நேர்முகம் 2 : விஜய் ரெங்கராஜன்

விஜய் ரெங்கராஜன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். எமர்சன் இலக்கிய முகாம், பூன் (2022) இல் வாசகராக அறிமுகமாகி, 2024இல் சிறுகதைகள் எழுதத்துவங்கினார். இவருடைய சிறுகதைகள் சொல்வனம், அகழ், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளது. தளம்: https://apvijay.me 

உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், வேலை பற்றி?

நான் திருச்சிராப்பள்ளியில், உறையூர் பகுதியில், பிறந்து வளர்ந்தேன். பள்ளிப் படிப்பும் திருச்சியில்தான். கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் இளங்கலைப் பொறியியல் பட்டமும் (BE ECE, PSG Tech), பின்னர் சென்னை ஐ.ஐ.டி.யில் கணினிப் பார்வை துறையில் முனைவர் பட்டமும் (PhD in Computer Vision, IIT Madras) பெற்றேன். பின்பு கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தேன். திருச்சிராப்பள்ளி, கோவை, பெங்களூர், சென்னை என வட்டமடித்து, இப்போது கலிஃபோர்னியா விரிகுடா பகுதியில் என் இணையனுடன் வசித்துவருகிறேன்; கணினிப் பார்வை-செயற்கை நுண்ணறிவுத் துறை சார்ந்து பணிபுரிகிறேன்.

இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது?

முற்காலச் சோழர்களின் தலைநகரம் உறையூர் எனப் பள்ளிப் பாடங்களில் படித்தபோது வரலாற்றில் ஆர்வம் உண்டானது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, கல்லூரிக் காலத்தில் எழுத்தாளர் கல்கியின் புனைவுகளை வாசிக்கத் தொடங்கியதற்கு அந்த ஆர்வமே வித்திட்டது. பின்னர், நான் பெங்களூரில் இருந்தபோது நண்பர் அசோக் அவருடைய வலைத்தளங்களில் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையக் கட்டுரைகளைப் பகிர்வார். அவருக்கு ஏற்கனவே தமிழிலக்கிய அறிமுகம் உண்டு. அவ்வாறுதான் ஜெயமோகனின் தளம் எனக்கு அறிமுகமானது. அதன் பின், ஜெயமோகனுக்குத் தன்பாலுறவைப் பற்றி கேள்விக்கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன்; அவர் கதைகளை வாசிக்கத் தொடங்கினேன். அவருடைய கட்டுரைகள் வழியாகப் பிற தமிழ் எழுத்தாளர்களும் அறிமுகமானார்கள்; தமிழிலக்கியம் அறிமுகமானது.

உங்களுக்குப் பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள் யார்?

எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகளை வாசிக்கத் தொடங்கியபோதே, அவை என்னைத் தங்களின் உலகங்களுக்குள் உள்ளிழுத்துக்கொண்டன. என் இலக்கிய அறிமுகக் காலத்தில் வாசித்த ‘காடன்விளி’, ‘மாடன்மோட்சம்’, ‘திருமுகப்பில்’, ‘ஊமைச்செந்நாய்’, ‘டார்த்தனீயம்’ போன்ற கதைகள் எண்ணற்ற காட்சிகளையும் நிறங்களையும் மணங்களையும் ஒலிகளையும் மனத்தில் கொட்டி, அவற்றின் வழியாக உணர்வுகளைத் தீட்டியெழுப்பின. வழக்கமாக ஓவியம் தீட்டுபவரின் விரல்களில்தான் வண்ணம் படிந்து தோலில் உறைந்திருக்கும்; ஆனால் ஓவியத்தைக் காண்பவரின் விரல்களிலும் வண்ணம் தேங்கச் செய்யும் குணம் கொண்டவை ஜெயமோகனின் கதைகள்.

எழுத்தாளர் யுவன் சந்திரசேகரை வாசிக்கத் தொடங்கியது சமீபத்தில்தான் – கடந்த இரண்டு ஆண்டுகளில். கணினிப் பார்வை ஆராய்ச்சியில் Accidental Cameras என்றொரு கருத்துரு உண்டு. மழை பெய்தபின் காரின் முன்கண்ணாடியில் சின்னச் சின்னத் துளிகள் படிந்திருக்கும்; ஒவ்வொரு துளியிலும் ஒவ்வோர் உலகத்தைக் காணலாம். அவை நம் கண்கள் காணும் அதே உலகம்தான்; ஆனால் அந்த நீர்த்துளிக் கண்களில், சற்றே வேறான கோணத்தில், வேறான குவிய அளவுகளில், அவ்வுலகம் வேறுபட்டுத் தெரியும்; மாயமாய் முளைத்த பல்லாயிரம் கண்கள். அதேபோல், pinhole camera-வின் ஒரு வடிவமாக, இருளறையின் ஒற்றைச் சன்னல், வெளியுலகத்தை உட்சுவரில் தலைகீழாக மங்கலாகப் படம்பிடிக்கும். இவ்வாறு, அதே புறவுலகம் வெவ்வேறு பார்வைப்புலன்களில் வெவ்வேறு வடிவங்களில் தெரிகிறது. யுவனின் படைப்புகள் இவற்றைப் படம்பிடிப்பதாக எனக்குப் படுகிறது. ‘வெளியேற்றம்’, ‘குள்ளச்சித்தன் சரித்திரம்’ நாவல்கள், ‘தாயம்மா பாட்டியின் நாற்பத்தோரு கதைகள்’, ‘நார்ட்டன் துரையின் மாற்றம்’ சிறுகதைகள் – இவை எனக்குப் பிடித்தவை. பல யதார்த்தங்கள், மாற்றுக்கோணங்கள் என எவ்வாறு வரையறுத்தாலும், யுவனின் படைப்புகள் அவற்றின் அடியில் நம் உணர்வுகளைத் தீண்டும் புள்ளிகளைக் கொண்டவை.

பல தமிழ் எழுத்தாளர்கள் வெவ்வேறு வகையில் என்னைப் பாதித்திருக்கிறார்கள். புதுமைப்பித்தனிலிருந்து கி. ராஜநாராயணன், பூமணி, இமையம் என அலைகளாய் மோதிக்கொண்டே இருக்கின்றனர்; அவற்றை வாங்கிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். ஆரம்பகாலத் தமிழ்ச் சிறுகதைக் களத்தில் மௌனி, கு. ப. ராஜகோபாலன் முதலிய எழுத்தாளர்களின் கதைகள் ஒரு குறிப்பிட்ட அகத்திணைக் களத்தை உருவாக்குகின்றன என்பது என் செல்லக் கருதுகோள். உதாரணமாக, மௌனியின் அழியாச்சுடர், கு.ப.ரா.வின் நூர் உன்னிஸா, திரை, கனகாம்பரம், ஆற்றாமை போன்ற பல கதைகள், ஏதோவொரு அகத்தருணத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறு ஒரு சிறுகதைத் தொகுப்பு அமைந்தால், அதைச் சுற்றி திணைக்கோட்டுபாடுகளை எழுப்பலாம். அக்கதைக் களத்தின் சுற்றுவெளி எல்லைக்குட்பட்டதென்றாலும், சங்க காலக் கவிதைகளில் போல, அவ்வெல்லையே அக்கதைகளின் உணர்வுகளுக்குத் திணைகளை வகுத்துத் தருகிறது எனத் தோன்றுகிறது. அக்காலத்தில் எழுதிய எழுத்தாளர் விந்தியாவின் சிறுகதைகளை இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன்; இவரின் கதைகள் வாசிப்புத் தளத்திலும் விமர்சனத் தளத்திலும் இன்னும் போதிய கவனம் பெறாதவை. 

தமிழ் அபுனைவுத் தளத்தில் பேராசிரியர் டி. தருமராஜை முக்கியமான ஒருவராகக் காண்கிறேன். அவருடைய கட்டுரைகள் கூர்மையும் வீச்சும் மிக்கவை. அவரது உரைகளும் இணையத்தில் இருக்கின்றன; அவருடைய “அயோத்திதாசர் – பார்ப்பனர் முதல் பறையர் வரை” நூல் வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய உரை, என் “மெய்ப்பொருள்” சிறுகதைக்கு ஓர் உந்துதலாக இருந்தது. 

பிறமொழி எழுத்தாளர்கள் என்று சொன்னால் உலக இலக்கியமே வந்துவிடும். டால்ஸ்டாயின் பன்முகப்பட்ட கதாபாத்திரப் படைப்புகள் பிடிக்கும்; சாதாரணமாக விவரித்துச் செல்லும் போக்கில் எழுதப்பட்டாலும், அவை மனத்தில் எங்கோ தங்கிவிடும். உதாரணமாக, ‘போரும் அமைதியும்’ நாவலில் வரும் மரியா டிமிட்ரியேவ்னா – “டிராகன்” என அழைக்கப்படும் கதாபாத்திரம். செக்காவ் மற்றொரு பிடித்த எழுத்தாளர்; கவிதைத்தன்மை வாய்ந்த அவரின் ‘தி ஸ்டெப்’ (The Steppe) ஒரு சிறந்த குறுநாவல். ஆலிஸ் வாக்கரின் ‘தி கலர் பர்ப்பிள்’ (The Color Purple) எனக்குப் பிடித்த நாவல்களில் ஒன்று. இப்போது தாமஸ் மன்னின் பெரும்படைப்புகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். 

சங்க இலக்கியம், கம்பராமாயண வாசிப்பு எப்படி அறிமுகமானது?

“கணையாழி கடைசிப் பக்கங்கள்” கட்டுரைத் தொகுப்பில் எழுத்தாளர் சுஜாதா சுட்டிய “ஏற்றுக உலையே ஆக்குக சோறே”, “சிற்றில் நற்றூண் பற்றி” ஆகிய பாடல்களால் தூண்டப்பட்டுப் புறநானூற்றை வாசிக்கத் தொடங்கினேன். “சிற்றில்” பாடலைப் பள்ளியில் படித்த நினைவு அப்போதுதான் மூளையின் எங்கோவொரு ஆழத்திலிருந்து எழுந்து இணைந்துகொண்டது. பின்னர், 2011ல் எழுத்தாளர் ஜெயமோகன் சென்னையில் ஆற்றிய “குறுந்தொகை: தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்” என்ற உரையின் வழியாக அகத்திணைப் பாடல்களை வாசிக்கத் தொடங்கினேன். அங்கிருந்து தமிழ்ப் பண்டைய இலக்கிய ஆற்றில் படகு வலிக்க முடிந்தது. ஒற்றை நிழற்படங்களென குறுந்தொகையும் புறநானூறும், சில நொடிக் குறுங்காணொளிகளெனக் கலித்தொகைப் பாடல்களும், பின்னர் அவ்வுலகத்திலேயே வாழவைக்கும் சிலப்பதிகாரக் காப்பியமும் என வாசிப்புத் தொடர்ந்தது. 

கம்பராமாயணத்தைத் தொடர்ச்சியாக, முழுமையாக வாசித்ததில்லை; அதில் எனக்கு விரிவான வாசிப்புண்டு என்று நான் கருதவில்லை. அவ்வபோது ஏதோ ஒரு பகுதியை எடுத்து வாசிப்பேன். அமெரிக்கா-பூன் இலக்கிய முகாமில் நடந்த கம்பராமாயண உரையாடலை நண்பர்களுடன் சேர்ந்து நடத்தியது, அதை மேலும் உன்னிப்பாக வாசிக்கத் தூண்டியது. மேலும், என் இணையன் வங்காளி என்பதால், அங்கு ராமாயணக் கதை எவ்வாறு வேறுபடுகிறது, எந்தக் கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்று பார்ப்பது சுவாரசியம். உதாரணமாக, ராவணனின் மகன் மேகநாதன் வங்காளத்தில் முக்கியமான பாத்திரம்.    

⁠⁠முதல் சிறுகதை எப்போது வெளியானது?

⁠⁠முதல் சிறுகதை “குறியீடு” சொல்வனம் இதழில் ஜூலை 2024ல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, “வெறியாட்டு” சொல்வனத்திலேயே பிப்ரவரி 2025ல் வெளியானது. அதன் பின் தொடர்ந்து இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். https://apvijay.me என்ற என் தளத்தில் என் கதைகளையும் கட்டுரைகளையும் வாசிக்கலாம்.

எழுத்து சார்ந்த எதிர்கால திட்டங்கள் என்ன?

சிறுகதைகளும் குறுநாவல்–நாவல் உள்ளிட்ட பெருங்கதைகளும்தான். சமீபத்தில் குறுநாவல் வடிவம் குறித்தான தீவிரமான கட்டமைப்பு வாசிப்புகளும் கவனிப்புகளும் நிகழ்ந்தன; அதையொட்டி ஒரு புதிய குறுநாவலுக்கான கரு இப்போது மனத்தில் உருப்பெற்று வருகிறது.

உங்களுடைய சிறுகதைகளில் வெறியாட்டு, உள்ளுறை எனக்குப் பிடித்தவை. இந்தக் கதைகளை எழுதிய பின்புலம் குறித்துச் சொல்ல முடியுமா?

இயல்பான ஒரு மனித வெளிப்பாட்டுக்கு எப்போதும் ஏதேனும் ஓர் எதிர்ப்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது. சங்க காலப் பாடல்களில் காதல் இயல்பாக இருக்கும்போதே, பெண்ணின் தாய் அதை மறுப்பதைக் காண்கிறோம். மகளின் உடம்பில் முருகு வந்துவிட்டதாகவும், வேலன் வந்து வெறியாட்டு ஆடி அம்முருகை விரட்டுவதாகவும் காண்கிறோம். தற்காலத்தில் அதே நிராகரிப்பு, சாதி, மதம், பணம், இனம் என வெவ்வேறு உருவங்களில் இருக்கிறது. தன்பால் காதலுக்கும் அதுவே தான்; வெறியாட்டு என்கிற சமூக நிராகரிப்பு, பெரும்பாலும் ஒரு மனிதரின் இளமைப் பருவத்திலேயே நிகழ்ந்துவிடுகிறது. இந்தத் தொடர்பை வரலாற்றுத் தளத்தில் வைத்து வலியுறுத்தவே, சங்க கால வெறியாட்டையே இக்கதையின் கட்டமைப்பாக அமைத்தேன். இயல்பான காதலுணர்வும் அதற்கான எதிர்ப்பும் ஒருசேர உண்மையாக வெளிப்படுவதே “வெறியாட்டு” கதை என்று நினைக்கிறேன்.

“மெய்ப்பொருள்” சிறுகதையில், மொழியின் வழியாகத் தற்கற்ற மணி என்கிற செயற்கை நுண்ணறிவு எந்திரன், மொழிக்கு முன் ஆதியாக என்ன இருந்திருக்கலாம் என்று யோசிக்கிறான். “உள்ளுறை” சிறுகதை, அதே கதாபாத்திரங்களைக்கொண்டு அகம்-புறம் இரண்டுக்குமான தொடர்பு என்ன என்ற கேள்வியை ஆராய்கிறது. இந்தக் கதையை எழுதத் தொடங்கிய தருணத்தை இப்படிச் சொல்லலாம். தொல்காப்பியத்தில் நகைப்பு, அழுகை முதலிய எட்டு மெய்ப்பாடுகள் (ரசங்களுக்கு நிகரானவை) கூறப்படுகின்றன; ஒன்பது அல்ல, எட்டுதான். பின்னர், அபிநவகுப்தர் சாந்தம்/அமைதி என்பதை ஒன்பதாவது ரசமாகத் தன் அழகியல் கோட்பாட்டில் முன்வைத்தார். இந்த எட்டு மெய்ப்பாடுகளையும் எந்திரன் மணி தன் முகத்தில் வெளிப்படுத்துவது போல என் மனத்தில் தோன்றிய சித்திரமே இக்கதையின் தொடக்கப்புள்ளி. அந்த ஆரம்பமே, அகப்புற வெளிப்பாடுகளுக்கும் மனித உணர்வுகளுக்கும் உண்டான தொடர்பென்ன என விரிந்து, எழுதும்போது இன்மையை நோக்கிப் போய்ச் சேர்ந்தது.

மாற்றுப்பாலியல் (LGBT) உங்கள் கதைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசுபொருளாக உள்ளது. இந்த வகைமை கதை எழுதுவதில் உள்ள சவால் என்ன ?

இலக்கியம் ஏதோவொரு வகையில் நுண்மையைப் பேசவேண்டும். ஆனால் நுண்மையைப் பேசுவதற்கு, முதலில் சமூகத்திலோ இலக்கிய மரபிலோ ஒரு சாதாரணத் தன்மை வரையறுக்கப்பட்டிருக்கவேண்டும். காட்டின் நிறம் பச்சை என்று ஒரு வரையறை இருந்தால் வெவ்வேறு பச்சைகளுக்கிடையிலான நுண்வேறுபாடுகளை வெளிப்படுத்த முடியும். 

தமிழ் இலக்கியத்தில் ஆண்-பெண் உறவு சாதாரண தளத்தில் காமம், ஈர்ப்பு, உறவு என பலவகையாக ஏற்கனவே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அதிலிருந்து மேலெழுந்து, உன்னதக் காதலாகவோ, தியாகமாகவோ, காதல் தெய்வமாக்கப்படுவதாகவோ, மாயத்தன்மை ஏற்றப்படுவதாகவோ – இவையெல்லாம் இலக்கியத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன. போலவே ஆண்பெண் உறவின் கள்ளத்தனம், கீழ்மைத்தனம், நெகிழ்வு, “பிறழ்வு” எனப் பல கோணங்களும் நுண்மை பெறுகின்றன. ஆனால், ஆண்-ஆண், பெண்-பெண் உறவுகளுக்கு இந்த விரிவான சாத்தியங்கள் தமிழ் இலக்கியத்தில் இல்லை; ஒற்றைப் படைத்தன்மையான கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளன. அவையும், பன்முக ஆண்–பெண் உறவுகளுக்கு நடுவே, தேய்வழக்காகச் சொல்லப்பட்ட ஒற்றைக் கதாபாத்திரமாகவே இருக்கும். இத்தகைய கதாபாத்திரங்கள் இலக்கியப் பரப்பில் தனித்திருக்கின்றன; தமிழிலக்கிய வரலாற்றுத் தளத்தில் அந்தக் கதாபாத்திர நாட்காட்டிகளை மாட்டுவதற்கு ஆணியே இல்லை. 

அதனால், இலக்கியத் தளத்தில் பால்புதுமைக் (queer) கதைகளுக்கு ஒரு புதிய வரலாற்றுப் போக்கையே உருவாக்கவேண்டும். இனிக்க இனிக்க ஊறியெழும் காதலையும் எழுதவேண்டும், மறுபக்கம், பொய்யையும் புரட்டையும் எழுதவேண்டும். இவ்விரண்டுமே இல்லாததால், இரண்டு விரல்களால் சக்கரைப் பாகின் பதம் பார்க்கும் அந்த நுண்ணிய இழையும் இல்லை. சவால் என்பது, ஒரு குறுகிய காலக்கட்டத்திற்குள் இந்த எல்லாவிதமான எழுத்துகளையும் எழுதவேண்டும் என்பதே. ‘பொன்னியின் செல்வன்’ நாவல் போல ரொமான்ஸ்தன்மையும் எழுதப்படவேண்டும், ‘அம்மா வந்தாள்’ போல உறவின் பல பக்கங்களும் எழுதப்பட வேண்டும். கைவிரல்களால் ஒரு கதையையும், speech-to-text வழியே வாய்மொழியாகச் சொல்லி இன்னொரு கதையையும் ஒரே நேரத்தில் எழுதும் திறன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

“எதற்காக எழுதுகிறேன்?” என்றால் உங்கள் பதில் என்ன?

சொல்லவேண்டிய கதைகள் இருக்கின்றன; அவற்றை யாரும் இதுவரை சொல்லவில்லை. அதனால் எழுதுகிறேன். சொல்லாமல் விடுவதற்கும் இல்லாமல் இருப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. 

பாரதியாரின் இந்த “கண்ணன் என் காதலன்” பாடலை எடுத்துக்கொள்ளுங்கள். 

ஆசை முகமறந்து போச்சே – இதை

ஆரிடம் செல்வேனடி தோழி?

நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில்

நினைவு முகமறக்க லாமோ?

கண்ணனைத் தன் காதலனாக வரித்துக்கொண்டு ஒருவர் பாடுகின்ற பாடல். யாருடைய நோக்கில் சொல்லப்படுவதாக நம் மனத்தில் எழுகிறது? ஒரு பெண்ணின் நோக்கில்? ஏன் ஒரு இளைஞன் தன் காதலனை நினைத்து, தன் தோழியிடம் கூறுவதுபோல் தோன்றுவதில்லை? சிலருக்குத் தோன்றினாலும் “நாயகி பாவம்” என்பதும் கூடவே வருகிறதோ? பாரதியார் தன்னைப் பெண்ணாக நிறுத்திக்கொண்டு இப்பாடலை எழுதியிருப்பாரோ? இத்தகைய கேள்விகள் இருக்கின்றன. அவற்றுக்கு எனக்கேயான விடைகளைக் காணவே எழுதுகிறேன் எனவும் சொல்லலாம். 

“வெறியாட்டு” கதையில் வரும் சண்முகம், புராணங்களிலோ மதக்கதைகளிலோ இலக்கியக்கதைகளிலோ வரலாற்றுக்கதைகளிலோ யாரோடு தன்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்? எவரோடும் முடியாது. ஆனால் இப்போது, தமிழ் வாசிக்கும் ஒரு தன்பால் ஈர்ப்பாளர், அந்தச் சண்முகத்தோடு தன்னைப் பொருத்திக்கொள்ளமுடியும். அந்த ஒரு நம்பிக்கை, அந்த ஒரு பிடிமானம், அதுவே சமூகத்தின் ஆழ்மனத்துக்குத் தேவைப்படுகிறது. 

உங்களுடைய எழுதும் முறை என்ன ? (இடம், நேரம், ஒரே அமர்வில் எழுதிவிடுவீர்களா? )

மையப்புள்ளி என ஏதோவொன்று, பல கதைகளுக்கு மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும். ஏதோவொரு நாளில் அந்தப் புள்ளி கதையாக உருப்பெறும். பொதுவாக அந்தத் தருணத்திலேயே உடனடியாக எழுதத் தொடங்கிவிடுவேன். ஒன்றிரண்டு அமர்வுகளில் சிறுகதை பெரும்பாலும் வந்துவிடும்; ஆனால் பின்னர் தோன்றும் புதிய உச்சக்கணங்களை எழுதிச்சேர்ப்பதுமுண்டு. முழுவதும் எழுதி முடித்தபின், எழுத்துப்பிழைகளைக் களைவேன்; வாக்கியங்கள் கோவையாக இல்லையென்றால் செப்பனிடுவேன். சில நண்பர்களிடம் வாசிக்கக் கொடுத்து அவர்களின் கருத்துகளைக் கேட்பதுண்டு.

இடம் என்று குறிப்பிட்ட ஒன்று இல்லை. பொதுவாக வீட்டில் மடிக்கணினியில் எழுதுவேன்; சிலவேளைகளில் பூங்காவில் செல்பேசியில் எழுதியிருக்கிறேன். இதுவரை எழுதியவற்றை வைத்துப் பின்னோக்கிப் பார்த்தால், எழுந்த காலையிலும் உணவுக்கு முன்னான மாலையிலுமே பல கதைகளை எழுதியிருக்கிறேன்.

⁠உங்களுடைய படைப்புகளில் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது உண்டா ? 

எழுத்துப்பிழைகளையும் தகவல்பிழைகளையும் களைவதற்குச் செயற்கைநுண்ணறிவைப் பயன்படுத்தியிருக்கிறேன். தேய்வழக்குச் சொற்றொடர்களை அடையாளங்காணப் பயன்படுத்தியிருக்கிறேன். குறுநாவலுக்கும் நாவலுக்கும் செயற்கை நுண்ணறிவு இன்னும் அதிகமாகப் பயன்படும் என்று நினைக்கிறேன்; நாவலின் புறக்களத்தை அறிந்துகொள்ளத் தேவையான தகவல் சேகரிப்பில் அது உதவியாக இருக்கலாம். சில சமயம், செயற்கை நுண்ணறிவை ஒரு வாசகராக நிறுத்தி, என் கதைகளை வாசிக்கச் சொல்லி, அதன் எதிர்வினையைக் கேட்பது எனக்குக் களிப்பளிக்கும். 

⁠நாவல் எழுதும் திட்டம் உண்டா ? களம் என்ன ?

மனித உறவுகளின் வரையறைகளும் கட்டுப்பாடுகளும் கூட இலக்கியத்தின் வழியே வடிவமைக்கப்படுபவைதான். ஆண்-பெண் காதல், குடும்பம் போன்ற கட்டமைப்புகள், வேளாண்மைக் காலத்திற்குப் பின்னரே ஏற்பட்டவை. அதற்கு முன் இவை எவ்வாறு இருந்தன என்று நமக்குத் தெரியாது. தமிழ்ப் பண்பாட்டில் காதல் என்ற சமூகக் கருத்துருவுக்குச் சங்க காலக் கவிதைகள் பெரும் அடித்தளம். பின்னர், பக்தி காலத்தில் அது இறைக்காதலாக உன்னதப்படுத்தப்பட்டு, இக்காலத்தில் வெவ்வேறு ஓடைகளாக நம்மை வந்தடைகிறது. 

இதே போன்று ஆண்-ஆண் காதலையோ பெண்-பெண் காதலையோ சமூகத்தில் வைக்க இடமில்லை; ஏனென்றால் இவற்றுக்கு இலக்கியத்தில் முன்னோடி இல்லை, பண்பாட்டிலும் இவை எதிரொலிக்கவில்லை. இவற்றுக்கான ஆழ்படிம உருவகங்களே உருவாகவில்லை. அதனாலேயே நல்ல வாசகர்களும் நல்ல எழுத்தாளர்களும்கூட, ஒரு தன்பால் ஈர்ப்புக் கதாபாத்திரம் வரும் ஒரு கதையை வாசிக்கும்போது, சமூகத்துக்கு ஏற்கனவே பரிச்சயமான ஆண்தன்மை-பெண்தன்மை அடுக்குகளில் அக்கதாபாத்திரங்களை எங்கேயோ பொருத்த முயல்கிறார்கள்; அவ்வாறு பொருத்திப் பார்த்து திருப்தியடைகிறார்கள்; அல்லது ஓர் ஏளனத்துடன் நிராகரித்துக் கடந்துசெல்கிறார்கள். இது காதலுக்கு மட்டுமல்ல; ஆண்மை, தாய்மை என எல்லாவற்றுக்கும் பொருந்தும். அவ்வளவு ஏன், சமூகத்தில் இப்போது உதாரணமாக, ஓர் ஆண் இளைஞன் மற்றொரு ஆணால் உடல்சார்ந்த வன்முறைக்கும் சுரண்டலுக்கும் ஆளானால், சமூகம் அதை ஒரு மீறலாகப் பார்க்கவே மறுக்கிறது. ஓர் ஆணுக்கு எப்படி இப்படியெல்லாம் நேரும் எனக் கேட்டு, இது அவதூறாகவே இருக்கவேண்டும் என முத்திரை குத்துபவர்களே அதிகம். மறுபுறம், தன்பால் ஈர்ப்பும் பால்புதுமையும் மனக்கோளாறோ எனவும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

இலக்கியம் பொதுமைப்படுத்தப்பட்ட உண்மையைச் சொல்ல வருவதில்லை; ஒவ்வொரு எழுத்தாளருக்குமான சிறப்புண்மையே அதில் வெளிப்படுகிறது. வாசகர்கள் அந்தச் சிறப்புண்மைகளில் தங்களைக் கண்டுகொள்கிறார்கள். இத்தகைய சிறப்புண்மைகள் காலப்போக்கில் தாமாகத் தொகைத்து, விழுமியங்களாகவும் படிமங்களாகவும் வெளிப்படுகின்றன. ஆனால், இவை ஒரே நிறம் கொண்ட விழுமியங்களல்ல. பல்வேறு நிறங்கள் கொண்டவை. ஆண்-பெண் உறவுகளின் பல்வேறு நிறச்சாத்தியங்கள், கதைகளில் இவ்வாறுதான் உருவாகியுள்ளன. அதேபோல, பால்புதுமை மனிதவுறவுகளும் பல நிறப்பட்டைகள்கொண்டவைதாம். 

இவற்றை ஒற்றை நிறமாக தேய்வழக்காக முன்வைக்காமல், அம்மனிதர்களின் பல்வேறு பாவனைகளையும், நடிப்புகளையும், பழிவாங்கலையும், தியாகங்களையும், கையறுநிலையையும், அன்பையும், காதலையும், நெகிழ்ச்சியையும், அழுகையையும் உண்மையாக முன்வைக்க வேண்டிய தேவை தமிழிலக்கியத்தில் உள்ளது. இவற்றைத் தமிழிலக்கிய வரலாற்றினுள் வைத்து, ஒரு சக-வரலாறாக நாவலில் சொல்லவேண்டும் என்ற விருப்பமும் கனவும் உண்டு – வரலாற்றுப் பெருக்கையே பால்புதுமைக் கோணத்தில் ஒரு நாவலாக்க வேண்டும். அதற்குப் புதுவித அழகியலும், புதிய படிமங்களும் குறியீடுகளும் உருவாக்குவது அவசியம். இவையெல்லாம் “தானாகச்” சமூகத்தில் திரண்டு வரவேண்டும் என்று சொல்வதை நான் மறுக்கிறேன்; எதுவும் தானாக உருவாவதில்லை. ஒருவரோ பலரோ ஏதோவொரு காலப்புள்ளியில் தம் அகத்தில் எழுந்ததையும் வாழ்ந்துணர்ந்த அனுபவங்களையும் இலக்கியமாகவும் கலையாகவும் ஆக்கியவையே, பின்னர் மூலப்படிமங்களாகவும் விழுமியங்களாகவும் புராணங்களாகவும் நிலைபெற்றுள்ளன. நான் பண்பாட்டை மறுத்து, பண்பாட்டை உருவாக்க முனையவில்லை; மறுபண்படுத்தல் வழியாகப் பண்பாட்டு விரிவாக்கத்தையே முயல்கிறேன்.

#

Discover more from Viswanathan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading