பிரதீப் பாரதி எழுத்தாளர். மருத்துவத்துறை பின்புலம் கொண்டவர். டெக்சஸ் மாகாணம் டாலஸ் நகரில் வசிக்கிறார். டாலஸ் புத்தக வாசிப்பு குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை டாலஸ் நகர நூலகத்தில் சந்திக்கிறார்கள். இதுவரை 35 சந்திப்புகளை நடத்தி இருக்கிறார்கள்.

உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், வேலையைப் பற்றி?
நான் தமிழ்நாட்டில் சிதம்பரம் அருகிலுள்ள சிறகிழந்தநல்லூர் என்ற கிராமத்தில் பத்து வயது வரை வளர்ந்தேன். அதன் பிறகு அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில் என்ற சிறுநகரிலும், பின்னர் சென்னையில் கல்லூரிப் படிப்பையும் முடித்தேன். மேற்படிப்பு படிக்கும் எண்ணத்தில் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தேன். மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது?
முன்பே சொன்னதுபோல, சிறு கிராம வாழ்க்கையில் புத்தகங்கள்தான் முக்கியமான பொழுதுபோக்கு. தொலைக்காட்சி இன்னும் பரவலாகாத காலம் அது. தெருவிலிருந்த அக்காக்கள் நூலகத்திற்குச் செல்லும்போதெல்லாம், அவர்களுக்குத் துணையாக என்னையும் அனுப்பிவைப்பார்கள். என் நினைவில், ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே மாலைமதி போன்ற இதழ்களில் வந்த கதைகளைப் படித்துவிட்டு வீட்டில் திரும்பச் சொல்லியிருக்கிறேன்.
என் கிராமத்திற்கு மிக அருகில்தான் நம்பியாண்டார் நம்பி வாழ்ந்த திருநாரையூர் இருக்கிறது. அவர் பொன்னியின் செல்வன் நாவலில் ஒரு பாத்திரமாக வருகிறார் என்று கேள்விப்பட்டு, ஊரில் இருந்த ஒரு பெரிய மனிதர் வீட்டில் கல்கி இதழ்களிலிருந்து வெட்டி பைண்ட் செய்யப்பட்ட பிரதியை, அவர் வீட்டு திண்ணையில் அமர்ந்தே வாசித்தேன். ஐந்து பாகங்களையும் நான்கு நாளில் படித்திருப்பேன். அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
இப்போது அதை இலக்கியப் படைப்பாக நான் கருதுவதில்லை. ஆனால், ஒரு வாசகனாக என்னை உருவாக்கிய புத்தகங்களில் அது முக்கியமான இடம் பெற்றிருக்கிறது.
அதன்பிறகு கிரைம் நாவல்கள், காமிக்ஸ், சுஜாதா, பாலகுமாரன் என்று வாசிப்பு இயல்பாகவே அடுத்தடுத்த படிநிலைகளுக்குச் சென்றது.
தீவிர இலக்கியம் என்று நான் முதலில் வாசித்ததாக நினைவில் இருப்பது எஸ். ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்.
எங்கள் ஊர் நூலகத்தில் புதிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் தனியாகப் பூட்டி வைக்கப்பட்டிருக்கும். அப்பா, மாமா போன்ற பெரியவர்கள் வந்து பொறுப்பு எடுத்துகொண்டு கையெழுத்து போட்டு கொடுத்தால்தான் அவற்றை தருவார்கள். நான் படித்த வேகத்தில் அது ஒவ்வொரு முறையும் சாத்தியமாகாது.
எங்கள் ஊர் நூலகரைப் பொறுத்தவரை, சுந்தர ராமசாமியே இன்னும் “புதிய எழுத்தாளர்” தான். வெளியே இருந்த அலமாரிகளில் புதுமைப்பித்தன், மௌனி, லா. ச. ரா., ஜெயகாந்தன், பாலகுமாரன், கொஞ்சம் அசோகமித்திரன் — பதினெட்டாவது அட்சக்கோடு, மானசரோவர் போன்ற நூல்கள்தான் கிடைக்கும்.
2006 ஆம் ஆண்டு ஜெயமோகன் எழுதிய பின்தொடரும் நிழலின் குரல் புத்தக அறிமுகம் நிகழ்ந்தது. பின்னர் 2009 ஆம் ஆண்டு முதல் அவரது வலைத்தளம் ஒவ்வொருநாளும் செல்லும் இடமாக இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள், கவிஞர்கள் யார்?
“பிடித்த” என்று சொல்லும்போதே ஒரு முன்முடிவு உருவாகிவிடுகிறது, இல்லையா? மேலும் அது தனிப்பட்ட ரசனை சார்ந்த விஷயமும் கூட.
தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் உடனே சொல்லக்கூடிய பெயர்கள் ஜெயமோகன், தஸ்தயேவ்ஸ்கி, தாராசங்கர் பந்தோபாத்யாய, ஹெமிங்வே, ஜார்ஜ் ஆர்வெல், கப்ரியல் கார்சியா மார்க்கேஸ்.
பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே, மீண்டும் மீண்டும் வாசிக்கத் தோன்றும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். கடந்த ஒரு மாதமாக யுலிசிஸ் நாவலை வாசிக்க முயன்றுகொண்டிருக்கிறேன். இந்தப் பட்டியல் முழுமையானதல்ல.
எனக்கு உவப்பில்லாத எழுத்து என்றால், முக்கியமாக நவீனத்துவ இருத்தலியல் சார்ந்த எழுத்துக்கள். அது என் தனிப்பட்ட பிரச்சனை என்பதை அறிந்திருக்கிறேன்.
கவிதை குறித்த என் வாசிப்பு இன்னும் மிகவும் குறுகிய எல்லைக்குள்ளேயே இருக்கிறது.
நீங்கள் ஒருங்கிணைக்கும் டாலஸ் நகர வாசகக் குழுமம் பற்றி சொல்லுங்கள். எப்போது தொடங்கினீர்கள்?
ஜெயமோகன் 2022-ல் டாலஸ் வந்தபோது வாசகர்களுடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. நீங்களும் அதில் கலந்துகொண்டிருந்தீர்கள். அன்றே ஆறு நண்பர்களின் தொலைபேசி எண்களை வாங்கி ஒரு வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கினோம். ஆனால், அதை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்பது அப்போது தெளிவாக இருக்கவில்லை.
பிறகு 2024-ல் பூன் தத்துவ முகாமிற்கு மூர்த்தி, பாலாஜி, செந்தில்வேல் போன்ற நண்பர்கள் சேர்ந்து கலந்துகொண்டோம்.
ஒரு நாள் காலை காபியின் போது, கேரளத்துக்கு வரும் வெளிநாட்டினர் பறவை பார்ப்பதிலிருந்து எப்படி இன்னும் ஆழமான தேடல்களுக்குச் செல்கிறார்கள் என்பதை ஜெயமோகன் அவருக்கே உரிய சாகச மனநிலையுடன் பகிர்ந்துகொண்டார். அதை ஒட்டி நான் கேட்ட கேள்விக்கு, “ஒரு கதை எழுதி பாருங்கள். இல்லையெனில், தீவிரமாக ஏதாவது ஒன்றில் இறங்கி அதை அறிந்துகொள்ளுங்கள்,” என்றார்.
ஒப்புநோக்க, இரண்டாவது வழி எளிதாகத் தோன்றியது. நண்பர்கள் மூவரிடமும் ஏற்கெனவே அந்த எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் செந்தில் இமைக்கணம் வாசித்துக்கொண்டிருந்தார். அதையே ஒன்றாக வாசித்து, பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நண்பர்கள் நால்வரும் முடிவு செய்தோம்.
டிசம்பர் 2024 முதல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நூலகத்தில் நேரில் சந்தித்து வருகிறோம். அதன் பிறகு நண்பர்கள் ஒவ்வொருவராக இணைந்துகொண்டனர்.

இதுவரை எத்தனை சந்திப்புகள் நடத்தியிருக்கிறீர்கள்?
புனைவு இலக்கியம் தொடர்பாக இதுவரை 35 சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. ஒரு கூடுகைக்கு சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் கலந்துகொண்டார்.
கடந்த ஆண்டு இறுதியில் தீம்புனல் – கம்பராமாயண கூடுகையை நியூஜெர்சியைச் சேர்ந்த நண்பர் பழனிஜோதி “கம்பனின் குகன்” என்ற சிறப்புரை ஆற்றி தொடங்கி வைத்தார். கம்பராமாயண வாசிப்பு தொடர்பாக இதுவரை 22 சந்திப்புகளும் நடந்துள்ளன.
அதிகபட்சமாக ஒரு சந்திப்பில் எத்தனை வாசகர்கள் பங்கேற்றிருக்கிறார்கள்?
எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ஒரு சந்திப்பில் சுமார் 20 பேர் வரை கலந்துகொண்டிருக்கிறார்கள். சில சமயங்களில் ஆஸ்டின், சான் அன்டோனியோ, அட்லான்டா போன்ற நகரங்களிலிருந்தும் நண்பர்கள் வந்து இணைந்திருக்கிறார்கள்.
ஆனால் எண்ணிக்கையைவிட முக்கியமானது வாசிப்பின் தீவிரம். வாசிப்புகோண தீவிரத்தன்மையின் அடிப்படையில் ஒருவர் மூன்று அல்லது நான்கு தனித்துவமான பார்வை கோணங்களை முன்வைப்பது இதுவரை தவறாமல் நடக்கிறது. அதுவே மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.
உங்கள் வாசிப்புக் குழுமத்தில் என்னென்ன புத்தகங்களை வாசித்திருக்கிறீர்கள்?
இதற்கு, எங்கள் வாசிப்பு முறை பற்றிச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.
தமிழ் இலக்கியத்தில் முக்கியமான ஒரு படைப்பாளியைத் தேர்ந்தெடுத்தால், அவருக்குக் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாவது ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். பொதுவாக நான்கு கூடுகைகளுக்கு குறையாமல் அவரது படைப்புலகை வாசித்து விவாதிப்போம்.
அந்த வகையில் புதுமைப்பித்தன், அ. முத்துலிங்கம், அசோகமித்திரன், ப. சிங்காரம், கு. அழகிரிசாமி ஆகியோரின் படைப்புகளை விரிவாக வாசித்துள்ளோம்.
அசோகமித்திரன் படைப்புலகம் மட்டும் ஆறு மாதங்களுக்கு மேல் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் ஒரு நாவலை மையமாகக் கொண்டு தொடர்ச்சியாக கலந்துரையாடபட்டுள்ளது
இடையிடையே ஜெயமோகனின் படைப்புகளையும் வாசித்து, அவற்றின் மீது வாசிப்புக் கோணங்களைப் பகிர்ந்துகொள்கிறோம்.
அண்மையில் நடைபெற்ற நியூயார்க் வாழும் தமிழ் நிகழ்வில் கலந்துகொண்ட எழுத்தாளர்களான திருச்செந்தாழை, ம. நவீன், செந்தில் ஜெகநாதன், அ. வெண்ணிலா, கலைச்செல்வி, அழகுநிலா ஆகியோரின் படைப்புகள் குறித்து மூன்று மாதங்களில் ஆறு சந்திப்புகள் நடத்தினோம்.
அதேபோல், அமெரிக்கா விஷ்ணுபுரம் வட்டத்தைச் சேர்ந்த நிர்மல் அவர்களின் படைப்புகளை மையமாகக் கொண்டு ஒரு சந்திப்பும், பாலாஜி ராஜூ, சு. வெங்கட், விஜய் ரெங்கராஜன் ஆகியோரின் சிறுகதைகள் குறித்து ஒரு சந்திப்பும் நடத்தினோம்.
ஒரு எழுத்தாளரை நான்கு சிறுகதைகளில் வாசித்து முடித்துவிட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. ஒரு எழுத்தாளரின் உலகத்துக்குள் நுழைய, அவருடன் சில மாதங்களாவது வாழ வேண்டும் என்பதே எங்கள் எண்ணமாக இருக்கிறது.
வாசிப்பு குழுமங்கள் வெற்றிகரமாக நடைபெற உங்கள் ஆலோசனைகள் என்ன ?
“திரள்வதின் நெறிகள்” என்று ஜெயமோகன் எழுதிய கட்டுரையை வாசிப்புக் குழும நண்பர் மூர்த்தி ஒருமுறை பகிர்ந்திருந்தார். என் அனுபவத்தின் அடிப்படையில் சில விஷயங்களைப் பகிரலாம்.
முதலாவது, குறிப்பிட்ட இடமும் நேரமும் என்ற ஒழுங்கு. அதை உறுதியாகக் கடைப்பிடித்துவிட்டால், அந்த ஒழுங்கே நண்பர்களை அழைத்துவரும். ஒரு வாசிப்புக் குழுமத்தை வெற்றிகரமாக நடத்துவது புதிய வாசகர்களைத் திரட்டுவதைக் காட்டிலும், அந்த ஒழுங்கைத் தொடர்ந்து காப்பாற்றுவதில்தான் இருக்கிறது.
இரண்டாவது, “சரியான வாசிப்பு” என்று ஒன்று இல்லை என்பதை ஏற்றுக்கொள்வது. ஒரு வாசிப்புக் குழுமத்தின் நோக்கமே, நம்முடைய தனிப்பட்ட வாசிப்புக் கோணம் கேள்விக்குள்ளாகவும், நாம் இதுவரை பார்க்காத புதிய பார்வைகளை அறிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பை உருவாக்குவதுதான்.
மூன்றாவது, ஒரு ஒருங்கிணைப்பாளர் அவசியம். அவருக்குத் திடமான இலக்கியக் கருத்துகள் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அவருடைய கருத்துகள் குழுமத்தின் மீது தேவையற்ற செல்வாக்கு செலுத்தாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
நான்காவது, அதை ஒரு கொண்டாட்டமாக மாற்றிக்கொள்வது. முதல் ஆண்டு நிறைவில் நாங்கள் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கினோம். குடும்பத்தினரையும் அழைத்து ஒன்றாகச் சந்தித்தோம். அப்போது வாசக நண்பர்களின் இணையர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்: “அமெரிக்கா வாழ்வில் வார இறுதியில் அரை நாளை இலக்கியத்துக்கு எடுத்து கொள்கிறோம். இவர் வார இறுதியில் இலக்கியக் கூட்டத்துக்குப் போகிறாரே, அதற்காக வீட்டில் நீங்கள் என்னையோ அல்லது குழுமத்தையோ திட்டுவதுண்டா?”
பெரும்பாலானவர்கள் சிரித்தபடியே, “ஆரம்பத்தில் திட்டினோம். ஆனால் கூட்டத்திலிருந்து திரும்பி வந்த பிறகு அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது எல்லாம் எப்போது தப்பித்து வீட்டுக்கு போவோம் என்று இருப்பவர், இந்தக் கூட்டத்துக்காக மட்டும்இன்னும் இரண்டு வாரம் மீண்டும் சந்திக்க, அதற்குள் இதை எல்லாம் படிக்க வேண்டும் என்று ஆவலாகக் காத்திருக்கிறார். அதைப் பார்க்கும்போது எங்களுக்கே ஒரு விதத்தில் மகிழ்வாக சற்று பொறாமையாக இருக்கிறது” என்றார்கள்.
அந்த பதிலிலிருந்து நான் புரிந்துகொண்டது ஒன்றுதான். ஒரு வாசிப்புக் குழுமம் என்பது அறிவு/கருத்து பரிமாற்றம் மட்டுமல்ல. அது மகிழ்ச்சியையும் உருவாக்க வேண்டும். அந்தக் கொண்டாட்ட உணர்வு மிக முக்கியம்.
இறுதியாக, இலக்கியக் கருத்துக்களை விடவும், வாசிப்புப் பார்வைகளை விடவும் முக்கியமானது, நம்மைப் போலவே வாசிக்கும் இன்னொரு உயிரை, இன்னொரு நண்பரைச் சந்திப்பதுதான். இலக்கியக் கருத்துக்கள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். வாசிப்பின் பார்வையும் மாறலாம். ஆனால் வாசிக்கும் நண்பர்கள் அரிதானவர்கள். அந்த அரிய நட்பை, எதன் பொருட்டும் இழக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு நல்ல வாசிப்புக் குழுமத்தின் மிகப் பெரிய சாதனை என்பது நல்ல வாசகர்களை அல்லது மிகச்சரியான வாசிப்பு கோணத்தை உருவாக்குவது அல்ல. நீண்ட காலம் நீடிக்கும் வாசிப்பு நட்புகளை உருவாக்குவதுதான் என்று நம்புகிறேன்.
உங்கள் வாசிப்பு குழுமத்தில் இணைவது எப்படி? யாரை எல்லாம் இணைத்து கொள்வீர்கள்?
வாசிக்கும் நண்பர் யார் என்றாலும், வாசிப்பில் எந்த நிலையில் இருந்தாலும், எந்த விதமான வாசிப்புக் கொள்கை கொண்டவர் என்றாலும் அவரை வரவேற்கிறோம்.
ஆனால் ஏற்கனவே சொன்ன மாதிரி குழுமமாக இயங்க சில அடிப்படை விதிமுறைகள் தேவையாகின்றன
அதில் முதன்மையானது, குழுமத்தில் எந்தவித முன்முடிவும் இல்லாமல், அரசியல், இலக்கியக் கொள்கைகள், பிடித்த/ பிடிக்காத ஆக்கங்கள் , எழுத்தாளர்கள் என்பதை எல்லாம் தாண்டி , இணைமனம் என்ற அளவில் பரஸ்பர நட்புணர்வை எதிர்பார்க்கிறோம்.
இணைய விரும்பும் நண்பர்கள் dfwbookclub2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் தொடர்பு எண்ணை பகிர்ந்து கொள்ளலாம்.
சொல்வனம் இதழில் வெளிவந்த மருத்துவம் குறித்த உங்கள் தொடருக்கு என்ன எதிர்வினைகள் வந்தன?
ஆரோக்கியம் குறித்து தொடர்ந்து பரவிவரும் சில கருத்துருக்களை வரலாறு, தத்துவம், இலக்கியம் போன்ற சட்டகங்களில் கொஞ்சம் கற்பனை வைத்து பார்க்க முடியுமா என்பதே என் ஆர்வமாக இருந்தது. இன்னும் பரந்த மனித சிந்தனையின் பின்னணியில் அவற்றை இணைத்துப் புரிந்துகொள்ள முடியுமா என்ற தேடலும் அதில் இருந்தது. அதன் அடிப்படையில் தான் தொடருக்கு “மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்” என்று தலைப்பு போடப்பட்டது.
மருத்துவம் சார்ந்த படிப்பும், பின்புலமும் இருந்தாலும் கூட மேற்சொன்ன சட்டகங்கள் வழியே சில கருத்துருக்களை உசாவிக்கொண்டது எனக்கு தனிப்பட்ட முறையில் அந்தத் தொடரில் மிகுந்த மனநிறைவை அளித்தது. அதன் வழியாக நான் மேற்கொண்ட ஒரு சிந்தனைப் பயணமும் இருக்கிறது.
இப்படிப்பட்ட தொடரை எழுத வேண்டும் என்ற முதல் எண்ணத்தை விதைத்தது நீங்கள். தொடர்ந்து எழுத சொல்வனம் பாலா ஊக்கமளித்தார். பிரசுரித்த சொல்வனம் குழுவிற்கு நன்றி. சு. வெங்கட், நிர்மல், விவேக் போன்ற விஷ்ணுபுரம் நண்பர்களுடன் இந்த விஷயங்களைப் பற்றி தொடர்ச்சியான உரையாடல்கள் நடந்துகொண்டே இருந்தன.
உங்களுடைய முதல் சிறுகதை எது?
என்னுடைய முதல் பிரசுரமான சிறுகதை இந்த ஆண்டு சொல்வனம் இதழில் வெளியான சுழற்பிரயாணம்.
அது வடிவ ரீதியாக சிறுகதைதானா என்ற சந்தேகம் எனக்கு இன்னும் இருக்கிறது. எழுதி முடித்த பிறகுதான், அது ஒரு நாவலின் சிறிய துண்டைப் போன்ற உணர்வை எனக்குத் தந்தது, ஒன்றும் செய்வதற்கு இல்லை. இப்போது ஒரு மாதிரி குறுநாவல் என்று சொல்லிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
அது எங்கள் அசோகமித்திரன் வாசிப்புக் கலந்துரையாடலின் விளைவாக உருவானது. அவரது பிரயாணம் சிறுகதை குறித்து தீவிரமான விவாதம் நடைபெற்றது. அதற்கு நான் “அசோகமித்திரனும் அறிவியல் பொருண்மைவாதக் கசப்பும்” என்ற தலைப்பில் ஒரு எதிர்வினை எழுதினேன்.
அந்தக் கதையை, எனக்கு உகந்த விதத்தில், என் அனுபவத்தின் வழியாக மறுபடியும் நிகழ்த்திக்கொள்ளும் முயற்சியாகத்தான் சுழற்பிரயாணம் உருவானது. குறிப்பாக, பிரயாணம் எனக்குள் உருவாக்கிய ஒரு கசப்புணர்விலிருந்து வெளியேற நான் மேற்கொண்ட படைப்புச் செயல் என்றும் சொல்லலாம்.
இதைச் சொல்லும்போது, அசோகமித்திரனை உலக இலக்கியத்தின் ஒரு மாஸ்டர் என்ற நிலையில் அவர் மீது எனக்கு இருக்கும் அளவில்லாத மரியாதையும் பிரியத்தையும் கருத்தில் கொண்டே சொல்கிறேன்.
இலக்கியம் தவிர மற்ற துறைகளில் உங்கள் ஆர்வம் என்ன?
வரலாறு, தத்துவம், உளவியல், யோகம் ஆகிய துறைகளில் எனக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் அந்த ஆர்வம் பெரும்பாலும் வாசிப்பின் வழியாகவே உருவானது.
அதே நேரத்தில், அதை வெறும் வாசிப்பாக மட்டுமே வைத்திருக்காமல், அன்றாட வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் ஒரு கருவியாக மாற்ற வேண்டும் என்ற விருப்பமும் இருக்கிறது.
உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
அன்றாட வாழ்க்கை எழுப்பும் சில கேள்விகளும் போதாமைகளும் என் வாசிப்பின் திசையை உருவாக்குவதில் பங்காற்றி இருக்கின்றன. அவற்றுக்கான சில பதில்களை வாசிப்பின் வழியாகக் கண்டடைகிறேன். இதை ஒரு ஒருவழிப் பாதை என்று சொல்லலாம்.
ஆனால் அதற்கு மாறாக, வாசிப்பதிலிருந்து ஒரு வாழ்க்கையை உருவாக்கி, அதை மீண்டும் அன்றாட வாழ்வில் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. அப்போது அது இருவழிப் பாதையாக மாறுகிறது.
ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. பிரசுரம், வடிவம் போன்றவை எல்லாம் பொருட்டல்ல. தனிப்பட்ட இந்த இருவழிப்பார்வையை நான், எனது என்று மட்டும் இல்லாமல் ஒரு நிலப்பகுதிக்கு, அதன் கலாச்சாரத்திற்கு விரித்துக் கொள்ளமுடியுமா என்று பார்ப்பதே நோக்கம்.
அதைச் செய்வேன் என்றும் நம்புகிறேன்.
முடித்து கொள்வதற்கு முன், நீங்கள் செய்யும் இந்த நேர்காணல் பணிக்கு நன்றி . நேர்காணல்களை தொடந்து வாசிக்கிறேன். இந்த நேர்காணல் வழியே அவர்கள் எழுத்தாளுமையை இன்னும் அணுக்கமாக அறிய முடிகிறது. அது அவர்களின் படைப்புலகை மேலும் ஆழமாக காட்டுகிறது. தொடர்ந்து செய்யுங்கள். நன்றி.