நேர்முகம் 4: மலர்விழி மணியம்

மலர்விழி மணியம் வல்லினம், சொல்வனம், விகடன் இதழ்களில் சிறுகதைகள் எழுதுகிறார். நாங்கள் ஒருங்கிணைக்கும் க.நா.சு உரையாடல் அரங்கில் மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் சிகண்டி நாவல் குறித்து ஒரு நல்ல உரை ஆற்றினார். அதற்கு அடுத்த மாதம் தத்துவ முகாம், பூன் (அக்டோபர், 2025) இல் மலர்விழியை சந்தித்தேன். அவருடன் ஒரு நேர்முகம்.

உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், பின்புலம் பற்றி ?

நான் பிறந்த ஊர் திருப்பூர். பள்ளிப் படிப்பும் கல்லூரிப் படிப்பும் கோயமுத்தூரில் படித்து முடித்தேன். என் குடும்பத்தோடு தற்போது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வசித்து வருகிறேன். என் கணவர் பெயர் லேண்ஸிலின் சந்தோஷ். மகள் பெயர் எடினா மேக்டலீன், மகன் பெயர் எட்வின் மார்கஸ்.

இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ?

திருமணத்திற்கு முன்பு வரை இலக்கிய வாசிப்பு அறிமுகமோ அனுபவமோ எனக்கு இருந்ததில்லை. பள்ளிப் படிப்பிலும், ட்யூசனிலும் மூழ்கிய தலைமுறையில் நானும் ஒருத்தி. திருமணத்திற்குப் பிறகு நான் எடுத்த முதல் இலக்கியம் பைபிள். புதிய ஏற்பாடு நல்ல பரிட்சயமானது. அமெரிக்கா வந்த பிறகு என்னை வியப்பில் ஆழ்த்தியது இங்கு உள்ள நூலகங்கள். பைபிள் அறிந்தமையால் டால்ஸ்டாயின் படைப்புகளையும், தஸ்தவஸ்கியின் படைப்புகளையும் புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. பிறகு மிஷிகனில் இயங்கி வரும் புத்தகவாசிப்புக் குழுவில் இணைந்த பொழுது நண்பர்கள் உதவியோடு தமிழ் இலக்கிய உலகம் அறிமுகம் ஆனது. தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். 

உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள் யார் ?

2022 ல் பாதியில் துவங்கி தான் தமிழ் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தேன். மிஷிகன் தமிழ் ஆர்வலர்கள் குழுவில் இணையும் வரை எனக்கு தமிழ் எழுத்தாளர்களின் பெயர் கூடத் தெரியாது. நண்பர்கள் சங்கர் மற்றும் மதுநிகாவின் உதவியோடு நிறைய தமிழ் எழுத்தாளர்களை அறிந்து கொண்டேன். தமிழில் ஜெயமோகன், இமையம், லா.சா.ரா, எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, அ.முத்துலிங்கம், ம.நவீன், சு.வேணுகோபால், அஜிதன், அம்பை, பாமா, ப.சிவகாமி, நீலி ரம்யா, அமர்தவள்ளி, ஆர்.சூடாமணி, செந்தில் ஜெகன்நாதன், திருச்செந்தாழை எனத் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டு தான் இருக்கின்றது..  

பிற மொழி எழுத்தாளர்களில், லியோ டால்ஸ்டாய், தஸ்தவஸ்கி, குர்தலின் ஹைதர், காளிள் கிப்ரான், மிக்கேல் நெய்மி, பார் லாகர்க்விஸ்ட், அதீன் பந்தோபாத்யாய.. 

பிடித்த சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பற்றி…

என் வாசிப்பு குறைவானது. ஒரு கதையை வாசித்த பின்பும் கதையும் கதை மாந்தர்களும் வாசகனோடு எது வரை பயணிக்கிறார்கள் என்பதில் தான் அதன் வெற்றி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதில் என்னை பாதித்த கதைகளில் சிலவும் அதனோடு ஒன்றிய கதாப்பாத்திரங்களும் என்று சொன்னால், ஜெயமோகன் அவர்களின் ‘அறம்’ மற்றும் அதில் அறம் ஏந்தி நிற்கும் மனிதர்கள் ஒரு பெரிய திறப்பாக அமைந்தார்கள் எனக்கு. அதில் துவங்கி அவருடைய இரவு, காடு, கடல், கன்னியாகுமரி நாவல்கள் என்னை மிகவும் பாதித்தவை. காடு நாவலில் வலம் வரும் குட்டப்பனும் குருசும் சினேகம்மையும் ரெஜினாவும் என் நெஞ்சை விட்டு நீங்கா மனிதர்கள். 

இமையம் அவர்களுடைய செல்லாத பணம் படித்துவிட்டு இரண்டு நாட்கள் தூக்கத்தை தொலைத்தேன்.  சு.வேணுகோபால் அவர்களது சிறுகதைகளைப் படித்துவிட்டு அதிர்ந்த தருணங்கள் எல்லாம் உண்டு. இருள் போர்த்தி வைத்திருக்கும் உணர்வுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் அவரது எழுத்துக்களைக் கண்டு பிரமித்திருக்கிறேன். திருநங்கையைப் பற்றி அவர் எழுதிய பால்கனிகள் என்னை மிகவும் பாதித்தது.

ம.நவீனின் சிறுகதைகள் ஆழம் மிக்கவையாகத் தோன்றும் எனக்கு. அவருடைய சிகண்டி நாவல் எனக்கு வாசிக்க பெரும் சவாலாக இருந்தது. கதாநாயகன் தீபனின் இருளை அவனோடு கடக்க மிகவும் சிரமப்பட்டேன். தீபனின் இருளின் ஆழம் கடக்க தீபனாக உருமாறி என் ஆழம் கடக்க வேண்டி இருந்தது. குறைந்தது ஐந்து முறை படிக்க வேண்டி இருந்தது.  மீண்டு வர பல நாட்கள் எடுத்தது. இன்னும் அதன் தாக்கம் நீங்கவில்லை. என் ஆழம் கடக்கும் தைரியம் பிறந்தது சிகண்டி வாசித்த பிறகு தான். அன்றாடத்தில் தீபனும், சராவும், நிஷாம்மாவும், ஈபுவும் என்னோடு கலந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. 

ரம்யாவின் நீலத்தாவணியும், நான் உன்னைக் கைவிடுவதில்லை சிறுகதையும்  என் மனதிற்கும் வாழ்விற்கும் மிக நெருக்கமானவை. அமிர்தவள்ளியின் ‘செங்கேணி’  எனும் நாவலும் , ‘கால் நனைத்த பொழுதுகள்’ எனும் நாவலும் பாண்டிச்சேரியின் கடலோர குப்பத்து மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் நேர்மையான நாவல்கள் என்று கருதுகிறேன். செந்தில் ஜெகன்நாதனின் மழைக்கண்ணும், அனாகத நாதமும், காகளமும் அவரது படைப்புகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தவை.

டால்ஸ்டாயின் அன்னா கரினாவும், கிட்டியும் என்னுள் முட்டிக் கொள்ளும் இரு வேறு பிம்பங்கள். டால்ஸ்டாயின் ஃபாதர் சர்ஜியஸ் ஒரு பெரும் திறப்பு. தாஸ்தவஸ்கியின் மிஷ்கினை நான் என்றும் மனதோடு நெருக்கமாக வைத்திருக்கிறேன்.  காளிள் கிப்ரானின் “தி ப்ராஃபெட்” மற்றும் மிக்கேள் நெய்மியின் “தி புக் ஆஃப் மிர்தாத்” உம் என்னைப் பொருத்த மட்டில் பைபிளுக்கு நிகரான ஒன்று.

முதல் சிறுகதை எப்போது வெளியானது ? 

முதல் சிறுகதை என்னுள் பிறந்தது இந்துக் கோயிலில் ஆசிஃபா பாலியல் வன்கொடுமைக்கு இறையான பொழுது. அது ஒரு குறுங்கதை என்று சொல்லலாம். விசும்பைச் சுற்றும் பல்லாயிரம் விண்கற்களில் சில பூமியில் விழுவது போல அவளது மரணம் என்னைத் தாக்கியது. ஒலியால் விவரிக்க முடியாத வலியை எழுதிக் கடக்க அன்று பேனாவை எடுத்தேன். அதில் வடிவம் இருந்ததா, மொழி வளம் இருந்ததா, என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்குள் ஒரு விடுதலை உணர்வு வந்தது. எனது எழுத்துப் பயணத்தின் முதல் மைல் கல் ஆசிஃபா தான். இன்றும் இக்கணமும் இதை எழுதும் பொழுதும் என்னை அழ வைக்கும் கனமான மைல்கல் அவள். 

‘வாழ்க்கைப் பாதையில் ஒவ்வொரு வளைவிலும் உனக்கான மனிதர்கள் கை கொடுக்க நிற்பார்கள்’ என்று “தி புக் ஆஃப் மிர்தாத்” ல் ஒரு வரி வரும். என் எழுத்துப் பயணத்தை வழிநடத்திச் செல்லும் நண்பர்களை நான் அவ்வாறே கருதுகிறேன்.

வடிவம் சார்ந்த பயிற்சி மிஷிகன் வாசிப்புக் குழுவில் சேர்ந்த பின்னர் தான் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு தொடர் வாசிப்பு எண்ணற்ற சொற்களை என்னுள் விதைத்ததை எழுதும் பொழுது உணர முடிந்தது. ஒரு எழுத்தாளருக்கு விமர்சனம் மிக முக்கியமானது, அவ்வகையில் நண்பர் ஓவியர் சங்கர் மற்றும் மதுநிகாவின் கராரான விமர்சனங்கள் என் எழுத்தை வடிவமைக்க உதவியாக இருந்தன, இருக்கின்றன. அதற்குப் பின் வந்த சிறுகதைகள் மட்டும் கணக்கில் கொண்டால் ஜனவரி 2023 ல் விகடன் மின்னிதழில் வெளிவந்த “வள்ளியம்மையும் ஆட்டுக்குட்டிகளும்” என்பதே எனது முதல் சிறுகதை. பிறகு சொல்வனம் மின்னிதழில் எழுத ஆரம்பித்தேன். சொல்வனம் பாலாவின் உதவியோடு அடுத்த படிக்கு முன்னேறினேன். சொல்வனத்தில் என் கதைகளைப் படித்து விட்டு அண்ணன் ஆஸ்டின் சௌந்தர் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் என்னை சேர்த்துக் கொண்டார்கள். அவரது வழிகாட்டலில் வல்லினம் மின்னிதழுக்கு ஒரு சிறுகதை அனுப்பினேன். அன்று துவங்கியது என் எழுத்தை மேலும் செம்மை ஆக்கும் பயணம். ஒரு ஆசானின் வழிகாட்டல் எவ்வளவு முக்கியம் என்பது ம.நவீனை சந்தித்த பிறகு தான் உணர்ந்தேன். நான் எழுதும் பொழுது என் கதையில் நான் வைக்கும் ஒரு புள்ளி கூட எனக்கு முக்கியமாகப் படுகிறது. கத்திரியை எடுத்துக் கொண்டு ம.நவீன் அவர்கள் என் கதையில் வேண்டாததை சுட்டிக் காட்டி நறுக்கித் தள்ளிவிடுவார். நான் ஆசானாகக் கருதும் ம.நவீனின் வழிகாட்டலில் என் எழுத்துப் பயணத்தில் அடுத்த படிநிலையில் இருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன். ரயில் தண்டவாளம் போல வாசிப்பும் எழுதும் பணியும் ஒன்றாக நிகழ வேண்டும். தோழி பிரேம்மாயா அவர்கள் வாசித்தப் புத்தகக் கிடங்கில் இருந்து என்னால் வாசிக்க முடியும் என்று தோன்றும் நிறைய புத்தகங்களை  எனக்கு அறிமுகம் செய்கிறார். கட்டுரைகள் வாசிப்பின் முக்கியத்துவத்தை நண்பர் சின்னய்யாவின் வழிகாட்டலில் அறிந்து கொண்டேன். 

கிறித்தவ இறையியல் உங்கள் கதைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசுபொருளாக உள்ளது. அது குறித்து ?

பைபிள் வாசிக்கத் துவங்கும் பொழுது நிறைய முரண்களும் என்னுள் எழுந்தன. என் ஆழம் கடந்து என்னை சோதித்துக் கொள்ள மிகவும் சிரமப் பட்டேன். உலகியலோடு பொருத்திக் கொண்டு செயல்படுத்த நேர்ந்த சிக்கல்கள் தான் என்னை கிறிஸ்துவப் பின்புலத்தோடு எழுத உந்துகிறது. என்னுள் நான் இரண்டாகப் பிரிந்து சண்டை இட்டது தான் கதையாகப் பிறக்கிறது என்று தோன்றுகிறது. 

பைபிளின் வசனங்களின் கருப்பொருள் மாறாமல் கதைப் பின்னல் இருக்க வேண்டும் என்பது ஒரு சவால். அதேசமயம் பிரச்சாரக் கதையாக இல்லாமல் எழுதுவது அடுத்த பெரும் சவால்.  

“எதற்காக எழுதுகிறேன்?” என்றால் உங்கள் பதில் என்ன ?

என்னை மீட்டெக்கும் பொருட்டு பேனாவைக் கையில் எடுத்தேன். முதலில் எனக்காகவே எழுதுகிறேன் என்பது தான் என் பதில். நான் எழுதும் கதைகள் எல்லாருக்குமான கதைகள் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. எழுதி பிரசுரம் ஆன பின் என் கதைகள் அதற்கான வாசகர்களைக் கண்டடைந்து கொள்கிறது. அல்லது என் கதைகளுக்கான வாசகர்கள் வந்து சேர்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம். 

உங்களுடைய எழுதும் முறை என்ன ? (இடம், நேரம், ஒரே அமர்வில் எழுதிவிடுவீர்களா? )

கதைக்கான கரு என்னுள் உதித்து விட்டால் எழுதத் துவங்கிவிடுவேன். இடம், நேரம் பொருத்தெல்லாம் அது என்னுள் நிகழ்வதல்ல. சில கதைகளை ஒரே அமர்வில் எழுதியிருக்கிறேன். துவங்கும் பொழுது முடிவை நோக்கி அதுவே என்னை இழுத்துச் செல்லும் மாயங்கள் அதில் நிகழும். சில கதைகளை நான்கு அல்லது ஐந்து முறை எழுதிப் பார்க்கின்றேன். நடு இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்து எழுதவும் செய்கிறேன். இடமும் நேரமும் என் எழுத்தை நிர்ணயிப்பதில்லை. 

உங்களுடைய படைப்புகளில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உண்டா ? 

பேனாவை எடுத்துத் தாளில் எழுதும் பொழுது தான் எனக்கு எழுத வரும். என் எண்ண ஓட்டங்கள் அப்பொழுது தான் பெருகும். ஏதேனும் தவறாக எழுதிவிட்டாலோ, திருத்த முணைந்தாலோ மீண்டும் முதலில் இருந்து எழுதுவேன். பிறகு தான் கணிணியில் டாக்குமெண்டாக பதிவேற்றுவேன். எழுதுவதற்கே வர்ட் டாக்குமெண்டை உபயோகிக்காத நான் ஏ.ஐ எல்லாம் பயன்படுத்த வாய்ப்பே இல்லை. 

நாவல் எழுதும் திட்டம் உண்டா ? களம் என்ன ?

இப்போதைக்கு சிறுகதை வடிவத்திற்குள் எழுதவே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நாவல் எழுதும் எண்ணம் உண்டு. திட்டம் வகுத்து செயல் பட இன்னும் முனையவில்லை. கலைத் தெய்வம் அதற்கு இன்னும் அருள் புரியவில்லை.

Discover more from Viswanathan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading