ஜெயஶ்ரீ இலக்கிய வாசகர், ஆசிரியை, தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தில் தீவிர பங்களிப்பாளர், திருத்துநர். 2022 தொடங்கி இதுவரை 800 பதிவுகளுக்கு மேல் தமிழ் விக்கியில் எழுதியிருக்கிறார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசிக்கிறார். தமிழ் விக்கி பக்கம் : https://tamil.wiki/wiki/ஜெயஶ்ரீ

உங்களுடைய வாசிப்பு படிநிலைகள் குறித்து ? (இளம் வயதில், பள்ளி நாட்களில், கல்லூரியில் வாசித்தது குறித்து).
சிறு வயதில் அம்புலிமாமா, கோகுலம், காமிக்ஸ், அமர் சித்ரகதா, பஞ்ச தந்திரக் கதைகள் என்று வழக்கமான தொடக்கம். நூலகத்தில் பழியாகக் கிடந்து Enid Blyton, Hardy Boys, Nancy Drew போன்ற சிறுவர் இலக்கியங்கள் வாசிப்பு (இன்றைக்கு Enid Blyton படைப்புகளில் political correctness கேள்விக்குள்ளாக்கப்படுகிறது). டிக்கன்ஸ், டுமா, தாமஸ் ஹார்டி, விக்டர் ஹ்யூகோ போன்ற பிரிட்டிஷ், ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளின் சுருக்கப்பட்ட வடிவங்கள் (abridged version) ஊட்டியில் மிகப் பிரபலம். பள்ளிக்காலத்தில் தீவிரமாக அவற்றைப் படித்ததுண்டு. கல்லூரி நாட்களில் அவை அனைத்தையும் முழு நூல்களாக வாசித்தேன்.’Les Miserables’ போன்ற நூல்களுக்கு உள்ளே எளிதாகச் செல்ல அந்த முதல் வாசிப்பு உதவியது.
ரஷ்ய இலக்கியங்கள் இலவசமாகக் கிடைத்தன. தமிழில் பதின்ம வயதில் கலைமகள், கல்கி, விகடன்,குமுதம் இதழ்கள், சிவசங்கரி, வாசந்தி, என்று கையில் கிடைத்த அனைத்தையும் வாசித்தேன். பாட்டியும், அம்மாவும் நல்ல வாசகிகள். பாட்டி சொன்ன கதைகள், பாடிய தோத்திர, ராம நாடக, நந்தனார் சரித்திர, தனிப்பாடல்கள், பழமொழிகளால் தமிழ் மொழியின் ருசி மனதில் நிறைந்தது.
சுஜாதா, பாலகுமாரன் படைப்புகளில் சில காலம் மூழ்கி எழுந்து, தி.ஜா, வண்ணதாசன், வண்ணநிலவன், காண்டேகர், தாகூர் படைப்புகள் என்று வாசிப்பின் அடுத்த படியில் மெதுவாக ஏறினேன்.
தீவிர இலக்கிய அறிமுகம் எப்படி ஏற்பட்டது ? வாசிப்பிற்கென இளம் வயதில் ஆதர்சம் / வழிகாட்டி யாராவது இருந்தார்களா ?
தீவிர இலக்கியத்துக்கும், பொழுதுபோக்கு இலக்கியத்துக்குமான வேறுபாடு லேசாகத் துலங்கத் தொடங்கும்போது படிக்கக் கிடைத்த விஷ்ணுபுரம், ஜே.ஜே, சில குறிப்புகள் இரு நூல்களும் என்னைப் புரட்டிப் போட்டன. விஷ்ணுபுரம் வாசிப்பு என்னை தலைகீழாக சுழலில் தள்ளிவிட்டது. என் மிக எளிய இறை நம்பிக்கையாலான உலகம் தகர்ந்து அவநம்பிக்கைக்கும், வெறுமைக்கும் இடையில் சுழன்றது. சமனப்பட சில மாத காலமும் இரு மறுவாசிப்புகளும் தேவைப்பட்டன. ஜே.ஜே. யின் வடிவம் மிகவும் கவர்ந்தது. சு.ரா. வின் ‘விரிவும் ஆழமும் தேடி’ கட்டுரை நூல் மிக முக்கியமான் திறப்புகளை அளித்து செல்திசையைக் காட்டியது.
எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளம் எனக்கு ஒரு புதிய உலகைத் திறந்தது. அங்கிருந்தே செவ்வியல், நவீன, உலக இலக்கியங்களைப் பற்றிய முறையான அறிமுகம் கிடைத்தது. தேடித்தேடி வாசிக்கத் தொடங்கினேன். மகன்கள் வளர வளர அவர்கள் மூலம் அமெரிக்க/லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள்பால் கவனம் திரும்பியது.
என் வீட்டில் பெரியவர்கள் அனைவருக்குமே ஓரளவு வாசிப்புப் பழக்கம் இருந்தது. ஆதர்சம் என்று பாட்டியைச் சொல்லலாம். முதலில் புராணங்கள், பக்தி இலக்கியங்கள், சுத்த சைவமாக பக்த விஜயம், அனுத்தமா, லக்ஷ்மி, குகப்ரியை போன்றவர்களை மட்டுமே வாசித்து வந்தவர், நான் வளர வளர என்னுடைய தமிழ்ப்பாடங்களைப் படிக்கச் சொல்லி, பாடல்களுக்கு பொருள் சொல்லச் சொல்லி கேட்டு என்னுடன் சேர்ந்து படித்தார். நான் வாசிக்கும் சிறுவர் நூல்கள், இதழ்கள், வணிக இலக்கியங்கள் எல்லாவற்றையும் என் கூடவே (எனக்கு முன்னால்) படித்து, கடைசியில் கணேஷ்-வசந்த் ஜோடிக்கு (குறிப்பாக வசந்துக்கு) பரம ரசிகையாக ஆகிவிட்டார். பாட்டியின் விரிந்து கொண்டே வந்த பார்வையும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் நெகிழ்வும், பஞ்சுபோல அப்படியே அறியக் கிடைத்த அனைத்தையும் உறிஞ்சிக்கொண்டு உள்முகமாக நோக்கித் தன்னை வளர்த்துக்கொண்ட தன்மையும் என்னை எப்போதும் மிக வியக்க வைப்பவை. அம்மா வெண்முரசுக்கும் ‘அறம்’ சிறுகதைகளுக்கும் பரம ரசிகை. மிக மரபான வாழ்வு வாழ்ந்த இந்த இரு பெண்களும் வாசிப்பால் பெற்ற மன விரிவு அபாரமானது.
கல்லூரியின் ஆங்கிலப் பிரிவு பேராசிரியர்கள் மூலம் செவ்விலக்கியங்களை வாசிக்கும் முறை அறிமுகமானது.
உங்களுக்கு பிடித்த படைப்புகள் குறித்து ?
தமிழில் வெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம், புதுமைப்பித்தன் படைப்புகள், பசித்த மானுடம், புயலிலே ஒரு தோணி, பொய்த்தேவு, வாஸவேஸ்வரம், ஜெ.ஜெ. சில குறிப்புகள், தண்ணீர், ஆழி சூழ் உலகு, சாய்வு நாற்காலி, அஞ்ஞாடி, அரசூர் வம்சம், பிரேம்சந்தின் கோதானம், பால்யகால சகி, மண்ணும் மனிதரும், முதல் சபதம், கசாக்கின் இதிகாசம், ஆரோக்ய நிகேதனம்….
War and peace, Moby Dick, Les Miserables. Brothers Karamazov, The great gatsby, Little Women,The tale of two cities, Three men in a boat, For whom the bell tolls, Midnight’s Children, The last temptation of Christ, To the Lighthouse, Grapes of Wrath, My name is Red…
Wordsworth, Shelley, Browning…
லத்தின் அமெரிக்க மாய யதார்த்தப் புனைவுகள் – One hundred years of solitude, Love in the time of Cholera, Pedro paramo, The Burning Plane இவற்றுக்கெல்லாம் முன்னோடி என்று எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிட்ட Absalom, Absalom (என்று சொல்ல ஆசைதான். பத்துதடவை படித்தால்தான் முழுதாகப் புரியும் போல).
என்றும் எப்போதும் பாரதி. முதிரா இளமையில் அறிமுகமான பல படைப்பாளிகளைத் கடந்து வந்ததுபோல் பாரதியை என்னால் கடந்து வரவே முடிந்ததில்லை. ஆன்மீக, ஞான, கண்ணன், குயில்பாட்டுகளில் வெளிப்பட்ட நவவேதாந்தமும் பாரதியின் சாக்தமும் என் மனதுக்கு மிக நெருக்கமானவை..
தமிழ் விக்கியில் நீங்கள் தீவிர பங்களிப்பாளர். தமிழ் விக்கி உங்களுக்கு அளித்தது என்ன ?
உண்மையில் தமிழ் விக்கியில் இணையும் முன்பு நான் எதுவுமே எழுதியதில்லை. தொடக்கத்தில் இருந்ததைவிட தமிழ்விக்கிக்கான மொழிவடிவத்தில் இப்போது தேர்ச்சி கூடியிருக்கலாம் என நினைக்கிறேன். 2022 தொடங்கி இதுவரை 800 பதிவுகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன்.
தமிழ்விக்கியில் பங்களிக்கத் தொடங்கி ஆறு மாதங்களுக்குள் எனக்கு ஓரளவு நன்றாகத் தமிழ் தெரியும் என்ற எண்ணம் மறைந்து, இதுவரை நான் மேய்ந்தது நுனிப்புல் கூட அல்ல என்று தெளிவானது. எத்தனை நூல்கள், எத்தனை அறிஞர்கள், எத்தனை முயற்சிகள், செயற்கரிய செயல்கள்! சங்க காலம் தொட்டு தமிழ் இலக்கிய, இலக்கண வளர்ச்சியின் குறுக்குவெட்டுத் தோற்றம் மெல்லப் புலனாகத் தொடங்கியது. குறிப்பாகக் கடந்த இரு நூற்றாண்டுகளில் செல்லரித்த சுவடிகளைத் தேடிப் பெற்று பதிப்பித்த தமிழ்த்தாத்தா, வாழ்நாள் முழுதும் பாடுபட்டு முழு மகாபாரதத்தையும் தமிழில் மொழிபெயர்த்து கும்பகோணம் பதிப்பைக் கொண்டு வந்த ம.வீ. ராமானுஜாச்சாரியார், தமிழில் புறவயமான ஆய்வுமுறையின் முன்னோடி வையாபுரிப் பிள்ளை, யாழ்நூல் இயற்றிய விபுலானந்தர், பாரதியின் படைப்புகள் இன்று கிடைக்கக் காரணமான ரா.அ. பத்மநாபன்.. என்று எத்தனை மகத்தான Larger than life வாழ்க்கைகள். தன்னலமற்ற அர்ப்பணிப்புகள்! சொல்லித் தீராது. இன்று நாம் taken for granted ஆகப் பார்க்கும் பலவற்றிற்கும் பின்னால் உள்ள பெயர் அறிந்த, அறியாதவர்களின் தன்னலமற்ற உழைப்பை வணங்கத் தோன்றுகிறது.
தெ.பொ. மீ, வெள்ளைவாரணர், ஐராவதம் மகாதேவன்… என்று போகிற போக்கில் பெயர்களைச் சொல்லியிருக்கிறேன், கேள்விப்பட்டிருக்கிறேன். ஓவ்வொருவரையும் படித்து, ஆவணப்படுத்தும்போது அவர்களது பணியின் வீச்சு மலைக்கச் செய்தது. அவர்களில் சிலரையாவது அறிந்து கொள்ள இந்த அனுபவம் உதவியது. குர்அதுலைன் ஹைதர், பிரேம்சந்த், பங்கிம் சந்திரர் போன்ற இந்திய இலக்கியவாதிகளின் இலக்கியப் பணிகளை ஆழ்ந்து நோக்கும் வாய்ப்பு கிடத்தது. உபரியாக தினம் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.
ஆசிரியர் ஜா.ராஜகோபாலன் (ஜாஜா), உடன் பணிபுரியும் அரவிந்த் ஸ்வாமிநாதன், மதுசூதன் சம்பத், நீலி ரம்யா, லோகமாதேவி போன்றவர்களிடருந்து தினமும் கற்றுக்கொண்டிருக்கிறேன். என் நேர மேலாண்மை மேம்பட்டிருக்கிறது. வெட்டியாகப் பொழுதைக் கழிப்பது குறைந்து, ஒரு 20 நிமிடம் கிடைத்தாலும் ஒரு கட்டுரையைச் சரி பார்க்கலாமே என்றுதான் தோன்றுகிறது.
முக்கியமாக, புதிதாக அறிந்துகொள்வது, அறிந்தவற்றை செழுமைப்படுத்திக் கொள்வது என்று அறிதல் அளிக்கும் மகிழ்ச்சியும், இந்தப் பணியில் ஒரு துளியளவாவது பங்களிக்க முடிந்ததே என்ற ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது.
தமிழ்விக்கியின் பதிவுகளுக்கான விதிமுறைகள் என்ன? பதிவுகள் எப்படி மதிப்பாய்வு செய்யப்படுகின்றன?
- விரிவான ஆய்வு
- தகவல்களுக்குத் தக்க வலுவான சான்றுகள்/நம்பகத்தன்மை
- கறாரான மதிப்பீடுகள்/விதந்தோதுதல் இன்மை.
- கலைக்களஞ்சியத்துக்குரிய கச்சிதமான மொழிநடை;
- சுருங்கச் சொல்லுதல்
நான் பங்களிக்கத் தொடங்கியபோது முதல் பதிவு சரியாக அமைய ஒரு மாதத்துக்கும் மேல் எடுத்தது. நம்பிக்கை இழக்காமல் பொறுமையாக பல கட்டங்களாக மதிப்பாய்வு செய்து, ஒவ்வொன்றையும் விளக்கி, பதிவுகளைச் சீராக்க உதவிய மதுவுக்கு(மதுசூதனன் சம்பத்) என்றும் கடன்பட்டிருக்கிறேன். மெல்ல மெல்ல வடிவமும் உள்ளடக்கமும், மொழியும் பிடிபட்டன.
“ஏன் இலக்கியம் படிக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு உங்கள் பதில் ?
தனிமை விரும்பியான (introvert) எனக்கு எனது குறுகிய வாழ்வுக்கு வெளியே இலக்கியம் மூலம் விரிந்த பலப்பல வாழ்க்கைகளை, நிலப்பரப்புகளை, கலாசாரங்களை, மொழியினூடாகக் கற்பனை செய்து திளைக்க முடிகிறது. செய்ததையே திருப்பிச் செய்யும் அன்றாடத்தில் இருந்து கொண்டே ஒரு பிரம்மாண்டமான அக வாழ்வு அமைகிறது. நான் பெற்றவற்றில் பெரும்பான்மையும் வாசிப்பின் மூலம் வந்தவையே.
இலக்கியம் மனித மனதை, அதற்கும் சமூக அமைப்புகளுக்குமான உறவுகளை, வாழ்க்கையை அது நேர்கொள்ளும்போது ஏற்படும் சிக்கல்களை அறிய முயல்கிறது. ஒரு மனிதனைத் திருத்துவதோ, மனதை மாற்றுவதோ இலக்கியத்தின் நேரடிப் பணி அல்ல. இருந்தும் ஒரு சமுதாயத்தின் பண்பாட்டு அற விழுமியங்களை இலக்கியமே திரட்டி அளிக்கிறது. இலக்கியங்களில் உச்சகட்ட வெளிப்பாடுகளின் தருணங்களில் மனம் சிறிதளவாவது விரியத்தான் செய்கிறது. இலக்கிய வாசிப்பால் ஒரு துளியளவாவது சக மனிதர்களிடம் என் புரிந்துணர்வு ( empathy) அதிகரித்திருக்கிறது என்றே நினைக்கிறேன். அனுபவ எல்லைகள் விரிவடைவதால் சில சமயங்களிலேனும் மற்ற மனிதர்களை அவர்கள் இடத்திலிருந்து புரிந்து கொள்ள உதவுகிறது.
வாழ்க்கையிலிருந்து இலக்கியம் பிறக்குமானால் அந்த இலக்கியத்திலிருந்து வாழ்க்கைக்கும் சில பாதைகள் இருக்கலாம். நான் லௌகீக உறவுக் கணக்குகளில் சிக்கி வருந்தியிருந்த காலங்களில் ‘சோற்றுக்கணக்கு’ வெளியானது. மனதுக்குள் கதையைப் பிரித்து மேய்ந்துகொண்டிருந்தபோது சோறு என்பது ஒரு குறியீடு மட்டுமே என்று தோன்றியது. என் துக்கங்களில் பெரும்பான்மையும் நான் அடுத்தவருக்குப் போட்ட சோறு, அடுத்தவர் எனக்குப் போடாத சோறு என்று நான் மனதில் மாறி மாறிப் போடும் சோற்றுக்கணக்குதானே என்று உணர்ந்த கணம் எனக்கு மிகப் பெரிய அகவிடுதலையைக் கொடுத்தது. அதுபோல ஒவ்வொருவருக்கும் சில தருணங்கள் அமையலாம். இலக்கியம் நீதி போதனை இல்லை. ஆனாலும் இப்படிப்பட்ட தருணங்கள் வாசிப்பின் by products, உபரி நன்மைகள்.
இறுதியாக என் அன்னைக்கு படுத்தபடுக்கையிலான இறுதி நாட்களில் வெண்முரசு வாசிப்பு தந்த ஆசுவாசமும், நிறைவும் வாசிப்பு என்ன தரும் எனப் புரியவைத்தது.
இலக்கியம் சார்ந்து உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன ?
வாசிக்க வாசிக்க இன்னும் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியல் பெரிதாகிக் கொண்டே போகிறது. இன்னும் நிறைய பிறமொழி இலக்கியங்கள், சமகால, மொழியாக்க நூல்களை வாசிக்க வேண்டும். வாசிப்பை சரியான முறையில் எனக்குள் தொகுத்துக்கொள்ள வேண்டும்.
கம்பராமாயணத்தை முழுதாகப் பயில வேண்டும்.சங்க இலக்கியங்களையும் ஷேக்ஸ்பியரையும் ஐயும் ஆழ்ந்து வாசிக்க வேண்டும். இறுதியாக தமிழ் விக்கிக்கு என் உடலும், மூளையும் ஒத்துழைக்கும்வரை பங்களிக்கவேண்டும்.
நீங்கள் அமெரிக்க பள்ளி கணித ஆசிரியரும் கூட. அமெரிக்க கல்வி முறை குறித்து ஒரு எளிய அறிமுகம் தரமுடியுமா ?
தொண்ணூறு சதவீதத்திற்கும் மேலான அமெரிக்க மாணவர்கள் அரசு பள்ளிகளில்தான் பயில்கின்றனர். ஒரு பகுதியில் வாழும் குழந்தைகள் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில்தான் சேர முடியும். ஒரு அரசு பள்ளியின் தரம் அந்த பகுதியின் வீடு / ரியல் எஸ்டேட் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணி. தனியார் பள்ளிகள் உண்டு, ஆனால் கட்டணம் மிக அதிகம்.
கல்வி முக்கியமாக மாகாணங்கள் மற்றும் உள்ளூர் அளவில் நிர்வகிக்கப்படுகிறது. மத்திய அரசின் பங்கு (Federal Department of Education) மிகவும் வரையறுக்கப்பட்டது.
இங்கே பாடதிட்டங்களை எப்படி முடிவு செய்கிறார்கள் ?
அமெரிக்க கல்வி முறை inquiry based learning என்னும் உணர்ந்து ஆராய்ந்து கற்கும் முறையை அடிப்படையாகக் கொண்டது. ஆரம்பக் கல்வி காட்சி, ஒலி, வாசிப்பு, மற்றும் உடலியக்கம் சார்ந்த (Reading, Visual, audio, kinesthetic activities) கற்றல் முறையில் அமைந்தது. மனப்பாடமாகக் கற்பதைவிட புரிதலுக்கே முக்கியத்துவம் உண்டு. வரலாற்று நிகழ்வுகளைக் கற்பதோடு அந்த நிகழ்வுகள், அவற்றின் காரணங்கள், தாக்கங்கள் மற்றும் விளைவுகளைப் பகுப்பாய்வு (analyze) செய்யும் திறனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மொழிக்கல்வியில் மதிப்பீடுகள், வாசிப்புப் புரிதல்(comprehension) , எழுத்துத் திறன் மற்றும் மொழித் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.
பாடத்திட்டங்களை backward design முறையில் அமைக்கப்படுகின்றன. மாநில அளவில் பாடத்திட்டம் வரையறுக்கப்பட்டு, அது பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கல்வியின் தரம் ஒவ்வொரு மாநிலத்துக்குமான பொதுத் தேர்வின் மூலம் (Standardized testing) சோதிக்கப்படுகிறது. வரலாற்றுப்பாடத்தில் சில அம்சங்களைக் கற்பிக்கவோ, பாடத்திட்டத்திலிருந்து நீக்கவோ மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு.
பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் ?
ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் போது கற்பிக்கும் பாடம் மற்றும் நிலைக்கான உரிமம் (teacher’s license), கற்பிக்கும் முறை, பாடக்குறிப்புகள் (lesson planning) இவற்றுடன் கண்டிப்பு, மாணவர்களுடனான நல்லுறவைப் பேணல் , பல்வேறு வகையான மாணவர்களை, சூழல்களை வெற்றிகரமாகக் கையாளும் திறமை இவற்றிற்கு முன்னுரிமை. மாணவர்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள அலுவலர்களுக்கும் அவர்களைக் கையாளத்தக்க ஆளுமை அவசியமாகிறது.
உள்ளூர் அதிகாரிகள் உள்ளூர் மக்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற கொள்கையில்தான் அமெரிக்க அரசு இயங்குகிறது. பெரும்பாலான இடங்களில் ஷெரீஃப் (மாவட்ட போலீஸ் அதிகாரி), மாவட்ட நீதிபதிகள், மாவட்ட அரசு வழக்கறிஞர் (district attorney) ஆகியோர் உள்ளூர் மக்களால் தேர்தல் வழியே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதைப்போலவே அமெரிக்க அரசு பள்ளிகளை மேற்பாற்வையிடும் கல்வி வாரிய உறுப்பினர்கள் (school education board members) உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த உறுப்பினர்களே பள்ளிக்கான தலைமை அதிகாரிகளை நியமிப்பது, வரவு, செலவை கண்காணிப்பது உள்ளிட்ட பள்ளி நிர்வாக முடிவுகளை எடுப்பார்கள். இந்திய அரசு பள்ளிகளுக்கும், அமெரிக்க அரசு பள்ளிகளின் நிர்வாகத்திற்கும் இருக்கும் மிக முக்கியமான வித்யாசம் இது. தேர்தல் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் (decentralization) முக்கியமான அம்சம்.
அமெரிக்க கல்வி முறையில் சிறந்த அம்சம் சிறந்தது ? மேம்பட வேண்டிய அம்சம் எது ?
நடைமுறைச் சிந்தனை, சுய சிந்தனைக்கு ஊக்கமளித்தல், செய்முறைமூலம் கற்றல் (project based learning), உயர்நிலைப்பள்ளியில் பலதரப்பட்ட படிப்புகளுக்கான வாய்ப்பு, இசை, ஓவியம், கலை, விளையாட்டு போன்ற அம்சங்களுடன் இணைந்த கல்வி முறை, மாற்றுத் திறனாளிகள் மற்றும் நரம்பியல் வேறுபாடுகள் (neurodiverse) கொண்ட மாணவர்களுக்கான பிரத்யேக வசதிகள், சிறப்புப் பாடங்கள், இலவச பள்ளிக்கல்வி, மனப்பாடக் கல்வியை மறுத்தல் என்று பல சிறப்பம்சங்கள் உண்டு. வரலாறு, சமூகவியல் பாடங்களை மாணவர்களின் சுயசிந்தனை, பகுப்பாய்வு (analysis) கொண்டு அணுகும் முறை, Conceptual learning over procedural learning- கணிதத்தில் விதிகளை/சூத்திரங்களை மட்டும் கற்பிக்காமல் அவற்றின் மூலம், ஏன், எப்படி எதனால் உருவாக்கப்பட்டன என்பதை அறியச் செய்தல்,சூத்திரங்களையும்(formula) மனப்பாடம் செய்யத் தேவையில்லை, அவற்றை உபயோகப்படுத்தி கணக்குக்கு விடைகாணும் திறமை மட்டும் தேவை என்ற நோக்கு- இவை போன்றவை சிறப்பம்சங்கள்.
மேம்பட வேண்டிய அம்சமாக மனப்பாடமே தேவையில்லை என்பதன் மறுபக்கத்தைச் சொல்லலாம். இளம் வயதில் பெருக்கல் வாய்ப்பாடுகள் கற்கவேண்டியது அதிகம் வலியுறுத்தப்படாததால் எண்களுக்கிடையே உள்ள தொடர்பு பற்றிய சரியான புரிதல் 30% மாணவர்களுக்கு இருப்பதில்லை (என் அனுபவத்தில்). இது பின்னக் கணக்குகள் தொடங்கி மேல்வகுப்புகளில் கணிதக் கல்வியை மிகவும் பாதிக்கிறது. எல்லாவற்றையும் மனப்பாடம் செய்வது அவசியமில்லை. என்றாலும் சில எளிய அடிப்படை சூத்திரங்களை(formula) மனப்பாடமாக மனதில் நிறுத்திக் கொள்வதும் அவற்றை நினைவிலிருந்து மீட்டிக் கொள்வதும் பயனுள்ளது என்பது என் கருத்து. சூத்திரங்கள் மந்திரங்களைப் போன்றவை. உபயோகிக்க, உபயோகிக்க அவை திறந்து கொண்டு மேலதிகப் புரிதலை அளிக்கும். உதாரணமாக செவ்வகத்தின் பரப்பளவு, வட்டத்தின் பரப்பளவு இரண்டு சூத்திரங்களுமாவது மனப்பாடமாகத் தெரிந்தால் அவற்றைக் கொண்டு பல பல்கோணங்களின்(polygon) பரப்பளவைக் கணக்கிட்டுவிட முடியும்.
இது என் அனுபவத்தில் நான் அறிந்தது. மற்ற ஆசிரியர்களின் அனுபவம் வேறாக இருக்கலாம். கற்கும் விஷயங்களில் அவற்றின் நடைமுறைப் பயன்பாட்டை(real life application) இணைதல், தொழிற்கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் போன்றவையும் அமெரிக்கக் கல்வி முறையின் சிறப்பம்சங்கள்.
இறுதியாக நீங்கள் செய்யும் இந்த நேர்காணல் பணிக்கு நன்றிகள் பல.. நேர்காணல்களைத் தொடந்து வாசிக்கிறேன். ஓவ்வொருவரின் படைப்புலகையும் ஆழமாக அறிய முடிகிறது. தொடருங்கள்!