழுதி வைக்கிறேன்.

    எழுதிய முதல் வரைவை திறன்பேசியிலிருந்து கணிப்பொறிக்கு மாற்றி செழுமைப்படுத்துவேன். சரியாக வருபவற்றை தனிக் கவிதைகளாக எழுதி வைத்திருக்கிறேன், அவ்வப்போது என்னுடைய வலைத்தளத்திலும் வெளியிடுகிறேன். இன்னும் முதல் வரைவாகவே நிற்கும் கவிதைகள் அதிகமான எண்ணிக்கையில் என்னுடைய கூகிள் கோப்பில் கிடக்கின்றன. 

    மாறாக சிறுகதைகள் ஒரு காட்சி, சந்தித்த மனிதர்கள், பல்வேறு நிலக் காட்சிகள், பிற சிறுகதைகள் வாயிலாக நமக்குள் உதிக்கும் வெளிச்சம் ஆகியவை மூலம் எழுகின்றன. கதைக்கான கரு தோன்றியவுடன் மனம் அதை அசைபோடத் தொடங்குகிறது. கதை மாந்தர்கள், சந்தர்ப்பங்கள், உரையாடல்கள், தோராயமான முடிவு என பல கோணங்களில் கதைகளை மனம் நிகழ்த்திப் பார்க்கிறது. உடனடியாக எழுதத் தொடங்கியவை, பல மாதங்களாக மனதுக்குள் இருந்துகொண்டு நெளிபவை, சில பத்திகள் மட்டும் எழுதி வளராமல் நிற்பவை என கலவையாக கதைகள் நிகழ்கின்றன.

    கவிதைகள் எழுதுவது சிறுகதைகளுக்கான வடிவ போதத்தை எனக்கு அளிக்கிறது என்று எண்ணுகிறேன். சிறுகதையா, கவிதையா எனும் தேர்வு கருக்கள் உதித்தவுடன் தொடக்கத்திலேயே நிகழ்ந்துவிடுகிறது; அதில் தர்க்கரீதியான என்னுடைய தலையீடு மிகவும் குறைவு என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது.

    கரூர் மண் சார்ந்த யதார்த்த படைப்புகள், அமெரிக்க பின்புலத்தில் சிறுகதைகள் எழுதி இருக்கிறீர்கள். எழுத்து சார்ந்த எதிர்கால திட்டங்கள் என்ன ? 

    அமெரிக்காவுக்கு குடியேறி பன்னிரண்டு வருடங்களை நெருங்குகிறேன். பல்வேறு நிலப்பரப்புகள், பனி, குளிர், வெயில், வானோங்கிய மரங்கள் என இயற்கையின் மாபெரும் திகழ்மேடையாக விளங்கும் இந்த மண்ணில் விரிவாக பயணங்கள் செய்திருக்கிறேன். ஒரு வந்தேறியாக, அந்நியனாக அமெரிக்காவைக் களமாகக் கொண்ட கதைகளை எனக்கே உரிய பார்வையில் தொடர்ச்சியாக எழுதவேண்டும் என்று எண்ணுகிறேன்.

    கரூர் முப்பது ஆண்டுகளாக நான் வாழ்ந்த நிலம். ஒவ்வொரு ஆண்டும் பிரியத்தோடு அங்கு திரும்பிச் செல்கிறேன். கரூர் பயணம் முடிந்து அமெரிக்கா திரும்புகையில் ஒவ்வொரு முறையும் சில துளிகள் கண்ணீரை அந்த நிலம் என்னிடம் இருந்து பெற்றுக்கொள்கிறது. 

    பிறந்து வளர்ந்த நிலம் நமக்குள் அருவமாக சிலவற்றை விதைக்கிறது. கரூரின் வெயிலை குறிப்பாகச் சொல்லலாம். நான் கதைகளைத் தரிக்கையில் வெயில் அங்கு பின்னணியில் இயங்குகிறது. விவரணைகளில் நேரடியாக அது இல்லாமல் போகலாம், ஆனால் அது நிகழ்கிறது. அமெரிக்காவில் கடுங்குளிர் சூழலில் இத்தனை ஆண்டுகளாக வாழ்கிறேன், வெயில் ஒரு பெரும் ஏக்கமாகவே எனக்குள் படிந்துகிடக்கிறது.

    கரூரில் நான் எதிர்கொண்ட மனிதர்கள் அயராத உழைப்பு, கருணை, மூர்க்கமான நம்பிக்கைகள், பெருமிதங்கள், வன்முறை என எல்லாமுமாக என் கண்முன் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள். அவர்களை அந்த நிலத்தின் பின்புலத்தில் வைத்து புனைவாக எழுதுகையில் உணர்வுரீதியான ஒரு விலகல் நிகழ்கிறது; எனக்குள் இருக்கும் நினைவேக்கம் மெல்ல அகல்வதை உணர்கிறேன், அது என்னை ஆற்றுப்படுத்துகிறது.

    எனக்கும் ஊருக்குமான பாலமாக என்னுடைய அம்மா இருக்கிறார். அன்றாடம் எங்களுக்குள் நிகழும் உரையாடலில் ஊரின் நிகழ்வுகள் வராமல் இருந்ததில்லை. திருமணமோ, இறப்போ, திருவிழாக்களோ, புதிதாக வருகை தரும் குருவியின் நிறமோ, இரவில் எங்கள் வீட்டை காவல் காக்கும் தெருநாயோ அவர் மூலமாகவே என்னை வந்தடைகின்றன. 

    “ஒரு வயசான காக்கா தெனம் சாப்பிட வரும், கொஞ்ச நாளாக் காணோம்” என்றோ, “நம்ம செடி அவரக்கா அவ்ளோ ருசி” என்றோ, “அட மெசின்காரமூட்டு ரவி இருக்காருல்ல,” என்றோ, “நம்ம கோழிய நாய் தூக்கீட்டு போயிருச்சு. எங்காலுக்குள்ளயே சுத்திக்கிட்டு கெடக்கும், பாவம்!” என்றோ, “குமிட்டிக் கீர கடஞ்சிருக்கேன். அல்சருக்கு நல்லது” என்றோ அவர் சொல்பவற்றை கூர்மையாக அவதானிக்கிறேன். என்னை ஆட்கொள்ளும் நினைவேக்கம் அவற்றை பெரு விருப்போடு பற்றிக்கொள்கிறது. 

    இவை மிகச் சாதாரண நிகழ்வுகளாக இருக்கலாம். ஆனால், இதன் மூலம் ஒவ்வொரு நாளும் நான் எனக்குள் சிறிது தூரம் பயணிக்கிறேன். என்னுடைய சில கதைகளையும் அம்மா வாசித்திருக்கிறார். அந்திமழையின் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு வென்ற ‘உறம்பரையான்’ சிறுகதை, அச்சு இதழில் என்னுடைய புகைப்படத்துடன் வெளிவந்திருந்தது. அதன் ஒரு பிரதியை எனக்காக பத்திரப்படுத்தி  வைத்திருந்தார். அவரையும் இப்போது நன்றியுடன் எண்ணிக்கொள்கிறேன்.

    “எதற்காக எழுதுகிறேன்?” என்றால் உங்கள் பதில் என்ன ?

    எழுதுவது ஆழந்த அமைதியை அளிக்கிறது. எதையாவது எழுதுகையில் உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன், மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன். இந்த வாழ்விற்கு அர்த்தம் இருப்பதாக உணர்கிறேன். நாமே ஒரு உலகத்தை உருவாக்கி, அதற்கே உரிய தர்க்கத்தை அளித்து, அந்தக் கதைகளுக்குள் பயணிப்பது பெரும் உவகை அளிக்கிறது. எழுதுவதைப் போன்ற வசீகரமான, நிறைவை அளிக்கும் செயலை நான் வேறு எதிலும் உணர்ந்ததில்லை.

    இத்தனை வருடங்கள் அமெரிக்காவில் இருந்தாலும், இந்த நிலத்தில் முழுமனதாக என்னால் ஒன்ற முடியவில்லை; உணர்வுரீதியாக அந்நியனாக இருப்பதன் பதைப்பு எப்போதுமே எனக்குள் இருக்கிறது. எளிய தத்துவார்த்த சிக்கலாக இது தோற்றமளித்தாலும், என்னால் இந்த பதைப்பைக் கையாள முடியவில்லை. என்றாவது ஒரு நாள் இந்த நிலை மாறும் என்று நம்புகிறேன். இங்குதான் இலக்கியத்தையும், எழுத்தையும், ஏன் கிரிக்கெட் விளையாடுவதையுமே கூட உறுதியாகப் பற்றிக்கொள்கிறேன்.

    மேலும், இலக்கியம் அளிக்கும் வரையறைகளுக்கு அப்பால், படைப்புகளுக்குள் இருக்கும் கதைகளையே என் மனம் நாடுகிறது. ஒரு கதைசொல்லியாக இருப்பதற்காகவும் எழுதுகிறேன்.

    எழுதும் அனைத்தும் பிரபஞ்சத்தில் எங்கோ சென்று சேகரமாகின்றன. நம் அறிவுத்தொகைக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு நோக்கமும் அதற்கு இருக்கிறது என்று நம்புகிறேன். இதை என்னால் தர்க்கரீதியாக விளக்கமுடியவில்லை, ஆனால் உணர்கிறேன்.

    உங்களுடைய எழுதும் முறை என்ன ? (இடம், நேரம், ஒரே அமர்வில் சிறுகதை எழுதிவிடுவீர்களா?)

    சிறுகதைகளை கணிப்பொறியில்தான் எழுதுகிறேன். வார இறுதி நாட்களில், காலையில் எழுந்து கதைகளை எழுதுகிறேன். விடிகாலையில் படுக்கையில் இருக்கும் போதே மனதுக்குள் இருக்கும் கதை விசை கூடி, சொற்களின் எடையுடன் எழுந்துகொள்கிறேன். நான் எழுதிய கதைகள் அனைத்தும் இப்படி அமைந்தவைதான்.

    இதுவரை இருபத்து ஐந்து சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். ஏழு கதைகளை பிரசுரத்துக்கு அனுப்பினேன், ஒரு கதை நிராகரிக்கப்பட்டு ஆறு கதைகள் வெளிவந்துள்ளன. சொல்வனம் இதழில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்த ‘எழுகை’ கதையை மட்டுமே ஒரே அமர்வில், இரண்டு மணிநேரத்தில் எழுதி முடித்தேன். பிற கதைகள் அனைத்தும் நாட்கள், வாரங்கள், மாதங்களாக வளர்ந்தவைதான். புனைவுகளை எழுத கணிப்பொறி முன் அமர்வதுதான் முக்கியமானது, அதற்குப் பின் கதைகள் தானாகவே வளர்கின்றன என்பதை உணர்ந்திருக்கிறேன்.

    எழுதிய கதைகளை ஆறவைத்து, எதிர்பாராத தருணங்களில் வாசித்துப் பார்ப்பதை ஒரு முறையாகவே பின்பற்றுகிறேன். அலுவலகத்தின் வேலைகளுக்கு இடையில், கூகிள் கோப்பில் இருக்கும் கதைகளை வாசித்துப் பார்ப்பது என்னுடைய வழக்கம். அப்போது கதைகளில் புதிய தருணங்களோ, இயற்கை வர்ணனையோ, உரையாடல்களோ, ஒட்டுமொத்தமாக கதையின் பார்வையில் இருக்கும் இடைவெளியோ தென்படும்.

    வார நாட்களில் மாலை நேரம் மட்டுமே எதைவாயது எழுதுகிறேன். குறைந்தது அரைமணி நேரமாவது எழுத முயல்கிறேன். மாலை நேரம் புனைவுகள் எழவில்லையென்றால் நாட்குறிப்பும், நண்பர்களின் படைப்புகளுக்கான எதிர்வினைகளையும் எழுதுகிறேன். 

    வேலை நாட்களில் என்னுடைய படைப்புகள் உறைநிலைக்குச் செல்கின்றன. எழுத்து எனும் செயலுடன் தொடர்பில் இருப்பதையும், வாசிப்பின் மூலம் மொழியால் மனதை மீட்டிக்கொள்வதையும் தவறாமல் செய்கிறேன். அலுவலகம், மகனின் பள்ளிக்கு என ஒரு நாளில் இரண்டு மணிநேரம் காரில் பயணிக்கிறேன். அப்போது படைப்புகளை மனதுக்குள் ஓட்டிப் பார்ப்பது பிடித்திருக்கிறது.

    என்னுடைய படுக்கை அறையில் ஒரு மெத்தை நாற்காலி இருக்கிறது. அதன் மீது அமர்ந்து, கணிணியை அதற்கே உரிய பலகையின் மீது வைத்து எழுதுகிறேன். எனக்கு எதிரில் மூன்று பெரிய கண்ணாடிச் சாளரங்கள் உள்ளன. அதன் வழியாகத் தெரியும் புல்வெளியையும், மரங்களையும், தொலைதூர வீடுகளையும் பார்த்துக்கொண்டே எழுதுகிறேன்.

    எழுதும் அறையில் படுக்கை, எழுதும் நாற்காலி, ஒரு புத்தக அலமாரா, சில ஓவியங்கள், புகைப்படங்கள், ஒரு கடிகாரம், இரவு விளக்கு தவிர வேறு எதையும் குவிக்காமல் பார்த்துக்கொள்கிறேன். நிர்வாணமான, எடையற்ற விரிந்த அறை ஏன் எனக்குப் பிடிக்கிறது என்று சொல்லத் தெரியவில்லை; எல்லா வகையான லௌதீகமான பொருட்களும் நம் மீது எதோ ஒரு வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றன எனும் நம்பிக்கை காரணமாக இருக்கலாம். 

    என் மனைவியிடம் மிகக் கறாராக இந்த அறையில் வேறு எதையும் கொண்டுவரக்கூடாது என்றும் சொல்லிவைத்திருக்கிறேன். அவளுக்கு அறை என்றால் அதை லௌதீகமான அலங்காரப் பொருட்களால் நிரப்பவேண்டும் எனும் எளிய நம்பிக்கை உண்டு.

    இன்னொன்று, படுக்கை அறையில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஹவாய் தீவுகள் பயணத்தின்போது ஒரு கனடா நாட்டு தெரு ஓவியன் வரைந்த என்னுடைய கோட்டுச் சித்திரமும் இருக்கிறது. நான் எழுதுகையில் அந்தக் கோட்டுச் சித்திரம் என்னைக் கண்டு புன்னகைத்துக்கொண்டே இருக்கிறது. கோட்டுச் சித்திரம் குறித்து ஒரு கவிதையும் எழுதியிருக்கிறேன்,

    “கித்தானில்

    தூரிகை உராயும்

    மயக்கொலி

    காதுகளில்,

    எவனோ 

    ஒரு ஓவியன்

    தீட்டுகிறான்

    வரைந்து தீராததோர்

    கோட்டுச் சித்திரத்தை”

    உங்களுடைய படைப்புகளில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உண்டா ?  

    நான் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்பவன் என்றாலும், மிகச் சமீபத்தில்தான் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் துவங்கினேன். இது எனக்கு நானே விதித்துக்கொண்ட பத்திய நிலைப்பாடு.

    கதைகளுக்கான தரவுகளுக்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறேன். சில குறிப்பிட்ட சொற்களின் அர்த்தங்களுக்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை நாடுகிறேன். முன்பு கூகிளில் தேடிக்கொண்டிருந்தேன். ஏ.ஐ. தொழில்நுட்பம் உரையாடும் தன்மையுடன் தகவல்களை சரளமாக அளிக்கிறது. உரையாடும் தன்மை இருப்பதாலேயே நம் மீது ஆதிக்கமும் செலுத்துகிறது. 

    ஒட்டுமொத்தமாக எழுதிய படைப்புகளின் மொழியைச் சீரமைக்கவோ, பிழை திருத்தவோ கூட நான் எந்தத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில்லை. படைப்புகளில் எல்லாத் தளங்களிலும் மனிதக் கைத்தடம் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு. கூகிளின் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்துகிறேன்.

    நாவல் எழுதும் திட்டம் உண்டா ? களம் என்ன ?

    குறுநாவல் எழுதும் எண்ணம் உண்டு. அது கரூர் பிண்ணனியில் இருக்க வாய்ப்புகள் அதிகம். ஒரு கதைக்களம் புகைமூட்டமாக மனதில் ஓடுகிறது, சற்று கனிந்து வரட்டும் என்று எண்ணுகிறேன். நிறைய சிறுகதைகளை எழுதவேண்டும், பெருநாவல்களை வாசிக்கவேண்டும். பிரபஞ்ச சக்தி என்மீது கருணையுடன் இருக்க வேண்டுகிறேன்.

  • பால் கிரஹாம் – வாழ்க்கை வரலாறு – 3

    பால் கிரஹாம் – வாழ்க்கை வரலாறு – 3

    https://www.paulgraham.com/worked.html – பெப்ரவரி 2021இல் பால் கிரஹாம் எழுதிய நீண்ட கட்டுரையின் ஒரு சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

    முதல் பகுதி

    இரண்டாம் பகுதி

    நியூயார்க் திரும்பிய உடன், என் பழைய வாழ்க்கையை வாழத் துவங்கினேன். ஒரே வித்யாசம் இப்போது நான் பணக்காரன். என்னுடைய பழக்கவழக்கங்களை தொடர்ந்தேன். முன்பில்லாத சில வசதிகள் இப்போது இருந்தது. நடக்கும்போது கொஞ்சம் கால் வலித்தால், கையை உயர்த்தினால் போதும் – ஒரு டாக்ஸி நின்று ஏற்றிக்கொள்ளும். அழகிய உணவகத்தின் வழியே சென்றால் உள்ளே சென்று உணவு சாப்பிடலாம். கொஞ்ச காலத்திற்கு உற்சாகத்தை தந்தது. நன்றாக ஓவியம் வரைய முடிந்தது. ஸ்டில் லைப் ஓவியத்தில் புதிய முயற்சிகளை செய்து பார்த்தேன். ஒரு ஓவியத்தை பழைய முறையில் வரைந்து, அதை புகைப்படமெடுத்து, பெரிதாக பிரிண்ட் செய்து, ஒரு கான்வாஸில் அதை பின்புலமாக வைத்து மீண்டும் அதே பொருளை வைத்து ஒரு ஓவியம் வரைந்தேன்.  

    அதே நேரம் ஒரு அடுக்குமாடி வீட்டை வாங்கும் முயற்சியில் இருந்தேன். இந்த முறை எந்த ஏரியாவில் வசிக்கவேண்டும் என்று தேர்வு செய்யும் இடத்தில் இருந்தேன். நியூயார்க்கின் கேம்பிரிட்ஜ் எங்கே உள்ளது என நிறைய வீடு விற்பனையானர்களிடம் கேட்ட பின்பு, கொஞ்சம் பொறுமையாக தெரிந்தது – அப்படிப்பட்ட இடம் நியூயார்க்கில் இல்லை என்று.

    2000த்தின் இளவேனில் காலத்தில் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. வியாவெப் அனுபவத்தில் வலைதள செயலிகள்தான் எதிர்காலம் என்று தெரிந்தது. வலைதள செயலிகள் உருவாக்குவதற்கு என ஒரு செயலியை ஏன் உருவாக்கக்கூடாது ? பிரௌசரிலே தங்கள் நிரல்களை எழுதிக்கொள்ள ஏன் அனுமதிக்கக்கூடாது ? ஒரு API மூலம் நிறைய சேவைகளை வழங்க முடியும்: தொலைபேசி அழைப்புகளை ஏற்கலாம், கடன் அட்டைகள் மூலம் பணம் செலுத்தலாம்,… 

    வேறெதையும் பற்றி யோசிக்கவிடாமல் இந்த யோசனை என்னை ஆட்கொண்டது. இதுதான் எதிர்காலமாக இருக்கப்போகிறது என்பது தெளிவாகவே தெரிந்தது. எனக்கு இன்னொரு நிறுவனத்தை துவங்க விருப்பம் இல்லை, ஆனால் இந்த யோசனையை வைத்து ஏதாவது செய்ய வேண்டும், ஆகவே கேம்பிரிட்ஜிற்கு மீண்டும் சென்றேன். ராபர்ட்டை எப்படியாவது இழுக்க முடியுமா என்று பார்த்தேன். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. ராபர்ட் எம்.ஐ.டியில் ஒரு ஆராய்ச்சியாளராக இருந்தான். முன்பு என்னுடைய திட்டங்களில் வேலை செய்ததனால் அவனுக்கு நிறைய பணம் கிடைத்தது. ஆனால் அதற்காக அவன் நிறைய நேரம் செலவிட்டிருந்தான். என் ஐடியா செயல்படுத்தக்கூடியது என்று அவன் சொன்னாலும், என்னுடன் வர முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டான். 

    ஹ்ம்ம். சரி, அப்போது நானே செய்ய வேண்டியதுதான். நான் டான் ஜிஃபினை வேலைக்கு சேர்த்தேன். என்னுடன் அவன் வியாவெப்பில் வேலை செய்தவன். மேலும் இரண்டு மாணவர்களை பகுதிநேர ஊழியர்களாக சேர்த்துக்கொண்டோம். இருபது நிறுவனங்கள் செய்ய வேண்டியது மற்றும் எண்ணற்ற ஓபன் சோர்ஸ் மென்பொருள்களின் கலவையைத்தான் நான் செய்ய முயற்சித்தேன். செயலிகளின் நிரல் மொழி – லிஸ்பின் ஒரு வடிவமாக இருக்கப்போகிறது. லிஸ்ப்பை எல்லோருக்குமான நிரல் மொழியாக மாற்றிவிட முடியும் என நான் நினைக்கவில்லை; டைலன் செய்ததை போல சில மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது.   

    வியாவெப் போன்ற நிறுவனத்திற்கு அப்போழுது ஒரு பெயர் உருவாகிவிட்டது – “அப்ளிகேஷன் சர்வீஸ் ப்ரொவைடர்”- (செயலிகள் சேவை வழங்குனர்) – ASP. அந்த பெயர் நீடித்து நிற்கவில்லை. “சாஃப்ட்வேர் ஆஸ் எ செர்வீஸ்” – SAAS – (மென்பொருளே ஒரு சேவையாக) என்ற பெயர் அதை எடுத்துக்கொண்டது. என்னுடைய புதிய நிறுவனத்தை நான் ஆஸ்ப்ரா என்று பெயரிட்டேன்.

    நான் செயலிகள் கட்டுமானத்தை உருவாக்க முயற்சித்தேன். டான் வலை கட்டுமானத்தையும், இரண்டு மாணவர்களும் முதல் இரண்டு சேவைகளையும் (படங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள்) உருவாக்க முயற்சித்தார்கள். கோடையின் பாதியிலே நான் ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க விரும்பவில்லை என்று தெரிந்தது. குறிப்பாக ஒரு பெரிய நிறுவனத்தை. ஆஸ்ப்ரா பெரிதாக ஆகும்போல தெரிந்தது. நான் வியாவெப்பை துவங்கியதே எனக்கு பணம் வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் இப்பொழுது என்னிடம் பணம் இருப்பதால், நான் எதற்கு இதை செய்ய வேண்டும் என்று தோன்றியது. 

    ஆனால் நான் இதை உருவாக்க செலவிட்ட நேரம் வீணாகவில்லை என்பதை கண்டு கொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நாங்கள் Y Combinator துவங்கிய, இதை போன்ற மென்பொருள் உருவாக்க முயற்சிக்கும் நிறைய ஸ்டார்டப்களை எதிர்கொண்டபோது உதவியாக இருந்தது. அந்த மென்பொருளை வடிவமைக்கும் நேரம், அதை உருவாக்க எழுதிய நிரல்கள் எல்லாம் பயன்பட்டது.

    நான் உருவாக்கிய அந்த ஓப்பன் சோர்ஸ் நிரல்கள் தான் லிஸ்பின் புதிய வடிவம். கோடையின் முடிவில் நானும், டேனும் லிஸ்ப் மொழியும் புதிய வடிவம் ஒன்றை உருவாக்கும் பணிக்கு மாறினோம். அதற்கு ஆர்க் என பெயரிட்டேன். கேம்பிரிட்ஜில் ஒரு புதிய வீட்டை வாங்கினேன்.

    அடுத்த இளவேனிலில் ஒரு மின்னல் வெட்டியது. லிஸ்ப் மாநாட்டில் பேசுவதற்கு அழைப்பு வந்தது. நாங்கள் வியாவெப்பில் எப்படி லிஸ்பை பயன்படுத்தினோம் என்று ஒரு உரை ஆற்றினேன். அந்த உரையின் எழுத்து வடிவத்தை என் தளத்தில் பகிர்ந்தேன் – paulgraham.com. அந்த தளத்தை வியாவெப்பிற்கு பல வருடங்களுக்கு முன்பே உருவாக்கியிருந்தேன். ஆனால் எதற்கும் பயன் படுத்தவில்லை. ஒரே நாளில் 30,000 பார்வையாளர்கள் பார்த்திருந்தார்கள். எப்படி இது நடந்தது ? யாரோ ஒருவர் என் தள சுட்டியை slashdot தளத்தில் பகிர்ந்திருந்தார்.

    ஆகா, இதோ வாசகர்கள் உள்ளார்கள் என்று தெரிந்தது. நான் ஏதாவது எழுதி அதை இணையத்தில் வெளியிட்டால், அதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இப்போழுது இது மிக எளிதாக தோன்றுகிறது. ஆனால் அச்சு ஊடகங்கள் காலத்தில், வாசகர்களிடம் சென்று சேர்வதற்கு, எடிட்டர்கள் என்னும் பூதங்கள் காக்கும் மிகக்குறுகிய வழிகளே இருந்தன. நீங்கள் எழுதிய எதுவும் வாசகர்களை சென்று சேர்வதற்கு ஒன்று நூலாகவோ, அல்லது செய்தித்தாளிளோ, பத்திரிக்கையிலோ வெளிவந்தால் தான் உண்டு. ஆனால் இப்போழுது  யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் இணையம் மூலமாக பதிப்பிக்கலாம்.

    1993 இல் இருந்தே இதற்கான வாய்ப்புகள் இருவாகிவிட்டாலும், நிறைய பேர் அதை அப்போது உணரவில்லை. இணையக் கட்டுமானத்தை உருவாக்கியதில் பங்களித்திருந்தாலும், அதில் நிறைய நேரம் செலவிட்டிருந்தாலும், ஒரு எழுத்தாளராக இருந்தும், எனக்கே இதை புரிந்து கொள்ள எட்டு வருடங்கள் ஆனது. அதன் முழு தாக்கத்தையும் புரிந்துகொள்ள மேலும் பல ஆண்டுகள் பிடித்தது. கட்டுரைகளின் புதிய காலம் துவங்கியது.

    இணையத்திற்கு முந்தைய காலத்தில் கட்டுரைகள் வெளியிடுவதற்கான வழிகள் மிக குறைவு. நியூயார்க்கில் சரியான கேளிக்கை விருந்துகளுக்கு சென்றதன் வழியே அதிகார பீடத்தில் வைக்கப்பட்டிருந்த சிந்தனையாளர்கள் தவிர ஒரு துறையின் நிபுணர்கள் அவர்கள் துறைகள் பற்றி மட்டுமே எழுதமுடியும். பதிப்பிக்க வழியில்லாததால் நிறைய கட்டுரைகள் எழுதப்படவில்லை. இப்பொழுது அதற்கு வழியிருப்பதால், நான் அவற்றை எழுத திட்டமிட்டேன்.

    அடுத்த பல ஆண்டுகளுக்கு நான் நிறைய கட்டுரைகளை வெவ்வேறு தலைப்பில் எழுதினேன். கொந்தர்களும் ஓவியர்களும் (Hackers & Painters) என என் கட்டுரையின் தலைப்பிலேயே ஓ’ரெய்லி அவற்றை ஒரு தொகுப்பாக வெளியிட்டது. ஒவ்வொரு வியாழக் கிழமையும் என் நண்பர்களின் கூடுகைக்காக இரவு உணவு சமைத்தேன். ஒரு கூட்டத்திற்கு எப்படி சமைக்க வேண்டும் என அதன் மூலம் தெரிந்து கொண்டேன். அலுவலகத்திற்காக கேம்பிரிட்ஜில் மேலும் ஒரு கட்டிடம் வாங்கினேன். முன்பு மிட்டாய் கடையாக (பலான பட ஸ்டூடியோவாகவும்) இருந்தது என்றார்கள்.  

    2003 அக்டோபர் இரவில் என் வீட்டில் ஒரு பெரிய விருந்து நடந்தது. வியாழக்கிழமை விருந்திற்கு வரும் என் நண்பர் மரியா டேனியல்ஸின் புத்திசாலித்தனமான யோசனை அது. மூன்று பேர் அவர்களின் எல்லா நண்பர்களையும் ஒரே விருந்திற்கு அழைக்க வேண்டும். விருந்தினர்களுக்கு விருந்திற்கு வரும் மூன்றில் இரண்டு பங்கு மக்களை தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு புதியவர்களை பிடித்திருக்கலாம். அப்படி வந்த விருந்தினர்களில் ஒரு பெண்ணை எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் மிகப்பிடிக்க போகிறது: ஜெஸிக்கா லிவிங்ஸ்டன். சில நாட்கள் கழித்து அவரை டேடிங்கிற்கு அழைத்தேன். 

    ஜெஸிக்கா பாஸ்டன் இன்வெஸ்ட்மெண்ட் வங்கியின் மார்கெட்டிங் துறை தலைவர். அந்த வங்கி ஸ்டார்ட்-அப் பற்றி தங்களுக்கு தெரியும் என நினைத்திருந்தது. ஆனால் என்னுடைய ஸ்டார்ட்-அப் உலக நண்பர்களை சந்தித்ததன் மூலம், உண்மையான நிலவரத்தை அறிந்தபோது, ஜெஸிக்கா ஆச்சர்யமடைந்தார். அந்த கதைகளின் வண்ணங்கள் அவரை ஈர்த்தன. ஸ்டார்டப் நிறுவனர்களின் பேட்டிகளை ஒரு புத்தகமாக தொகுத்தார். 

    அந்த வங்கிக்கு நிதிச்சிக்கல் வந்தபோது, தன் அணியில் இருந்த பாதிபேரை வேலையை விட்டு அனுப்பவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். அவரும் புதிய வேலையை தேடத்துவங்கினார். 2005இன் துவக்கத்தில் பாஸ்டனில் ஒரு முதலீட்டு நிறுவனத்தின் ஒரு விளம்பரத்துறை வேலைக்காக நேர்காணலுக்குச் சென்றார். அந்த நிறுவனம் தங்கள் முடிவை சொல்வதற்கு பல வாரங்கள் ஆனது. அந்த இடைப்பட்ட காலத்தில் வென்ச்சர் கேப்பிடல் எனும் முதலீட்டுத்துறையில் உள்ள தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களை சொல்லி கொண்டிருந்தேன். ஒரு பெரிய முதலீடாக செய்யாமல், நிறைய சிறு முதலீடுகளை செய்யவேண்டும்; எம்பிஏ பட்டதாரி நிறுவனர்களைவிட, தொழில்நுட்பத்தில் தேர்ச்சி உடைய இளைஞர்களின் நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும்; நிறுவனர்களையே தலைமை செயல் அலுவலர்களாக (CEO) நீடிக்கவிட வேண்டும்,..  

    எப்பொழுதும் உரை ஆற்றுவதற்கு தயாராக இருப்பது கட்டுரைகள் எழுத உதவும். ஒரு குழு முன்பு எழுந்து, அவர்களின் நேரத்தை வீணாக்காமல் பேச வேண்டிய தேவை, எப்பொழுதும் கற்பனையை பெருமளவில் தூண்டும்.

    ஹார்வேர்ட் கம்ப்யூட்டர் சொசைட்டி, இளநிலை மாணவர்களின் கணினி கிளப், என்னை ஒரு உரை ஆற்ற சொன்ன போது, ஒரு “ஸ்டார்டப்பை துவங்குவது எப்படி” என்று உரை ஆற்றலாம் என நினைத்தேன். நான் செய்த மோசமான தவறுகளை அவர்கள் செய்யாமல் இருப்பதற்காக.

    அந்த உரையை ஆற்றும் போது, உங்கள் ஸ்டார்டப்களை துவங்குவதற்கான முதலீடுகளை தேடுவதற்கான சரியான இடம், வெற்றிகரமான ஸ்டார்டப்களின் நிறுவனர்களே. அவர்கள் சிறந்த அறிவுரைகளையும் தருவார்கள். அவர்களெல்லாம் என்னையே பார்ப்பது போல இருந்தது. பணம் கேட்டு வரப்போகும் நிறைய தொழில்திட்ட மின்னஞ்சல்களால் பயந்து, “ஆனால் என்னிடம் வராதீர்கள்” என்று சொன்னபடி என் உரையை தொடர்ந்தேன். இதற்கு மேலும் துவக்க முதலீட்டில் (angel investing) ஈடுபடுவதை தள்ளிப்போட வேண்டாம் என்று பின்பு எனக்கு தோன்றியது. யாஹூ எங்களை வாங்கி ஏழு வருடங்கள் கடந்து விட்டது. அப்போதிருந்தே ஸ்டார்டப்களில் துவக்க மூதலீட்டாளராக செயல்பட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் ஒன்றில் கூட பணத்தை முதலீடு செய்யவில்லை.

    அதே நேரத்தில் ராபர்ட்டுடனும், ட்ரெவோருடனும் ஏதாவது துவங்கலாம் என்று திட்டங்கள் தீட்டி கொண்டிருந்தேன். அவர்களோடு வேலை செய்ய முடியாததை ஒரு இழப்பாக கருதினேன். ஏதோ ஒன்றில் அவர்களோடு சேர்ந்து வேலை செய்ய முடியும் என்று தோன்றியது. 

    மார்ச் 11 அன்று இரவுணவு முடித்து ஜெஸ்ஸிக்காவும் நானும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, கார்டன் மற்றும் வாக்கர் தெரு முனையில், அந்த மூன்று இழைகளும் ஒன்றாகின. நீண்ட நேரம் எடுத்துகொள்ளும் முதலீட்டாளர்களை தூக்கி தூர வீசுவோம். நாங்களே ஒரு முதலீட்டு நிறுவனத்தை துவங்கி, நாங்கள் அதுவரை பேசிக்கொண்டிருந்த யோசனைகளை செயல்படுத்துவோம். நான் அதற்குண்டான பணத்தை மூதலீடாக தருவேன். ஜெஸ்ஸிக்கா அவருடைய வேலையை துறந்து வந்து இந்த புதிய நிறுவனத்தில் வேலை செய்வார். ராபர்ட்டும், ட்ரெவோரும் பார்ட்னர்களாக சேர்ந்து கொள்வார்கள்.[13]

    மீண்டும் ஒருமுறை அறியாமை எங்களுக்கு சாதகமாக வேலை செய்தது. ஏஞ்சல் இன்வெஸ்டர்களாக எப்படி ஆவது என்று எங்களுக்கு தெரியாது. 2005 இல் பாஸ்டனில் சொல்லி கொடுப்பதற்கு எந்த ரான் கான்வேக்களும் (Ron Conway) இல்லை. அதனால் எங்களுக்கு எது சரியாக தோன்றுகிறதோ அதை செய்தோம். அவற்றில் சில மிக புதுமையானவை. Y Combinator (YC) என்ற முதலீட்டு நிறுவனத்தை துவங்கினோம்.

    YC இல் நிறைய விஷயங்கள் உண்டு. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் உருவாக்கவில்லை. நாங்கள் முதலில் “ஏஞ்சல் நிறுவனம்” துவங்கினோம். அந்த நாட்களில் இந்த இரு சொற்களும் ஒன்றாக ஒலிக்காது. வென்ச்சர் காப்பிடல் நிறுவனங்கள் இருந்தன. முதலீடு செய்வதற்கென்றே ஆட்கள் அவற்றில் வேலை செய்தார்கள், ஆனால் அவர்கள் பெரிய, மில்லியன் டாலர் முதலீடுகளை மட்டுமே செய்தார்கள். சிறிய முதலீட்டை செய்யும் தனி நபர் “ஏஞ்சல்”கள் இருந்தனர். பெரும்பாலும் அவர்களுக்கு வேறு முழுநேர வேலைகள்  இருக்கும். முதலீடு ஒரு பகுதிநேர வேலையாகவே இருக்கும். ஆனால் அவர்கள் இருவருமே நிறுவனர்களுக்கு துவக்கத்தில் அவ்வளவு உதவிகரமாக இல்லை. ஏனென்றால் வியாவெப்பின்போது சிலவற்றில் எங்களுக்கு பெரிய உதவிகள் கிடைக்கவில்லை. உதாரணமாக, ஜூலியன் எங்களை ஒரு நிறுவனமாக பதிவு செய்தது எங்களுக்கு ஒரு மாயம் போல இருந்தது. சிக்கலான மென்பொருளை எழுதிவிடலாம், ஆனால் ஒரு நிறுவனமாக பதிவுசெய்தல், சட்டதிட்டங்கள், பங்குகள், இதையெல்லாம் எப்படி செய்வது ? எங்கள் திட்டம் வெறும் முதலீடு செய்வது மட்டுமல்ல, ஆனால் ஜூலியன் எங்களுக்கு செய்தவற்றையெல்லாம் புதிய ஸ்டார்டப்களுக்கு நாங்கள் செய்வது என தீர்மானித்தோம்.

    YC ஒரு நிதி நிறுவனமாக துவங்கவில்லை. அதற்கு பெரிய நிதி தேவைப்படாததால் எங்களுடைய சொந்த பணத்தை கொண்டே துவக்கிவிட்டோம். 99% வாசகர்கள் இந்த வரியை கடந்து சென்றுவிடுவார்கள். ஆனால் தொழில்முறை முதலீட்டார்கள் “ஆகா. அப்படியென்றால் எல்லா வருமானமும் அவர்களுக்கே” என நினைக்கலாம். மீண்டும் சொல்கிறேன், அப்படி நாங்கள் முன்பே திட்டமிடவில்லை. எங்களுக்கு விசி நிறுவனங்கள் எப்படி துவங்கப்பட்டிருந்தன என்று தெரியவில்லை. மற்ற பணக்கார்களிடம் இருந்து முதலை திரட்ட வேண்டும் என்று எங்களுக்கு தோன்றவில்லை. அப்படி தோன்றியிருந்தால், எங்கே துவங்க வேண்டும் என்று தெரிந்திருக்காது.

    YC யுடைய தனிச்சிறப்பே அதன் பேட்ச் (batch) மாடல்தான்: வருடத்தில் இருமுறை நிறைய ஸ்டார்ட்அப்களில் ஒரே நேரத்தில் முதலீடு செய்வது. அதன்பின் மூன்று மாதங்கள் முழூமூச்சாக அவற்றிற்கு உதவி செய்வது. அதை நாங்கள் எதேச்சையாகத்தான் கண்டுபிடித்தோம் – எங்களுக்கு முதலீட்டை பற்றி தெரியாததால். நிறைய முதலீடுகள் செய்தால்தான் கற்றுக்கொள்ளலாம். நிறைய ஸ்டார்டப் நிறுவனங்களில் ஒரே நேரத்தில் முதலீடு செய்து கற்றுக்கொள்வது அதற்கு ஒரு வழியில்லையா? இளநிலை பொறியியல் மாணவர்கள் நிறைய தொழில்நுட்ப நிறுவனங்களில் கோடைகாலத்தில் பகுதிநேர வேலை (internship) செய்தார்கள் என்பது தெரியும். ஏன் கோடைகாலத்தில் ஒரு திட்டத்தை துவக்கி, மாணவர்களையே அவர்களுடைய ஸ்டார்டப் நிறுவனங்களை துவங்க செய்யக்கூடாது? கத்துக்குட்டி முதலீட்டாளர்கள் என்ற குற்ற உணர்ச்சி இருக்காது, ஏனென்றால் மாணவர்களும் ஒருவகையில் கத்துக்குட்டி நிறுவனர்கள்தான். இதில் நாங்கள் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க முடியவில்லை என்றாலும், எங்களுக்கு முதலீட்டில் அனுபவம் வளரும். மாணவர்களுக்கும் மைக்ரோசாஃபிட்டில் பகுதிநேர வேலையைவிட மேலும் சுவாரஸ்யமாக கோடையை செலவிடலாம்.

    கேம்பிரிட்ஜில் நான் வாங்கிய கட்டிடத்தை எங்கள் தலைமை அலுவலகமாக பயன்படுத்தினோம். நாங்கள் எல்லோரும் சேர்ந்து வாரத்தில் ஒருநாள் இரவு உணவு உண்போம் – செவ்வாய்கிழமைகளில். ஏற்கனவே நான் எல்லோருக்கும் வியாழனில் உணவு சமைக்கிறேன். இரவு உணவிற்குபின், ஸ்டார்ட்அப்களில் அனுபவம் உள்ளவர்களை அழைத்து வந்து உரையாற்ற வைப்போம்.

    இளநிலை மாணவர்கள் கோடைக்கால வேலைகளைப்பற்றி அப்போது முடிவெடுத்து கொண்டிருப்பார்கள் என்று தெரியும். அதனால், சில நாட்களிலேயே “கோடைகால நிறுவனர்கள் திட்டம்” SFP என்று ஒன்றை சும்மா உருவாக்கினோம். இளங்கலை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என என்னுடைய தளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். கட்டுரைகள் எழுதுவது “டீல் ஃப்ளோ”விற்கு உதவும் (முதலீட்டாளார்களின் சொற்களின்படி) என்று நான் கற்பனை செய்துபார்க்கவில்லை. ஆனால் அது மிக சிறந்த வழியாக இருந்தது.[15] கோடைகால நிறுவனர்கள் திட்டத்திற்கு 225 விண்ணப்பங்கள் வந்திருந்தன. எங்களுக்கு இன்னுமொரு ஆச்சரியம் – அதில் நிறைய விண்ணப்பங்கள் ஏற்கனவே பட்டம்பெற்ற அல்லது வரும் ஆண்டில் பட்டம்பெறப்போகும் மாணவர்களிடம் இருந்து வந்தது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட இந்த SFP தீவிரமான ஒன்றாக மாறிக்கொண்டிருந்தது. 

    அந்த 225ந்தில் இருந்து 20 குழுக்களை நேர்முகத்திற்கு அழைத்திருந்தோம். 8 குழுக்களை தேர்ந்தெடுத்தோம். அவர்கள் ஒரு திறமையான குழு. அந்த முதல் குழுவில் ரெட்டிட், ட்விட்ச் துவங்கிய ஜஸ்டின் கான் மற்றும் எம்மட் ஷியர், RSS Feedஐ எழுதிய ஆரோன் ஸ்வாட்ஸ் – (பின்னாளில் ஓப்பன் ஆக்ஸஸ்க்கான உயிர்தியாகம் செய்தவர்), சாம் ஆல்ட்மேன் (பின்னாளில் YCயின் இரண்டாவது தலைவராக பொறுப்பேற்று கொண்டவர் மற்றும் ஓப்பன்-ஏ.ஐ. / சாட்ஜிபிடி துவங்கியவர்). முதல் குழு திறமையானவர்களாக அமைந்தது அதிர்ஷ்டத்தால் என நான் நினைக்கவில்லை. மைக்ரோசாப்ட், கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களில் கிடைக்கூடிய கோடைகால பகுதிநேர வேலையை வேண்டாம் என்று சொல்லி, ‘கோடைகால நிறுவனர்கள் திட்டம்’ போன்ற என்னவென்றே தெரியாத ஒன்றிற்கு வருவதென்றால் அவர்கள் தைரியமிக்கவர்களாக இருக்கவேண்டும். 

    ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கிடைக்கும் முதலீடு என்பது இரண்டு விஷயங்களின் கலவை – ஜூலியன் எங்களுக்கு தந்தது (பத்தாயிரம் அமெரிக்க டாலருக்கு 10% பங்கு) மற்றும் எம்.ஐ.டி மாணவர்களுக்கு கிடைக்கும் கோடைகால பகுதிநேர வேலையின் சம்பளம். (ஆறாயிரம் டாலர்கள்). நாங்கள் ஒவ்வொரு நிறுவனருக்கும் ஆறாயிரம் டாலர்கள் தந்தோம் – ஒரு நிறுவனத்தில் இரு நிறுவனர்கள் இருந்தார்கள். ஆகவே ஒவ்வொரு நிறுவனத்திலும் 6% பங்குகளை வாங்கிக்கொண்டு பணிரெண்டாயிரம் டாலர்கள் முதலீடு செய்தோம். அது நியாயமாக இருக்கவேண்டும். ஏனென்றால், எங்களுக்கு கிடைத்த டீலை விட அது இரண்டு மடங்கு சிறந்தது. மேலும், அந்த அதி வெப்பமாக இருந்த அந்த முதல் கோடையில், ஜெஸ்ஸிக்கா நிறுவனர்களுக்கு இலவசமாக ஏசி வாங்கித்தந்தார்.[16]

    அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்யும் வழியை மிக விரைவிலேயே கண்டுகொண்டோம் என்று  தோன்றியது. நிறைய ஸ்டார்டப் நிறுவனங்களில் ஒரே சமயத்தில் முதலீடு செய்வது எங்களுக்கு வசதியாக இருந்தது. ஏனென்றால் நிறைய ஸ்டார்டப்களுக்கு தேவையானவற்றை ஒரே நேரத்தில் செய்யமுடியும். ஒரே குழுவாக இருப்பது ஸ்டார்டப்களுக்கும் பயன் தந்தது. நிறுவனர்களுக்கு இருந்த பெரிய சிக்கல் தனிமை. குழுவாக இருப்பதால் அது தீர்ந்தது. நிறுவனர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அதே குழுவில் உள்ள மற்ற நிறுவனர்களால் புரிந்துகொள்ளவும் முடிந்தது. தீர்வையும் தந்தார்கள்.

    YC வளர்ந்தபோது, மேலும் நிறைய பலன்களை கண்டுகொண்டோம். YC வழியாக ஸ்டார்டப் துவங்கிய நிறுவனர்கள் ஒரு நெருங்கிய குழுவாக ஆனார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதார்கள். குறிப்பாக புதிய நிறுவனர்களுக்கும் உதவிகள் செய்தார்கள். சில வருடங்கள் முன்பு அதே நிலையில் இருந்ததால், இன்னொன்றையும் கவனித்தோம்: ஒரு ஸ்டார்ட்-அப் இன்னொரு ஸ்டார்ட்-அப்பின் நுகர்வோர் ஆனது. “YC GDP” என்று இதை நாங்கள் கிண்டலாக சொன்னோம். YC வளர வளர அந்த கிண்டல் குறைந்து, இப்போது நிறைய ஸ்டார்டப்-அப்கள் தங்களின் குழுவில் உள்ள மற்ற ஸ்டார்டப்-அப்களில் தான் தங்களுடைய முதல் நுகர்வோர்களை கண்டு கொள்கிறார்கள்.   

    2006 கோடையில், ராபர்ட்டும் நானும் ஆர்க்கின் புதிய வடிவத்தில் வேலை செய்ய ஆரம்பித்தோம். புதிய ஆர்க் ஓரளவு வேகமாக இருந்தது. இந்த புதிய ஆர்க்கை சரிபார்ப்பதற்காக, அதில் நான் “ஹேக்கர் நீயுஸை” (https://news.ycombinator.com/) எழுதினேன். முதலில் அதை ஸ்டார்டப் நிறுவனர்களுக்காக, எல்லா ஸ்டார்ட்-அப் செய்திகளையும் தொகுக்கும் தளமாக “ஸ்டார்ட்-அப் நியூஸ்”  என திட்டமிட்டேன். ஆனால், சில மாதங்களில் ஸ்டார்ட்-அப்களை பற்றி மட்டுமே படித்ததால் சலிப்படைந்தேன். மேலும் இந்த தளத்தின் வாசகர்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் இல்லை. எதிர்காலத்தில் ஸ்டார்ட்-அப் துவங்குபவர்கள்தான். அதனால், தளத்தின் பெயரை “ஹேக்கர் நியூஸ்” என்று மாற்றி, ஒருவரின் அறிவார்வத்தை தூண்டும் அனைத்தையும் தொகுக்க ஆரம்பித்தோம். 

     “ஹேக்கர் நியூஸ்” கண்டிப்பாக YCக்கு நன்மையை தந்தது. ஆனால் என் அழுத்தத்திற்கு பெரிய காரணமாகியது. நிறுவனர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உதவுவது மட்டுமே வேலை என்றால், என் வாழ்க்கை எளிதாக இருந்திருக்கும். “ஹேக்கர் நியூஸ்” ஆரம்பித்தது ஒரு தவறு என்றாகியிருக்கும். கண்டிப்பாக ஒருவருக்கு வரும் பெரிய அழுத்தம், குறைந்தபட்சம் அவர் செய்யும் செயலின் மையத்தை சார்ந்ததாக இருக்க வேண்டும். என்னுடைய வலி, நீண்ட மராத்தான் ஓட்டத்தில் தொலைதூரம் ஓடியதால் ஏற்படும் வலிபோல இல்லாமல் சரியான ஷு அணியாததால் வந்த கால் கொப்பளத்தால் ஏற்பட்ட வலியைப்போல இருந்தது. YCயில் ஏதாவது அவசர பிரச்சனை என்றால், 60% அது  “ஹேக்கர் நியூஸ்”ஸினால் வந்ததாக இருக்கும் [17].

    “ஹேக்கர் நியூஸ்” போலவே YCயின் அனைத்து மென்பொருளையும் நான் ஆர்க்கில் தான் எழுதினேன். ஒரளவு ஆர்க்கில் நான் நேரம் செலவிட்டாலும், சீராக நான் ஆர்க்கை மாற்றுவதை நிறுத்தினேன். நேரமில்லை என்பது ஒரு காரணம். மேலும் எங்கள் கட்டுமானங்கள் அனைத்தும், ஆர்க்கில் இருப்பதால், தேவையில்லாமல் அதை நோண்ட வேண்டாம் என்பதும் மற்றொரு காரணம். என்னுடைய மூன்று பிராஜக்ட்டுகள் இரண்டாக குறைந்தது: கட்டுரை எழுதுவது, YC வேலை.

    YC வேலை, என்னுடைய மற்ற வேலைகளை விட வேறுபட்டது. எதில் வேலை செய்யலாம் என்று நான் முடிவெடுப்பதற்கு பதில், சிக்கல்கள் தேடி வந்தன. ஒவ்வொரு ஆறு மாதங்களும், புதிய ஸ்டார்டப் குழுக்கள் வந்தன. அவர்களுடைய சிக்கல்கள் அனைத்தும் எங்கள் சிக்கல்களாயின. சிக்கல்கள் வெவ்வேறாக இருந்தன. மற்றும் நிறுவனர்கள் மிகவும் திறமையானவர்களாக இருந்தனர். அதனால் அந்த வேலை என்னை முழுவதும் ஈடுபடுத்தியிருந்தது. மிகக்குறைந்த நேரத்தில் ஸ்டார்டப்-அப்களை பற்றி கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், இந்த வழியைவிட நீங்கள் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்திருக்க முடியாது. 

    இந்த வேலையின் சில பகுதிகள் எனக்கு பிடிக்கவில்லை. நிறுவனர்களிடையே வரும் சண்டைகள், மக்கள் எப்போது பொய் சொல்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது, ஸ்டார்ட்-அப்களுடன் பிரச்சனை செய்தவர்களுடன் சண்டை, இன்னும் பல. ஆனால் எனக்கு பிடிக்காதவற்றிலும் கடுமையாக உழைத்தேன். கெவின் ஹேலின் சொல் என்னை பயம்கொள்ளச்செய்தது: “தலைவனைவிட வேறுயாரும் கடுமையாக உழைப்பதில்லை”. அவர் ஒரு விளக்கமாகவும், ஒரு அறிவுரையாகவும் சொன்னது அது. அந்த அறிவுரையே என்னுடைய பயத்திற்கு காரணம். YC நன்றாக வரவேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய கடுமையான உழைப்பு என்பது மற்றவர்களின் உழைப்பிற்கு ஒரு உச்ச வரம்பாக இருக்குமென்றால், நான் கடுமையான உழைக்கத்தான் வேண்டும்.  

    2010இல் ஒரு நாள், கலிஃபோர்னியாவிற்கு நேர்காணல்கள் நடத்துவதற்கு வந்தபோது, ராபர்ட் மோரிஸ், நான் வியந்துபோகும் ஒன்றை செய்தான்: நான் கேட்காமலேயே எனக்கு அறிவுரை வழங்கினான். முன்பு ஒருமுறை மட்டுமே அவன் அப்படி செய்திருக்கிறான். வியாவெப்பில் ஒரு நாள், சிறுநீரக கற்கள் ஏற்படுத்திய வலியில் நான் குனிந்து நின்றபோது, என்னை அவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன் என்றான். ராபர்ட் சதாரணமாகவெல்லாம் அறிவுரை சொல்லக்கூடியவன் அல்ல. அவனுடைய சொற்கள் எனக்கு தெளிவாக நினைவில் இருந்தது. “நீ செய்யக்கூடிய கடைசி சிறந்த செயல் YCயாக இல்லாமல் நீ பார்த்துக் கொள்ள வேண்டும்.” 

    அவன் சொன்னது அப்போழுது எனக்கு புரியவில்லை. மெல்ல புரிந்தது. நான் விலகிக்கொள்ள வேண்டும் என சொல்கிறான். அது ஒரு வித்தியாசமான அறிவுரையாக தோன்றியது. ஏனென்றால் YC சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. ராபர்ட்டின் யோசனையைவிட அபூர்வமானது ஒன்று இருந்தால், அது அவனுடைய யோசனை தவறென்றாவது. ஆம், YC என்னுடைய எல்லா நேரத்தையும் எடுத்துக்கொண்டதால், நான் செய்யக்கூடிய கடைசி செயலாக YC தான் இருக்கும். YC ஏற்கனவே ஆர்க்கை விழுங்கிவிட்டது. கட்டுரைகளையும் விழுங்க ஆரம்பித்தது. ஒன்று YC என் வாழ்நாளின் வேலையாக இருக்க வேண்டும், அல்லது அதில் இருந்து நான் விலக வேண்டும். YC என் வாழ்நாள் வேலையில்லை, ஆகவே விலக முடிவு செய்தேன்.

    2012இன் கோடையில் என் அம்மாவிற்கு பக்கவாதம் வந்தது. புற்றுநோயினால் ஒரு இரத்தக்கட்டி ஏற்பட்டிருந்தது. வாதம் அவளுடயை சமநிலையை குலைத்து, மருத்துவமனையிலே இருக்க வைத்திருந்தது. ஆனால் அம்மா அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு போகவேண்டும் என்றாள். நானும் என் சகோதரியும் அவளுடைய விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினோம். ஆரிகானிற்கு அடிக்கடி விமானத்தில் சென்று அம்மாவை பார்த்துக்கொண்டேன். விமான பயணங்களில் நிறைய யோசித்தேன். அப்படி ஒரு பயணத்தில், YCயை வேறு யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என்று தெளிவாகியது.

    ஜெஸ்ஸிக்காவிடம் அவள் தலைமை பொறுப்பை ஏற்கிறாளா என்று கேட்டேன். அவள் மறுத்துவிட்டாள். சாம் ஆல்ட்மேனிடம் கேட்டுப்பார்ப்போம் என்று தோன்றியது. ராபர்ட் மற்றும் ட்ரெவோரிடம் ஆலோசித்து, எங்கள் அனைவருக்கும் பதிலாக ஒரு புதிய அணியை கொண்டு வர விரும்பினோம். அதுவரை YCயின் நிறுவனர்களாக நாங்கள் நால்வருமே அதை நடத்தினோம். YC நீண்ட நாள் நிலைக்க வேண்டும் என விரும்பினோம். அப்படியென்றால் நிறுவனர்களே நடத்தமுடியாது. சாம் ஏற்றுக்கொண்டால், சாம் YCயை மறுகட்டமைத்து கொள்ளலாம். நானும் ராபர்ட்டும் ஓய்வு பெற்றுக்கொள்வோம். ஜெஸ்ஸிக்காவும், ட்ரெவோரும் சாதாரண பங்குதாரராக மாறிக்கொள்வார்கள்.

    YC யின் தலைமையை ஏற்றுக்கொள்ள விருப்பமா என்று சாமிடம் கேட்ட போது, முதலில் மறுத்தார். அணு உலைகளை உருவாக்கும் ஸ்டார்டப்-அப்பை தொடங்க திட்டமிட்டிருந்தார். ஆனால், நான் விடவில்லை. அக்டோபர் 2013இல் ஏற்றுக்கொண்டார். 2014 குளிர்கால குழுவில் இருந்து சாம் YCயை நடத்துவது என்று முடிவு செய்தோம். 2013இன் மீதி நாட்களில், YCயை நடத்தும் பொறுப்பை சிறிது சிறிதாக சாம் ஏற்றுக்கொண்டார். 

    என் அம்மாவிற்கு கேன்சர் திரும்பிவிட்டது.    ஜனவரி 15, 2014இல் அம்மா இறந்துவிட்டாள். எதிர்பார்த்த மரணம் என்றாலும், அது நிகழ்ந்தபோது ஏற்கக் கடினமாக இருந்தது. மார்ச் மாதம் வரை YCயில் வேலை செய்தேன். டெமோ நாளுக்கு ஸ்டார்டப்கள் தயாராவதற்கு உதவினேன். அதன்பின் முற்றிலும் விலகிவிட்டேன். இப்பொழுதும் முன்னாள் YC குழுக்கள் மற்றும் எனக்கு பிடித்தவற்றில் புதிய ஸ்டார்ட்அப் துவங்குபவர்களிடம் பேசுகிறேன். அது வாரத்தில் சில மணிநேரங்கள் மட்டுமே எடுக்கிறது. 

    அடுத்து என்ன செய்யவேண்டும்? ராபர்ட் அறிவுரையில் அந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை. முற்றிலும் வேறெதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதனால் ஓவியம் வரைய முடிவு செய்தேன். என் முழு கவனத்தையும் செலுத்தினால், எந்தளவு என்னால் சிறப்பாக வரைய முடியும்? வரைவதற்கு தடுமாறினேன். மீண்டும் பிடிகிடைப்பதற்கு கொஞ்ச காலம் ஆகியது. ஆனால் அது என்னை முற்றிலும் ஆக்ரமித்திருந்தது.

    2014 மீதி காலத்தை நான் ஓவியம் வரைவதிலே செலவிட்டேன். நீண்ட நாள் கழித்து, எந்த இடைஞ்சலும் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. நான் முன்பிருந்ததை விட மேலும் சிறந்த ஓவியனாக வேண்டும். சுமாரான ஓவியன் என்றல்ல மேலும் சிறந்த ஓவியன். ஆனால் நவம்பர் மாதத்தில், ஓவியம் வரைந்து கொண்டிருந்தபோதே, என் ஆர்வமெல்லாம் வற்றிவிட்டது. அதுவரை, நான் வரையும் ஓவியம் எப்படி வருகிறது என்று பார்ப்பதில் பெரிய ஆர்வம் இருந்தது. ஆனால் திடீரென்று இதுவும் ஒரு வேலையை போல தோன்ற ஆரம்பித்தது. ஓவியம் வரைவதை நிறுத்தினேன். தூரிகைகளை சுத்தம் செய்து வைத்தபின், இதுவரை இன்னும் வரையவில்லை.  

    சொல்வதற்கு கோழைத்தனமாக இருக்கிறது. ஆனால் கவனம் என்பது ஒரு ஜீரோ சம் (zero sum) விளையாட்டு. நீங்கள் செய்யும் செயலை தேர்ந்தெடுக்க முடிந்தால், அது உங்களின் மிகச்சிறந்த (அல்லது ஒரு நல்ல) செயலாக இல்லாமல் இருந்தால், அது மற்ற செயல்களில் இடையூறு விளைவிக்கும். ஐம்பது வயதில் செய்யும் காரியங்களை சொதப்பினால் அதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும். 

    மீண்டும் கட்டுரைகள் எழுதத்துவங்கினேன். அடுத்த சில மாதங்களில் மேலும் சில கட்டுரைகள் எழுதினேன். 2016இன் கோடையில் நாங்கள் இங்கிலாந்திற்கு இடம்பெயர்ந்தோம். எங்கள் குழந்தைகள் வேறு ஒரு நாட்டில் வாழும் அனுபவத்தை பெற விரும்பினோம். நான் பிறப்பால் பிரிட்டீஷ் குடிமகன். அதனால் இங்கிலாந்து முதல் தேர்வாக இருந்தது. ஒரு வருடம் வாழலாம் என்றுதான் முதலில் திட்டமிட்டோம். அந்த ஒரு வருடம் மிகப்பிடித்திருந்ததால், அங்கேயே தங்கிவிட்டோம். 

    இப்பொழுது மீண்டும் கட்டுரைகள் எழுதமுடியுமென்பதால், கட்டுரைகளின் தலைப்பை தேர்ந்தெடுத்து சேர்த்துவைத்துள்ளேன். 2020 இல் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த்போதே, அடுத்து செய்யும் செயல்கள் என்ன என்று யோசிக்க துவங்கினேன். என்ன செய்யவேண்டும் என்று எப்படி தேர்ந்தெடுப்பது? சரி, என்ன செய்யவேண்டும் என்று முன்பு எப்படி தேர்ந்தெடுத்தேன்? அந்தக் கேள்விக்கு விடையாக ஒரு கட்டுரை எழுதினேன். அந்த பதில் எவ்வளவு நீளமாகவும், குழப்பமாகவும் இருந்தது என்பதை கண்டுகொண்டது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. இந்த வாழ்க்கை வாழ்ந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தால், மற்றவர்களுக்கு ஆர்வத்தை தூண்டலாம், இதே போன்ற ஒரு குழப்ப வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கலாம். அதனால், மற்றவர்கள் படிப்பதற்காக அதன் நீளமான வடிவத்தை எழுதினேன். அந்த கட்டுரையின் கடைசி வரி இது.  

    குறிப்புகள்:

    எங்கள் Y Combinator அனுபவம் பொதுவான ஒன்றை சொல்லித்தருகிறது: முறைமைகள் நீண்ட நாட்கள் உங்களை கட்டுப்படுத்தும். அந்த முறைமைகளை உருவாக்கிய அடைப்படை காரணிகள் மாறிய பின்பும். பத்திரிக்கைகளில் கட்டுரைகளை பதிப்பித்தலுக்கு இருந்த தடைகள்  போலவே முதலீட்டு நிறுவனங்களுக்கும் உண்மையான சில கட்டுப்பாடுகள் இருந்தன. ஒரு காலத்தில் ஸ்டார்டப்களை துவங்குவது செல்வேறியதாகவும், அரிதாகவும் இருந்தது. பின்பு எளிதாகவும், செலவு குறைந்ததாகவும் மாறியபின்பும் முதலீட்டு நிறுவனங்களின் முறைமைகள் பழைய உலகையே பிரதிபலித்தன.

    அதிவேகமாக மாற்றம் அடையும் துறைகளில் (அவற்றில் முறைமைகளும் விரைவிலே காலாவதியாகும்) சுதந்திர சிந்தனை உடையவர்களுக்கு (முறைமைகளை அதிகம் பேணாதவர்கள்) ஒரு அட்வாண்டேஜ் உண்டு. 

    ஒரு சுவாரஸ்யமான விஷயம்: எந்த துறைகள் அதிவேகமாக மாற்றம் அடையும் என்று கணிக்க முடியாது. மென்பொருளும், முதலீட்டு துறைகளும் வேகமாக மாறும் என்பதை கணிக்க முடிந்தாலும், கட்டுரை பதிப்பித்தல் மொத்தமாக மாறிவிடும் என்று யார் எதிர்பார்த்தார்கள்?  

    #

    Y Combinator நாங்கள் முதலில் வைத்த நினைத்த பெயர் இல்லை. கேம்பிரிட்ஜ் சீட் என்றே பெயரிட நினைத்தோம். ஆனால் ஒரு வட்டாரத்தை குறிக்கும் பெயரை வைக்க விரும்பவில்லை. சிலிக்கான் வேலியில் எங்களை யாராவது காப்பியடித்துவிடலாம் என்பதால், லாம்டா கால்குலஸில் இருந்து Y Combinator என பெயரிட்டுக்கொண்டோம். ஆரஞ்சு நிறத்தை நான் தேர்வு செய்தேன். அது வெப்பமான நிறம். மற்ற முதலீட்டு நிறுவனங்கள் எதுவும் பயன்படுத்தாத நிறம். 2005இல் முதலீட்டு நிறுவனங்கள் மெரூன், அடர் நீலம், அடர் பச்சை நிறங்களை தேர்வு செய்தார்கள். அவர்கள் நிறுவனர்களை விட முதலீட்டாளர்களை ஈர்க்க அந்த நிறங்களை தேர்வு செய்திருந்தார்கள்.  YCயின் லோகோ எங்கள் உள்வட்ட ஜோக்: வியாவெப் லோகோ ஒரு சிவப்பு வட்டத்தில் ஒரு வெள்ளை V. அது போலவே, YCயின் லோகோவை ஒரு ஆரஞ்சசு கட்டத்தில் வெள்ளை Y என தேர்ந்தெடுத்தேன்.

