“எங்கள் புத்தக வாசிப்பு குழுமம் ஒன்பது வருடங்களாக ஒவ்வொரு வாரமும் இணையவழியில் சந்திக்கிறோம். இதுவரை நானூறு சந்திப்புகளுக்கும் மேல் நடத்தியிருப்போம்.”
மதுநிகா சுரேஷ் அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் வசிக்கிறார். “தமிழ் ஆர்வலர்கள் குழு” என்ற இணையவழி வாசிப்பு குழுமத்தை ஒன்பது வருடங்களாக நடத்தி வருகிறார். இதுவரை நானூறுக்கும் மேற்பட்ட இணைவழி இலக்கிய சந்திப்புகளை ஒருங்கிணைத்திருக்கிறார். சமீபத்தில் தல்ஸ்தோயின் “போரும் அமைதியும்” நாவலை இருபத்தேழு வாரங்களாக வாசித்து நிறைவுசெய்திருக்கிறார்கள்.
2022 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்திய எமர்சன் இலக்கிய முகாமில்தான் மதுநிகாவை முதலில் சந்தித்தேன். சிறுகதை அமர்வில் எழுத்தாளர் திருச்செந்தாழையின் ஆபரணம் சிறுகதை குறித்து ஒரு நல்ல உரையாற்றினார். 2023 எமர்சன் இலக்கிய முகாமில் கு. அழகிரிசாமி எழுதிய திரிபுரம் சிறுகதையையும், 2024 எமர்சன் இலக்கிய முகாமில் தல்ஸ்தோயின் அன்னா கரினினா நாவல் குறித்தும் உரையாற்றினார். வலைதளம்: “மதுவின் பக்கங்கள்”. மதுநிகாவுடன் ஒரு நேர்முகம்.

- உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், வேலையை பற்றி ?
நான் பிறந்து வளர்ந்தது தஞ்சாவூரில். படித்தது Bachelor of Engineering in Electrical and Electronics Engineering. கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தேன். அமெரிக்காவில் 13 ஆண்டுகளாக வசிக்கிறேன். இங்கு முழுநேரமும் இலக்கியம் தான். கணவர் சாப்ட்வேர் இன்ஜினியர். இரண்டு பிள்ளைகள். என் மகன் ஒரு வயது குழந்தையாக இருந்த போது மிச்சிகன் இலக்கிய குழுவில் இணைந்தேன். அவனோடு சேர்ந்து என் வாசிப்பும் வளர்ந்தது. நான் வாசிப்பதைப் பார்த்து என் மகளும் நிறைய வாசிக்கிறாள்.
- இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ?
இலக்கிய அறிமுகம் அப்பா திரு.இரா.நெடுமாறனிடம் இருந்துதான் தொடங்கியது. எங்கள் வீட்டில் நூலகம் இருக்கிறது. அப்பா ஆங்கிலம் மற்றும் தமிழில் தீவிரமாக வாசிக்கும் பழக்கம் உடையவர். எனது வாசிப்பு அப்படி ஆரம்பித்ததுதான். முதலில் நான் வாசித்தது கல்கி, பாலகுமாரன், சுஜாதா நாவல்கள்தான். அதிலும் தஞ்சை என்பதால் பொன்னியின் செல்வன்,உடையார் போன்ற நாவல்கள் விரும்பி வாசித்தேன். கல்லூரி நாட்களில் கல்லூரி நூலகத்தில் கிடைக்கும் Robin sharma, Napoleon Hill, Shiv khera, Dale Carnegie புத்தகங்களை வாசித்தேன். அங்கே தொடங்கிய வாசிப்பு ஒரு கட்டத்தில் முதிர்ச்சியான தீவிரமான வாசிப்பிற்குள் தற்பொது வந்தடைந்து இருக்கிறேன் என்றால் ஜெயமோகன் அவர்களின் அறம் தொகுப்பை வாசித்தப்பின். இலக்கியம் என்பதன் அர்த்தத்தை உணர வைத்த நூல் அது. தேடல் நமக்கு இருக்கும்போது நம்மை நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டி அழைத்து செல்வார்கள்.
- உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள், கவிஞர்கள் யார் ?
பிடித்த எழுத்தாளர்களின் பட்டியல் பெரியது. என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்து என்பது கம்பர், தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி, செக்காவ் மற்றும் ஜெயமோகன். கவிதை என்று வரும்போது ரூமி, நகுலன், அபி, தேவதேவன்.
- நீங்கள் ஒருங்கிணைக்கும் இணையவழி கலந்துரையாடல் குழுமம் பற்றி சொல்லுங்கள். எப்போது துவங்கினீர்கள் ?
நான் இம்பர்வாரி, சுக்கிரி போன்ற வாசிப்பு குழுமங்களில் இருக்கிறேன். மிச்சிகனில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் குழுவில் 2017இல் இணைந்தேன். அந்த குழுவை திருமதி.கலையரசி அவர்கள் தொடங்கினார். சங்கர் மற்றும் லஷ்மன் அந்த குழுவில் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.அவர்கள் மூலமாகத்தான் எனக்கு அமெரிக்க விஷ்ணுபுரம் குழுவின் அறிமுகம் கிடைத்தது. மிச்சிகன் தமிழ் ஆர்வலர் குழுவில் சங்க இலக்கியம், நவீன இலக்கியம் குறித்த இணைய வழி கலந்துரையாடலை ஒன்பது வருடங்களாக வாரம் தோறும் நிகழ்த்துகிறோம். இந்த குழுவில் நவீன இலக்கிய நிகழ்ச்சிகளை நானும், நண்பர் சங்கரும் ஒருங்கிணைக்கிறோம். எங்கள் நிகழ்வை நாங்கள் பதிவு செய்வதுண்டு. அதன் பதிவை பலர் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். இலக்கிய முன்னெடுப்புகளுக்கு நண்பர்கள் குழு மிக அவசியம் .
- உங்கள் கலந்துரையாடலில் புதிதாக ஒருவர் இணையவிரும்பினால் எப்படி இணைவது ?
புதிதாக எங்கள் குழுவில் இணைய விரும்பும் நண்பர்கள் madhuparu09@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
- இதுவரை எத்தனை சந்திப்புகள் நடத்தியிருக்கிறீர்கள் ? அதிகபட்சமாக ஒரு சந்திப்பில் எத்தனை வாசகர்கள் பங்கேற்றிருக்கிறார்கள் ?
குறைந்தது பத்து முதல் பதினைந்து நபர்கள் நிகழ்வில் பங்கேற்பார்கள். இதுவரை எத்தனை சந்திப்புகள் என்று கணக்கிட முடியாது. ஒன்பது வருடமும் ஒவ்வொரு வாரமும் சந்திக்கிறோம். நானூறு சந்திப்புகளுக்கும் மேல் நடத்தியிருப்போம்.
- இதுவரை என்ன என்ன புத்தகங்களை குழுவாக வாசித்திருக்கிறீர்கள் ?
வாசித்த புத்தகங்களின் பட்டியலில் நினைவிலிருப்பவை மற்றும் சொல்கிறேன்.
நீலகண்ட பறவையைத் தேடி-அதீன் பந்தோபத்யாய், போரும் வாழ்வும்- தல்ஸ்தோய், கரம்சவ் சகோதரர்கள்- தஸ்தாவெஸ்கி, புளியமரத்தின் கதை-சுந்தர ராமசாமி, செல்லாத பணம்- இமையம், அஞ்சலை- கண்மணி குணசேகரன், கு. அழகிரிசாமி சிறுகதைகள், தி. ஜானகிராமன் சிறுகதைகள், அசோகமித்திரன் படைப்புகள்,அம்பை, வண்ணதாசன்,எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என்று பல எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவருகிறோம். தற்கால எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிப்பதோடு அவர்களுடன் இணைய வழி சந்திப்பும் நடத்துகிறோம். திரு.செந்தில் ஜெகந்நாதன், திரு. திருச்செந்தாழை, திரு. கண்மணி குணசேகரன், திரு. இமையம், கவிஞர் ஆனந்த், திரு.நவீன் என்று பல எழுத்தாளர்களின் படைப்புகளை முழுவதுமாக படித்து அவர்களுடன் ஒரு மிகச்செறிவான இலக்கிய சந்திப்புகளை நிகழ்த்தியிருக்கிறோம். வாசகர்களாக எழுத்தாளர்களுக்கு மரியாதையும், ஊக்கமும் செய்வதாக இது அமைகிறது .
- ஒரு புத்தகத்தை படித்து முடித்தபின் அடுத்த புத்தகத்தை எப்படி தேர்ந்தெடுப்பீர்கள் ?
ஒரு புத்தகத்தை வாசித்தப்பின், தொடர்ந்து குழுவில் வாசிப்பில் ஆர்வமாக பங்கேற்கும் நண்பர்களின் பரிந்துரைகளை ஏற்று வாக்கெடுப்பு நடத்தி வரிசைப்படுத்தி அட்டவனை தயாரித்து வரிசையாக அடுத்தடுத்து தொடர்ந்து வாசிப்போம்.
- வாசிப்பு குழுமங்கள் வெற்றிகரமாக நடைபெற உங்கள் ஆலோசனைகள் என்ன ?
1. தொடர்ந்து வாசிப்பில் தீவிரமாக இருக்கும் நடத்துனர் வேண்டும்.
2. குழுமத்தில் செய்யக்கூடியதும் செய்யத்தகாதவைகளுமான விதிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவரின் கருத்திற்கு மாறுபட்ட கருத்தை முன்வைக்கும் போது அது அந்த நபரை தாக்கும் முறையில் அல்லாமல் இருக்க வேண்டும். ஒருவர் பேசும்போது இடையில் பேசக்கூடாது.
3. ஒவ்வொரு கூடுகையின் போதும் நேரமேலாண்மை மிக அவசியம்.அறிவிக்கப்பட்ட நேரத்தில் நிகழ்வை தாமதமின்றி ஆரம்பித்து நிகழ்வில் ஒவ்வொரு நபருக்கும் ஐந்து நிமிடங்கள் என்றால் அதை மீறாமல் கடைப்பிடித்து குறித்த நேரத்தில் நிகழ்வை முடிப்பதற்கு தக்க திட்டமிடலுடன் செயல்படும் மட்டுறுத்தனர் வேண்டும்.
4. தொடர்ந்து வாசிப்பில் பங்களிப்பை ஆற்றாதவர்கள் குழுவை தோய்வடைய செய்வார்கள். அதனால் ஆர்வமாக பங்களிப்பவர்களை மட்டுமே குழுவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
5. அரசியலுக்கு இடமளிக்க கூடாது.
6. வருடா வருடம் வாசிப்பு மாரத்தான் போட்டி நடத்துகிறோம் குழு சுறுசுறுப்பாக இயங்க இதுபோன்ற போட்டியும் தேவை.
- இலக்கியம் உங்களுக்கு அளித்தது என்ன ? வாசிப்பு குழுமங்களை நடத்துவது மூலம் நீங்கள் அடைந்தது என்ன ?
வாழ்க்கையில் நாம் பல இன்பதுன்பங்களை சந்திப்போம். சில வேளைகளில் சமநிலை தவறுவோம். அந்த தருணங்களில் இலக்கியம் ஊன்றுகோளாக இருக்கிறது.சின்ன சின்ன விசயங்களைக்கூட ரசிப்பதற்கும் ,என்னிடம் இருப்பவைகளுக்கு நன்றி சொல்வதற்கும், முக்கியமாக மனிதர்களை அவர்களின் நிறை குறைகளுடன் ஏற்றுக்கொள்வதற்கும், என்னை நானே நேசிப்பதற்கும், ஈகோ இல்லாமல் மன்னிப்பு கேட்பதற்கும் இலக்கியம்தான் எனக்கு கற்றுக்கொடுத்தது.
வாசிப்பு குழுமங்கள் நடத்துவதன் மூலம் குழுவாக செயல்படும் தன்மை,ஒருவர் வாசிப்பின் மூலம் பக்குவம் அடைதலை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு, பல வாசகர்களின் வித்தியாசமான புரிதல்கள், சில அனுபவம் வாய்ந்த வாசகர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு, நாம் பிறருடன் நாம் கற்றதை பகிரும் வாய்ப்பு என்று இந்த குழுமத்தின் மூலம் நான் அடைந்ததவை பல.
- உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன ?
எதிர்காலத் திட்டம் வாசித்த படைப்புகளைப் பற்றிய வாசிப்பனுபவத்தை எழுத்துவடிவில் பதிவு செய்யவேண்டும். ரஷ்ய படைப்புகளைப் போல் பிற மொழிப்படைப்புகள் பல வாசிக்க வேண்டும். சிறுகதைகள் எழுதும் முயற்சியிலும் இருக்கிறேன். கம்பராமாயணம் தற்போது யுத்த காண்டம் மூன்றாம் பாகத்தை வாசித்துகொண்டிருக்கிறேன். மூன்று வருடங்கள் தவம் போல் ஒரு அனுபவம். இம்பர்வாரி குழுமத்தில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். மேலும் கம்பராமாயணம் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுத வேண்டும்.
#