அருண் அருணாச்சலம் ஓவியர். இரா.முருகனின் படைப்புகள் (மிளகு நாவல், சிவிங்கி குறுநாவல்) சொல்வனம் இதழில் தொடராக வந்தபோது பல அத்தியாயங்களுக்கு ஓவியங்கள் வரைந்தார். ஐந்து புத்தகங்களுக்கு அட்டை படம் வரைந்திருக்கிறார். எமர்சன் இலக்கிய முகாம், பூன் (2022) முதல் முறை சந்தித்தேன். வலைதளம் : https://www.artstation.com/arun-artist/albums/10066400
தொடர்புக்கு: aak211th.artist@gmail.com

உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், பின்புலம் பற்றி ?
பிறந்து வளர்ந்தது கோவையில். குறிப்பாக கே கே. புதூர் (குப்பைக்கோணம் புதூர்). பள்ளி கல்லூரியும் கோவையில் தான். கோவையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பஞ்சாலைகளை பிரதானமாகக் கொண்டு நிறைய குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. ஆனால் இன்று அப்படி இருப்பது போல தெரியவில்லை. பெரும்பாலான பஞ்சாலைகள் மூடப்பட்டுவிட்டது. எங்கள் குடும்பம் கடந்த மூன்று தலைமுறையாக பஞ்சாலைத் தொழிலாளர்களாக பணிபுரிந்தனர்.
தற்போது நான் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை பார்க்கிறேன். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் குடும்பத்துடன் வசித்துவருகிறேன். மனைவி சரவண்யா, பத்துவயதிற்கு உட்பட்ட இரண்டு மகன்கள். திகழ்வன் மற்றும் நிலன்.
ஓவியம், வரைகலை அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ?
நான் முதன் முதலில் வரைந்த ஓவியம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அது ஒரு தண்ணீர் குழாய். பள்ளி பாடநூலில் உள்ள படத்தைப் பார்த்து ஒரு தாளில் வரைந்தேன். அப்போது ஆறு ஏழு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அதன்பின் தொடர்ச்சியாக நிறைய வரைந்து பார்த்து நானே சுயமாக கற்றுக்கொண்டேன். கண்களில் காணும் எல்லா காட்சிகளையும் ஓவியமாக வரைய எப்படி அணுக வேண்டும் என்று மானசீகமாக திட்டமிட்டுக்கொண்டிருப்பேன். இளமையில் முறைப்படி ஓவிய வகுப்பிற்கு சென்று ஓவியக்கலையை கற்கவில்லை என்றாலும் இயல்பிலேயே ஓவிய அடிப்படைகளை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றல் அமையப்பெற்றது ஒரு நல்லூழ் என்று நம்புகிறேன். 90’களில் திரைப்பட கட்டவுட்கள் எல்லாமே கையால் வரைந்த ஓவியங்கள் தான். என்னை மிகவும் கவர்ந்தது ஆங்கில திரைப்பட கட்டவுட்கள். கோவையில் சென்ட்ரல் மற்றும் மாருதி திரையரங்குகளில் ஆங்கிலத்திரைப்படங்கள் வெளியாகும். அப்பாவுடன் சைக்கிளில் செல்லும்போது நிப்பாட்டச்சொல்லி கட்டவுட் ஓவியங்களை பார்த்து ரசிப்பேன். எல்லாமே கோவை ஒப்பணக்கார வீதி சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஓவியர்கள் வரைந்தது. கட்டவுட்டின் கீழே ‘சினி ஆர்ட்ஸ்’ என்று கையெழுத்து இடம்பெற்றிருக்கும். அதைப்பார்த்து தான் என் ஓவியங்களிளும் கையெழுத்துப் போட ஆரம்பித்தேன்.

பின்னர் ஓவியம் வரைவதற்கு முறையான பயிற்சிகள் எடுத்துக்கொண்டீர்களா ?
ஆம், 30 வயதுக்கு மேல் தான் என் முதல் ஓவிய வகுப்பு அமைந்தது. அதன் பின் பல வகுப்புகள், பட்டறைகள் சென்றுள்ளேன். “self learners” என்பவர்களுக்கு நேரடியாக மற்றவரிடம் இருந்து ஒன்றை கற்றுக்கொள்வதற்கு ஒரு விலகல் அல்லது ஆணவம் உண்டு என்று படுகிறது. என் முதல் சவாலே அதைக் கிழித்துக்கொண்டு வெளியே வருவதுதான். “அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் சாத்தியங்கள் மட்டும்தான், சாதனைகள் அல்ல. சாதனைகள் செயல்மூலமே உருவாகின்றன. சாத்தியங்கள் நடைமுறையைச் சந்திக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு வெளியாகிறது.” என் விடாப்பிடிகளை தளர்த்திய ஜெயமோகனின் வரிகள் இவை.
புத்தக வாசிப்பு குழுமம் போல ஏதேனும் ஓவிய குழுமத்தில் உறுப்பினராக இருக்கிறீர்களா ?
சில ஓவிய இணைய குழுமத்தில் உள்ளேன். அடிக்கடி கூட்டு ஓவிய பயிற்சி கூடத்திற்கு செல்வேன். அதில் வெவேறு ஓவியர்களின் பயிற்சி முறை மற்றும் செய்முறையை காண்பது எனக்கு பிடிக்கும்.
உங்களுக்கு பிடித்த ஓவியர் யார் ?
பலவகையான ஓவியக்கலை வகைகள் உள்ளது. அதில் என்னுடைய களம் என நான் கருதுவது “இலுஸ்ட்ரேஷன்” வகையை சார்ந்தது. அதில் நான் ஆதர்சமாக நினைக்கும் ஓவியர்கள் தென் கொரியாவை சார்ந்த கிம் ஜுங் கி (Kim Jung Gi). ஓவியத்தில் ஆசாத்தியாமான மானுடத்திறன் பெற்றவர். அவர் உள்ளத்தில் எழும் சித்திரக் கொப்பளிப்பு என்னைக் கவர்ந்தது ஆனால் துரதிஷ்டிரவசமாக 2022இல் தன் 47ஆவது வயதில் பல்வேறு உடல்நல சிக்கல்களால் உயிரிழந்தார். அடுத்து அமெரிக்காவை சார்ந்த நார்மன் ராக்வெல் (Norman Rockwell). நார்மனின் ஓவியங்கள் அமெரிக்காவின் கலாச்சாரத்தை நேரடியாக பிரதிபலிப்பவை. அடுத்து காமிக்புக் ஓவியரான ஃபிராங்க் ஃப்ராசெட்டா (Frank Frazetta).
முதல் ஓவியம் எப்போது வெளியானது ?
எழுத்தாளர் இரா. முருகன் எழுதிய சிவிங்கி குறுநாவல் சொல்வனம் இதழில் 2023’இல் வெளியானது அதற்குத்தான் முதலில் சித்திரம் வரைய ஆரம்பத்தேன். அதற்கு முன்பு நான் படித்த கல்லூரி ஆண்டுமலரில் என் ஓவியம் பிரசுரமானது. முதலில் ஒரு நாய் சோபாவில் அமர்ந்திருப்பது போன்ற தத்ரூபமான ஒரு ஓவியம் வரைந்து கொடுத்தேன். நான் சமர்ப்பித்த அசல் படம் திருட்டு போய்விட்டது. அதனால் அவசரமாக டாக்டர் அம்பத்கரின் உருவப்படம் வரைந்து கொடுத்து பின் பிரசுரமானது. நண்பன் இது பார்ப்பதற்கு இயக்குனர் கே. பாலச்சந்தர் போல உள்ளது என்றான். எனக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் அவனுக்கும் தட்டுப்பட்டது சற்று ஏமாற்றம்தான்.

“வர்த்தமான்” என்ற உங்கள் புனைப்பெயர் பற்றி ?
இந்தியாவின் முதல் கார்ட்டூன் சீரிஸ் பெயர் வரதமான். சிறுவயதில் இருந்தே மிக அணுக்கமான பெயர். எங்கள் ஊரில் பலருக்கு ‘வரத’ என்று பெயர் இருக்கும், வரதராஜ் வரதாத்தாள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நபருக்கு வரதராஜன் என்ற பெயர் இருக்கும். நான் பார்த்த முதல் கார்டூனும் அதுதான். வளர்ந்த பின் தான் வர்தமான் சமண மதத்துடன் தொடர்புடையதை அறிந்து கொண்டேன்.
இந்திய புராணங்களை படக்கதையாக கொண்டுவருவதில் உள்ள சவால் என்ன ?
மேற்கில் நாம் காணும் விட்ச்(witch) என்ற உருவம் வெவ்வேறு காலகட்டத்தில் பல நூறு ஓவியர்களின் பல ஆயிரம் ஓவியம் மூலம் திரண்டு அடைந்த ஒரு சித்திரம். ஒரு குச்சியின் மீது அமர்ந்து ஒரு கிழவி பறப்பதை போல ஒரு சித்திரத்தை பார்க்கிறீர்கள். உடனடியாக அது ஒரு சூனியக்காரி (witch) என்று பார்வையாளர்களுக்கும் தெரியும்.
ஆனால் நமக்கு மிகமிக குறைவான இமேஜ் லைப்ரரியே உள்ளது. நம் தொன்ம மற்றும் பூரண மாந்தர்கள் (உதாரணம்: கிண்ணரர், கிம்புருடர், கிராதர், பூதங்கள்) களுக்கு என்று ஒரு இமேஜ் லைப்ரரி உருவாகி வர வேண்டும். எண்ணிப்பாருங்கள் இன்று திருஷ்டி பொம்மைக்கு என ஒரு இமேஜ் லைப்ரரி திரண்டு வந்திருக்கிறது. அதுபோல அணைத்து தொன்ம புராண மாந்தர்களும் இமேஜ் லைப்ரரி உருவாகவேண்டுமென்றால் பல ஆண்டு கூட்டு செயல்பாடு தேவைப்படும்.
“எதற்காக வரைகிறேன்?” என்றால் உங்கள் பதில் என்ன ?
எதைக்கொண்டும் நிரப்பமுடியாத அகவயமான தீரா வெற்றிடத்தை ஏதேனும் ஒரு கலையை கொண்டே நிறப்ப முடியும் என்று இலக்கியம் வாயிலாக கண்டுகொண்டேன். கைவசம் ஒரு கலை இருப்பது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்!

உங்களுடைய ஓவியம் வரையும் முறை என்ன ? (இடம், நேரம், ஒரே அமர்வில் வரைவீர்களா? )
ஆம் வீட்டிற்குள் ஒரே இடத்தில் அமர்ந்துதான் வரைவேன். குறிப்பிட்ட நேரகாலம் என்றில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரே இடத்தில் அமர்ந்து பயிற்சி எடுப்பேன். வரையும்போது கைபேசியை அறையின் வெளியே வைத்துவிடுவேன். வரையும்போது இசை கேட்பதோ, தொலைபேசியில் உரையாடுவதோ இல்லை. சமீபகாலமாக பெரும்பாலான ஓவியங்களை ஒரே அமர்வில் முடித்து விடுகிறேன். சில ஓவியங்களை மாதக்கணக்கிலும் வாரக்கணக்கில் நாள்கணக்கில் அமர்ந்தும் முடித்திருக்கிறேன். சில சமயங்களில் பூங்காக்களிலும், பொது இடங்களிலும், வனங்களிலும் அமர்ந்து படம் வரைவேன். ஆனால் இவையெல்லாம் தனிப்பட்டவை இதழ்களுக்கானது இல்லை. இதழ்களுக்காக வரையும்போது உரையைப் படித்தவுடனேயே வரைய மாட்டேன். குறைந்தபட்சம் ஒன்று இரண்டு நாட்கள் எண்ணங்களை நொதிக்க விடுவேன். முதலில் எண்ணங்களைக் கொண்டு புத்தியில் வரைந்தெடுப்பேன் painting in the head என்று சொல்லலாம். இங்கு எண்ணங்கள் என்று நான் குறிப்பிடுவது மொழியாலான எண்ணங்கள் கிடையாது அது முற்றிலும் அருவமானது. பின் உள்ளத்தில் திரண்டுவந்த படத்தை வெளியே வார்த்தெடுப்பேன்.
உங்களுடைய படைப்புகளில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உண்டா ?
நான் அடிக்கடி செல்லும் கூட்டு ஓவிய அமர்வுக்கு அறுபது வயதிற்கு மேற்பட்ட ஒரு பெண்மணி வருவார். மேடையில் அமர்ந்திருக்கும் மாடலை பார்த்து தன் வெண்மையான கான்வாஸில் சிறப்பான உருவப்படத்தை தீட்டுவார். சந்தையில் கண்டிப்பாக குறைந்தது சில நூறு அமெரிக்க டாலர்கள் விற்கக்கூடிய அழகிய கலைப்படைப்பு அது. ஆனால் அவர் அடுத்தவாரம் வரும்போது அதே ஓவியத்தின் மேல் வெள்ளை நிறம் பூசி காயவைத்து புதிய கான்வாஸில் அடுத்த ஓவியம் வரைவதற்கு தயாராவர். இதுவே ஒவ்வொருமுறையும் சுழற்சிமுறையில்.
நான் கண்டடைந்து என்னவென்றால் ஏ.ஐ மானுடத்திடம் களவாட முயற்சிப்பது மனிதனின் செயல்முறையை. ஒருமுனையில் படைப்பிற்காக கருக்கொள்ளும் ஒரு எண்ணம் அல்லது யோசனை மறுமுனையில் அதன் இறுதி விளைவு அல்லது படைப்பு. ஒரு கலைஞனுக்கு எது முக்கியம்? இறுதி விளைவா (படைப்பா) அல்லது இறுதி விளைவிற்கான படைப்புச் செயல்முறையா? ஒரு கலைஞனுக்கு இறுதி விளைவு எந்த அளவிற்கு முக்கியம்? ஒரு கலைஞன் எந்த கணத்தில் கலைஞனாகிறான் ? நடனம் நிகழும்போதா அல்லது இறுதியிலா? இவையெல்லாம் தனிநபர் தெரிவுகள்.
நான் ஒவ்வொருமுறையும் கலைப்படைப்பில் ஈடுபடுவதற்கு காரணமே அதில் உள்ள படைப்பு செயல்முறைக்காகத்தான். அதில்தான் கற்றல் நிகழ்கிறது என்று படுகிறது. இதில் AI துணை கொண்டு படங்களை வரைந்தால் பலர் வியக்கும்படி வேண்டுமானால் படைக்கலாம் ஆனால் தன்னளவில் நிறைவின்மை அடைவது கண்கூடு.
நீங்கள் புத்தகங்களுக்கு அட்டைப்பட ஓவியம் வரைந்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் குறித்து சொல்லுங்கள்.
ஒரு ஆர்வத்திற்காக செய்துபார்த்தேன். இதுவரை ஐந்து ஆறு ஆங்கில சுய வெளீயிட்டு புத்தகங்களுக்கு அட்டைப்படம் போட்டுள்ளேன். இவை commissioned art என்ற வகைமையில் வருவது. ஆட்டைப்படத்தை கோருவோர் சிலருக்கு ஏற்கனவே அதில் என்ன இடம்பெறவேண்டும் எப்படி இருக்கவேண்டும் என்று தோராயமாக ஒரு யோசனை இருக்கும். சிலருக்கு அப்படி முன் யோசனை என எதுவும் இருக்காது. ஆதலால் இந்த வகை அட்டைப்பட ஓவியம் முழுக்க முழுக்க என்னுடைய படைப்பு என்று சொல்லிவிட முடியாது. இரண்டு மனங்களின் ஓத்திசைவு என் வழியாக நிகழ்கிறது என்று சொல்லலாம்.

நீங்கள் நல்ல வாசகரும் கூட. இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ? உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள் யார் ?
எதுவுமே படிக்காமல் எடுத்த எடுப்பிலேயே தீவிர இலக்கியத்தில் நுழைந்துவிட்டேன். என் இருபதுகளில் ஜெயமோகனின் ‘விசும்பு’ அறிவியல் புனைவு சிறுகதைத்தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிவந்தேன். விசும்பு முடிந்த பின்பு ஜெயமோகன் எழுதிய நாவல்கள் என்ன என்று இணையத்தில் தேடி அடுத்து விஷ்ணுபுரம் வாசித்து முடித்தேன். எல்லாமே தற்செயல்தான். ஆனால் தற்செயல்கள் தானாக நிகழ்வதல்ல என்று நம்புகின்றேன். அதன் பின்புதான் இப்படி ஒரு தீவிர இலக்கிய உலகம் இருப்பதைக் கண்டுகொண்டேன். பிடித்த எழுத்தாளர்கள் ஜெயமோகன், கா.நா.சு, சுந்தர ராமசாமி. பிடித்த பிறமொழி எழுத்தாளர்கள் ஜார்ஜ் ஆர்வெல், தால்ஸ்தோய், தாஸ்தோவ்ஸ்கி.
ஓவியம் சார்ந்த எதிர்கால திட்டம் என்ன ?
சிறார் நூல்களுக்கான பணியில் ஈடுபடும் எண்ணம் உண்டு.