    #

    2009இல் துவங்கி சில வருடங்களுக்கு YC மற்ற முதலீட்டாளர்களிடம் இருந்து முதல் திரட்டியது. YC மிகப்பெரிதாக ஆன போது எங்கள் சொந்த பணத்தை வைத்தே நடத்த முடியவில்லை. ஆனால் YC இல் ஒரு ஸ்டார்டப்பாக இருந்த ஹிரோகூ (Heroku) நிறுவனத்தை சேல்ஸ்ஃபோர்ஸ் வாங்கிய போது எங்களுக்கு நிறைய பணம் வந்தது. மீண்டும் எங்கள் பணத்தை வைத்தே YCயை நடத்தத்துவங்கினோம். 

    #

    “டீல் ஃப்ளோ” என்ற பதத்தை நான் என்றுமே விரும்பியதில்லை. ஏனென்றால் புதிய ஸ்டார்டப்களின் எண்ணிக்கை எந்த ஒரு காலத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்கும் என்பதை குறிக்கிறது. அந்த கருத்து தவறானது. YCயை உருவாக்கிய காரணமே அதை தவறாக்க வேண்டும் என்பதுதான். தொடங்கியிருக்க வாய்ப்பில்லாத ஸ்டார்டப்களை துவங்க உதவ வேண்டும் என்பதே அது. 

    #

    இணையத்தில் ஒரு குழுமம் (ஹேக்கர் நியூஸ்) நடத்தியபடியே கட்டுரைகள் எழுதினால் ஏற்படும் சிக்கலை நான் எதிர்கொண்டேன். நீங்கள் ஒரு குழுமத்தை நடத்தினால், எல்லா உரையாடல்களையும் கவனிக்காவிட்டால் கூட, உங்களை குறிப்பிடும் உரையாடல்களையாவது கவனிக்க வேண்டும். நீங்கள் கட்டுரை எழுதினால், அதை கண்டபடி புரிந்துகொண்டு உங்கள் குழுமத்தில் மக்கள் பதிவிடுவார்கள். தனித்தனியாக இந்த சிக்கல்களை சமாளித்தாலும், அவை இரண்டும் ஒன்றாக சேரும்போது மிக கொடுமையாக இருக்கும். ‘கண்டபடி’ புரிந்துகொண்டு எழுதப்படும் எதிர்வினைகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால் உங்கள் குழுமத்திலே அதிக வாக்குகள் பெற்று அவை முதல் பதிவாக வரும்போது, நீங்கள் சும்மா இருந்தால், அதை ஏற்கிறீர்கள் என்றே பொருள். ஆனால் பதில் சொன்னீர்களென்றால், அது கண்டபடி புரிந்துகொள்ளும் கூட்டத்தை மேலும் ஊக்கப்படுத்தி, உங்களோடு கணக்கு தீர்க்க நினைக்கும் கூட்டமெல்லாம் “இதுதாண்டா சான்ஸ்” என்று புகுந்து வெளுக்கும்.

    முற்றும்.

  • பால் கிரஹாம் – வாழ்க்கை வரலாறு – 2

    பால் கிரஹாம் – வாழ்க்கை வரலாறு – 2

     

    http://www.paulgraham.com/worked.html – பெப்ரவரி 2021இல் பால் கிரஹாம் எழுதிய நீண்ட கட்டுரையின் ஒரு சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

    முதல் பகுதி

    [2]

    அதேசமயம் நான் வேர்ல்ட் வைட் வெப் (WWW – உலகாளவிய வலை அல்லது “வலை”) என்பதை பற்றி நிறைய கேள்விப்பட்டேன். ஹார்வெர்டில் முதுநிலை படித்து கொண்டிருந்த ராபர்ட் மோரிஸை சந்திக்க சென்றபோது, அவன் எனக்கு “வலை”யை அறிமுகப்படுத்தினான். இணையம் பெரியதாக ஆகும் என்று தோன்றியது. குறுங்கணினிகளின் (microcomputer) புகழிற்கு கிராபிக்கல் இன்டெர்ஃபேஸ்தான் (GUI) காரணம் என்பதை நான் பார்த்து வளர்ந்திருந்தேன். வலை (web) அதுபோல இணையத்தைப் (internet) பரவலாக்கும் என்று தோன்றியது. (ஒரு பெரிய அறையை அடைத்துக்கொண்டிருந்த மெயின்ஃபிரேம் பெருங்கணினிக்கு நீங்கள் கட்டளைகளை (input) ‘துளை அட்டைகள்’ (punched cards) வழியே தரவேண்டும். பின்பு மேஜை மீது வைக்கக்கூடிய அளவுள்ள மைக்ரோகம்ப்யூட்டர்கள் வந்தபோது அதற்கு நீங்கள் கட்டளைகளை உங்கள் விரல் நுனி அசைவில் விசைப்பலகை (keyboard) வழியே அளிக்கமுடிந்தது. இணையம் 1980களில் வந்துவிட்டது. ஒவ்வொரு கணினிக்கும் எண்களால் ஆன முகவரி இருக்கும். ஆனால் ஒரு கணினியையும் உலகின் வேறொரு மூலையில் இருந்த இன்னொரு கணினியையும் இணைப்பது எளிதானதாக இல்லை. (அது பற்றி வேறொரு கட்டுரையில் பார்ப்போம்).  

    நான் பணக்காரனாக வேண்டுமென்றால் இதோ ரயில் நிலையத்திலிருந்து அடுத்த வண்டி புறப்படுகிறது. வலைதளங்கள் பரவலாகும் என்ற என் கணிப்பு சரி. ஆனால் என்னுடைய வலைதளத்திற்கான ஐடியா தவறு. கலைக்கூடங்களுக்கான இணைய விற்பனை வலைதளம் துவங்கினேன். ஆனால் அன்று கலைக்கூடங்கள் இணையத்தில் வர விரும்பவில்லை. இன்றும் புகழ்பெற்ற கலைக்கூடங்களுக்கு இணைய விற்பனையில் துளியும் விருப்பமில்லை. கலைக்கூடங்களுக்கு வலைதளங்களை உருவாக்கும் மென்பொருளை எழுதினேன். வலைதள சர்வரை நிறுவும் வேலையை ராபர்ட் செய்தான். அதன்பின் நாங்கள் கலைக்கூடங்களை எங்கள் வலைதளத்தை உபயோகப்படுத்த அணுகினோம். அதை கடினமான விற்பனை என்று சொல்வதேகூட குறைத்துச்சொல்வதுதான். இலவசமாக உபயோகப்படுத்துவதற்கு கூட ஆள் இல்லை. மிகச்சில கலைக்கூடங்கள் உபயோகப்படுத்தின. அவையும் எங்களுக்கு பணம் தரவில்லை. 

    அதன்பின் வேறு சில வணிக இணைய தளங்கள் தோன்றின. அப்பொழுது ஒன்றை கவனித்தேன். ஒரு சில பட்டன்களைத்தவிர அவை எங்கள் கலைக்கூட இணையதளம் போலவே இருந்தன. “இணைய கடைகள்” (online store) என்பதை உருவாக்கி இருக்கிறோம் என்று தோன்றியது. 

    1995 கோடையில் “ANSI common Lisp” புத்தகத்தை பதிப்பகத்தாரிடம் தந்துவிட்டு, இணையத்தில் விற்பனை செய்யும் கடைகளுக்கான மென்பொருளை எழுத துவங்கினேன். ஆரம்பத்தில் இது டெஸ்க்டாப் மென்பொருளாக இருக்கவேண்டும் என நினைத்தோம். மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள்தான். அந்த எண்ணமே திகிலாக இருந்தது. ஏனென்றால் எங்கள் இருவருக்கும் விண்டோஸில் எப்படி மென்பொருள் எழுதுவது என்று தெரியாது. விண்டோஸை கற்று கொள்ளவும் விருப்பமில்லை. நாங்கள் இலவச மென்பொருளான யுனிக்ஸ் உலகில் வாழ்ந்தோம். யுனிக்ஸில் ஒரு மாதிரியை (prototype) உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். ராபர்ட் ஷாப்பிங் கார்ட்டை எழுதினான். நான் கடைகளுக்கான புதிய வலைதளங்கள் உருவாக்கும் நிரல்களை எழுதினேன் (லிஸ்ப் மொழியில் தான்.)   

    கேம்பிரிட்ஜிலிருந்த ராபர்டின் அபார்ட்மெண்டிலிருந்து வேலை செய்தோம். அவனுடைய அறை நண்பன் நீண்ட நேரம் வெளியேதான் இருப்பான். சில நேரங்களில் அங்கு தூங்கி ஓய்வெடுக்கவும் எனக்கு வசதியாக இருந்தது. கட்டிலோ, போர்வையோ இல்லை. வெறும் மெத்தை தரையில் விரிக்கப்பட்டிருந்தது. ஒரு காலையில், அந்த மெத்தையில் படுத்திருந்த போது, ஒரு யோசனை தோன்றியது. சட்டென்று L வடிவத்தில் எழுந்து அமர்ந்தேன். எங்கள் மென்பொருளை பயணர்களின் கணினியில் இருந்து ஓட்டுவதற்கு பதில் சர்வரிலிருந்தே ஓட்டினால் என்ன? பயனர்களின் தனிப்பட்ட கணினியில் ஓடும் எந்த மென்பொருளும் எழுதத்தேவையில்லை. பிரௌசர் மட்டுமே போதும். பயணர்கள் ஒரு வலைதளத்திற்கு சென்று சில சுட்டிகளை க்ளிக் செய்து கொள்ளலாம். 

    இப்படிப்பட்ட வலைதள செயலிகள்(web app) – தற்போது மிக பரவலாக உள்ளது. (உதாரணம்: கூகிள் டாக்ஸ் Vs மைக்ரோசாப்ட் வேர்ட். கூகிள் டாக்ஸிற்கு உங்கள் பிரௌசரே போதும். மைக்ரோசாப்ட் வேர்டிற்கு நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபிஸ் செயலியை உங்கள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும்.) ஆனால் அன்று அது சாத்தியமா என்று கூட தெரியவில்லை. அதன் சாத்தியத்தை தெரிந்துகொள்ள செய்து பார்ப்பது என்று முடிவு செய்தோம். சில நாட்களில், ஆகஸ்ட் 12 இல் ஒரு மாதிரியை உருவாக்கினோம். அதை பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லை. ஆனால் இப்போது மொத்த கடையையும் நீங்கள் வலைதளத்தின் வழியே பயன்படுத்தலாம், பயனர்களின் கணினியில் வேறெந்த மென்பொருளும் தேவையில்லை.   

    நாங்கள் பெரிதாக ஏதோ ஒன்றைத் தொட்டிருக்கிறோம் என்று தோன்றியது. அடுத்த தலைமுறை மென்பொருட்கள் அனைத்தும் இந்த வடிவில் எழுதப்படக்கூடிய சாத்தியம் எனக்கு தெரிந்தது. 

    வியாவெப் (Viaweb – வலையின் வழியே) என பெயரிட்டு ஒரு நிறுவனத்தை துவங்கினோம். ஐடில் வெப்பரின் கணவர் ஜூலியன் பத்தாயிரம் டாலரை துவக்க முதலீடாக தந்தார். எங்களுக்கான சட்ட மற்றும் வணிக ஆலோசனைகள் வழங்குவதற்காகவும், முதலீட்டிற்காகவும் நாங்கள் அவருக்கு எங்கள் நிறுவனத்தில் 10%  பங்கு தந்தோம். பத்து வருடங்கள் கழித்து நாங்கள் நடத்திய முதலீட்டு நிறுவனமான Y Combinator க்கு இது முன்மாதிரியாக இருந்தது. தொழில் துவங்குபவர்களுக்கு இதுபோன்று ஒன்று தேவைப்படும் என எங்களுக்கு தெரியும். ஏனென்றால் எங்களுக்கு அப்படி ஒன்று தேவைப்பட்டது.   

    அந்த கட்டத்தில் என்னுடைய நிகர சொத்து பூஜ்யத்திற்கும் கீழே இருந்தது. என் வங்கியில் இருந்த பணத்தைவிட அரசிற்கு நான் கட்டவேண்டிய வருமான வரி அதிகமாக இருந்தது. இண்டெர்லீஃபில் ஒப்பந்த பணிக்கு கிடைத்த ஊதியத்திற்கான வருமான வரியை சேமித்து வைத்திருக்க வேண்டும். நான் செய்யவில்லை. ராபர்ட்டிற்கு முதுகலை கல்வி ஊக்கத்தொகை வந்துகொண்டிருந்தது. என்னுடைய செலவுகளுக்கு ஜூலியன் தந்த முதலீடு தேவைப்பட்டது. 

    செப்டம்பரில் நிறுவனம் துவங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் எங்கள் மென்பொருள் வடிமைப்பு சிக்கலானதாக இருந்தது. ஒரு வழியாக WYSIWYG தள கட்டுமானம் ஒன்றை உருவாக்கினோம். பார்ப்பதற்கு அது பயனர்-செயலி (desktop application) போலவே இருக்கும், ஆனால் பிரௌசரில் (web application) ஓடும். 

    நான் படித்த ஓவியக்கலை இங்கு பயன்பட்டது. ஏனென்றால் பார்ப்பதற்கு உங்கள் வலைதளம் சிறுபிள்ளைகள் செய்ததுபோல இருக்க முடியாது இல்லையா ? நீங்கள் சரியான நிறங்கள், எழுத்து வடிவங்கள், தளத்தின் அமைப்புகளை பயன்படுத்தினால், உங்கள் வலைதளத்தை உங்கள் படுக்கை அறையில் இருந்து ஓட்டினாலும், உங்கள் பயனர்களுக்கு அது பெரிய நிறுவனத்தின் வலைதளம்போல தெரியும்.  

    செப்டம்பரில் ராபர்ட் பொறுமை இழந்தான். “ஒரு மாதமாக இதில் வேலை செய்கிறோம், ஆனால் இன்னும் முடியவில்லை”. இப்போது யோசித்தால் சிரிப்பாக இருக்கிறது. ஏனென்றால் அடுத்த மூன்று வருடங்களுக்கும் அவன் அதில்தான் வேலை செய்தான். எனக்கு மேலும் கணினிநிரல் எழுத்தர்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என்று தோன்றியது. அவனுக்கு கல்லூரியில் யாரையாவது தெரியுமா என்று கேட்டேன். ட்ரெவொர் பிளாக்வெல் என்று அவன் பரிந்துரைத்தபோது எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. ஏனென்றால் எனக்குத்தெரிந்த ட்ரெவொர், மொத்த வாழ்வையும் சில அட்டைகளாக மாற்றி, அடுக்கி வைத்துக்கொண்டு, தன்னோடு எங்கு சென்றாலும் கொண்டு செல்பவன். ஆனால் வழக்கம்போல ராபர்ட் சரியாக கணித்திருந்தான். ட்ரெவொர் அட்டகாசமான நிரல் எழுத்தராக இருந்தான்.

    ராபர்ட்டோடும் ட்ரெவொரோடும் வேலை செய்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. ஜனவரி 1996இல், ஆறு இணைய கடைகளுடன் நாங்கள் எங்கள் வலைதளத்தை துவக்கினோம். நாங்கள் தாமதமாக துவங்குகிறோம் என்று நினைத்தாலும், உண்மையில் நாங்கள் மிகமிக சீக்கிரமாக துவங்கிவிட்டோம். பத்திரிக்கைகளில் இணையவழி வணிகத்தைப்பற்றிய செய்திகள் இருந்தாலும், மக்களுக்கு உண்மையில் இணையதள வணிகம் தேவைப்படவில்லை.[8]

    அந்த மென்பொருளை மூன்றாக பிரிக்கலாம்: எடிட்டர் – (தளங்களை உருவாக்க) – நான் எழுதியது. விற்பனை கூடை – ராபர்ட் எழுதியது. ஆர்டர்களை நிர்வகிக்கும் பகுதி – ட்ரெவோர் எழுதியது. நான் எழுதிய எடிட்டர் – பொதுவான இணைய தளங்ளை உருவாக்கும் சிறந்த மென்பொருள். மற்ற இருவருடைய நிரல்களுடன் பொருந்தி வேலை செய்தது. இதை மட்டுமே செய்ய வேண்டும் என்றால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மகிழ்ச்சியாக செய்திருப்பேன். ஆனால் கணினிநிரல் எழுத்தை தவிர மேலும் மோசமான, மன அழுத்தங்களை உருவாக்கக்கூடிய வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது.

    தொண்ணூறுகளின் பிற்பகுதியில் நிறைய மின்வர்த்தக மென்பொருட்கள் (ecommerce) எழுதப்பட்டு கொண்டிருந்தன. எங்கள் மென்பொருள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவும், விலை குறைவாகவும் இருக்க வேண்டும் என நினைத்தோம். எங்களிடம் பணம் இல்லாதது நல்லதாக போயிற்று. நாங்கள் நினைத்தை விட வியாவெப் விலை குறைவாக இருந்தது. எங்கள் வலைதளத்தில் சிறிய இணைய கடை நடத்த வேண்டும் என்றால் மாதம் $100. பெரிய இணைய கடைகளுக்கு மாதம் $300 விலை வைத்திருந்தோம். எங்களின் குறைந்த விலை பெரிய விளம்பரமாகவும், போட்டியாளர்களுக்கு பிரச்சனையாகவும் இருந்தது. படு புத்திசாலித்தனமான ஆராய்ச்சி எல்லாம் செய்து விலையை முடிவு செய்யவில்லை. $300 டாலரே எங்களுக்கு நிறைய பணம் போல தோன்றியது. 

    வணிகத்தை பற்றி எங்கள் தேவைக்கு அதிகமாகவே நாங்கள் தெரிந்து கொண்டோம். உதாரணமாக, ஆண்கள் சட்டை விற்பனை தளத்தில், ஒரு சட்டைக்கு ஒரு சிறிய படம் மட்டுமே போட முடியுமென்றால், மொத்த சட்டையையும் எடுக்காமல் காலர் பகுதியை படம் எடுத்தக்கொள்ளலாம். எனக்கு ஏன் இது நினைவில் இருக்கிறது என்றால், நான் 30 சட்டை படங்களை மீண்டும் எடுக்க வேண்டி இருந்தது. நான் முதலில் எடுத்த படங்கள் அழகாகவும் இருந்தன.

    கடைகளுக்கான வலைதளங்களை உருவாக்கியது எங்களுக்கு கடைகளுக்கான வணிகத்தை மட்டும் சொல்லிக் கொடுக்கவில்லை. எங்கள் மென்பொருள் எப்படி வேலை செய்கிறது என்பதையும் தான். ஆரம்பத்தில் எனக்கு “வணிகம்” என்ற சொல் ஒருவித மர்மத்தையும், விலக்கத்தையும் உருவாக்கியது. “வணிகம் தெரிந்த ஒருவரை” வேலைக்கு எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் எங்களுக்கு பயனர்கள் வரத் துவங்கியவுடன் நானும் ஒரு வணிகனாக மாறிவிட்டேன். குழந்தைகள் பிறந்தவுடன் தந்தையாக பொறுப்புடன் நடந்து கொள்வதுபோல. பயனர்களுக்கு என்னென்ன வேண்டுமோ, அதற்கெல்லாம் நாங்கள் தயாராக இருந்தோம். என்றோ ஒரு நாள் எனக்கு மிக அதிகமாக பயனர்கள் வருவார்கள், அப்போழுது அவர்களுடைய படங்களை எல்லாவற்றையும் என்னால் ஸ்கேன் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் அதுவரை செய்வதற்கு வேறெந்த முக்கியமான வேலையும் இல்லை.  

    வளர்ச்சி விகிதம் தான் ஒரு ஸ்டார்டப் நிறுவனத்தின் அதிமுக்கிய அளவுகோல் என்பது அன்று எனக்கு தெரியவில்லை. எங்களின் வளர்ச்சி நன்றாக இருந்தது. 1996ஆம் ஆண்டின் இறுதியில் எங்கள் வலைதளத்தில் 70 கடைகளும், 1997ஆம் ஆண்டின் இறுதியில் 500 கடைகளும் இருந்தன. மொத்த பயனர்களின் எண்ணிக்கை தான் முக்கியம் என்று தவறாக கணித்தேன். ஒருவகையில் எவ்வளவு வருமானம் வருகிறது என்பது முக்கியம்தான். தேவையான வருமானம் வரவில்லை என்றால், நாம் கடையை மூடவேண்டி வரும். தொலை நோக்கில், வளர்ச்சி விகிதம் எண்ணிக்கையை பார்த்துக்கொள்ளும். Y Combinator’இன் அறிவுரையை கேட்கும் ஒரு ஸ்டார்டப் ஆக இருந்தால், நான் இதை சொல்லி இருப்பேன்: ஒன்றும் வருந்த வேண்டாம். ஏனென்றால் உங்கள் நிறுவனம் நன்றாக வளர்கிறது. ஒரு வருடத்தில் ஏழு மடங்கு வளர்ந்திருக்கிறீர்கள். அதிக ஆட்களை வேலைக்கு எடுக்காமல் இருந்தாலே, விரைவிலேயே உங்கள் நிறுவனம் லாபகரமாக மாறும். அதன் பின், உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்.

    ஆனால், நான் நிறைய ஆட்களை வேலைக்கு எடுத்து விட்டேன். முதலீட்டாளர்கள் ஆள் சேர்க்க சொன்னார்கள், மேலும் 2001 வலைதள குமிழி காலகட்டத்தில் எல்லோரும் அதிக ஆட்களைத்தான் வேலைக்கு சேர்த்தார்கள். மிக குறைந்த ஆட்கள் வேலை செய்தார்கள் என்றால் அப்போது அது மிக சிறிய நிறுவனம் போல இருந்திருக்கும். யாஹூ நிறுவனம் எங்களை 1998இல் வாங்கும் போது, எங்கள் வருமானம் செலவுகளை ஈடு செய்ய துவங்கியிருந்தது. அதனால் எங்கள் நிறுவனத்தை நடத்திய காலம் முழுவதும் செலவுகளுக்கு முதலீட்டாளர்களின் கருணையை எதிர் பார்த்திருக்க வேண்டியிருந்தது. எங்கள் முதலீட்டாளர்களும் எங்களைப்போலவே ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் புதியவர்கள் என்பதால் இருவருமே தடுமாறினோம். 

    யாஹூ எங்களை வாங்கியது பெரிய நிம்மதியை தந்தது. வியாவெப் பங்குகளுக்கு மதிப்பிருந்தது. அதிவளர்ச்சி அடையும், லாபம் தரக்கூடிய ஒரு நிறுவனத்தின் பங்கு அது. ஆனால் எனக்கு அது மதிப்பு மிக்கதாக தோன்றவில்லை; எனக்கு ஒரு நிறுவனத்தை எப்படி மதிப்பிட வேண்டும் என்பதே தெரியவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு ஒருமுறை எங்கள் நிறுவனத்திற்கு வாழ்வா சாவா போராட்டம் நடந்து கொண்டே இருந்தது. மேலும் நாங்கள் நிறுவனத்தை நடத்திய காலகட்டத்திலும் என்னுடைய கல்லூரி வாழ்க்கை முறையை மாற்றி கொள்ளவில்லை. அதனால் யாஹூ எங்கள் நிறுவனத்தை வாங்கியவுடன், எனக்கு பிச்சைகாரனிலிருந்து பணக்காரன் ஆனது போல தோன்றியது. நியூயார்க்கில் இருந்து கலிஃபோர்னியாவிற்கு போக போவதால் ஒரு கார் வாங்கினேன். மஞ்சள் VW GTI. அந்த காரின் லெதர் சீட்டே அதுவரை நான் வைத்திருந்ததில் மிக சொகுசான பொருளாக தோன்றியது. 

    அடுத்த ஆண்டு – 1998 கோடை முதல் 1999 கோடை வரை – என் வாழ்நாளிலே வெட்டியான நாட்களாக இருந்தது. வியாவெப்பை நடத்தியது என்னை அழுத்தத்திற்கு உட்படுத்தி என் சக்தி அனைத்தையும் உறிஞ்சி விட்டது. கலிஃபோர்னியாவிற்கு சென்ற ஆரம்பத்தில், வழக்கம்போல அதிகாலை மூன்று மணி வரை நிரல்கள் எழுத முயற்சித்தேன். ஆனால் யாஹூவின் வேலை கலாச்சாரம், சாண்டா கிளாராவின் சோகமான நாற்காலி-வயல்கள் என்னை உற்சாகம் இழக்க வைத்தன. சில மாதங்களிலே எனக்கு முன்பு இண்டெர்லீஃபில் வேலை செய்வது போல தோன்றியது.  

    யாஹூ எங்களை வாங்கியபோது நிறைய பங்கு ஆப்ஷன்களை (பங்கு ஆப்ஷன்கள் – நீங்கள் உடனடியாக அந்த பங்குகளை விற்க முடியாது. முதல் ஆண்டில் 25%, பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு என நான்கு ஆண்டுகளில் உங்களுக்கு தரப்பட்ட 100% பங்குகளை விற்றுக்கொள்ளலாம் என்பது போன்ற ஒப்பந்தம் போடப்பட்டிருக்கும்.) எங்களுக்கு தந்திருந்தது.  அப்பொழுது யாஹூவே அளவுக்கு அதிகமாக சந்தையில் மதிப்பிடப்பட்டிருந்ததால், அந்த ஆப்ஷன்களுக்கு எந்த மதிப்பும் இருக்காது என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் அதிர்ச்சி அடையும் அளவிற்கு அந்த பங்குகள் 5X வளர்ந்தன. ஒருவருட முடிவில் என்னுடைய முதல் பங்கு ஆப்ஷன்களை விற்றுக்கொள்ளும் தேதி வரும்வரை யாஹூவில் இருந்தேன். 1999 கோடையில் பங்குகளை விற்றுவிட்டு யாஹூவில் இருந்து விலகிவிட்டேன். 

    ஓவியம் வரைந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதே மறந்துவிட்டது. நான்கு வருடங்களாக என் மூளை முழுவதும் மென்பொருளும், ஆண்களின் சட்டைகளும் மட்டுமே நிரம்பி இருந்தது. இந்த வேலைகளை செய்ததே நான் பணக்காரனாகி ஓவியம் வரைவதற்காகத்தான். இப்பொது பணக்காரனாகி விட்டதால், நான் ஓவியம் வரையலாம் என்று எனக்கு நானே நினைவூட்டிக் கொண்டேன். 

    நான் வேலையை விட்டு கிளம்புகிறேன் என்று சொன்னபோது, யாஹூ மேலாளர் என்னுடன் நீண்ட நேரம் உரையாடினார். என் எதிர்கால திட்டங்களை பற்றி பேசினோம். என்னவெல்லாம் நான் வரையப்போகிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவர் அக்கறையாக கேட்டது எனக்கு உண்மையிலே மகிழ்ச்சியாக இருந்தது. இப்பொழுது யோசித்து பார்த்தால், நான் பொய் சொல்கிறேன் என அவர் நினைத்திருக்கலாம். என்னுடைய பங்கு ஆப்ஷன்களின் அப்போதைய மதிப்பு – மாதம் $2 மில்லியன் டாலர்கள். (ஆம், ஒவ்வொரு மாதமும் நான் யாஹூ நிறுவனத்தில் வேலை செய்தால், பங்கு ஆப்ஷன் மூலம் எனக்கு $2 மில்லயன் டாலர்கள் கிடைக்கும்.) நாம் அவ்வளவு பணத்தை வேண்டாம் என்று சொல்கிறேன் என்றால், நான் மீண்டும் ஒரு நிறுவனத்தை துவங்குவதற்காக மட்டுமே இருக்கவேண்டும், அப்படி நான் ஒரு நிறுவனம் துவங்கினால், என்னுடன் யாஹூவில் இருந்து ஆட்களை அழைத்து சென்று விடுவேன் என அவர் நினைத்திருந்தார். வலைதள குமிழி காலகட்டத்தின் உச்சம் அது. யாஹூவே அதன் மையம். என் மேலாளர் அப்போழுது பில்லியனர். யாஹூவை விட்டு விட்டு ஒரு புதிய நிறுவனத்தை துவங்க செல்வது ஒரு கிறுக்குத்தனமான, ஆனால் நிகழக்கூடிய திட்டம். 

    ஆனால் நான் உண்மையிலே ஓவியம் வரைவதற்காகத்தான் வேலையை விட்டேன். உடனடியாக ஓவியம் வரையவும் துவங்கினேன். மேலும் நேரத்தை வீணடிக்க முடியாது.  பணக்காரனாவதற்கே நான்கு வருடங்கள் போய்விட்டது. தங்கள் நிறுவனங்களை விற்றுவிட்டு செல்லும் நிறுவனர்களுக்கு இப்பொழுதும் என் அறிவுரை இதுதான் – கொஞ்சம் ஒய்வெடுங்கள். நானும் அதைத்தான் செய்திருக்க வேண்டும். எங்கேயாவது சென்று – ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஒன்றும் செய்யாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த எண்ணம் எனக்கு தோன்றவே இல்லை.

    நான் ஓவியம் வரைய முயற்சித்தேன். ஆனால் ஓவியம் வரைவதற்கான உந்துதலோ, சக்தியோ என்னிடம் இல்லை. கலிஃபோர்னியாவில் எனக்கு நண்பர்கள் பெரிய அளவில் இல்லை என்பது ஒரு சிக்கல். சாண்டா க்ரூஸ் மலையில் வீடு வாங்கியதும் அந்த சிக்கலை மேலும் அதிகப்படுத்தியது. அருமையான இடம் அது. ஆனால் பல மைல் தொலைவிற்கு எதுவுமே இல்லை. மேலும் சில மாதங்கள் அங்கு தாக்குப்பிடித்து பார்த்தேன். பின்பு விரக்தியில் நியூயார்க்கிற்கு திரும்பி விட்டேன். அமெரிக்க வாடகை-சட்டத்தை பற்றி தெரியவில்லை என்றால் உங்களுக்கு ஆச்சர்யமான விஷயம் ஒன்று இருக்கும். நியூயார்க்கில் என்னுடைய பழைய வீடு இன்னும் அப்படியே இருந்தது. என் பழைய வாழ்க்கையின் ஒரு சமாதிபோல. ஐடெல் இன்னும் நியூயார்க்கில் தான் இருந்தார். மேலும் சிலர் ஓவியம் வரைய முயற்சித்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் யாரையும் எனக்கு தெரியவில்லை.

    முதல் பகுதி

  • செயற்கை நுண்ணறிவு – 1

    செயற்கை நுண்ணறிவு – 1

    எழுத்தாளர் சுசித்ராவிடம் ஏ.ஐ குறித்து ஒரு தொடர் எழுதுவதாக சில நாட்களுக்கு முன்பு சொல்லி இருந்தேன். அந்த தொடருக்கு முன்னோட்டமாக பால் கிரஹாமின் வாழ்க்கை வரலாறை மூன்று பகுதிகளாக அடுத்த மூன்று நாட்களில் வெளியிடுகிறேன்.

    பால் கிரஹாம் ஸ்டார்ட்-அப் உலகில் நன்கு தெரிந்த பெயர். பால் கிரஹாமுக்கு முந்தைய காலகட்டத்தில் [2000 ஆம் ஆண்டுக்கு முன்பு], ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் குறைந்தபட்ச முதலீடு சில மில்லியன் டாலர்கள். முதலீடு அதிகமாக இருந்ததால், குறைவான நிறுவனங்களே ஆரம்பிக்கப்பட்டன. வங்கிகளுக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் எப்படி முதலீடு செய்வது என்று புரியவில்லை. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஆரம்பிக்கக்கூடிய இருவது வயதில் இருந்த இளைஞர்களுக்கும் சரியான வழிகாட்டிகள் இல்லை.

    பால் கிரஹாம் ஒரு மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பித்து, வளர்த்து, பின்பு யாகூ நிறுவனத்திடம் விற்றார். அதில் கிடைத்த பணத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஒரு வென்ச்சர் கேப்பிடல் நிறுவனத்தை ஆரம்பித்தார். வொய் காம்பினேட்டர் (Y Combinator) என்ற அந்த முதலீட்டு நிறுவனம், ஒரே நேரத்தில், குறைந்த முதலீட்டில் பல ஸ்டார்ட்-அப்களை ஆரம்பிக்கும் ஒரு மாதிரியை உருவாக்கியது. கிட்டத்தட்ட ஸ்டார்ட்-அப் உலகில் முதலீடு செய்யும் அனைத்து முதலீட்டு நிறுவனங்களும், பின்பு பால் கிரஹாமின் மாடலைப் பின்பற்றின.

    Y Combinator, ஸ்டார்ட்-அப் ஆரம்பிக்கும் இளைஞர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தது. வருடா வருடம் வொய் காம்பினேட்டர் ஐம்பது-நூறு மென்பொருள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஆரம்பிக்க உதவியது. அதில் சேர்ந்த நிறுவனர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி, ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக்கொண்டார்கள். தாங்கள் ஆரம்பித்த நிறுவனங்கள் சரியாக ஓடவில்லை என்றால், நிறுவனங்களை மூடிவிட்டு, நன்றாகச் செயல்படும் நிறுவனங்களில் போய் இணைந்துகொண்டார்கள்.

    மேலும், பால் கிரகாம் ‘ஹேக்கர் நியூஸ்’ – https://news.ycombinator.com/news என்ற வலைதளத்தையும் நடத்துகிறார். தன் தளத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுகிறார் – http://www.paulgraham.com/articles.html – மென்பொருள் துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஆரம்பித்த பலருக்கும் இவரது கட்டுரைகளும் வலைதளங்களும் மிக பயனுள்ளவையாக இருந்தன.

    ###

    1880 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பை எண்ணி முடிக்க கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆனது. மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் ஏற்கனவே இருக்கும் ஊழியர்களை வைத்துக்கொண்டு 1890 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை பத்து வருடங்களுக்குள் எண்ணிவிட முடியாது என்று தெரிந்தது. அதிக ஊழியர்களை நியமிப்பதற்கும் பட்ஜெட் இல்லை. அதனால் அமெரிக்க அரசு பொதுமக்களிடம் ஆலோசனை கேட்டது. கணக்கிடும் ஒரு இயந்திரம் கண்டுபிடித்தால் பரிசு என அறிவித்தது. தறி நெசவு இயந்திரங்களின் அடிப்படையில் ஹெர்மன் ஹோலரித் கண்டுபிடித்த ஒரு கணக்கிடும் இயந்திரத்திற்கு பரிசு கிடைத்தது.

    கலிஃபோர்னியா விரிகுடா பகுதி மௌண்டன் வியூ நகரில் இருக்கும் கணினி வரலாற்று அருங்காட்சியத்தில் இந்த இயந்திரத்தை பார்த்தேன். முதல் கணினி என இந்த இயந்திரத்தை சொல்லலாம். இந்த கணினியை உருவாக்கிய ஹோலரித்தின் நிறுவனமும், மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து ஐ.பி.எம் நிறுவனம் உருவானது.

    சரி, இதே காலகட்டத்தில் அமெரிக்காவைவிட அதிக மக்கள்தொகை கொண்ட காலனிய பிரிட்டீஷ் இந்திய அரசு எப்படி பத்து வருடங்களுக்குள் மக்கள் தொகையை கணக்கிட்டது ? ஆர்கைவ் தளத்தில் பிரிட்டீஷ் ராஜ் மக்கள் தொகை ரிப்போர்ட்களை நான் தேடிப்பார்த்தேன். இந்திய மக்கள்தொகை அலுவலகம் இந்த இயந்திரத்தை பரிசீலித்திருக்கிறது. விலை அதிகம் என முடிவு செய்து, மிகக்குறைந்த ஊக்கத்தொகை கொடுத்து, அதிக அளவு தற்காலிக ஊழியர்களை நியமித்து, அவர்களுக்கு “சர்டிஃபிகேட்” கொடுத்து கணக்கெடுப்பை நடத்தி முடித்து இருக்கிறது.

    ###

    கணினி என்ற ஒன்று உருவாவதற்கு முன்பே செயற்கை நுண்ணறிவு, இயந்திர மனிதன், இயந்திரத்திற்கும் மனிதனுக்குமான உறவு, அதன் எல்லைகள், சாத்தியங்கள் என கதைகளும், விவாதங்களும் துவங்கிவிட்டன. கிட்டத்தட்ட நூறு வருடங்களாகவே செயற்கை நுண்ணறிவு குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள். பால் கிரஹாம் 1980களில் கல்லூரியில் படித்தபோது அவருக்கு அன்றைய “செயற்கை நுண்ணறிவு” என்பது ஒரு ஏமாற்று என்று தோன்றி இருக்கிறது. “IT in Indian Languages”, “A.I” போன்ற பாடங்களை என்னுடைய இளங்கலை பொறியியலில் (2001-2005) படித்திருக்கிறேன். “ஏமாற்று” அல்லது “வேஸ்ட்” என்றே அன்று எனக்கும் தோன்றியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த எண்ணமே நீடித்தது. பின்பு என்ன மாறியது ? எப்படி மாறியது ?

    Ref:

    1901 India Census report: “The initial cost of these machines, which I believe is about £400, would in any case render it impossible to use them in India, and they could not be employed for the more complicated tables such as caste and language, which involve many more entries than it would be feasible to provide for on the cards and punching machines ; but apart from this, in a country where the lower class of clerical labour is as cheap and plentiful as it is here, it is clear that the machine could never compete successfully with hand labour – http://piketty.pse.ens.fr/files/ideologie/data/CensusIndia/CensusIndia1901/CensusIndia1901IndiaReport.pdf

    [தொடரும்]

  • பால் கிரஹாம் – வாழ்க்கை வரலாறு – 1 

    பால் கிரஹாம் – வாழ்க்கை வரலாறு – 1 

    பால் கிரஹாம் ஸ்டார்ட்-அப் உலகில் நன்கு தெரிந்த பெயர். பால் கிரஹாமுக்கு முந்தைய காலகட்டத்தில் [2000 ஆம் ஆண்டுக்கு முன்பு], ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் குறைந்தபட்ச முதலீடு சில மில்லியன் டாலர்கள். முதலீடு அதிகமாக இருந்ததால், குறைவான நிறுவனங்களே ஆரம்பிக்கப்பட்டன. வங்கிகளுக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் எப்படி முதலீடு செய்வது என்று புரியவில்லை. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஆரம்பிக்கக்கூடிய இருவது வயதில் இருந்த இளைஞர்களுக்கும் சரியான வழிகாட்டிகள் இல்லை.

    பால் கிரஹாம் ஒரு மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பித்து, வளர்த்து, பின்பு யாகூ நிறுவனத்திடம் விற்றார். அதில் கிடைத்த பணத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஒரு வென்ச்சர் கேப்பிடல் நிறுவனத்தை ஆரம்பித்தார். வொய் காம்பினேட்டர் (Y Combinator) என்ற அந்த முதலீட்டு நிறுவனம், ஒரே நேரத்தில், குறைந்த முதலீட்டில் பல ஸ்டார்ட்-அப்களை ஆரம்பிக்கும் ஒரு மாதிரியை உருவாக்கியது. கிட்டத்தட்ட ஸ்டார்ட்-அப் உலகில் முதலீடு செய்யும் அனைத்து முதலீட்டு நிறுவனங்களும், பின்பு பால் கிரஹாமின் மாடலைப் பின்பற்றின.

    Y Combinator, ஸ்டார்ட்-அப் ஆரம்பிக்கும் இளைஞர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தது. வருடா வருடம் வொய் காம்பினேட்டர் ஐம்பது-நூறு மென்பொருள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஆரம்பிக்க உதவியது. அதில் சேர்ந்த நிறுவனர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி, ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக்கொண்டார்கள். தாங்கள் ஆரம்பித்த நிறுவனங்கள் சரியாக ஓடவில்லை என்றால், நிறுவனங்களை மூடிவிட்டு, நன்றாகச் செயல்படும் நிறுவனங்களில் போய் இணைந்துகொண்டார்கள்.

    மேலும், பால் கிரகாம் ‘ஹேக்கர் நியூஸ்’ – https://news.ycombinator.com/news என்ற வலைதளத்தையும் நடத்துகிறார். தன் தளத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுகிறார் – http://www.paulgraham.com/articles.html – மென்பொருள் துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஆரம்பித்த பலருக்கும் இவரது கட்டுரைகளும் வலைதளங்களும் மிக பயனுள்ளவையாக இருந்தன.

    http://www.paulgraham.com/worked.html – பெப்ரவரி 2021இல் பால் கிரஹாம் எழுதிய நீண்ட கட்டுரையின் ஒரு சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

    [1] 

    எனக்கு பள்ளி நாட்களில் கணினிநிரல்களை எழுத பிடித்து இருந்தாலும், கார்னல் பல்கலையில் நான் படிக்க தேர்ந்து எடுத்தது (மேற்கத்திய) தத்துவம். என்னுடைய எளிய இளமனதிற்கு தத்துவம் வாழ்வின் உண்மைகளை பற்றிய கல்வியாக தோன்றியது. மற்ற அனைத்தும் சாதாரண அறிவுத்துறைகளாக இருந்தன. ஆனால் கல்லூரில் சேர்ந்த பின்பே, தத்துவத்தின் பரப்பை மற்ற அனைத்து துறைகளும் ஆக்ரமித்து, தத்துவத்திற்கு மட்டுமே உரிய பரப்பு சுருங்கிவிட்டதை உணர்ந்தேன்.

    பதினெட்டு வயதில் எனக்கு இதை சரியாக சொல்ல தெரியவில்லை. தொடர்ந்து தத்துவ பாடங்களை எடுத்துப் படித்தேன். அவை என் ஆர்வத்தை தொடர்ந்து சோதித்தன. அதனால் நான் செயற்கை நுண்ணறிவிற்கு (AI) என் கவனத்தை திருப்பினேன். 

    1980களில் செயற்கை நுண்ணறிவு துறை ஓரளவு பிரபலமானது. அந்த துறையை நான் தேர்ந்தெடுக்க காரணமாக இரண்டு விஷயங்கள் இருந்தன:  தி மூன் இஸ் எ ஹார்ஷ் மிஸ்டிரஸ் – ஹென்லெயினின் நாவலில் வரும் ‘மைக்’ என்னும் அறிவாளியான கணினி மற்றும் பிபிஸ் (PBS) தொலைகாட்சி ஆவணப்படத்தில் டெர்ரி வின்னொகிராட் பயன்படுத்தும் SHRDLU என்ற செயற்கை நுண்ணறிவு நிரல். நாவலை நான் மீண்டும் படிக்கவில்லை. அதனால் மீள்வாசிப்பில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அன்று படித்தபோது அது தன் உலகிற்கு என்னை முழுதும் இழுத்துக்கொண்டது. வின்னோகிராட் SHRDLU வை பயன்படுத்தவதை பார்த்தபோது, மேலும் சில வருடங்களிலிலே, நான் புனைவில் படித்த ‘மைக்’ பயன்பாட்டிற்கு வந்துவிடும்  என்று தோன்றியது. SHRDLU க்கு மேலும் சில சொற்களை சொல்லித்தரவேண்டும். அவ்வளவுதான்.

    கார்னல் பல்கலையில் அப்போது செயற்கை நுண்ணறிவைப் பற்றிய வகுப்புகள் எதுவுமில்லை. அதனால் நானே கற்று கொள்ள துவங்கினேன். செயற்கை நுண்ணறிவின் அன்றைய நிரல்மொழியான லிஸ்ப் (Lisp) படித்தேன். அன்று பயன்பாட்டில் இருந்த நிரல்மொழிகள் எளியவை. என்னுடைய இளங்கலை ஆய்விற்கு SHRDLU வை பகுத்துப் புரிந்து கொண்டேன். நான் மிகவும் விரும்பிச் செய்த செயல் அது. அந்த நிரல் எனக்குப் பிடிக்கக் காரணம் நான் அறிவின் அடிவாரத்தில் ஏறத் துவங்கிவிட்டேன் என்ற எண்ணம்தான்.

    கார்னல் பல்கலையில் நான் சேர்ந்த படிப்பு எந்த குறிப்பிட்ட துறையையும் சேர்ந்தது இல்லை. பல்கலையில் நீங்கள் எந்த பாடத்தையும் படிக்கலாம். நீங்கள் எந்த பட்டத்தை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். “செயற்கை நுண்ணறிவு” என்று நான் போட்டு கொண்டேன். அடைப்பு குறிகளையும் (“ “) சேர்த்தே என் பட்டத்தில் போட்டிருந்ததை பார்த்த போது கடுப்பானேன். அடைப்புக்குறிகள் என்னை தொந்தரவு செய்தன. ஆனால் அது மிகச்சரியானது என்று பின்னால் நான் கண்டுகொண்ட காரணங்கள் உணர்த்தின. 

    இளநிலை படிப்பிற்கு பின்னர் முதுநிலை படிப்பிற்காக நான் மூன்று பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பித்து இருந்தேன்: செயற்கை நுண்ணறிவிற்கு புகழ் பெற்றிருந்த எம்.ஐ.டி மற்றும் யேல் மற்றும் ஹார்வேர்ட் பல்கலைகழகம். மேலும் நான் நகலெடுத்திருந்த SHRDLUவின் பகுப்பானை (parser) கண்டுபிடித்திருந்த பில் வுட்ஸ் ஹார்வேர்ட்டில் இருந்தார். ஹார்வேர்ட் மட்டுமே என் விண்ணப்பத்தை ஏற்றது. 

    எனக்கு எப்போழுது தோன்றியது என்று தெரியவில்லை, அல்லது ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிகழ்வா என்றும் நினைவில் இல்லை. ஆனால் என்னுடைய முதுநிலை படிப்பின் முதல் வருடத்தில், அன்றைய செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு ஏமாற்று என்பதை நான் உணர்ந்தேன். “ஒரு நாய் தன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறது” என்ற சொற்றொடரை பகுத்து, தன் அறிதல்களில் ஒன்றாக சேர்த்துக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவு கணினிநிரல்களைப்பற்றி சொல்கிறேன்.இயற்கை மொழியை உண்மையிலே புரிந்து கொள்வதற்கும், இந்த கணினிநிரல்கள் செய்தவற்றிற்கும் ஒரு நிரப்பவே முடியாத இடைவெளி உள்ளது என்பது எனக்கு தெளிவாகியது.

    அது SHRDLU க்கு மேலும் சில சொற்களை சொல்லித்தருவது மட்டுமல்ல. தகவல் கட்டமைப்பை உருவாக்குதல், சில கொள்கைகளை வடிவமைத்தல் என செயற்கை நுண்ணறிவை உருவாக்கிக்கொண்டிருந்த மொத்த வழிகளும் தவறென்று தோன்றியது. நிறைய வெற்று ஆய்வுகளையும், பல்வேறு பிளாஸ்திரி ஒட்டுகளை போடுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கினவே தவிர, அறிவாளி கணினியான “மைக்” ஒருநாளும் உருவாக்கப்போவதில்லை என்று தெளிவானது. 

    என்னுடைய தோல்வி அடைந்த திட்டத்தில் எது மிஞ்சும் என பார்த்தேன். லிஸ்ப் நிரல்மொழி மட்டும் இருந்தது. அன்று மக்கள் அதை பொருட்படுத்தியது செயற்கை நுண்ணறிவிற்காகத்தான். லிஸ்ப்பில் வேலை செய்த அனுபவத்திலிருந்து, அது தன்னளவிலேயே பயனுள்ள நிரல்மொழி என்பதும் செயற்கை நுண்ணறிவைத்தவிர மற்றவற்றிற்கும் பயன்படும் என்றும் தெரிந்தது. அதனால் லிஸ்ப்பில் கவனத்தை திருப்பினேன். உண்மையில் லிஸ்ப்பை பற்றி ஒரு புத்தகம் எழுத தீர்மானித்தேன். லிஸ்ப் பற்றிய என் அறிவு மிக குறைவானது. லிஸ்ப் ஹாக்கிங் பற்றிய புத்தகம் என்ற எண்ணமே எனக்கு திகிலை ஏற்படுத்தியது. ஆனால் ஒன்றை கற்றுக்கொள்வதற்கு அதைப்பற்றிய புத்தகம் எழுதுவது மிகச்சிறந்த வழி. “ஆன் லிஸ்ப்” (On Lisp) என்ற அந்த புத்தகம் 1993 வரை வெளிவரவில்லை. ஆனால் அதன் பெரும்பகுதியை நான் முதுகலை கல்வியின் போதே எழுதிவிட்டேன்.

    கணினி இயல் என்பது இரண்டு பொருந்தாத பகுதிகளின் கூட்டு — கோட்பாடு (theory) மற்றும் தொழில்நுட்பம் (system/technology). கோட்பாட்டாளர்கள் நிறுவதை தொழில்நுட்பத்தினர் வடிவமைப்பார்கள். எனக்கு கோட்பாட்டாளர்கள் மீது மிகுந்த மதிப்பிருந்தாலும், இரண்டில் மதிக்கத்தக்கது கோட்பாடே என்று உள்ளூர குடையும்  ஓர் எண்ணமிருந்தாலும் எனக்கு தொழில்நுட்ப வடிவமைப்புதான் மிக பிடித்திருந்தது. 

    தொழில்நுட்பத்தின் பிரச்சனை என்னவென்றால் அதன் ஆயுள் குறைவு. இன்று நீங்கள் எந்த கணினிநிரலை எழுதினாலும், அது எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், அதிகபட்சம் சில தசாப்தங்களில் அது காலாவதி ஆகிவிடும். உங்கள் மென்பொருள் எங்கோ ஒரு அடிக்குறிப்பாக மிஞ்சலாம். ஆனால் அதை யாரும் பயன்படுத்த மாட்டார்கள். மேலும் காலம் செல்லச்செல்ல அது மிக சிறியதாக ஆகும். அந்த துறையின் வரலாற்றில் ஆர்வமுள்ள யாரோ ஒருவர் வேண்டுமானால் அதன் காலத்தில் அது சிறந்ததாக இருந்தது என்று நினைக்கலாம்.

    எங்கள் கணினி ஆய்வகத்தில்  தேவைக்கு அதிகமான சில ஜெராக்ஸ் மெஷின்கள் இருந்தன. யாருக்காவது அவை தேவையென்றால் உபயோகப்படுத்தி கொள்ளலாம். எனக்குக்கூட  அவற்றைப் பயன்படுத்தலாம் என்று தோன்றியது. ஆனால் அன்றைய காலத்திற்கே அது மிகவும் மெதுவாக வேலைசெய்தது. அதனால் என்ன பயன்? யாருக்கும் அது தேவைப்படவில்லை. அதனால் அவை குப்பை கூடைக்கு சென்றன. தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டவற்றின் நிலை அதுதான். 

    எனக்கு ஏதோ ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மட்டும் தோன்றவில்லை. காலத்தால் நிலைத்து நிற்கக்கூடிய ஒன்றை உருவாக்கவேண்டும் என்றும் தோன்றியது.

    திருப்தியற்ற இந்த நிலையில், 1988இல் என் நண்பன் ரிச் டேவிஸை அவன் முதுநிலை படித்துக்கொண்டிருந்த CMU பல்கலையில் சந்திக்கச்சென்றேன்.  ஒரு நாள், நான் இளமையில் நிறைய நேரம் செலவழித்த கார்னகி இன்ஸ்டிட்யூட்டிற்கு சென்றேன்.

    அங்கு ஒரு ஓவியத்தை அன்று பார்த்துக்கொண்டிருந்தபோது மிக அப்பட்டமான ஒரு எண்ணம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்தச் சுவரில், நீங்கள் உருவாக்ககூடிய ஒன்று, நீண்ட நாள் நிலைத்து நிற்கக்கூடிய ஒன்று இருந்தது. ஓவியங்கள் அழிவதில்லை. மிகச்சிறந்த ஓவியங்கள் பல நூற்றாண்டுகளை தாண்டியும் நிலைத்து நிற்கக்கூடியவை. 

    மேலும், ஓவியம் வரைந்தால் வருமானமும் வரலாம். மென்பொருள் எழுதும் அளவிற்கு எளிமையாக வருமானம் வராது என்றாலும், தொடர்ந்து உழைத்தால், மிகச்சிக்கனமாக இருந்தால், சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஒரு கலைஞனாக உண்மையிலேயே சுதந்திரமாகவும் இருக்கலாம். எனக்கு ஒரு மேலாளர் இருக்கமாட்டார் அல்லது நான் ஆய்வுநிதிக்காக அலைய தேவையில்லை.

    எனக்கு எப்பொழுதுமே ஓவியங்களை பார்க்கப் பிடிக்கும். என்னால் அவற்றை உருவாக்க முடியுமா? தெரியவில்லை. முடியும் என ஒருநாளும் கற்பனைகூட செய்தது இல்லை. கலைஞர்கள் கலையை உருவாக்குகிறார்கள் என்று எனக்கு தெரியும். கலை “தானாக” தோன்றுவதில்லை. ஆனால் அந்த கலைஞர்கள் வேறு ஒரு இனம் என்று தோன்றியது. அவர்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் அல்லது அவர்கள் ஏதோ ஒரு மர்மமான அதிபுத்திசாலிகள். வாழ்வில் ஏதோ வித்தியாசமாக செய்து கொண்டிருந்தார்கள். “கலையை உருவாக்குதல்” – கலை என்ற பெயர்ச்சொல்லை தொடர்ந்து வரும் ‘உருவாக்குதல்’ என்ற வினைச்சொல்லே ஒரு அற்புதம் போல தோன்றியது.

    அடுத்த செமஸ்டரில் ஹார்வேர்டில் நான் கலையைப் பற்றிய வகுப்புகளில் சேர்ந்தேன். அங்கு முதுநிலை மாணவர்கள் எந்த துறையிலும் எந்த வகுப்புகளிலும் சேரலாம். நான் சேர்ந்த வகுப்புகளை பற்றி என் வழிகாட்டி என் வழிகாட்டி பேராசிரியர் டாம் சேத்தம் அறிந்தாலும் அவர் ஒன்றும் சொன்னதில்லை.

    இப்படியாக நான் கணிப்பொறி துறையில் முனைவர் ஆய்வில் இருந்தாலும், ஒரு ஓவியனாக ஆக திட்டமிட்டிருந்த போதே, லிஸ்ப் ஹாக்கிங்கிலும் அதிவிருப்பத்துடன் “ஆன் லிஸ்ப்”(On Lisp) புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்தேன். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், நிறைய முதுநிலை மாணவர்கள் போல, என் ஆய்வைத்தவிர நிறைய விஷயங்களில் மிகுந்த ஊக்கத்தோடு ஈடுபட்டேன்.

    இந்த சூழலில் இருந்து எப்படி வெளிவருவது என்று தெரியவில்லை. முதுகலை படிப்பில் இருந்து வெளியேற விரும்பவில்லை. ஆனால் வேறெப்படி வெளியேறுவதாம்? 1988இல் இணையத்தை ஸ்தம்பிக்க செய்த இண்டெர்னெட் வார்மை (internet worm) எழுதியமைக்காக என் நண்பன் ராபர்ட் மோரிஸ் கார்னெலில் இருந்து வெளியேற்றப்பட்டது நினைவிற்கு எழுந்தது. அதுபோல பொறாமைப்படக்கூடிய வெளியேறும் வழி எதுவும் எனக்கு தோன்றவில்லை. 

    பின்பு 1990 ஏப்ரலில் ஒரு நாள் சுவரில் ஒரு விரிசல் தோன்றியது. பேராசிரியர் சேத்தமை சந்திக்க நேர்ந்தது. அவர் அந்த ஜூன் மாதத்தில் நான் ஆய்வை முடித்து பட்டம் பெறுவேனா என்று கேட்டார். என் ஆய்வுக்கட்டுரையில் ஒரு வரி கூட நான் எழுதியிருக்கவில்லை. ஆனால் என் வாழ்வின் மிகக்குறுகிய காலத்தில் எடுத்த முடிவு அது. “ஆன் லிஸ்ப்” புத்தகத்திற்காக நான் ஏற்கனவே செய்த ஆராய்ச்சியை பயன்படுத்தி ஐந்து வாரத்தில், காலக்கெடுவிற்கு முன்பு, ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்து விடலாம் என்று நினைத்தேன். அவருடைய கேள்விக்கு சிறிதும் தாமதிக்காமல் “ஆம் என்று நினைக்கிறேன். இன்னும் சில நாட்களில் உங்களின் பார்வைக்கு கட்டுரையை அனுப்புகிறேன்” என்றேன்.

    என் கட்டுரையின் தலைப்பாக ‘செயல்வடிவங்களின் தொடர்ச்சி’யை தேர்ந்தெடுத்தேன். யாருமே தொடாத ஆராய்ச்சிக்குரிய ஒரு முழு உலகம் அதில் ஒளிந்திருந்தது. ஆனால் என்னுடைய நோக்கமெல்லாம் எப்படியாவது முதுகலை பட்டத்தோடு பல்கலையில் இருந்து வெளியேற வேண்டும் என்றுதான். நான் அவரசமாக எழுதிய ஆய்வுக்கட்டுரை அதற்கு போதுமானதாக இருந்தது. 

    அதே நேரம் நான் கலைக்கல்லூரிகளுக்கும் விண்ணப்பித்து கொண்டிருந்தேன். இரண்டு கல்லூரிகள்: அமெரிக்காவில் RISD, இத்தாலி ஃப்ளாரென்ஸ் நகரின் அகடெமியா டி பெல்லி ஆர்டி. இத்தாலி கல்லூரிதான் கலைக்கல்லூரியில் மிக பழமையானது, அதனால் அது சிறப்பானதாக இருக்கும் என்று நினைத்தேன். RISD என்னை ஏற்று கொண்டது. அகடெமியாவில் இருந்து எந்த தகவலும் இல்லை. அமெரிக்காவின் பிராவிடண்ஸ் மாகாணத்திலிருந்த RISDக்கு சென்றேன்.

    RISD இன் இளங்கலை (BFA) படிப்பில் சேர்ந்திருந்தேன். இருபத்தி ஐந்தாவது வயதில் மீண்டும் கல்லூரிக்கு சென்றது அப்படியொன்றும் வித்யாசமாக இல்லை. ஏனென்றால் கலைக்கல்லூரியில் எல்லா வயதிலும் மாணவர்கள் இருந்தார்கள்.  RISD என்னை வேறு கல்லூரியில் இருந்து மாற்றலாகி வந்த இரண்டாம் ஆண்டு மாணவனாக கருதியது. வரைதல், நிறங்கள் மற்றும் வடிவமைப்பு போன்ற அடிப்படை வகுப்புகளை நான் கோடை விடுமுறை வகுப்பில் கற்றுத்தேர வேண்டும். 

    கோடை வகுப்பின் முடிவில் எனக்கு பெரிய ஆச்சிரியம் காத்திருந்தது: இத்தாலியின் அகடெமியாவிலிருந்து வந்த ஒரு கடிதம். கடிதத்தின் தாமதத்திற்கான காரணம் – அமெரிக்காவின் மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜிற்கு பதில் அவர்கள் கடிதத்தை இங்கிலாந்திலிருந்த கேம்பிரிட்ஜிற்கு அனுப்பிவிட்டார்கள். அந்த கடிதத்தில் என்னை ஃப்ளாரென்ஸ் நகரில் நடைபெறும் நுழைவுத்தேர்விற்கு அழைத்திருந்தார்கள். அதற்கு இன்னும் சில வாரங்களே இருந்தன. என் வீட்டு உரிமையாளர் அவருடைய வீட்டில் என்னுடைய பொருட்களை விட்டுச் செல்ல சம்மதித்தார். முதுநிலை பயிலும் காலத்தில் நான் செய்த சில ஒப்பந்தப் பணிகளால் என்னிடம் கொஞ்சம் பணம் இருந்தது. சிக்கனமாக இருந்தால் ஒரு வருடம் தாங்கும். நான் இத்தாலிய மொழியைக் கற்று கொள்ள வேண்டும்.

    வெளிநாட்டினருக்கு மட்டுமே நுழைவு தேர்வு. வெளிநாட்டினரை தவிர்ப்பதற்கான ஒரு வழி என்று தோன்றியது. ஏனென்றால் இத்தாலி ஃப்ளாரென்ஸில் கலையைப்பற்றி படிக்க ஏகப்பட்ட வெளிநாட்டினர் குவிந்தால் உள்ளூர் இத்தாலியர்களுக்கு இடமில்லாமல் போய்விடும். RISDஇல் சில மாதங்களில் நான் கற்ற ஓவிய அடிப்படை கல்வி எனக்கு  உதவியது. இருந்தும் அந்த நுழைவுத்தேர்வில் எப்படி தேர்வானேன் என்பது எனக்கும் ஆச்சிரியம்தான். சிஸேன் பற்றிய கட்டுரை எழுதினேன் என்று நினைவில் உள்ளது. என்னுடைய குறைவான இத்தாலிய சொற்களைக்கொண்டு, முடிந்தவரை என் அறிவை அதிகபட்சமாக பயன்படுத்தி அந்த கட்டுரையை எழுதியிருந்தேன்.

    எனக்கு 25 வயதுதான் ஆகியிருந்தது. ஆனால் அதற்குள்ளேயே சில விஷயங்கள் மீள நிகழ்ந்தன. இதோ மீண்டும் ஒரு பெருமைமிக்க கல்வி நிறுவனத்தில் ஒரு மதிப்புமிக்க ஒரு பாடத்தை கற்கப்போகிறேன், ஆனால் ஏமாற்றமடையப்போகிறேன். அகடெமியாவின் ஓவியத்துறையில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் நான் சந்தித்தவர்களில் அருமையானவர்களாக இருந்தாலும், அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே  ஓர் ஒப்பந்தத்திற்கு வந்துவிட்டார்கள். அதாவது மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து ஏதுவும் கற்று கொள்வது இல்லை. ஆசிரியர்களும் மாணவர்களுக்கு எதுவும் கற்று கொடுப்பதும் இல்லை. வெளிப்பார்வைக்கு அனைவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கலைக்கூடத்தின் முறைமைகளை கடைபிடித்தார்கள். அங்கே உண்மையிலே பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஓவிய அறையில் இருக்கும் சிறிய அடுப்புகள் இருந்தன. ஒரு நிர்வாண மாடல் சூடுபட்டு கொள்ளாமல் கவனமாக அதன் அருகில் அமர்ந்திருப்பாள். என்னை தவிர வேறு யாரும் அவளை வரையவில்லை. மற்ற மாணவர்கள் எல்லாம் தங்களுக்குள் அரட்டை அடித்துக்கொண்டும், எப்பொழுதாவது அமெரிக்க கலை இதழ்களில் பார்த்தவற்றை நகலெடுத்து கொண்டும் இருந்தார்கள்.

    அந்த மாடல் எனக்கு அடுத்த தெருவில் தான் வசித்தாள். மாடலிங் மற்றும் அங்கிருந்த ஒரு பழைய கலைவிற்பனருக்கு ஓவியங்களை நகல் செய்து கொடுத்தும் சம்பாதித்தாள். பிரபலமில்லாத ஓவியத்தை ஏதோ ஒரு பழைய புத்தகத்திலிருந்து நகலெடுத்து விற்பனரிடம் தருவாள். அவன் அதை மீண்டும் நகலெடுத்து, சிறிது சிதைத்து பழையது போல மாற்றி விற்பான்.

    நான் அக்கடெமியாவில் மாணவனாக இருந்தபோது, இரவில் என் அறையில் ஸ்டில் லைஃப் ஓவியங்களை வரைய துவங்கினேன். அந்த ஓவியங்கள் மிகச் சிறியவை. ஏனென்றால் என் அறையும் மிகச் சிறியது. மிச்சம் மீதியாக கிடைத்த கான்வாஸில் தான் வரையமுடியும். எனக்கு அதுதான் கட்டுபடியானது. மனிதர்களை வரைவதை விட பொருட்களை வரைவது வேறு. மனிதர்களால் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் அசையாமல் அமர்ந்திருக்க முடியாது. பொது வடிவத்தை வரைந்து, அதன் பின் நீங்கள் வரைபவருக்கு ஏற்ப உங்கள் ஓவியத்தை மாற்றிக்கொள்வதுதான் பொதுவான முறை. இந்த சிக்கல் இல்லாமல், நிலைபொருட்களை துளித்துளியாக அப்படியே வரைந்து கொள்ளலாம். அதோடு நிறுத்திக்கொண்டால் ஒரு புகைப்பட துல்லியத்தை வரைந்திருப்பீர்கள். ஆனால் நிலை பொருள் ஓவியம் எதனால் சுவாரஸ்யமானது என்றால், அது உங்கள் தலை வழியாக கடந்து சென்றிருக்கிறது. காட்சி நுணுக்கங்களை நீங்கள் உயர்த்திக்காட்ட முயல்வீர்கள் – உதாரணமாக ஒரு இடத்தில் நிறம் சட்டென்று மாறுகிறது என்றால், அது அந்த பொருளின் விளிம்பு என்று பொருள். இப்படி சில நுணுக்கங்களின் மூலம் ஓவியத்தை புகைப்படத்தைவிட மேலும் ரியலிஸ்டிக்காக ஆக்க முடியும். இதை உருவகமாகச் சொல்லவில்லை, தகவல் கோட்பாட்டின் அடிப்படையில் சொல்கிறேன். 

    எனக்கு நிலைபொருட்களை வரைவது பிடித்திருந்தது. நான் எதைக் காண்கிறேன் என்று தெரிந்து கொள்வதற்காக. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் எதை பார்க்கிறோம் என்று நினைவில் வைத்து கொள்வதில்லை. முக்கால்வாசி காட்சி உணர்வுகள் மூளைக்கு வெறும் தகவலாக அனுப்பப்படும் – உதாரணத்திற்கு “அது ஒரு நீர்த்துளி” என்ற தகவலாக போய் சேரும். எங்கே ஒளி அதிகமாக உள்ளது, எங்கே இருளாக உள்ளது என்ற விரிவான தகவல்களை அனுப்பாது. “அது ஒரு புதர்” என்ற செய்தி அதன் ஒவ்வொரு இலையின் வடிவத்தையோ அல்லது இடத்தையோ அனுப்பாது. இது நம் மூளை செயல்படும் விதம். இது ஒரு கோளாறல்ல. ஆனால் நீங்கள் ஒன்றை ஓவியமாக வரையவேண்டும் என்றால், நீங்கள் மேலும் உற்று நோக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் கவனித்தீர்களென்றால், அதில் நிறைய விஷயங்கள் உள்ளன. அனைவருக்கும் பொதுவாக தெரிந்தவற்றிலே பல நாட்கள் வரைந்தபின்பும் நீங்கள் புதியவற்றை கவனிப்பீர்கள். எல்லோருக்கும் தெரிந்தவற்றையே கட்டுரையாக பல நாட்கள் எழுதும்பொது புதியவற்றை கவனிப்பதைப்போல. 

    இது மட்டுமே ஓவியம் வரைவதற்கான வழி இல்லை. ஓவியம் வரைவதற்கு இது சரியான முறையா  என எனக்கு நூறு சதவீதம் தெரியவில்லை. ஆனால் முயற்சி செய்யும் அளவிற்கு நன்றாக இருந்தது. 

    என்னுடைய பேராசிரியர் உலிவி நல்ல மனிதர். நான் கடினமாக உழைக்கிறேன் என்பது அவருக்கு தெரிந்தது. எல்லா மாணவர்களிடமும் இருந்த ஒரு பாஸ்போர்ட் அளவுள்ள குறிப்பேட்டில் எனக்கு நல்ல மதிப்பெண்களை எழுதித்தந்தார். ஆனால் அகெடெமியா எனக்கு இத்தாலி மொழியைத்தவிர வேறொன்றையும் கற்றுக் கொடுக்கவில்லை. பணமும் காலியாகிக்கொண்டிருந்தது. அதனால் முதல்வருட முடிவில் நான் அமெரிக்காவிற்கு திரும்பி வந்துவிட்டேன்.

    நான் RISD கல்லூரிக்கு திரும்பிப்போக முயன்றேன். ஆனால் என்னிடம் பணம் இல்லை. RISDயின் கல்வி கட்டணம் மிக அதிகம். அதனால் ஒரு வருடம் வேலைக்குச்சென்ற பின், அடுத்த ஆண்டு மீண்டும் RISDக்கு செல்லலாம் என திட்டமிட்டேன். இண்டெர்லீஃப் என்ற மென்பொருள் நிறுவனத்தில் ஒரு வேலை கிடைத்தது. மைக்ரோஸாப்ட் வேர்ட் போல கோப்புகள் (documents) உருவாக்கக்கூடிய மென்பொருள் நிறுவனம்.  விலை குறைந்த மென்பொருள் எப்படி  விலை உயர்ந்த மென்பொருளை விழுங்குகிறது என்பதை நான் அங்கேதான் அறிந்து கொண்டேன். அப்போதைக்கு இண்டெர்லீஃப் மேலும் சில வருடங்கள் உயிருடன் இருந்தது.[5]  

    இண்டெர்லீஃப் நிறுவனத்திற்கு ஒரு லிஸ்ப் கொந்தர் தேவைப்பட்டார். பொதுவாக ‘வேலை’ என எல்லோரும் சொல்வதற்கு அருகில் வந்த ஒன்றை நான் செய்தது அப்போழுதுதான். அங்கு ஒரு மோசமான ஊழியராக இருந்ததிற்கு என் மேலாளரிடமும், சக ஊழியர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பெரிய கேக்கில் தடவப்பட்ட சிறிய கிரீமைப்போல, மென்பொருள் முழுவதும் C மொழியில் எழுதப்பட்டு, Lisp மொழி மிகக்குறைவாக பயன்படுத்தப்பட்டிருந்தது. C மொழி எனக்கு தெரியாததாலும், கற்க விரும்பாததாலும் அந்த மென்பொருள் என்னவென்றே எனக்கு புரியவில்லை. மேலும் மிக ஊதாரியாக இருந்தேன். அன்று மென்பொருள் வேலை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வர வேண்டும் என்று இருந்தது. எனக்கு அது மிக செயற்கையாக இருந்தது. நான் யோசித்ததை போலவே மென்பொருள் உலகம் யோசித்து வருவதற்கு கொஞ்ச காலம் ஆனாலும், அன்று நிறைய சிக்கல்களை ஏற்படுத்தியது. ஒரு வருட முடிவில் நான் பெரும்பாலும் ‘ஆன் லிஸ்ப்’ புத்தகத்தில் வெளியே சொல்லாமல் எழுதிக் கொண்டிருந்தேன். அந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்க ஒரு ஒப்பந்தமும் கிடைத்தது. 

    இதில் நல்ல விஷயம் எனக்கு நிறைய பணம் தந்தார்கள்.  ஓர் ஓவியத்துறை மாணவனின் கணக்கில் அது பெரிய தொகை. இத்தாலியின் ஃப்ளாரென்ஸில் வாடகை போக, ஒரு நாளிற்கான என் பட்ஜெட் ஏழு டாலர். இப்பொழுது சும்மா மீட்டிங்கில் உட்கார்ந்திருந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு அதைவிட நான்கு மடங்கு சம்பளம் தந்தார்கள். சிக்கனமாக இருந்ததால் RISDக்கு திரும்பிச்செல்ல மட்டுமல்ல, என்னுடைய கல்விக் கடன்களையும் அடைக்க முடிந்தது.  

    இண்டெர்லீஃப் நிறுவனத்தில் என்ன செய்யக்கூடாது என்று கற்றுக்கொண்டேன். ஒரு தொழில்நுட்ப நிறுவனம் விற்பனையாளர்களைவிட (sales), மென்பொருளை உருவாக்குபவர்களால் (product) நடத்தப்பட வேண்டும்; நிறைய பேர் மென்பொருளில் கை வைத்தார்கள் என்றால், அதில் நிறைய பிழைகள் உருவாகும்; வாடகை குறைவான அலுவலகக் கட்டிடம் மனச்சோர்வை உருவாக்கும்; திட்டமிட்ட மீட்டிங்குகளைவிட அறைகளுக்கு வெளியே நடக்கும் உரையாடல்கள் பயனுள்ளவை; பெரிய சிவப்பு நாடா கஸ்டமர்களிடமிருந்து வரும் பணம் அபாயகரமானது.  

    ஆனால் நான் கற்றவற்றில் மிக முக்கியமானது – வியாவெப்பிலும் Y Combinator லும் பயன்படுத்தியது – கடைநிலை மேல்நிலையை உண்டுவிடும் என்பது: நீங்கள் விற்கும் பொருள் எளிமையான, விலை குறைவானதாக இருப்பது பெருமையாக இல்லையென்றாலும் நல்லது. இல்லையென்றால், வேறொருவர் வந்து உங்களை சுவரோடு சேர்த்து சாத்தி விடுவார்கள். பெருமை என்பது அபாயகரமானது.

    1992 இன் பின்பகுதியில் நான் மீண்டும் பிராவிடன்ஸ் மாநிலத்தின் RISD கல்லூரிக்கு திரும்பி சென்றேன். ஏற்கனவே கற்று கொண்ட ஓவிய அடிப்படைகள் மிகவும் ஆரம்ப நிலை பாடங்களாகவும், இத்தாலியின் அகடெமியா ஓவியகல்லூரி சுத்த டுபாக்கூராகவும் இருந்தது. இப்போது உண்மையான கலைக்கல்லூரி எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளப்போகிறேன். ஆனால் RISDயும் அகெடெமியாவை போன்றே இருந்தது. கண்டிப்பாக அதிக செலவு பிடித்தது. மருத்துவத்திற்கும் மருத்துவ கல்லூரிக்கும் உள்ள தொடர்பு கலை கல்லூரிக்கும் கலைக்கும் கண்டிப்பாக இல்லை என்று தெளிவாக தெரிந்தது. குறைந்தபட்சம் ஓவியதுறைக்கும் ஓவியத்திற்கும் சம்பந்தமில்லை.  என் பக்கத்து அறை நண்பர் படித்த நெசவுத்துறை மிகக்கடினமாக இருந்தது. கட்டிடத்துறையும் அவ்வாறே. ஆனால் ஓவியம் அதைத்தாண்டியதாக இருந்தது. ஓவியக்கல்லூரி மாணவர்கள் தங்களை  வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதனாலோ என்னவோ, தங்களுக்கான “சிக்னேச்சர் ஸ்டைல்” எனும் தனித்த ஒரு அடையாளத்தை போலியாக உருவாக்க முயற்சி செய்து கொண்டே இருந்தார்கள்.

    “சிக்னேச்சர் ஸ்டைல்” என்பது ஒரு ஓவியத்தை பார்த்தவுடன் இந்த ஓவியருடையது என்று அடையாளம் காட்டக்கூடியது. இலக்கியத்தில் தனித்த நடை என்பதைப்போல. ஒரு கார்ட்டூன் போல இருக்கும் ஒரு ஓவியத்தை பார்த்த உடன் அது ராய் லிச்டன்ஸ்டீன் என்று தெரியும். ஒரு பங்குச்சந்தை தரகரின் அலுவலக சுவரில் அதை போன்ற பெரிய ஓவியம் ஒன்று மாட்டப்பட்டிருந்தால், அதற்காக அவர் பல மில்லியன் டாலர்களை செலவழித்திருப்பார் என்று உங்களுக்கு தெரியும். ஓவியர்கள் பணத்திற்காக ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள மாட்டார்கள் என்றாலும், வாங்குபவர்கள் தனித்த அடையாளத்திற்குத்தான் பெரும் பணம் செலவிடுவார்கள். 

    உண்மையிலே சின்சியரான நிறைய மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் பள்ளியிலே மிகச்சிறப்பாக வரைந்தவர்கள். இன்னும் சிறப்பாக வரைவதற்காக நாட்டிலேயே உள்ள சிறந்த ஓவியக்கல்லூரிக்கு வந்தவர்கள். ஆனால் RISD அவர்களை குழப்பியும், அவர்களின் தன்னம்பிக்கையை இழக்கவும் வைத்தது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து வரைந்தார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஓவியத்தை தவிர வேறொன்றும் தெரியாது. பள்ளியில் நான் வரைந்ததில்லை என்றாலும், அவர்களோடுதான் நான் இருந்தேன். தனித்த அடையாளத்தை தேடிய கூட்டத்தோடு இல்லை.

    RISD இல் நிறங்கள் வகுப்பில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் மற்றபடி நானேதான் ஓவியம் கற்றுக்கொண்டிருந்தேன். அதற்கு எதற்கு கல்லூரிக்கு காசு கொடுக்க வேண்டும்? அதனால் 1993 இல் கல்லூரியில் இருந்து விலகி விட்டேன். பிராவிடன்ஸ் மாநிலத்தில் சிறிது நாள் சுற்றி கொண்டிருந்த போது, என் கல்லூரி நண்பர் நான்சி பார்மட் எனக்கு ஒரு பெரிய உதவி செய்தாள். அவளின் அம்மாவுடைய வீடு ஒன்று நியூயார்க்கில் காலியாகிறது. அந்த வீடு உனக்கு வேண்டுமா ? என்றாள். வாடகை-சட்டத்திற்கு உட்பட்ட அந்த வீட்டின் வாடகையை அரசாங்கம் நிர்ணயிக்கும். என்னுடைய அப்போதைய வீட்டு வாடகையை விட அது அதிகமில்லை. மேலும் கலைஞர்கள் எல்லாம் நியூயார்க்கில் தான் இருந்தார்கள். அதனால் அந்த வீடு எனக்கு தேவைப்பட்டது.

    ஆஸ்டிரிக்ஸ் காமிக்ஸ் ரோமன் கவுல் (Roman Gaul) ஒரு மூலையிலிருந்து துவங்கும். அது ரோமன்களின் ஆளுகைக்குக் கீழ் இருக்காது. அதுபோல நியூயார்க் நகரின் வட கிழக்குப் பகுதியின் ஒரு சிறிய மூலை பணக்காரர்களுடையது அல்ல. 1993இல் அது பணக்கார ஏரியா இல்லை. யார்க்வில் என்ற அந்த ஏரியாவில் தான் என் வீடு இருந்தது. இப்போது நான் ஒரு நியூயார்க்க நகர ஓவிய கலைஞனாகி விட்டேன்.

    எனக்கு பணத்தைப் பற்றிய பதற்றம் உண்டாக துவங்கியது. இன்டெர்லீஃப் ஊத்தி மூடிக்கொண்டிருந்தது. லிஸ்ப் நிரல்மொழியில் ஒப்பந்த பணிகள் குறைந்து கொண்டிருந்தது. எனக்கு வேறு நிரல்மொழிகளை பயன்படுத்தப் பிடிக்கவில்லை. அதனால் தெளிவான பணத்தேவைக்காக இன்னொரு லிஸ்ப் புத்தகம் எழுத முடிவு செய்தேன். இது ஒரு பாப்புலரான புத்தகமாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். பாடப்புத்தகமாக வைக்க கூடியதாக இருக்க வேண்டும். கிடைக்கும் ராயல்டியில் சிக்கனமாக வாழ்ந்து, மிச்ச நேரத்தையெல்லாம் ஓவியத்தில் செலவிடலாம் என கற்பனையில் மிதந்தேன். “ANSI காமன் லிஸ்ப்” புத்தகத்தின் அட்டைப்பட ஓவியம் அப்போது நான் வரைந்தது. 

    நியூயார்க் நகரில் ஐடில் மற்றும் ஜூலியன் வெப்பருடன் செலவிட்ட நேரம் நிறைவானது. ஐடில் வெப்பர் ஒரு ஓவியர். பெண். ஃபோட்டோ ரியலிச வகைமையில் வரையக்கூடியர். ஹார்வெர்ட் பல்கலையில் அவருடைய வகுப்புகளில் நான் அமர்ந்துள்ளேன். நிறைய முன்னாள் மாணவர்கள் அவருடன் தொடர்பில் இருந்தார்கள். நியூயார்க்கிற்கு வந்த பின்பு அவருடைய உதவியாளராக ஆனேன். 

    நான்கடி அல்லது ஐந்தடி சதுர பெரிய கான்வாசில் வரைவது அவருக்கு படிக்கும். 1994 இல், ஒரு பெரிய கான்வாசை பிரித்துக்கொண்டிருந்தபோது, ரேடியோவில் ஒரு புகழ்பெற்ற பங்குச்சந்தை தரகரைப்பற்றி ஏதோ சொல்லி கொண்டிருந்தார்கள். அவருக்கு என்னுடைய வயதிருக்கலாம். ஆனால் பெரிய பணக்காரர். திடீரென்று எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. நான் ஏன் பணக்காரனாக ஆகக்கூடாது ? பணக்காரனாகி விட்டால் அப்புறம் நான் எனக்கு பிடித்த எதில் வேண்டுமானாலும் ஈடுபடலாமே.

    [கட்டுரையின் அடுத்த இரண்டு பகுதிகள் அடுத்த இரண்டு நாட்களில் வெளிவரும்.]

  • நேர்முகம் 4: மலர்விழி மணியம்

    நேர்முகம் 4: மலர்விழி மணியம்

    மலர்விழி மணியம் வல்லினம், சொல்வனம், விகடன் இதழ்களில் சிறுகதைகள் எழுதுகிறார். நாங்கள் ஒருங்கிணைக்கும் க.நா.சு உரையாடல் அரங்கில் மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் சிகண்டி நாவல் குறித்து ஒரு நல்ல உரை ஆற்றினார். அதற்கு அடுத்த மாதம் தத்துவ முகாம், பூன் (அக்டோபர், 2025) இல் மலர்விழியை சந்தித்தேன். அவருடன் ஒரு நேர்முகம்.

    உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், பின்புலம் பற்றி ?

    நான் பிறந்த ஊர் திருப்பூர். பள்ளிப் படிப்பும் கல்லூரிப் படிப்பும் கோயமுத்தூரில் படித்து முடித்தேன். என் குடும்பத்தோடு தற்போது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வசித்து வருகிறேன். என் கணவர் பெயர் லேண்ஸிலின் சந்தோஷ். மகள் பெயர் எடினா மேக்டலீன், மகன் பெயர் எட்வின் மார்கஸ்.

    இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ?

    திருமணத்திற்கு முன்பு வரை இலக்கிய வாசிப்பு அறிமுகமோ அனுபவமோ எனக்கு இருந்ததில்லை. பள்ளிப் படிப்பிலும், ட்யூசனிலும் மூழ்கிய தலைமுறையில் நானும் ஒருத்தி. திருமணத்திற்குப் பிறகு நான் எடுத்த முதல் இலக்கியம் பைபிள். புதிய ஏற்பாடு நல்ல பரிட்சயமானது. அமெரிக்கா வந்த பிறகு என்னை வியப்பில் ஆழ்த்தியது இங்கு உள்ள நூலகங்கள். பைபிள் அறிந்தமையால் டால்ஸ்டாயின் படைப்புகளையும், தஸ்தவஸ்கியின் படைப்புகளையும் புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. பிறகு மிஷிகனில் இயங்கி வரும் புத்தகவாசிப்புக் குழுவில் இணைந்த பொழுது நண்பர்கள் உதவியோடு தமிழ் இலக்கிய உலகம் அறிமுகம் ஆனது. தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். 

    உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள் யார் ?

    2022 ல் பாதியில் துவங்கி தான் தமிழ் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தேன். மிஷிகன் தமிழ் ஆர்வலர்கள் குழுவில் இணையும் வரை எனக்கு தமிழ் எழுத்தாளர்களின் பெயர் கூடத் தெரியாது. நண்பர்கள் சங்கர் மற்றும் மதுநிகாவின் உதவியோடு நிறைய தமிழ் எழுத்தாளர்களை அறிந்து கொண்டேன். தமிழில் ஜெயமோகன், இமையம், லா.சா.ரா, எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, அ.முத்துலிங்கம், ம.நவீன், சு.வேணுகோபால், அஜிதன், அம்பை, பாமா, ப.சிவகாமி, நீலி ரம்யா, அமிர்தவள்ளி, ஆர்.சூடாமணி, செந்தில் ஜெகன்நாதன், திருச்செந்தாழை எனத் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டு தான் இருக்கின்றது..  

    பிற மொழி எழுத்தாளர்களில், லியோ டால்ஸ்டாய், தஸ்தவஸ்கி, குர்தலின் ஹைதர், காளிள் கிப்ரான், மிக்கேல் நெய்மி, பார் லாகர்க்விஸ்ட், அதீன் பந்தோபாத்யாய.. 

    பிடித்த சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பற்றி…

    என் வாசிப்பு குறைவானது. ஒரு கதையை வாசித்த பின்பும் கதையும் கதை மாந்தர்களும் வாசகனோடு எது வரை பயணிக்கிறார்கள் என்பதில் தான் அதன் வெற்றி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதில் என்னை பாதித்த கதைகளில் சிலவும் அதனோடு ஒன்றிய கதாப்பாத்திரங்களும் என்று சொன்னால், ஜெயமோகன் அவர்களின் ‘அறம்’ மற்றும் அதில் அறம் ஏந்தி நிற்கும் மனிதர்கள் ஒரு பெரிய திறப்பாக அமைந்தார்கள் எனக்கு. அதில் துவங்கி அவருடைய இரவு, காடு, கடல், கன்னியாகுமரி நாவல்கள் என்னை மிகவும் பாதித்தவை. காடு நாவலில் வலம் வரும் குட்டப்பனும் குருசும் சினேகம்மையும் ரெஜினாவும் என் நெஞ்சை விட்டு நீங்கா மனிதர்கள். 

    இமையம் அவர்களுடைய செல்லாத பணம் படித்துவிட்டு இரண்டு நாட்கள் தூக்கத்தை தொலைத்தேன்.  சு.வேணுகோபால் அவர்களது சிறுகதைகளைப் படித்துவிட்டு அதிர்ந்த தருணங்கள் எல்லாம் உண்டு. இருள் போர்த்தி வைத்திருக்கும் உணர்வுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் அவரது எழுத்துக்களைக் கண்டு பிரமித்திருக்கிறேன். திருநங்கையைப் பற்றி அவர் எழுதிய பால்கனிகள் என்னை மிகவும் பாதித்தது.

    ம.நவீனின் சிறுகதைகள் ஆழம் மிக்கவையாகத் தோன்றும் எனக்கு. அவருடைய சிகண்டி நாவல் எனக்கு வாசிக்க பெரும் சவாலாக இருந்தது. கதாநாயகன் தீபனின் இருளை அவனோடு கடக்க மிகவும் சிரமப்பட்டேன். தீபனின் இருளின் ஆழம் கடக்க தீபனாக உருமாறி என் ஆழம் கடக்க வேண்டி இருந்தது. குறைந்தது ஐந்து முறை படிக்க வேண்டி இருந்தது.  மீண்டு வர பல நாட்கள் எடுத்தது. இன்னும் அதன் தாக்கம் நீங்கவில்லை. என் ஆழம் கடக்கும் தைரியம் பிறந்தது சிகண்டி வாசித்த பிறகு தான். அன்றாடத்தில் தீபனும், சராவும், நிஷாம்மாவும், ஈபுவும் என்னோடு கலந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. 

    ரம்யாவின் நீலத்தாவணியும், நான் உன்னைக் கைவிடுவதில்லை சிறுகதையும்  என் மனதிற்கும் வாழ்விற்கும் மிக நெருக்கமானவை. அமிர்தவள்ளியின் ‘செங்கேணி’  எனும் நாவலும் , ‘கால் நனைத்த பொழுதுகள்’ எனும் நாவலும் பாண்டிச்சேரியின் கடலோர குப்பத்து மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் நேர்மையான நாவல்கள் என்று கருதுகிறேன். செந்தில் ஜெகன்நாதனின் மழைக்கண்ணும், அனாகத நாதமும், காகளமும் அவரது படைப்புகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தவை.

    டால்ஸ்டாயின் அன்னா கரினாவும், கிட்டியும் என்னுள் முட்டிக் கொள்ளும் இரு வேறு பிம்பங்கள். டால்ஸ்டாயின் ஃபாதர் சர்ஜியஸ் ஒரு பெரும் திறப்பு. தாஸ்தவஸ்கியின் மிஷ்கினை நான் என்றும் மனதோடு நெருக்கமாக வைத்திருக்கிறேன்.  காளிள் கிப்ரானின் “தி ப்ராஃபெட்” மற்றும் மிக்கேள் நெய்மியின் “தி புக் ஆஃப் மிர்தாத்” உம் என்னைப் பொருத்த மட்டில் பைபிளுக்கு நிகரான ஒன்று.

    முதல் சிறுகதை எப்போது வெளியானது ? 

    முதல் சிறுகதை என்னுள் பிறந்தது இந்துக் கோயிலில் ஆசிஃபா பாலியல் வன்கொடுமைக்கு இறையான பொழுது. அது ஒரு குறுங்கதை என்று சொல்லலாம். விசும்பைச் சுற்றும் பல்லாயிரம் விண்கற்களில் சில பூமியில் விழுவது போல அவளது மரணம் என்னைத் தாக்கியது. ஒலியால் விவரிக்க முடியாத வலியை எழுதிக் கடக்க அன்று பேனாவை எடுத்தேன். அதில் வடிவம் இருந்ததா, மொழி வளம் இருந்ததா, என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்குள் ஒரு விடுதலை உணர்வு வந்தது. எனது எழுத்துப் பயணத்தின் முதல் மைல் கல் ஆசிஃபா தான். இன்றும் இக்கணமும் இதை எழுதும் பொழுதும் என்னை அழ வைக்கும் கனமான மைல்கல் அவள். 

    ‘வாழ்க்கைப் பாதையில் ஒவ்வொரு வளைவிலும் உனக்கான மனிதர்கள் கை கொடுக்க நிற்பார்கள்’ என்று “தி புக் ஆஃப் மிர்தாத்” ல் ஒரு வரி வரும். என் எழுத்துப் பயணத்தை வழிநடத்திச் செல்லும் நண்பர்களை நான் அவ்வாறே கருதுகிறேன்.

    வடிவம் சார்ந்த பயிற்சி மிஷிகன் வாசிப்புக் குழுவில் சேர்ந்த பின்னர் தான் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு தொடர் வாசிப்பு எண்ணற்ற சொற்களை என்னுள் விதைத்ததை எழுதும் பொழுது உணர முடிந்தது. ஒரு எழுத்தாளருக்கு விமர்சனம் மிக முக்கியமானது, அவ்வகையில் நண்பர் ஓவியர் சங்கர் மற்றும் மதுநிகாவின் கராரான விமர்சனங்கள் என் எழுத்தை வடிவமைக்க உதவியாக இருந்தன, இருக்கின்றன. அதற்குப் பின் வந்த சிறுகதைகள் மட்டும் கணக்கில் கொண்டால் ஜனவரி 2023 ல் விகடன் மின்னிதழில் வெளிவந்த “வள்ளியம்மையும் ஆட்டுக்குட்டிகளும்” என்பதே எனது முதல் சிறுகதை. பிறகு சொல்வனம் மின்னிதழில் எழுத ஆரம்பித்தேன். சொல்வனம் பாலாவின் உதவியோடு அடுத்த படிக்கு முன்னேறினேன். சொல்வனத்தில் என் கதைகளைப் படித்து விட்டு அண்ணன் ஆஸ்டின் சௌந்தர் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் என்னை சேர்த்துக் கொண்டார்கள். அவரது வழிகாட்டலில் வல்லினம் மின்னிதழுக்கு ஒரு சிறுகதை அனுப்பினேன். அன்று துவங்கியது என் எழுத்தை மேலும் செம்மை ஆக்கும் பயணம். ஒரு ஆசானின் வழிகாட்டல் எவ்வளவு முக்கியம் என்பது ம.நவீனை சந்தித்த பிறகு தான் உணர்ந்தேன். நான் எழுதும் பொழுது என் கதையில் நான் வைக்கும் ஒரு புள்ளி கூட எனக்கு முக்கியமாகப் படுகிறது. கத்திரியை எடுத்துக் கொண்டு ம.நவீன் அவர்கள் என் கதையில் வேண்டாததை சுட்டிக் காட்டி நறுக்கித் தள்ளிவிடுவார். நான் ஆசானாகக் கருதும் ம.நவீனின் வழிகாட்டலில் என் எழுத்துப் பயணத்தில் அடுத்த படிநிலையில் இருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன். ரயில் தண்டவாளம் போல வாசிப்பும் எழுதும் பணியும் ஒன்றாக நிகழ வேண்டும். தோழி பிரேம்மாயா அவர்கள் வாசித்தப் புத்தகக் கிடங்கில் இருந்து என்னால் வாசிக்க முடியும் என்று தோன்றும் நிறைய புத்தகங்களை  எனக்கு அறிமுகம் செய்கிறார். கட்டுரைகள் வாசிப்பின் முக்கியத்துவத்தை நண்பர் சின்னய்யாவின் வழிகாட்டலில் அறிந்து கொண்டேன். 

    கிறித்தவ இறையியல் உங்கள் கதைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசுபொருளாக உள்ளது. அது குறித்து ?

    பைபிள் வாசிக்கத் துவங்கும் பொழுது நிறைய முரண்களும் என்னுள் எழுந்தன. என் ஆழம் கடந்து என்னை சோதித்துக் கொள்ள மிகவும் சிரமப் பட்டேன். உலகியலோடு பொருத்திக் கொண்டு செயல்படுத்த நேர்ந்த சிக்கல்கள் தான் என்னை கிறிஸ்துவப் பின்புலத்தோடு எழுத உந்துகிறது. என்னுள் நான் இரண்டாகப் பிரிந்து சண்டை இட்டது தான் கதையாகப் பிறக்கிறது என்று தோன்றுகிறது. 

    பைபிளின் வசனங்களின் கருப்பொருள் மாறாமல் கதைப் பின்னல் இருக்க வேண்டும் என்பது ஒரு சவால். அதேசமயம் பிரச்சாரக் கதையாக இல்லாமல் எழுதுவது அடுத்த பெரும் சவால்.  

    “எதற்காக எழுதுகிறேன்?” என்றால் உங்கள் பதில் என்ன ?

    என்னை மீட்டெக்கும் பொருட்டு பேனாவைக் கையில் எடுத்தேன். முதலில் எனக்காகவே எழுதுகிறேன் என்பது தான் என் பதில். நான் எழுதும் கதைகள் எல்லாருக்குமான கதைகள் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. எழுதி பிரசுரம் ஆன பின் என் கதைகள் அதற்கான வாசகர்களைக் கண்டடைந்து கொள்கிறது. அல்லது என் கதைகளுக்கான வாசகர்கள் வந்து சேர்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம். 

    உங்களுடைய எழுதும் முறை என்ன ? (இடம், நேரம், ஒரே அமர்வில் எழுதிவிடுவீர்களா? )

    கதைக்கான கரு என்னுள் உதித்து விட்டால் எழுதத் துவங்கிவிடுவேன். இடம், நேரம் பொருத்தெல்லாம் அது என்னுள் நிகழ்வதல்ல. சில கதைகளை ஒரே அமர்வில் எழுதியிருக்கிறேன். துவங்கும் பொழுது முடிவை நோக்கி அதுவே என்னை இழுத்துச் செல்லும் மாயங்கள் அதில் நிகழும். சில கதைகளை நான்கு அல்லது ஐந்து முறை எழுதிப் பார்க்கின்றேன். நடு இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்து எழுதவும் செய்கிறேன். இடமும் நேரமும் என் எழுத்தை நிர்ணயிப்பதில்லை. 

    உங்களுடைய படைப்புகளில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உண்டா ? 

    பேனாவை எடுத்துத் தாளில் எழுதும் பொழுது தான் எனக்கு எழுத வரும். என் எண்ண ஓட்டங்கள் அப்பொழுது தான் பெருகும். ஏதேனும் தவறாக எழுதிவிட்டாலோ, திருத்த முணைந்தாலோ மீண்டும் முதலில் இருந்து எழுதுவேன். பிறகு தான் கணிணியில் டாக்குமெண்டாக பதிவேற்றுவேன். எழுதுவதற்கே வர்ட் டாக்குமெண்டை உபயோகிக்காத நான் ஏ.ஐ எல்லாம் பயன்படுத்த வாய்ப்பே இல்லை. 

    நாவல் எழுதும் திட்டம் உண்டா ? களம் என்ன ?

    இப்போதைக்கு சிறுகதை வடிவத்திற்குள் எழுதவே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நாவல் எழுதும் எண்ணம் உண்டு. திட்டம் வகுத்து செயல் பட இன்னும் முனையவில்லை. கலைத் தெய்வம் அதற்கு இன்னும் அருள் புரியவில்லை.

  • ஏ.ஐ குறித்து: 

    இலக்கியத்திலும், கலைகளிலும் ஈடுபடும் ஆளுமைகளுடன் வாரம் ஒரு நேர்முகம் என திட்டமிட்டு, மூன்று நேர்முகங்களை இதுவரை வெளியிட்டு இருக்கிறேன். வாசகர் மதுநிகா சுரேஷ், இளம் எழுத்தாளர் விஜய் ரெங்கராஜன் மற்றும் எழுத்தாளர் ஜெகதீஷ் குமார். 

    ஜெகதீஷின் நேர்முகத்தில் ஏ.ஐ பயன்பாடு குறித்த அவருடைய பதில் மொழிபெயர்ப்பாளர்கள் இடையே கண்டனங்களை உருவாக்கியிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதா எனக்கு எழுதிய மறுப்பை என் தளத்தில் பிரசுரித்திருக்கிறேன்.  எழுத்தாளர் சுசித்ரா ஒரு கடும் கண்டனத்தை அவர் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். முகநூலில் மேலும் கடுமையான கண்டனங்கள் பதிவாகி இருக்கின்றன.

    “நான் தெரிவித்த கருத்துக்கள் இப்படி மொழிபெயர்ப்பாளர்கள் மாண்பைக் குலைக்கும் வண்ணம் அமைந்து விட்டதை எண்ணி வருந்துகிறேன். அவர்கள் அனைவரிடமும் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கிறேன்” – என ஜெகதீஷ்  விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் அவர் வேண்டுகோளை ஏற்று நேர்முகத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. மேலதிக விளக்கங்களுக்கு அவரை தொடர்புகொள்ளலாம். 

    ஏ.ஐ குறித்து என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விடுகிறேன். என் தொழில்நுட்ப வேலையில் ஏ.ஐ விரிவாக பயன்படுத்துகிறேன். தகவல் திரட்டுவதற்காக கூகிள் தேடுபொறிக்கு பதில் ஏ.ஐ பயன்படுத்துகிறேன். தமிழ், ஆங்கிலம் தவிர மற்ற மொழி ஆவணங்களை படிப்பதற்கும் ஏ.ஐ பயன்படுத்துகிறேன். உதாரணம்: டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்கள் இணையத்தில் உள்ளன. 

    ஆனால் நான் புனைவு, அபுனை எழுதுவதற்கு ஏ.ஐ பயன்படுத்துவது இல்லை. மொழியாக்கங்களுக்கும் ஏ.ஐ பயன்படுத்துவது இல்லை. நான் இதுவரை மிகக்குறைவாகவே எழுதி இருக்கிறேன். இரண்டு சிறுகதைகள், சில கட்டுரைகள் மற்றும் ஒரு பயன நூல். தொழில்நுட்பத்துறை சார்ந்து ஆங்கிலத்தில் இருந்து இரண்டு கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறேன். இவை எதிலும் கூகிள் டிரான்ஸ்லேட் உட்பட எந்த ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தவில்லை. 

    கடந்த எட்டு மாதங்களாக பெரும்பாலான நாட்களில் தினமும் ஒரு மணி நேரம் எழுதுகிறேன். தயக்கங்களும், தடுமாற்றங்களும் இருந்தாலும், எழுதுவதில் ஒட்டுமொத்தமாக ஒரு இன்பம் இருக்கிறது. அதற்காகத்தான் எழுதுகிறேன். அந்த இன்பத்தை ஏ.ஐ உடன் பகிர்ந்துகொள்வதில் உடன்பாடில்லை. 

    ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி கதைகள், கட்டுரைகள் எழுதப்பட்டால்,  மொழிபெயர்ப்பு செய்யப்பட்டால் எழுத்தாளர்கள் அதை குறிப்பிட வேண்டும். அந்த படைப்புகளை பிரசுரிக்க வேண்டுமா என்பதை பதிப்பகங்களும், படிக்க வேண்டுமா என்பதை வாசகர்களும் முடிவு செய்ய வேண்டும்.  

    ப்ரியம்வதா தன்னுடைய கடிதத்தில் சில சாரமான கேள்விகளை கேட்டிருக்கிறார். அவற்றை குறித்து ஒரு முறையான உரையாடல் வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய பங்களிப்பாக ஏ.ஐ தொழில்நுட்பம், அதன் பரிணாமம், அது எப்படி செயல்படுகிறது என ஒரு தொடர் எழுத இருக்கிறேன். குறைந்தபட்சம் ஏ.ஐ குறித்த புரிதலை விரிவாக்கும் என நினைக்கிறேன்.

  • ஜெகதீஷ் – ஒரு விளக்கம்

    ஜெகதீஷ் – ஒரு விளக்கம்

    அன்புள்ள நண்பர்களுக்கு,

    நண்பர் விசுவின் இணையதளத்துக்கு நான் அண்மையில் அளித்த பேட்டியில் மொழிபெயர்ப்பில் ஏ.ஐ பயன்பாடு குறித்து என் கருத்தைக் குறிப்பிட்டிருந்தேன். அதில் நான் தெரிவித்த கருத்துக்கள் இன்றுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரும் ஏ.ஐ அல்லது கூகுள் டிராண்ஸ்லேட் பயன்படுத்தித்தான் மொழிபெயர்க்கிறார்கள் என்ற புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் என்னுடைய கருத்தை அந்தப் பொருளில் நான் சொல்லவில்லை. எதிர்காலத்தில் ஏ.ஐ பயன்பாடு எவ்வாறு மொழிபெயர்ப்புக்கு உதவக்கூடும் என்று விளக்குவதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. இது மூத்த மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரையும், இன்று மொழிபெயர்ப்பில் முழுமையாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைவரையும் அவமானப்படுத்தும் தொனியில் உள்ளதாகப் பலராலும் கருதப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்களின் பணியை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் துளியும் இல்லை. மாறாக அவர்கள் மீது பெரும் மதிப்பும், பிரேமையுமே கொண்டுள்ளேன். உலக இலக்கியத்தைத் தமிழில் கொண்டு வருவதற்காகவும், தமிழை உலக அரங்குக்கு எடுத்துச் செல்வதிலும் அவர்கள் பங்கை நான் சற்றும் குறைத்து மதிப்பிட மாட்டேன்.

    நான் தெரிவித்த கருத்துக்கள் இப்படி மொழிபெயர்ப்பாளர்கள் மாண்பைக் குலைக்கும் வண்ணம் அமைந்து விட்டதை எண்ணி வருந்துகிறேன். அவர்கள் அனைவரிடமும் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கிறேன். மேலும், நண்பர் விசுவிடம் மொழிபெயர்ப்பு குறித்த அந்தப் பகுதியை நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், நான் பதில் அளித்த இன்னொரு கேள்வியில் வாழும் தமிழ் விழாவுக்கு தொகுத்த இரு சிறுகதைத் தொகுப்புகள் குறித்துப் பேசியுள்ளேன். அந்த பதிலையும், என் ஏ.ஐ குறித்த பதிலையும் இணைத்து அத்தொகுதிகளின் தரம் குறித்த குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அத்தொகுதிகள் எவ்வாறு உருவாயின என்று விரிவாகவே அதில் பதிலளித்துள்ளேன். இருப்பினும், மேலும் குழப்பங்களை உருவாக்காமலிருப்பதற்காக அந்தப் பகுதியையும் நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றி
    ஜெகதீஷ் குமார்.

  • On the usage of AI in translation – a rebuttal – Priyamvada

    On the usage of AI in translation – a rebuttal – Priyamvada

    Dear Visu,

    I have high regard for your dedication to literature and am grateful for the warmth and hospitality you have extended to me whenever I have visited the U.S. However, I must share that I was rather shocked to read your recent interview with writer and translator, Jegadeesh Kumar. I write today to record my objection to certain statements made by Jegadeesh about the practice of translation.

    To your question about the use of A.I. in literary works, Jegadeesh says (and I quote him in my translation): “As far as translation goes, I regard A.I. as a boon. If I say that no translator today sits with a pen and paper in hand and translates line by line from the source text, I think you will agree with me. Today’s translation practice consists of creating a rough draft of each paragraph (of the text) using Google Translate, then using the translator’s felicity with language to edit it. If one understands that A.I is a much superior translation tool to Google Translate, it can be used effectively to produce very many translations. A.I. is a tool. If a person who translates with this tool is an expert in the two languages at play and, in addition, has deep knowledge of the domain they operate in as a translator, he or she can produce brilliant translations. A.I. can provide you with an array of potential translations for any given sentence. The duty of selecting the most precise translation rests with the translator. I think that those with the ability to make such a choice are the ones who will be known as talented translators from here on.”

    Frankly, I was horrified to read this perspective from Jegadeesh, and I felt it is my duty to record my objection to such a regressive view on the art of translation itself.

    First off, I wish to clarify that I do translate line by line from the source text, as do all literary translators I know, regardless of the language pair they handle. It is true of both veterans like Arunava Sinha, Nallathambi, and Kalyan Raman and young translators like Suchitra, Iswarya, and Avineni Bhaskar. In fact, Daisy Rockwell, the international booker winning translator is famous for “slowing down” her practice with a handwritten first draft. So yes, she does, in fact, translate with pen and paper in hand! All this is to say that A.I or Google Translate is not the norm in literary translation, as Jagadeesh claims in the interview. Far from it, these tools are viewed with a good degree of skepticism. Coming from a person who translates leading Tamil writers, and works in various capacities with young translators from the diaspora, it is a highly misleading, even harmful, statement to make. It is one thing to state an opinion, but quite another to speak on behalf of the entire community. The former can be debated, but the latter needs to be categorically dismissed, especially when it is so misinformed.

    Why have literary translators been skeptical about the use of A.I.? A.I. learns from what exists. Whereas a creative writer pushes the boundaries of language; he or she employs language to a singular effect, that is, in a manner that is different from what exists. As far as creative texts go, A.I., it follows, will always encounter unknown territory while translating. Today, this gap is far from bridged. Without a human mind, it is impossible to produce a translation that is alive to the freshness in the original work.

    But, for a moment, let’s extend this argument. What if there comes a time when A.I does achieve what a human translator can today (I personally think great translators will always trump AI, but let’s keep with the argument for argument’s sake). Well, then, maybe AI will replace human translators fully or partially. However, it would be downright unethical for any translator who uses AI, even partially, to claim the work as their own. They must disclose and credit the use of AI. As a reader, I would want to know if AI has been used in translation and be given the opportunity to decide whether I’d even want to invest time in reading such a work. I wonder if Jegadeesh has made such a disclosure in any of his translations.  

    The interesting question for me, though, is not how to deal with the use of AI when AI becomes that good, but where it would leave us as translators and human beings. Elsewhere in the interview, Jegadeesh talks about having begun to translate in order to develop as a creative writer—to improve his language and his understanding of craft. He quotes how Jonathan Franzen and Jeyamohan also translated early on in their writing life. He goes on to say that he doesn’t write for fame or to claim his place in history, or even for the sake of being called a writer. That is great. I wholeheartedly subscribe to the idea of writing or translating as an inherently personal journey. As I said in my panel at the Living Tamil Litfest, for me, translation is not a profession, it is a pursuit. I am by no means unique in this regard. Most of us translate because we are passionate about what we read and we derive joy from rewriting it in another language. Therefore, I’d argue that translation is not in service of a text, it is in service of the self. Jegadeesh says he began to translate in order to learn. Doesn’t the use of AI defeat that very objective? For those of us who are not professional translators in a capitalistic sense, what would we gain from using AI?  What will happen to our creativity? To our idealism? What will our sense of self-worth be? If we can’t trust our own minds to be inventive and allow our hearts a chance to leap with joy when we strike a perfect note, why write at all?

    In his book, The Philosophy of Translation, Damion Searls notes that “Happily, it is now possible to take for granted that translation is not just the poor stepchild of literary production—a mechanical, work-for-hire job in more or less the same category as typesetting—but a rich and fascinating practice that sheds light on many facets of art and the human condition. This has not always been the case, but in the past ten or fifteen years several prominent translators, including Edith Grossman in her 2010 book Why Translation Matters, have published personal records or reminiscences with an advocacy component—translation really is important, creative, vital—that the author proves by example.” Jegadeesh’s description of a translator’s role as a “selecting” agent sitting on top of AI generated content, negates everything that Damion talks about, everything our past masters have worked hard at establishing. It turns back the clock on translation as a creative practice and traps it in a mind numbingly boring routine. 

    – Priyamvada

    https://tamil.wiki/wiki/Priyamvada_Ramkumar