நேர்முகம் 10 : சங்கர் கோவிந்தராஜ்

சங்கர் ஓவியர். தீவிர இலக்கிய வாசகர். மிச்சிகன் புத்தக வாசிப்பு குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர். ட்ராய் நகரில் வசிக்கிறார். வலைதளம்: https://www.instagram.com/akashganga_art – தொடர்பிற்கு: shansapmail@gmail.com

உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், பின்புலம் பற்றி ?

நான் பிறந்து வளர்ந்தது நாமக்கல். கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் படித்து முடித்தேன். என் பெற்றோர் இருவரும் தையல் கலைஞர்கள். படிப்பை முடித்த பிறகு சென்னையில் சிலவருடங்கள் பணியாற்றினேன். கடந்த பதினாறு வருடங்களாக அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டிராய் நகரில் வசிக்கிறேன். Seating நிறுவனத்தில் பணி. எனது மனைவி மலர்விழியும் தகவல் தொழில்நுட்பத் துறையில்  பணிபுரிகிறார். எனக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் ஆதிரா, இளையவள் அத்ரி.

உங்களுடைய “மண்டலா” வகை ஓவியங்கள் எனக்குப் பிடித்தவை. ஓவிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ?

ஓவிய அறிமுகம் அம்மாவின் மூலமே எனக்குக் கிடைத்தது. அம்மா மிகத்திறமையாகக் கோலம் போடக்கூடியவர். மார்கழி மாதங்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மா கோலம் போடுவதைக் காணவே விடியற்காலையில் அவர்களுடன் எழுந்துவிடுவேன். முதலில் கண் விரியப் பார்க்க ஆரம்பித்து, பிறகு கோலம் தேர்வு செய்து கொடுத்து, பின்பு வழக்கமாக உள்ள கோலங்களில் வித்தியாசங்களை எப்படி கொண்டுவரலாம் என்று ஆரம்பித்தது. 

எங்கள் ஊரின் கோவில்களில் மேற்கூரைகளில் மண்டலா வகை ஓவியங்கள் இருக்கும். அமர்ந்து அதைப்பார்த்து நகலெடுத்துப் பொங்கல் தினங்களில் நானும் என் அம்மாவும் சேர்ந்து போடும் கோலம் எங்கள் பகுதியில் மிகப்பிரசித்தம். ஆரம்பத்தில் மண்டலா வகை ஓவியங்களில் என்னை ஈர்த்தது அவற்றின் வடிவமும் ஒழுங்கும் மட்டுமே. 

பின்னாளில் மண்டலா கலை குறித்து வாசிக்கத் தொடங்கியபோது, அது வெறும் அலங்கார வடிவம் அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன். இந்திய ஆன்மிக மரபுகளில் ஸ்ரீசக்ரம், யந்த்ரம் போன்ற வடிவங்களிலும், திபெத்திய புத்த மரபிலும், மண்டலா என்பது மனதை ஒருமுகப்படுத்தி அகப்பயணத்தை நோக்கிச் செல்லும் ஒரு தியானக் கருவியாகக் கருதப்படுகிறது. அந்தப் புரிதல் சிறுவயதில் கோவில்களின் மேற்கூரைகளில் என்னை ஈர்த்த வடிவங்களை வேறுவிதமாக பார்க்க வைத்தது. பிற்காலங்களில் அதில் நிறைய முயற்சிகள் செய்து பார்த்திருக்கிறேன். 


அதே சமயம் அம்மா தொடர்ந்து தொடர் கதைகளை வாசிக்கக் கூடியவரும் கூட. கல்கி, கோகுலம், ஆனந்த விகடனில் வரும் தொடர்களைப் படித்துத் தொகுத்து வைக்கக்கூடியவர். அதில் மணியம் செல்வம், மாருதி, சில்பி போன்ற ஓவியர்கள் உருவாக்கிய உலகம் என்னை வெகுவாகவே கவர்ந்தது. இவை இரண்டும் ஓவியத்தைக் குறித்த ஒரு புரிதலைக் கொடுத்த சமயத்தில், எங்கள் ஊரின் திறமையான பில் போர்டு ஆர்டிஸ்ட் ஒருவர் வரைந்த வயதான மூதாட்டியின்(கலைஞன் ஆர்ட்ஸ்) ஓவியம் என்னைத் தூங்க விடாமல் செய்தது. முகங்களில் இருந்த சுருக்கங்கள், சரும தோற்றங்கள் அவற்றிலிருந்த நுட்பங்கள் கதைகளுக்காக வரையப்படும் ஓவியங்களிலிருந்து முற்றிலுமாக வேறாக இருந்தது. அதன் ரகசியத்தை அறிய மனம் உள்ளூர ஏங்கிக்கொண்டு இருக்கிறது, இன்றும் கூட.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அந்த விளம்பரப் பலகையில் புதிய முகங்கள் தோன்றும். ஒவ்வொரு முறையும் அவற்றின் நுட்பங்களை நீண்ட நேரம் நின்று ரசிப்பேன். அந்த அனுபவங்கள் என் ஓவியப் பார்வையை மேலும் விசாலமாக்கின. பிறகு அதை அடைவதற்கான வழிகளைத் தேடினேன். அவர்களிடமே சிறிது காலம் பழகியும் அறிய முயன்றேன், என்னால் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை. நான் இருந்ததோ நாமக்கல். கல்வியைக் குறித்த புரிதல் வேறாக இருந்த ஊர். என்னிடம் திறமை உள்ளதென்பதை எனது பெற்றோர்கள் அறிந்திருந்தும் அதன் போக்கில் செல்ல விட அவர்களுக்கு தைரியம் வரவில்லை. அதைச் சோதித்துப் பார்ப்பதற்கான நேரம் நான் அமெரிக்கா வந்த பிறகே கிடைத்தது. அங்கே ஆரம்பித்து அதற்கான ஆசிரியர்களைத் தேடி அடைய இலக்கியம் எனக்குக் கைகொடுத்தது.

முதல் ஓவியம் எப்போது வெளியானது ?

முதல் ஓவியம் பரவலாக அறியப்பட்டது நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது. பாரதியார் ரெளத்திரமாக நிற்கும் ஒரு ஓவியம் வரைந்து மாவட்ட அளவில் வெற்றி பெற்றேன். மாநில அளவில் கலந்து கொள்ள சென்னை சென்ற அனுபவம் சிறப்பாக இருந்தது. பல மாவட்டங்களிலிருந்து வந்த மாணவர்கள் மிகத் திறமையான ஓவியர்களாக இருந்தார்கள். ஓவியத்தின் மீது இன்னும் தீவிரமாக ஈடுபடும் ஆர்வம் அப்பொழுது அதிகமானது.

பின்னர் ஓவியம் வரைவதற்கு முறையான பயிற்சி எடுத்துக்கொண்டீர்களா?

கல்லூரி காலங்களிலும் தொடர்ந்து வரைந்து கொண்டிருந்தேன். ஆனால் முறையான பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அப்போது வலுவாக இருக்கவில்லை. பின்னாளில் அமெரிக்கா வந்த பிறகு அதற்கான நேரமும் வாய்ப்பும் அமைந்தது. மிச்சிகனின் பிர்மிங்ஹாம் நகரில் உள்ள BBAC-ல் ஓவியப் பயிற்சியில் சேர்ந்தேன். கேன்வாஸை அணுகுவது, நிறங்களைத் தேர்வு செய்வது, தூரிகைகளின் தன்மையைப் புரிந்துகொள்வது போன்ற அடிப்படை விஷயங்களை அங்குதான் கற்றுக்கொண்டேன். அங்கே என் மனைவியையும் மகளையும் 4’ × 3’ அளவிலான பெரிய கேன்வாஸில் வரைந்தேன். சிறுவயதில் சார்ட் பேப்பர்களில் பெரிய அளவில் வரைந்து பார்த்த அனுபவம் இருந்தாலும், தொழில்முறை நேர்த்தியுடன் பெரிய கேன்வாஸில் ஒரு ஓவியத்தை வரைந்தது  அங்குதான். அந்த ஓவியம் நண்பர்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. அப்போதுதான் எனது கற்றலை அடுத்த கட்டத்திற்கு மிகவும் தீவிரமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் அலுவலக நேரமும் வகுப்பு நேரமும் ஒன்றுடன் ஒன்று மோதியதால், அந்தப் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை.

அதன் பிறகு ஒன்றிரண்டு ஆண்டுகள் சுயமுயற்சியில் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். நிறைய முயற்சி செய்தும் நான் மனதில் நினைத்திருந்த இடத்தை அடைய முடியவில்லை. அதே காலத்தில் இலக்கியத்தின் மீதான ஈடுபாடும் அதிகரித்தது. ஓவியர்களின் வாழ்க்கை வரலாறுகள், கலை பற்றிய வாசிப்புகள் ஆகியவை ஒரு ஓவியன் எதைத் தேட வேண்டும் என்பதில் எனக்குப் புதிய புரிதலை அளித்தன. எமர்சன் இலக்கிய முகாமில் (பூன், 2022) எழுத்தாளர் ஜெயமோகன் கூறிய ஒரு அறிவுரை மீண்டும் எனக்கான ஆசிரியரைத் தேட வைத்தது. சில ஆசிரியர்களிடம் நான் எதிர்பார்த்த வழிகாட்டுதல் கிடைக்கவில்லை. சிலருக்கு என்னுடைய தேடல் புரியவில்லை. சிலரின் கற்பித்தல் முறை எனக்குப் பொருந்தவில்லை. அப்போது நான் கண்டடைந்தவர்தான் எம். பி. சரவணன் (சித்திரக்காரன்) சார்.

என்னுடைய திறனையும் தேடலையும் முழுமையாகப் புரிந்துகொண்டு வழிநடத்தும் ஆசிரியராக அவரை நான் பார்க்கிறேன். அவர் எனக்குப் பயிற்சிகளை பட்டியலிட்டு கொடுப்பதில்லை. ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு ஓவியத்தை ஆரம்பித்து, அதை முடிக்கும் வரை அவர் பகிரும் பார்வைகளும் அனுபவங்களும் எந்தப் பாடத்திட்டத்திலும் கற்றுக்கொடுக்க முடியாதவை. நான் அவரிடம் இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பேன். அதே நேரத்தில் அவரது பார்வை நான் வரையும் ஓவியத்தின் மீது இருக்கும். எப்போது என்ன சொல்ல வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதை அறிந்த ஒரு ஆசிரியரின் பண்பு அவரிடம் இருக்கிறது. பல நேரங்களில் என்னை மேலும் வரைய ஊக்குவிப்பதும் அவர்தான். சில சமயங்களில் என்னை அவருக்கு இணையாக வைத்து பேசுவார், அது அவரது பெருந்தன்மை.

ஒரு நல்ல ஆசிரியர் நமக்கு தொழில்நுட்பத்தை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை நம்முள் இருக்கும் கலைஞனை வெளிக்கொணர உதவுகிறார். அந்த வகையில், என்னுடைய ஓவியப் பயணத்தில் மிக முக்கியமான திருப்பமாக நான் சந்தித்தவர் எம். பி. சரவணன் சார். ஒரு கலையை வெறும் வாழ்வாதாரத்திற்கான கருவியாக மட்டும் அணுகினால், காலப்போக்கில் அதன் ஆன்மாவை இழந்து விடுகிறோம். ஆனால் அந்தக் கலையை நேர்மையாகவும் முழு அர்ப்பணிப்புடனும் அணுகினால், அது நம்முடைய உள்ளார்ந்த தேடலையும் நிறைவேற்றும் வாழ்வாதாரத்தையும் இயல்பாக அமைத்துத் தரும் என்பதே என் நம்பிக்கை. 

உங்களுக்கு பிடித்த ஓவியர் யார் ?

கிரேட் மாஸ்டர்ஸ் என்று கருதப்படும் மேற்கத்திய ஓவியர்கள் பால் கோகேன், வான் கோ, பிக்காஸோ, நார்மன் ராக்வெல் போன்றவர்களின் படைப்புகள் மிகவும் பிடிக்கும். அவர்களுடைய வடிவ சிந்தனைகள், வண்ண மொழி, மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் என்னை எப்பொழுதும் கவர்ந்திருக்கிறது. அதே நேரத்தில்  நமது ஊர் ஓவியர்கள் ஆதிமூலம் அவர்களின் ராஜா வரிசை ஓவியங்கள், பாஸ்கரன் அவர்களின் பூனை abstract ஓவியங்கள், MP சரவணன் சித்திரக்காரன் அவர்களின் பெண்கள், மார்க் ரத்தினராஜ் அவர்களின் சமகால ஓவியங்கள், மனோகர் தேவதாஸ் மதுரை ஓவியங்கள் தனித்துவமான கலைமொழியை கொண்டவை. அவற்றில் நமது மண் சார்ந்த நினைவுகள் இருப்பதால் மனதுக்கு மிக நெருக்கமானவை. 

“எதற்காக வரைகிறேன்?” என்றால் உங்கள் பதில் என்ன ?

என்னைத் திருப்திப்படுத்திக்கொள்ளவே வரைகிறேன். ஆனால் ஒவ்வொரு முறை ஓவியத்தை முடித்த பிறகும், ஒரு பெரும் அதிருப்தியே எஞ்சுகிறது. வரையும் ஒவ்வொரு தருணத்திலும் எனது எல்லைகளையும் இயலாமைகளையும் எதிர்கொள்கிறேன். நான் நினைத்ததை முழுமையாக வெளிக்கொணர முடியாமல், அந்தக் குறைகளைச் சமரசம் செய்து வேறொன்றை உருவாக்குகிறேன். அதனால் ஓவியம் வரைவது எனக்கு ஒரு படைப்பூக்கமிக்க போராட்டமாகவே இருக்கிறது. நான் ஒன்றை உத்தேசித்து வேறொன்றைப் பெறுகிறேன். ஓவியம் முடிந்த அந்தக் கணத்தில், என்னால் செய்ய முடியாத அனைத்தும் என்னுள் ஒரு வெறுமையை உருவாக்குகிறது. அந்த வெறுமையோடு உரையாடி, அதிலிருந்து என்னை மீட்க  எனக்குத் தெரிந்த வேறொன்றைச் செய்து மனதை புதுப்பித்து அடுத்த ஓவியத்திற்குத் திரும்புகிறேன். நான் உத்தேசிப்பதற்கும் என்னுடைய இயலாமைகளுக்கும் இடையே நிகழும் இந்தப் தேடல், என்னுடைய ஓவியப் பயணத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது என்று நம்புகிறேன். ஒருநாள் நான் நினைத்ததை முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்ற அந்தச் சிறிய நம்பிக்கையும், அதனால் கிடைக்கும் திருப்திக்கான தேடலும்தான் என்னைத் தொடர்ந்து வரைய வைக்கின்றன.

எழுத்தாளர் ஜே.பி. சாணக்கியா சமீபத்தில், “எதைச் செய்யாமல் உங்களால் இருக்க முடியாதோ, அதுவே நீங்கள்” என்று கூறியிருந்தார். அந்த அளவில் பார்த்தால், வரையாமலும் வாசிக்காமலும் என்னால் இருக்க முடியாது. அவை இரண்டுமே எனது வாழ்வின் இயல்பான வெளிப்பாடுகள்.

சமீபத்தில் வரைந்த இளையராஜா ஓவியம் மிக அழகாக இருந்தது. அது குறித்து ?

வேறு எந்த நிற முகங்களை விடவும் கறுத்த முகம் மிகவும் கவர்ச்சியானவை. மேலும் கறுத்த முகங்களில் விழும் ஒளி நமக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும். அவ்வொளி துல்லியமாக இருக்கும். எந்த நிற ஒளி முகத்தில் படுகிறதோ அது அந்த நிறமாகவே பிரதிபலிக்கும், கருமை நிற தோலில் ஒளியும் நிழலும் உருவாக்கும் ஆழம் என்னை மிகவும் கவர்கிறது. பரிட்சார்த்தம் செய்வதற்கு ஏற்ற முகம் கறுத்த முகம். இளையராஜா நம் வாழ்வின் ஒரு பகுதி. இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழகத்தின் புகழ் பெற்ற ஓவியர்கள் அவரது 80வது பிறந்த நாளை முன்னிட்டு இளையராஜாவை வரைந்தார்கள்.ஒவ்வொரு ஓவியரும் அவரை அணுகிய விதம் வியப்பாக இருந்தது. எனக்கு அவரை வரைய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அவருடைய ஆளுமையை கேன்வாஸில் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உடனே வரவில்லை. பிறகு தொடர் பயிற்சி மற்றும் கற்றல் அவரை வரைய தைரியம் கொடுத்தது. ஆனால் வரைந்து முடித்து ஒரு மாதம் கழித்தே எனக்குப் பொதுவெளியில் பகிர தைரியம் வந்தது. வைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏன் என்று தெரியவில்லை. இப்பொழுதும் அவ்வோவியத்தைப் பார்க்கும் பொழுது கூட ஒரு நெருடல் உண்டாவதைத் தவிர்க்க முடியவில்லை. எனது குரு ஓவியர் MP சரவணன் அவர்களின் நுட்பமான அறிவுரைகள் பெரிதும் உதவியாக இருந்தது. அவரது தலையாட்டலுக்காகவே பகிராமல் காத்திருந்தேன். 

உங்களுடைய ஓவியம் வரையும் முறை என்ன ? (பயிற்சி, இடம், நேரம், ஒரே அமர்வில் வரைவீர்களா? )

எனது வீட்டின் அடித்தளத்தில் எனக்கான ஒரு கலைக்கூடத்தை அமைத்திருக்கிறேன். நான் அக்ரிலிக் மற்றும் நீர் வண்ண ஓவியங்களை வரைவதால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து வரைவது தான் சுலபம். ஆகவே பெரும்பாலும் அங்கு அமர்ந்து வரைவது தான் வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக வார இறுதியில் நண்பர்களுடன் நேரம் கிடைக்கும் பொழுது Plein-Air (திறந்தவெளிகளில் ஓவியம் வரையும் முறை) செய்துகொண்டும் இருக்கிறேன். தினமும் இரவு தூங்குவதற்கு முன் குறைந்தது அரை மணி நேரமாவது வரைவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். வாரம் ஒரு நாள் எனது குரு சரவணன் அவர்களிடம் இரண்டு மணிநேரம் செலவிடுவேன். அது வெறும் பயிற்சியாக மட்டும் இல்லாமல் ஓவியம் சார்ந்த உரையாடல்களாகவே அமையும். நீர் வண்ண ஓவியங்கள் பெரும்பாலும் ஒரே அமர்வில் வரைந்து முடித்துவிடுவேன். அவை சிறியதாக இருப்பது ஒரு காரணம். மற்றவைகளை பல அமர்வுகளில் சந்தேகங்களை நிவர்த்தி செய்து நிவர்த்தி செய்து, கற்று ஓவியத்தை முடிப்பேன். எனது ஓவிய  கூடத்தில் நிறைவு பெறாமல் இருக்கும் ஓவியங்கள் பல. அவையும் என்னுடன் சேர்ந்து கற்றுக்கொண்டே இருக்கின்றன என்று தோன்றுகிறது. 

⁠நீங்கள் இணைய இதழ்களில் தொடர்களுக்கு Illustration ஓவியங்கள் வரைந்திருக்கிறீர்கள். உங்களுடைய விருப்பமான ஓவிய வகைமை எது ? எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் ?

சிறுவயதில் மணியம் செல்வம் அவர்களின் Illustration ஓவியங்கள்தான் என்னை முதலில் மிகவும் ஈர்த்தன. அதன் பிறகு படிப்படியாக ரியலிசம் வகை ஓவியங்களின் மீது என் கவனம் திரும்பியது. ஒரு கலைஞனாக நமக்கான பாதையைத் தேடத் தொடங்கும்போது பல்வேறு வகைமைகளில் முயற்சி செய்து பார்ப்பது இயல்புதான். அந்த வகையில் இணைய இதழ்களுக்காக இல்லுஸ்டிரேஷன்களும் வரைந்தேன். ஆனால் காலப்போக்கில் அது என் இயல்புக்கு மிகவும் பொருத்தமான ஓவிய முறை அல்ல என்பதை உணர்ந்தேன். நான் ஓவியம் வரைவது மிகவும் பொறுமையும், தொடர்ச்சியான ஈடுபாடும் தேவைப்படும் ஒரு செயல்முறை. ஒரு படைப்பை நான் முழுமையாக திருப்தியடையும் வரை செதுக்கிக்கொண்டே இருப்பேன். ஆனால் illustration ஓவியங்களில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் படைப்பை முடித்து அளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். அந்த அவசரத்தில் தரம் குறைவான ஒரு படைப்பு வெளியாவது எனக்கு விருப்பமில்லை. நேரமின்மையும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகவே என் மனதிற்கு நெருக்கமான ஓவிய வகைமைகள் ரியலிசமும் இம்ப்ரெஷனிசமும் தான். இதில் நேரமும் சிந்தனையும் என் கட்டுப்பாட்டில் இருப்பதுவும் ஒரு காரணம். அதனால்தான் அந்த வகை ஓவியங்களில்தான் நான் அதிக மகிழ்ச்சியுடன் இயங்குகிறேன்.

ஓவியம் சார்ந்த எதிர்கால திட்டங்கள் என்ன ?

ரியலிசம் மற்றும் இம்ப்ரெஷனிசம் பாணி ஓவியங்களே எனக்கு மிகவும் நெருக்கமானவை. தற்போது என் பயிற்சியும் சிந்தனையும் அந்தப் பாணிகளை மேலும் செம்மைப்படுத்துவதில்தான் இருக்கின்றன. எதிர்காலத்தில் என் படைப்புகளை கேலரிகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்பது என் கனவு. என்னைப் போன்ற புலம்பெயர் ஓவிய நண்பர்கள் சிலர் இங்கு உள்ளனர். விசா தொடர்பான நடைமுறைகள் காரணமாக பெரிய கேலரிகளை அணுகுவது எளிதல்ல. அதனால் முதற்கட்டமாக எங்களுடைய படைப்புகளை நண்பர்களுக்கும் கலை ஆர்வலர்களுக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு குழுக் கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இலக்கிய அறிமுகம் குறித்து ?

எனது அம்மாதான் எனக்கு வாசிப்பின் அறிமுகத்தை ஏற்படுத்தியவர். கல்கி, சாண்டில்யன்  எழுத்தை வாசித்து தான் வளர்ந்தேன். சென்னைக்கு வந்த புதிதில் உலக சினிமாக்களின் அறிமுகங்கள் கிடைக்க ஆரம்பித்தன. அவற்றைத் தேடித் தேடிப் பார்த்தேன். அப்படிப் பார்த்ததில் “Central Station” என்கிற பிரேசில் படம் என்னை வெகுவாகக் கவர்ந்தது, பிறகு சாத்தியஜித் ரேவின் “Appu trilogy” யும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இப்படங்கள் நமக்குக் காட்டிய உலகம், மனித மனங்கள் வேறுவகையான உணர்வைக் கொடுத்தது. எனக்குள் ஒரு வேகத்தடையை உருவாக்கி நிதானத்தைக் கொடுப்பதை உணர்ந்தேன். எல்லாவகையான படங்களையும் பார்த்து அவற்றின் பற்றாக்குறையை  உணர்ந்த பொழுது அசோகமித்திரனின்  தண்ணீர் நாவலும், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையும் அவ்வகையான உள நிலையை என்னுள் ஏற்படுத்தியதை உணர்ந்து தீவிர இலக்கிய வாசிப்பில் நுழைந்தேன். 

உங்களுக்குப் பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள் யார் ?

எல்லா எழுத்தாளர்களிடம் இருந்தும் எதாவது ஒன்றைக் கற்றுக்கொள்கிறேன். இருப்பினும் அசோகமித்திரன், கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் எனது ஆதர்சங்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷ்ய இலக்கியங்களை வாசித்துக் கலந்துரையாடி வருகிறோம். தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்தை நான் நெருக்கமாக உணர்கிறேன். மனித மனங்களின் சிக்கல்களையும் வாழ்வின் அடிப்படைக் கேள்விகளையும் அவர் அணுகும் விதம் என்னை அவருடன் மிக நெருக்கமாக இணைக்கிறது. ஆல்பர்ட் காம்யு, கஃப்காவும் வாசித்திருக்கிறேன். அவர்களது உலகமும் புரிகிறது, யதார்த்தத்தை உணர்ந்து வாழ உதவுகிறது. அபுனைவுகளில் டி. தருமராஜ் அவர்களின் கட்டுரைகள் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக வரலாற்றை அணுகவும், அதை விமர்சனப் பார்வையுடன் புரிந்துகொள்ளவும் அவரது எழுத்துகள் எனக்கு உதவியுள்ளன.

நீங்கள் ஒருங்கிணைக்கும் மிச்சிகன் புத்தக வாசிப்பு குழுமம் குறித்து ?

எனது வாசிப்புப் பயணத்தில் மிச்சிகன் தமிழ் ஆர்வலர்கள் குழு மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. கலையரசி அவர்கள் தொடங்கிய இந்தக் குழு எனக்கு பல நல்ல வாசக நண்பர்களை அறிமுகப்படுத்தியது. ப்ரவீனா, ராம், மலர்விழி மணியம், சின்னையா குறிப்பிடத் தகுந்தவர்கள். லக்ஷ்மண் என் நீண்டநாள் குடும்ப நண்பர். அவரை இந்தக் குழுவில் இணைத்தேன். அவரது வாசிப்பும், குறிப்பாக சிறுகதைகள் பற்றிய பார்வையும் மிகவும் தனித்துவமானது. அது இலக்கியத்தை அணுகுவதற்கு எனக்குப் புதிய கோணங்களைத் தந்தது.பின்னர் மதுநிகாவின் அறிமுகம் கிடைத்தது. அவரது வருகை வாசிப்பில் ஒரு தீவிரத்தையும், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையையும் உருவாக்கியது. இந்தக் குழுவின் மூலம் எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளை வாசித்திருக்கிறோம். பல எழுத்தாளர்களையும் சந்தித்து உரையாடியிருக்கிறோம். தற்போது போரும் வாழ்வும் (War and Peace) வாசிப்பை முடித்துவிட்டு கரமசோவ் சகோதரர்கள் நாவலை நிறைவு செய்யும் நிலையில் இருக்கிறோம். அடுத்ததாக புத்துயிர்ப்பு வாசிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதைத் தவிர இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை “வாசகர் சந்திப்பு” என்ற பெயரில் பூங்காக்களிலோ நூலகங்களிலோ சந்தித்து இலக்கியம் குறித்து உரையாடுகிறோம். லக்ஷ்மண் மூலமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அறிமுகமானது. பூன் முகாம்கள், நண்பர்களின் செயல்பாடுகள் ஆகியவை வாசிப்பிலும் ஓவியத்திலும் தொடர்ந்து இயங்கும் ஊக்கத்தை அளிக்கின்றன. இப்படிப்பட்ட இலக்கியச் சுற்றம்தான் வாசிப்பை என் வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாற்றியது.

உங்களுடைய சிறுகதைகள் யாவரும், உயிர்மை இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. நீங்கள் நல்ல பாடகரும் கூட. அந்த அனுபவங்கள் குறித்து ?

தொடர்ந்து வாசிக்கும் ஒருவருக்கு, ஒரு கட்டத்தில் கதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் வருவது மிகவும் இயல்பானது. எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அந்த சமயத்தில் மிச்சிகன் தமிழ் சங்கம் லக்ஷ்மன் தலைமையில் ஒரு எழுதுபட்டறையை ஏற்பாடு செய்திருந்தது. அதில் நான், மதுநிகா மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறுகதைகள் எழுதுவதில் தொடர்ந்து முயற்சிகள் செய்தோம். எங்களுடைய கதைகளை வாசித்து, அவற்றின் பலம், பலவீனங்களைச் சுட்டிக்காட்டி, செம்மைப்படுத்துவதில் லக்ஷ்மன் மிகவும் உதவியாக இருந்தார். அவரது விமர்சனப் பார்வையும் ஊக்கமும், கதைகளை இலக்கிய இதழ்களுக்கு அனுப்பும் தன்னம்பிக்கையை எனக்கு அளித்தது. அப்படித் தரமானவை என்று நான் கருதிய சில கதைகளைப் பல இதழ்களுக்கு அனுப்பினேன். அவற்றில் யாவரும் இதழில் “என்னை கொன்று தின்ன அப்படி ஒரு ஆசையா” என்ற சிறுகதை வெளியானது. (நான் வைத்திருந்த தலைப்பு “அந்தந்தலை”. இதழில் வெளியானபோது தலைப்பு மாற்றப்பட்டது.) உயிர்மை இதழில் “இரைச்சல்” என்ற சிறுகதையும் வெளிவந்தது. பின்னர் “இன்னுமொரு அவள்” என்ற சிறுகதை பெட்னா இலக்கியக் கழகம் நடத்திய போட்டியில் முதல் பரிசைப் பெற்றது. அந்த அங்கீகாரங்கள் தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தை அளித்தன. ஆனால் அதன் பிறகு, வாசிப்பிலும் ஓவியத்திலும் அதிக நேரம் செலவிடத் தொடங்கியதால் எழுத்தில் அதே அளவு கவனம் செலுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் எழுதுவதற்கு ஒரு விதமான தடை என்னுள் உருவாகிவிட்டது. அதைத் தாண்டி மீண்டும் எழுத வேண்டும் என்ற ஆசை இன்றும் இருக்கிறது. 

இசையும் என் வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. சிறுவயதிலிருந்தே எனக்கு நன்றாகப் பாடக்கூடிய திறன் இருந்ததால், இசையின் மீது இயல்பாகவே ஒரு ஈர்ப்பு உருவானது. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு சில காலம் முறையாக இசையும் கற்றுக்கொண்டேன். ஆனால் கல்லூரி வாழ்க்கை தொடங்கிய பிறகு அதைத் தொடர்ந்து பயில முடியவில்லை. இன்றும் கர்நாடக சாஸ்திரிய இசையின் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் தற்போது ஓவியத்தில் முழு கவனத்தையும் செலுத்த விரும்புவதால், இசையை ஒரு தொழில்முறை முயற்சியாக அல்லாமல், எனக்கான மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறேன். மனம் விரும்பும் நேரங்களில் பாடுவதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

கலைகளில் ஏ.ஐ தொழில்நுட்ப பயன்பாடு குறித்து உங்கள் பார்வை ?

ஒரு கலைஞனை பொறுத்தவரை, AI என்பது ஒரு வகையில் குறுக்குவழிதான். மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் இடம் எது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும் என்று நம்புகிறேன். AI எனது ஜனரஞ்சக தேவைகளுக்கு உபயோகித்து கொள்கிறேன், உதாரணத்திற்கு மேடை அலங்காரங்களுக்கு, பதாகைகளுக்கு (flyers), சில சமயங்களில் ஆரம்பகட்ட மாதிரிகளுக்கு, தொழில்நுட்பம் சார்ந்த தேவைகளுக்கு உதாரணமாக ஓவியக் கோட்பாடுகளுக்கு, வரலாறு, அல்லது தகவல்களைத் தேடுவது போன்றவற்றிற்கு பயன்படுத்துகிறேன்.

ஆனால் என் உள்ளார்ந்த தேடலுக்கோ, ஒரு படைப்பின் ஆன்மாவைத் தேடும் முயற்சிக்கோ AIஐ நான் பயன்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு எனது மண்டலா ஓவியங்களில் AI பயன்படுத்துவதில்லை. சொல்லப்போனால், எட்டு வருடங்கள் முன்பு இந்த தொழில்நுட்பமே பரவலாக பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு வரைந்தவை. இளையராஜா, சித்தார்த்தா ஓவியங்களில் முயற்சி செய்தவை மற்றும் பெரும்பாலான அக்ரிலிக் ஓவியங்களில் நான் முயற்சி செய்தவைகளில் AI ஆல் எப்படியும் உதவி இருக்க முடியாது. ஏனெனில் ஒரு கலைஞனின் அனுபவம், உணர்வு, தயக்கம், தவறுகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் வழியே உருவாகும் படைப்புப் பயணத்தை அது மாற்ற முடியாது. மேலும் AI சில நேரங்களில் தேவைக்கு அதிகமாகவும், சில நேரங்களில் குறைவாகவும் தகவல்களை வழங்கும். மனதில் உத்தேசித்திருக்கும் நுண்ணிய உணர்வை முழுமையாக பிரதிபலிப்பது அரிது. என்னைப் பொறுத்தவரை, AI வாழ்க்கையை நகர்த்தத் தேவைப்படலாம், ஆனால் வாழ அல்ல. அது ஒரு துணைக்கருவி மட்டுமே.

—-

நேர்முகம் உதவி: பிரமோதினி

Discover more from Viswanathan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading