Author: Viswanathan

  • நாஞ்சில் நாடனுடன் சில நாட்கள்

    Original post written in Aug 2012 in siliconshelf site

    நாஞ்சில் நாடனுடன் சில நாட்கள்

    நாஞ்சில் சிலிக்கானில்

    எழுத்தாளர் நாஞ்சில்நாடன் Bay Area வந்து சென்று ஒரு மாதகாலமாகிறது. அவருடன் உரையாடியவற்றிலிருந்து :

    கம்ப ராமாயண சொற்பொழிவாற்ற வந்தவரிடம், ஒரு பெரிய குஷன் சேரில் உட்காரச் சொன்னோம். மெதுவாக, “வாழ்க்க முழுக்க அதிகார பீடத்தையும், சிம்மாசனத்தையும் உடைக்கனும்னு பேசிகிட்டிருக்கேன். என்ன சிம்மாசனத்தில உட்கார சொல்றீங்களே. சாதா சேர் போதும், இது வேண்டாம்” என்றார். “பாற்கடல் முன்னால வந்து நின்ன ஒரு பூனை, மொத்த பாற்கடலையும் நக்கிக் குடிச்சுடுவேன்னு நினைக்கறது மாதிரி, ராம காவியத்தை பாட வந்திருக்கேன்னு கம்பன் சொல்றான்” என்று ஆரம்பித்தவர், அடுத்த இரண்டு நாட்கள் ‘ராவணன்’ என்ற தலைப்பில் அற்புதமாக உரையாற்றினார். தலைப்பு ராவணனாக இருந்தாலும், அவர் உரையில் வந்த கும்பகர்ணனின் பாடல்கள் என் நினைவை விட்டு நீங்கவேயில்லை. 

    ‘நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப் போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்கு போகேன்;’
    ‘தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ, தமையன் மண் மேல்?’
    ‘வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்; விதி நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது;’
    ‘என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல! உன்னை வென்று உயருதல் உண்மை;’

    “வான்மீகியும், கம்பனும் கையாண்டது செவ்வியல் வடிவம். ராமாயணத்திற்கு நாட்டாரியல் கதைகளில் நிறைய version உள்ளது. ஏதாவது பல்கலை, அனைத்து வடிவங்களையும் திரட்டி ஆராயவேண்டும்” என்றார். மூன்றாம் நாள், மரபிலக்கியம் பற்றி ஒரு அறிமுக வகுப்பெடுத்தார். முதல் நாள் வந்தவர்கள் பெரும்பாலும் மூன்று நாட்களும் வந்திருந்தார்கள். அவர் சொல்வதையே வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்த எங்களிடம் “இப்ப வெறும் சக்கையதாங்க மெல்றோம். சாற தொலச்சிட்டோம். நிறைய பண்டிதர்கள் இருந்தாங்க. சில சமயம் என் மனசுல ஒரு வரி ஓடிட்டே இருக்கும். எந்த பாட்டுல அந்த வரி வருதுன்னு சட்டுனு பிடிபடாது. அவங்ககிட்ட கேட்டா உடனே சொல்லிடுவாங்க. அதே பொருள் வர்ற மத்த பாட்டும் சொல்லுவாங்க. எல்லோருக்கும் எண்பதுக்கு மேல வயசாயிடுச்சு. இனி அந்த மாதிரி யார் இருப்பாங்கன்னு தெரியலை” என்றார். கணினி இருக்கும்போது, வரி கண்டுபிடிப்பது மிகச் சுலபம். அது போலவே நல்ல தமிழ் அகராதியும், பதம் பிரிக்கப்பட்ட பாடல்களையும் வைத்து, reference பாடல்களையும், கணினி துணை கொண்டு அடையாளம் காண முடியும். நாஞ்சில் இருக்கும்போது, அவருடைய படைப்புகளைப் பற்றி பேசாமல், பழந்தமிழ் வகுப்பெடுக்கச் சொல்கிறோமே என்று ஒரு சிறிய வருத்தம் இருந்தது. ஆனால், நாஞ்சில் படைப்புகள் உள்ளிட்ட நவீன இலக்கியம், மண் மேல் இருக்கும் நீர்த்தடாகம் போல. எங்கள் சிலிக்கன் ஷெல்ஃப் வட்டத்து ஆட்களுக்கு அதை கண்டடைவது கடினமல்ல. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் நிலத்தடி நீர் போல, நீர் நோட்டம் பார்த்துச்சொல்லும் ஆசான் இல்லாமல் வாய்ப்பே இல்லை.

    முதல் நாள் முடிவில், மரபிலக்கியத்தை புதிதாக துவங்க வேண்டுமென்றால் எங்கிருந்து துவங்க என்று கேட்டேன். ஆத்திச்சூடியிலிருந்து இருந்து துவங்கலாம் என்றார். ஒரு கணம், சார்.. ஆத்திச்சூடியா.. அறம் செய்ய விரும்பெல்லாம் தெரியுமே என்று நினைத்தபோதே, நாஞ்சில், ஆத்திச்சூடியில் ‘ஔவியம் பேசேல்’ என்று வருகிறது, ‘ஔவியம்’ என்றால் என்ன ? எத்தனை பேருக்கு தெரியும், நீங்கள் மரபிலக்கியத்தை எதற்காக படிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் அழகியலுக்கா, கவிதைக்கா, சொற்களுக்கா, உவமைகளுக்கா, வாழ்வனுபத்திற்கா என்பதைப் பொறுத்து, நீங்கள் நூல்களை தேர்வு செய்யவேண்டும். ஔவையிலும், வள்ளுவனிலும் துவங்கலாம். பக்தி இலக்கியம், நவீனத் தமிழிற்கு அருகிலேயே உள்ளது; பதம் பிரிக்க கற்றுக் கொண்டீர்களென்றால், கம்ப ராமாயணத்தில், நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் முக்கால்வாசி உங்களுக்கு புரியும்; அகராதி துணையுடன் மற்ற சொற்களுக்கும் பொருள் கொள்ளலாம்; சங்க இலக்கியத்திற்கு உரை ஆசிரியர்கள் துணை வேண்டும் என்றார்.

    பிறகு, எழுத்தாளனாக வேண்டும் என்று நினைப்பவர்கள், ஏன் கம்ப ராமாயணம் போன்ற காவியங்கள் படிக்கவேண்டும் என்று சொன்னார். “விற்போர்ல ஈடுபடறவனுக்கு ஹெல்ப் பண்றதுக்காக அவன் கூடவே ஒருத்தன் இருப்பான். எதிரியோட தரம், தூரம், ரதத்தோட வேகம்ன்னு பல கணக்குபோட்டு, அவன் அம்பறாத்தூளியில அம்ப நிரப்புவான். வில்லாளி, தூளியில கை வச்சான்னா, அந்தக் கனத்துக்கேத்த மாதிரி அம்பு இருக்கனும். அப்பதான் ஜெயிக்கமுடியும். அந்த மாதிரி, ஒரு கவிஞரோ, எழுத்தாளரோ ஒரு இடத்தில ஒரு வார்த்தை போடணும்னா, அவனுக்கு அந்த இடத்தில போடறதுக்கான சரியான சொல் வரணும். கம்பன் அந்த மாதிரியான ஒரு கவிஞன். அவனோட காவியத்தில எந்த இடத்திலயும், அங்க இருக்கிற சொல்ல விட வேற ஒரு சொல்ல யோசிக்க முடியாது. சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்துன்னு சொல்லியிருக்கானே வள்ளுவன். காவியங்களையும், மரபிலக்கியத்தையும் படிங்க, உங்க அம்பறாத்தூளி நிறையும்” என்றார். அதை ஒட்டி, முத்துகிருஷ்ணன்நவீன கவிதைகளை பற்றி நாஞ்சிலின் கருத்தை கேட்டார். “மரபுக் கவிதைகளில் இருக்கிற இலக்கணம் வேண்டாம்னா, இவங்க சங்க இலக்கியத்த நோக்கி போயிருக்கனும். அதில எதுக மோன இல்ல, கடுமையான இலக்கிய விதிகள் இல்ல. ஆனா, கவித்துவம் இருக்கு. இவன், ஒரு வரிய உடச்சி உடச்சி கவிதைன்னு எழுதறான். மொத்தமா எழுதினா, முப்பது பத்தி தாண்டாது. அத கவிதைன்னு போட்டுக்கறான். ஐந்தாயிரம் வார்த்தைகளுக்கு மேல் உபயோகபடுத்த மாட்டேங்குறான். என்ன மயித்துக்கு இவன் பத்து லட்சம் சொல் இருக்கிற மொழில எழுதறான்” என்று ஒரு பிடிபிடித்தார். கெட்ட வார்த்தைகளோ, வில்லங்கமான பழமொழிகளோ சொல்லும்போது, “பெண்கள் யாரும் இல்லைதான” என்று ஒரு தடவை சுற்றும்முற்றும் பார்த்துக்கொள்வார். “எக்ஸ்க்யூஸ் மி ஃபார் மை லாங்வேஜ்” என்று ஒரு முன்னறிவிப்பும் வந்துவிடும். (கவிதையா, காவியமா அப்படீன்னா என்று கேட்டு பல மைல் தூரம் ஓடும் நான், இவர் மந்திரித்து விட்டதில், வை.மூ.கோ.வின் கம்ப ராமாயண உரையை உடுமலை தளத்தில் வாங்கிவிட்டேன். தனியாக படித்து முடிப்பதற்கு கம்பனின் அருளும், நாஞ்சிலின் ஆசியும்தான் துணை புரிய வேண்டும்.)

    மூன்றாம் நாள் பேசும்போது, ‘பெரியாழ்வாருடைய டபுள் ஆக்ட் ஆண்டாள்’ என்று சொல்வது தவறு என்றவர், ஆண்டாளின் பாடல்களை சுட்டி, இவற்றை ஒரு பெண் மட்டுமே எழுதியிருக்கமுடியும் என்றார். சமீபத்திய – நெல்லை பல்கலை கழகத்தில் பாடதிட்டத்தின் ஆண்டாள் கதை controversy பற்றி கேட்டபோது, ஆண்டாள் நந்தவனத்தில் கிடைத்த குழந்தை; எந்த குலம் என்று தெரியாது, தாய் தந்தை தெரியாது; அன்றைய சமூகம் அவளை முறை தவறிய குழந்தையாக கருதியிருக்கும்; தன்னை யார் திருமணம் செய்ய வருவார்கள் என்று நினைத்து, அவள் எவ்வளவு வேதனைபட்டிருப்பாள்; அந்த சோகத்தை முன்னிலைப்படுத்தாமல், அவள் பிறப்பை மட்டுமே இழிவுபடுத்துவது தனக்கு உவப்பல்ல என்றார்; ஆண்டாள் எழுதிய மொழியில், இன்று பெண்கள், சுதந்திரமாக எழுவதற்கு உகந்த சூழல் இல்லை; சில எழுத்தாளர்களிடமும், அவர்களுடைய வாசகர்களிடமும் இருந்து, ஆபாச குறுஞ்செய்திகளில் தொடங்கி பல்வேறு வகையில் பாலியல் தொந்தரவுகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர் என்று சில உதாரணங்களைச் சொன்னார். செம்மொழியான தமிழ்மொழியில் எழுத ஒன்று கிழவியாக (அவ்வை) இருக்கவேண்டும், இல்லையென்றால் பேயாக (காரைக்கால் அம்மையார்) இருக்க வேண்டும் என்றார்.

    பின்பு ஒரு நாள் ‘சொல்’ பற்றி பேசும்போது, ‘தெரிவை’ (மாமனார், கைத்தலம் பற்ற கனாக் காணும் கதை) என்ற கதையை ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். தெரிவைன்னா என்னான்னு தெரியாது, அதனால, கதை தலைப்ப ‘நீலவேணி டீச்சர்’ ன்னு மாத்திட்டான் எடிட்டர். பல சொல் நம்ம மொழியில் இருந்து அழிந்துவிட்டது. உதாரணமாக ‘அவ்வ’ என்ற சொல். வயதான முதாட்டியை குறிக்கும் சொல். (‘அவ்வையாரின்’ வேர்ச்சொல்). தமிழில் அது புழக்கத்தில் இல்லை. ஆனால், படுக மொழியிலும், தெலுங்கிலும் இருக்கு. நாம் பத்தாம் நூற்றாண்டில் பயன்படுத்திய பல சொற்கள் மலையாளத்தில் இன்றும் உள்ளது. நம்மால் இந்த சொற்களை ஆவணப்படுத்தக்கூட முடியல. 1920களில் வந்த அகராதியை விட அதிக சொற்கள் கொண்ட அகராதி அதுக்கு பிறகு வரலை. கண்மணி குணசேகரனின் ‘நடுநாட்டு சொல்லகராதி’, ‘நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு’, தெலுங்கைத் தாய் மொழியாக கொண்ட ஒரு நெசவுத் தொழிலாளியின் ‘எதுகை அகராதி‘ என்று அமைப்பின் உதவியில்லாமல், தனி நபர்கள் தங்கள் உழைப்பால் அகராதி உருவாக்குகிறார்கள். அரசோ, பல்கலைக்கழகங்களோ அவர்களை அங்கீகரிப்பதில்லை என்றார்.

    முதல் நாள் சொற்பொழிவில் வந்த நண்பரை (இளங்கோ?) அறிமுகப்படுத்திய ராஜன், இவர் சிறுகதைகள் எழுதுவார் என்றார். “கதைகள அனுப்புங்க, ராயல்டி கேக்காத எழுத்தாளர்கள நம்ம பப்ளிஷ்ர்கள் தேடிட்டு இருக்காங்க” என்று சொன்னவர், “முதல் பதிப்புக்கு ஏதோ ராயல்டி தருவாங்க. இரண்டாவது, மூணாவது பதிப்புக்கெல்லாம் எதிர்பாக்க முடியாது” என்றார். “தமிழில் எல்லா தினசரிகளையும் சேர்த்தாலும் அவற்றின் பதிப்பு பதினைந்து லட்சத்தை தாண்டாது. தமிழகத்தை விட பாதி அளவு மக்கள் தொகை கொண்ட கேரளாவில், ஒரு நாளைக்கு எழுவத்தைந்து லட்சம் தினசரிகள் விக்குது. அன்னிக்கி, ஒரு குழந்தை ஒரு புக்க எடுக்குது, அதோட அம்மா, ஏய், தாத்தா புக்க எடுத்து கிழிக்காதன்னு சொல்லி கொழந்த கைலயிருந்து புத்தகத்தை புடுங்கி வச்சுட்டா. ஏம்மா, கிழிஞ்சா பரவாயில்ல, வேற புத்தகம் வாங்கிக்கலாம்ன்னு சொன்னேன். குழந்தைகள பாடப்புத்தகங்கள் தவிர வேற புத்தகங்களை தொட விடமாட்டேங்குறாங்க பெற்றோர்கள். அவங்க கிட்டதான் பிரச்சனை” என்றார். 

    நீங்க கடந்த சில வருடங்களில் மலேசியா, வளைகுடா நாடுகள், அமெரிக்கா என்று பல வெளிநாடுகளுக்கு செல்கிறீர்கள், அங்கு தமிழர்களின் வாழ்க்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். மலேசியத் தமிழர்கள் சில பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், பெரும்பாலும் நன்றாகவே இருக்கிறார்கள்; அமெரிக்காவில் ஒரு சாரார் தங்கள் வேரோடு/மரபோடு தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார்கள், மற்றொரு சாரார் முழுக்க அமெரிக்கர்களாகவே மாறிவிட்டார்கள்; வளைகுடா நாடுகளில்தான் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்றார். (தன்னோடு பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை, அவள் முதலாளியோ, யாரோ ஓங்கி முதுகில் அடித்தான் என்றார்.) வேறோரு நாளில், பாலாஜி இங்குள்ளவர்களைப் பற்றி உங்கள் கருத்தென்ன என்ற கேள்விக்கு, “எனக்கு உங்களைப் பத்தி கவலையில்லங்க. நீங்க யாரும் வழி தவறிய ஆடுங்க இல்ல, வழியைத் தேடிக்கிட்ட ஆடுகள், நீங்களும், உங்க புள்ளங்களும் பொழச்சுக்கும். நான் என் நாட்டப் பத்தி கவலைப்படுறேன். நேத்து இரண்டு நூலகத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க, அத பாத்த பின்னாடி, எங்கேயாவது மூலையில உக்காந்து ஓன்னு அழலாம் போல இருக்கு. இங்க புக்கெல்லாம் எப்படி அடுக்கி வெச்சிருக்கான். நம்ம ஊர் லைப்பரரில போய் ஒரு புத்தகத்த தேடினா ஆஸ்துமா வந்துடும்” என்று வருத்தப்பட்டார்.

    இரண்டு வருடங்களுக்கு முன்பு, இளைய தளபதி விஜய் தன் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக Bay Area வந்திருந்தார். அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக நாற்பது டாலர்கள் கட்டணம் கட்டி, ஐந்நூறு-அறுநூறு தமிழர்கள், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தார்கள். கூட்டத்தை பார்த்து பேதியடைந்த இளைய தளபதி பாதியிலேயே போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டார். இதை நாஞ்சிலிடம் தெரிவித்தபோது உண்மையிலேயே நொந்துவிட்டார். “கோயமுத்தூர் மெடிக்கல் காலேஜ் விழாவுக்கு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டிருந்தாங்க. அதுக்கு முந்தய வருஷம் சிறப்பு விருந்தினர், எட்டாம் கிளாஸ் படித்த ‘காதல்’ பட நாயகி. மேடையிலேயே, ‘ஏண்டா, அவகிட்டருந்து என்னடா கத்துகிட்டீங்கன்னு’ ஒரு பிடி பிடிச்சேன். ஒரு அழுகல் கேக்க பாதி நம்ம ஊர்ல திங்கறான். மீதிய நீங்க திங்கிறீங்க. தமிழர்களுக்கு எப்ப சினிமா மோகம் குறையுமோ தெரியலை” என்றார். இயக்குனர் பாலாவின் ‘பரதேசி‘ படத்தில் கதை-வசனம் எழுதுவதாக சொன்னவர், “நாம் ஒரு சீன எழுதிக் குடுப்போம். டைரக்டர் அவரு கற்பனைக்கு ஏத்த மாதிரி, அத வேற லெவலுக்கு எடுத்துட்டு போவார்” என்று ஒரு உதாரணம் சொன்னார். (வெள்ளித்திரையில் காண்க – அது பட க்ளைமேக்ஸ்.) சில இயக்குனர்கள், தன் நாவல்களிலிருந்து பல பகுதிகள், க்ளைமேக்ஸ் போன்றவற்றை அப்படியே எடுத்தாண்டிருக்கிறார்கள் என்றவர், “சம்பளமெல்லாம் பேசலீங்க. ஒரு ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்தான். படம் பேர் போடும்போது, நம்ம பேர் வந்தா சரி. நான் அதத் தவர வேற எதயும் எதிர்பார்க்கல” என்றார்.

    தொண்ணூறுகளின் இறுதியில், புலமைப் பூசல், எழுத்தரசியல் காரணங்களுக்காக, ஜெயமோகனை விட்டுவிட்டு தங்கள் தரப்பிற்கு வருமாறு சொன்னவர்களிடம், “ஜெயமோகன் கொலையே பண்ணிருந்தாலும், நான் அவனோடதான் இருப்பேன். உங்களோட வரமுடியாதுன்னுட்டேன்” என்றவர், “இவன் வீட்டு வாசப்படிய மிதிக்கக்கூடாதுன்னு நினைச்சுட்டு வந்த நாளெல்லாம் இருந்திருக்கு, ஆனா, அடுத்த நாளே திரும்ப போயிருக்கேன். ஏன்னா, அவன் என் மொழியில தோன்றின அபூர்வமான கலைஞன்” என்று மேலும் சில நிகழ்வுகளை சொன்னார். ஜெயமோகனுக்கும் நாஞ்சிலுக்கும் உள்ள நட்பை அறிந்திருந்தாலும், அவர் சொல்லும்போதே, அதில் நட்பை மீறிய பாசமும் தெரிந்தது. தான் எழுதத் துவங்கிய காலத்தில் தன்னை ஊக்கப்படுத்திய மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மீதும் பெரும் மரியாதை வைத்திருக்கிறார். 

    தன்ராம்சிங் மாதிரி கதைகள படிச்சு, அதன் பாதிப்பிலிருந்து வெளிவர நாங்கள்லாம் சிரமப்படறோம், நீங்க எழுதும்போது, உங்க மனநிலை எப்படி இருக்கும், நேரம், இடம்ன்னு தேர்ந்தெடுத்து எழுதுவீங்களா” என்ற கேள்விக்கு, “உக்கிரமான பகுதிகள், முக்கியமா காமம் சார்ந்த பகுதிகள் எழுதும்போது, காதெல்லாம் சிவந்து, மனசு வேறேங்கயோ இருக்கும். யாராவது அப்ப வந்து டிஸ்டர்ப் பண்ணா, கடும் கோபம் வந்து எரிஞ்சு விழுவேன். எழுதறதுக்கு நேரம், காலம் எல்லாம் கிடையாது. நிறைய முறை ஆஃபீஸ்லயே உக்காந்து எழுதிருக்கேன். எவனாது வந்து கேட்டான்னா, போடா மயிரு, நீ குடுக்குற சம்பளத்த விடவே அதிகமாவே வேலை செஞ்சுட்டேன்னு சொல்லிடுவேன்” என்றார்.

    “என்னால உணர்ச்சிகரமாக பேசமுடியும், ஆனா பேசமாட்டேன். என் தொழில் எழுத்து. அதனால, பட்டிமன்ற பேச்சாளர் மாதிரி எதிர்பார்க்க வேண்டாம்” என்று கம்ப ராமாயண உரைகளின்போது சொன்னவர், பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடந்த பாராட்டு விழாவின் ஏற்புரையின்போது, ஒரு உணர்ச்சிகரமான உரை நிகழ்த்தினார். அதற்கு முன் நாங்கள் ஏழு பேர் பேசி, வந்தவர்கள் பொறுமையை சோதித்தோம். முதலில் ஏற்புரை வழங்கிய பி.ஏ.கே.வின் செறிவார்ந்த உரை, கூட்டத்தை சென்று சேர்ந்தா என்று தெரியவில்லை. ஆனால், அன்றைய விழா நாயகன் கடைசியாக பேசிய நாஞ்சில்தான். அவர் உரையை, சிறு சலனம் கூட இல்லாமல் மொத்தக் கூட்டமும் கேட்டது. (வீடியோ வடிவம் வலையேற்றப்படும்).

    ***

    ஸ்டான்ஃபோர்ட் வானொலிநேர்காணலுக்காக, “நீங்கள் எழுதத் துவங்கியதற்கு என்ன காரணம்” என்று கேட்டோம். ஒரு கலைஞனுக்கே உரிய பெருமிதத்துடன் “நான் எழுதலைனா, என் மொழியில் சிலது எழுதப்படாமலேயே போயிடும். அதை என்னால் மட்டுமே சொல்லமுடியும். அதனால் எழுத வந்தேன்” என்றார். இந்தியா என்றால் வெளிநாட்டினருக்கு இருக்கும் பொது பிம்பம் எதிர்மறையானது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்‘, அர்விந்த் அடிகாவின் ‘White Tiger‘ போன்றவை வெற்றிகரமாக இருப்பதற்கு காரணம், அவை அந்த பொதுப் புத்தியை பிரதிபலிப்பதனாலேயே. அதே சமயம் இந்தியாவிற்கு வந்து சென்ற வெளிநாட்டு நண்பர்கள், தங்கள் வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக இந்திய பயணத்தை நினைக்கிறார்கள். “நாங்க பிரச்சனைன்னு நினைக்கறதெல்லாம், ஒரு பிரச்சனையே இல்லைன்னு இங்க வந்து பாத்தப்ப புரியுது. இந்தளவு ஏற்றத்தாழ்வு இருந்தும், மக்களப் பாத்தா சந்தோஷமா இருக்காங்க. இது எப்படின்னு புரியலை” என்றார் ஒரு அமெரிக்கர். அவரை மீண்டும் சந்தித்தால், நாஞ்சிலின் “யாம் உண்பேம்“, “வனம்” போன்ற கதைகளை சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இந்தக் கதைகளில் கடைசி வரி/பத்தியை தவிர்த்தால், அது கீழ்/நடுத்தர வர்க்கத்து நெருக்கடிகளை சொல்லும் பல நூறு படைப்புகளோடு ஒன்றாக இருந்திருக்கும். முந்தைய தலைமுறையின் பசி, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை பேசும் மற்றுமொரு படைப்பாளியாக மட்டுமே இருந்திருப்பார். “என் நாக்கில கசப்ப தொட்டு வச்ச சித்தன் யாருன்னு தெரியலை” என்று சொல்லும் நாஞ்சிலின் படைப்புகளில், ஆலகால விஷத்தின் ஊடே அமுது திரள்வது போல, பொங்கி வரும் கசப்பின் ஊடே, கனிவு எனும் மானுட தரிசனமும், இந்தியாவின் ஆன்மீக சாரமும் திரண்டு வருகிறது. நாஞ்சிலை மிக முக்கிய இலக்கியவாதியாக நான் நினைப்பது அதனாலேயே.

    அதே நிகழ்ச்சியில், “உரிய காலத்தில் அங்கீகரிக்கல, அல்லது மிகத் தாமதமாக அங்கீகரிச்சிருக்காங்கன்னு வருத்தமுண்டா ? உங்களுக்கு எப்பொழுதாவது எழுதுவதை விட்டுவிட்டு, உங்கள் தொழிலிலேயே கவனம் செலுத்தலாம் என்று தோன்றியிருக்கிறதா” என்ற கேட்டேன். “இல்லங்க.. வருத்தமெல்லாம் இல்லை. நியூயார்க்கில் சுற்றும்போது, யாரோ ஒருவர் பார்த்துவிட்டு, ‘நீங்க நாஞ்சில்நாடன்தான’ கேட்டார். அத நான் பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். அதிகார பீடத்தில இருக்கிறவன் அங்கீகரிக்கணும்னு என்னைக்கும் நின்னதில்லை. ஒரு வேளை தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருந்தால், மிக உயரிய பதவிகளை அடைந்திருப்பேன். கார், பங்களான்னு சேர்த்திருப்பேன். ஆனால் எழுதியதன் மூலமே, நாஞ்சில் நாடனாக இருக்கிறேன்” என்றார். வேறோரு நாள், நானும் அருணும், ஸ்டான்ஃபோர்டு பல்கலை அருகே, அவரை ஒரு இனிப்பு கடைக்கு அழைத்து செல்லும்போது, “ஞானபீடம் வாங்கிட்டு, ஸ்டான்ஃபோர்டு உள்ள பேச வேண்டியவரை, பல்கலைக்கு வெளியே கூட்டிட்டு சுத்தறோம்” என்றேன். “ஞானபீடம்லாம் குடுக்கமாட்டானுங்க. விருது குழூல இருக்கவங்க எல்லாம் எழுதி தோத்துபோனவனுங்க. அவங்களால, வெற்றிகரமா எழுதறவங்கள சகிச்சிக்க முடியாது” என்றார். “அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே” என்று அவருடைய தளத்தில் உள்ள வாசகங்களை நினைத்துக்கொண்டேன்.

    வளர்ந்த நாடுகளில் முக்கால்வாசி இலக்கியவாதிகள் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றிருப்பார்கள்; ஏதோ ஒரு வகையில் அமைப்போடு (பள்ளி, பல்கலை, அரசு) தொடர்புடையவர்கள். சில விதிவிலக்குகளை தவிர்த்தால், தமிழ்/இந்திய அமைப்பு, பெயர் சொல்லும்படியான இலக்கியவாதிகளை உருவாக்கவில்லை. தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் அனைவருமே, அமைப்பிற்கு வெளியே இருந்து வந்தவர்கள்தான்.அந்த விதிக்கு நாஞ்சிலும் விலக்கல்ல. நாஞ்சில், கணிதத்தில் பட்டம் பெற்றவர் (தமிழில் அல்ல) ; தொழிலோ, ஓயாமல் ஊர் சுற்றிக்கொண்டிருக்க வேண்டிய விற்பனை பிரதிநிதி; வாழ்விடமோ ‘யாதும் ஊரே’ வகைதான். இருப்பினும், அன்றாட நெருக்கடிகளுக்கிடையே, எப்படியோ அவருக்கு படிப்பதற்கு நேரம் கிடைத்திருக்கிறது; எப்படியோ தரம் வாய்ந்த படைப்புகளை எழுத முடிந்திருக்கிறது; இந்த ‘எப்படியோ’வை தேடிக் கொண்டிருக்கும் என் போன்றோருக்கு, நாஞ்சிலோடு செலவிட்ட இந்த சில நாட்கள், பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையல்ல.

  • கொற்றவை நாவல் – ஒரு பார்வை

    https://kortavaidiscussions.blogspot.com/2014/07/blog-post_25.html?m=1

    சிலிக்கான் ஷெல்ஃப் தளத்தில் May 2014இல் எழுதியது.

    கொற்றவை – ஒரு விமர்சனப்பார்வை

    2014 ஆம் ஆண்டிற்கு முன் கொற்றவை நாவல் குறித்த பதிவுகள் மிகக்குறைவாகவே இணையத்தில் இருந்தன. தீவிரமான வாசிப்புகள் நிகழவில்லை என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை, அவை பதிவு செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். இந்த கட்டுரையை எழுதி எழுத்தாளர் ஜெ.விற்கு அனுப்பியபோது, அவர் அதுவரை (2014 வரை) வந்த வாசகர் கடிதங்களில் இது மிகச்சிறந்தது என்று பதில் எழுதியிருந்தார். கடந்த ஏழு வருடங்களில் என் பார்வையில் மேலும் சிறந்த வாசகர் கடிதங்கள் வந்துள்ளன. ஒருவகையில் வாசகர்களில் அடுத்தடுத்த தலைமுறைகள் முந்தைய தலைமுறையைவிட மேலும் சிறப்பாகவே வாசிக்கிறார்கள்.

    ———

    முதல் முறை கொற்றவையை இரண்டு வருடங்களுக்கு முன்பு படித்தேன். அபாரமான மொழி. முதல் வாசிப்பில் மொழியின் அழகை தாண்ட முடியவில்லை. நிறைய புதிய சொற்கள், ஒலி அமைதியுடன் கூடிய அற்புதமான வரிகள். கொற்றவையை ஒரே மூச்சில் தொடர்ந்து படிப்பது, ஒரு பெர்ஃப்யூம் கடைக்குள் நுழைந்து, எல்லா வாசனை திரவியங்களையும் சேர்த்து நுகர்வது போல. கிறங்கடிக்கும். திகட்டத் துவங்கும். மொழியில் மயங்கி பக்கங்களுக்கிடையில் வேறுபாடு உணர முடியாமல் போகும். பெர்ஃப்யூம் கடைகளில் வெவ்வேறு திரவியங்களுக்கிடையே வேறுபாடு உணர காபி கொட்டைகள் நிறைந்த குப்பி ஒன்றை வைத்திருப்பார்கள். இடைஇடையே காபி குப்பியை நுகர்ந்து, அதன் கசப்பு மணம் நாசியில் ஏறிய பின், மீண்டும் அடுத்த வாசனை திரவியத்தை நுகரலாம். நாசி தெளிவாக புதிய வாசனையை உணரும். அது போல, கொற்றவை படிக்கும்போது, சூடிய பூ சூடற்கதொகுதியிலிருந்து ஒரு கதை படிப்பேன். நாஞ்சில் கதையின் கசப்பு ஏறிய பின், மீண்டும் தித்திக்கும் கொற்றவை. இரண்டு மாதங்களில் கொற்றவையை ஒரு முறை படிக்க முடிந்தது. அப்பொழுதே எழுதத் தோன்றினாலும், சிலப்பதிகாரம் படித்ததில்லை. இப்போது, சிலப்பதிகாரத்தையும், மீண்டும் கொற்றவையை இரு முறை வாசித்தபின் கொற்றவை குறித்து எழுத முடியுமென்று தோன்றுகிறது.

    கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல இந்திய மொழிகளில் மகாபாரதத்தை மறுஆக்கம் செய்திருக்கும்போது, தமிழ் நவீனத்துவர்கள், சிலப்பதிகாரத்தையோ, மணிமேகலையையோ ஏன் மறுஆக்கம் செய்யவில்லை? குலம் தந்த வான்பொருள் குன்றத்தை தொலைத்த பொறுப்பற்ற கணவன், கற்பினால் தளையிடப்பட்ட பெண்கள், போலி என்கவுண்டர் போல நிகழும் கோவலன் கொலை என்று பல வகையிலும் சிலம்பு ஒரு துன்பியல் கதை. முடிவை சிறிது மாற்றி, கதையை சமகாலத்தில் (1970களில்) நடப்பதுபோல எழுதினாலே அது ஒரு நவீனத்துவ நாவல்தான். பழமை மீதிருந்த உதாசீனம், ‘தமிழியர்கள்’ பழைய இலக்கியங்களை ஆக்ரமித்தது மற்றும் திராவிட இயக்கத்தினரின் jingoism போன்றவை நவீனத்துவர்களுக்கு ஒரு வகை ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கலாம். மறைந்த எழுத்தாளர் காப்ரியேல் கார்ஸியா மார்க்வஸ்[1], லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் பெருந்துயரம் தங்களுக்கென்று தங்கள் மரபிலிருந்து எடுத்துப் பயன்படுத்த படிமங்களே எதுவும் இல்லை, தான் அதை உருவாக்க வேண்டியிருந்தது என்கிறார். நவீனத்துவ தமிழ் நாவல்களை படிப்பதில் உள்ள ஆகப் பெரிய சோகம் தமிழ் படிமங்களை அவை பயன்படுத்தவில்லை என்பதுதான். நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கமான புதுமைப்பித்தனிடமிருந்து அவருடைய யதார்த்தவாதத்தையும், நக்கல் நையாண்டி நடையையும் நவீனத்துவர்கள் பெற்றுக்கொண்டனர். அவருடைய கடைசி காலத்து படைப்புகளான கயிற்றரவு, ‘கபாடபுரம்’ போன்றவற்றை நவீனத்துவம் கண்டுகொள்ளவில்லை. கபாடபுரம் சிறுகதையின் சாரமும் கொற்றவையின் மையமும் ஒன்றுதான். [அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகி, கபாடபுரத்தை கடல் கொள்கிறது.] கபாடபுரம் யதார்த்த உலகில் துவங்கி, ஆசிரியரின் நக்கல் கலந்த குரல் கதை முழுக்க ஓங்கி ஒலித்து, கடைசி சில பத்திகளில் காலாதீதத்தில் சென்று முடிவடைகிறது. கொற்றவை நேரெதிர். முற்றிலும் யதார்த்தம் கலவாத கனவு போன்ற நடையில், காலாதீதத்தில் துவங்கி, கடைசி சில பக்கங்களில் ஆசிரியரின் குரலுடன் தற்காலத்தில் முடிவடைகிறது. புதுமைப்பித்தன் சைவ பின்புலத்தில் [எரிமலை – நெற்றிக்கண்ணை திறக்கும் ஈசன்] தமிழ் மரபை ஆராயும்போது, ஜெயமோகன் சாக்த (தாய் தெய்வ) மரபில் [பொங்கும் கடல் – வெறிக்கூத்தாடும் கொற்றவை] கொற்றவையை எழுதியுள்ளார். [கன்யாகுமரியை வெறிக்கூத்தாடும் கொற்றவையின் வடிவில், பொங்கிவந்த கடலின் உருவகமாக ஜெ. எழுதியிருக்கும்போது, ‘ஆழி சூழ் உலகில்’ ஜோ டி க்ரூஸ், குமரி அன்னையை, கிறித்தவ விழுமியத்தின் சாரமான தியாகத்திற்கு உருவகிக்கிறார். பொங்கி வரும் கடலிலிருந்து தன் குடியை காக்க, தன்னை பலியிடுகிறாள் கெழுகடல் கரை நிற்கும் செல்வி.]

    jeyamohan_kotravai

    விஷ்ணுபுரத்தைப் போலவே, கொற்றவையும் ‘கபாடபுர’த்திலிருந்து, சில தூண்டுதல்களை பெற்றிருந்தாலும், அதன் பெரும்பகுதி, சிலப்பதிகாரத்தின் மறுபுனைவு. சிலம்பின் சாரத்தை தக்க வைத்துகொண்டே, கதை மாந்தர்களையும், நிகழ்வுகளையும் மாற்றி எழுதியிருக்கிறார். உதாரணமாக, சிலம்பில் செங்குட்டுவன் வடமன்னர்களான கனகவிஜயரின் முடித்தலை நெரித்து, அவர்தம் கதிர்முடியில் பத்தினிக் கோட்டத்து கால்கோள் கற்களை ஏற்றிய வீரன். இனைபுணர் எகினத்து இளமயிர் செறித்த துணை அனைப்பள்ளியில் [இளங்கோ!! 🙂 :-)] காத்திருக்கும் வேண்மாளை காணச் செல்லும் காதலன். கொற்றவையிலோ, செங்குன்றத்தின் குறுமர் நிறுவிய கண்ணகி சிலையின் பதிட்டை விழாவிற்கு சென்று அச்சிலையை நீள்நேரம் நோக்கி, பின்பு செங்குன்றின் உச்சியில் படுத்து விரிவானை நோக்கியடி, மண்ணாளும் நெறி எது என்று வியக்கும் மன்னன். சமணத் துறவி கவுந்தி, கொற்றவையில் கோவலனுக்கு துறவியாகவும், கண்ணகிக்கு நீலி எனும் பேயாகவும் (உக்கிரதெய்வம்) வழித்துணையாக வருகிறாள். சிலம்பில், பழையன் குட்டுவன் பற்றி ஒரு வரி வருகிறது. கொற்றவையிலோ, அவன் முக்கியமான எதிர்நிலை பாத்திரம். சிலம்பிலுள்ள மிகச் சிறிய நிகழ்வுகளைக் கூட மாற்றுகிறார் ஜெ. மாதவியிடமிருந்து திரும்பிவரும் கோவலனை, யாரென்று தெரியாமல் “காவலன் போலும்” என அறிவிக்கும் கண்ணகியின் சேடி, கொற்றவையில் “ஆ கள்வன்!” என்கிறாள். சொல்லிக் கொண்டே போகலாம். சில முக்கியமானவற்றை கீழே தொகுத்துள்ளேன்.மூன்று வாவிகள்:
    சிலப்பதிகாரத்தில் பாலை வழியே செல்லும் கண்ணகி, கோவலன், கவுந்தி மூவரும் மாடல மறையவன் என்ற அந்தனனிடம் மதுரைக்கு வழி கேட்கிறார்கள். அவன், மூன்று வழிகளை சொல்லி, அம்மூன்றில், இடைப்பட்ட வழியில் மாலிருஞ்சோலை வரும். அங்கு புண்ணிய சரவணம், பவகாரணம், இட்டசித்தி என்ற மூன்று வாவிகள் உள்ளன; மூன்று வாவிகளையும் காக்கும் தெய்வங்களின் அனுமதி பெற்ற பின், அவற்றில் மூழ்கினால், முறையே தொன்னூலாகிய ஐந்திரத்தை கற்ற பலன், முன்வினை/வருவினை/நிகழ்வினை அறிதல் மற்றும் வேண்டியது கிடைக்கும் என்கிறான். இம்மூன்றிலும் மூழ்காவிட்டாலும், மாலின் திருவடி தொழுதால், இம்மூன்றில் மூழ்கிய பலனை ஒருங்கே அடையலாம் என்கிறான். இன்மூன்று குளங்களும், “இதைச் செய்தால் இது கிடைக்கும்” என்ற அடைப்படையில் சடங்காகவும், அதைவிட பெரியது சரணாகதி (பக்தி) என்ற அளவிலேயே வருகிறது. சடங்கையும், பக்தியையும் ஏற்காத சமணத்துறவியாகிய கவுந்தி, மாடல மறையவனிடம் வாவிகளில் மூழ்க வேண்டியதில்லை என்று வாதிடுகிறார்.

    கொற்றவையில் கண்ணகி, கோவலன், கவுந்தி வடிவில் வழித்துணையாக வரும் நீலியும் மாடல மறையவனிடம் வழி கேட்கிறார்கள். அவன் வழிகளையும், வாவிகளையும் விவரிக்கக் கேட்டு, கோவலனுக்கு, அம்மூன்று வாவிகளிலும் மூழ்கி வாழ்க்கையை அறியும் ஆவல் ஏற்படுகிறது. கோவலனை, அவனுடைய கனவின் மூலம் இம்மூன்று வழிகளில் அழைத்துச் செல்கிறாள் நீலி. அறிவருள் வாவியில் (புண்ணிய சரவணம்) மூழ்கும் கோவலனுக்கு, வாவியின் தேவதையான நலமருள் நங்கை, வாவியின் மூன்று படிகளை விவரிக்கிறது. மூன்று படிகளையும் கடந்து சென்றாலே, மெய்மையின் ஊற்றை அறிய முடியும் என்றும், ஆனால் மூன்று படிகளையும் கடந்தவர் எவருமில்லை என்கிறது. தன் அறிதலைப்பற்றி, முதற்படியில் நன்மையையும், இரண்டாவது படியில் தீமையயையும் கடந்து, இவை இரண்டும் இல்லாத, காலம் உறைந்து நிற்கும் மூன்றாவது படியை கடக்க முடியாமல், செய்வதறியாது திகைத்து திரும்புகிறான் கோவலன். வானாறு வீழ்ந்தும் நிறையாத சுனையை கனவில் கானும் மாயைக்கு, சித்தார்த்தன் பிறக்கிறான். மனைவி, குழந்தைகள் பிறந்த பின்னரும், சித்தார்த்தனின் கண்களில் துயர் எஞ்சி இருக்கிறது. மனையை, அரசை துறந்து, கதவம் பல திறந்து, புதவம் பல புகுந்து, அறிவின் வழியில் பயனித்த சித்தார்த்தன், சூழந்து, அகன்று, ஆழ்ந்து, உயர்ந்த வழியின் முடிவில் உள்ளது பெரும் பாழ் என்று அறிகிறான். அறிவின் வழியில் செல்லும் நவீனத்துவம் சென்றடைந்த பெரும் பாழ். பிறப்பறு வாவியில் (பவகாரணம்) மூழ்கி தன் முன்வினையை அறியும் கோவலன், எங்கோ தன்னைப்போலவே ஒருவனை காண்கிறான். கலிங்க மன்னர் குலம் கபிலபுரம், சிங்கபுரம் என இரண்டாக பிரிந்து, உட்பூசலிடுகிறது. கபிலபுரத்து அமைச்சன் மகன் சங்கமன், தன் இல்லாள் நீலியுடன் நகர் நீங்கி, வாழ்வுக்காக சோழ நாட்டு புகாருக்கு செல்லும் வழியில், சிங்கபுரத்தில், மனைவியின் நகைகளை விற்கும்போது, தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலையாகிறான். தன் வருவினையை அறிவதற்காக மீண்டும் மூழ்கும் கோவலன், எதிர்காலத்தில், கொடுங்கோளூர் கண்ணகி கோயிலில் சன்னதம் வந்து வெறியாடும் பெண்ணின் காலடியில் சிறுகல்லாக தன்னை காண்கிறான். வாவியின் ஓவியப் பாவை வருத்தத்துடன் பார்க்க, நிகழ்வினையை அறியாமலே வாவியிலிருந்து வெளியேறுகிறான். வேண்டியது கிடைக்கும் விருப்பறு வாவியில், எதுவும் வேண்டாமலே எழுந்துவிடுகிறான் கோவலன்.

    கோவலனின் கனவில் வரும் வாவிகள் இளங்கோவின் வாழ்வில் வரும் பகுதிகளாகின்றன. அரசு துறந்து, குணநாட்டில் சாக்கிய நெறியேற்று துறவறம் பூண்ட இளங்கோ, பற்பல நூல்களையும், பல மொழிகளையும் கற்று, மாணவர்களுக்கு ஆலமரத்தடியில் அமர்ந்து போதிக்கிறார். மதுரை கூலவாணிகன் சாத்தனின் மூலம், கண்ணகி கதை கேட்டு, அறியாப் பெண்ணை அறிவமர் செல்வியாக ஆக்கிய பெருவல்லமையை வியக்கிறார். வாவிகளில் வரும் ஓவியப்பாவை போல, மேற்குமலைக் குகையில் நிலவொளியில் ஒளிரும் இடச்சிறுகால்விரல் மணி அணிந்த ஓவியம், இளங்கோவை, கண்ணகியை பற்றி அறிய புறப்படத் தூண்டுகிறது. தமிழ் நிலமெங்கும் அலையும் இளங்கோவிற்கு, அறிவருள் வாவியில் வழிகாட்டும் நலமருள் நங்கையைப் போல, மணிமேகலை தன்னறம் உணர்த்துகிறார். அதன் பின் பௌத்தம் வகுத்த அறிவின் பாதையிலிருந்து விலகி, கன்னியாகுமரி அன்னையின் முன், விரிகடலே அன்னையாக சுடர, தன்னறம் உணர்ந்து, கண்ணகியின் கதையை காலத்தில் அழியாத காப்பியமாக இயற்றி, பின்பு சபரணமலையில் ஐய்யனாக நிறைவடைகிறார்.

    மூன்று வாவிகளும் படிமங்களாக ஞானம், தியானம், கற்பனை என இந்து மரபு குறிக்கும் அறிதலின் மூன்று வழிகளை சுட்டுகின்றது. இம்முன்றிலும் பயனித்து வாழ்வில் நிறைவடைந்தவராகிறார் இளங்கோ. வைதீகத்தைவிட அவைதீக மரபுகளை பலபடிகள் தூக்கலாகவே ஆதரிக்கும் ஜெ. தன் நாவல்களில், அறிவின்/ஞானத்தின் எல்லைகளை எப்போதும் வரையறை செய்ய தவறுவதில்லை. தமிழ் நாவல்களில் இந்திய தத்துவங்கள் முற்றிலும் இல்லாமல் இருந்தது. இந்திய தத்துவ மரபுகளை தமிழ் நாவல்களில் இணைத்தது, ஜெ.வுடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று. [அரவிந்த்எழுதிய சீர்மை நாவலும் இம்மூன்று வழிகளையும் பற்றி பேசுகிறது. பக்தியை முழுமுற்றாக நிராகரிக்கும் கென் ஞானத்திலும், தியானத்திலும் அவன் தேடிய முழுமையை அடைய முடியாதபோது, கேன்சரால் பாதிக்கப்பட்ட த்ரேயாவிற்கு கற்பனையில் (ஓவியக்கலையில்) முழுமை கை கூடுகிறது. அதுவும் மேற்கத்திய தத்துவம் சுட்டும் முழுமுதல் சீர்மை இல்லாமல், கீழை தத்துவம் சுட்டும் சிறிது குறைபாடு உடைய முழுமையில். அவள் அடைந்த முழுமையை சொற்களில் நூலாக்கி, அது ‘நிறுவனப்படுத்தப்படும்போது’ அவன் மனம் கனக்கிறது. காட்சிப்படுத்துதல், தத்துவத்தை புனைவில் பொருத்துதல் என சீர்மை எனக்கு மிகப் பிடித்திருந்தது. விரிவாக எழுத வேண்டும்.]

    காப்பியத்தின் மையம்:
    தென்னில மக்களின் முதல் தெய்வம் கன்னி. தென்திசையும், மாகடலும் கருமையாகவும், மரணமாகவும் தொன்மக்களுக்கு அச்சமூட்டுகிறது. இருளையும், ஆழியையும் கண்டு அஞ்சாத முக்கண்ணனும், ஆழியானும் தமிழ் நிலத்தின் தெய்வங்களாகிறார்கள். வெண்கல யுகத்தில் இருக்கும் தென்நிலத்திற்கு, இரும்பை அறிமுகப்படுத்தும் குறுமுனி, குமரி முனையில் தெய்வங்களின் அன்னையான கன்னி அன்னைக்கு சிலையெடுத்து, அன்னையின் வலச்சிலம்பு மறவர்களுக்கும், இடச்சிலம்பு வணிகர்களுக்கும், வலதுகால் நீள்விரல் மணி உழவர்களுக்கும், இடதுகால் நீள்விரல்மணி பரதவர்களுக்கும், வலச்சிறுவிரல் மணி இடையர்களுக்கும், இடச்சிறுவிரல் மணி மலைவேடர்களுக்கும் என தமிழ்குடிகளே அன்னையின் உடலென வகுத்ததாகவும், கன்னியின் ஆட்சியில் தென்நிலம் வாழ்ந்ததாகவும், பின்பு தென்நிலம் பலமுறை கடற்கோளால் அழிய, தொல்குலங்கள் புதிய நிலங்களை நோக்கி பயனித்ததாகவும், புகார் நகர பெருவணிகன் மாநாய்க்கன் இல்லத்தில் முதுபாணன் பாடுகிறார். கண்ணை அன்னை காக்கும் புகார் நகர வணிகர் குடியில் மாநாய்கனின் மகளாக கண்ணகியும், கருங்கண் கொற்றவை காக்கும் பாலை நிலத்து மறவர் குல தலைவன் பழையன் குட்டுவனின் மகளாக வேல்நெடுங்கண்ணியும் பிறக்கிறார்கள். குலதெய்வங்களின் அடையாளமாக கண்ணகிக்கு வலச்சிலம்பும், நெடுங்கண்ணிக்கு இடச்சிலம்பும் அனிவிக்கப்பட்டு அவரவர் ஊர்களில் சிலம்பணி விழாக்கள் நடைபெறுகிறது. பின்பு கண்ணகி கோவலனையும், நெடுங்கண்ணி பாண்டியனையும் மணக்கிறார்கள். காலம் உருண்டோடுகிறது. பட்டத்தரசியான தன் மகள் வயிற்று வாரிசு மூலம், மதுரையை மீண்டும் தன்குடி ஆளவேண்டும் என்ற கனவில் இருக்கிறார் மறக்குலத் தலைவன் பழையன் குட்டுவன். ஊர்தோறும் மறவர் படை, வணிகர்களையும், உமணர்களையும் கொள்ளையிடுகின்றனர்; வேளிர்களின் விதைநெல்லை கவர்கிறார்கள்; மல்லர்களை அடிமைகளாக வடவணிகர்களுக்கு விற்கிறார்கள். பெண்களை கவர்ந்து செல்கிறார்கள். நாடு முழுவதும் அறம் வழுவி, குடிப்பூசல்கள் எழுகின்றது. பரந்த நிலத்தில், அரசின் செங்கோல் எல்லா இடங்களிலும் செல்லமுடியாது, பூசல்கள் எழத்தான் செய்யும் என்கிறான் பாண்டியன். மன்னனின் கோல், அறவோர் நூல், மறையோர் சொல் செல்லா இடங்களிலும் செல்லும் ஒன்றுள்ளது, அது அறம் என்கிறார் அமைச்சர். அமைச்சரின் நற்சொற்களை ஏற்காத பாண்டியன், குடிகளின் குறைகளை களையாமல் கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். இவ்வாறு, மதுரையே ஒரு கொந்தளிப்பான சூழலில் இருக்கும்போது, வாழ்வு தேடி கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு வருகிறார்கள். தனக்கு எதிராக எழும் பிற குலத்தலைவர்களை சதிகள்மூலம் கொன்று, பிற குலங்களின்மேல் தன் குலத்தின் உரிமையை நிலைநாட்டும்பொருட்டு, பிற குடிகளிடம் இல்லாத, தன்குடி அடையாளமான, மந்தனச் சொற்கள் பதித்த சிலம்பைக் கொண்டு சிலம்பணி விழா எடுக்க திட்டமிடுகிறார் பழையன். எல்லா குடிகளுக்கும் அன்னையின் அணிகலன் குடியடையாளமாக உள்ளதாகவும், பழையனிடம் வலச்சிலம்பு இருப்பது போல, தமிழ் நிலத்தில் எங்கோ இடச்சிலம்பும் இருக்கும்மெனவும், அது வெளிப்படும்போது, குடிகளுக்கிடையே பெருமை சிறுமை இல்லை என அறிவீர்கள் என்கிறார்கள் பிறகுடித் தலைவர்கள். சிலம்பணி விழாவிற்கு முன் சிலம்பு திருடப்படுகிறது; கண்ணகியின் வலது சிலம்பை விற்க வந்த கோவலன் தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலையாகிறான். அதுகேட்டு சன்னதம் கொண்டு எழுந்த கண்ணகி, எரிதழல் கொற்றவையாக மதுரை நகர் புகுகிறாள். கோவலனின் கொலை, மதுரையில் கலகம் வெடிக்க ஒரு நிமித்தமாகிறது. பெண்களும், வடவணிகர்களுக்கு அடிமைகளாக விற்க கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து தப்பிவந்த கடைசியர்களும் முன்னெடுக்க மதுரை தீக்கிரையாகிறது. கண்ணகியின் இடச்சிலம்பை கண்டு பாண்டியன் எல்லாக்குடிகளும் சமமானவையே, ஒன்றே, குடியாளும் அன்னையே அறமென்றுணர்ந்து உயிர் துறக்கிறான். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது.உரைசால் பத்தினிகளை உயர்ந்தோர் ஏத்தும் காவியமில்லை கொற்றவை. விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறில் ஒரு கதை வருகிறது. விவேகானந்தரின் தாத்தா துர்கா சரணர், திருமணமாகி குழந்தை பெற்ற பின், இளமையிலே துறவறம் பூண்டு வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். பல வருடங்கள் கழித்து, சரணரின் மனைவி, காசியாத்திரை சென்று, தெய்வங்களை தரிசித்தபடியே செல்லும்போது, ஒருநாள் படிகளில் கால் இடறி மூர்ச்சித்து விழுந்து, ஒரு துறவியால் காக்கப்படுகிறார். மூர்ச்சை தெளிவித்த துறவி, துர்கா சரணர்! “மூர்சித்து விழுந்த மனைவியை காப்பாற்றி, தன் மனைவி என்று தெரிந்து வியப்பில் மூழ்கினார். இருப்பினும் சிறிது நேரத்தில் உணர்ச்சியை கட்டுப்படுத்திவிட்டு, “இதெல்லாம் மாயை” என்று முனுமுனுத்தபடியே அப்பால் போய்விட்டார். இதற்காக அவர் மனைவி கவலைப்படவில்லை. எதுவுமே நடவாதது போல எழுந்து, கோவிலுக்குள் சென்று, இறைவனை வலம் வரத் தொடங்கினார்” என்று எழுதுகிறார் அ.லெ. நடராஜன். மரபாக சொல்லப்படும் இது போன்ற கதை, இலக்கியமாகும்போது கொற்றவையின் மகதி கதை போல இருக்கும்.மகதியிடம் கண்ணகி கேட்டாள் “பிறகு உங்கள் கணவனை கண்டீர்களா?”. “ஆம்” என்றாள் மகதி. “அவன் மூதிரவன் ஆகித் துவராடையும் கப்பரையுமாக இவ்வழி ஒரு நாள் வந்தான். வரகரிச் சோற்றை பிச்சையாக ஏற்று இரவில் படுத்தான். அன்றிரவு நான் படுத்த கற்படுக்கையருகே மறுநாள் மென்பூழி மீது அவன் பாதம் வந்து நின்று மீண்ட தடம் தெரிந்தது” என்றாள் மகதி. “அவனிடம் நீங்கள் ஏன் பேசவில்லை?” என்றாள் கண்ணகி. “துறப்பதற்கு வீடு விட்டிறங்க வேண்டியதில்லையே” என்றாள் முதுபார்ப்பினி.

    சிலம்பில், மாதவி பாடும் கானல்வரி பாடல்களை தவறாக பொருள்கொண்டு, அவள் வேறெவரையோ நினைத்து பாடுகிறாள் என ஐயுற்று, மாதவிடமிருந்து பிரிந்து கண்ணகியிடம் மீள்கிறான் கோவலன். கொற்றவையிலோ, மாதவியுடன் காமத்தில் திளைத்து, பெண் காமத்தின் ஊற்றுமுகம், குழந்தைக்கான விழைவென என அறிந்து, அதிர்ந்து, மாதவி கருவுற்றதை உணர்ந்துகொண்டபின், அவளிடமிருந்து விலகி, கண்ணகியிடம் மீள்கிறான்.[2] குலம் தந்த வான்பொருள் குன்றத்தை தொலைத்துவிட்டு வரும் கோவலனின் மேல் ஏற்படும் வெறுப்பை தன்னுள் மறைத்து, மரபு வகுத்தபடி பத்தினிகளுக்குரிய அருளும் விழிகளும், சொற்களுமாக அவனை ஆரத் தழுவி ஏற்றுக்கொள்கிறாள் கண்ணகி. பின்பு, ஐவகை நிலத்தில் பயனித்து, தமிழ் நிலமெங்கும் பெண்கள் படும் துயரை கண்டும், குலக்கதைகளாக நீலி சொல்லும் கதைகளை (செல்லி, வள்ளி, ஆதிமந்தி, யசோதரை..) கேட்டும் கண்ணகியின் குண இயல்பு மாறுகிறது. கற்பு, நெறி என சொற்களால் கட்டப்பட்டுள்ள சிறையை கண்டு கொள்கிறாள். ஒரு இனமே அடிமைப்பட்டு, அவ்வினத்தின் ஆண்கள் அடிமைகளாக விற்கப்படுவதைக் கண்டும் அவள் கலங்குவதில்லை; “நான் அக்களமர் குலபெண்டிரை எண்ணிச் சற்றே ஆறுதல் கொள்கிறேன். அவர்கள் தங்கள் ஆண்களை நம்பி வாழப்போவதில்லை. ஆகவே இவர்கள் விற்கப்படினும் அவர்கள் இழப்பது ஏதுமில்லை!” என்கிறாள். கற்பு வழுவியர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்படும் கன்னியரும், பெண்களும் அக்குலங்களின் தெய்வங்களாகிறார்கள். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தாரை வானுறையும் தெய்வங்களில் வைக்கும் நம் மரபு, வையத்தில் வாழ்வெடுத்து வாழாது போனவர்களையும் தெய்வங்களாக்குகிறது. குலம்தோறும் ஆற்றியிருக்கும் பெண்களை கண்டு, அவர்கள் துயர் பாடும் தேவந்தியின் பாடலாக ஒலிக்கும்முட்டுவேன்கொல்! தாக்குவேன்கொல்!
    ஓரேன்யானும் ஓர்பெற்றி மேலிட்டு
    ஆஅல் எனக் கூவுவேன்கொல்!
    அலமரல் அசைவிளி அலைப்ப என்
    உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே!சங்கப்பாடல் மூலம், பெண்களின் துயர்பாடும் காவியமாகவே விரிகிறது கொற்றவை.சிலப்பதிகாரத்தில் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுவதை விளக்க, கோவலன்-பரதன் கதை விவரிக்கப்படுகிறது. [நீலியின் நகைகளை விற்கும்போது, சங்கமனை அரசனிடம் தவறாக காட்டிக்கொடுக்கும் பரதன், இப்பிறவியில் கோவலனாக பிறந்து ஊழ்வினையால் மதுரையில் கொலையாகிறான்]. கொற்றவையில் சங்கமன்-நீலி போல கோவலன்-கண்ணகி வருகிறார்கள். ஊழ்வினை என்ற கருத்தை முன் வைக்கவில்லை ஆசிரியர். காலத்தின் சுழற்சியில் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. மகதி-பார்ப்பனன் போல சித்தார்த்தன்-யசோதரை, கடலில் குதிக்கும் செல்லி போல மணிமேகலை, நீலி-சங்கமன் போல கண்ணகி-கோவலன், மீண்டும் மீண்டும் அழியும் மதுரை என காலத்தின் சுழற்சி மீண்டும் மீண்டும் சுட்டப்படுகிறது.****உலகின் பெரும்பான்மையான கலாச்சாரங்கள், தாங்களே உலகின் முதல் குடி என்றும், தங்களிடமிருந்தே பிற கலாச்சாரங்களும், மொழிகளும் தோன்றின என்கின்றன. இந்தியாவிற்குள் பல்வேறு காலகட்டங்களில் வந்த இனங்கள், பல நூற்றாண்டுகளாக அதிகாரத்திற்காகவும், வாழ்வாதரத்திற்காகவும் போரிட்டும், கலந்தும் வாழ்கின்றன. போர்களும், இனக்கலப்புகளும், மேல்-கீழ் அடுக்குகளும் தவிர்க்க முடியாதவையும் கூட. அதுபோல மேல்-கீழ் என்பதும் காலத்திற்கேற்ப மாறுபவையும்கூட. பெரும்பாலான தமிழ் மனங்களில் ‘லெமூரியா’, ‘ஆரிய படையெடுப்பு’ போன்றவை ஒரு நிறுவப்பட்ட உண்மையாக இருக்கிறது. கல்லூரி முடிக்கும்வரை எனக்கும் அது நிறுவப்பட்ட உண்மையே. தமிழகத்தைவிட்டு வெளியே சென்றது முதல் (வேலைக்காக பெங்களூருக்கு), அக்கருத்தில் மாற்றம் ஏற்பட்டது. கொற்றவையில் வரும் ‘நீர்’ பகுதி, கற்பனையிலும், மொழியிலும், தமிழில் எழுதப்பட்டுள்ளவற்றிலே சிறந்தது. ஆனால் கருத்தளவில் ‘ஆரிய படையெடுப்பை’ மனநிலையை நீடிக்கச்செய்யக்கூடியது. எனக்கு தனித்தமிழ் தேசியத்தில் உடன்பாடில்லை. ஆனால், தனித்தமிழ் தேசத்திற்கு ஒரு விவிலியம் எழுதினால், கொற்றவையின் “நீர்” பகுதியை அதன் ஆதியாகமமாக வைக்கலாம். [உலகின் மிக இளைய நாடான தெற்கு சூடானில் பல்வேறு இனக் குழுக்களுக்குள் நிகழும் உள்நாட்டுப்போரை கவனித்தாலே, ஆரிய-திராவிடம் இட்டுச் செல்லக் கூடிய முடிவை ஊகிக்கலாம். கண்முன்னே இலங்கை உதாரணமாக உள்ளது]. இருப்பினும், ஒரு புனைவில் என்ன எழுதவேண்டும் என்பது ஆசிரியருடைய முழுஉரிமை.****கொற்றவையும் விஷ்ணுபுரமும் :சூலமும், சொல்லும், திகிரியும் தாங்கிய மூவர்க்கு ஆயினும்,
    காலம் என்று ஒன்று உண்டம்மாஎன்ற கம்ப ராமாயண வரிகள் விஷ்ணுபுரத்திற்கானது. இவ்வரிகளுடன் சேர்த்து,பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும், சங்கு
    கைத் தாங்கிய தருமமூர்த்தியும், அங்கையின்
    நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்
    மங்கையர் மன நிலை உணர வல்லரோ?என்பதும் கொற்றவைக்கான வரிகள்.

    சுருக்கப்பட்ட வடிவம் கொற்றவையின் கடைசி பகுதியில் உள்ளது. விஷ்ணுபுர கோயில் போல கொடுங்கோளூர் மாமங்கலை ஆலயம் இருக்கிறது. அக்னிதத்தரின் சொல் விஷ்ணுபுரத்தை ஆள்வது போல, நெடுநாட்கள் கைவிடப்பட்டு கிடந்த ஆலயத்தை மீண்டும் கட்டிய சங்கரத்திருவடித்தானத்தின் சொல் மாமங்கலை ஆலயத்தை ஆள்வதாக சொல்கிறார் காலசூரி. முகமதியர் படையுடன் இனைந்து கடையர் மக்கள் விஷ்ணுபுரத்தை இடித்ததுபோல, டச்சுப் படையுடன் புலையர்கள் கொடுங்கோளூரை அழிக்கிறார்கள். பெருமூப்பன் சிலை விஷ்ணுவாகவும், ததாகதராகவும் ஆனது போல, குறுமர்களின் கன்னியன்னை மாமங்கலையாகவும், அறிவமர்செல்வியாகவும் ஆகிறாள்.விஷ்ணுபுரத்தின் முதற்பகுயில் வரும் சங்கர்ஷணனின் காவிய அரங்கேற்றம், பாண்டியன், இரண்டாம் பகுதியில் அஜிதரின் ஞானசபை விவாத வெற்றிக்குப் பின் வரும் நிகழ்வுகள், அஜிதரின் மரணம் என விஷ்ணுபுரத்தில் அமைப்பை சார்ந்த எதுவும் உயர்வாக பேசப்படவில்லை. உயர்வாக சித்தரிக்கப்பட்ட சுடுகாட்டு சித்தன், குறத்தி நீலி போன்றோர் அமைப்பிற்கு வெளியே உள்ளவர்கள். ஒப்புநோக்க கொற்றவையில் கண்ணகி, சேரன் செங்குட்டுவன், இளங்கோ, சாத்தன், மணிமேகலை, தேவந்தி, நீலி என நிறைய நேர்நிலை கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். விஷ்ணுபுர ஞான சபையில் தன் பெருங்காவியத்தை அரங்கேற்றிய பின்னர், சங்கர்ஷணன் மனம் வெறுத்து விஷ்ணுபுரத்தை விட்டு விலகிச் செல்கிறான். தான் இயற்றிய காவியமே பயனற்றது என நினைக்கிறான். கொற்றவையில், இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றி தன் சீடனிடம் தந்து, சேரனின் அவையில் அரங்கேற்றச் சொன்ன பின்னர், சபரண மலையில் உண்ணாநோன்பு நோற்று உயிர் துறக்கிறார். விஷ்ணுபுரத்தை ஒப்பிட்டால், கொற்றவையில் “அமைப்பு” ஓரளவிற்கு நேர்நிலையாக சித்தரிப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு விஷ்ணுபுரத்தில் அஜிதர் மரணத்தையும், கொற்றவையில் கண்ணகி மரணத்தையும் ஒப்பிடலாம்.ஞானத்தின் படிகளில் ஏறி, விஷ்ணுபுரத்தை வென்ற அஜிதர், தன் இறுதி தருணத்தில், ஒரு குவளை நீருக்கில்லாமல், உயிர் துறக்கிறார். அவருடைய அமைப்பினரே அவர் மறைவை, ஒரு மாதம் கழித்து வரும் சித்திரா பௌர்ணமியன்று அறிவித்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர். ஞானத்தை தேடிவந்த நரோபா பயந்து ஓடுகிறான். வெண்குதிரையின் மீதேறி சொர்க்கம் புகுந்த ஆழ்வார் கதையும் அவ்வாறே. அவர் மறைந்தவுடன், அவரிடத்தை நிரப்ப வேறொரு ஆழ்வார் உருவாக்கப்படுகிறார். ஞானமும், பக்தியும் அமைப்பிற்குள் சிறைப்படுத்தப்படுகின்றன.கண்ணகி செங்குன்றத்தில் மேழ மாத முழுநிலவு நாளில், பொன்மலர் பூத்த வேங்கை மரத்தடியில் உள்ள கற்பாறையில் கண் மூடியமர்ந்து உயிர் துறக்கிறாள். ஒளிரும் வானில், கார் திரண்டு வெண்ணிற யானை என உருக்கொண்டு மெல்ல அசைந்து வர, அதன்மீது சுடரொளி சிதற நிலவு ஏறியமர்ந்து கொள்கிறது. சேரன், அவன் அமைச்சர்கள், வணிகர்கள் என அனைவரும் சேர்ந்து கண்ணகிக்கு கோயில் கட்டுவதன் மூலம், கண்ணகி நிறுவனப்படுத்தப்படுகிறாள். சைவம், வைணவம், சாக்கியம், சமணம் என நான்கு பெருமதங்களும் மங்கலமடந்தையை தங்களவராக கருதுகின்றன. ஆனால், விழாவில் பங்கேற்ற களைப்பில் ஊர் உறங்க, அடுத்த விடியலிலே, கோயில் கருவறை இருளுக்குள் இருந்து கரிய சிலை வெளிவருகிறது. வஞ்சி நகரின் கிழக்கே இருக்கும் புலையர் குடியின் கன்னி சன்னதம் கொண்டு எழுகிறாள். கொற்றவை குறிக்கும் அறம் அமைப்பிற்குள் அடங்காதது என பொருள் கொள்ளலாம்.

    சேரன் செங்குட்டுவன் காலத்தில், குறுமர்களை (மலைக் குறவர்கள்) ஆரத் தழுவி நலம் விசாரித்து, தான் மார்பில் அணிந்திருந்த ஆரத்தை அவர்களுக்கு அனிவிக்கிறான். குறுமர்களுக்கு கண்ணகி கோயிலில் முதல் பூசனை நடத்தும் உரிமையிருக்கிறது. பல நூற்றாண்டுகள் சென்றபின், தம்புரான் காலத்தில் குறுமர்கள் தீண்டப்படுவதில்லை. கொடுங்கோளூர் கோயிலில் குறுமர்கள் பூசை முடித்த பின்னர், தீட்டுக் கழிப்பட்ட பின்பே அடிகளும், மறையவர்களும் மீண்டும் கோயிலுக்குள் உள்ளே வருகிறார்கள்என்கிறது கொற்றவை. விஷ்ணுபுரமும், கொற்றவையும் தலித்துகள் குறித்து கிட்டத்தட்ட ஒரே பார்வையை முன் வைக்கின்றன. இந்து மரபின் மைய படிமங்கள் தலித்துகளுடையது. ‘பிறர்’ அதை அபகரித்துக்கொண்டனர். ஆதியில் இந்து சமூகம் நெகிழ்வுடன் இருந்து, பின்பு நிலவுடைமை காரணிகளால் இறுகிவிட்டது எனும் கருத்து ஜெயமோகனின் இந்துத்துவா திரிபு; தலித்துகள் இந்துக்களல்ல, அவர்கள் எப்பொழுமே ஒடுக்கப்பட்டிருந்தனர், ஜெயமோகன் தன் நாவல்களில் இந்துத்துவத்தை வலிய புகுத்துகிறார் என்று குற்றம் சாட்டுபவர்களுக்காகவே, முனைவர் வி.ஆர். சந்திரன் எழுதிய “கொடுங்கோளூர் கண்ணகி” ஆய்வுக்கட்டுரையை மொழி பெயர்த்திருக்கிறார். அந்நூல், கொடுங்கோளூர் கண்ணகி கோயிலின் சடங்குகளை விரிவாக விவரிக்கிறது. சடங்குகளில் புலையர்களுக்குரிய முக்கியத்துவத்தை ஆவணப்படுத்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள கோயில்களின் திருவிழாக்கள், சடங்குகள் குறித்தும் இதுபோன்ற பல நூல்கள் வரவேண்டும். நம் வரலாறை அறிய அவை பெருமளவில் உதவும்.****காந்தி போல ஒருவருக்கு, விஷ்ணுபுர சமூகத்தில் இடமிருந்திருக்குமா என்று நினைக்கும்போது, கொற்றவையில் அவருக்கான இடம் தாராளமாக இருக்கிறது. இறுகிய அமைப்பை எதிர்த்து, ஒரு விழுமியத்தை முன்வைத்து போராடுபவர், பின்பு வென்று, அவ்வமைப்பின் முகமாகிறார். காலத்தில் அப்புதிய அமைப்பும், முன்புபோலவே இறுகும்தோறும், புதிதாக போராடுபவர்களுக்கு, அவர் முன்வைத்த விழுமியமே தூண்டுகோலாக இருக்கிறது. [உதா: காலனிய அரசு — காந்தி — சுதந்திர இந்தியா — அண்ணா ஹசாரே] போல [பாண்டிய அரசு — கண்ணகி — கண்ணகிக்கு கோயில் கட்டும் சேர நாடு — சேர நாட்டு புலையர்குடியில் சன்னதம் கொண்டெழும் கன்னி]. செவ்வியல் மறுஆக்கங்களில், கம்பராமாயணம் எப்படி ஒரு உச்சமோ [3], அதுபோல நவீன மறுஆக்கங்களில் கொற்றவை ஒரு உச்சம். எழுத விரும்பும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய க்ளாஸிக் கொற்றவை.******பின்குறிப்பு :
    [1]. ஜெ., கொற்றவை எழுதுவதற்கு ‘பாலையில் கைவிடப்பட்ட கொற்றவை ஆலயம்’ என்ற படிமம் தூண்டுகோலாக இருந்தது என்கிறார். மார்க்குவஸ் தான் புனைவு எழுதுவதற்கும் படிமங்கள் (visual imagery) தூண்டுகோலாக இருக்கும் என்கிறார்.[2] சிலம்பிலும் கோவலன் அத்திரியில் பரிசுப்பொருட்களுடன் வந்து தன் குலதெய்வத்தின் பெயரை சூட்டியதாக மணிமேகலைதான் சொல்கிறாரே தவிர, கோவலனும் மாதவியும் சேர்ந்திருக்கும் பாடல்களில் மணிமேகலை பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. [கடல்கோளால் அழிந்த காகந்தி நகரின் கதை எதை குறிக்கிறது? காகந்தியும், மதுரையும் இருவேறு முகங்களா? அரசியல் பிழைத்தோர்க்கு கூற்றாவது போல, பெண்ணின் தனிமையும் துயரமும் நகரங்களை அழிக்கும் வல்லமை பெற்றதல்லவா? நண்பர்கள் யாராவது தெளிவுபடுத்தலாம்.][3]. தமிழில் எழுதப்பட்டுள்ள முதன்மையான செவ்வியல் மறுஆக்கம் கம்பராமாயணம். வால்மீகி ராமாயணத்தின் மையக் கதை ஒட்டி எழுதப்பட்டாலும், கம்பர், ராமாயண கதாப்பாத்திரங்களை உருமாற்றி, நிகழ்வுகளின் காலவரிசையை மாற்றி தன்னுடையை ராமாயணத்தை எழுதியிருக்கிறார். பேரிலக்கியங்களை மறுஆக்கம் செய்து பேரிலக்கியங்களை படைக்கும் மரபு தமிழில் இருந்திருக்கிறது. கம்ப ராமாயணத்தையும், வால்மீகி ராமாயணத்திலும் ஜடாயு, தாரை கதாப்பாத்திரங்கள் எவ்வாறு வேறுபடுகிறது என்று பார்க்கலாம்.

    ஜடாயு:
    [வால்மீகி] சீதையை கவர்ந்து சென்றபின், குற்றுயிராக கிடக்கும் ஜடாயுவை ராமன் காண்கிறான். “கழுகு வடிவில் இருக்கும் அரக்கனான ஜடாயு, சீதையை உண்டுவிட்டது. சீதை ஜடாயுவுடன் போராடியதால், ஜடாயுவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஜடாயுவை இப்போதே கொல்வேன்” என்று ஆர்ப்பரித்தபடியே ஜடாயுவை நோக்கி செல்கிறான் ராமன். ஜடாயு ராமனிடம் சரணடைந்து, ராவணன் கவர்ந்து சென்றது பற்றி தெரிவிக்கிறது. ஜடாயுவை தவறாக எண்ணியதை நினைத்து வருந்துகிறான் ராமன்.[கம்பன்] சீதையை கவர்ந்து சென்றபின், குற்றுயிராக கிடக்கும் ஜடாயுவை ராமன் காண்கிறான். சீதையை கவரும்போது, ஜடாயுவிற்கு துனையாக, ராவணனுடன் போரிடாமல் வேடிக்கை பார்த்ததற்காக, தேவர்களையும், முனிவர்களையும் முனிந்து அவர்களை தண்டிக்கப்போகிறேன் என்கிறான் ராமன். ஜடாயு, ராமனிடம், தேவர்களோ, முனிவர்களோ ராவணனை எதிர்த்திருந்தால், தனக்கு ஏற்பட்ட நிலையே ஏற்பட்டிருக்கும். தவறு தேவர்களிடமோ, முனிவர்களிடமோ இல்லை. சீதையை வனத்தில் தனியே விட்டுவிட்டு மானின் பின்போன உன்னிடத்தில். ஆகவே, உலகை பழிசொல்லவேண்டாம் என்று ராமனுக்கு அறிவுரை வழங்குகிறார். ராமன் தன் தவறை உணர்ந்து வருந்தி, ஜடாயுவை தன் தந்தை என்றே அழைக்கிறான்.வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக,
    கொம்பு இழை மானின் பின் போய், குலப் பழி கூட்டிக் கொண்டீர்;
    அம்பு இழை வரி வில் செங் கை ஐயன்மீர்! ஆயும் காலை,
    உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ?

    தாரை:
    மழைக்காலம் முடிந்தபின் சீதையை தேடத்தொடங்குவோம் என்று ராமனுக்கு தந்த வாக்குறுதியை மறந்து, கள்ளிலும், காமத்திலும் உழன்றுகொண்டிருக்கும் சுக்ரீவனை எச்சரிக்க லட்சுமனனை அனுப்புகிறான் ராமன். கிஷ்கிந்தையை நோக்கி மிகுசினத்தோடு வரும் லட்சுமனனை எதிர்கொள்ள தாரையை அனுப்பவேண்டும் என்கிறார் அனுமன்.[வால்மீகி] குறைஆடைகள் அனிந்து, வானரப் பெண்கள் சூழ, கண்கள் படபடக்க, இடை அசைந்தாட, உடைகள் நெகிழ, லட்சுமணனுக்கு அருகில் சென்று வணங்கி நிற்கிறாள் தாரை. வானர மகளிரால் சூழப்பட்டு, வெகு அருகில் நிற்கும் தாரையால் லட்சுமணன் வெட்கி கோபம் தனிகிறான். தாரை அவனிடம், சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டுகிறாள்.[கம்பன்] குறைந்த ஆடைகள் அணிந்த வானர பெண்கள் சூழ தாரை வருகிறார். வாலி இறந்ததால், மங்கல அணி, நகைகள் அணியாமல், குங்கும சந்தன குழம்புகள் பூசப்படாத மார்புகளும், பாக்குமரம் போன்ற கழுத்தும் மறையும்படி மேலாடை போர்த்தி வந்த தாரையை கண்டவுடன், லட்சுமணனுக்கு கணவனை இழந்த தன் தாய் சுமித்திரை நினைவுக்கு வர கண்கள் பனிக்கிறான். சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டியபின், லட்சுமணனிடம், “சீதையை தேடுவதற்கு, வாலியை கொன்ற அம்பும், வில்லும் போதாதோ? வேறு துணையும் வேண்டுமோ? தேவியை தேடுவதற்கு ஆட்கள் தேடுகிறீர்களே” என்று சொல்வதை கேட்டும் லட்சுமணண் நாணுகிறான்.….
    தார் குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான். 50
    …..
    மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து, வாசக்
    கொங்கு அலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம் கொட்டாப்
    பொங்கு வெம் முலைகள், பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
    நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நைந்தான். 51
    ……..
    ‘ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று ஆயின்,
    வேண்டுமோ, துணையும் நும்பால்? வில்லுனும் மிக்கது உண்டோ ?
    தேண்டுவார்த் தேடுகின்றீர், தேவியை; அதனைச் செவ்வே
    பூண்டு நின்று உய்த்தற்பாலார், நும் கழல் புகுந்துளோரும்.’ 58
    ……
    என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு,
    நன்று உணர் கேள்வியாளன், அருள்வர, நாண் உட்கொண்டான்,
    நின்றனன்;…59வெறும் கழுகாக இருக்கும் ஜடாயு, கம்பனில் ராமனுக்கு அறிவுரை கூறும் தந்தையாகிறார். ஆதிகாவியத்தில் காமவல்லியாக வரும் தாரை கம்பராமாயணத்தில் அன்னையாகவும், அறச்சீற்றம் மிக்கவளாகவும் வருகிறார்

  • Webinars @ PSG Tech

    [I gave these talks in June-July 2020. Took sometime to write as a post.]

    I got my bachelor’s degree in Information Technology (IT) from PSG College of Technology, Coimbatore, India in 2005 and Master’s degree in Computer Science from Georgia Institute of Technology, Atlanta in 2010. In my undergrad, I was a ‘nine pointer’- Indian English slang – which means, you score a cumulative GPA > 9.0 out of 10.0 – on all the courses whether you like it or not and a ‘class topper’, another slang, ie, sorted by exam grades you are in top 3 of your class. Scoring good grades helped me to get a software engineering internship at Cisco, Bangalore through the then Head of IT department, Dr S.Selvan. Paid internships were new then at PSG Tech (~2004) and I got paid Rs.6000 (equivalent to 150 USD) per month as stipend. I bought my first mobile phone with Cisco stipend, bought a mobile phone and silk saree for my parents as well. That was the first silk saree my mom got in a decade.

    My internship later got converted into a full time job offer. Exposure at Cisco helped me to apply for Masters at Gatech, Atlanta. I paid my first semester fee at Gatech with the three year salary earned at Cisco (around Rs.35,000 (~$875 USD) per month in 2005-2008 which was relatively high then in the Indian market for new grad.) I later found a research assistantship in a lab, which funded my remaining three semesters. I owe my initial career success to PSG Tech & IT department. I always wanted to help my undergrad college as alumni, but did not get the time before. To be honest, I had the time, but it was never a priority. The ongoing pandemic gave me the time needed to reflect on my priorities and as the wise words go, it’s better to start things small, otherwise time will fly by and you will never be able to do it.

    Through my friend Anand Ramesh, who was in touch with PSG Tech IT department throughout the 15 years since we graduated, I came to know about the alumni webinar series organized at the college. I initially planned to signup for one webinar, but ended up signing for two topics. First one on ‘Higher Studies’ and the another on ‘Startups’.

    I just started to practice my public speaking skills, so, if you have the patience to listen through my gap fillers like “like”, “ah’s”, “umm’s”, stutters and stammers, you can listen to them below:

    Higher Studies:

    Slides: https://docs.google.com/presentation/d/1-vb2kc9ZaRfVnuli-HZWGUAaN-JFovudahXMbI2HN00/edit?usp=sharing

    I will summarize the contents of the talk to save your time.

    Higher Studies:

    [The talk’s intended audience was students @ PSG Tech, India. But the content more or less applies to a wider audience.]

    I studied in 5 different schools, as my father got transfers every 3-4 years. I did my 10th std at Ramakrishna Vidyaalaya Matriculation HSS (RVM), Villupuram and did my 12th std from MSP Solai Nadar MHSS, Dindigul. RVM is an english medium matriculation school, while MSP is primarily a tamil medium government aided school under private management with few english medium sections. During my 12th std (2001), we had entrance exams for engineering and medical courses in Tamil Nadu. 300 was the total cutoff marks with TNPCEE exams accounting for 100 and 12th board exams accounting for 200 marks. The school fees at RVM is 5X more than MSP and the student quality is more or less same in both the schools and I used to get around 5th or 6th rank in both of them. Dindigul is twice as populous and wealthier than Villupuram. As most of them in Tamil Nadu know that PSG Tech is one of the top Engineering colleges in Tamil Nadu, let me ask a question: How many students joined PSG Tech from each of these schools in 2001?

    0 out of 200 students from RVM joined PSG Tech.

    8 out of 300 students, from MSP including me, joined PSG Tech.

    The numbers get even more skewed towards MSP, when you consider all the top engineering colleges & medical colleges in Tamil Nadu. What explains this puzzle ? A more expensive school with similar student quality could not send any student to colleges like PSG Tech. The numbers cuts across caste and class. The answer lies in the single word called ‘Ecosystem’.

    The teachers in MSP school knew how to crack TNPCEE. They had the last 10 year question papers of TNPCEE. As soon as our 11th grade exams were over, MSP teachers conducted private tuitions, where they started to coach students for TNPCEE. RVM students prepared for TNPCEE only after their 12th grade public exams. So, MSP students had a head start of 1 year over RVM students’ 1 month prep time. MSP teachers also had a feedback loop of how well their coaching is working, as year after year, more MSP students went to good colleges [1]. While MSP sent students to top engineering colleges in Tamil Nadu, no one went to IITs, as there was no exposure or coaching on how to crack IIT JEEs.

    A relative asked my “Why do we need to study abroad ? What do we not have in India?”. Many of my PSG batch mates are well settled in their life without doing any higher studies (in India & Abroad). Also, compared to 15 years ago, now a lot of well paying product companies and startups jobs are available in Indian cities – Bangalore, Hyderabad, Chennai, Pune, etc. So, you do not need to do higher studies for better job prospects, go abroad or earn wealth. Then why should one study abroad ? The only reason I would say is the “ecosystem” the top universities provide for research opportunities.

    Let us quickly look at the operational expense (Staff salaries, maintenance of hostel, library, cost of conducting Conference, workshops) etc for the year 2018-19:

    PSG Tech: ~$11M [One of the top engineering college in Tamil Nadu.]

    IIT Madras: ~$110 M [Ranked 1 in all of India]

    Georgia Institute of Technology: ~$1.6B

    I am just listing these numbers to highlight the difference in scale in terms of money and not on student quality. One of the primary reason for scale of Gatech is the research funding the institute and its faculty receive from the US Government agencies like NSF, etc. In India, research funding is primarily given to CSIR, HAL, DRDO, BARC and other central government research institutions. Few drops trickle down to Indian universities and colleges, which evaporate like morning mist. Another point is in top US universities, a professor will get a permanent job (‘tenure’) only if they attract certain amount of funds to the institutes. Professor’s salary are highly competitive as well – if not the FAANG salary levels, they are on-par with the industry. Well funded professors help top notch talented students to start their own companies. Prof.Steve Dickerson of Gatech gave the initial seed funding to Gatech grad students Aarjav Trivedi & Arun Elangovan, which helped them to found Ridecell, where I currently work for the past eight years. Another company is Pindrop, founded by Vijay Balasubramaniam, PhD graduate student at Gatech (who was my mentor at Gatech) and Prof.Mustaque Ahamad, who funded my graduate studies at Gatech. One can hope that the ‘Center of Eminence’ initiatives, potential “defense corridor” projects change the equation in India and send the research funds towards the colleges.

    My personal advice to any one who want to study abroad is to work for few years in India, figure out what you want to do, stay in touch with your classmates, even those who you ‘think’ are not your friends, because you can learn from the success and failures of everyone in your network. Some of my not-so-close friends in college, helped me shortlist my university applications, review statement of purpose, gave good guidance with respect to choosing the best university, helped in placement preps later and eventually became my best friends. From my side, all I have to do is to let go off my ego, acknowledge their smartness and ask for help.

    Startups:

    [Talk intended to Information Technology/Computer Science engineering college grads @ India ]

    Slides: https://docs.google.com/presentation/d/138282uMWaILZx7ydF3jLZjs58TjstXXAOjKYTcmWHOI/edit#slide=id.p

    My father is a mechanical engineer and works in a sugar factory as General Manager in Karnataka. For a long time (pre- IT boom), marine engineering jobs were one of the highest paid jobs in India. My father actually wanted to become a marine engineer, but my farmer grandfather overruled him stating that seafaring as a risky job. So, my father made my elder brother a marine engineer. Oh, why else will you have kids, if not for your dreams! My brother is a marine engineer, who works for Bernhard Schulte Ship management company. BSM is one of the largest ship management company in the world. Ship owners lease their ships to BSM. Brother works in contract mode, where he sails for 6-8 months a year, transporting iron ore and other natural resources from all parts of the world (Australia, Brazil, etc) to China.

    Sugar, shipping, oil, banking industries are what I call ‘old world Industries’. How much ever my father or brother worked hard in their lifetime, they will be only paid salaries and bonuses, but not stocks or equities. Forget about buying your own ship or building a sugar factory. Also, these industries are heavily regulated by government and entry barrier to start a business is very high. You need license, land, lots of money, etc. I simply call businesses / companies where the owners / founders are willing to share their wealth in terms of equity to their employees, as ‘New world industries’.

    I suggest to read Paul Graham’s essay on startups, mainly to highlight that every year thousands of cafes and barber shops are opened across the world, but not all entrepreneurship can considered startups. Once I was tricked by a frenemy to meet an IIT educated ‘entrepreneur’ in sweltering Chennai heat, who turned out to be a multi-marketing amway agent.

    Also, I want to put a disclaimer that in contrast to popular opinion, you will be financially better off (most of the time) to work in a well established company (FAANG, Salesforce, Paypal, etc) than to work in a startup. You will have a relatively stable, less stressful job. The common reasons on working in a startup are faster learning and career growth, even if your startup is not successful, your resume and future career prospects will be better. But the most important reason I think to work in a startup is it gives you space to try out your ideas. A friend of mine working in Google, Mountain View complained that his bosses are not listening to his ideas. He exactly knew why Google+ is failing compared to Facebook and how they can make Google+ win. I was telling him, well, Google became Google without your ideas in first place and they hired you not for ‘your ideas’, but to execute ‘their ideas’. If you really want to try your ideas, then quit Google, go find your own company or join a early stage startup, where you add value. He moved to Bangalore from Mountain View few years later and indeed quit Google to start https://crio.do with another friend, who worked in FlipKart.

    Working and starting a startup, brings back the concept of ‘Ecosystem’. Vasco Dagama, first European to find a sea route to India, didn’t wake up one day from sleep and sail to India straight away. It took multiple generations of Kings and Sea Farers, it is an ONE HUNDRED YEAR dream project to collectively find the sea route to India. Starting from Prince the Henry the Navigator time, Sailor Alvaro Fernandes reached Siearra Leone in 1446, Diago Cam reached Congo in 1482, Bartolomeu Dias circled the cape of good hope – 1488 and finally Vasco da Gama – reached India in 1498 and future seafarers sailed further east finding routes to South East Asia and Far East(Spice islands then). The successes and failures of each sailor, helped the next one to take a step forward. The present era venture capitalists are similar to those Kings and the entrepreneurs are akin to the sea-farers, with the architects, product managers, et.all to the sailing crew. FlipKart’s successful exit has created the startup ecosystem in Bangalore. Coimbatore has a good manufacturing and entrepreneurial base. Let’s hope that Coimbatore gets its own FlipKart sometime in the future.

    Notes:

    Thanks to Jacque Camie, Chief of Staff, Ridecell and Arun Gomathinayagam, Engineering Manager, NYTimes (and classmate at PSG Tech) on reviewing the content and listening through a dry run.

    For further reading on thoughts of improving Indian Universities, I recommend – ‘Institutions of Sand’ chapter in ‘Imagining India‘ by Nandan Nilekani. One of his ideas was to allow foreign universities to open up in India. Around 2010, Indian government relaxed regulations to allow foreign universities to setup shop in India. Georgia Tech had a plan to open a remote campus in Hyderabad, but postponed the idea when they learnt that they cannot transfer the money earned out of India back to US. I am not sure of the present state and I still think the top tech universities of the world (MIT, Harvard, Stanford, Berkeley, Gatech) should be allowed to setup remote campuses in India, the benefits far outweigh the monetary loss. Opening up of Indian economy in 1990’s did not wipe out Indian Industry as feared by titans of the industry then, but made them resilient and compete with the global corporations, improving the quality of product far better.

    As a counterpoint to the above arguments, the future of learning could turn out to be completely outside formal educational systems and become online / skill based learnings – ex: https://www.zohoschools.com/ or https://lambdaschool.com/ or https://byjus.com/us/ (of-course Zohoschools differ from others as the motives are different). ‘Universities are dead’ has been a favorite argument and the pandemic is fundamentally changing many of our assumptions and accelerating new ideas.

    I am currently working with quite a few smart folks, who are college dropouts and its been an humbling experience for me to learn from them that college degrees do not matter and changed my value systems forever – I hired 6+ college dropouts for my teams in SF & Pune and some of them turned out to be the best and in-turn are leading teams now in SF and Pune. (I will cover in separate topic).

    While, I welcome the new online learning institutes/newer systems with whole heart, many questions remain as how will the new systems scale, how do we find teachers in scale, provide best pedigree to the top students so they invent new things, incentivize faculty to start their own companies while teaching in parallel – provide market based pay, provide enough opportunities to everyone so we as a society are inclusive. My father studied in Tamil medium in school, scored 98 out of 100 in Math from his SSLC (11th grade) but he barely knew english, struggled in college (academically & financially) and literally scrapped through the college degree with minimum marks. Many in my extended family benefited from the reservation (affirmative actions) programs of Tamilnadu government, but me and my brother are well off and didn’t need affirmative actions. I do understand the fear of “commercializing” education, importance of affirmative actions, competitive space for everyone to thrive. My point here is, if the new online education systems scale, then many of the existing problems will resurface in a different way — much like centuries old plague, spanish flu and other epidemics re-surfacing after a hundred years in the new scientifically advanced world. So, I do think its important that we improve the existing formal education sector (universities / colleges) and the old & the new are not mutually exclusive. There are other important benefits like how students learn from one another much faster when they are under one roof, re-use the vast infrastructure we already have, etc.. More personal stories and my other thoughts in a later post.

  • அரூ கதைகள் குறித்து:

    அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளிவந்துள்ளன. என்னுடைய கதை வலசை இறுதிப்பட்டியலில் தேர்வானது குறித்து தனிப்பட்ட முறையில் மிக்க மகிழ்ச்சி. 

    தீவிர இலக்கியத்தில் அறிவியல் புனைவுகள் அடங்குமா? என்ற விவாதம் ஓய்ந்து இப்பொழுது அறிவியல் புனைவும் இலக்கியமே என ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் அறிவியல் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கிய ஒரு நிஜமான ஊகப்புனைவை விட எவ்வளவு நல்ல கதையாக இருந்தாலும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட கதைகளுக்கு அறிவியல் புனைவுகளில் இரண்டாம் இடமே. அதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. “வலசை” ஒரு வகையில் ஒரு தொழில்நுட்ப விந்தை கதைதான். அதே நேரத்தில் தொழில்நுட்ப கதைகள் ஒரு அறிவியல் புனைவு சூழலுக்கு அவசியம் என நினைக்கிறேன்.(வாசகர் பங்கேற்பு, கலைச்சொல் அறிமுகம்).

    தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான யுவன் சந்திரசேகர் நடுவராக இருந்து, மொத்தம் வந்த 94 கதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கதைகளை வாசித்து அவருடைய கருத்தை பகிர்ந்துள்ளார். போட்டி முடிவுகள் குறித்த அறிவிப்பும் ஜெயமோகன் தளத்தில் வெளிவந்துள்ளது. சென்ற ஆண்டு நடுவராக இருந்த சாரு அவருடைய கருத்தையும் கடுமையாகவே பதிவிட்டுள்ளார்

    பத்து வருடங்களாக கதை எழுத இருந்த தயக்கத்தை விட்டு நான் எழுதிய முதல் கதைக்கு யுவன் அவர்களின் கட்டுரையில் உள்ள ஒரு சிறு பாராட்டு குறிப்பு உற்சாகமூட்டினாலும், யுவன் வெளிவந்துள்ள கதைகள் குறித்து பொதுவாக கடுமையாகவே எழுதியுள்ளார். சுசித்ரா அவருடைய ப்ளாக்கில் ஒரு எதிர்வினை ஆற்றியிருக்கிறார். சுசித்ராவின் கருத்தில் எனக்கு பெரும்பாலும் உடன்பாடே.

    ஒருவருடைய முதல் கதையை ஒரு மொழியின் சிறந்த எழுத்தாளர்கள் வாசித்து கருத்து தெரிவிப்பதை ஆங்கில சூழலில் நினைத்துக்கூட பார்க்க முடியாது. கனத்த மௌனத்தை பதிலாக பெறுவதைவிட வேறு எவ்வகை எதிர்வினையும் நன்றே. அதன் பொருள் நாம் அந்த கருத்துக்கள் அனைத்தையும் ஏற்கிறோம் என்றல்ல, ஆனால் அந்த எதிர்வினைகளை பெறுவது முக்கியம். 

    யுவனுடைய கருத்தை ஒட்டி சில எண்ணங்கள்:

    1. கதைகளில் சொற்பிழைகள், இலக்கணப் பிழைகள் மலிந்துள்ளன: நான் கதையை google docs – spelling & grammar மட்டுமே உபயோகித்தேன். இப்போது தளத்தில் வாசிக்கும்போது பல சொற்பிழைகள் இருக்கின்றன. அடுத்தமுறை கதையை ஒரு சிறிய நண்பர் வட்டத்திற்கு முன்பே அனுப்பி உதவி கோருவது பயனளிக்கும் என்று நினைக்கிறேன். 

    2. ஜெயமோகனின் தாக்கம் மற்றும் வெண்முரசு நடையை நகல் செய்வது குறித்து:  யுவன் ஒரே கதையில் பற்பல நடையில் எழுதக்கூடியவர். யுவன் கதைகளே கதை மாலைகள் தான். சாருவும் அவருடைய பதிவில் இந்த குற்றச்சாட்டை கூறியிருந்தார் — “ஜெயமோகனே அனைத்து கதைகளையும் எழுதியது போல இருக்கிறது என”.  இதில் சில மாற்றுக் கருத்துகள் உண்டு. வலசை கதையில் சொற்கள், கதை தருணங்கள், நடை உட்பட வலுவான ஜெயமோகன் சாயல் உண்டு. அதில் உள்ள வீடியோ கேம் நடை வெண்முரசு நடை தான். வெண்முரசு போன்ற ஒரு மாபெரும் படைப்பு எழுதப்பட்டுள்ள சூழலில் அதன் தாக்கம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். டிராகன் என்ற சொல் வெண்முரசில் ‘சிம்மநாகம்’ என்ற புதிய சொல்லாக உள்ளது, அது எனக்குப் பிடித்திருக்கிறது. எதிர்காலத்தில் எழுதி, எழுதி ஒரு தனித்த நடையை அடைந்தாலும், வெண்முரசில் ஜெ. உருவாக்கியுள்ள சொற்களஞ்சியத்தை கண்டிப்பாக பயன்படுத்துவேன். யுவன் உங்கள் நண்பரின் நடையை நாங்கள் நகல் செய்வது குறித்த உங்கள் தார்மீகக் கோபம் புரிகிறது. ஆனால் ஒரு எழுத்தாளரின் நடை அடுத்த தலைமுறையை ஆள்கிறது என்பது அவருக்கு பெருமைதானே? பாரதி, சுஜாதா என அவர்களின் அடுத்த தலைமுறையின் நடையை பெரிதும் மாற்றியமைத்த மாஸ்டர்கள் தமிழில் தொடர்ந்து உண்டல்லவா ?

    மேலும் வெண்முரசு வரை ஜெயமோகனுடைய அனைத்து படைப்புகளையும் வாசித்துள்ளேன். அவருடைய ஆரம்பகால கதையான “நதி” அசோகமித்திரன் பாணியிலான நடை; படுகை, மாடன் மோட்சம் ஒரு நடை என்றால், விஷ்ணுபுரம் வேரொன்று; “காடு”, “பின் தொடரும் நிழலின் குரல்” வேறு வகை; ஆனால் கொற்றவையும், வெண்முரசும் உருவாக்கிய நடை அதுவரை இருந்த நடைகளை விட முற்றிலும் புதிதல்லவா? சில ஆண்டுகளுக்கு முன்பு விவேகானந்தர் குறித்த ஒரு கட்டுரை தமிழ் இந்து நாளிதழில் வெளியாகி இருந்தது.  விவேகானந்தரின் உபநிடத வரி – “Arise, awake and stop not till the goal is reached” தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது. இவ்வரியின் வழமையான மொழியாக்கம் “எழுமின், விழிமின், காரியம் கைகூடும் வரை ஓயாது செல்மின்” ஆனால் அந்த கட்டுரையில் “எழுக! விழித்தெழுக! குறிக்கோள் வரை ஓயாது செல்க!” என்று இருந்தது. “எழுக! விழித்தெழுக!” என்ற இரு சொற்களிலேயே அந்த கட்டுரை ஜெயமோகன் எழுதியது என்று கண்டு கொண்டேன். (ஆசிரியர் பெயர் கட்டுரையின் அடியில் கொடுக்கப்பட்டுள்ளது). அந்த இரு சொற்களில் ஜெயமோகனின் கையொப்பம் உள்ளது. தனக்கென ஒரு தனித்த நடையை உருவாக்குவதே எந்த ஒரு எழுத்தாளனின் கனவல்லவா? ஆனால் அதை எழுதி எழுதித்தான் அடையமுடியும் என்றே நினைக்கிறேன்.

    உங்கள் நேரத்திற்கும், கருத்துக்களுக்கும் நன்றி யுவன். மேலும் சிறந்த கதைகளை எழுத அவை உதவும். இரண்டு நாட்களாக உங்கள் கருத்தை ஒட்டியே சிந்தித்துக்கொண்டிருந்ததில் அரூவில் வெளிவந்துள்ள மற்ற கதைகளை இன்னும் வாசிக்கவில்லை. மற்ற கதைகள் குறித்து தனித்த பதிவில். நண்பர்கள் கதைகளை வாசித்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.

  • வலசை [கதை]

    அரூ இனைய இதழில் வந்துள்ள என் முதல் கதை.

    பெரும் பிளவைப் பாதுகாத்த சிம்மநாகத்தையும், பறக்கும் மதகரியையும் அழித்து முன்னேறினான் அதிரதி அக்காடியன். அவனுடைய குறளர் படை வடம் பிடித்து இழுத்து, வெறித்த விழிகளுடன் நின்றிருந்த சதுக்கபூதத்தைக் கீழே சரித்தது. 

    [மேலும் படிக்க]

  • மாயன் நாகரிகம் – பயணக் கட்டுரை – பாகம் – 5

    உஷ்மாலிலிருந்து கிளம்பி கம்பச்சே சென்றோம். யுகாட்டனிலேயே வளம்மிக்க ஊராக கம்பச்சே இருக்கிறது. 1700களில் கரீபிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி கம்பச்சேவை தாக்கி சூரையாடியுள்ளார்கள். ஊருக்கு வெளியே கண்கானிப்பு

    கம்பச்சே கரகாட்டம்

    கோபுரம் கட்டப்பட்ட பின் கடற்கொள்ளையர்கள் கட்டுப்படுத்தப்பட்டார்கள். நாட்டுப்புர நடனம் ஒன்றை பார்த்துவிட்டு, குரங்கு விடுதி (தங்குபவர்கள் குரங்கா ? நடத்துபவர் குரங்கா ?)  என்ற மாணவர் விடுதியில் இரவு தங்கினோம். அங்கு கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த சக பயணி ஒருவனை சந்தித்தோம். வட அமெரிக்காவின் வடகோடியான அலாஸ்காவில் தொடங்கி, தென் அமெரிக்காவின் தென் கோடி வரை, ஆறு மாதங்களில் பயணம் செல்வது அவன் திட்டமாம். (நினைச்சாலே மூச்சு முட்டுது…யாருடா நீங்கெல்லாம் ?)  ‘பத்திரமா போய்ட்டு வா ராசா’ என்று அவனுக்கு விடை கொடுத்துவிட்டு செட்டுமால் நோக்கி புறப்பட்டோம்.

    கம்பச்சே – செட்டுமால் கிட்டத்தட்ட 500 கிலோமீட்டர் தொலைவு. காலையில் கிளம்பி, இரவில் செட்டுமால் செல்வதுதான் அன்றைய திட்டம். கார் ஓட்டப்போவது அருண், அதனால் எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. வழியில் எந்த ஊரையும் பார்க்கும் திட்டம் இல்லை. கலக்மூல் காடுகள் வழியில் உள்ளன. இந்தக் காடுகள் மெக்ஸிக்கோவின் கம்பச்சே மாகானத்தில் தொடங்கி, குவாத்தமாலா நாட்டின் பீட்டன் மாகானம்வரை பரவியுள்ளது. கலக்மூல் மாயாக்களின் சங்க காலத்தை (ஐந்தாம் நூற்றாண்டு) சேர்ந்த ஊர். சங்க கால சோழ – பாண்டியர்களைப் போல, கலக்மூலுக்கும், சில நூறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் (தற்போது, குவாத்தமாலா நாட்டிலுள்ள) திக்காலுக்கும் எப்போழுதும் தீராப் பகை. கலக்மூல் எங்கள் பயண திட்டத்தில் இல்லை. இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், போய் பார்ப்போம் என்று சென்றோம். மதிய வேளையிலே, சுற்றியிருந்த அடர் காடுகளால், இருட்டத் துவங்கிவிட்டது. மாயா பிரமிடுகளிலே உயரமான (145 அடி உயரம்) பிரமிட் கலக்மூல் பிரமிட். ஆறாம் நூறாண்டில் கட்டப்பட்டது. அதிக நேரம் செலவிடவில்லை. (காடு ஒரு பீதியை உண்டுபன்னத்தான் செய்கிறது). செட்டுமாலுக்கு இரவு வந்து சேர்ந்தோம்.

    கலக்மூல் பிரமிடுகள்

    மெக்ஸிக்கோ விசா வாங்கச் செல்லும் போது, அண்டை நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மெக்ஸிக்கோவின் மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று விசா கொடுத்த அம்மாள் அறிவுருத்தினாள். கலக்மூல் காடுகள் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு இடம். அவள் சொல்லியதன் தீவிரம் அப்போது எங்களுக்கு புரியவில்லை. நாங்கள் சென்று வந்த சில மாதங்களில், கலக்மூல் காடுகள் வழியாக, இருநூறு பேர் கொண்ட ஒரு போதை மருந்து கடத்தல் கும்பல் (லாஸ் ஜீட்டாஸ்), குவாத்தமாலாவின் பீட்டனுக்கு சென்று, போதை மருந்து கடத்தலுக்கு உடன்படாத முப்பது விவசாயிகளை கொடூரமாக கொன்றுவிட்டது. மெக்ஸிக்கோவின் தற்போதைய பெரிய பிரச்சனை போதை மருந்து குழுக்களிடையே நடைபெறும் அதிகாரச் போர்கள் (Gang Wars). இவற்றை சமாளிக்க முடியாமல் லத்தீன் அமெரிக்க நாடுகளின் ராணுவங்கள் திணறுகின்றன.  வருடந்தோறும், ஆயிரக்கணக்கில் மக்கள் இச்சண்டைகளில் மடிகிறார்கள்.

    அமெரிக்காதான் உலகிலேயே பெரிய போதை மருந்து கன்ஸ்யூமர் மார்கட். அமெரிக்காவிற்கு போதை மருந்து கடத்துவதற்கு இரண்டு வழிகள் இருந்தன. கரீபிய தீவுகள் வழியாக, கடல் மார்கமாக கடத்துவது ஒரு வழி. மெக்ஸிகோ – அமெரிக்கா எல்லை வழியாகக் கடத்துவது இன்னோரு வழி. கரீபியத் தீவின் போதை மருந்து குழுக்களை அமெரிக்கா அழித்துவிட்டது. மிச்சம் இருப்பது மெக்ஸிக்கோ தான். மெக்ஸிக்கோவின் போதை மருந்து குழுக்கள் தங்களுக்கென தனி ஆயுதப்படைகள் வைத்திருக்கின்றன (இதில் பலர் முன்னாள் ராணுவ சிறப்புப் படையை சேர்ந்தவர்கள்). மெக்ஸிக்கோவின் ராணுவத்தை எதிர்க்குமளவிற்கு அவை ஆயுத / பண பலம் பொருந்தியவை. இவை தவிர காசு கொடுத்தால், அவர்களுடன் இனைந்து போரிடும் கூலிப்படைகளும் உள்ளன. மெக்ஸிக்கோ அரசு, போதை குழுக்களை அழிக்க, அமெரிக்கா தன படையை அனுப்ப வேண்டும் என்று கெஞ்சுகிறது. (அமெரிக்காவில் சட்டப்படி கஞ்சா, பாப்பி செடிகளை வளர்க்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது). நாங்கள் சென்ற எல்லா ஊர்களிலும் எங்கள் காரை நிறுத்தி சோதனையிட்டார்கள். எங்கிருந்து வருகிறோம், எங்கு செல்கிறோம் போன்ற விவரங்களை கேட்பார்கள். சொல்வோம். அதற்குமேல் கேட்டால், ஸ்பானிய மொழி தெரியாததால் முழிப்போம். ‘போங்க’ என்று அனுப்பிவிடுவார்கள்.

    நான் அமெரிக்காவில் மூன்று வருடமாக இருக்கிறேன். இதற்கு முன் இத்தாலியில் ஒரு மாதம் வேலை நிமித்தமாக, தங்கியிருந்தேன். இந்த இரண்டு நாடுகளிலும், அங்குள்ளவர்கள் நிறைய இந்தியர்களை பார்த்திருக்கிறார்கள். நான், அலுவலகங்களில் வேலை செய்பவர்களுடன் நிறைய இந்தியாவைப் பற்றி பேசியிருக்கிறேன் என்றாலும், அறிமுகம் இல்லாதவர்கள், பொதுவாக என்னை கண்டுகொண்டதில்லை. தெருவில் பார்ப்பவர்கள், பல சமயம் புன்னகையோடு கடந்து சென்றுவிடுவார்கள். (இத்தாலியில் எதிர்மறை அனுபவம் உண்டு). ஆனால், மெக்ஸிக்கோவில் கிடைத்த வரவேற்பு இதற்குமுன் நான் கண்டதில்லை.  மெக்ஸிக்கோவில் இந்தியர்களை மிகக் குறைவாகப் பார்த்திருக்கிறார்கள். அதனால், நிறைய இடங்களில் எங்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். சில இடங்களில் ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டார்கள். (தற்காலிக) பச்சை குத்திக்கொள்ள, அவர்கள் பெயரை தமிழில் எழுதித் தந்தேன். சீனாவிலும் நிறைய பேர் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள் என்று நன்பர் ஒருவர் சொல்லியிருக்கிறார். உலகில், இந்தியர்கள் அதிக அளவில் போகாத இடம் குறைவு. அங்கேல்லாம் சிறப்பு வரவேற்பு/ விருந்தோம்பல் மிச்சம் இருக்கிறது. [அது கண்டிப்பாக பணக்கார மேற்கத்திய நாடுகளில் இல்லை].

    அருணுடைய ரசிகர் பட்டாளம்.

    லால்துன் குகை முன்பு, ஒரு பெண்மணி, ஒரு கருப்பு துண்டை என்னிடம் நீட்டினார். நான், ஏதோ விற்க வருகிறார் என்று நினைத்து, எனக்கு வேண்டாம் என்றேன். மீண்டும், இரண்டு முறை வந்தார். அவருக்கு, தலைப்பாகை கட்டிவிடச் சொல்கிறார் என்று புரிந்தது. இந்தியர்கள் என்றால் தலைப்பாகை கட்டியிருப்பார்கள் என்று எப்படி தோன்றியதோ தெரியவில்லை. (மன்மோகன் சிங்கை செய்திகளில் பார்த்திருக்கலாம்). கையில் வைத்திருந்த பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து, இந்தியாவைப் பற்றி விளக்குவதை ஒரு கலையாகவே கற்றுக்கொண்டேன். நம் ருபாய் நோட்டில் உள்ள பல்வேறு மொழிகளின் வரி வடிவங்களே, இந்தியா ஒரு பன்மைச் சமூகம் என்றுணர்த்த ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவ்வரி வடிவங்களில், தமிழைக் காட்டி, இது, என் மொழி என்று சொல்வதில், எனக்கு ஒரு தனி பெருமை. [ஆர்வமாக கேட்பது போல தோன்றினால் ‘கல்தோன்றி மண்தோன்றா’ பெருமைகளை விளக்காமல் விடமாட்டேன்). இந்திய ரூபாய் நோட்டை பார்த்தவுடன் காந்தி தாத்தாவை எல்லோரும் அடையாளம் கண்டுகொண்டார்கள். (உஷ்மாலில், ஒரு பதின்பருவ குழு, எங்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு, ‘காந்தீ’, ‘இந்தியா’ என்று கத்தியது). பயணத்தின் போது, செட்டுமால் என்ற ஊரில் தங்கினோம்.  ‘ஹீரோஸ் அவென்யூ’ (Heroes Avenue) என்ற தெருதான் அவ்வூரின் முக்கியத் தெரு. அதில் பிரிந்த பத்து குட்டித் தெருக்களுக்கு பல்வேறு உலகத் தலைவர்களின் பெயரைச் சூட்டியிருந்தார்கள். அதில், ‘காந்தி’ தெருவும் ஒன்று. உலகத் தலைவர்கள் பெயரை வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றியிருக்கிறதே..அதிலும் , காந்தி பெயரை சூட்ட வேண்டும் என்று தோன்றியிருக்கிறதே… இத்தனைக்கும் செட்டுமால் என்ற ஊர், சுற்றுலா நகரம் இல்லை. மிகச் சின்ன ஊர். காந்தி, உலகத்தின் மூலையில், ஏதோ ஒரு பெயர் தெரியாத ஊரின், மக்கள் மனதில் வாழ்கிறார் என்று உணர்ந்த போது, காந்தியையும், செட்டுமாலையும் நினைத்து பெருமைப்பட்டேன். (ஒப்புனோக்க, நம் ஊரில், இந்தியத் தலைவர்கள் பெயர்களைத் தவிர உலகத் தலைவர்கள் பெயரை தெருக்களுக்கு சூட்டியுள்ளோமா என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், உள்ளூர் கவுன்சிலர் மறைந்தவுடன் அவர் பெயர் சூட்டப்பட்டுவிடும் ).

    காந்தி தெரு – செட்டுமால்

    செட்டுமாலுக்கு அருகிலிருந்த மஹவால் என்ற கடற்கரைக்குச் சென்றோம். நீல நிற கரீபியக்கடல். பவழப் பாறைகளையும், பல வண்ண மீன்களையும் பார்க்க ஸ்கூபா டைவிங் (ஆழ்கடல் நீச்சல்) செய்தோம். முதல் முறையாதலால் பயம் எனக்கு. கடலில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கட்டிக்கொண்டு குதித்தது வித்தியாசமாக இருந்தது. குதிக்கும்போதே அருணுடைய முகமூடியை தட்டிவிட்டுவிட்டேன். கண்ணாடி போடாததால், தொலைவில் இருந்தது ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. கொஞ்சம் ஏமாற்றம்தான்.

    துலும் தீம் பார்க்

    துலும் என்ற கடற்கரை ஊர் மாயர்களின் முக்கிய துறைமுக நகரம். துலும் சென்று பார்த்தால், தீம் பார்க்கிற்கு உரிய அனைத்து அம்சங்களுடன், ஏதோ கிஷ்கிந்தாவுக்கோ, மாயாஜாலுக்கோ போனது போல இருந்தது. அங்கிருந்த கூட்டத்தை பார்த்து பயந்து, துலும் பிரமிடை பார்க்காமலே கிளம்பிவிட்டோம்.  துலுமிலிருந்து கேன்கூன் கடற்கரை வரை மாயா ரீவேரா என்று அழைக்கப்படுகிறது. நூறு கிலோ மீட்டர் நீளமுள்ள மிக அழகான நீல நிற கடற்கரை. ஆனால், முழுக்க முழுக்க தனியார் வணிக சுற்றுலா நிறுவனங்களால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. ரிசார்ட்டுகளுக்குள் நுழையாமல், கடற்கரைக்கு போகவே முடியாது. தொலைவிலிருந்தே வேடிக்கை பார்த்துவிட்டு, விடுதிக்கு திரும்பினோம். மறுநாள் காலையில் கேன்கூனிலிருந்து கிளம்பி அட்லாண்டவிற்கு வந்து சேர்ந்தோம்.

    நாங்கள் இதுவரை பார்த்த ஊர்களில்,

    கலக்மூல் – சங்க காலம்

    சிச்சன் இட்சா, உஷ்மால் – பிந்தைய சங்க காலம்

    மெரிடா, கம்பச்சே, செட்டுமால் – ஸ்பானிய ஆக்ரமிப்பு கால கட்டம் / தற்காலம்

    கேன்கூன் –  தற்காலம்.

    ஒரு கலாசாரத்தை உள்வாங்க பத்து நாள் போதாதுதான் என்றாலும், எனக்கு மிக நிறைவான பயணமாக அமைந்தது. என்றோ ஒருநாள், மாயாக்களை அவர்களுக்கு உண்டான உரிய மரியாதையுடன், முறையான ஆராய்ச்சியில் , அவர்களின் ஞானத்தை, தத்துவத்தின் ஆழத்தை, கலாச்சாரத்தை உலகம் உணர்ந்துகொள்ளும். [ இதை மேலை நாட்டினர் செய்ய முடியாது. செவ்விந்தியர்களாலோ,  கீழை சிந்தனையாளர்களாலோதான் செய்ய முடியும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை].

  • மாயன் நாகரிகம் – பயணக் கட்டுரை – பாகம் – 4

    தமிழர்களுக்கு சோழப் பேரரசு இருந்தது போல, மாயா நிலப்பகுதிகளை உள்ளடக்கிய பேரரசு என்று ஒன்று இல்லை. பண்டைய கிரேக்கர்களின் ஸ்பார்டா, ஏதன்ஸ் போல, ஒவ்வோரு மாயா ஊரும் ஒரு தனி நாடு. அவற்றுள், சிச்சன் இட்சா (chichen itza),  உஷ்மால் (uxmal), மாயப்பன் (mayappan) என்ற மூன்று ஊர்-அரசுகளும் பெரியவை. உஷ்மால் இளவரசியை மாயப்பன் அரசனுக்கு மணமுடிக்க இருந்தனர். ஆனால், அவளை சிச்சன் மன்னர் கடத்திச் சென்று களவு மணம் செய்து கொண்டார். பெண் கடத்தலை ஒரு சாக்காக வைத்து, உஷ்மாலும் மாயப்பனும் கூட்டுச்சேர்ந்து சிச்சன் மேல் போரிட்டு அழித்துவிட்டனர். (பெண்னைக் கடத்தி, அதன் விளைவுகளால் அழிந்த இலங்கை, ட்ராய் வரிசையில் சிச்சனையும் சேர்த்துக் கொள்ளலாம்). மேலே சொன்ன கதை, உஷ்மால் ஒலி ஒளி காட்சியில் சொன்னார்கள். அது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், ஸ்பானியர்கள் வருகைக்கு முன்பே, சிச்சன் கைவிடப்பட்டுவிட்டது. ஸ்பானியர்கள் வரவுக்குப்பின், உஷ்மால் அவர்களுடன் சேர்ந்து, மாயப்பன்னை அழித்தது. பின்பு, ஸ்பானியர்கள் உஷ்மாலை அழித்தனர். உஷ்மாலிலிருந்து தப்பிய மாயாக்கள் அருகிலுள்ள லால்துன் குகைகளில் பதுங்கினார்கள். அங்கும் வேட்டை தொடர்ந்தது. எல்லா மாயா ஊர்களும் கைவிடப்பட்டு, ஸ்பானியர்கள் உருவாக்கிய நகரங்களுக்கு மாயாக்கள் அடிமைகளாக கொண்டுசெல்லப்பட்டார்கள். மாயாக்களின் பிரமிடுகள், கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, மெரிடா, கம்பச்சே நகரங்களில் தேவாலயங்கள், மதில்சுவர்கள் கட்டப்பட்டன (இந்த கதைய எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே?). முந்நூறு வருடங்கள் கவனிப்பாரற்று கிடந்த மாயா நகரங்கள், 1840 களில், தொல்லியலாய்வாளர்களால் ‘கண்டுபிடிக்கப்பட்டது’. தற்போது, யுனஸ்கோ நிதி உதவியுடன், மீண்டும் புணரமைக்கப்பட்டுள்ளது.

    லப்னா தோரணவாயில்

    Puuc என்ற மாயா வார்த்தைக்கு ‘மலை’ என்று அர்த்தம்.  மெரிடாவிலிருந்து மாயாக்களின் மலை பிரதேசத்திற்கு சென்று மலை வழியில் (Ruta Puuc) உள்ள மாயா ஊர்களை பார்ப்பது திட்டம்.  லால்துன் குகைகள், காபா, சாயில், லப்னா, உஷ்மால் என்று பல முக்கிய ஊர்கள் மலை வழியில் உள்ளன. உஷ்மாலைத் தவிர மற்ற இடங்களை முதல் நாளிலும், உஷ்மாலை அடுத்த நாளும் சென்று பார்த்தோம். லால்துன் குகைகளுக்குள் டூர் அழைத்துச்சென்றார்கள்.  லப்னா, சாயில் போன்றவற்றை கண்டு ரசித்தோம் என்றால், உஷ்மாலைக் கண்டு பிரமித்துவிட்டோம். பிரமாண்டமான பிரமிடுகளும், தோரண வாயில்களும், மதில் சுவர்களும் ஒரு தீவிர மன எழுச்சியை ஏற்படுத்தியது. இந்த ஊரைப் பார்த்தவுடன் எனக்கு ஹம்பி நினைவுக்கு வந்தது. இடிந்த வழிபாட்டு மையங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், கணக்கற்ற வரலாற்றுச் சின்னங்கள்…  நிறைய கட்டிடங்களில் இன்னும் புதர் மண்டிக் கிடக்கிறது. நிதிப் பற்றாக்குறை என்றார்கள்.  அங்கிருந்த கட்டிடங்கள் எதற்கு பயன்பட்டன என்று தெரியவில்லை.

    உஷ்மால் பிரமிட் முன் அருண்

    ‘உன் முன்னோர்கள் முட்டாள்கள், உன் மதம் ஒரு காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கை, உன் மொழியில் இலக்கியமே இல்லை, உங்களுக்கு மீட்பே எங்கள் மூலமாகத்தான்’ என்று திரும்பத் திரும்ப நம்மை நம்ப வைக்க ஆங்கிலேயன் முயல்கிறான். அதில் அவன் வெற்றியடைந்தால், அதன்பின் நாம் வெறும் நடைபிணம். அந்த நாளில் நாம் முற்றாக அடிமைப்படுத்தப்பட்டுவிட்டோம் என்று அர்த்தம்.’ – விவேகானந்தர்

    உஷ்மாலைப் பார்க்கும்போது, அவன் இங்கே வென்றுவிட்டான் என்று தோன்றுகிறது. கல்லும், கட்டைகளும், வில்லும் வைத்திருந்த மாயாக்கள், துப்பாக்கிகள் வைத்திருந்த ஸ்பானியர்கள் முன் என் செய்திருக்க முடியும் ? கூட்டம் கூட்டமாக பூச்சிகளைப் போல அழித்தொழிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையேல்லாம் பார்க்கும் போது, அறம் என்று ஒன்று இருக்கிறதா? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? என்ற தோன்றுகிறது.

    ‘நாம கூட்டம் ஜாஸ்தி மச்சி, இல்லேன்னா, வெள்ளக்காரன் காலி பன்னியிருப்பான்’ என்றார் அருண். உண்மைதான். ஒரு கற்பனைக்கு, மதுரை, தஞ்சை எல்லாம் சூறையாடப்பட்டு, நம் மக்கள் மெட்ராஸுக்கு அடிமைகளாக கொண்டுசெல்லப்பட்டால் எப்படி இருந்திருக்கும் ? மதுரையை மீண்டும் ‘கண்டுபிடித்து’ ஆங்கிலேயன் வரலாறு எழுதினால் ‘ உயரமான டவர்கள் இருக்கிறது, எதற்கு என்று தெரியவில்லை. டவரில் நிறைய பொம்மைகள் இருக்கிறது. மன்னர்களுக்கு  பிடிக்காதவனை மேலே இருந்து தள்ளி விடுவார்களாயிருக்கும், அதற்கு ஒன்று போதுமே, எதற்கு நாலு டவர்? கட்டிடங்கள் கட்டுவதற்குமுன், போர்களுக்குமுன் நரபலி குடுத்துள்ளார்கள், கோயில்களில் குளங்கள் உள்ளன. அதில் பக்தர்களில் நாலு பேரை தள்ளிவிட்டு, மீண்டு வருபவர்கள் குறிசொல்லிகளாகி இருப்பார்கள், உச்ச கட்ட கேவலம், இவர்கள் ஆண் குறிகளை வணங்குகிறார்கள். குழந்தை பிறப்பதற்கு ஆண் குறி காரணம் என்று கண்டுபிடித்ததால் இருக்கும்..”

    திகம்பரர்களையும், அகோரிகளையும், நாகா சாதுக்களையும் அவர்களுடைய ஞானம் / தத்துவம் எதுவுமே தெரியாமல், வெளியிலிருந்து வேடிக்கை பார்த்தவனிடம் அவர்களைப் பற்றி கேட்டால் என்ன சொல்வானோ, அதே மாதிரி ஒரு கருத்துதான் மாயாக்களைப் பற்றி பரப்பியுள்ளார்கள் (அப்போகலிப்டோ படம் ஒரு நல்ல உதாரணம். முடிந்தால்  ‘Other Conquest’  பாருங்கள்.) மாயாக்களுக்கு என்று ஒரு சிந்தனை இருந்திருக்குமே, அவர்கள் கண்டுணர்ந்த ஞானம் இருந்திருக்குமே, எல்லாம் மண்ணோடு மண்ணாய் போய்விட்டதோ? மாயாக்கள் பல்வேறு துறைகளில் அடைந்த உயரங்களை மீண்டும் அடைய மனித குலத்திற்கு எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை. உஷ்மாலை பார்க்க வரும் இன்றைய செவ்விந்தியப் பழங்குடிகளைத் தவிர, வெள்ளையர்கள் எத்தனை பேர் இவற்றை உணர்கிறார்கள் என்றே தெரியவில்லை.

    உஷ்மால் நகரம்

  • மாயன் நாகரிகம் – பயணக் கட்டுரை – பாகம் – 3

    சிச்சன் இட்சாவிலிருந்து கிளம்பி மெரிடா வந்து சேர்ந்தோம். மெரிடாவில் முகுய் என்ற விடுதியில் தங்கினோம். அடுத்த மூன்று நாட்கள் இங்குதான் வாசம். விடுதி உரிமையாளர் பாட்டி ஒரளவு ஆங்கிலம் பேசினார். அவரும், அவருடைய மகளின் குடும்பமும் விடுதியின் கீழ் பகுதியில் தங்கியிருந்தனர். மேல் மாடி முழுவதும் அறைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். அவர்களின் வீடு ஊரின் நடுவில் அமைந்திருந்தது . ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்த குடும்பமாக இருந்திருக்க வேண்டும். வரவேற்பு மேசையில், அவருடைய விருந்தோம்பலையும், விடுதியையும் மெச்சி அனுப்பட்ட கடிதங்களை ஒட்டிவைத்திருந்தார். பத்து, பதினைந்து வருடங்கள் பழைய கடிதங்களில் இருந்து ஐந்து வருடங்களுக்கு முந்தைய கடிதங்கள் வரை ஒட்டிவைத்திருந்தார். இமெயில் காலத்தில் யார் கடிதம் எழுதுவார்களோ தெரியவில்லை. கடிதங்கள் ஓவ்வொன்றும் அவருடைய நினைவு நூலகத்தின் catalogue index என்று எண்ணிக்கொண்டேன்.  அதே விடுதியில் ஒரு பிரெஞ்சு பாட்டி தங்கியிருந்தார். அங்கே குளிரைத் தவிர்ப்பதற்காக இங்கு இரண்டு மாதங்கள் தங்கியிருக்கிறேன் என்றார். பேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, ஏதேதொ கதை சொல்ல ஆரம்பித்தார். அவர் அருகில் நிற்கும் போதே ஒரே சாராய வீச்சம். சிறிது நேரம் கழித்து அவரிடமிருந்து கழன்றுகொண்டோம். மூப்பும், தனிமையும் மனிதனை மீண்டும் குழந்தைகளாக்கிவிடுகின்றன போலும். ஆனால் குழந்தைகளைக் பார்க்கும்போது வரும் உற்சாகம், முதியோர்களைப் பார்க்கும் போது வருவதில்லையே ஏன்? பேசியே கொல்வார்கள் என்பதாலா? இருக்காது.. இளமை நீடிக்காது, நாமும் ஒரு நாள் மூப்படைவோம் என்ற உண்மையை உணர்வதால் இருக்கலாம்.

    ஏழு பொம்மைகள் கோயில்

    ஜிபில்சால்துன் (Dzibilchaltun) ஒரளவு பெரிய மாயா ஊர். அங்கு செல்லும் போதே மதியமாகிவிட்டது. மறுநாள் கிறிஸ்துமஸாதலால், மூன்று மணிக்கே மூடிவிடுவோம் என்றார்கள். ஏழு பொம்மைகள் கோயில் (Temple of Seven Dolls) தான் இங்கு பார்ப்பதற்கு ஒரு பெரிய கட்டிடம். நாங்கள் சென்ற எல்லா மாயா ஊர்களும் கைவிடப்பட்டிருந்த ஊர்கள். முக்கால்வாசி இடங்களில் உள்ள புராதான இடங்கள், கட்டடங்கள் எதை குறிக்கின்றன என்றே தெரியவில்லை. இந்த பொம்மைகள் (!!) கோயில், யாரால் கட்டப்பட்டது, அந்தச் சிலைகள் எதன் குறியீடு, ஒரு தகவலும் இல்லை. கிரகங்களுக்கு உரிய கோயிலாக இருக்கலாம், மாயாக்கள் வாழ்ந்துணர்ந்த விழுமியங்களுக்கு கொடுத்த வடிவங்களாக இருக்கலாம் (அஷ்ட லட்சுமிகளோ, சப்த கன்னியர்களோ)  என்று நாங்களாக நினைத்துக்கொண்டோம். சம இரவு நாளன்று, இக்கோயிலின் வாசலும், சூரியனும் ஒரே நேர்கோட்டில் தெரியும் என்றார்கள். அங்கிருந்த சினோட்டில் ஒரு கூட்டம் குளித்துக்கொண்டிருந்தது. சிறிது நேரம் சுற்றிவிட்டு, மீண்டும் மெரிடாவிற்கு திரும்பிவிட்டோம்.

    ஏழு பொம்மைகள் கோயில் – சம இரவு நாளில்.

    மெரிடா, ஊருக்கு நடுவே ஒரு பெரிய தேவாலயம், அருகிலெயே கவர்னர் மாளிகை, அதைச்சுற்றி ஒரு பூங்கா, என்று வழக்கமான ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்ட நகரம். வரிசையாக குதிரை வண்டிகள் சுற்றுலாப் பயணிகளுக்காக காத்துக்கொண்டிருந்தன. குறுகிய சாலைகள் அனைத்துமே எண்களால் அடையாளப் படுத்தப்பட்டிருந்தது. (காந்தி, நேரு, காமராஜ் மாதிரி உங்களுக்கு தலைவர்கள் இல்லையா?) அதுபோலவே, தெருவுக்குத் தெரு, இயற்கை உபாதையை சுட்டிக்காட்டும் (நன்றி : நாஞ்சில் நாடன்)  சிலைகளும் இல்லை. (என்ன கலாச்சாரமோ.. அடபோங்கப்பா).  இரவு ஏழு மணி வாக்கில், தெருக்களில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு,  தெருவே, மக்களின் ஆடல், பாடல்களுக்கான மேடைகளாயின. பல இடங்களில், தெருவோர இசைக்கலைஞர்கள், உற்சாகம் கொப்பளிக்க, லத்தீன் அமெரிக்க இசையை  வாசித்துக்கொண்டிருந்தார்கள். (ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களின் பல மெட்டுக்கள் நினைவுக்கு வந்தது. முன்பு தேவா. இப்பொழுது இவர்). அத்தெருக்களில் இசைக் கலைஞர்கள் நிரப்பாத இடைவெளியை, அங்கே உள்ள உணவகங்களின் மேசை, நாற்காலிகள் நிரப்பின. ஒரு மேசைத் தேடி உட்கார்ந்துகொண்டோம்.  மூன்று நாட்களாக, உணவகங்களில் ஒரு பிரச்சனை வந்தது. மது அருந்தும் பழக்கம் இல்லாததால், குடிப்பதற்கு வெறும் தண்ணீர் கேட்போம். மினரல் வாட்டர் கொண்டுவந்துவைப்பார்கள். மினரல் வாட்டர் வேண்டாம், குழாய் நீரே போதும் என்று சொல்லத் தெரியவில்லை. என்னென்னவோ செய்கை எல்லாம் செய்து காட்டினாலும் அவர்களுக்கு புரியவில்லை.  துரை டம்ப்ளரில் நீர் கேட்கிறார் போல் என்று நினைத்து, மினரல் வாட்டரை டம்ப்ளரில் கொண்டுவந்தார்கள். (அதற்கு உணவுப்பதார்த்தங்களுக்கு இணையாக பில்லும் போட்டார்கள்). பிறகு, விடுதி உரிமையாளர் பாட்டி துண்டு சீட்டில் எழுதிக்கொடுத்தார். (dos vasso agua naturalle. non agua mineralle, non agua bottelle :-)). ஸ்பானிய புலமையைகாட்டுவதற்காக, உணவகங்களில், எங்கள் இருவருக்கும் மேசையை ரிசர்வ் செய்யகற்றுகொண்டோம். ஆனால், மனனம் செய்த வாக்கியங்களைக் கூறிய அடுத்த நொடி,அவர்கள் சரளமான ஆங்கிலத்தில் என்ன வேண்டும் என்று கேட்பார்கள். (பெங்களூரில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் கன்னடத்தில் பேசும்போது ‘இன்னா சார், தமிலா, எங்கபோவனும்’ என்று கேட்டது நினைவுக்கு வந்தது.)

    பூங்காவில் இசைக் கலைஞர்கள் – மெரிடா

    பிளமிங்கோ

    மூன்று நாட்களாக தொடர்ந்து பயணம் செய்தலால், இன்று கிட்டத்தட்ட ஓய்வுதான். அருகிலுள்ள சிற்றூர்களுக்கு செல்வது இன்றைய திட்டம். முதலில் ப்ராகிரஸோ (Progresso)  என்ற கடற்கரை கிராமத்திற்கு சென்றோம். பிளமிங்கோ என்ற உணவு விடுதியில் பொறித்த மீன் சாப்பிட்டோம். செம ருசி. லோன்லி பிளானட் பொய் சொல்லவில்லை. சிறிது நேரம் கடற்கரையில் செலவிட்டுவிட்டு, மாயர்களின் கடற்கரை ஊராகிய ஷாம்போவிற்கு (Xcambo) சென்றோம். மற்ற பெரிய மாயா நகரங்களுக்கு இங்கிருந்துதான் உப்பு அனுப்பப்பட்டது. செல்லும் வழியெங்கும் சதுப்பு நிலக் காடுகள்தான். வெளிர் பிங்க், ஆரஞ்ச் நிறம் கலந்த பிளமிங்கோக்கள் நிறைய இருந்தன. பார்ப்பதற்கு, ஆரஞ்சு நிற பலூன்கள் மிதப்பது போல இருந்தது. அவற்றை, எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காது. ஆசைதீர பார்த்துவிட்டு, ஷாம்போ சென்றோம். கிட்டத்தட்ட வெறிச்சோடியிருந்தது. இங்கு வந்த ஸ்பானியர் ஒருவருக்கு கன்னி மேரி கனவில் வந்து, தனக்கு தேவாலயம் கட்டுமாறு கூறவே, ஒரு சிறிய தேவாலயம் கட்டியுள்ளார்கள். இப்போழுது யாரும் இல்லை.  நாங்கள் பார்த்த பல மாயா ஊர்களில், சிற்பங்களே இல்லை. காரணம், நீண்ட காலத்திற்கு, கல்லை செதுக்கும் திறனுள்ள உலோகத்தை மாயர்கள் கண்டுபிடிக்கவில்லை.

    ஷாம்போ

    (தொடரும்)

  • இந்தியாவின் மாபெரும் சுங்க வேலி – The Great Hedge of India – புத்தக மதிப்புரை.

    காந்தி :  ‘இங்கிலாந்து பணக்கார நாடாக, இந்தியா தேவைப்பட்டது. இந்தியா இங்கிலாந்தைப் போல் ஆக, நாலைந்து உலகம் பத்தாது’.

    ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இரண்டு நாட்களுக்குமுன் உலகின் மிகப்பெரிய வேலி என்ற கட்டுரை வந்தது. ராய் மாக்சம் எழுதிய ‘The Great Hedge of India’ என்ற புத்தகத்தை பற்றியும், அதை ஒட்டிய தன் கருத்துகளையும் பதிவுசெய்திருந்தார். அருகிலிருந்த நூலகத்திலிருந்து புத்தகத்தை எடுத்துவந்து படித்தேன். அவரைவிட என்னால், சிறப்பாக சொல்ல முடியாவிட்டாலும், என் கருத்துகளை பதிவிடுகிறேன்.

    கேள்வி : 1850ஆம் ஆண்டு, வங்காள மாகானத்தில் பயன்படுத்தப் பட்ட உப்பில் 50% இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆம், சமயல் உப்புதான். இயந்திரங்களால் மலிவாக தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடைகள் இல்லை, வெறும் உப்பு. உங்களால் நம்ப முடிகிறதா ? இந்தியாவில் இல்லாத கடலா, உப்பளங்களா? பிறகு உப்பை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன ?

    பதில் : லாபம். இந்தியாவில் (குஜராத்தில்) விளையும் உப்பிற்கு அநியாய வரிகள் போடப்பட்டு, இறக்குமதி உப்பு, உள்ளூர் உப்பைவிட குறைந்த விலைக்கு விற்கப்பட்டது !!.

    இங்கிலாந்திலிருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டு, கம்பெனி லாபம் அடைகிறது என்றால், இங்கே என்ன தான் நடக்கிறது? முகமது கஜினி, நாதிர் ஷா, தைமூர் எல்லாம் இந்தியாவை கொள்ளை அடித்தார்கள். அவை வழிப்பறி போன்றது. கையிலிருப்பது தான் களவாடப்படும், வங்கியிலிருப்பது அவர்களுக்கு தெரியாது. கிழக்கிந்தியக் கம்பெனியின் கொள்ளை, திட்டமிட்டு சுரண்டப்பட்ட கொள்ளை. பணம் மட்டுமல்ல கட்டிய கோமணம், சிறுநீரகம் உட்பட சகலத்தையும் உருவிவிட்டார்கள்.  முகலாய அரசு வலுவிழக்க ஆரம்பித்த பின், கம்பெனி வணிகத்தை மட்டும் செய்யாமல், இந்திய அரசியலிலும் தலையிட ஆரம்பிக்கிறது. 1756இல், வங்காள நவாப், கம்பெனியை கல்கத்தாவிலிருந்து விரட்டுகிறார். அடுத்த வருடம், ராபர்ட் கிளைவ் தலைமையில், பிளாசிப் போரில் நவாப் தோற்கடிக்கப்படுகிறார். (போரெல்லாம் இல்லை.லஞ்சம் வாங்கிக்கொண்டு நவாப் படைகள் எதிரணிக்கு விலைபோய்விட்டன ). வென்ற கம்பெனி, வங்கத்தில், எல்லா ஊர்களிலும் வரி விலக்கு அளிக்கப்பட்ட கடைகள் (பேக்டரி அவுட்லட்) திறக்கிறார்கள். உப்பு, புளி, சக்கரை, தானியம், புகையிலை, கஞ்சா என எல்லா பொருட்களுக்கும் கம்பெனி கடையில் வரியில்லை. விவசாயிகள், வியாபாரிகள் மூலப்பொருட்களை கம்பெனிக்கு விற்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கொஞ்ச நாளில், உள்ளூர் வியாபாரிகளின் கடைகள் படுத்துவிட்டது. பின்பு கிளைவ், கம்பெனியின் சில முக்கியஸ்தர்களுடன் சேர்ந்து ‘பிரத்தியேக சங்கம்’ (எக்ஸ்குலுசிவ் கிளப்) ஆரம்பித்து, புகையிலை, வெற்றிலை, உப்பு ஆகியவற்றை விற்கிறார். பிரத்தியேக சங்கத்தினால், கம்பெனி வருமானம் குறைகிறது. கம்பெனியின் ‘மற்ற’ பங்குதாரர்கள் இங்கிலாந்து பாராளுமன்றைத்தின் மூலம் சங்கத்தை கலைத்துவிட்டார்கள். இங்கிலாந்தில் ஊர், பேர் தெரியாது இருந்த கிளைவ், மிகச் சில வருடங்களில் ‘பிளாசி கோமான்’ ஆகிறார். மற்ற ‘கோமான்கள்’ கிளைவ் மீது, விசாரனை கமிஷன் அமைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கோருகிறார்கள். கமிஷன், விசாரனையின் முடிவில் ‘கிளைவ் ஒரு தியாகி. அவரையா குற்றம் சொன்னீர், இது அடுக்குமா?’ என்று தீர்ப்பு வழங்கியது. [பிரச்சனை, மிகக் குறுகிய காலத்தில் எப்படி இப்படி என்பதுதான். டாட்டா, நூறு வருடம் சேர்த்ததை, அம்பானி இருவது வருடத்தில் சேர்க்கவில்லையா ? பொறாமை பிடித்த உலகம்..சே..].கிளைவ் தற்கொலை செய்து கொண்ட பின், வாரன் ஹேஸ்டிங்ஸ் மதராஸ், பம்பாய், கல்கத்தா மூன்றையும் ஒன்றினைத்து வைசிராயகிறார். சுரண்டல் தொடர்கிறது.

    இங்கே, நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, கம்பெனிக்கு முன், இங்கே வரியே இல்லையா என்றால், இருந்தது. பஞ்ச காலத்தில், வரி குறைக்கப்பட்டது / வசூலிக்கப்படவில்லை. தொடர்ந்து சில ஆண்டுகள் நல்ல விளைச்சல் இருந்தால், அடுத்து பஞ்சம் வரும் என்று எல்லோருக்கும் தெரியும். தானியங்கள் கோயில்களில், மற்ற பொது இடங்களில் சேமிக்கப்படுகிறது; பஞ்ச காலத்தில் மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. கம்பெனி ஆட்சியில், பஞ்ச காலத்திலும் நில வரியும், மற்ற வரிகளும் கறாராக வசூலிக்கப்பட்டன. வரி கட்ட முடியாதவர்கள் நிலத்தை உழ அனுமதிக்கப்படவில்லை. நிலம் மீண்டும் காடாகியது. பஞ்சத்தின் போதும், தானிய ஏற்றுமதி நடைபெறுகிறது. வங்கத்தில், ஆங்கிலேய ஆட்சியின் காலகட்டத்தில் வந்த பஞ்சங்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மடிந்துவிட்டார்கள். (சுதந்திர இந்தியாவின் முதல் சாதனை, உலக நாடுகளிடம் பிச்சை எடுத்தாவது, நம் மக்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றியதுதான்.)

    வங்கக் கடலில், கங்கை, பிரம்மபுத்ரா நதிகளின்  நன்னீர் கலப்பதால், வங்கத்தில்  உப்பு மிக குறைவாக கிடைக்கிறது. குஜராத்தில் தான் பெரிய உப்பளங்கள் உள்ளன. (இன்றும், இந்தியாவின் மொத்த உப்பு உற்பத்தியில் 70% குஜராத்திலிருந்துதான்). மேற்கிலிருந்து உப்பு, வட இந்தியாவிற்கும், வங்க எல்லைக்கும் வரும்பொழுது, சுங்கச் சாவடிகளில் வரி வசூல் செய்யப்படுகிறது.  உப்பின் மீது விதிக்கப்படும் உள்நாட்டு வரிதான், கம்பெனியின் வருவாயில் முக்கிய பங்கு. (டாஸ்மாக் வருவாயைப்போல்). ஆனால், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உப்பு, பல்வேறு வகையில் கடத்தப்படுகிறது. எப்படி தடுக்கலாம் என்று எண்ணும்போதுதான், வேலி கட்டலாம் என்ற யோசனை தோன்றுகிறது. அப்போது, கம்பெனி, மேற்கில் மேலும் விரிவடைந்துவிட்டது.

    சுங்க வேலி .

    வட மேற்கு எல்லை பிராந்தியத்தில் ஆரம்பித்து, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகராஷ்டிரா என்று 2500 மைல் நீள வேலி அமைக்கப்படுகிறது. முதலில் கழிகளால் அமைக்கப்பட்ட வேலி, பராமரிப்பு செலவுகளை காரணம் காட்டி, பின்பு மரக்கன்றுகளால் அமைக்கப்படுகிறது. ( வளமான மன் இல்லாத இடங்களில் கற்களாலும், சப்பாத்தி கள்ளியாலும் வேலி கட்டப்படுகிறது). வேலியை காவல் காக்க ஒரு காவல் படை அமைக்கப்படுகிறது. 1870இல் 14000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். கடை நிலை ஊழியருக்கு சம்பளம் மிக குறைவு. லஞ்சம், கடத்தலுக்கு உடந்தை, பொய் கேஸ் ஆகியவற்றின் மூலமே அவர்கள் சம்பாதிக்கிறார்கள். விவசாயிகள் வீட்டில், உப்பு மூட்டையை இவர்களே போட்டுவிட்டு, “நீ, உப்பை, சட்டத்தை மீறி பதுக்கினாய்” என்று குற்றம்சாட்டி லஞ்சம் வாங்குகிறார்கள். (நம்ம போலீஸ், கஞ்சா கேஸ் போடுவதுபோல. அவங்க தான இவங்களோட முன்னோடி). அப்படியும், மக்கள் தலைச்சுமையில் உப்பு கடத்துகிறார்கள் (கடத்துகிறார்கள் – சரியான வார்த்தையா?). 1873இல் மட்டும் 6700 பேர், தலையில் உப்பு மூட்டைகள் கடத்தி பிடிபட்டுள்ளார்கள்.

    கிட்டத்தட்ட பாதிக்கு மேல் இந்தியா வெள்ளையர்களிடம் வந்த பின், இந்த வேலி, உள்னாட்டு வணிகத்துக்கு பெரிய தடையாக மாறுகிறது. வேலி வேண்டாம், ஆனால் உப்பின் சுங்க வரி வேண்டும், என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது, தயாரிக்கும் இடத்திலேயே வரி வசூல் செய்ய முடிவு செய்கிறார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த உப்பு உற்பத்தியும், அரசின் ஏகபோக (மொனொபாலி) உரிமையாகிறது. ராஜஸ்தான் சாம்பா ஏரி மற்றொரு உப்பு கிடைக்குமிடம். ஜோத்பூர் மன்னரிடம் இருந்து மிரட்டி குத்தகைக்கு வாங்குகிறார்கள். பின்பு வேலி தேவைப்படவில்லை, கைவிடப்படுகிறது.

    மக்கள் உப்பு பயன்படுத்துவதை குறைக்கிறார்கள். உப்பு சத்தில்லாமல், பல்வேறு நோய் தாக்கி, பலர் உயிரிழக்கிறார்கள். 1930 இல், உப்பு வரி பல மடங்கு குறைந்துவிட்டாலும், மக்கள் ஆழ்மனதில் நீங்கா வடு ஏற்படுத்திவிட்டது. காந்தி அதை கண்டுகொள்கிறார். நேருவும், மற்றவர்களும் நில வரியை எதிர்த்து போராடலாம் என்கிறார்கள். காந்தி உப்பையே தேர்ந்தெடுக்கிறார். உப்பு சத்தியாகிரகம் தொடங்குகிறார். அது, மக்களுக்கு ஆங்கிலேய சுரண்டலை ஒரு எளிய போராட்டம் மூலம் உணர்த்துகிறது. 1946இல் நேருவின் இடைக்கால அரசு பதவியேற்றவுடன், உப்பு வரி முழுமையாக நீக்கப்படுகிறது.

    லண்டன் நூலகத்தில் வேலை செய்யும் ராய், வேலியைப் பற்றி ஏதோ ஒரு சிறு குறிப்பை காண்கிறார். யாரிடம் கேட்டாலும் அது பற்றி தெரியவில்லை. சில வருடங்கள் தீவிர அராய்ச்சிக்குபின், மூன்று முறை இந்தியா வந்து, கடைசியில் சம்பல் பள்ளத்தாக்கில் அதன் எச்சங்களை கண்டு பிடிக்கிறார். (தற்போது, வேலியின் மேல் சாலை அமைத்துவிட்டார்கள்.)

    ராய் மாக்ஸ்காம் எழுதிய ‘The Great Hedge of India’ புத்தகம் கண்டிப்பாய் படியுங்கள். இந்தப் புத்தகம் வரும் வரை, இப்படி ஒரு வேலி இருந்தது பற்றிய செய்தியே தெரியவில்லை. நம்மிடம் எதிர்வினையே உருவாகவில்லை. இந்திய வரலாற்று ‘ஆய்’வாளர்களே, நீங்கள் என்னதான் செய்கிறீர் ? இது மாதிரி எத்தனை வேலிகளும், வலைகளும் இருந்தனவோ தெரியவில்லை. [ஜெயமோகன் எழுதும்வரை, இப்படி ஒரு புத்தகம் வந்ததும் எனக்கு தெரியவில்லை 🙁 ].

    உப்பு சத்தியாகிரகம்

    இனி நான், ஒவ்வொரு முறை உப்பை பயன்படுத்தும் போது, நம் மக்கள் மனதில் கட்டப்பட்ட வேலியை நினைவு கூறுவேன். அதை உடைத்த தாத்தாவை நினைவு கூறுவேன். நாம் பெற்ற சுதந்திரத்தை நினைவு கூறுவேன். காந்திஜி கீ ஜெய். [இன்று காந்தியின் பிறந்த நாள்.]

    http://www.roymoxham.com/page4.htm

    http://en.wikipedia.org/wiki/Inland_Customs_Line

  • மாயன் நாகரிகம் – பயணக் கட்டுரை – பாகம் – 2

    கேன்கூன் கடந்த இரு தச ஆண்டில் உருவான ஒரு சுற்றுலா நகரம். அது தற்போதைய நுகர்ச்சிக் கலாச்சாரத்தின் அடையாளம். ஊரின் முக்கியத் தொழிலே சுற்றுலா தான். ஒப்புநோக்க அதை மெக்சிகோவின் கோவா என்று அழைக்கலாம்.

    யுகாட்டன் தீபகற்பத்தில் பெரிய நகரம் மெரிடா. ஸ்பானியர்கள் யுகாட்டனில் வந்து இறங்கி மாயர்களை வென்று, இந்தப் பகுதியின் தலைநகராக மெரிடாவை  கட்டமைத்தார்கள். கேன்கூனிலிருந்து மெரிடா செல்லும் வழியில் அமைந்துள்ளது சிச்சன் இட்சா.

    இன்றைய திட்டம் சிச்சன் இட்சா செல்வது. கேன்கூனிலிருந்து சிச்சன் இட்சா செல்வதற்கு இரு வழிகள் உன்டென அறிந்தோம். ஒன்று சுங்கச் சாலை, மற்றொன்று பொது. சுற்றுலாப் பயணிகளை நம்பி சுங்கச் சாலை அமைத்துள்ளார்கள்.  பொது வழியாகச் சென்றால், கிராமப்புறங்களை காணலாம் என்பதால், அவ்வழியில் செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.  பயனம் முழுமைக்கும் கார் ஓட்டியது அருண். மனுஷனுக்கு கார் ஓட்டுவது அலுப்பே தட்டாத ஒன்று.

    ஓரிடத்தில் இரு வேறு திசைகளில் ‘மெரிடா’ என்று எழுதப்படிருந்தது. ஒன்றில் ‘மெரிடா’,’லிப்ரே’ என்றும், மற்றொன்றில் ‘மெரிடா’,’சிச்சன் இட்சா’,’கோட’ என்றும் எழுதி இருந்தார்கள். வரைபடத்தை பார்த்து ‘லிப்ரே’ என்ற ஊர் இதில் இல்லை, அது எதோ சுத்து வழி போல, நாம் ‘சிச்சன் இட்சா’ என்று காட்டும் திசையில் செல்வோம் என்றேன். பிறகு, மாயனை பற்றி பேசிக்கொண்டே சென்றோம். வழியில் ஈ, காக்கை இல்லை. அருண் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை என் கதையை இடைமறித்து சுங்க வழி, சுங்கமிலா வழி பிரிவு எப்போது வரும், கிராமங்களை காணோமே, மற்ற வண்டிகள் எங்கே என்று கேட்டுகொண்டே வந்தார். நான் கதை சொல்லுகிற ஆர்வத்தில் எல்லாம் கூடிய விரைவில் வரும், நம்மைப் போல சுற்றுலாப் பயணிகளைத் தவிர அனைவரும் சுங்கச் சாலையில் சென்றுவிட்டனர், அதனால் தான் ரோடு வெறிச்சோடி உள்ளது போன்று ஒவ்வொரு முறையும் ஒரு விளக்கத்தை கொடுத்து அவரை சமாளித்தேன். ஒரு மணிநேரம் சென்ற பிறகு எனக்கும் சந்தேகம் வந்தது. தூரத்தில் toll-plaza வும் தெரிந்தது. ‘ஹி ஹி ‘ என்று அருணை பார்த்தேன். 20 USD கட்டிய பிறகு ‘லிப்ரே’ என்றால் ‘இலவசம்’ என்றும் ‘கோட’ என்றால் ‘காசு’ என்றும் புரிந்தது.

    சிச்சன் இட்சாவுக்கு மதியம் போய்ச்சேர்ந்தோம். தங்கும் விடுதியில் (குறைந்த செலவில், அருமையான அறைகள். உணவும் நன்றாக இருந்தது) சிறிது ஓய்வெடுத்துவிட்டு, பிரமிடுகளையும், கட்டடங்களையும் பார்க்கச் சென்றோம். விடுதியில் இருந்து இலவச சேவையாக எங்களை தொல்பொருள் கட்டடங்களின் அருகில், காரில் இறக்கிவிட்டு சென்றார்கள். அங்கே பார்த்த இடங்கள், மிகச் சிறிதாக இருந்தன. நான் போட்டோவில் பார்த்த இடங்களின் மாதிரி வடிவம் போல இருந்தது. ஒரு மணி நேரம் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தோம். வேறு எந்த கட்டிடமும் இருப்பது போலத் தெரியவில்லை.

    “தல ஏமாத்திட்டானுங்க.. இத பாக்கவா இவ்வளவு தூரம் வந்தோம் ?”

    “டேய், நீ தானடா, அப்பிடி இருக்கும், இப்பிடி இருக்கும்னு பில்டப் குடுத்த..”

    “பெருசாத்தான இருந்துச்சு… ஒரு வேள, கேமரா டிரிக்கா..சரி, வந்தது வந்தாச்சு, நான் இங்க உக்கார்ரேன்… உங்க கேமராவுல, இதெல்லாம், பெருசாத் தெரியர மாதிரி எடுங்க…நின்னுகிட்டே எடுத்தா, சின்னதா தெரியும். ஊர்ல போய் காட்டினா சிரிப்பானுங்க ..”

    மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில், ஒரு வெள்ளைக்கார கூட்டம், ஒரு சந்தில் இருந்து வந்தது. அங்கே சென்று பார்த்தால், ஒரு நகரமே கண்முன் விரிந்தது. ஒரு பெரிய பிரமிட், ஆய்வுக்கூடம், ஆயிரம் தூண் அடங்கிய கோவில், சுற்றிலும் மதில் சுவர் அடங்கிய ஒரு விளையாட்டு மைதானம், நிறைய மேடைகள் என்று அந்த இடமே பிரம்மாண்டமாக இருந்தது.  (எங்களை இறக்கிவிட்டவன், தொல்பொருள் கட்டடங்களின் பெருவாசலில் இறக்காமல், கடைக்கோடி வாசலில் இறக்கிவிட்டுள்ளான். அதனால், இடக் குழப்பம்.)

    முதலில், அங்கே இருந்த வானவியல் ஆய்வுக்கூடத்தை (எல் கராகோல்) பார்த்தோம். 902 கி.பி. இல் கட்டப்பட்ட ஆய்வுக்கூடம். மாயா கேலண்டருக்கு அளித்த முக்கியத்துவம், அதில் அவர்களுக்கு இருந்த தேர்ச்சி நாம் அறிந்ததே.

    மாயா கடவுள்களில், முக்கியமான கடவுள் ‘சாக்’ எனப்படும் மழைக்கடவுள். மாயா குடுக்கும் பலிகளில் முக்கால்வாசி அவருக்குத்தான். காரணம், மாயா நிலப்பகுதியில் நிலத்தின் மேல் ஓடும் ஆறு எதுவும் இல்லை. நிலத்துக்கடியில் ஓடும் ஆறுகள் உண்டு. நிரந்தர தண்ணீர் பஞ்சம். ஆங்காங்கே, நிலத்துக்கடியில் ஓடும் ஆறுகளை இணைக்கும், இயற்கையாக உருவான கினறுகள் உள்ளன. அவை ‘சினோட்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கும் ஒரு புனிதக்குளம் இருந்தது. ‘ஜாக்குவார்’ மிருகம் மாயர்களுக்கு புனிதமான மிருகம். வீரமரணம் அடையும் வீரர்கள் ஜாக்குவார் ஆகிவிடுவார்கள் என்பது அவர்களுடைய புராதான நம்பிக்கை. அங்கே ஒரு ஜாக்குவார் ஆசனம் (சிம்மாசனம்?) இருந்தது. (ஆமா, நம்ம ஜாக்குவார் தங்கத்துக்கு யாருங்க ‘ஜாக்குவார்’னு பேர் வச்சா?”) . குக்குலுக்கான் என்ற இறக்கை வைத்த நாக தேவதையும் முக்கியமான தேவதை. இவர் மத்திய மெக்ஸிக்கோவைச் சேர்ந்த ஆஸ்டெக்குகளின் தேவதை, இங்கே வணிகர்களால் இறக்குமதி செய்யப்பட்டார் என்று விக்கிப்பீடியா சொல்கிறது. பின்னர் ஒரு ஊரில், ஆண் குறி சிலைகளை (லிங்கம்) கண்டோம். நல்ல இந்திய ஆராய்ச்சியாளர் யாராவது, மாயார்களின் கடவுளையும், நம் கடவுள்களையும் பற்றி ஆராய்ந்தால், பழங்குடி மனம் செயல்படும் விதம் பற்றி மேலும் சில புரிதல்களைக் கண்டடையலாம்.பழங்குடிகளின் மனம் ஒன்று போல இயங்குமோ என்னவோ?. [கேரளாவில் யாரோ ஒரு ‘ஆராய்ச்சியாளர்’ இந்துக்களுடைய ‘பாதாள லொகம்’ மெக்ஸிகொ என்றிருக்கிறார். இங்கே வந்து இரண்டு மாதம் தங்கினாராம். அதன் மூலம் கண்டுபிடித்தாராம். மகாபாரதத்தில் மயாசபை கட்டிய மயன் தான், இங்கே வந்து மாயா நாகரிகம் தோன்றக் காரணம் என்றிருக்கிறார். அவருக்கு பாராட்டுவிழா எல்லாம் எடுத்திருக்கிறார்கள். மயன் எப்படி இங்கே வந்தார் என்றால் ‘லெமூரியாக் கண்டம்’ மூலமாம். புரிந்துவிட்டது.)

    சாக் மூல் கோயில்.

    நிறைய மாயா சிறுவர்கள் நிறைய குட்டி சிலை, ஊசிமணி, பாசிமணிகளை விற்றுக்கொண்டிருந்தார்கள். நான் ஒன்றும் வாங்கவில்லை. மகாபலிபுரம் நியாபகம் வந்தது. மாயாக்கள் உருவத்தில் சிறியவர்கள். பெண்கள் நான்கரை அடி, ஆண்கள் ஐந்து அடி. மாயா நகரங்களுக்கு இடையே நடந்த சகோதர யுத்தத்தில், சிச்சன் இத்சா அழிந்தது என்றார்கள். நீண்ட நாள் வறட்சியும் ஒரு காரணமாக இருக்கலாம். (மாயா நகரங்களைப் பற்றி, அடுத்த பகுதிகளில் பார்ப்போம்).

    ஆயிரம் கால் மண்டபம் முன் கைகுட்டை விற்கும் ஒரு மாயா பாட்டி

    பிறகு, புகழ் பெற்ற ‘எல் காஸ்டிலோ’ பிரமிடை பார்த்தோம். (குக்குலுக்கான் கோயில் என்று அழைக்கப்படுகிறது). சம இரவு நாளன்று, (equinox) குக்குலுக்கான் படிகளில் இறங்கி வருவது போல் தெரியும் என்றார்கள். அன்று இரவு நடை பெற்ற ஒலி ஒளிக் காட்சியில், ஒளியில் ஒரு பாம்பு, இறங்கி வருவது போல் காட்டினார்கள். (அந்த ஒலிஒளிக் காட்சியில், ஒரு வித அங்கதத்துடனே மாயர்களை காட்டியது போல எனக்குத் தோன்றியது. மொத்தம் ஒரு மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில், பத்து நிமிடம் அவர்களைப் பற்றி சிறப்பாகச் சொல்லியிருந்தால் அதிகம். அன்றைய காலகட்டத்தை இன்றைய நியாய / அநியாய நோக்கில் விளக்கியது போலவும் இருந்தது. “பூசாரிகள் தான் மன்னர்களை ஆட்டிவைத்தார்கள். நாட்டில் நடக்கும் குழப்பங்களுக்கெல்லாம், கடவுளின் கோபம் தான் காரணம். குறி சொல்லிகளை தேர்ந்தெடுப்பது எப்படி என்றால், சினோட்டில் சிறுமிகளை தள்ளிவிடுவார்களாம். அதில் பிழைத்து வருபவர்களை ‘ஆரக்கிள்’ என்று அறிவித்து, தெய்வமாக்கிவிடுவார்களாம். ஆதாரமாக சினோட்டில் எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன என்றார்கள். மழை பெய்யவில்லையென்றால், ஆயிரக்கணக்கில் நரபலி கொடுக்கப்படும் என்றார்கள். மாயா கூடைப்பந்தாட்டத்தில் தோற்றால், பலிதான். “சரியான காட்டாண்கள்.. நாம வந்து இதுங்கள காப்பாத்தினோம்… இல்லன்னா..” என்கிற தோரனைதான். அவற்றில் சில உண்மைகள் இருந்தாலும், வெளி உலக தொடர்பே இல்லாமல், எவ்வாறு வானவியலில் சிறந்து விளங்கினார்கள், பெரிய கட்டிடங்களை கட்டினார்கள் என்று ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

    மாயா எழுத்துரு ‘வரைபட எழுத்துரு’  (heiroglypyic) வகையைச் சார்ந்தது. இப்பொழுது, மாயா மொழி பேச்சு வழக்கில் இருந்தாலும், எழுத்து வழக்கில் இல்லை. லத்தீன் எழுத்துக்கள் தான் உபயோகத்தில் உள்ளது. பின்னர் ஒரு ஊரில், எங்களிடம் நன்றாகப் பேசிய ஒரு மாயனிடம், என் பெயரை மாயனில் எழுதித் தரும்படிக்கேட்டேன். அவன் ஆங்கிலத்திலேயெ எழுதினான். இரண்டு, மூன்று முறை கேட்டபின்னும் அவன் எந்தப் படமும் வரையவில்லை. ஒரிஜினல் மாய எழுத்துருவில், அவனுக்குத் தெரிந்த எந்த மாயருக்கும் வரையத் தெரியாது, அதெல்லாம், அமெரிக்கப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் யாராவது கொஞ்சப் பேருக்குத் தெரியலாம் என்றான். மாயாக்களிடமே இருந்து யாராவது ஒருவர் வந்து அவர்கள் குலப்பாடல்கள், கிராமியக் கதைகள், தொன்மங்கள் போன்றவற்றை வைத்து ஆராய்ந்தால், நமக்கு அவர்களை பற்றி இன்னும் நிறைய தெரியலாம். (‘லேமூரியாக் கண்டம், ‘கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே’ போன்ற வகையில் இல்லாமல் இருக்க, குக்குலுக்கானிடம் பிரார்த்திப்போம்).

    மதியம் வரும்பொழுது, விடுதியைச் சேர்ந்தவர்கள் எங்களை காரில் இறக்கிவிட்டு சென்றார்கள். ஒலி ஒளிக்காட்சி முடியும் பொழுது, நன்றாகவே இருட்டிவிட்டது. இருட்டிலேயே, டார்ச் உதவியுடன் நாலு மைல் நடந்து வந்தோம். அங்கே சாப்பிட்ட பொரித்த கோழி நன்றாகச் செரித்திவிட்டது. வந்து படுத்தது தெரியவில்லை, மறுநாள் அருண் எழுப்பி விட்டு கிளம்பு தம்பி, போவொம் என்றார். அடுத்த இடம், மெரிடா.

  • மாயன் நாகரிகம் – பயணக் கட்டுரை – பாகம் – 1

    இரண்டு வருடங்களுக்கு முன் மெக்சிகோ சென்று வந்தேன். அப்பொழுதே அதைப் பற்றி விரிவான ஒரு பயணக் கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்ததால், நேரமில்லை. இப்பொழுது கூட எழுதாவிட்டால் மறந்துவிடும். அதனால், இந்தப் பதிவு.

    எனக்கு மாயன் நாகரிகத்தை சென்று பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அதுவும் அப்போகலிப்டோ படம் பார்த்த பிறகு மேலும் அதிகமாகியது. நான், அமெரிக்காவின் அட்லான்டா நகரில் உள்ள ஜார்ஜியா டெக்கில் முதுநிலை கணிப்பொறியியல் படித்துக்கொண்டிருந்தேன். மெக்சிகோ செல்லலாமா என்று கேட்டாலே, நண்பர்கள் அலறினார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தினம் செய்திகளில் மெக்சிகோவின் போதைப் பொருள் கடத்தல் குழுக்களிடையே நடக்கும் கலவரம், அதில் பலியானோர் எண்ணிக்கை, இன்ன பிற மோசமான செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது. அது, எல்லோருடைய மனதிலும் ஒரு பய உணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நண்பர் அருண் (அருண்குமார் இளங்கோவன்) வருவதாகச் சொன்னார். விடுமுறையில் சில நண்பர்கள் இந்தியா சென்றுவிட்டனர். வரலாற்றைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல், குடி, கேளிக்கையில் மட்டுமே ஈடுபடும் மற்றவர்களை அழைக்க மனமில்லை.

    மாயன் பகுதிகள்

    நானும், அருணும்  சேர்ந்து பயணத்திட்டம் வகுத்தோம். மாயா நாகரிகத்தை, தோற்றம், சங்க காலம், சங்கம் மருவிய காலம், ஸ்பானிய ஆக்ரமிப்பு, நிகழ்காலம் என்று விரிவாகப் பிரிக்கலாம். சில ஊர்கள் சில காலகட்டங்களுக்கு உரியவை. அடுத்த காலகட்டத்தில், அது பல்வேறு காரணங்களுக்காக கைவிடப்பட்டிருக்கும். மாயா நாகரிகத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அறிய வேண்டும் என்ற விருப்பத்தால், எல்லா கால கட்டங்களுக்கும் உரிய ஒரு ஊரையாவது பார்க்க முடிவு செய்தோம். முடிந்த வரை சுற்றுலாப் பயணிகள் செல்லாத சிறிய ஊர்களுக்கும் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டோம். எனக்கு செமஸ்டர், டிசம்பர் முதல் வாரத்திலேயே முடிந்துவிட்டது. டிசம்பர் 10 – 20 வரை சென்று வந்தால் விமான செலவுகள், தங்கும் விடுதி வாடகை, இதர செலவுகள் குறையும் என்றேன். (கிருஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நாட்களில் பயணம் செய்தால், எல்லாவற்றுக்கும்  விலை அதிகம்.) அருணுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. சரி, டிசம்பர் கடைசி வாரமே போய் வருவோம் என்று முடிவு செய்தோம். மாயா நாகரிகம், மெக்சிகோவின் யுகாட்டன் தீபகற்பத்தை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ளது. கேன்கூன் நகரம் தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலா நகரம். அங்கே விமானத்தில் சென்று, பிற பகுதிகளுக்கு காரில் செல்லலாம் என்று திட்டம். கல்லூரி நூலகத்திலிருந்து மாயா நாகரிகத்தை பற்றிய சில நூல்கள், ஸ்பானிய – ஆங்கில அகராதி, வரைபடம், பயணத்துக்கு தேவையான பொருட்களுடன் எல்லாம் தயார்.

    டிசம்பர் 22, அட்லாண்டாவில் கிளம்பி கேன்கூனுக்கு சென்றோம். விமானத்தில் என் அருகில் ‘பேரிளம் பெண்’ ஒருவர் வந்தார். பேசுவதற்கு ஒன்றும் இருக்காது என்று எண்ணி சிறிது கண்ணயர்ந்தேன். அவள் வைத்திருந்த லோன்லி பிளானட் புத்தகம் பேச தூண்டியது. இத்தாலியர், கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர், போன்ற விவரங்கள் அறிந்த பின்னர், இன்று / நாளை என்ன திட்டம் என்று விசாரித்தேன். ஒன்றும் இல்லை என்றாள். தங்கும் விடுதி உட்பட எதுவும் தெரியாதாம் அவளுக்கு. பத்து நாளும் என்ன செய்யவேண்டும், எங்கு தங்கவேண்டும், இன்ன பிறவற்றையும் திட்டமிட்டிருந்த எனக்கு ஆச்சிரியம். அருண், இவள் கேன்கூன் கடற்கரையில் விடுமுறை முழுதும் குடித்துவிட்டு கவிழப்போகிறாள், அதற்கு ஒரு திட்டமும் தேவையில்லை என்றார். அவள் எங்களுடன் சேர்ந்துகொண்டாள். கேன்கூனில் இறங்கி வாடகை கார் எடுக்கும் இடம் சென்றோம். முதல் அதிர்ச்சி காத்திருந்ததது. ஆட்டொமெட்டிக் கார் பதிவு செய்திருந்தோம். மானுவல் தான் உள்ளது, வேண்டுமானால், காலையில் வா, மாற்றித்தருகிறேன் என்றான். வேறு வழியில்லை. இருப்பதைக் குடு என்றோம். மெக்சிக்கோ, இந்தியாவைப் போலவே இருந்தது. கொஞ்சம் தட்டுத்தடுமாறி ஓட்டி விடுதி போய் சேர்ந்தோம்.

    கேன்கூன் (cancun) என்ற கடற்கரை நகரம் உல்லாச பேர்விழிகளுக்காகவே கட்டப்பட்ட ஒரு நகரம். ஊரே, ஒரு பெரிய கேளிக்கை விடுதி போல இருந்தது. இரவு கேன்கூன் கடற்கரையை பார்க்க மூவரும் சென்றோம். நடுநிசி ஆகிவிட்டதால் இன்னும் இருவது நிமிடத்தில் விடுதிக்கு செல்வோம் என்றேன். கடற்கரையில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்று பிளான் போடுகிறதே இது, என்று அவள் என்னை முறைக்க, முன்பின் தெரியாதவர்களுடன் ஊர் சுத்துதே இது, என்று நானும் வெறித்தேன்.

    மறுநாள் காலை சிற்றுண்டிக்கு பின் அவளிடம் விடை பெற்று மாயன் நகரங்களை நோக்கி பயணித்தோம்.

  • India after Gandhi – (நவீன இந்தியாவின் வரலாறு) – புத்தக விமர்சனம்

    கேள்வி :  ‘இந்தியா ஏன் ஒரே நாடாக உள்ளது?’, ‘எவ்வளவு நாள் ஒரே நாடாக இருக்கும்?’, ‘இந்தியாவிற்கு ஜனநாயகம் ஒத்துவருமா?’

    பதில்: ‘காந்திக்குப் பின் இந்தியா’, ராமச்சந்திர குகா அவர்கள் 2007 ஆம் ஆண்டு எழுதிய முக்கியமான நூல். நவின இந்தியாவின் வரலாறை 900 பக்கங்களில், மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, விரிவான விடையாக எழுதியுள்ளார்.

    ********

    இந்தியா – பாக் பிரிவினையை உருவகிக்கும் ‘டைம்’ பத்திரிக்கையின் அட்டைப் படம்.

    “இந்தியாவிற்கு மக்களாட்சி ஒத்துவராது, கம்யூனிசமோ அல்லது ராணுவ ஆட்சியோ தான் சரிப்படும்”, “ஐரோப்பாகூட ஒரு நாள், ஒரே நாடாகலாம், இந்தியா கண்டிப்பாக ஆகமுடியாது”, “மதராசிக்கும் பஞ்ஞாபிக்கும் இருக்கும் இடைவெளி ஐரிஷ்க்கும் ஸ்பானியர்களுக்கும் உள்ள இடைவெளியை விட அதிகம். அவர்களாவது ஒரே நாடாவாவது, நடப்பதை பேசுங்கள்” என்று அன்றைய அறிவுஜிவிகள் (வேற யார், அமெரிக்க/ஐரோப்பியர்கள் தான்) மீண்டும் மீண்டும் கவலைப் படுகிறார்கள். “இந்தியாவிலிருந்து வெள்ளையர்கள் நீங்கினால், பிராமன ஆதிக்கம் ஒங்கி, இந்தியாவை ஒரு 500 வருடம் பின்நோக்கி கொண்டுசெல்வார்கள், நீதிமன்றம், ரயில்வே உட்பட ஆங்கிலேயருடைய சாதனைகளை அழித்துவிடுவார்கள். தேவைப்பட்டால்,  ஜெர்மானியர்களின் துனைகொண்டு இந்தக் கூட்டத்தை அடக்க வேண்டும்” என்று வின்ச்டன் சர்ச்சில் ஒரு படி மேலே போய் ஆதங்கப்படுகிறார்.

    டைம், நியுயார்க் டைம்ஸ், கார்டியன் போன்ற பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக அவநம்பிக்கை எழுதிக்குவிக்கப்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடையும் போது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு பிரதமர் இறக்கும் போதும், கலவரங்களின் போதும் இந்த அச்சங்கள், அவநம்பிக்கைகள் மீண்டும் உயிர்கொள்கின்றன. ஒவ்வொரு தச ஆண்டின் முடிவிலும், இந்தியா சந்தித்த மோசமான தச ஆண்டு இதுதான் என்றும், இந்தியாவின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறி என்றும் எழுதப்படுகிறது. இவற்றை எல்லாம் மீறி இந்தியா எழுந்து நின்றதின் கதை இந்தப் புத்தகம்.

    குகா, இந்நூலில் தன் கருத்துக்களை, மிகக்குறைந்த இடங்களில் மட்டுமே நேரிடையாகக் கூறுகிறார். பெரும்பாலான இடங்களில் அன்றைய சூழ்நிலையில் வெளிவந்த பத்திரிக்கை செய்திகள், தலைவர்களின் பேட்டிகள், அறிஞர்களின் கருத்துக்கள் அகியவற்றை தொகுத்து அளிப்பதின் மூலம், தன் கருத்துகளை முன்வைக்கிறார். ஊகங்களின் மேல் இல்லாமல், உறுதிபடுத்தப்படக்கூடிய தகவல்களின் மேல் மட்டுமே  நூலைக் கட்டமைத்துள்ளதால், நூலின் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. நூலில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை மிக அழகாக கோர்த்துக்காட்டியதே குகாவின் சாதனை.

    *****——-*****

    காந்தியின் கரங்களில் இந்தியா

    நூலை ஐந்து பிரிவாகப் பிரித்துள்ளார். முதல் பிரிவில்,  சுதந்திரம் முதல் 1950 வரையிலான மிக முக்கியமான காலகட்டத்தை விவரிக்கிறார். “இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துள்ளது, காங்கிரஸ்க்கு அல்ல” என்ற காந்தியின் அறிவுரையின் பேரில், நேரு, எதிர்கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் தருகிறார். அவர்களில் முக்கியமானவர் அம்பேத்கர். நேரு, படேல், அம்பேத்கர் மூவரையும் “இந்தியாவின் மும்மூர்த்திகள்” என்று வர்னிக்கிறார். காந்தி நட்ட செடியை, வாடாமல் காத்த மும்மூர்த்திகளின் செயல்கள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்த 500 குறுநில மன்னர்களை வழிக்கு கொண்டுவந்தது, இந்தியா-பாக் பிரிவினையின்போது, எற்பட்ட கலவரத்தை அடக்க ரானுவத்தை பயன்படுத்தாமல், வெள்ளையர்களின் குடியிருப்புகளைக் காக்க பயன்படுத்தியது (அப்போது, இந்தியாவிலேயே பாதுகாப்பானவர்கள் வெள்ளையர்கள்தான் என்கிறார் குகா)., மவுண்ட்பேட்டன் இந்தியாவிலிருந்து சென்றவுடன், கூலிக்கு ஆட்களை அமர்த்தி, தன் கோனத்தில் இந்தியாவைப் பற்றியும், தன்னைப்பற்றியும் பல்வேறு புத்தகங்களை எழுதுக்கொள்வது பொன்ற நகைச்சுவை (dark humor) காட்சிகளும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. காஷ்மீர், நாகலாந்து பிரச்சனைகளைப் பற்றி விரிவாக விவாதிக்கிறார். (இவற்றைப் பற்றி தனியாக ஒரு பதிவிடலாம் என்றிருக்கிறேன்).

    இரண்டாவது பிரிவில், 1952 இல் நடைபெற்ற முதல் தேர்தலிலிருந்து நேருவின் மறைவு வரை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவிக்கு “நேருவின் இந்தியா” என்று சரியாக பெயரிட்டுள்ளார். “உலக வரலாறின் மிகப் பெரிய சூதாட்டம்” என்று இந்தியாவின் முதல் தேர்தல் வர்னிக்கப்படுகிறது. ஓட்டுப்பெட்டியை பர்க்காவிற்குள் மறைத்து எடுத்துச்சென்ற பெண், பனிக்காலம் வந்துவிடும் என்பதால், ஆறு மாதத்திற்கு முன்பே ஓட்டுப் போட்ட ஊர், என்பது போல பல்வேறு குட்டித் தகவல்களின் மூலம் தேர்தலை சுவாரஸ்யமாக கூறிச்செல்கிறார். மதச்சார்பின்மை, ஜனநாயகம், அணி சேராமை, கருத்துச் சுதந்திரம் ஆகிவற்றின் மேல் அபார நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார் நேரு. மொழி வாரியாக மாநிலங்கள் அமைத்தல், பல்வெறு சிறு சட்டங்களாக நிறைவேற்றப்பட்ட இந்து சிவில் சட்டம், நேரு / மஹானுலொபிஸ் கூட்டணியின் ஐந்து ஆண்டுத்திட்டங்கள் ஆகிவை இதில் இடம்பெறுகின்றன. படேல் மறைவிற்குபின், நேருவின் கருத்துக்களை எதிர்ப்பதற்கு யாரும் இல்லை, இருப்பினும் நேரு சர்வாதிகாரியாக நடந்துகொள்ளவில்லை என்கிறார் குகா.1957 இல், உலகிலேயே முதன்முதலாக கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிச அரசு பதவியேற்கிறது. நேரு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர் என்ற எண்ணம், அவர் கேரள அரசை டிஸ்மிஸ் செய்யும் பொழுது சிதைகிறது. சீனா-இந்தியப் போரால் நேருவுடைய வெளியுறக்கொள்கைக்கும், அவருடைய ஆளுமைக்கும், பெருத்த அடி விழுகிறது.

    நேருவின் மறைவிற்கு பின், சாஸ்திரி பிரதமராகிறார். இந்தியா உனவு உற்பத்தியில் தன்நிறைவு அடைவது, இந்தி திணிப்பை திரும்பப்பெறுவது ஆகியவை  இளம் இந்தியாவின் மெல் உள்ள நம்பிக்கையை துளிர்க்கச்செய்யும் அம்சங்கள். மற்றபடி மூன்றாம் பிரிவிலும் இந்தியா சந்தித்த சவால்கள் ஏராளம்.

    நான்கவது பிரிவை பற்றி சுருக்கமாக சொல்வதென்றால், நேருவின் இந்தியாவை அசைத்துப்பார்த்த இந்திரா காந்தியின்

    காலியாக விடப்பட்ட இந்தியன் எக்ஸ்ஃப்ரஸ் தலையங்கம் – எமெர்ஜென்ஸி காலகட்டம்

    செயல்களின் தொகுப்பு எனலாம். குகா தொகுத்திருக்கும் நிகழ்வுகளை பார்க்கும் பொழுது, காந்தி மற்றும் நேரு இந்தியாவிற்கு கிடைத்தது, இந்தியாவின் நல்லூழ் என்பதைத்தவிர வேறு என்ன சொல்வது ?. இந்திரா காந்தி காலகட்டத்தில், இந்தியப் பொருளாதாரம், முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அரசுகள் கலைக்கப்படுகிறது. உச்சகட்டமாக அவசரநிலை கொண்டுவரப்படுகிறது, காங்கிரஸின் உட்கட்சி ஜனநாயகம் அடியோடு அழிக்கப்படுகிறது. கொள்கைகளின் மேல் நடத்தப்பட்ட ஆட்சி மாறி தனி நபர் துதி பாடும் அமைப்பாக ஆட்சி மாறுகிறது. 1971 போரில் தெளிவாக முடிவெடுத்தது மட்டுமெ இந்திராவின் சாதனையாக குகா குறிப்பிடுகிறார். இவருடைய காலத்தில் நான் ஆரம்பத்தில் கூறிய அவநம்பிக்கைகள் மேற்குலக அறிவுஜீவிகளிடம் மட்டுமின்றி இந்தியர்களிடமும் பரவுகிறது. ஒரு சோக நாவலைப் படிக்கும் உணர்வுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

    கடைசி பிரிவு 1990 – தற்சமயம் வறை கால அடிப்படையில் (chronological order) இல்லாமல் , முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளது. மண்டல் கமிஷன், ஊழல், தாராளமயமாக்கல், நவீன இந்தியாவின் எழுச்சி ஆகியவற்றை விரிவாக ஆராய்கிறார்.

    மதக்கலவரம் எங்கே யாரால் ஆரம்பிக்கப்பட்டாலும், கடைசியில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது முஸ்லீம்களே என்பதை தகவல்களின் மூலம் நிறுவுகிறார். சுதந்திர இந்தியாவில், தலித்துகளுக்கு ஒரு அம்பேத்கர் கிடைத்தைப்போல், முஸ்லீம்களுக்கு ஒரு தலைவர் இல்லாததின் விளைவையும் கோடிட்டு காட்டுகிறார். இந்துக்களை, ஒரு சின்ன நிலப் பிரச்சனையால் பா.ஜ.க. எவ்வாறு ஒருங்கினைத்து அரசியல் ஆதாயம் அடைந்தது என்பதையும் விளக்குகிறார்.  இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததிக்கு பிறகு தலித்துகளின் மேல், வன்முறை அதிகரிப்பதையும், பின் தங்கிய வகுப்புகளுக்கு அதிகாரம் கிடைத்தபின், அது மேலும் அதிகரிப்பதையும் குறிப்பிடுகிறார். தலித்துக்கள் புதிய எழுச்சியுடன் போராட ஆரம்பித்ததன் விளைவுகளே அவர்களின் மேல் ஏற்படும் வன்முறை என்பதை தெளிவுபடுத்துகிறார்.

    புத்தகம் முழுவதும் ஊடுபாவாக இந்திய அயலுறவுக்கொள்கை விவாதிக்கப்படுகிறது. கடைசியில் சினிமா, க்ரிக்கட் போன்றவற்றின் பங்களிப்பையும் குறிப்பிடத்தவறவில்லை.

    அவநம்பிக்கைகளின் பதில்.

    **** —– ****

    இந்தப் புத்தகத்தை படித்தபின், “இந்தியாவிற்கு ஜனநாயகம் காந்தியின் கொடை” என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறுவது எவ்வகை மிகைப்படுத்துத்துதலும் இல்லை என்றே எனக்குப்படுகிறது. ஜனநாயகத்தின் மூலமே இந்தியா தான் சந்தித்த சவால்களை வென்று வீறு நடை போடுகிறது என்பதை தெள்ளத் தெளிவாக இதை விட எழுத முடியுமா என்று தெரியவில்லை. வரலாறின் மேல் காதல் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.