Category: Interview

  • நேர்முகம் 3 : ஜெகதீஷ் குமார்

    நேர்முகம் 3 : ஜெகதீஷ் குமார்

    ஜெகதீஷ் குமார் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அமெரிக்காவின் தெற்கு கரோலைனா மாகாணம் சார்ல்ஸ்டன் நகரில் வசிக்கிறார். தமிழ் விக்கி: https://tamil.wiki/wiki/ஜெகதீஷ்குமார்.

    எமர்சன் இலக்கிய முகாம், பூன்(2022) இல் ஜெகதீஷை முதலில் சந்திதேன். சிறுகதை அமர்வில் எழுத்தாளர் அசோகமித்ரனின் “பிரயாணம்” கதை குறித்து உரை ஆற்றினார். தெளிவான உச்சரிப்பு, கச்சிதமான உரை. அவர்மீது எனக்கு உடனடியாக ஒரு மதிப்பும், அன்பும் உருவானது. கடந்த மூன்று வருடங்களில் மொழிபெயர்ப்பு, சிறுகதை தொகுதி, தொகுப்பாசிரியர் என தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆறு நூல்கள் வெளிவந்துள்ளன. ஜெகதீஷின் வலைதளம்: https://jegadeeshk.blogspot.com

    “Swaying, Flowing”, Turiya Press (2026) ஆங்கில சிறுகதை தொகுதி சமீபத்தில் வெளியானது.

     

    உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், பின்புலம் பற்றி ?

    பிறந்த ஊர் கோயம்புத்தூர். ஆனால் வளர்ந்து சில காலம் ஆன பிறகுதான் அங்கு மீண்டு திரும்பி சில ஆண்டுகள் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தேன். ஒரு தம்பி, ஒரு தங்கை. சிறுவயதில் தம்பியும், நானும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதால் எங்களைப் பிரித்து வைப்பதற்காக என்னை என் அப்பாவழி தாத்தா வீட்டில் குளித்தலையில் விட்டு விட்டு எங்கள் குடும்பம் சென்னையில் இருந்தது. தாத்தா வீட்டில் இருப்பதை நான்தான் தேர்ந்தெடுத்தேன் என்று பலகாலம் நம்பவைக்கப்பட்டிருக்கிறேன். தாத்தா குளித்தலையில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராக இருந்தவர். அவர் பணிக்காலத்தில் கட்டிய ஏதோ கட்டிடத் திறப்பு விழாவுக்கு அப்போதைய எம்.எல்.ஏ கருணாநிதி வந்து திறந்து வைக்க, கண்ணதாசன் வாழ்த்துக் கவிதை எழுதிக் கொடுத்ததையும், விழாவில் கே.பி. சுந்தராம்பாளின் பாட்டுக் கச்சேரி நடந்ததையும் தாத்தா என்னிடம் கதைகதையாகச் சொல்லியிருக்கிறார். புனைவு எழுதும் திறன் எனக்கு அவரிடம் இருந்து கூட வந்திருக்கலாம். அவர் பணி ஓய்வு பெற்றதும் அவருடன் கோவை சென்று அவரது மகன்கள் (என் சித்தப்பாக்கள்) ஆதரவுடன் சில காலம் வாழ்ந்தோம். பின் ஒன்பதாம் வகுப்பின் முடிவில் என் பெற்றோருடன் இணைந்து கொண்டேன். அப்பாவின் பணி காரணமாக அரியலூரில் மேநிலைப் படிப்பு, ஈரோட்டில் இளங்கலை படிப்பு என்று பல ஊர்களில் வாசம் நிகழ்ந்திருக்கிறது. இப்போது என் பெற்றோர் ஈரோடு மாவட்டம் குப்பாண்டபாளையத்தில் வசித்து வருகின்றனர்.

    இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ? 

    அம்மாவுக்கு வாசிக்கப் பிடிக்கும். நான் வயிற்றில் இருந்த போது நாவல்களாக வாசித்துத் தள்ளியிருக்கிறார்கள். சாண்டில்யன், கல்கி ஆகியோரின் நாவல்கள். நான் மிகச் சிறுவயதிலேயே வாசிக்கத் துவங்கி விட்டேன். நாலு அல்லது ஐந்து வயதிலேயே அம்புலிமாமா, படக்கதைகள், மாயாஜால நாவல்கள், என்று வாசித்துக் கொண்டிருந்தேன். ராஜாஜியின் சக்ரவர்த்தித் திருமகன் நினைவு தெரிந்து வாசித்த பெரிய நூல். விகடன், கல்கி ஆகிய இதழ்களின் தீபாவளி மலர்களில் எண்பதுகளின் இறுதியில் வாசித்த கதைகளில் சில இன்னும் நினைவிருக்கின்றன. வயது ஏற ஏற ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பிகேபி, சுபா என்று கிரைம் நாவல்களாக வாசித்துக் கொண்டிருந்தேன்.

    உண்மையான இலக்கிய அறிமுகம் என்பது அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு நாவல் மூலமாகத்தான் நிகழ்ந்தது. அது இலக்கியப் புனைவு என்றெல்லாம் தரம் பிரிக்கத் தெரியாத பதினாலு வயதில் அதை வாசித்தேன். அ.மி ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்தினார். நான் அறிந்த உலகம்தான். ஆனால் நான் பார்க்காத கோணம். அந்த வயதடைதல் நாவல்தான் உண்மையில் இலக்கியத்தில் நான் வயதடைவதற்கும் காரணமாக இருந்தது என்று இப்போது தோன்றுகிறது.

    இலக்கியத்தில் தொடர்ந்து ஈடுபடத்தொடங்கியது கல்லூரி முதலாண்டின் போதுதான். அப்போதும் நிறைய வாசித்துக் கொண்டிருந்தேன். சாண்டில்யனிலிருந்து முன்னேறி சுஜாதா, பாலகுமாரன், வைரமுத்து, போன்றோர்களை வாசித்துக் கொண்டிருந்த காலம். என் ஆங்கிலப் பேராசிரியர் எத்திராஜ் அகிலன் (காலச்சுவடுக்காக ஓரான் பாமுக் நாவல்களை மொழிபெயர்த்தவர்) எனக்கு நவீன இலக்கியம் பற்றி அறிமுகம் செய்தார். கணையாழி, சுபமங்களா போன்ற இதழ்களை எனக்குத் தந்து வாசிக்கச் செய்தார். தீவிர இலக்கியம் குறித்த அறிமுகம் நிகழ்ந்தது.

    உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள் யார் ?

    தமிழில் அசோகமித்திரன், தி. ஜானகிராமன், சுஜாதா, லா.ச.ரா, பிரபஞ்சன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர். அசோகமித்திரன்தான் ஆதர்சம். பிறமொழிகளில் ஹெர்மென் ஹெஸ், டால்ஸ்டாய், தாஸ்தாவ்ஸ்கி, ஜோசஃப் கான்ராட், கஸூவோ இஷிகுரோ, கார்மாக் மெக்கார்த்தி, இயன் மக்யூவன், அமோர் டவல்ஸ், அலிஸ் மன்ரோ என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். பிடித்த எழுத்தாளர்கள் என்பதைவிட பிடித்த நூல்கள் என்ன என்பதுதான் சரியான கேள்வியாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு எழுத்தாளரின் மாஸ்டர்பீஸை வாசிக்கும்போது அந்த எழுத்தாளர் மனதுக்குப் பிடித்தவராகி விடுகிறார்.

    முதல் சிறுகதை எப்போது வெளியானது ? 

    எது முதல் சிறுகதை என்பதில் குழப்பம் இருக்கிறது. கல்லூரி முதலாண்டு படிக்கும்போது பாக்யா இதழில் “என் உயிர்த்தோழி” என்ற சுமாரான ஒரு கதை வெளிவந்தது (எழுதியபோது நான் அப்படி நினைத்திருக்கவில்லை). அதே ஆண்டு இலங்கையில் இருந்து வெளிவந்த கலைக்கதிர் இதழ் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் நான் எழுதிய ந்யூமாவின் நகல்” என்ற சிறுகதை இரண்டாம் பரிசு இரண்டாயிரம் ரூபாய் வென்றது. இவ்விரண்டில் ஒன்றுதான் முதலில் வெளிவந்த கதையாக இருக்கலாம். இந்தக் கதை இப்போது கேரளத்தில் ஒரு பல்கலை கழகத்தில் தமிழ்ப்பாடத்தில் இருப்பதாக பாஸ்டன்பாலா ஆதாரத்தை எனக்கு அனுப்பி இருந்தார். நான் அப்படியே ஆடிப்போயிட்டேன்! கல்லூரிக்காலத்தில் மிக தைரியமாக நிறைய கவிதைகளும் எழுதியிருக்கிறேன். கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் மாநில அளவில் இரண்டாமிடம் (முதலிடம் பெற்றவர் “பெண்ணல்ல பெண்ணல்ல ரோசாப்பூ” எழுதியவர்) பெற்று அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கையால் இரண்டு பவுன் தங்கச் சங்கிலி பெற்றேன். அதே ஆண்டு எதிர்கட்சித் தலைவர் கருணாநிதி எங்கள் கல்லூரிக்கு வருகை தந்தார். அவருக்கு வரவேற்பு கவிதை வாசிக்கச் சொல்லி என்னைத்தான் கேட்டுக் கொண்டார்கள். ஒரே ஆண்டில் இரு பெரும் தலைவர்களைச் சந்தித்ததை இப்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

    இலக்கியத்தரமான சிறுகதை முதலில் வெளியானது என்றால் உயிரோசை (அல்லது உயிரெழுத்தா?) இதழில் வெளியான நல்லசிவம் சிறுகதைதான். 2008 வாக்கில் இருக்கலாம்.

    “பொற்குகை ரகசியம்” – உங்கள் முதல் சிறுகதை தொகுதி 2024 இல் வெளியாகி இருக்கிறது. அந்த தொகுப்பில் “கல்லளை” எனக்கு பிடித்த கதை. இந்த சிறுகதை எழுதிய அனுபவம் குறித்து சொல்லுங்கள்.

    வெவ்வேறு களங்களில் கதைகள் எழுதிப்பார்க்க வேண்டும் என்ற ஆவலில் ஒரு வரலாற்றுப் புனைவும் எழுத வேண்டும் என்று உந்தப்பட்டு எழுதியதுதான் “கல்லளை.” இந்தச் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டபோது இக்கதை குறித்துப் பேசிய ஜெயமோகன் புறசாம்ராஜ்யத்தை வெல்வதற்காக ஒருவனும், அகசாம்ராஜ்யத்தை வெல்வதற்கான ஒருவனும் போராடுவது குறித்த கதை இது என்று குறிப்பிட்டார். அப்படி ஒரு கதையை எழுத வேண்டும் என்ற ஆவலில் எழுதியதுதான் இந்தக் கதை. வரலாற்றிலிருந்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு முழுக்க முழுக்க புனைவாகவே கதையை எழுத வேண்டும் என்று திட்டமிட்டு எழுதினேன். கங்காமூலாவின் மலைக்காடுகளில் வாழும் ஐந்து குடிகள் பற்றி நிறைய தகவல்கள் சேகரித்தேன். ஐந்து பெரும் மலைக்குடியினரின் பழக்க வழக்கங்கள், அவர்கள் பயன்படுத்தும் கருவிகள், உண்ணும் உணவு, கங்காமூலாவின் மரம், செடிகொடிகளின் பெயர்கள் இவை குறித்து நிறைய சேகரிக்க வேண்டியிருந்தது. அம்மக்களின் பெயர்களை அறிந்து கொள்வது மிகுந்த சிரமமாக இருந்தது. இப்போதெல்லாம் சாதாரணமான பெயர்கள்தாம் வைத்துக் கொள்கிறார்கள். பஸ்தாவா என்ற பெயரைக் கண்டுபிடித்ததும் பாதி கதையை எழுதி விட்டதைப் போல மகிழ்ச்சியாக இருந்தது. 

    கதையில் ஒரு வேதாந்த ஆசிரியர் வருகிறார். கதையை எழுதிய காலத்தில் நான் ஜீவன் முக்தி விவேகம் என்ற நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். வித்யாரண்யர் எழுதியது. கதையின் குருசாமியை அவர் நினைவாகத்தான் அமைத்தேன். வித்யாரண்யகர் என்று பெயர் மாற்றி அமைத்தேன். எனக்கு ஏற்கனவே இருந்த வேதாந்தம் குறித்த அறிவு இக்கதையின் போக்குக்கு உதவியாக இருந்தது. கதைக்கான குறிப்புகளைச் சேகரிப்பதற்குத்தான் எனக்கு நாட்கள் பலவானது. கதையை இரண்டே நாட்களில் எழுதி முடித்து விட்டேன்.

    வேதாந்தம் குறித்த தொடர் ஒன்றை சொல்வனத்தில் எழுதுகிறீர்கள். உங்கள் சிறுகதைகளில் வேதாந்தம் பேசுபொருளாகவும் இருக்கிறது. வேதாந்தத்தின் மீது எப்போது ஈடுபாடு வந்தது ?

    இளம்வயதிலிருந்தே ஆன்மிகத்தின் மீது ஒரு கவர்ச்சி இருந்தது. கல்லூரிப் பருவத்தில் ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை வாசித்திருக்கிறேன். கிட்டத்தட்ட ஓஷோவின் மாணவனைப் போலவே என்னை உணர்ந்திருந்தேன். அவர் சொல்வதை செயலில் நடத்திக் காட்டுவதுபோல ஜகி வாசுதேவின் ஈஷா யோக மையம் ஆன்மிகப் பயிற்சிகளை அளிக்கத் துவங்கியிருந்த காலம். அம்மையத்தில் இணைந்து சகஜ ஸ்திதி யோகா, ஹடயோகா, பாவஸ்பந்தனா போன்ற பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். இதில் பாவஸ்பந்தனா வகுப்பை அப்போதெல்லாம் ஜகியே முன்னின்று நடத்துவார். மிகக் குறைந்த நபர்களே கலந்து கொண்ட அந்த வகுப்பில் அவருடன் உரையாடிய பொழுதுகள் இனிமையானவை. இரண்டு வருடம் தீவிரமாக ஹடயோக, தியான, பிராணாயாமப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

    ஆனால் அவை போதாமலிருந்தன. என்னுள்ளிருந்த கேள்விகள் அப்படியே இருந்தன. எனக்குத் திருமணமான புதிது. என் மனைவி அனுஷாவின் பெற்றோர் இருவருமே வேதாந்த மாணவர்கள். கொமாரபாளையத்தில் அவர்கள் வீட்டுக்கு அருகிலிருந்த, கோவிலூர் மரபில் வந்த வேதாந்த மடம் ஒன்றில் உள்ள ஆசிரியரிடம் கைவல்ய நவனீதம் என்ற நூலை முறையாகக் கற்றவர்கள். சங்கரரின் தத்துவபோதம் என்ற வேதாந்த அறிமுக நூலுக்கு இணையானது இந்த நூல். வேதாந்தம் என்றாலே வறட்டு வேதாந்தம் என்று புரிந்து கொண்டிருந்த எனக்கு, ஆனந்தா என்று முடியும் எந்தச் சாமியாரையும் சந்தேகக் கண்ணோடே பார்க்க வேண்டும் என்ற அவ நம்பிக்கையிலிருந்த எனக்கு, அனுவின் பெற்றோர் மூலம் வேதாந்தத்தை முறையாகக் கற்பதற்கான அமைப்புகள் உள்ளன என்று தெரிய வந்தது.

    ஆனால் அவர்கள் மூலம் வேதாந்த அறிமுகம் ஏற்படவில்லை. அனுவுக்கே கூட தன் பெற்றோர் மூலம் வேதாந்தத்தின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. அனு தன்னுடைய வழியில் ஒரு ஆன்மிகப் பாதையை அப்போது தேர்ந்தெடுத்திருந்தாள். சிவன் மீது பக்தி செலுத்துவதன் மூலம் பிறப்பற்றுப் போக வேண்டும் என்பது அவளது விருப்பமாக இருந்தது. இருவருக்குமே ஆன்மிகத்தில் நாட்டம். ஆனால் சரியான பாதை எது என்பதில் எனக்குக் குழப்பமிருந்தது. என் கல்லூரி நண்பன் ஜெயச்சந்திரன் விவேக சூடாமணி என்ற நூலை என்னிடம் வாசிக்கக் கொடுத்தான். சங்கரர் எழுதிய விவேக சூடாமணி என்ற நூலிலிருந்து தேர்ந்தெடுத்த 101 பாடல்களை எடுத்துக் கொண்டு சுவாமி தயானந்த சரஸ்வதி அளித்த விளக்கம்தான் அந்த நூல். அந்த நூலை வாசித்தபோது அத்வைதம் குறித்தும், இறுதி உண்மையைப் பற்றிய அறிதலின் வழிமுறைகள் குறித்தும் தெளிவாக அறிந்து கொண்டேன். அந்த நூல்தான் நான் அத்வைத வேதாந்தம் கற்க வேண்டும் என்று முடிவு செய்ததற்குத் தூண்டுதலாக இருந்தது. அதன்பின் ஜெயச்சந்திரனுடைய அறிமுகத்தின் பேரில் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த வகுப்புகளை ஒலி வடிவில் கேட்கத் துவங்கினேன். அப்போது நாங்கள் மாலத்தீவுகளில் வசித்து வந்தோம். இந்தியாவுக்கு விடுமுறையில் சென்றபோது, குருபரானந்தரின் வேதாந்த வகுப்புகளை குறுந்தகடுகளில் பதிந்து எடுத்துக் கொண்டு வந்து, மாலத்தீவுகளில் அவ்வகுப்புகளைக் கேட்போம். ஒரு மணி நேர வகுப்புகள். கையில் நோட்டுப் புத்தங்களுடன் ஒலிப்பேழையின் அருகில் அமர்ந்து குறிப்பெடுத்தபடி ஆண்டுக்கணக்கில் வகுப்புகளைக் கேட்டோம். இப்போது அமெரிக்காவிலிருப்பதால் இங்குள்ள அர்ஷவித்யா குருகுலம் சென்று சுவாமி தத்துவவிதானந்தா, சுவாமி முக்தாத்மானந்தா போன்ற வேதாந்த ஆசிரியர்களிடம் நேரடியாகவே வேதாந்தம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்தியா செல்லும்போது ஆனைக்கட்டியிலுள்ள அர்ஷவித்யா குருகுலம் செல்வோம். அங்கு சுவாமி சதாத்மானந்தா என்ற அற்புதமான ஆசிரியர் இருக்கிறார்.

    வேதாந்தத்தை கருப்பொருளாக வைத்து கதைகள் எழுதுவதில் உள்ள சவால் என்ன?

    ஒரு பெரிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் எழுதலாம் என்ற தூண்டுதல் வந்தபோது, என்னுடைய புனைவுகளில் வேதாந்தத்தை உசாவ வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. வேதாந்தத்தை கருப்பொருளாக வைத்துக் கதைகள் எழுதுவதில் உள்ள முக்கியமான சவால் அந்தக் கதை வேதாந்தப் பிண்ணனி கொண்ட இன்னொருவருக்குத்தான் முழுமையாகப் புரியும் என்பதுதான். நேரடியான வேதாந்தக் கருத்துக்களை புனைவில் பேசும்போது கட்டுரைத் தன்மை வந்து விடுகின்றது என்று வாசகர் எண்ணுவதற்கு இடமுண்டு. குறிப்பாக சிறுகதை என்னும் வடிவத்துக்குள் தத்துவ விவாதங்களைக் கொண்டு வருதல் சவாலானது. அசைவும், பெருக்கும், கல்லளை ஆகிய இரு கதைகளும் வேதாந்தத்தைக் கருப்பொருளாக கொண்டவை. ஆனால் அவை சிறுகதை வடிவத்துக்குள் அமைந்தமையால்தான் வாசகருக்கு நெருடல் அளிக்காத வாசிப்பு அனுபவம் கிடைத்தது. வானப்ரஸ்தம் என்ற இன்னொரு கதை தினமணி தீபாவளி மலருக்காக எழுதினேன். அக்கதை வேதாந்த அறிமுகம் கொண்டவருக்கே முழுக்க ஈடுபட்டு வாசிக்கும் அனுபவம் அளிக்கும். நவீன இலக்கிய வாசகர்கள் பெரும்பாலும் மேலைத் தத்துவப் பிரிவுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வேதாந்தத்துக்கு அளிப்பதில்லை. எனவே புனைவில் மறைமுகமாகக் குறிப்பிடப்படும் பல வேதாந்தக் குறிப்புகளை அவர்கள் தவறவிடக்கூடும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் நமது நவீன எழுத்தாளர்களில் பலர் வேதாந்திகள்தாம். பாரதி, க.நா.சு, பிரமிள், தேவதேவன், ஜெயமோகன் போல. அவர்களது படைப்புகளில் பலவற்றில் வேதாந்தம் பயின்று வந்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் நான் புனைவு எழுதுவது எனக்காகத்தான். என் படைப்புகளில் வேதாந்தத்தைக் கருப்பொருளாக வைக்க வேண்டும் என்பது நான் விரும்பி எடுத்த முடிவு. இன்னொரு வாசகரும் அப்படைப்பை படைக்கையில் நான் அடைந்த அதே அனுபவத்தைப் பெற முடிந்தால் மகிழ்வேன். 

    மொழிபெயர்ப்பில் எப்படி ஆர்வம் வந்தது ? முதல் மொழிபெயர்ப்பு என்ன?

    மீண்டும் எழுத வேண்டும் என்ற தூண்டுதல் வந்தபோது புனைவுப் பரப்பில் என்னுடைய போதாமைகளை உணர்ந்தேன். சரளமான, தெளிவான மொழி எனக்கு இயல்பாக வந்தது. ஆனால் புனைவுக்கு அது மட்டும் போதாது. புனைவின் கட்டுமானம், புனைவினூடாகக் கதாபாத்திரங்களின் வளர்ச்சி, கதை சொல்லும் முறை, ஒரு கரு எவ்வாறு புனைவில் விரிவடைந்து பரிணமிக்கிறது போன்ற புனைவுத் தொழில் நுட்பங்கள் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். கோவிட் காலத்தில் நிறைய நாவல்கள் வாசித்தேன். கிட்டத்தட்ட டால்ஸ்டாய், தஸ்தாவ்ஸ்கியின் முக்கியமான அனைத்து நாவல்களையும் ஆங்கிலத்தில் வாசித்தேன். நிறைய ஆங்கிலத்தில் வாசித்தது ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. அதற்கு முதல் படியாகவும், நான் மேலே சொன்ன புனைவுத் தொழில் நுட்பங்களை கற்பதற்குண்டான ஒரு வாயிலாகவும் நான் மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்தேன். ஜானதன் ஃப்ரான்ஸன் என்ற எனக்குப் பிடித்த அமெரிக்க எழுத்தாளர் (ஃப்ரீடம், கரெக்ஷன்ஸ் போன்ற நாவல்களின் ஆசிரியர்) முதலில் தன் தாய்மொழியான ஜெர்மனியிலிருந்து இரு நூல்களை மொழிபெயர்த்த பின்னரே ஆங்கிலத்தில் புனைவெழுத வந்திருக்கிறார். ஜெயமோகனும் தான் முதலில் டி.எஸ். எலியட்டின் வேஸ்ட்லேண்டை மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவர்களின் அடியொட்டி நானும் முதலில் மொழிபெயர்ப்பில் துவங்கலாம் என்று முடிவெடுத்தேன்.

    முதல் மொழிபெயர்ப்பு ஜெயமோகனின் குமிழிகள் என்ற சிறுகதை. ஒரு முறை நானும், விஷ்ணுபுரம் அமெரிக்கக் கிளையின் வ. சௌந்தரராஜனும் பேசும்போது இந்தக் கதை குறித்து சிலாகித்துக் கொண்டோம். அவரிடம் என் மொழிபெயர்ப்புத் திட்டம் பற்றிச் சொன்னபோது, இதை ஏன் நீ மொழிபெயர்க்கக் கூடாது என்று சொன்னார். இரண்டே நாட்களில் அந்தக் கதையை மொழிபெயர்த்தேன். ஆனால் அதைத் திருத்த ஒருமாதம் எடுத்துக் கொண்டேன். அந்த முதல் மொழிபெயர்ப்பு எனக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. குமிழிகளின் மொழிபெயர்ப்பு தி இண்டியன் பீரியாடிகல் என்ற இதழில் வெளியானது. அதே நாளில் நான் மொழிபெயர்த்த இன்னொரு சிறுகதையான மலைகளின் உரையாடல் ப்ரொமிதியஸ் டிரீமிங் என்ற அமெரிக்க இலக்கிய இதழில் வெளியானது. அதைத் தொடர்ந்து ஜெயமோகன் மற்றும் அ. முத்துலிங்கம் ஆகியோரது சிறுகதைகள் என் மொழிபெயர்ப்பில் அமெரிக்க மற்றும் ப்ரிட்டிஷ் இலக்கிய இதழ்களில் தொடர்ந்து வெளியாயின.

    நியூயார்க் நகரில் நடந்த வாழும் தமிழ் விழாவில் இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுதிகள் வெளியிடப்பட்டன. இரண்டு நூலிற்கும் நீங்கள் தொகுப்பாசிரியர். அந்த அனுபவம் குறித்து ? 

    வாழும் தமிழ் விழா குறித்த ஏற்பாடுகள் பற்றிச் சொல்வதற்காக எழுத்தாளர் யுவன் சந்திரசேகரிடம் ஒருமுறை உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. வாழும் தமிழ் விழா முழுக்க முழுக்க அமெரிக்க இளந்தலைமுறையால் நடத்தப்படுவது. விழாவில் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளும் படைப்பாளிகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக அவர்களது ஒவ்வொரு படைப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இளந்தலைமுறைக்கு அளிக்கலாமே என்ற ஐடியாவை அவர்தான் என்னிடம் சொன்னார். இதை நான் விஷ்ணுபுரம் குழுவில் பகிர்ந்து “ஆர்வமுள்ளவர் கைதூக்கலாம்” என்று எழுதியிருந்தேன். பனிரெண்டு பேர் கைதூக்கினர். எல்லாரும் இணைந்து ஒரு மொழிபெயர்ப்பு குழுவைத் துவங்கினோம். ஒரு ஸூம் காலில் மொழிபெயர்ப்புக்குண்டான திட்டங்களை வகுத்தோம். ஒருவர் ஒரு இணையரைத் துணைகொண்டு பரஸ்பரம் அவர்கள் செய்த மொழிபெயர்ப்பைத் திருத்திக் கொள்வது, அதன்பின் குழுவில் இன்னும் மூன்று பேர் திருத்தங்களை மேற்கொள்வது. பின்னர் விஷ்ணுபுரம் இணையதளப் பக்கத்திலோ அல்லது இந்த நோக்கத்துக்கென்று ஒரு இணையதளத்தைத் துவங்கி அதிலோ அக்கதைகளின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டு அவற்றை இளந்தலைமுறைக்குப் பகிர்வது என்பது திட்டம்.

    இந்த திட்டம் குறித்து அ.முத்துலிங்கம், ஜெயமோகன் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அ.மு மிக மகிழ்ந்து வாழ்த்துக்களை அனுப்பினார். தமிழ் நவீன இலக்கியம் உலகப்பரப்பில் சென்று சேர வேண்டும் என்று பலகாலமாகப் போராடிக் கொண்டிருப்பவர் அவர். ஜெ எனக்கு மின்னஞ்சலில் “இந்த முயற்சியை ஒரு தொகுப்பாக, ஒரு நூலாகக் கொண்டு வர வேண்டும். அது நண்பர்களால் இயலுமா?” என்று கேட்டிருந்தார். நண்பர்களிடம் இதைத் தெரிவித்தபோது எல்லாரும் உற்சாகமாகி விட்டனர். ஒன்றல்ல, இரண்டு தொகுப்புகள். மூத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு ஒன்று, இளந்தலைமுறை எழுத்தாளர்களுக்கு ஒன்று என்று ஜெ தெரிவித்தார். வாழும் தமிழ் விழாவுக்கு இரண்டரை மாதங்களே இருந்தன. பிரதிகளைத் திருத்துவதற்கும், நூல்களை வடிவமைத்து அச்சிடவும் ஒரு மாதமாவது வேண்டும். எனவே ஒரு மாதத்துக்குள் மொழிபெயர்ப்புகளை முடித்துத் தரமுடியுமா என்று ஜெ கேட்டிருந்தார். கண்டிப்பாக முடியும் என்று உறுதியளித்தேன். நண்பர்கள் நாள் முழுதும் சுழன்று, சுழன்று பணியாற்றினோம். எல்லா நண்பர்களும் முழுநேரப் பணியிலிருப்பவர்கள், குழந்தைகள், கணவர் (மனைவி) என்று பொறுப்புகளில் இருப்பவர்கள். அவர்களது கடமைகளையும் நிறைவேற்றிவிட்டு, மொழிபெயர்ப்பிலும் தீவிரமாக இறங்கியிருந்தனர். இந்தியாவிலிருந்தும் ஜெ கேட்டுக்கொண்டதற்கிணங்க நண்பர்கள் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒருவர் மொழிபெயர்த்ததும் அவர் அணியைச் சார்ந்த இன்னொருவர் அதை திருத்தம் செய்வார். இருவரும் ஸூம் காலில் பேசி, அல்லது கூகுள் டாக்கில் ஒருவருக்கொருவர் செய்திகளைப் பரிமாறி திருத்தங்களை மேற்கொள்வர். பின்னர் அக்கதையை மூன்றாமவர், நான்காமவர் என்று திருத்தங்களுக்கு அனுப்பி வைப்போம். நான் உள்பட பெரும்பாலான எல்லா நண்பர்களும் இருகதைகளை மொழிபெயர்த்தனர். விஷ்ணுபுரம் குழுவின் இளந்தலைமுறையான ஷாம்பவா கதைகளை வாசித்து அவற்றின் தரத்தை நிர்ணயித்தார். இவர் ஜான் ஹாப்கின்ஸ் பற்கலைகழகத்தில் புனைவிலக்கியத்தில் பட்டப்படிப்பு மேற்கொண்டு வருகிறார். சரியாக ஒருமாதத்தில் எல்லாக் கதைகளின் மொழிபெயர்ப்பும் முடிந்து திரு பதிப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. “நண்பர்கள் அனைவரையும் ஆரத் தழுவிக்கொள்கிறேன்” என்று ஜெ செய்தி அனுப்பியிருந்தார்.

    ஒரு மாதத்தில் இரு தொகுப்புகள் எவ்வாறு சாத்தியம் என்ற சந்தேகக் குரல்கள் என் செவிகளிலும் விழுந்தன. ஒருவரே ஒரு தொகுப்பைக் கொண்டு வருவதற்கு வேண்டுமானால் ஆறுமாதம், ஒரு வருடம் ஆகலாம். ஆனால் இந்த முயற்சி பதினைந்து பேரின் கூட்டு உழைப்பு. எல்லா நண்பர்களுமே தமிழ், ஆங்கிலம் இவற்றில் தீவிர இலக்கியப் புனைவுகளை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வாசித்து வருபவர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் தினமும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அமெரிக்கர்கள் மத்தியிலேயே புழங்குகிறவர்கள். இவர்கள் தகுதி குறித்தோ, இவர்களால் ஒருமாதத்தில் மொழிபெயர்ப்புகளை முடித்து விடமுடியுமா என்பது குறித்தோ எனக்கு கிஞ்சித்தும் ஐயம் இருக்கவில்லை. ஒரு ஆண்டு கால அவகாசம் இருந்திருந்தால் பத்து நாவல்களையே மொழிபெயர்த்திருக்க முடியும்.

    “Writers who write” என்ற அமைப்பில் நீங்கள் உறுப்பினராக இருக்கிறீர்கள். இந்த அமைப்பு குறித்து ?

    Writers who write என்ற அமைப்பு பால்மெட்டோ ஸ்டேட் லோகன்ட்ரி எனப்படும் தெற்கு கரோலைனாவின் தாழ்வுப்பகுதியைச் சேர்ந்த படைப்பாளிகளுக்கான அமைப்பு. என்னுடைய மொழிபெயர்ப்பு முயற்சிகளையும், இலக்கிய இதழ்களில் வெளியான என் கதைகளையும் வாசித்து விட்டு என்னை இக்குழுவில் இணைத்துக் கொண்டனர். பதினைந்து பேர் மட்டுமே கொண்ட இந்தக் குழுவில் ஏழு நாவலாசிரியர்கள், நான்கு கவிஞர்கள், இரண்டு அபுனைவு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஒரு அட்டர்னி கூட இருக்கிறார். நான் மட்டுமே மொழிபெயர்ப்பாளன். மாதம் ஒருமுறை வால்டர்பரோ நூலகத்தில் சந்தித்துக் கொள்வோம். குழுவின் தலைவர் பிகே பாட்ஸ் முன்னின்று புனைவு குறித்த பயிற்சிப் பட்டறைகளை நடத்துவார். எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் குறித்த பிறருடைய கருத்துக்களைக் கேட்டுப் பெறலாம். எழுதுவது குறித்த பல நுட்பங்களை இந்தக் குழுவில் இணைந்தபின் நான் அறிந்து கொண்டேன். இப்போது இந்தக் குழுவிலிருந்து “துரீயா லிடரரி ரிவ்யூ” என்ற இலக்கியக் காலாண்டிதழ் துவங்கப்பட்டுள்ளது (துரீயா என்ற பெயர் நான் பரிந்துரைத்தது. நான்காவது நிலை என்று பொருள். உறக்கம், கனவு, விழிப்பு இந்த மூன்று நிலைகளுக்கும் சாட்சியாக இருக்கும் நான்காவது நிலை). இதன் புனைவு மற்றும் மொழிபெயர்ப்புப் பிரிவின் ஆசிரியராக நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன். சென்ற அக்டோபரின் இந்தக் குழுவுக்கு ஜெயமோகன் வருகை தந்து இந்திய இலக்கியம் குறித்துப் பேசினார். எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் ஜெயமோகன் பிடித்தமான எழுத்தாளராகி விட்டார். கவிஞர் ஜெரால்டின் ஜெ-யின் பேச்சைக் கேட்டு, நீண்ட நாள் தன் மனதில் அரித்துக் கொண்டிருந்த ஓர் ஐயம் தீர்ந்தது என்றார். அவர் அமெரிக்காவின் கூலாகீச்சி என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர், ஆனால் அமெரிக்காவின் மையப் பண்பாட்டுடன்தான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வளர்ந்திருக்கிறார். தன் வேர்களை, தன் பண்பாட்டுக் கூறுகளை எழுத்தில் கொண்டு வருவதில் அவருக்குத் தயக்கமிருந்தது. ஜெ அன்று பேசியதன் சாராம்சம் “உங்கள் குரலைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்பதுதான். அன்றிலிருந்து தன் எழுத்து குறித்து சுதந்திரமாக உணர்வதாக அவர் என்னிடம் தெரிவித்தார். ஜெரால்டின் வாழும் தமிழ் விழாவின் ஒரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    “எதற்காக எழுதுகிறேன்?” என்றால் உங்கள் பதில் என்ன ?

    என் சிறுகதைத் தொகுப்புக்கு புனைவெனும் அறாக்கனவு என்ற தலைப்பில் எழுதிய முன்னுரையில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்.

    “ஒரு மொழியில் தீவிரமாக இயங்குகையில் அடையும் விடுதலை உணர்வு; மொழி என்னும் கருவியைக் கொண்டு வாழ்வு குறித்த அடிப்படையான ஐயங்களுக்கும், வியப்புகளுக்கும் ஆதாரமான ஒன்றைத் தொட்டு விட எத்தனிக்கும் முயற்சிகள் தரும் கிளர்ச்சியும்,சிலிர்ப்பும்; மொழியில் சமைக்கச் சாத்தியமான உலகங்களும், மாந்தர்களும் நம் கண்முன் உருக்கொள்கையில் ஏற்படும் உவகை; இவைதான் நான் எழுத்தில் இயங்குவதற்கான அடிப்படையான காரணங்கள்.”

    எழுத்தை நான் வாசிப்பின் நீட்சியாகவே பார்க்கிறேன். இந்த இடத்தில் எழுத்து என்று பெரும்பாலும் புனைவெழுத்தைத்தான் குறிப்பிடுகிறோம் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் எழுதும்போதோ, என் வகுப்புகளுக்கென பக்கம் பக்கமாகத் தயாரிக்கும்போதோ, அல்லது நான் இப்போதுதான் முடித்த என் முதுகலைப் பட்டத்துக்கான ஆய்வுத்தாள்களை எழுதும்போதோ எழுத்தாளன் என்ற பெருமிதம் எனக்கு உருவானதில்லை. இலக்கியம் புனையும்போது மட்டுமே அந்தப் பெருமிதம் தோன்றுகிறது. நானும் புனைவை மட்டுமே நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். நான் வாசிக்கும் புனைவுகளில் ஒரு கட்டத்தில் நானும் எழுத்தாளரோடு இணைந்து ஒரு சக படைப்பாளியாக மாறி விடுவதை உணர்கிறேன். அந்த உணர்வு கொடுத்த சிலிர்ப்பு எழுதத் தூண்டுகிறது. நான் வாசித்த இலக்கிய நாவல்களைப் போல நாமும் நாவல்கள் எழுதிவிட வேண்டும் என்ற நப்பாசையால் எழுதுகிறேன். மேலும் வாசிப்பும், எழுதுதலும் எனக்கு இயல்பாகவே வருகின்றது என்பதை உணர்கிறேன். எனவே இவை இரண்டையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற உந்துதல் இயல்பாகவே என்னிடம் உள்ளது. எனவே எழுதுகிறேன். எதற்காக எழுதவில்லை என்பதையும் இங்கு கூறிவிட வேண்டும் என்று நினைக்கிறேன். புகழுக்காகவோ, வரலாற்றில் நிலைப்பதற்காகவோ, நாலுபேர் என்னை எழுத்தாளன் என்று அழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோ எழுதவில்லை. 

    உங்களுடைய எழுதும் முறை என்ன ? (இடம், நேரம், ஒரே அமர்வில் எழுதிவிடுவீர்களா? )

    வாசிப்பு, எழுத்து இரண்டு செயல்களுமே மிகுந்த உழைப்பையும், காலத்தையும், ஒழுக்கத்தையும் கோருபவை. என்னிடம் இந்த மூன்றுமே குறைவாக இருப்பதைக் காண்கிறேன். எனவே நான் நினைத்த அளவுக்கு என்னால் தினசரி எழுத முடிவதில்லை என்பதுதான் உண்மை. வீட்டில் எழுதுவதெற்கென்று ஒரு அறை இருக்கிறது. என் மடிக்கணினியுடன் இணைந்த மானிட்டர் ஒன்றும் இருக்கிறது. ஆனால் அங்கு நான் அமர்ந்து எழுதும் நேரம் குறைவுதான். எங்கள் படுக்கையறையில் ஒரு ரிக்லைனர் சோஃபா உள்ளது. இப்போது அதில் அமர்ந்துதான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் அங்கு அமர்ந்து எழுதுகிறேன். பள்ளியில் எனக்கு ஒன்றரை மணி நேரம் கிடைக்கும். அப்போது எழுதுவேன். எப்படியும் ஒரு நாளைக்கு ஒன்றிலிருந்து ஒன்றரை மணிநேரம் எழுதுவேன். தொடர்ந்து ஒரே அமர்வில் எழுதுவதென்பது சிரமமாகத்தான் இருக்கிறது. விட்டு விட்டுத்தான் எழுதுகிறேன். ஆனால் நான் எழுதும் வேகம் சற்று அதிகமானது. ஒரு மணிநேரத்தில் ஆயிரம் சொற்கள்; ஆங்கிலத்தில் என்றால் இரண்டாயிரம் வரை கூட எழுத முடியும். எழுதுவதற்கு மூடு அமைய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. சோம்பலை வென்று விட்டால் எழுத்து அது பாட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் விடும். என்னுடைய முதுகலைப் படிப்புக்காக ஒரு வாரத்தில் எழுபது, எண்பது பக்கங்கள் வரை எழுதியிருக்கிறேன். ஆனால் புனைவை அவ்வளவு விரைவாக எழுதிவிட முடியுமா என்று தெரியவில்லை. நான் மேற்சொன்ன உழைப்பு, ஒழுக்கம், காலம் இவை மூன்றையும் அளித்தால் எழுத்து கைகூடி விடும் என்றே நம்புகிறேன். இந்த ஆண்டிலிருந்து தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என்ற உறுதியோடு உள்ளேன்.

    படைப்புகளில் ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்பாடு குறித்த உங்கள் பார்வை என்ன ?

    எந்த ஒரு துறையையும்போல எழுத்திலும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் தவிர்க்க முடியாதது என்பதே என் எண்ணம். ஏ. ஐ வரவு புனைவின் சாத்தியங்களை விரிவாக்கியிருக்கிறது என்று நம்புகிறேன். குறிப்பாக ஒரு நாவல் எழுதுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். முன்பு இணையத்தில் தேடியதை இப்போது ஏ.ஐ விரைவாகத் தேடி எளிமையாக வகைப்படுத்திக் கொடுத்து விடும். புனைவில் ஈடுபடும்போது நமக்கு இரண்டு விதமான திறன்கள் தேவைப்படுகின்றன. படைப்பூக்கம், மற்றும் உருவாக்கியதை தரம் பிரித்து, தேர்ந்தெடுத்து, தொகுத்து அளித்தல். இந்த இரண்டாவது திறனை ஏ.ஐ உதவியுடன் நாம் மிகத் திறமையாகச் செய்து விட முடியும். நம் மூளையின் பெரும்பாலான சக்தி இதற்கே செலவிடப்படுகிறது. இதை ஒரு செயற்கை நுண்ணறிவு செய்து விடும்போது, நாம் நமது ஆற்றல் அனைத்தையும் படைப்பூக்கத்தில் செலவு செய்ய முடியும். 

    ஏ.ஐ கொண்டு உருவாக்கப்படும் நிழற்படங்கள், காணொலிகள் இவற்றை நாம் பார்த்தவுடனேயே கண்டுபிடித்துவிட இயல்கிறது அல்லவா? அவற்றுக்கென்று எந்தவொரு கலைப்பெறுமானத்தையும் நாம் அளிப்பதில்லை அல்லவா? அதுபோலவே ஏ.ஐ உபயோகித்து உருவாக்கப்படும் புனைவெழுத்தும் தூக்கியெறியப்படும். இரண்டு, மூன்று வரிகள் வாசித்தாலே இது ஏ.ஐ என்பதைக் கண்டுபிடித்துவிட இயலும். எனவே அசலான எழுத்துக்கான மதிப்பு இன்னும் கூடியிருப்பதாகவே நான் கருதுகிறேன். நாம் எழுதும்போது தடையில்லாமல் எழுதிக் கொண்டே செல்வதற்காக நாம் ஏ.ஐ பயன்படுத்துவதில் தவறில்லை என்பது என் கருத்து. அதாவது, எழுத்து தடைபட்டு நின்று விடும்போது ஏ.ஐஐ ஒரு நண்பனைப்போல பாவித்து அதனிடம் பரிந்துரைகள் கேட்கலாம். சமயத்தில் அது பரிந்துரைக்கும் அத்தனை வழிகளுமே நமக்கு ஒவ்வாததாக இருக்கும். ஆனால் நமக்கு இயற்கை நுண்ணறிவு என்று ஒன்று இருக்கிறதல்லவா? அது தூண்டப்பட்டு, நமக்குப் புதிய படைப்பூக்கம் மிக்க யோசனைகள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம். “ரைட்டர்ஸ் ப்ளாக்” என்பதை ஓவர்ரைட் செய்வதற்கான கருவியாக ஏ.ஐஐப் பயன்படுத்தலாம் என்பது என் ஒரு கருத்து. ஒரு நாவலை அல்லது அதன் அத்தியாயத்தை எழுதி முடித்தபின் அதில் ஏதேனும் கருத்துப்பிழைகள், அமைப்புக் குறைபாடுகள், கதாபாத்திரத்தின் உருவாக்கத்தில் நிகழ்ந்துள்ள பிசகுகள் இவற்றைக் கண்டறிய நாம் ஏ.ஐ உபயோகப்படுத்தலாம். இது படைப்பை மேலும் துல்லியமானதாக்கும் என்பது எனது இன்னொரு கருத்து.

    மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரையில் ஏ.ஐ ஒரு வரம் என்றே கருதுகிறேன். இன்று எந்த மொழிபெயர்ப்பாளரும் பேப்பர், பேனா வைத்துக் கொண்டு, மூல நூலைத் திறந்து வைத்து வரிக்கு வரி மொழிபெயர்ப்பதில்லை என்று சொன்னால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். கூகுள் டிரான்ஸ்லேட் பயன்படுத்தி ஒரு பாராவின் தோராயமான வடிவம். பின்னர் மொழிபெயர்ப்பாளரின் மொழி அறிவைக் கொண்டு திருத்தி எழுதுதல் என்றுதான் மொழிபெயர்ப்புச் செயல்பாடு இருக்கிறது. ஏ.ஐ என்பது கூகுளைவிட மேலும் தேர்ந்த ஒரு மொழிபெயர்ப்புச் சாதனம் என்ற புரிதல் இருந்தால், அதைத் திறம்படக் கையாண்டு நிறைய மொழிபெயர்ப்புகளைச் செய்யலாம். ஏ.ஐ என்பது ஒரு கருவி. அந்தக் கருவியை உபயோகித்து மொழிபெயர்ப்பவர் இருமொழிகளையும் திறமையாகக் கையாள்பவராக இருப்பதோடு மட்டுமல்ல, அவர் எந்தத் துறையில் மொழியாக்கம் செய்கிறாரோ அந்தத் துறை குறை குறித்த ஆழ்ந்த அறிவும் உள்ளவராக இருந்தால், அற்புதமான மொழிபெயர்ப்புகளை உருவாக்கலாம். ஏ.ஐ ஒரே வாக்கியத்தின் பல்வேறு சாத்தியமான வடிவங்களை அடுக்கிக் காட்டும். அதில் துல்லியமான மொழியாக்கத்தைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அந்த மொழிபெயர்ப்பாளருக்கு உண்டு. அந்தத் தேர்ந்தெடுக்கும் திறன் உள்ளவர்தான் திறமையான மொழிபெயர்ப்பாளர் என்று இனி அறியப்படுவார் என்று நினைக்கிறேன்.

    நாவல் எழுதும் திட்டம் உண்டா ? களம் என்ன?

    The Rising Land என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். வேதாந்தத்தைப் பிண்ணனியாகக் கொண்ட நாவலாக இது இருக்கும். நான் வாழ்ந்த கொமாரபாளையத்தின் நெசவாளர்களின் வாழ்க்கையும், அந்த மக்களிடமிருந்து தன் விடுதலையின் மீது தாகம் கொண்ட சிலரின் பயணத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து விடுவேன் என்று நம்புகிறேன்.

    #

  • நேர்முகம் 2 : விஜய் ரெங்கராஜன்

    நேர்முகம் 2 : விஜய் ரெங்கராஜன்

    விஜய் ரெங்கராஜன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். எமர்சன் இலக்கிய முகாம், பூன் (2022) இல் வாசகராக அறிமுகமாகி, 2024இல் சிறுகதைகள் எழுதத்துவங்கினார். இவருடைய சிறுகதைகள் சொல்வனம், அகழ், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளது. தளம்: https://apvijay.me 

    உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், வேலை பற்றி?

    நான் திருச்சிராப்பள்ளியில், உறையூர் பகுதியில், பிறந்து வளர்ந்தேன். பள்ளிப் படிப்பும் திருச்சியில்தான். கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் இளங்கலைப் பொறியியல் பட்டமும் (BE ECE, PSG Tech), பின்னர் சென்னை ஐ.ஐ.டி.யில் கணினிப் பார்வை துறையில் முனைவர் பட்டமும் (PhD in Computer Vision, IIT Madras) பெற்றேன். பின்பு கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தேன். திருச்சிராப்பள்ளி, கோவை, பெங்களூர், சென்னை என வட்டமடித்து, இப்போது கலிஃபோர்னியா விரிகுடா பகுதியில் என் இணையனுடன் வசித்துவருகிறேன்; கணினிப் பார்வை-செயற்கை நுண்ணறிவுத் துறை சார்ந்து பணிபுரிகிறேன்.

    இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது?

    முற்காலச் சோழர்களின் தலைநகரம் உறையூர் எனப் பள்ளிப் பாடங்களில் படித்தபோது வரலாற்றில் ஆர்வம் உண்டானது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, கல்லூரிக் காலத்தில் எழுத்தாளர் கல்கியின் புனைவுகளை வாசிக்கத் தொடங்கியதற்கு அந்த ஆர்வமே வித்திட்டது. பின்னர், நான் பெங்களூரில் இருந்தபோது நண்பர் அசோக் அவருடைய வலைத்தளங்களில் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையக் கட்டுரைகளைப் பகிர்வார். அவருக்கு ஏற்கனவே தமிழிலக்கிய அறிமுகம் உண்டு. அவ்வாறுதான் ஜெயமோகனின் தளம் எனக்கு அறிமுகமானது. அதன் பின், ஜெயமோகனுக்குத் தன்பாலுறவைப் பற்றி கேள்விக்கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன்; அவர் கதைகளை வாசிக்கத் தொடங்கினேன். அவருடைய கட்டுரைகள் வழியாகப் பிற தமிழ் எழுத்தாளர்களும் அறிமுகமானார்கள்; தமிழிலக்கியம் அறிமுகமானது.

    உங்களுக்குப் பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள் யார்?

    எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகளை வாசிக்கத் தொடங்கியபோதே, அவை என்னைத் தங்களின் உலகங்களுக்குள் உள்ளிழுத்துக்கொண்டன. என் இலக்கிய அறிமுகக் காலத்தில் வாசித்த ‘காடன்விளி’, ‘மாடன்மோட்சம்’, ‘திருமுகப்பில்’, ‘ஊமைச்செந்நாய்’, ‘டார்த்தனீயம்’ போன்ற கதைகள் எண்ணற்ற காட்சிகளையும் நிறங்களையும் மணங்களையும் ஒலிகளையும் மனத்தில் கொட்டி, அவற்றின் வழியாக உணர்வுகளைத் தீட்டியெழுப்பின. வழக்கமாக ஓவியம் தீட்டுபவரின் விரல்களில்தான் வண்ணம் படிந்து தோலில் உறைந்திருக்கும்; ஆனால் ஓவியத்தைக் காண்பவரின் விரல்களிலும் வண்ணம் தேங்கச் செய்யும் குணம் கொண்டவை ஜெயமோகனின் கதைகள்.

    எழுத்தாளர் யுவன் சந்திரசேகரை வாசிக்கத் தொடங்கியது சமீபத்தில்தான் – கடந்த இரண்டு ஆண்டுகளில். கணினிப் பார்வை ஆராய்ச்சியில் Accidental Cameras என்றொரு கருத்துரு உண்டு. மழை பெய்தபின் காரின் முன்கண்ணாடியில் சின்னச் சின்னத் துளிகள் படிந்திருக்கும்; ஒவ்வொரு துளியிலும் ஒவ்வோர் உலகத்தைக் காணலாம். அவை நம் கண்கள் காணும் அதே உலகம்தான்; ஆனால் அந்த நீர்த்துளிக் கண்களில், சற்றே வேறான கோணத்தில், வேறான குவிய அளவுகளில், அவ்வுலகம் வேறுபட்டுத் தெரியும்; மாயமாய் முளைத்த பல்லாயிரம் கண்கள். அதேபோல், pinhole camera-வின் ஒரு வடிவமாக, இருளறையின் ஒற்றைச் சன்னல், வெளியுலகத்தை உட்சுவரில் தலைகீழாக மங்கலாகப் படம்பிடிக்கும். இவ்வாறு, அதே புறவுலகம் வெவ்வேறு பார்வைப்புலன்களில் வெவ்வேறு வடிவங்களில் தெரிகிறது. யுவனின் படைப்புகள் இவற்றைப் படம்பிடிப்பதாக எனக்குப் படுகிறது. ‘வெளியேற்றம்’, ‘குள்ளச்சித்தன் சரித்திரம்’ நாவல்கள், ‘தாயம்மா பாட்டியின் நாற்பத்தோரு கதைகள்’, ‘நார்ட்டன் துரையின் மாற்றம்’ சிறுகதைகள் – இவை எனக்குப் பிடித்தவை. பல யதார்த்தங்கள், மாற்றுக்கோணங்கள் என எவ்வாறு வரையறுத்தாலும், யுவனின் படைப்புகள் அவற்றின் அடியில் நம் உணர்வுகளைத் தீண்டும் புள்ளிகளைக் கொண்டவை.

    பல தமிழ் எழுத்தாளர்கள் வெவ்வேறு வகையில் என்னைப் பாதித்திருக்கிறார்கள். புதுமைப்பித்தனிலிருந்து கி. ராஜநாராயணன், பூமணி, இமையம் என அலைகளாய் மோதிக்கொண்டே இருக்கின்றனர்; அவற்றை வாங்கிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். ஆரம்பகாலத் தமிழ்ச் சிறுகதைக் களத்தில் மௌனி, கு. ப. ராஜகோபாலன் முதலிய எழுத்தாளர்களின் கதைகள் ஒரு குறிப்பிட்ட அகத்திணைக் களத்தை உருவாக்குகின்றன என்பது என் செல்லக் கருதுகோள். உதாரணமாக, மௌனியின் அழியாச்சுடர், கு.ப.ரா.வின் நூர் உன்னிஸா, திரை, கனகாம்பரம், ஆற்றாமை போன்ற பல கதைகள், ஏதோவொரு அகத்தருணத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறு ஒரு சிறுகதைத் தொகுப்பு அமைந்தால், அதைச் சுற்றி திணைக்கோட்டுபாடுகளை எழுப்பலாம். அக்கதைக் களத்தின் சுற்றுவெளி எல்லைக்குட்பட்டதென்றாலும், சங்க காலக் கவிதைகளில் போல, அவ்வெல்லையே அக்கதைகளின் உணர்வுகளுக்குத் திணைகளை வகுத்துத் தருகிறது எனத் தோன்றுகிறது. அக்காலத்தில் எழுதிய எழுத்தாளர் விந்தியாவின் சிறுகதைகளை இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன்; இவரின் கதைகள் வாசிப்புத் தளத்திலும் விமர்சனத் தளத்திலும் இன்னும் போதிய கவனம் பெறாதவை. 

    தமிழ் அபுனைவுத் தளத்தில் பேராசிரியர் டி. தருமராஜை முக்கியமான ஒருவராகக் காண்கிறேன். அவருடைய கட்டுரைகள் கூர்மையும் வீச்சும் மிக்கவை. அவரது உரைகளும் இணையத்தில் இருக்கின்றன; அவருடைய “அயோத்திதாசர் – பார்ப்பனர் முதல் பறையர் வரை” நூல் வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய உரை, என் “மெய்ப்பொருள்” சிறுகதைக்கு ஓர் உந்துதலாக இருந்தது. 

    பிறமொழி எழுத்தாளர்கள் என்று சொன்னால் உலக இலக்கியமே வந்துவிடும். டால்ஸ்டாயின் பன்முகப்பட்ட கதாபாத்திரப் படைப்புகள் பிடிக்கும்; சாதாரணமாக விவரித்துச் செல்லும் போக்கில் எழுதப்பட்டாலும், அவை மனத்தில் எங்கோ தங்கிவிடும். உதாரணமாக, ‘போரும் அமைதியும்’ நாவலில் வரும் மரியா டிமிட்ரியேவ்னா – “டிராகன்” என அழைக்கப்படும் கதாபாத்திரம். செக்காவ் மற்றொரு பிடித்த எழுத்தாளர்; கவிதைத்தன்மை வாய்ந்த அவரின் ‘தி ஸ்டெப்’ (The Steppe) ஒரு சிறந்த குறுநாவல். ஆலிஸ் வாக்கரின் ‘தி கலர் பர்ப்பிள்’ (The Color Purple) எனக்குப் பிடித்த நாவல்களில் ஒன்று. இப்போது தாமஸ் மன்னின் பெரும்படைப்புகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். 

    சங்க இலக்கியம், கம்பராமாயண வாசிப்பு எப்படி அறிமுகமானது?

    “கணையாழி கடைசிப் பக்கங்கள்” கட்டுரைத் தொகுப்பில் எழுத்தாளர் சுஜாதா சுட்டிய “ஏற்றுக உலையே ஆக்குக சோறே”, “சிற்றில் நற்றூண் பற்றி” ஆகிய பாடல்களால் தூண்டப்பட்டுப் புறநானூற்றை வாசிக்கத் தொடங்கினேன். “சிற்றில்” பாடலைப் பள்ளியில் படித்த நினைவு அப்போதுதான் மூளையின் எங்கோவொரு ஆழத்திலிருந்து எழுந்து இணைந்துகொண்டது. பின்னர், 2011ல் எழுத்தாளர் ஜெயமோகன் சென்னையில் ஆற்றிய “குறுந்தொகை: தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்” என்ற உரையின் வழியாக அகத்திணைப் பாடல்களை வாசிக்கத் தொடங்கினேன். அங்கிருந்து தமிழ்ப் பண்டைய இலக்கிய ஆற்றில் படகு வலிக்க முடிந்தது. ஒற்றை நிழற்படங்களென குறுந்தொகையும் புறநானூறும், சில நொடிக் குறுங்காணொளிகளெனக் கலித்தொகைப் பாடல்களும், பின்னர் அவ்வுலகத்திலேயே வாழவைக்கும் சிலப்பதிகாரக் காப்பியமும் என வாசிப்புத் தொடர்ந்தது. 

    கம்பராமாயணத்தைத் தொடர்ச்சியாக, முழுமையாக வாசித்ததில்லை; அதில் எனக்கு விரிவான வாசிப்புண்டு என்று நான் கருதவில்லை. அவ்வபோது ஏதோ ஒரு பகுதியை எடுத்து வாசிப்பேன். அமெரிக்கா-பூன் இலக்கிய முகாமில் நடந்த கம்பராமாயண உரையாடலை நண்பர்களுடன் சேர்ந்து நடத்தியது, அதை மேலும் உன்னிப்பாக வாசிக்கத் தூண்டியது. மேலும், என் இணையன் வங்காளி என்பதால், அங்கு ராமாயணக் கதை எவ்வாறு வேறுபடுகிறது, எந்தக் கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்று பார்ப்பது சுவாரசியம். உதாரணமாக, ராவணனின் மகன் மேகநாதன் வங்காளத்தில் முக்கியமான பாத்திரம்.    

    ⁠⁠முதல் சிறுகதை எப்போது வெளியானது?

    ⁠⁠முதல் சிறுகதை “குறியீடு” சொல்வனம் இதழில் ஜூலை 2024ல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, “வெறியாட்டு” சொல்வனத்திலேயே பிப்ரவரி 2025ல் வெளியானது. அதன் பின் தொடர்ந்து இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். https://apvijay.me என்ற என் தளத்தில் என் கதைகளையும் கட்டுரைகளையும் வாசிக்கலாம்.

    எழுத்து சார்ந்த எதிர்கால திட்டங்கள் என்ன?

    சிறுகதைகளும் குறுநாவல்–நாவல் உள்ளிட்ட பெருங்கதைகளும்தான். சமீபத்தில் குறுநாவல் வடிவம் குறித்தான தீவிரமான கட்டமைப்பு வாசிப்புகளும் கவனிப்புகளும் நிகழ்ந்தன; அதையொட்டி ஒரு புதிய குறுநாவலுக்கான கரு இப்போது மனத்தில் உருப்பெற்று வருகிறது.

    உங்களுடைய சிறுகதைகளில் வெறியாட்டு, உள்ளுறை எனக்குப் பிடித்தவை. இந்தக் கதைகளை எழுதிய பின்புலம் குறித்துச் சொல்ல முடியுமா?

    இயல்பான ஒரு மனித வெளிப்பாட்டுக்கு எப்போதும் ஏதேனும் ஓர் எதிர்ப்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது. சங்க காலப் பாடல்களில் காதல் இயல்பாக இருக்கும்போதே, பெண்ணின் தாய் அதை மறுப்பதைக் காண்கிறோம். மகளின் உடம்பில் முருகு வந்துவிட்டதாகவும், வேலன் வந்து வெறியாட்டு ஆடி அம்முருகை விரட்டுவதாகவும் காண்கிறோம். தற்காலத்தில் அதே நிராகரிப்பு, சாதி, மதம், பணம், இனம் என வெவ்வேறு உருவங்களில் இருக்கிறது. தன்பால் காதலுக்கும் அதுவே தான்; வெறியாட்டு என்கிற சமூக நிராகரிப்பு, பெரும்பாலும் ஒரு மனிதரின் இளமைப் பருவத்திலேயே நிகழ்ந்துவிடுகிறது. இந்தத் தொடர்பை வரலாற்றுத் தளத்தில் வைத்து வலியுறுத்தவே, சங்க கால வெறியாட்டையே இக்கதையின் கட்டமைப்பாக அமைத்தேன். இயல்பான காதலுணர்வும் அதற்கான எதிர்ப்பும் ஒருசேர உண்மையாக வெளிப்படுவதே “வெறியாட்டு” கதை என்று நினைக்கிறேன்.

    “மெய்ப்பொருள்” சிறுகதையில், மொழியின் வழியாகத் தற்கற்ற மணி என்கிற செயற்கை நுண்ணறிவு எந்திரன், மொழிக்கு முன் ஆதியாக என்ன இருந்திருக்கலாம் என்று யோசிக்கிறான். “உள்ளுறை” சிறுகதை, அதே கதாபாத்திரங்களைக்கொண்டு அகம்-புறம் இரண்டுக்குமான தொடர்பு என்ன என்ற கேள்வியை ஆராய்கிறது. இந்தக் கதையை எழுதத் தொடங்கிய தருணத்தை இப்படிச் சொல்லலாம். தொல்காப்பியத்தில் நகைப்பு, அழுகை முதலிய எட்டு மெய்ப்பாடுகள் (ரசங்களுக்கு நிகரானவை) கூறப்படுகின்றன; ஒன்பது அல்ல, எட்டுதான். பின்னர், அபிநவகுப்தர் சாந்தம்/அமைதி என்பதை ஒன்பதாவது ரசமாகத் தன் அழகியல் கோட்பாட்டில் முன்வைத்தார். இந்த எட்டு மெய்ப்பாடுகளையும் எந்திரன் மணி தன் முகத்தில் வெளிப்படுத்துவது போல என் மனத்தில் தோன்றிய சித்திரமே இக்கதையின் தொடக்கப்புள்ளி. அந்த ஆரம்பமே, அகப்புற வெளிப்பாடுகளுக்கும் மனித உணர்வுகளுக்கும் உண்டான தொடர்பென்ன என விரிந்து, எழுதும்போது இன்மையை நோக்கிப் போய்ச் சேர்ந்தது.

    மாற்றுப்பாலியல் (LGBT) உங்கள் கதைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசுபொருளாக உள்ளது. இந்த வகைமை கதை எழுதுவதில் உள்ள சவால் என்ன ?

    இலக்கியம் ஏதோவொரு வகையில் நுண்மையைப் பேசவேண்டும். ஆனால் நுண்மையைப் பேசுவதற்கு, முதலில் சமூகத்திலோ இலக்கிய மரபிலோ ஒரு சாதாரணத் தன்மை வரையறுக்கப்பட்டிருக்கவேண்டும். காட்டின் நிறம் பச்சை என்று ஒரு வரையறை இருந்தால் வெவ்வேறு பச்சைகளுக்கிடையிலான நுண்வேறுபாடுகளை வெளிப்படுத்த முடியும். 

    தமிழ் இலக்கியத்தில் ஆண்-பெண் உறவு சாதாரண தளத்தில் காமம், ஈர்ப்பு, உறவு என பலவகையாக ஏற்கனவே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அதிலிருந்து மேலெழுந்து, உன்னதக் காதலாகவோ, தியாகமாகவோ, காதல் தெய்வமாக்கப்படுவதாகவோ, மாயத்தன்மை ஏற்றப்படுவதாகவோ – இவையெல்லாம் இலக்கியத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன. போலவே ஆண்பெண் உறவின் கள்ளத்தனம், கீழ்மைத்தனம், நெகிழ்வு, “பிறழ்வு” எனப் பல கோணங்களும் நுண்மை பெறுகின்றன. ஆனால், ஆண்-ஆண், பெண்-பெண் உறவுகளுக்கு இந்த விரிவான சாத்தியங்கள் தமிழ் இலக்கியத்தில் இல்லை; ஒற்றைப் படைத்தன்மையான கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளன. அவையும், பன்முக ஆண்–பெண் உறவுகளுக்கு நடுவே, தேய்வழக்காகச் சொல்லப்பட்ட ஒற்றைக் கதாபாத்திரமாகவே இருக்கும். இத்தகைய கதாபாத்திரங்கள் இலக்கியப் பரப்பில் தனித்திருக்கின்றன; தமிழிலக்கிய வரலாற்றுத் தளத்தில் அந்தக் கதாபாத்திர நாட்காட்டிகளை மாட்டுவதற்கு ஆணியே இல்லை. 

    அதனால், இலக்கியத் தளத்தில் பால்புதுமைக் (queer) கதைகளுக்கு ஒரு புதிய வரலாற்றுப் போக்கையே உருவாக்கவேண்டும். இனிக்க இனிக்க ஊறியெழும் காதலையும் எழுதவேண்டும், மறுபக்கம், பொய்யையும் புரட்டையும் எழுதவேண்டும். இவ்விரண்டுமே இல்லாததால், இரண்டு விரல்களால் சக்கரைப் பாகின் பதம் பார்க்கும் அந்த நுண்ணிய இழையும் இல்லை. சவால் என்பது, ஒரு குறுகிய காலக்கட்டத்திற்குள் இந்த எல்லாவிதமான எழுத்துகளையும் எழுதவேண்டும் என்பதே. ‘பொன்னியின் செல்வன்’ நாவல் போல ரொமான்ஸ்தன்மையும் எழுதப்படவேண்டும், ‘அம்மா வந்தாள்’ போல உறவின் பல பக்கங்களும் எழுதப்பட வேண்டும். கைவிரல்களால் ஒரு கதையையும், speech-to-text வழியே வாய்மொழியாகச் சொல்லி இன்னொரு கதையையும் ஒரே நேரத்தில் எழுதும் திறன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

    “எதற்காக எழுதுகிறேன்?” என்றால் உங்கள் பதில் என்ன?

    சொல்லவேண்டிய கதைகள் இருக்கின்றன; அவற்றை யாரும் இதுவரை சொல்லவில்லை. அதனால் எழுதுகிறேன். சொல்லாமல் விடுவதற்கும் இல்லாமல் இருப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. 

    பாரதியாரின் இந்த “கண்ணன் என் காதலன்” பாடலை எடுத்துக்கொள்ளுங்கள். 

    ஆசை முகமறந்து போச்சே – இதை

    ஆரிடம் செல்வேனடி தோழி?

    நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில்

    நினைவு முகமறக்க லாமோ?

    கண்ணனைத் தன் காதலனாக வரித்துக்கொண்டு ஒருவர் பாடுகின்ற பாடல். யாருடைய நோக்கில் சொல்லப்படுவதாக நம் மனத்தில் எழுகிறது? ஒரு பெண்ணின் நோக்கில்? ஏன் ஒரு இளைஞன் தன் காதலனை நினைத்து, தன் தோழியிடம் கூறுவதுபோல் தோன்றுவதில்லை? சிலருக்குத் தோன்றினாலும் “நாயகி பாவம்” என்பதும் கூடவே வருகிறதோ? பாரதியார் தன்னைப் பெண்ணாக நிறுத்திக்கொண்டு இப்பாடலை எழுதியிருப்பாரோ? இத்தகைய கேள்விகள் இருக்கின்றன. அவற்றுக்கு எனக்கேயான விடைகளைக் காணவே எழுதுகிறேன் எனவும் சொல்லலாம். 

    “வெறியாட்டு” கதையில் வரும் சண்முகம், புராணங்களிலோ மதக்கதைகளிலோ இலக்கியக்கதைகளிலோ வரலாற்றுக்கதைகளிலோ யாரோடு தன்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்? எவரோடும் முடியாது. ஆனால் இப்போது, தமிழ் வாசிக்கும் ஒரு தன்பால் ஈர்ப்பாளர், அந்தச் சண்முகத்தோடு தன்னைப் பொருத்திக்கொள்ளமுடியும். அந்த ஒரு நம்பிக்கை, அந்த ஒரு பிடிமானம், அதுவே சமூகத்தின் ஆழ்மனத்துக்குத் தேவைப்படுகிறது. 

    உங்களுடைய எழுதும் முறை என்ன ? (இடம், நேரம், ஒரே அமர்வில் எழுதிவிடுவீர்களா? )

    மையப்புள்ளி என ஏதோவொன்று, பல கதைகளுக்கு மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும். ஏதோவொரு நாளில் அந்தப் புள்ளி கதையாக உருப்பெறும். பொதுவாக அந்தத் தருணத்திலேயே உடனடியாக எழுதத் தொடங்கிவிடுவேன். ஒன்றிரண்டு அமர்வுகளில் சிறுகதை பெரும்பாலும் வந்துவிடும்; ஆனால் பின்னர் தோன்றும் புதிய உச்சக்கணங்களை எழுதிச்சேர்ப்பதுமுண்டு. முழுவதும் எழுதி முடித்தபின், எழுத்துப்பிழைகளைக் களைவேன்; வாக்கியங்கள் கோவையாக இல்லையென்றால் செப்பனிடுவேன். சில நண்பர்களிடம் வாசிக்கக் கொடுத்து அவர்களின் கருத்துகளைக் கேட்பதுண்டு.

    இடம் என்று குறிப்பிட்ட ஒன்று இல்லை. பொதுவாக வீட்டில் மடிக்கணினியில் எழுதுவேன்; சிலவேளைகளில் பூங்காவில் செல்பேசியில் எழுதியிருக்கிறேன். இதுவரை எழுதியவற்றை வைத்துப் பின்னோக்கிப் பார்த்தால், எழுந்த காலையிலும் உணவுக்கு முன்னான மாலையிலுமே பல கதைகளை எழுதியிருக்கிறேன்.

    ⁠உங்களுடைய படைப்புகளில் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது உண்டா ? 

    எழுத்துப்பிழைகளையும் தகவல்பிழைகளையும் களைவதற்குச் செயற்கைநுண்ணறிவைப் பயன்படுத்தியிருக்கிறேன். தேய்வழக்குச் சொற்றொடர்களை அடையாளங்காணப் பயன்படுத்தியிருக்கிறேன். குறுநாவலுக்கும் நாவலுக்கும் செயற்கை நுண்ணறிவு இன்னும் அதிகமாகப் பயன்படும் என்று நினைக்கிறேன்; நாவலின் புறக்களத்தை அறிந்துகொள்ளத் தேவையான தகவல் சேகரிப்பில் அது உதவியாக இருக்கலாம். சில சமயம், செயற்கை நுண்ணறிவை ஒரு வாசகராக நிறுத்தி, என் கதைகளை வாசிக்கச் சொல்லி, அதன் எதிர்வினையைக் கேட்பது எனக்குக் களிப்பளிக்கும். 

    ⁠நாவல் எழுதும் திட்டம் உண்டா ? களம் என்ன ?

    மனித உறவுகளின் வரையறைகளும் கட்டுப்பாடுகளும் கூட இலக்கியத்தின் வழியே வடிவமைக்கப்படுபவைதான். ஆண்-பெண் காதல், குடும்பம் போன்ற கட்டமைப்புகள், வேளாண்மைக் காலத்திற்குப் பின்னரே ஏற்பட்டவை. அதற்கு முன் இவை எவ்வாறு இருந்தன என்று நமக்குத் தெரியாது. தமிழ்ப் பண்பாட்டில் காதல் என்ற சமூகக் கருத்துருவுக்குச் சங்க காலக் கவிதைகள் பெரும் அடித்தளம். பின்னர், பக்தி காலத்தில் அது இறைக்காதலாக உன்னதப்படுத்தப்பட்டு, இக்காலத்தில் வெவ்வேறு ஓடைகளாக நம்மை வந்தடைகிறது. 

    இதே போன்று ஆண்-ஆண் காதலையோ பெண்-பெண் காதலையோ சமூகத்தில் வைக்க இடமில்லை; ஏனென்றால் இவற்றுக்கு இலக்கியத்தில் முன்னோடி இல்லை, பண்பாட்டிலும் இவை எதிரொலிக்கவில்லை. இவற்றுக்கான ஆழ்படிம உருவகங்களே உருவாகவில்லை. அதனாலேயே நல்ல வாசகர்களும் நல்ல எழுத்தாளர்களும்கூட, ஒரு தன்பால் ஈர்ப்புக் கதாபாத்திரம் வரும் ஒரு கதையை வாசிக்கும்போது, சமூகத்துக்கு ஏற்கனவே பரிச்சயமான ஆண்தன்மை-பெண்தன்மை அடுக்குகளில் அக்கதாபாத்திரங்களை எங்கேயோ பொருத்த முயல்கிறார்கள்; அவ்வாறு பொருத்திப் பார்த்து திருப்தியடைகிறார்கள்; அல்லது ஓர் ஏளனத்துடன் நிராகரித்துக் கடந்துசெல்கிறார்கள். இது காதலுக்கு மட்டுமல்ல; ஆண்மை, தாய்மை என எல்லாவற்றுக்கும் பொருந்தும். அவ்வளவு ஏன், சமூகத்தில் இப்போது உதாரணமாக, ஓர் ஆண் இளைஞன் மற்றொரு ஆணால் உடல்சார்ந்த வன்முறைக்கும் சுரண்டலுக்கும் ஆளானால், சமூகம் அதை ஒரு மீறலாகப் பார்க்கவே மறுக்கிறது. ஓர் ஆணுக்கு எப்படி இப்படியெல்லாம் நேரும் எனக் கேட்டு, இது அவதூறாகவே இருக்கவேண்டும் என முத்திரை குத்துபவர்களே அதிகம். மறுபுறம், தன்பால் ஈர்ப்பும் பால்புதுமையும் மனக்கோளாறோ எனவும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

    இலக்கியம் பொதுமைப்படுத்தப்பட்ட உண்மையைச் சொல்ல வருவதில்லை; ஒவ்வொரு எழுத்தாளருக்குமான சிறப்புண்மையே அதில் வெளிப்படுகிறது. வாசகர்கள் அந்தச் சிறப்புண்மைகளில் தங்களைக் கண்டுகொள்கிறார்கள். இத்தகைய சிறப்புண்மைகள் காலப்போக்கில் தாமாகத் தொகைத்து, விழுமியங்களாகவும் படிமங்களாகவும் வெளிப்படுகின்றன. ஆனால், இவை ஒரே நிறம் கொண்ட விழுமியங்களல்ல. பல்வேறு நிறங்கள் கொண்டவை. ஆண்-பெண் உறவுகளின் பல்வேறு நிறச்சாத்தியங்கள், கதைகளில் இவ்வாறுதான் உருவாகியுள்ளன. அதேபோல, பால்புதுமை மனிதவுறவுகளும் பல நிறப்பட்டைகள்கொண்டவைதாம். 

    இவற்றை ஒற்றை நிறமாக தேய்வழக்காக முன்வைக்காமல், அம்மனிதர்களின் பல்வேறு பாவனைகளையும், நடிப்புகளையும், பழிவாங்கலையும், தியாகங்களையும், கையறுநிலையையும், அன்பையும், காதலையும், நெகிழ்ச்சியையும், அழுகையையும் உண்மையாக முன்வைக்க வேண்டிய தேவை தமிழிலக்கியத்தில் உள்ளது. இவற்றைத் தமிழிலக்கிய வரலாற்றினுள் வைத்து, ஒரு சக-வரலாறாக நாவலில் சொல்லவேண்டும் என்ற விருப்பமும் கனவும் உண்டு – வரலாற்றுப் பெருக்கையே பால்புதுமைக் கோணத்தில் ஒரு நாவலாக்க வேண்டும். அதற்குப் புதுவித அழகியலும், புதிய படிமங்களும் குறியீடுகளும் உருவாக்குவது அவசியம். இவையெல்லாம் “தானாகச்” சமூகத்தில் திரண்டு வரவேண்டும் என்று சொல்வதை நான் மறுக்கிறேன்; எதுவும் தானாக உருவாவதில்லை. ஒருவரோ பலரோ ஏதோவொரு காலப்புள்ளியில் தம் அகத்தில் எழுந்ததையும் வாழ்ந்துணர்ந்த அனுபவங்களையும் இலக்கியமாகவும் கலையாகவும் ஆக்கியவையே, பின்னர் மூலப்படிமங்களாகவும் விழுமியங்களாகவும் புராணங்களாகவும் நிலைபெற்றுள்ளன. நான் பண்பாட்டை மறுத்து, பண்பாட்டை உருவாக்க முனையவில்லை; மறுபண்படுத்தல் வழியாகப் பண்பாட்டு விரிவாக்கத்தையே முயல்கிறேன்.

    #

  • நேர்முகம் 1 – மதுநிகா சுரேஷ்

    நேர்முகம் 1 – மதுநிகா சுரேஷ்

    “எங்கள் புத்தக வாசிப்பு குழுமம் ஒன்பது வருடங்களாக ஒவ்வொரு வாரமும் இணையவழியில் சந்திக்கிறோம். இதுவரை நானூறு சந்திப்புகளுக்கும் மேல் நடத்தியிருப்போம்.”

    மதுநிகா சுரேஷ் அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் வசிக்கிறார். “தமிழ் ஆர்வலர்கள் குழு” என்ற இணையவழி வாசிப்பு குழுமத்தை ஒன்பது வருடங்களாக நடத்தி வருகிறார். இதுவரை நானூறுக்கும் மேற்பட்ட இணைவழி இலக்கிய சந்திப்புகளை ஒருங்கிணைத்திருக்கிறார். சமீபத்தில் தல்ஸ்தோயின் “போரும் அமைதியும்” நாவலை இருபத்தேழு வாரங்களாக வாசித்து நிறைவுசெய்திருக்கிறார்கள்.

    2022 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்திய எமர்சன் இலக்கிய முகாமில்தான் மதுநிகாவை முதலில் சந்தித்தேன். சிறுகதை அமர்வில் எழுத்தாளர் திருச்செந்தாழையின் ஆபரணம் சிறுகதை குறித்து ஒரு நல்ல உரையாற்றினார். 2023 எமர்சன் இலக்கிய முகாமில் கு. அழகிரிசாமி எழுதிய திரிபுரம் சிறுகதையையும், 2024 எமர்சன் இலக்கிய முகாமில் தல்ஸ்தோயின் அன்னா கரினினா நாவல் குறித்தும் உரையாற்றினார். வலைதளம்: “மதுவின் பக்கங்கள்”. மதுநிகாவுடன் ஒரு நேர்முகம்.

    உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், வேலையை பற்றி ?

    நான் பிறந்து வளர்ந்தது தஞ்சாவூரில். படித்தது Bachelor of Engineering in Electrical and Electronics Engineering. கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தேன். அமெரிக்காவில் 13 ஆண்டுகளாக வசிக்கிறேன். இங்கு முழுநேரமும் இலக்கியம் தான். கணவர் சாப்ட்வேர் இன்ஜினியர். இரண்டு பிள்ளைகள். என் மகன் ஒரு வயது குழந்தையாக இருந்த போது மிச்சிகன் இலக்கிய குழுவில் இணைந்தேன். அவனோடு சேர்ந்து என் வாசிப்பும் வளர்ந்தது. நான் வாசிப்பதைப் பார்த்து என் மகளும் நிறைய வாசிக்கிறாள்.

    இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ? 

    இலக்கிய அறிமுகம் அப்பா திரு.இரா.நெடுமாறனிடம் இருந்துதான் தொடங்கியது. எங்கள் வீட்டில் நூலகம் இருக்கிறது. அப்பா ஆங்கிலம் மற்றும் தமிழில் தீவிரமாக வாசிக்கும் பழக்கம் உடையவர். எனது வாசிப்பு அப்படி ஆரம்பித்ததுதான். முதலில் நான் வாசித்தது கல்கி, பாலகுமாரன், சுஜாதா நாவல்கள்தான். அதிலும் தஞ்சை என்பதால் பொன்னியின் செல்வன்,உடையார் போன்ற நாவல்கள் விரும்பி வாசித்தேன். கல்லூரி நாட்களில் கல்லூரி நூலகத்தில் கிடைக்கும் Robin sharma, Napoleon Hill, Shiv khera, Dale Carnegie புத்தகங்களை வாசித்தேன். அங்கே தொடங்கிய வாசிப்பு ஒரு கட்டத்தில் முதிர்ச்சியான தீவிரமான வாசிப்பிற்குள் தற்பொது வந்தடைந்து இருக்கிறேன் என்றால் ஜெயமோகன் அவர்களின் அறம் தொகுப்பை வாசித்தப்பின். இலக்கியம் என்பதன் அர்த்தத்தை உணர வைத்த நூல் அது. தேடல் நமக்கு இருக்கும்போது நம்மை  நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டி அழைத்து செல்வார்கள்.

    உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள், கவிஞர்கள் யார் ?

    பிடித்த எழுத்தாளர்களின் பட்டியல் பெரியது. என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்து என்பது  கம்பர், தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி, செக்காவ் மற்றும் ஜெயமோகன். கவிதை என்று வரும்போது ரூமி, நகுலன், அபி, தேவதேவன்.

    நீங்கள் ஒருங்கிணைக்கும் இணையவழி கலந்துரையாடல் குழுமம் பற்றி சொல்லுங்கள். எப்போது துவங்கினீர்கள் ? 

    நான் இம்பர்வாரி, சுக்கிரி போன்ற வாசிப்பு குழுமங்களில் இருக்கிறேன். மிச்சிகனில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் குழுவில் 2017இல் இணைந்தேன். அந்த குழுவை  திருமதி.கலையரசி அவர்கள் தொடங்கினார். சங்கர் மற்றும் லஷ்மன் அந்த குழுவில் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.அவர்கள் மூலமாகத்தான் எனக்கு அமெரிக்க விஷ்ணுபுரம் குழுவின் அறிமுகம் கிடைத்தது.  மிச்சிகன் தமிழ் ஆர்வலர் குழுவில் சங்க இலக்கியம், நவீன இலக்கியம் குறித்த இணைய வழி கலந்துரையாடலை ஒன்பது வருடங்களாக வாரம் தோறும் நிகழ்த்துகிறோம். இந்த குழுவில் நவீன இலக்கிய நிகழ்ச்சிகளை நானும், நண்பர் சங்கரும் ஒருங்கிணைக்கிறோம். எங்கள் நிகழ்வை நாங்கள் பதிவு செய்வதுண்டு. அதன் பதிவை பலர் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். இலக்கிய முன்னெடுப்புகளுக்கு நண்பர்கள் குழு மிக அவசியம் .

    உங்கள் கலந்துரையாடலில் புதிதாக ஒருவர் இணையவிரும்பினால் எப்படி இணைவது ? 

     புதிதாக எங்கள் குழுவில் இணைய விரும்பும் நண்பர்கள் madhuparu09@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

    இதுவரை எத்தனை சந்திப்புகள் நடத்தியிருக்கிறீர்கள் ? அதிகபட்சமாக ஒரு சந்திப்பில் எத்தனை வாசகர்கள் பங்கேற்றிருக்கிறார்கள் ? 

    குறைந்தது பத்து  முதல் பதினைந்து நபர்கள் நிகழ்வில் பங்கேற்பார்கள். இதுவரை எத்தனை சந்திப்புகள் என்று கணக்கிட முடியாது. ஒன்பது வருடமும் ஒவ்வொரு வாரமும் சந்திக்கிறோம். நானூறு சந்திப்புகளுக்கும் மேல் நடத்தியிருப்போம்.

    இதுவரை என்ன என்ன புத்தகங்களை குழுவாக வாசித்திருக்கிறீர்கள் ?

    வாசித்த புத்தகங்களின் பட்டியலில் நினைவிலிருப்பவை மற்றும் சொல்கிறேன்.

    நீலகண்ட பறவையைத் தேடி-அதீன் பந்தோபத்யாய், போரும் வாழ்வும்- தல்ஸ்தோய், கரம்சவ் சகோதரர்கள்- தஸ்தாவெஸ்கி, புளியமரத்தின் கதை-சுந்தர ராமசாமி, செல்லாத பணம்- இமையம், அஞ்சலை- கண்மணி குணசேகரன், கு. அழகிரிசாமி சிறுகதைகள், தி. ஜானகிராமன் சிறுகதைகள், அசோகமித்திரன் படைப்புகள்,அம்பை, வண்ணதாசன்,எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என்று பல எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவருகிறோம். தற்கால எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிப்பதோடு அவர்களுடன் இணைய வழி சந்திப்பும் நடத்துகிறோம். திரு.செந்தில் ஜெகந்நாதன், திரு. திருச்செந்தாழை, திரு. கண்மணி குணசேகரன், திரு. இமையம், கவிஞர் ஆனந்த், திரு.நவீன் என்று பல எழுத்தாளர்களின் படைப்புகளை முழுவதுமாக படித்து அவர்களுடன் ஒரு மிகச்செறிவான இலக்கிய சந்திப்புகளை நிகழ்த்தியிருக்கிறோம். வாசகர்களாக எழுத்தாளர்களுக்கு மரியாதையும், ஊக்கமும் செய்வதாக இது அமைகிறது .

    ஒரு புத்தகத்தை படித்து முடித்தபின் அடுத்த புத்தகத்தை எப்படி தேர்ந்தெடுப்பீர்கள் ?

    ஒரு புத்தகத்தை வாசித்தப்பின், தொடர்ந்து குழுவில் வாசிப்பில் ஆர்வமாக பங்கேற்கும் நண்பர்களின் பரிந்துரைகளை ஏற்று வாக்கெடுப்பு நடத்தி வரிசைப்படுத்தி அட்டவனை தயாரித்து வரிசையாக அடுத்தடுத்து தொடர்ந்து வாசிப்போம்.

    வாசிப்பு குழுமங்கள் வெற்றிகரமாக நடைபெற உங்கள் ஆலோசனைகள் என்ன ? 

    1. தொடர்ந்து வாசிப்பில் தீவிரமாக இருக்கும் நடத்துனர் வேண்டும்.

    2. குழுமத்தில் செய்யக்கூடியதும் செய்யத்தகாதவைகளுமான விதிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவரின் கருத்திற்கு மாறுபட்ட கருத்தை முன்வைக்கும் போது அது அந்த நபரை தாக்கும் முறையில் அல்லாமல் இருக்க வேண்டும். ஒருவர் பேசும்போது இடையில் பேசக்கூடாது.

    3. ஒவ்வொரு கூடுகையின் போதும் நேரமேலாண்மை மிக அவசியம்.அறிவிக்கப்பட்ட நேரத்தில் நிகழ்வை தாமதமின்றி ஆரம்பித்து நிகழ்வில் ஒவ்வொரு நபருக்கும் ஐந்து நிமிடங்கள் என்றால் அதை மீறாமல் கடைப்பிடித்து குறித்த நேரத்தில் நிகழ்வை முடிப்பதற்கு தக்க திட்டமிடலுடன் செயல்படும் மட்டுறுத்தனர் வேண்டும்.

    4. தொடர்ந்து வாசிப்பில் பங்களிப்பை ஆற்றாதவர்கள் குழுவை தோய்வடைய செய்வார்கள். அதனால் ஆர்வமாக பங்களிப்பவர்களை மட்டுமே குழுவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    5. அரசியலுக்கு இடமளிக்க கூடாது.

    6. வருடா வருடம் வாசிப்பு மாரத்தான் போட்டி நடத்துகிறோம் குழு சுறுசுறுப்பாக இயங்க இதுபோன்ற போட்டியும் தேவை. 

    இலக்கியம் உங்களுக்கு அளித்தது என்ன ? வாசிப்பு குழுமங்களை நடத்துவது மூலம் நீங்கள் அடைந்தது என்ன ? 

    வாழ்க்கையில் நாம் பல இன்பதுன்பங்களை சந்திப்போம். சில வேளைகளில் சமநிலை தவறுவோம். அந்த தருணங்களில் இலக்கியம் ஊன்றுகோளாக இருக்கிறது.சின்ன சின்ன விசயங்களைக்கூட ரசிப்பதற்கும் ,என்னிடம் இருப்பவைகளுக்கு நன்றி சொல்வதற்கும், முக்கியமாக மனிதர்களை அவர்களின் நிறை குறைகளுடன் ஏற்றுக்கொள்வதற்கும், என்னை நானே நேசிப்பதற்கும், ஈகோ இல்லாமல் மன்னிப்பு கேட்பதற்கும் இலக்கியம்தான் எனக்கு கற்றுக்கொடுத்தது.

    வாசிப்பு குழுமங்கள் நடத்துவதன் மூலம்  குழுவாக செயல்படும் தன்மை,ஒருவர் வாசிப்பின் மூலம் பக்குவம் அடைதலை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு, பல வாசகர்களின் வித்தியாசமான புரிதல்கள், சில அனுபவம் வாய்ந்த வாசகர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு, நாம் பிறருடன் நாம் கற்றதை பகிரும் வாய்ப்பு என்று இந்த குழுமத்தின் மூலம் நான் அடைந்ததவை பல.

    உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன ?

    எதிர்காலத் திட்டம் வாசித்த படைப்புகளைப் பற்றிய வாசிப்பனுபவத்தை எழுத்துவடிவில் பதிவு செய்யவேண்டும். ரஷ்ய படைப்புகளைப் போல் பிற மொழிப்படைப்புகள் பல வாசிக்க வேண்டும். சிறுகதைகள் எழுதும் முயற்சியிலும் இருக்கிறேன். கம்பராமாயணம் தற்போது யுத்த காண்டம் மூன்றாம் பாகத்தை வாசித்துகொண்டிருக்கிறேன். மூன்று வருடங்கள் தவம் போல் ஒரு அனுபவம். இம்பர்வாரி குழுமத்தில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். மேலும் கம்பராமாயணம் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுத வேண்டும்.

    #