Author: Viswanathan

  • இரு கடல் ஒரு நிலம்

    இரு கடல் ஒரு நிலம்

    இரு கடல் ஒரு நிலம் நூல்

    இரு கடல் ஒரு நிலம் மின்னூல்

    நான் இந்தியாவை குறுக்கும் நெடுக்குமாக கடந்து பல பயணங்கள் செய்திருக்கிறேன், அவற்றை பயணநூல்களாக எழுதியிருக்கிறேன். நான் செய்த ஒரு பயணம் இன்னொரு எழுத்தாளரால் முழுமையாக பதிவுசெய்யப்பட்ட இந்த நூல் எனக்குப் புதிய அனுபவம். அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை முதல் மேற்குக் கடற்கரை வரை நாங்கள் நடத்திய ஒரு நீண்ட பயணத்தின் பதிவு இது. பயணக்கதை என்பது பண்பாட்டு விவரிப்பாகவும், நுண்ணிய அனுபவச் சித்தரிப்பாகவும் ஒரே சமயம் திகழ்கையிலேயே அது இலக்கியத்தகுதி கொள்கிறது. இந்நூல் நம் பயண இலக்கியங்களில் என்றும் அழியாத ஓர் இடத்தை வகிக்கவிருப்பது


    — ஜெயமோகன்

  • அகதி சிறுகதை தொகுப்பு – ஒரு பார்வை:

    சா.ராம்குமார் மேகாலயா மாநிலத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருக்கிறார். “அகதி” அவர் எழுதிய முதல் சிறுகதை தொகுப்பு.

    அகதி தொகுப்பில் மொத்தம் பத்து சிறுகதைகள் இருக்கிறது. 

    கருவி: அலுவலகத்திலும் வீட்டிலும் வெறும் கருவியாக இருக்கும் முதியவர் பூபாலன் தன்னை காரியகர்த்தா என நினைத்துக்கொள்வதால் வாழ்க்கை அவருக்கு கசக்கிறது. உணரச்சிகள் நன்றாக வந்துள்ளது. 

    கசப்பு: ஒரு அரசாங்க உத்யோகஸ்தரின் மகனுக்கு அவரை மிகப்பிடிக்கிறது. மகன் ஐ.ஏ.எஸ் ஆகிறான். வெள்ளை உடை அணியும் அப்பா வாட்ச்மேன் என்று தெரியும்போது ஒரு கசப்பு உருவாகிறது. அந்த அமைப்பை வென்று அதன் உச்சியில் ஏறிய ஐ.ஏ.எஸ் ஆன பின்பும், அதன் நடைமுறைகளை மீற முடியவில்லை. மறக்கவும் முடியவில்லை.

    சமரசம்: திமுக உருவான காலத்தில் திமுக ஆதரவு மாணவன் பள்ளியில் கையேடு விற்கும் ஆசிரியரை எதிர்க்கிறான். ஆசிரியர் மாற்றல் வாங்கி சென்றுவிடுகிறார். பல வருடங்களுக்கு பிறகு அந்த மாணவனின் மகள் இதே ஆசிரியரிடம் காசு கொடுத்து கையேடு வாங்கிக்கொள்கிறாள். அவன் வயது, ஸ்டேஷனரி கடை வைத்து வியாபாரம் செய்யும் அனுபவம் ஒரு “சமரசத்திற்கு” அவனை வரச்செய்துவிட்டது. 

    லெனின்: லெனின் என்ற குமாஸ்தா நேர்மையாக இருந்தவரை ஐ.ஏ.எஸ் அதிகாரியை “சார்” என்று கூப்பிடுவதில்லை. முதல்முறையாக பஞ்சப்படியில் ஒரு சிறு கோல்மால் செய்கிறார். உபயோகப்படுத்தாத பயணப்படியை பெற்றுக்கொள்கிறார். அன்று முதல் நிமிர்வு குறைகிறது. “சார்” என அழைக்கிறார். உயர பறக்கும் பட்டத்தின் கயிரை சிறுவர்கள் பிடித்திருக்கிறார்கள். ஒரு குதிரையை “உடைத்து” சொல்லும் வேலையை செய்ய வைக்கப்படுகிறது.

    பெருச்சாளி: ஒரே வயதுடைய ஏழை மாமனும் பணக்கார மச்சானும் ஒன்றாக வளர்கிறார்கள். ஒரு சண்டையில் பிரிகிறார்கள். பண வசூலின்போது கறாராக இல்லாமல், கொஞ்சம் விட்டுகுடுத்ததால், வீட்டோடு வேலைக்கு வந்த ஏழை மாமனை விரட்டிவிடுகிறார்கள். அவன் கோவை சென்று நன்றாக சம்பாதித்து வாழ்கிறான். ஊரில் வியாபாரம் தேக்கம் அடைகிறது. நீண்ட நாள் கழித்து உதவி தேடி மச்சான் கோவை வருகிறார். பெருச்சாளி போன்ற ஒரு வியாபாரியிடம் முடங்கிய பணத்தை வசூல்செய்து தருகிறார் மாமன். ஒரு சிரிப்பை வரவழைக்கும் நேர்நிலை முடிவு. 

    அகதி: இரண்டு அகதிகளை மாற்றிக்கொள்கிறார்கள். எதிரி நாட்டு அகதியும் தன் சகோதரன் என்று உணரும் கதை. தன்னைப்போல அவனையும் அடித்திருக்கிறார்களா என்று பார்க்கிறான் கதைசொல்லி. 

    கான்கிரீட் நிழல்கள்: கதைசொல்லி ஐ.டி கம்பெனியில் வேலை பார்கிறான். போட்டி நிறைந்த உலகம், ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்தி முந்தும் உலகம். 

    பொன்னகரம்: பிரமோஷனுக்காக மேனேஜருடன் சல்லாபம் செய்வதை பற்றிய கதை. 

    ரோஜா: ரோஜாபூவில் மயங்கும் ஒரு கிராமத்து பெண்ணின் கதை. பள்ளியில் அவளுக்கு மிக பிடித்த ரோஜாவை திருடி தின்னும் சுப்பையா அவளை மணந்து கொள்ள போகிறான். அவன் தட்டு சின்னத்திற்கு ஓட்டு போட சொல்கிறான், அவள் திருட்டுத்தனமாக ரோஜாவிற்கு போட்டுவிடுகிறாள். எல்லோருமே தட்டை தேர்ந்தெடுக்கும்போது கோதை ரோஜாவை தேர்ந்தெடுக்கிறாள். சூடிக்கொடுத்த சுடர்கொடி. 

    பதக்கம்: ராணுவம், தீவிரவாதிகள், போலீஸ் – மூன்று குழுக்களிடையே சிக்கியிருக்கும் அசாம்/வட கிழக்கு மக்களின் கதை. 

    ##

    இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அசோகமித்ரனின் தாக்கம் உள்ளவை. யதார்த்தவாத கதைகள். “அகதி” விவரணை மட்டுமேயான கதை. மனவோட்டத்தையும், “காலத்தை”யும் நீட்டித்திருக்கிறார். “சமரசம்” கதையும், “லெனின்” கதையும் ஒன்றுதான். “சமரசம்” கதை லட்சியவாதத்தின் வீழ்ச்சி என்று தோன்றினாலும் “சமரசம்” என்ற தலைப்பே அது வீழ்ச்சியா என்றும் யோசிக்க வைக்கிறது. “கசப்பு” கதையை உணர்வதற்கு அப்பா வாட்ச்மேனாக இருக்க வேண்டும் என்பதில்லை. அப்பாவைவிட பெரிய அதிகாரத்தில் இருப்பவர்களிடம் “சார்…” என்று பதறும் அப்பா சூப்பர்மேன் இல்லை என்று முதலில் உணரும் பிள்ளைகளுக்கு தோன்றும் கசப்பு அது. 

    இந்த சிறுகதை தொகுப்பில் உள்ள முக்கியமான கதை “பதக்கம்”. மற்ற கதைகள் ஏற்கனவே நமக்கு பழகிய சூழலில் நடப்பதால் அவை தரும் உணர்வுகள் “தெரிந்தவை”யாக இருக்கின்றன. பதக்கம் கதையின் கரு ஒரு நாவலாக விரித்து எழுதும் அளவிற்கு பெரியது. நூலின் ஆசிரியர் வடகிழக்கில் ஆட்சிப்பணியில் இருப்பதால் இந்த கதை உருவாக்கும் சித்திரம் மிகுந்த நம்பத்தகுந்ததாக இருக்கிறது. இன்னொருவர் எளிதில் எழுதிவிட முடியாது. 

    பதக்கம்:

    “பதக்கம்” கதையின் களம் அசாம். சோஹன் என்ற தீவிரவாதி பிரியா என்ற பெண்ணை கொன்றுவிடுகிறான். பிரியா தன் குழுவை சேர்ந்த உத்பலை ராணுவத்திடம் சிக்க வைத்தாள் என்ற சந்தேகம்தான் கொலைக்கு சொல்லப்படும் காரணம். பிரியா சோஹனை நிராகரித்து உத்பலை காதலித்தவள்.  ராணுவமும், போலீசும் உள்ளூர் மக்களை தூண்டிலாக பயன்படுத்தி தீவிரவாதிகளை நெருங்க முயற்சிக்கிறார்கள். உத்பலை ராணுவம் கொண்டுசென்று அவன் திரும்பவில்லை. உத்பலை என்ன ஆனான் ? தெரியவில்லை. ஆனால் உத்பலை அங்கே / இங்கே பார்த்ததாக கதைகள் இருக்கின்றன. 

    உத்பல் படித்தவன். பிரியா அந்த நிலம். அது தீவிரவாதத்தை வெறுத்து மிதவாதத்தை, கல்வியை விரும்புகிறது. ஆனால் தீவிரவாதம் அந்த நிலத்தை விடவில்லை. ராணுவத்தினர் தங்கள் பதவி உயர்வுக்காக ஆட்களை கொன்று கணக்குகாட்டி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, பதக்கம் பெறவே முயல்கிறார்கள்.

    இந்த கதையை படிக்கும் வரை ஒரு சிக்கலை தீர்ப்பதில் போலீசிற்கும் ராணுவத்திற்கும் இருக்கும் வேறுபாடு எனக்கு புரிந்ததில்லை. இரண்டுமே அரசின் ஆயுதம் ஏந்திய கரங்கள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அரசு அதிகாரத்தின் அடுக்களிலும் மக்களுடன் தொடர்பில் இருக்கும் உள்ளூர் தரப்பிற்கும், வெளியில் இருந்து வருபவர்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. அதேபோல தீவிரவாதிகள் தரப்பில் இருக்கும் உத்கல் போன்ற மக்கள் தொடர்பாளர்கள்தான் வளர்ந்து அரசியல்வாதிகள் ஆகிறார்கள். 

    “எல்லாருக்கும் ஒரு சின்ன கனவு உலகம் இருக்கும் சார். அத அவனுக்கு காட்டிக்கொடுத்துட்டா, என்னத்துக்கு இந்த கஷ்டம் எல்லாம். காட்டுல வாழ்றத ஏதோ பெரிய சாகசம்னு வெளிய இருக்கிறவங்க நினைப்பாங்க. எங்க கூட இருந்தா தெரியும். மலேரியா, காலரான்னு உங்க துப்பாக்கியைவிட அதுவே அதிகமா கொன்னுடும்”  – என சரணடையும் தீவிரவாதிகளின் மனநிலையை பற்றி அவர்களுடைய செய்தி தொடர்பாளர் உத்பல் சொல்கிறான்.

    எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கிய நதி எனக்கு பிடித்த நாவல். அசாம் மாநிலத்தின் பின்புலத்தில் “This street has no other side” என்ற நாவலை எழுதும் அரசு அதிகாரி தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஒரு ஊழியரை மீட்கப்போராடுகிறார், அவர் கண்டுபிடிக்கும் தொலைதொடர்புத்துறை சார்ந்த ஊழல், அவருடைய தனிவாழ்க்கை என மூன்று சரடுகள். இந்த மூன்றும் அஸ்ஸாமின் இருந்த தீவிரவாதத்தின் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும். “This street has no other side” என்பது தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் மட்டுமல்ல மொத்த வடகிழக்கை குறிப்பதாகவே எனக்கு தோன்றியது. பி.ஏ.கிருஷ்ணன் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இந்த நாவலின் காலகட்டம் குறிப்பிடப்படவில்லை என்றாலும் தோராயமாக முப்பது-நாற்பது வருடங்களுக்கு முன்பு நடப்பதாக சொல்லலாம். அன்று வடகிழக்கில் பெரிய அளவில் உட்கட்டமைப்பு இல்லை. ஆனால் கடந்த பத்து வருடங்களில் இந்திய அரசு வடகிழக்கில் சாலை, பாலம் என உட்கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். சாலையால் சந்தை உருவாகிறது. மணிப்பூர் தவிர மற்ற வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்திருக்கிறது. 

    வடகிழக்கில் இனக்குழு சண்டைகள் தீர்வதற்கும், அந்த பகுதி வளர்வதற்கும் உட்கட்டமைப்பு மட்டும் போதுமா என்று தெரியவில்லை. ஆனால் “பதக்கம்” போன்ற கதைகள் “This street has other side” என்று தோன்றவைக்கின்றன.  

    அகதி நூலை – கிண்டிலில் வாங்க – https://www.amazon.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-Agathi-Tamil-Ramkumar-S-ebook/dp/B084FJFF4R 

  • பீட்டர்மாரிட்ஸ்பர்க் – சிறுகதை

    பீட்டர்மாரிட்ஸ்பர்க் – சிறுகதை

    [Delighted to share that my short story “Pietermaritzburg” has been published in the January 2024 issue, the 60th edition of Kaalam magazine – a literary publication from Canada, founded by Kaalam Selvam. கனடாவில் இருந்து வெளிவரும் காலம் 60ஆவது இதழில் வந்த என்னுடைய சிறுகதை.]

    “டேய்…நீயே 2005ல தான காலேஜ் முடிச்ச…வேலைக்கு சேந்து ஒரு வருஷம் கூட ஆகல…உனக்கு என்ன தெரியும்னு சிஸ்கோ சிஸ்டம்ஸ்ல உன்ன இத்தாலிக்கு அனுப்புறாங்க?” கப்பலில் ஃபோர்த் இஞ்ஜினியராக இருக்கும் என் அண்ணன் கேட்டான். கப்பல்துறையில் ஒவ்வொரு பதவி உயர்விற்கும் சில வருடங்கள் கப்பலில் பணியாற்றியபின்,பதவி உயர்வுக்கான தேர்வுக்கு ஆறு மாதங்கள் படித்து, எழுத்துத்தேர்விலும், நேர்முகத்தேர்விலும் வெற்றி பெற  வேண்டும்.  “போறவன்வெல்லாம் தெரிஞ்சா போறான்? போய் தெரிஞ்சுக்கறதுதான்…சீனியருக்கு குழந்தை பொறக்கப்போகுது. அதனால அவரால போக முடியலை…இதெல்லாம் டப்பா மெயிண்டனஸ் பிராஜக்ட்ன்னு யாருமே கிட்ட வரலை…யாராவது பண்ணனுமில்ல…வீக்எண்ட்ல எடுத்து ஆறு மாசமா நோண்டிட்டு இருந்தேன்…” 

    “போய் தெரிந்துகொள்ளும்” திராணி உள்ள அனைத்து உயிரினங்களையும் உண்டிவில்லில் வைத்து வெளிநாடுகள் நோக்கி ஏவிக்கொண்டிருந்தன பெங்களூரின் மென்பொருள் நிறுவனங்கள். முதல் விமானப்பயணம். முதல் நட்சத்திர விடுதி. முதல் முதல்கள்.  இத்தாலியின் மிலான் நகரம். ஃபேஷன் டிவியில் பார்த்த பெயர். மூன்று வாரப் பயணம். நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்துச் சொல்லிக்கொண்டிருந்தேன்.   

    மிலானில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம் மிலான் டூமோ என்றது கூகிள். ஐரோப்பாவின் மிகப்பெரிய கத்தீட்ரல். கோதிக் பாணி தேவாலயம். அறுநூறு வருடங்களானதாம் கட்டி முடிக்க. நாற்பதாயிரம் பேர் கூடலாமாம். “இப்படித்தான் லூவ்ர ம்யூசியத்தை பத்தியும் ஆ..வூ..ன்னாங்க…பாக்கறதுக்கு ஒரு வாரம் போதாதாமே… இரண்டு மணி நேரத்துல பாத்தாச்சு…எல்லாம் ஒரே அம்மணக்குண்டியா வரஞ்சு வைச்சுருக்கானுங்க…ஒன்ன பாத்தா எல்லாம் அதேதான்…” எனக்கு முன்பே பிரான்ஸுக்குச் சென்று திரும்பிய கல்லூரி நண்பன் ராஜா சொன்னான். 

    “ச்சாவ். வெல்கம் டு மிலான். என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் அழைக்கவும் – ஸ்டெஃபனோ.” இத்தாலி அணியின் மேலாளர் இமெயில் அனுப்பியிருந்தார். டிசம்பரின் கடைசி வாரத்தில், அந்தக்கால அரசு பள்ளிக்கூடம் போன்று இருந்த பெங்களூர் விமானநிலையத்தில் ஏறி எதிர்கால விண்வெளி நிலையம் போன்று இருந்த மிலான் விமானநிலையத்தில் இறங்கினேன். மிலான் நகரின் பிரேலி சிஸ்டம்ஸ் என்ற ஃபைபர் ஆப்ட்டிகல் நெட்வொர்க்கிங் நிறுவனத்தை நான் வேலை செய்யும் அமெரிக்க நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியிருந்தது. இணையப் பயன்பாடு பல்கிப்பெருகும் என்ற எதிர்பார்ப்பு 2000த்தில் பொய்த்தது. அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் வேலைகள் மெல்ல இந்தியாவிற்கு மாறத்துவங்கின.  குளத்தில் எறியப்பட்ட கல்போல இந்திய அலுவலகத்தில் இருந்து மிலான் அலுவலகத்திற்கு வந்த முதல் நபர் நான். முதல்நாள் அலுவலகத்தில் ஆர்வம், குறுகுறுப்பு, உற்சாகம் என அலையலையாக அறிமுகங்கள். ஆர்குட் வலைதளத்தில் வாழும் நகரத்தை “மிலான்” என அப்டேட் செய்துகொண்டேன். 

    “பெங்களூரில் மீட்டிங் எல்லாம் ஆங்கிலமாமே…இந்தியனில் இல்லையா?” என்று கேட்டாள் சின்ஜியா. நூறு ரூபாய் நோட்டை எடுத்து பதினைந்து இந்திய மொழிகளின் வரிவடிவங்களை காட்டினேன். “அ” வை தமிழில், இந்தியில், கன்னடத்தில் எழுதினேன். சட்டென இந்தியா அவர்களுக்கு முப்பரிமாணத்தில் தெரிந்தது.  காந்தியை எல்லோருமே அடையாளம் கண்டது எனக்கு ஆச்சரியம். உணவு இடைவேளையில் உலகப்போர், ரோமப்பேரரசு, இந்தியா, இந்து மதம், காந்தி, சோனியா காந்தி என உரையாடல்கள் நீண்டன. மதிய உணவிற்குப்பின் எல்லோருமே கருப்பு காபி குடித்தார்கள். நான் பால் கலந்து டீ குடிப்பதைப் பார்த்து அதிர்ச்சி  அடைந்தார்கள். “வெண்டிடுவே” என என் வயதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி. “வார இறுதியில் நீச்சல் போட்டியில் கலந்து கொள்கிறேன்” என்றார் நாற்பது வயது மரியோ. பருமனானவர்களே அலுவலகத்தில் இல்லை. காலையில் ஒன்பது மணிக்கு வந்து ஆறு மணிக்குக் கிளம்பினார்கள். நேர்த்தியும் ஒழுங்கும் என வேலையை மிகப்பொறுப்பாக செய்தார்கள். 

    இங்கே டாக்ஸியே பி.எம்.டபுள்யு, ஆடி, பென்ஸ் கார்கள்தான். டாக்ஸி எல்லாம் கட்டுப்படியே ஆகாது. செல்போன் ரோமிங் கட்டணமும் மிக அதிகம். சர்வீஸஸ் கம்பெனிகளில் வெளிநாட்டில் தனி சம்பளம் தருவார்கள். பிராடக்ட் கம்பெனிகளில் உணவு, போக்குவரத்து என தினப்படிகளோடு சரி. “இந்தியாவிலிருந்தே ஒரு மாசத்துக்கான சாப்பாட்ட எடுத்துட்டு வந்துட்டு, இங்க ஹோட்டல்ல, கிராசரி ஸ்டோர்ல கீழே கிடக்குற ரிசீப்டெல்லாம் பொறுக்கி டெய்லி பேட்டா வாங்குறான்டா என் லீட்” என்றான் ஜெர்மனியில் இருந்த அருண்பரத். “இந்த காச நீ தருவியான்னு கேக்குறான்.”  “வெளிநாட்டில் போய் பக்கி மாதிரி நடந்துகொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் உங்களுக்கு இங்கேயே ஸ்டார் ஹோட்டல் மாதிரி அறைகள். ஹாட் ஷவர். வெஸ்டர்ன் டாய்லட். தினமும் உங்கள் அறைகளை சுத்தப்படுத்துகிறோம். புல் ஹேண்ட் ஷர்ட், டை, ஷூ…” முன்பு வேலை செய்த மைசூர் பயிற்சி மையத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் சொன்னார். பட்டொளி வீசி பறக்குது பாரீர்…

    “நாளை நீ கண்டிப்பாக டூமோவிற்கு போகவேண்டும். என்ன பிரம்மாண்டம்! என்ன அழகு!” வெள்ளிக்கிழமை மதியம் சொன்னாள் சின்ஜியா. “ஆம். ஏற்கனவே திட்டமிட்டிருக்கிறேன்” என்றேன் உற்சாகமாக. விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. அல்லது உறங்கவே இல்லை. ஜெட்லாக் இன்னும் இருந்தது. வெந்நீர் தொட்டியின் கதகதப்பையும் வெம்மையையும் விட்டு எழுந்துவர மனமே இல்லை. எப்படியும் முதல் பேருந்து ஐந்து மணிக்குத்தான். Z321. கடைசி நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து டூமோவிற்கு மெட்ரோ ரயில். விடுதி வரவேற்பாளர் உடைந்த ஆங்கிலத்தில் சொல்லியிருந்தான். சிவப்புநிற சிட்டி டூர் பஸ் டூமோ, நகர்சதுக்கம், கோட்டை எல்லாவற்றிற்கும் போகும். 

    கம்பளி கையுறை, முட்டி நீளமுள்ள அங்கி எல்லாம் அணிந்துகொண்டு அதிகாலை நான்கே முக்கால் மணிக்கு விடுதியில் இருந்து கிளம்பினேன். தெரு விளக்கொளியின் மங்கிய வெளிச்சம். இருள்.  விடுதியின் பளீர் ஒளியில் இருந்து கண்கள் பழக சில நிமிடங்கள் எடுத்தது. வலது சுண்டு விரல் குளிரை உணர்ந்தது. கைகளை பாக்கெட்டிற்குள் விட்டுக்கொண்டு பேருந்து நிறுத்தத்தை அடைந்தேன். 

    Z321 என மஞ்சள் எழுத்துக்கள் மின்ன பேருந்து வந்தது. ஏறினேன். “பிக்லெட்டி…பிக்லெட்டி” என்றார் ஓட்டுநர். ம்ம்? கிரெடிட் கார்டை நீட்டினேன்.  இல்லை என தலையசைத்தார். “கோயிங் டூ மெட்ரோ ஸ்டேஷன்?” என்று கேட்டேன். “நோ இங்லீஸ்” என்றார். ஏதோ முணுமுணுத்தபடி வண்டியை எடுத்தார். உயிரற்ற கண்களுடன் ஒரு பாட்டி அமர்ந்திருந்தாள். “டிரெயின் ஸ்டேஷன்?” என கைகளால் ரயில் ஓடுவதைப்போல செய்கை செய்தேன். பொக்கை வாய் திறந்தது. பதில் எதுவும் வரவில்லை. சிலர் கண்களை மூடி தலை சாய்த்திருந்தனர். 

    ஏதோ சரியில்லை என்று தோன்றியபடி இருந்தது. அதை உணர்ந்தவர் போல ஒரு நடுத்தர வயதுக்காரர் விழித்துக்கொண்டார். அவருடன் பேசி தவறான திசையில் ஏறிவிட்டேன் என புரிவதற்கு மேலும் இருபது நிமிடங்கள் ஆகிவிட்டது. ஒரு பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுப் போய்விட்டார்கள். 

    கருஞ்சாம்பல் நிற வானம். தொலைவில் இலைகள் இல்லாத மரங்கள் காற்றில் வேகமாக அசைந்தன. ஒரு குளிர் காற்று முகத்தில் படீரென அறைந்தது. மூக்கு எரிந்து கண்களில் நீர் கொட்டியது. அப்போதுதான் சட்டென ஒன்றை உணர்ந்தேன். இந்த ஒரு வாரமாக அலுவலகம், டாக்ஸி, விடுதி என வெம்மையில் மட்டுமே இருந்திருக்கிறேன். குளிரை அறியவே இல்லை. “ஜன்னல் ஓரத்துல உக்காராத…குளிரும்” என்று அம்மா சொல்லும் “குளிரிற்கும்” இந்த “குளிரிற்கும்” உள்ள தூரம், நான் வேலை செய்துகொண்டிருந்த பெங்களூரிற்கும் இப்போது ஒரு மாத வேலைக்காக வந்திருக்கும் மிலான் நகரத்திற்கும் உள்ள தூரத்தை விடப் பல ஆயிரம் மடங்கு. 

    உடல் வெடவெடக்க துவங்கியது. பற்கள் தன்னிச்சையாக தடதடத்தது. அப்படியே தரையில் உட்கார்ந்து உடலை இறுக்கி தலையை கால்களின் இடையே குறுக்கிக்கொண்டேன். ஆரவாரத்துடன் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென பாதாளத்தில் உருண்டதுபோல அந்த பேருந்து நிலையத்தில் அதிகாலையில் மாட்டிக்கொண்டேன். அது எந்த இடம் என்றே தெரியவில்லை. கடைகள் எதுவும் திறக்கவில்லை. டாக்சியும் எதுவும் இல்லை.  செல்போனும் ரோமிங்கில் “நோ சர்வீஸ்” என்று காட்டியது.

    பெருங்குளிரை அறியும் முதல் அனுபவத்தை ஒரு தமிழ் உடல் என்றுமே மறக்காது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைதான் நம் இலக்கணமே. பனியும் பனிசார்ந்த இடமும் அதில் இல்லையே. தமிழ் என ஒரு மொழியே உருவாகாத கடைசி பனியுகக்காலத்தில்தான் குளிரை அறிந்திருப்போம். “புடிச்சானுங்க பாரு நம்ம ஆளுங்க புளியங்கொம்புமாதிரி பூமில ஒரு இடத்த…கட்டின கோமணத்தோட காலம்பூரா கட்டையா நீட்டிட்டு கிடக்கலாம்.” என்னென்னவோ எண்ணங்கள். கூடவே தனியாக ஒரு எண்ணம் “தம்பி தமிழ்நாடு…அந்த பெருமையெல்லாம் இருக்கட்டும்…இங்கிருந்து எப்படி போவ?” 

    உதடுகளை நாக்கால் தடவியபோது வெடிப்புகள் இடையே உப்புச்சுவை. மூக்கின் நுனியில் எந்த உணர்வும் இருப்பதுபோல தெரியவில்லை. முகமே மரத்திருந்தது. சுண்டு விரலில் ஊசியால் குத்துவது போல இருந்தது. விரல்களை பார்த்தேன். கம்பளி கையுறையில் நூல் பிரிந்து ஒரு ஓட்டை. எனக்கு முன்பே ஐரோப்பாவிற்கு ஆன்சைட் வந்த அருண்பரத் தோல்கையுறை வாங்கச்சொன்னான். நான்தான் விலைகுறைவு என கம்பளிகையுறை வாங்கினேன். கைவிரல்களை விரித்து மடக்கி, முகத்தை தொட்டுப்பார்த்தேன். யாரோ தொடுவது போல இருந்தது. 

    தலையை தூக்கி பார்த்தபோது சிறிது தொலைவில் ஒரு இத்தாலிய பெண் நின்று கொண்டிருந்தாள். தோல் கையுறை. முட்டி வரை வரும் தோல் சப்பாத்து. நேர்த்தியான குதிரைவால் சடை. வாயில் சிகரட். எழுந்து சென்று “எக்ஸ்கியூஸ் மீ…” என அழைத்தேன். கவனிக்கவில்லை. மீண்டும் சத்தமாக அழைத்தேன். அவள் தலையை இடம் வலமாக அசைத்து, திரும்பி சிகரட் புகையை ஊதினாள். யாரோ பின்னந்தலையில் அடித்தது போல ஒன்றை உணர்ந்தேன். மிலான் நகரத்தில் வெள்ளை இல்லாத எல்லா நிறமுமே – கருப்பு, பழுப்பு, மஞ்சள் – தெருவில்தான் இருந்தன. பிச்சை எடுத்தன. ரோட்டோரத்தில் கடை விரித்திருந்தன. இந்திய முகங்கள் இருந்தன. திருட்டுப்படகில் வரும் பங்களாதேசிகள் என்று படித்திருக்கிறேன். பரதேசிகள். நான் கிளம்புவதற்குமுன் பேசிய ஒருவர்கூட இத்தாலிக்கு ஆன்சைட் சென்றதில்லை.

    “நான் அந்த பஞ்சப்பரதேசிகளில் ஒருவன் இல்லை…படித்தவன். சாப்ட்வேர் இஞ்ஜினியர்”. அவளிடம் எப்படி சொல்வது? ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் யாருமற்ற பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறாள் என்றால் ஏதோ ஷிஃப்ட் வேலை செய்கிறாள். விடுதி, மருத்துவமனை, எதுவோ. இத்தாலியில் எண்பது சதவீதம் பேரிடம் கார் உள்ளது. அவளிடம் இல்லையா? போடி பிச்சக்காரி…உன்னைவிட படித்தவன் நான். ஆத்திரமான மூன்றாவது “எக்ஸ்கியூஸ் மீ”க்கும் பதில் இல்லை. 

    ஒரு மணிநேரம் முன்புதான் இதமான வெந்நீர் குளியல் என்பதை நம்பவே முடியவில்லை. இங்கிருந்து எப்படியாவது போனால் போதும். கால் விரல்களும் மரக்கத்துவங்கின. “இந்த குளிரிலா உலகை வென்று இவ்வளவு உச்சங்களை உருவாக்கியிருக்கிறது மேற்கத்திய பண்பாடு?” கெஞ்சும் மெல்லிய குரல் “எக்ஸ்க்யூஸ் மீ…”, நடப்பது நடக்கட்டும் போ என்ற தீனமான “எக்ஸ்க்யூஸ் மீ…” எதற்கும் பதில் இல்லை. அவளுடைய சிகரட் தீர்ந்திருந்தது. கவிழ்த்துப்போடப்பட்ட கரப்பான் பூச்சி போல அந்த பேருந்து நிலையத்தில் ஓய்ந்திருந்தேன். என் விரல் நுனிகளில் தோலுரிந்து ரத்தம் வந்தது. நகக்கண்களில் விண்வினண்  என்ற வலி.

    எல்லாவிதமான வேண்டுதல்களும் முடிந்திருந்தன.  கால்களில் முழுதாகவே உணர்ச்சிகள் இல்லாமல் கட்டை என தோன்றிய போது  ஒரு பேருந்து வந்தது. அவள் ஏறினாள். நானும் தடுமாறி நொண்டிச்சென்று ஏறினேன். கீழே இருக்கவே முடியாத குளிர். பேருந்து எங்கே போனால் என்ன?  “பிக்லெட்டி…பிக்லெட்டி” என்றார் ஓட்டுநர். அவரை பார்த்தேன். எதிரே மூடியிருந்த கியோஸ்க் ஒன்றை காட்டி “பிக்லெட்டி” என்றார். “எக்ஸ்க்யூஸ் மீ”, “பிக்லெட்டி” என்ற இரண்டே வார்த்தைகளில் மொத்த உரையாடல்களும் அடங்கியது. யூரோ நோட்டுகள், காயின்கள், கிரெடிட் கார்ட், பாஸ்போர்ட், கம்பெனி ஐடி கார்ட், காந்தி சிரிக்கும் ரூபாய் நோட்டுகள் என ஒவ்வொன்றாக காட்டினேன். “பிக்லெட்டி” என்றார் தீர்க்கமாக. பொருளற்ற வெற்று காகிதங்கள். கீழே இறங்கினேன். பேருந்து புறப்பட்டுவிட்டது. அட பிக்லெட்டிகளா!

    ஒரு குரல் கேட்டது. திரும்பி பார்த்தேன். “நீ இலங்கையா?” என்னை நோக்கி வந்த அந்த கரிய மனிதர் ஆங்கிலத்தில் கேட்டார். ஆங்கிலம்! ஆங்கிலம்! கெட்டியாக பிடித்துக்கொள். இந்திய முகச்சாயல். சராசரி உயரம். மீசை. 

    “இல்லை. இந்தியா.” என்றேன். ஆனால் இவர் யார்? சிங்களரா? ஈழத்தமிழரா? புலியா?  பாஸ்போர்ட்டையும், பணத்தையும் என் கை அநிச்சையாக கெட்டியாக பிடித்துக்கொண்டது. 

    “இந்தியாவில் எங்கே?” பயில்வானுக்குரிய உடல். கையுறைகள். சப்பாத்துகள். பெரிய அங்கி. தெளிவான குரல். ஐம்பது வயது இருக்கும். குளிர் அவரை எதுவும் செய்யவில்லை.  

    “தமிழ்நாடு” என தொண்டை வரை வந்த சொல், அவர் கண்களைப்  பார்த்து சில நொடிகள் தயங்கியபின்  “பெங்களூர்” என்று மாறியது. வாய் நடுங்கி குளறியது. நடுக்கத்தையும் மீறிய எச்சரிக்கை உணர்வு. 

    “நீயும் வாட்ச்மேனா?” 

    என்னது? வாட்ச்மேனா? “இல்லை…இல்லை…சாப்ட்வேர் இஞ்ஜினியர்.” பற்கள் தடதடத்தன. நான் சொன்னது அவருக்கு புரியவில்லை என அவர் கண்கள் காட்டியது. “கம்ப்யூட்டர்” என்று சொல்லி கைகளால் டைப் அடித்து காட்டினேன். சாப்ட்வேர் என்பது தொட்டு உணரக்கூடிய ஒரு பொருள் இல்லை. வரலாற்றில் இதற்கு முன்பு கண்ணால் பார்க்கக்கூடிய ஒரு பொருளை உருவாக்காத துறை ஒன்று இருந்திருக்கிறதா? எப்படி விளக்குவது?

    மெல்ல தலையை அசைத்து புன்னகையுடன் ஆமோதித்தார். எந்த தயக்கமும் இல்லாமல் அவரை பற்றி சொன்னார். இங்கே ஒரு வங்கியில் காவலாளியாக பணிபுரிகிறார். இரவு ஷிஃப்ட் முடிந்து தன்னுடைய அறைக்கு திரும்புகிறார். மெல்ல நான் தமிழ்நாடு என்று சொன்னேன். இரண்டு தெரு தள்ளி ஒரு கடைக்கு அழைத்து சென்று, சரளமாக இத்தாலியன் பேசி எனக்கு பிக்லெட்டி வாங்கி தந்தார். பயணச்சீட்டு. பேருந்தில் ஏறியபின் பயணச்சீட்டு வாங்கமுடியாதாம். பெட்டிகடைகளில் முன்பே வாங்க வேண்டுமாம். அடுத்த பேருந்தில் ஏறினோம். கதகதப்பாக இருந்தது. 

    அவர் பேசிக்கொண்டே வந்தார். அவர் இலங்கை. காலி கடற்கரையில் ஒரு கடை வைத்திருந்தார். 2004 சுனாமியில் கடை அழிந்துவிட்டது. அவர் அம்மாவும் சுனாமியில் இறந்துவிட்டார். பின்பு ஒரு வருடம் இத்தாலி மொழி கற்று, தேர்வு எழுதி, மிலான் நகரத்திற்கு வந்தார்.

    பேருந்தில் இறங்கி டூமோவிற்கான மெட்ரோ ரயிலில் ஏறினோம். 

    “புலிகளால் எங்களுக்கு நிறைய பிரச்சனைகள்” என்று முகம் சுளித்தபடி சொன்னார்.

    “இந்தியாவில் நாங்கள் பற்பல மொழி பேசி ஒன்றாக இருக்கிறோமே?” என்றேன்.

    “நீங்கள் பெரிய நாடு. நாங்கள் கையளவு. இரண்டாக எப்படி பிரிய முடியும்?” என்று கேட்டார்.

    உரையாடல் தொடர்ந்தது. வாதம். எதிர்வாதம். அனல்வாதம். புனல்வாதம். வெம்மையும். கதகதப்பும் கூடியபடி வந்தது. 

    பூமியின் அடியில் இருந்த மெட்ரோ ரெயிலில் இருந்து மேலே ஏறி வந்தோம். சூரிய ஒளியில் நகரம் துல்லியமாக தெரிந்தது. அருகே ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றார். ஒரு க்ரொஸாந்தும் காபியும் வாங்கினேன். என் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும் முன், உணவிற்கு அவரே பணம் தந்தார். என் கையில் ஒரு இருபது யூரோ நோட்டை திணித்தார். தொலைபேசி எண் தந்து அழைப்பதற்கு தயங்காதே என்றார். பார்ப்போம் என சொல்லி பிரிந்தோம். 

    நமக்கெல்லாம் பல வருடங்கள் முன்பு தென்ஆப்ரிக்காவிற்கு ஆன்சைட் போன லண்டன் எஜுக்கேட்டட் வக்கீலிடம் கேட்க தோன்றியது, “மோகன்தாஸ், டர்பனில் அந்த முதல் வகுப்பு டிரெயின் டிக்கட்டை எடுக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றியது?” 

    ஒரு புன்னகையுடன் எதிரே தெரிந்த பிரம்மாண்டமான கத்தீட்ரலை நோக்கி நடந்ததேன்.


  • 2023

    2023

    Literature:

    • In October 2023, I participated in the Boone Literary Camp in Boone, NC, organized for the second consecutive year by the Vishnupuram Literary Circle (VLC). Special guests at the event included writers Jeyamohan (Je) and Arunmozhi Nangai.
    • In July 2023, I had the privelege of meeting writers Bava Chelladurai, Sahitya Akademi Award winner Imayam, translator/publisher K.V.Shailaja in Sacramento, CA. Bava, renowned as a storyteller and YouTuber in Tamil circles, stands out for his efforts in bringing high literature to mainstream audience. I was particularly impressed by Bava’s warmly welcoming presence.
    • It was quite inspiring to meet translator Priyamvada Ramkumar and her husband Vijay at San Francisco during their US visit in November 2023. Priyamvada’s excellent translation of Je’s Aram short story collection – “Stories of the True”’ was shortlisted for ALTA’s National Translation Award. Priyamvada’s distinction as a “Zero to One” translator is evident in her groundbreaking achievement—being the first to publish a debut translation of Jeyamohan, a prolific writer with decades of work.
    • Delivered a brief speech on writer Era.Murukan’s novel “Moondru Viral” during the Ka.Na.Su literary discussion series organized by VLC on January 21st. Also presented a short speech on “Paruvam” the Tamil translation of SL Bhyrappa’s “Parva” a masterpiece based on the Indian Epic Mahabharata, honoring writer and translator Pavannan at another Ka.Na.Su literary discussion event organized by VLC organized to honor writer and translator Pavannan on August 19.
    • Participated in the premiere of Prabu Muruganandam’s short film “In the Beginning” in Portland during Feb 2023.

    Technology:

    • Delivered a tech talk – “Powering Digital Transformation of Fleets” at IEEE sponsored conference on IoT & Security, hosted by Information Technology department, PSG College of Technology, India on Feb 11, 2023.
    • Organized VPT programming contest on Aug 26, 2023 along with Mahendra & Arulraj. We expanded this year’s contest to include students from Srilankan Universities (University of Moratuwa & University of Peradeniya). Also met Arulraj in person when he visited SF for an AI conference.

    Travel:

    • Traveled to Vegas to meet Austin Sounder’s & Raleigh Rajan’s family in February 2023. 
    • Traveled to Seattle & Portland as part of Je’s extended tour in October 2023. Thank you Shankar Pratap & Prabu for organizing “meet the author” events and Sujata & Srikanth for hosting us.
    • Camped at lower campground Yosemite National Park & Emerald bay state park in Lake Tahoe during summer.

    Health:

    • Dealing with back pain for years, I joined live sessions with Yoga instructor Sounder G and now practice yoga daily. Live sessions are next best alternative to in-person. Highly recommend exploring more at https://www.satyamtraditionalyoga.com/

    Happy New Year 2024.

  • 2022

    2022

    Literature:

    • Very excited to meet Writer Jeyamohan after seven years. I went on a cross country road trip with him, his wife Writer Arunmozhi Nangai and Composer Rajan Somasundaram.
    • Participated in Boone Literary Camp organized by VLC – spoke in two sessions (Science Fiction & Kambaramayanam)
    • Organized two “Meet the Author” events for Writer Jeyamohan at Folsom public library & Walnut Creek,CA.
    • Wrote an article about Venmurasu in Syamanthakam, a collection of articles, celebrating 60 years of Writer Jeyamohan.
    • Vishnupuram Literary Circle has started Ka.Na.Su discussion forum. Gave a short speech on Writer Yuvan Chandrasekar’s short story collection – “Neerparavaigalin Dhyanam

    Technology: (Along with Mahendrarajan Chandrasekaran)

    • Conducted 2022 VPT programming qualifier contest on Dec 31st. We were unsure of students participation, if we conduct the contest on New Year’s eve. But we decided to go ahead, as who ever shows up on New Year’s eve will be motivated enough. Twenty teams signed up and ten teams submitted their code. We will announce the results in a week.
    • We started some open source projects with students who won the 2021 VPT contest. We will continue them in 2022 as well. Happy to note that one of the team which won the 2021 VPT contest, went ahead and won the first prize (₹ 1,00,000) in Smart India Hackathon.
    • Translated two articles (Story of Infosys (Original: Source Code), “How to Start a Startup” – Paul Graham) into Tamil and they were published in “Kizhakku Today” website.

    2022 is a satisfying year. Wishing everyone a Happy New Year.

  • ஸ்டார்ட்-அப் ஆரம்பிப்பது எப்படி? – பால் கிரஹாம்

    Tamil translation of “How to Start a Startup” by Paul Graham.

    பால் கிரஹாம் ஸ்டார்ட்-அப் உலகில் நன்கு தெரிந்த பெயர். பால் கிரஹாமுக்கு முந்தைய காலகட்டத்தில் [2000 ஆம் ஆண்டுக்கு முன்பு], ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் குறைந்தபட்ச முதலீடு சில மில்லியன் டாலர்கள். முதலீடு அதிகமாக இருந்ததால், குறைவான நிறுவனங்களே ஆரம்பிக்கப்பட்டன. வங்கிகளுக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் எப்படி முதலீடு செய்வது என்று புரியவில்லை. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஆரம்பிக்கக்கூடிய இருவது வயதில் இருந்த இளைஞர்களுக்கும் சரியான வழிகாட்டிகள் இல்லை.

    பால் கிரஹாம் ஒரு மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பித்து, வளர்த்து, பின்பு யாகூ நிறுவனத்திடம் விற்றார். அதில் கிடைத்த பணத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஒரு வென்ச்சர் கேப்பிடல் நிறுவனத்தை ஆரம்பித்தார். வொய் காம்பினேட்டர் (Y Combinator) என்ற அந்த முதலீட்டு நிறுவனம், ஒரே நேரத்தில், குறைந்த முதலீட்டில் பல ஸ்டார்ட்-அப்களை ஆரம்பிக்கும் ஒரு மாதிரியை உருவாக்கியது. கிட்டத்தட்ட ஸ்டார்ட்-அப் உலகில் முதலீடு செய்யும் அனைத்து முதலீட்டு நிறுவனங்களும், பின்பு பால் கிரஹாமின் மாடலைப் பின்பற்றின.

    Y Combinator, ஸ்டார்ட்-அப் ஆரம்பிக்கும் இளைஞர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தது. வருடா வருடம் வொய் காம்பினேட்டர் ஐம்பது-நூறு மென்பொருள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஆரம்பிக்க உதவியது. அதில் சேர்ந்த நிறுவனர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி, ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக்கொண்டார்கள். தாங்கள் ஆரம்பித்த நிறுவனங்கள் சரியாக ஓடவில்லை என்றால், நிறுவனங்களை மூடிவிட்டு, நன்றாகச் செயல்படும் நிறுவனங்களில் போய் இணைந்துகொண்டார்கள்.

    மேலும், பால் கிரகாம் ‘ஹேக்கர் நியூஸ்’ – https://news.ycombinator.com/news என்ற வலைதளத்தையும் நடத்துகிறார். தன் தளத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுகிறார் – http://www.paulgraham.com/articles.html – மென்பொருள் துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஆரம்பித்த பலருக்கும் இவரது கட்டுரைகளும் வலைதளங்களும் மிக பயனுள்ளவையாக இருந்தன.

  • இன்ஃபோசிஸ் வென்றது எப்படி? – ஒரு விரிவான கதை

    தாராளமயமாக்கல் இந்தியாவை உலகின் மென்பொருள் தலைநகரமாக மாற்றியது. இந்தியாவின் வெற்றிகரமான மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் உருவான கதை இது. வேதிகா காந்த் என்பவர் ஓர் இணைய இதழில் (https://fiftytwo.in) எழுதிய நீண்ட கட்டுரையின் மொழியாக்கம்.

    https://kizhakkutoday.in/business-01/

    My Tamil translation of Vedica Kant’s “Source Code
    published in https://kizhakkutoday.in/business-01/

  • நீர்ப்பறவைகளின் தியானம்

    08/06/2022 அன்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) ஒருங்கிணைத்த க.நா.சு உரையாடல் அரங்கில், எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் “நீர்ப்பறவைகளின் தியானம்” சிறுகதை தொகுப்பை முன்வைத்து ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.

  • வெண்முரசும் காப்பிய மறுஆக்கங்களும்: ஒரு பார்வை

    https://jeyamohan60.blogspot.com/2022/07/blog-post_27.html

    சியமந்தகம் தளத்தில் இன்று வந்த என் கட்டுரை. சியமந்தகம் ஆசிரியர் குழுவிற்கு நன்றிகள். மேலும் படங்களையும், சுட்டிகளையும் இணைத்து, கட்டுரையை இந்த தளத்திலும் பதிவிடுகிறேன்.

    [1]

    முன்னுரை:

    ஒரு பண்பாட்டின் ஆழ்மனதைக் கட்டமைப்பதில் தொன்மங்களுக்குப் (myth) பெரும் பங்குள்ளது. தொன்மங்கள் (myth) அந்தப் பண்பாட்டில் உள்ள படிமங்களின் (imagery), வாய்மொழிக் கதைகளின் (folklore) விரிவாக்கங்கள். லெகோ துண்டுகளைக் கலைத்து அடுக்கி விளையாடும் குழந்தையைப் போல, அந்தச் சமூகத்தில் ஏற்கனவே இருக்கும் தொன்மங்களில் உள்ள நிகழ்வுகளையும், கதை மாந்தர்களையும் காவிய ஆசிரியர்கள் தங்களின் தரிசனத்திற்கு ஏற்ப மறுகட்டமைப்பு செய்து, புதிய தொன்மங்களை உருவாக்குகிறார்கள். பழைய புராணங்களின் ஏற்பு, மறுப்பு, தலைகீழாக்கம் என அவர்கள் உருவாக்கும் புதிய தொன்மங்கள் வழியே அந்தப் பண்பாட்டின் ஆழ்மனதைக் காலத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்க முயல்கிறார்கள்.

    “முற்போக்கு” போர்வையில் தொன்மங்களை ஒட்டுமொத்தமாகப் பழங்கதைகள் என நிராகரிக்கும் போக்கும், “கலாச்சாரப் பாதுகாவலர்” போர்வையில் தொன்மங்களை மாற்றுவதைக் கண்டிக்கும் போக்கும் ஒரு வாழும் பண்பாட்டிற்கு உகந்தது அல்ல. தூர்வாரப்படாத அணை காலப்போக்கில் பயன்படாமல் போவதைப் போல, மறுஆக்கங்கள் செய்யப்படாத தொன்மங்களும் பயன்படாமல் போகக்கூடும். 

    காவிய காலகட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமல்ல, நவீன நாவலாசிரியர்களும் உலகம் முழுவதுமே அவர்கள் வாழும் பண்பாட்டைச் சேர்ந்த தொன்மங்களைக் கொண்டு புதிய தொன்மங்களை உருவாக்குகிறார்கள். பரவலாக வாசிக்கப்படும் பொழுதுபோக்குப் படைப்புகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக ஜுராஸிக் பார்க் நாவல் ஒருவகையில் ஏதேன் தோட்டம், பிராங்கன்ஸ்டைனான டைனோசர், கிறித்தவத்தின் ஏழு கொடிய பாவங்கள் – தற்பெருமை, பேராசை, பெருந்தீனி, பொறாமை, பெருங்காமம், வெஞ்சினம், சோம்பல் – பிரதிபலிக்கும் கதை மாந்தர்களின் அழிவு (படம் மூல நாவலில் இருந்து மாற்றப்பட்டுள்ளது) என பைபிளில் உள்ளதின் கலவை இல்லையா?

    ஜெயமோகனின்  அறம் சிறுகதையை கண்கள் கலங்காமல் படித்திருக்க  முடியாது. தமிழர்களின் நரம்பை அந்தக் கதை ஏன் தொடுகிறது என்றால் அதில் உள்ள கண்ணகி தொன்மம். பிரெஞ்சில் மொழிபெயர்த்தால் அது வெறும் ஒரு ராயல்டி திருட்டின் கதையாக வாசிக்கப்படும். பழைய நகைகளை மெருகேற்றி, புதிய உடைகளுக்கு ஏற்ப அந்த நகைகளின் சில பகுதிகளைப் பயன்படுத்திக்கொள்வதைப் போல, பழைய படிமங்களின் பல ஆழங்களை முதலில் சரியான ஒளியில் காட்ட வேண்டும் [1]. அதன் பின்பே அந்தப் படிமங்களை நவீனப் படைப்புகளில் பயன்படுத்திக் கொள்ளும்போது ஒரு ஆசிரியர் அந்தப் பண்பாட்டில் உத்தேசிக்கும் மாற்றங்களை உருவாக்க முடியும் [2]. [1] & [2] ஒரே தலைமுறை எழுத்தாளர்கள் எழுத வேண்டும் என்பதும் இல்லை. 

    “தொன்மங்களைச் சரியான ஒளியில் காட்ட வேண்டும்” என்றால் நேர்மறையான என்ற பொருளில் அல்ல. மகாபாரத தொலைகாட்சித் தொடர், சிவாஜியின் ‘கர்ணன்’, தளபதி படத்தின் ஶ்ரீவித்யா கதாபாத்திரம் போன்றவற்றில் இருந்து குந்தி, திரௌபதி எல்லாம் “அபலைகள்” என்ற சித்திரம் எனக்கு இருந்தது. மகாபாரத மறுஆக்கங்களில் நான் முதலில் படித்த “இரண்டாம் இடம்” நாவல் தான் குந்தி அறிவு, ஆற்றல், சூழ்ச்சி நிறைந்த பேரரசி, மிக மையமான கதாபாத்திரம் என்று உணர வைத்தது. பின்பு மூல மகாபாரதத்தைப் படிக்கும்போது “இரண்டாம் இடம்” காட்டும் குந்தியே சரியான குந்தி என்பது புரிந்தது. உதாரணத்திற்கு நகுல சகாதேவர்களைப் பெற்ற பின் மாத்ரி மீண்டும் கருத்தரிக்க, பாண்டு குந்தியிடம் மந்திரத்தை மீண்டும் உபதேசிக்குமாறு சொல்ல, அதற்குக் குந்தியின் பதில்

    ஓ மன்னரே, ஒரு முறை அந்த மந்திரத்தைச் சொன்னதற்கே, அவள் இரு பிள்ளைகளைப் பெற்றுவிட்டாள். நான் அவளால் ஏமாற்றப்படவில்லையா?(26) அவள் என்னைவிட அதிகம் பிள்ளைகளைப் பெற்றுவிடுவாள் என்று நான் அஞ்சுகிறேன். நிச்சயமாக இதுவே தீய பெண்களின் வழியாகும். ஒரு முறை இரட்டை தேவர்களை அழைத்தால் ஒரே பிரசவத்தில் இரு பிள்ளைகளைப் பெற்றுவிடலாம் என்பதை அறியாத அளவுக்கு முட்டாளாயிருந்திருக்கிறேன்.(27) ஓ மன்னா! நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மேலும் கட்டளையிடாதீர். இதுவே நீர் எனக்குத் தரும் வரமாக இருக்கட்டும்” என்றாள்.” 

    சில குழந்தைகள் ஏற்கனவே இருக்கும் லெகோ கட்டுமானத்தை கலைத்துவிட்டுப் போய்விடும். மீண்டும் கட்டாது. “கலைத்தல்” என்பதற்கு எட்டி உதைப்பதைத் தவிர பெரிய திறன் எதுவும் தேவையில்லை. சில படிமங்கள் சரியான ஒளியில் காட்டப்படும்போது, இணை-படிமங்களைக் குறைத்துக் காட்ட நேரும். வெறுமே கலைத்தல் என்பதை விட இது மேலானது. “கலைத்து மீண்டும் அடுக்குதல்” என்பதே மறுஆக்கம். அதுவே சவாலானது. மகாபாரதம் போன்ற தொன்மவெளியைக் கலைத்து அடுக்கிக் காட்டுதல் என்பது, மகாபாரதம் அளவிற்கே இணை புராணமாக விரிந்தால்தான் சாத்தியம். 

    வெண்முரசு அந்தச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கும் மறுஆக்கப் படைப்பு. வெண்முரசு நாவலில் விரிவு, புதிய சொற்கள், உவமைகள், தத்துவங்கள், பாத்திரப் படைப்புகள் எனப்  பற்பல தருணங்களில் கண்கள் கலங்கி, உணர்ச்சியால் அடித்து செல்லப்பட்டு படித்திருக்கிறேன். ஏராளமான வாசகர் கடிதங்கள் இணையத்தில் வெளி வந்துள்ளன. இந்தக் கட்டுரையின் நோக்கம் வெண்முரசிலும் மற்ற நவீன மகாபாரத மறுஆக்கங்களிலும் மகாபாரத மைய நிகழ்வுகள் (பாண்டவர் பிறப்பு, திரௌபதி சுயம்வரம், சூதுக்களம், கீதை) எப்படி மறு கட்டமைக்கப்பட்டள்ளன, மைய கதை மாந்தர்கள் எப்படிப் பரிணாமம் அடைகிறார்கள் என்பவற்றைக் குறித்த ஒரு சித்திரத்தை அளிக்கும் முயற்சி. இது வெண்முரசை மேலும் அணுக்கமாக அறிந்துகொள்வதற்கும், ஆசிரியரின் தரிசனம் (vision) குறித்து வாசகருக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தவும் உதவலாம்.

    இந்திய பண்பாட்டில் மிக அதிக அளவில் மறுஆக்கம் செய்யப்பட்ட படைப்பு இராமாயணம். இந்திய அளவில் இராமாயணம் அடைந்த மாற்றங்களையும், தமிழில் எழுதப்பட்ட கம்பராமாயணம் எப்படி வால்மீகி இராமாயணத்தில் இருந்து மறுகட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் பார்ப்பது வெண்முரசை மேலும் அறிந்துகொள்ள உதவும். இராமாயணத்தை முன்வைத்து இந்தியப் புராணங்களில் மறுஆக்க மரபையும்,  நவீன மகாபாரத மறுஆக்கங்கள் குறித்து ஒரு சுருக்கமான அறிமுகத்தையும், அதன் பின் மகாபாரத மைய நிகழ்வுகள் (பாண்டவர் பிறப்பு, திரௌபதி சுயம்வரம், சூதுக்களம்) எப்படி மறுகட்டமைக்கப்பட்டுள்ளன என்பதையும் பார்ப்போம்.

    [2] இந்திய புராணங்களில் இராமாயண மறுஆக்கம்:

    அ.அ.மணவாளன் எழுதிய “இராம காதையும், இராமாயணங்களும்” என்ற நூல் இராமாயணத்தின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் விவரிக்கிறது.  வேதங்களில் இராமன், ஜனகன், சீதை போன்ற பெயர்கள் காணப்பட்டாலும், இராமாயணக் கதையோ, இந்தப்பெயர்களுக்கிடையே உறவுகளோ (ஜனகன் – சீதை : தந்தை – மகள்)  வேதங்களில் குறிப்பிடப்படவில்லை. தசரத ஜாதகம் (பொ.யு.மு 5நூ), அனாமக ஜாதகம் (பொ.யு.மு 3நூ) ஆகிய பாலி மொழியில் எழுதப்பட்ட இரு புத்த ஜாதகக் கதைகள், வால்மீகி இராமாயணத்திற்குக் (பொ.யு.மு 4-3நூ) காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படுகின்றன. 

    ஜாதகக் கதைகளில் தசரதனின் தலைநகரம் காசி; இராமர் புத்தரின் முந்தைய அவதாரம்; இராமனும் சீதையும் உடன்பிறந்தோர்கள்; வனவாசம் செல்வது இமயமலைப் பகுதியில். வால்மீகி இராமாயணத்தில் தசரதனின் தலைநகரம் அயோத்தி; இராமனும் சீதையும் தொடக்கம் முதலே கணவன் மனைவியர்; வனவாசம் தண்டகாரண்யத்தில். 

    பாலி மொழியில் எழுதப்பட்ட பௌத்த இராமாயணங்களைப்போல, சமணர்களும் பிராகிருதம், அபப்பிரம்சம், வடமொழி ஆகிய மூன்று மொழிகளில் இராமாயணங்கள் எழுதியுள்ளனர். சமணர்களின் இராமாயணம் பிரதி புராணம் (எதிர் புராணம்) எனப்படுகிறது. விமல சூரியின் பிராகிருத பௌம சரியுவில் (பத்ம சரிதம் – பொ.யு 3-4 நூ) இராவணன் சமணர்களின் அறுபத்துமூவர்களில் ஒருவன். கல்வியில் சிறந்தவன். தன் ஆற்றல்கள் அனைத்தையும் கடும் நோன்புகள் மூலம் அடைந்தவன். அருகர் வழி வந்தவன். இராவணன் பிறந்த போது அவன் அம்மா, நவரத்ன மாலையை அணிவிக்கிறாள். ஒன்பது மணிகளிலும் அவன் முகம் பிரதிபலிக்க, தசமுகன் என்று அழைக்கிறாள். வானரர்கள் குரங்குகள் அல்லர், வித்யாதரர்கள். இராவணனுடைய உறவினர்கள். குரங்குக் கொடி உடையவர்கள், ஆகையால் வானரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 

    இராவணன் விருப்பமில்லாத பெண்ணைத் தொட மாட்டேன் எனச் சபதம் எடுத்தவன். இராவணனின் வீழ்ச்சி காமத்தை வெல்ல முடியாததால் வருகிறது. இராமனோ புலன்களை வென்றவன். அருகர் நெறி வந்த நாயகன். இதுவே இராமனின் கடைசி பிறவி, ஆகையால் இராமன் யாரையும் கொல்வதில்லை. இலட்சுமணனும் இராவணனும் ஒவ்வொரு பிறவியிலும் சண்டையிட்டுக் கொள்ளும் வாசுதேவ-பிரதி வாசுதேவ இணையாக வருகிறார்கள். இராவணனைக் கொல்வது இலட்சுமணன். இராவணனைக் கொன்ற பாவத்தால் இலட்சுமணன் நரகத்திற்குப் போகும் போது, இராமன் வீடுபேறடைகிறான்.

    வால்மீகி இராமாயணம் எழுதப்பட்டு குறைந்தது ஆயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்டது கம்பராமாயணம். இடைப்பட்ட காலத்தில் புத்த மத வீழ்ச்சி, திருக்குறள், பக்தி இலக்கியங்கள், ஆழ்வார் பாசுரங்கள், சங்கரர், ராமானுஜர் உள்ளிட்ட தத்துவ ஞானிகளின் வருகை, சிறிய அரசுகள்/குலங்கள் தொகுக்கப்பட்டுப் பேரரசுகள் உருவாக்கம் எனப் பெரிய பண்பாட்டு மாற்றங்கள் ஏற்பட்டன. கம்பர் அன்றைய “உலகம் யாவையும்” செறித்து உருவாக்கிய படைப்பு கம்பராமாயணம். 

    இராமன், சீதை  உள்ளிட்டோர் வால்மீகியின் காப்பியத்தில் மனித குணங்களோடு இருக்கும்போது கம்பரின் காப்பியத்தில் இராமன், சீதை, இராவணன், கும்பகர்ணன் என  எல்லோருமே உச்ச பாத்திரப்படைப்புகள். வால்மீகியின் அயோத்தி கொடுத்துச் சிவந்த கரங்கள் உடையவர்களின் நகரம் என்றால், கம்பனின் அயோத்தியில் இல்லாதவர்கள் இல்லை, அதனால் உடையார்களும் இல்லை. சிறிய நிகழ்வுகள் கூட மாற்றப்பட்டுள்ளன. வால்மீகியில் முதல் போரில் இராவணன் தோற்றுத் திரும்பும்போது, தேவாசுரர்கள், நாகர்கள், பூதகணங்கள் சிரிக்கின்றன. கம்பனில் வான் நகும், மண் நகும் என்பதால் இராவணன் வெட்கவில்லை, ஜானகி சிரிப்பாளே என வெட்கப்படுகிறான். 

    வால்மீகியின் சீதையும் இராமனும் மனித குணங்களோடு வருகிறார்கள். சீதை மாயமானைத் துரத்தி சென்ற இராமன் திரும்பி வராத போது, இலட்சுமணன் போக மறுப்பதைக் கண்டு, “என் மீது வைத்த ஆசையினால் பரதனின் கையாளாக நின்று இந்தத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்து நிற்கிறாயா?” என இலட்சுமணனைத் திட்டுகிறாள். பின்பு இராவணன் கடத்திச் செல்லும் போதும், கைகேயியும், பரதனும் தன் நிலை கண்டு சிரிப்பார்களே என அரற்றுகிறாள்.சுந்தர காண்டத்தில் அனுமன் வந்து தன் தோளில் ஏறச்சொலும்போது, “சிறிதாக உள்ள நீ எப்படி என்னை பத்திரமாகக் கொண்டு செல்வாய்? குரங்குத்தனமான யோசனை.” என அனுமனையும் திட்டுகிறாள். அனுமன் தன்னை அவமதிப்பதாக முணுமுணுக்கிறான்.  கம்பனின் சீதை “நீ போகவில்லையென்றால் நான் தீக்குளிப்பேன்” என இலட்சுமணனை மிரட்டுகிறாள். இராவணன் கடத்திச்செல்லும்போதும் இறைவா, இளையோய், பரதா என இராமரையும், தம்பிகளையும் அழைத்து அரற்றுகிறாள். வால்மீகி இராமாயணத்தில், போரெல்லாம் முடிந்து பட்டமேற்க அயோத்தி மீள வரும்போது பரதன் மீண்டும் ஆட்சியைத் தருவானோ என்ற சந்தேகம் இராமனுக்கு உள்ளது. “அனுமனே, நீ பரதனிடம் சென்று இராவண வதத்தைக் கூறி, வலிமையான நண்பர்களுடன் நாங்கள் அயோத்தியின் அருகில் வந்துவிட்டோம் என்று சொல். பரதனின் முகக்குறிப்புகளைக் கவனி, இவ்வளவு பெரிய நாட்டை ஆண்டால் யாருக்குத்தான் ஆசை வராது? வேண்டுமானால் அவனே வைத்துக் கொள்ளட்டும்” என்கிறான். கம்பராமாயணத்தில் இராமன் அனுமனிடம், “பரதன் எனக்கு ஏதோ தீது நேர்ந்தது என எண்ணி தீ புகவும் கூடும். நீ சென்று தீதிண்மை செப்பி, தீ அவித்து, இளையோன் நின்ற நீர்மையும், நினைவும் தேர்ந்தபின் என்னிடம் தெரிவி” என்கிறான்.

    சூர்ப்பணகை: கதையின் திருப்பமான சூர்ப்பணகை மூக்கு அறுபடுவது வால்மீகியில் இராமன் கட்டளையிட இலட்சுமணன் சூர்ப்பணகை மூக்கை அறுக்கிறான். சூர்ப்பணகைக்குச் சீதை இராமனின் மனைவி என தெரிகிறது. இரண்டாம் தாரமாவது உனக்குச் சரிவராது, தம்பிதான் உனக்குச் சரி என இருண்ட நகைச்சுவை காட்சி போலக் கிண்டலாகத் துவங்கி வன்முறையில் முடிகிறது. [கம்பன்] சூர்ப்பணகை இராமனிடம், திருமண விருப்பத்தைத் தெரிவிக்க, “நீ அந்தணர் (விஸ்ரவஸ்) மகள், நான் அரசர் குலம். முடியாது” என்கிறான். சூர்ப்பணகை தான் தாய்வழியில் அரக்கர் குலம் என்கிறாள். அரக்கரும் மனிதரும் மணம் புரிய மாட்டார்கள் என மறுக்கும் இராமன், மூவுலகும் வென்ற இராவணனும், குபேரனும் பெண் கொடாமல் உன்னை ஏற்க முடியாது என்கிறான். காந்தர்வம் ஏற்கப்பட்ட மணமுறையே,  அவ்வாறு மணம் செய்தால் முனிவர்களுடன் ஏற்கனவே போரில் இருக்கும் தன் அரக்கர் குல அண்ணன்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிறாள். அப்போது அங்கு வரும் சீதையின் அழகைக் கண்டு வியந்து, பின்பு தன்னைப் போலவே மாறுவேடமிட்டு வந்த அரக்கி என எண்ணி, இராமனை எச்சரிக்கிறாள். இராமன் புன்னகைத்து ஆம் அவள் அரக்கிதான் என்கிறான். சீதையைத் தாக்க வரும் சூர்ப்பணகையை எச்சரித்து என் தம்பி உனைக்கண்டால் கோபப்படுவான், போய்விடு எனச் சொல்லிச் சீதையுடன் சென்றுவிடுகிறான். சூர்ப்பணகை ஓர் இரவு முழுவதும் தாபத்தால் வாடுகிறாள். ஒருவேளை சீதை அவனுடைய துணைவியோ என நினைக்கிறாள். மாறுவேடத்தில் இருக்கும் அரக்கியான சீதை இருக்கும் வரை இராமன் வரமாட்டான் எனக் கருதி, மறுநாள் விடியலிலே சீதையை தூக்கிச் செல்ல வருகிறாள். அங்கு இராமன் இல்லை. சூர்ப்பணகையைத் தடுத்த இலட்சுமணன் அவள் மூக்கு, காதுகள், முலைகளையும் அறுத்துவிடுகிறான். 

    ஜடாயு: சீதையைக் கவர்ந்து சென்றபின், குற்றுயிராகக் கிடக்கும் ஜடாயுவை இராமன் காண்கிறான். [வால்மீகி] “கழுகு வடிவில் இருக்கும் அரக்கனான ஜடாயு, சீதையை உண்டுவிட்டது. சீதை ஜடாயுவுடன் போராடியதால், ஜடாயுவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஜடாயுவை இப்போதே கொல்வேன்” என்று ஆர்ப்பரித்தபடியே ஜடாயுவை நோக்கி செல்கிறான் இராமன். ஜடாயு இராமனிடம் சரணடைந்து, இராவணன் கவர்ந்து சென்றது பற்றி தெரிவிக்கிறது. ஜடாயுவை தவறாக எண்ணியதை நினைத்து வருந்துகிறான் இராமன். [கம்பன்] சீதையை கவரும்போது, ஜடாயுவிற்கு துணையாக, இராவணனுடன் போரிடாமல் வேடிக்கை பார்த்ததற்காக, தேவர்களையும், முனிவர்களையும் முனிந்து அவர்களை தண்டிக்க போகிறேன் என்கிறான் இராமன். ஜடாயு, இராமனிடம், தேவர்களோ, முனிவர்களோ இராவணனை எதிர்த்திருந்தால், தனக்கு ஏற்பட்ட நிலையே ஏற்பட்டிருக்கும். தவறு தேவர்களிடமோ, முனிவர்களிடமோ இல்லை. சீதையை வனத்தில் தனியே விட்டுவிட்டு மானின் பின்போன உன்னிடத்தில். ஆகவே, உலகை பழி சொல்ல வேண்டாம் என்று இராமனுக்கு அறிவுரை வழங்குகிறார். இராமன் தன் தவறை உணர்ந்து வருந்தி, ஜடாயுவை தன் தந்தை என்றே அழைக்கிறான்.

    அனுமன்: வால்மீகியில் அனுமன் நாயகன்தான். சீதையைத் தேடி செல்லும்போது, பிலத்தில் மாட்டிக்கொள்ளும் அனுமனையும், வானரர்களையும் சுயம்பிரபை என்ற பெண்துறவி காத்து, பிலத்திற்கு வெளியே கொண்டுவந்து விடுகிறார். சீதை இலங்கையில் இருப்பதை அறிந்துகொண்டபின், கடலை யார் தாண்டுவது என பயந்து வானரர்கள் ஒருவரும் முன்வரவில்லை. ஒரு ஓரமாக, அமைதியாக உட்கார்ந்திருக்கும் அனுமனிடம் நீ வாயுபுத்திரன், உன்னால் முடியும் என உற்சாகப்படுத்தி அனுமனை கடல் தாண்ட ஆயத்தப்படுத்துகிறார் ஜாம்பவான். ஜாம்பவானின் சொல்லால் அனுமனுக்கு நம்பிக்கை வருகிறது. கம்பனின் அனுமன் அதிரடி நாயகன். பிலத்தில் மாட்டிக்கொள்ளும் வானரர்களையும், சுயம்பிரபையையும் அனுமனே பிலத்தைப் பிளந்துகொண்டு வெளியே கொண்டுவருகிறான். கடல் கடக்க வானரர்கள் தயங்க, ஜாம்பவான் அனுமனே சிறந்தவன் என்கிறார். இந்தக் கடல் என்ன, இதை விட ஏழு மடங்கு பெரிய கடலானாலும் சரி, அந்த இலங்கையையே இங்கே கொண்டு வரவேண்டும் என்றாலும் சரி, சீதையை மீட்டுக் கொண்டு வர வேண்டுமென்றால் சரி, எனக்கு இதெல்லாம் சாதாரணம் என்கிறான் அனுமன்.

    வாலி: [வால்மீகி] வாலி இராமனிடம் என்ன குற்றம் செய்தேன்? உன் நாட்டிலோ நகரிலோ வந்து குற்றமிழைத்தேனா? மறைந்திருந்து தாக்குதல் அறமா? எனக்கும் உனக்கும் நிலம் மற்றும் செல்வம் சார்ந்து எந்த தகராறும் இல்லை. பிறகேன் கொன்றாய்? சான்றோர்களின் விமர்சனங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்? என் தோலோ, கறியோ உனக்கு உபயோகமில்லை. பிறகெதற்கு வீண் கொலை? என்று கேட்கும் வாலியிடம் அறம் அறியாத குரங்கே, உன் குரங்கு புத்தியுடன் என்னையே திட்டுகிறாயா என்ற ராமன்  நீ அறம் தவறினாய், உன் தம்பி மனைவியான ருமையிடம் தவறாக நடந்து கொண்டாய், அவள் உன் மருமகளுக்கு ஒப்பானவள், தர்மத்திற்கு எதிரானது அது; மொத்த உலகமும் – காடு, நாடு, மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் – இக்‌ஷவாகு குலத்தின் பரதனின் ஆட்சியில் உள்ளது, பரதனின் ஆணைக்கிணங்க நானும் மற்ற அரசர்களும் நீதியை நிலைநாட்டுகிறோம்; நீ ஒரு குரங்கு – வேட்டையில் மிருகங்களை பொறி வைத்தோ, மறைந்திருந்தோ கொல்லலாம்; மனு தர்மப்படி தான் உன்னை கொன்றேன். அது சாஸ்திரங்கள் சொல்லும் அறம்தான். மன்னர்களையெல்லாம் நீ கேள்வி கேட்கக்கூடாது. அவர்கள் மண் மீது நடக்கும் தெய்வங்கள் என்று ‘விளக்கங்கள்’ அளிக்கிறான் இராமன். [கம்பன்]  வாலி ராமனை நோக்கி அரக்கர் உனக்கு ஓர் இழிவு செய்தால், அதற்கு வேறு ஓர் குரங்கினத்து அரசை கொல்ல மனுநீதி கூறியதா? என் மீது என்ன குற்றம் கண்டாய்?  தந்தை செல்வத்தை உன் தம்பிக்கு தந்து நாடு ஒரு கருமம் செய்தாய், என்னை கொன்று என் தம்பிக்கு என் நாட்டை தந்து காடு ஒரு கருமம் செய்கிறாயா? நீ எனக்கு செய்தது முறை எனில், இலங்கை வேந்தன் முறையில்லாததை செய்தான் என்று முனிதியோ? என்று மேலும் ஆழமான கேள்விகள் கேட்கிறான். இராமன் அதற்கு உன் தம்பி மனைவியை கவர்ந்தது உன் குற்றம் என்கிறான். வாலி அதற்கு பதிலாக உணர்வு சென்ற வழி செல்வதே எங்கள் வழி, உங்கள் குலத்தை போல கற்போ, மறை நெறி வகுத்த திருமணமோ இல்லை என்கிறான். அதற்கு இராமன் எக்குலமாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர் வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும் என்கிறான். தான் செய்தது குற்றம் என ஏற்றுக் கொண்ட வாலியின் “மறைந்திருந்து ஏன் தாக்கினாய்?” என்ற கேள்விக்குக் கம்பனின் இராமனிடம் பதில் இல்லை. வால்மீகி ராமாயணத்தில் வருவதுபோல நீ ஒரு குரங்கு, உன்னை பொறி வைத்து பிடிக்கலாம் என்றெல்லாம் கம்பரால் சொல்ல முடியவில்லை. மற்ற கேள்வி பதில் பாடல்கள் குறைந்தது பத்து பாடல்களாவது வருகின்றன. மறைந்து நின்று தாக்கும் கேள்விக்கான பதிலை ஒரே பாடலில் கம்பன் கடந்து செல்கிறான். இலட்சுமணன் வாலியிடம், உன்னை கொல்வேன் என்று உன் தம்பிக்கு இராமன் வாக்களித்துவிட்டான்,  நீ அவனிடம் சரண் அடைந்தால் வாக்கை நிறைவேற்ற முடியாது போகும், அதைக் கருதி அண்ணல் மறைந்து நின்று அம்பெய்தினான் என்கிறான்.

    தாரை: மழைக்காலம் முடிந்தபின் சீதையை தேடத்தொடங்குவோம் என்று இராமனுக்கு தந்த வாக்குறுதியை மறந்து, கள்ளிலும், காமத்திலும் உழன்றுகொண்டிருக்கும் சுக்ரீவனை எச்சரிக்க இலட்சுமணனை அனுப்புகிறான் இராமன். கிஷ்கிந்தையை நோக்கி மிகுசினத்தோடு வரும் லட்சுமணனை எதிர்கொள்ள தாரையை அனுப்பவேண்டும் என்கிறான் அனுமன். [வால்மீகி] குறையாடைகள் அணிந்து, வானரப் பெண்கள் சூழ, கண்கள் படபடக்க, இடை அசைந்தாட, உடைகள் நெகிழ, இலட்சுமணனுக்கு அருகில் சென்று வணங்கி நிற்கிறாள் தாரை. வானர மகளிரால் சூழப்பட்டு, வெகு அருகில் நிற்கும் தாரையால் இலட்சுமணன் வெட்கி கோபம் தணிகிறான். தாரை அவனிடம், சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டுகிறாள். [கம்பன்] குறைந்த ஆடைகள் அணிந்த வானர பெண்கள் சூழ தாரை வருகிறார். வாலி இறந்ததால், மங்கல அணி, நகைகள் அணியாமல், குங்கும சந்தன குழம்புகள் பூசப்படாத மார்புகளும், பாக்குமரம் போன்ற கழுத்தும் மறையும்படி மேலாடை போர்த்தி வந்த தாரையை கண்டவுடன், இலட்சுமணனுக்கு கணவனை இழந்த தன் தாய் சுமித்திரை நினைவுக்கு வர கண்கள் பனிக்கிறான். சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டியபின், இலட்சுமணனிடம், “சீதையை தேடுவதற்கு, வாலியை கொன்ற அம்பும், வில்லும் போதாதோ? வேறு துணையும் வேண்டுமோ? தேவியைத் தேடுவதற்கு ஆட்கள் தேடுகிறீர்களே” என்று சொல்வதை கேட்டு இலட்சுமணண் நாணுகிறான். 

    வெறும் கழுகாக இருக்கும் ஜடாயு, கம்பனில் ராமனுக்கு அறிவுரை கூறும் தந்தையாகிறார். ஆதிகாவியத்தில் காமவல்லியாக வரும் தாரை கம்பராமாயணத்தில் அன்னையாகவும், அறச்சீற்றம் மிக்கவளாகவும் வருகிறார். வால்மீகியில் மனித குணங்களுடன் வரும் சீதையும், இராமனும் கம்பனில் காவிய குணங்களோடு அவதார புருஷர்களாக வருகிறார்கள். இராவணனும், கும்பகர்ணனும் நேர்நிலையான உச்ச கதைமாந்தர்களாக வருகிறார்கள். புத்த, சமண, பக்தி இலக்கிய காலகட்ட இராமயணங்களில் அந்த காலகட்டத்திற்கு உரிய, தத்துவ பின்புலங்களுக்கு ஏற்ப கதைமாந்தர்களின் குணங்களும், நிகழ்வுகளும் படைக்கப்பட்டுள்ளன. “குகனோடும் ஐவரானோம்”, “மைந்தரால் பொலிந்தான் நுந்தை” பாடல்களில் குகன், சுக்ரீவன், விபீஷணன் எனப் பல குலங்களைய சேர்ந்தவர்களையும் இராமன் தன் உடன்பிறந்தவர்களாக ஏற்று, குலங்களுக்கான அறம் என்பதிலிருந்து மானுடத்திற்கான அறம் எனக் கம்பன் விரிவது, கம்பராமாயணத்தின் உச்சம் என்கிறார்கள் அறிஞர்கள்.

    [3] காப்பியங்களும் – நாவல்களும்

    பழங்குடிகளாக இருந்து, நிலப்பிரபுத்துவ காலகட்டம், காலனிய காலகட்டம் கடந்து மக்களாட்சி யுகத்தில் இருக்கிறோம். காப்பியத்தின் மையம் இது என கடவுள் வாழ்த்திலே சொல்லப்பட்டு அறம்-பொருள்-இன்பம்-வீடு சட்டகத்தில் புனையப்படும் காவியங்களில் இருந்து நாவல்களுக்கு நகர்ந்திருக்கிறோம். நாவல்கள் காப்பியங்களைப்போல விழுமியங்களை நிறுவதில்லை. ஒர் உலகை உருவாக்கி, வெவ்வேறு விழுமிய மோதல்களை காட்டி, வாசகனையும் ஆசிரியனுக்கு இணையாக பங்கேற்கச்செய்து, விழுமியங்களை வாசகனே உருவாக்கிகொள்ள வைக்கின்றன. இயல்புவாதம், நவீனத்துவம், மாய-யதார்த்தவாதம், பின்நவீனத்துவம் என நாவல் வகைகள் உண்டு என்பது நாம் அறிந்ததே. 

    ஒரு மணல் கடிகாரத்தை திருப்பி வைப்பதைப்போல, விழுமியங்கள் துளித்துளியாகக் கொட்டி, நிலைபெற்றுவிட்ட ஒரு பண்பாட்டை, தன் எழுத்தின் வழியே பேரிலக்கியவாதி திருப்பிவைக்கிறார். மொத்த பண்பாடும், அறிதல்களும் புதிய பொருளில் மீண்டும் சொல்லப்படுகின்றன. சிலப்பதிகாரத்தையும் அதன் நவீன மறுஆக்கமான கொற்றவையையும் ஒப்பிட்டால் காப்பியத்திற்கும், நாவலுக்குமான வேறுபாடு புரியும். சிலப்பதிகாரத்தின் மையம்: 1.அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும். 2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். 3.ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும். கொற்றவையில் இந்த மையம் எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்.

    கொற்றவை நாவலின் மையமான பகுதியின் சுருக்கம்: தென் நில மக்களின் முதல் தெய்வம் கன்னி. தென்திசையும், மாகடலும் கருமையாகவும், மரணமாகவும் தொன்மக்களுக்கு அச்சமூட்டுகிறது. இருளையும், ஆழியையும் கண்டு அஞ்சாத முக்கண்ணனும், ஆழியானும் தமிழ் நிலத்தின் தெய்வங்கள் ஆகிறார்கள். வெண்கல யுகத்தில் இருக்கும் தென்நிலத்திற்கு, இரும்பை அறிமுகப்படுத்தும் குறுமுனி, குமரி முனையில் தெய்வங்களின் அன்னையான கன்னி அன்னைக்கு சிலையெடுத்து, அன்னையின் வலச்சிலம்பு மறவர்களுக்கும், இடச்சிலம்பு வணிகர்களுக்கும், வலதுகால் நீள்விரல் மணி உழவர்களுக்கும், இடதுகால் நீள்விரல்மணி பரதவர்களுக்கும், வலச்சிறுவிரல் மணி இடையர்களுக்கும், இடச்சிறுவிரல் மணி மலைவேடர்களுக்கும் என தமிழ்குடிகளே அன்னையின் உடலென வகுத்ததாகவும், கன்னியின் ஆட்சியில் தென்நிலம் வாழ்ந்ததாகவும், பின்பு தென்நிலம் பலமுறை கடற்கோளால் அழிய, தொல்குலங்கள் புதிய நிலங்களை நோக்கி பயணித்ததாகவும், புகார் நகர பெருவணிகன் மாநாய்கன் இல்லத்தில் முதுபாணன் பாடுகிறார். கண்ணை அன்னை காக்கும் புகார் நகர வணிகர் குடியில் மாநாய்கனின் மகளாக கண்ணகியும், கருங்கண் கொற்றவை காக்கும் பாலை நிலத்து மறவர் குல தலைவன் பழையன் குட்டுவனின் மகளாக வேல்நெடுங்கண்ணியும் பிறக்கிறார்கள். குலதெய்வங்களின் அடையாளமாக கண்ணகிக்கு வலச்சிலம்பும், நெடுங்கண்ணிக்கு இடச்சிலம்பும் அணிவிக்கப்பட்டு அவரவர் ஊர்களில் சிலம்பணி விழாக்கள் நடைபெறுகின்றன. பின்பு கண்ணகி கோவலனையும், நெடுங்கண்ணி பாண்டியனையும் மணக்கிறார்கள். காலம் உருண்டோடுகிறது. பட்டத்தரசியான தன் மகள் வயிற்று வாரிசு மூலம், மதுரையை மீண்டும் தன்குடி ஆளவேண்டும் என்ற கனவில் இருக்கிறார் மறக்குலத் தலைவன் பழையன் குட்டுவன். ஊர்தோறும் மறவர் படை, வணிகர்களையும், உமணர்களையும் கொள்ளையிடுகின்றனர்; வேளிர்களின் விதைநெல்லை கவர்கிறார்கள்; மல்லர்களை அடிமைகளாக வடவணிகர்களுக்கு விற்கிறார்கள். பெண்களைக் கவர்ந்து செல்கிறார்கள். நாடு முழுவதும் அறம் வழுவி, குடிப்பூசல்கள் எழுகின்றன. பரந்த நிலத்தில், அரசின் செங்கோல் எல்லா இடங்களிலும் செல்ல முடியாது, பூசல்கள் எழத்தான் செய்யும் என்கிறான் பாண்டியன். மன்னனின் கோல், அறவோர் நூல், மறையோர் சொல் செல்லா இடங்களிலும் செல்லும் ஒன்றுள்ளது, அது அறம் என்கிறார் அமைச்சர். அமைச்சரின் நற்சொற்களை ஏற்காத பாண்டியன், குடிகளின் குறைகளை களையாமல் கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். இவ்வாறு, மதுரையே ஒரு கொந்தளிப்பான சூழலில் இருக்கும்போது, வாழ்வு தேடி கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு வருகிறார்கள். தனக்கு எதிராக எழும் பிற குலத்தலைவர்களை சதிகள் மூலம் கொன்று, பிற குலங்களின்  மேல் தன் குலத்தின் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு, பிற குடிகளிடம் இல்லாத, தன்குடி அடையாளமான, மந்தனச் சொற்கள் பதித்த சிலம்பைக் கொண்டு சிலம்பணி விழா எடுக்க திட்டமிடுகிறார் பழையன். எல்லா குடிகளுக்கும் அன்னையின் அணிகலன் குடியடையாளமாக உள்ளதாகவும், பழையனிடம் வலச்சிலம்பு இருப்பது போல, தமிழ் நிலத்தில் எங்கோ இடச்சிலம்பும் இருக்குமெனவும், அது வெளிப்படும்போது, குடிகளுக்கிடையே பெருமை சிறுமை இல்லை என அறிவீர்கள் என்கிறார்கள் பிறகுடித் தலைவர்கள். சிலம்பணி விழாவிற்கு முன் சிலம்பு திருடப்படுகிறது; கண்ணகியின் வலது சிலம்பை விற்க வந்த கோவலன் தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலையாகிறான். அதுகேட்டு சன்னதம் கொண்டு எழுந்த கண்ணகி, எரிதழல் கொற்றவையாக மதுரை நகர் நுழைகிறாள். கோவலனின் கொலை, மதுரையில் கலகம் வெடிக்க ஒரு நிமித்தமாகிறது. பெண்களும், வடவணிகர்களுக்கு அடிமைகளாக விற்க கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தப்பி வந்த கடைசியர்களும் முன்னெடுக்க மதுரை தீக்கிரையாகிறது. கண்ணகியின் இடச்சிலம்பை கண்டு பாண்டியன் எல்லா குடிகளும் சமமானவையே, ஒன்றே, குடியாளும் அன்னையே அறம் என்று உணர்ந்து உயிர் துறக்கிறான். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது. அதுவும் சிலம்பில் வருவதுபோல ஒரு தனி மனிதருக்கு இழைக்கப்பட்ட பிழையினால் இல்லை, அனைத்து குடிகளும் ஒன்றே, சமமே என்பதை அறியாத பிழையினால் பாண்டியனுக்கு மரணம் வருகிறது. 

    உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தும் சிலப்பதிகாரத்தில் கண்ணகியை கோவலன் புஷ்பக விமானத்தில் வந்து கூட்டி செல்கிறான். கொற்றவையில் எதிர்காலத்தில் கண்ணகியின் காலடியில் ஒரு சிறுகல்லாக தன்னை காண்கிறான். மகதி-பார்ப்பனன், முருகன்-வள்ளி, கவுந்தி வடிவில் வரும் நீலி எனும் பேய், நீலி காட்டும் உலகம் மூலமாக கற்பு, திருமணம் போன்ற விழுமியங்கள் தலைகீழாக்கப்பட்டுள்ளன. 

    சிலப்பதிகாரத்தில் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டுவதை விளக்க கோவலன்-பரதன் கதை விவரிக்கப்படுகிறது.  முற்பிறவியில் சிங்கபுரம் நாட்டில் தன் மனைவி நீலியின் நகைகளை விற்கவந்த சங்கமனை காட்டிக்கொடுத்த பரதன் இப்பிறவியில் கோவலனாக பிறந்து அவன் ஊழ்வினையை அனுபவிக்கிறான் என மதுரையை எரித்த கண்ணகியிடம் விளக்கமளித்து கண்ணகியின் சினத்தை தணிக்கிறது  மதுராபதி தெய்வம். கொற்றவையில் சங்கமன்-நீலி போல கோவலன்-கண்ணகி வருகிறார்கள். ஊழ்வினை என்ற கருத்திற்கு பதிலாக காலத்தின் சுழற்சியில் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. மகதி-பார்ப்பனன் போல சித்தார்த்தன்-யசோதரை, கடலில் குதிக்கும் செல்லி போல மணிமேகலை, நீலி-சங்கமன் போல கண்ணகி-கோவலன், மீண்டும் மீண்டும் அழியும் மதுரை என காலத்தின் சுழற்சி சுட்டப்படுகிறது.

    ஒரு படைப்பின் அடிப்படை தேவை வாசிப்பு இன்பம். வாசிப்பின் முதல்படிகளில் இருக்கும்போது சில படைப்புகள் நம்மை பாதித்திருக்கும். செவ்வியல் என மயங்குவோம். நம் சிறுவயது தாத்தா வீட்டை போல. இளமையின் இனிய நினைவுகள், பெரிய அறைகள், தூண்கள் என அந்த வயதில் தோன்றி இருக்கும். வளர்ந்தபின் மீண்டும் சென்று பார்த்தால் மிக சிறிதாக தெரியும். நம் தாத்தா வீட்டிற்கும், சிற்ப செறிவு நிறைந்த ஒரு மாபெரும் கோவிலிற்கும் உள்ள வேறுபாடே ஒரு சாதாரண படைப்பிற்கும் செவ்வியல் படைப்பிற்குமான வேறுபாடு. செவ்வியல் படைப்பு என்பது வெவ்வேறு காலகட்டத்தில் மீள்வாசிப்பு செய்யும்போதும் சலிக்க வைக்காமல், புதிய திறப்புகளையும், புதிய அறிதல்களையும் தன் உள்ளே கொண்டிருக்க வேண்டும். கொற்றவை நாவல் அவ்வகையிலான செவ்வியல் படைப்பு. 

    கொற்றவை நாவல் ஒரு செவ்வியல் சிற்ப கோயிலென்றால், வெண்முரசு சிற்ப கோவில்களால் நிறைந்த ஒரு சிற்ப நகரம். மொழி, புராண மறு உருவாக்கம், தொல் படிமங்களை கொண்டு எழுப்பப்படும் புதிய கட்டுமானம், பண்பாட்டு தலைகீழாக்கம், விரிவாக்கம் என கொற்றவையின் நீட்சி வெண்முரசு. 

    [4] நவீன மகாபாரத மறுஆக்கங்கள்:

    வெண்முரசோடு ஒப்பிடுவதற்காக நவீன மகாபாரத மறுஆக்கங்களில் கீழ்கண்ட நூல்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.

    1. பர்வா – கன்னட நாவல் – எஸ்.எல்.பைரப்பா – 1979 (தமிழில்: பருவம் – பாவண்ணன் மொழிபெயர்ப்பு – 2001) – 928 பக்கங்கள்.
    2. ரண்டாமூழம் – மலையாள நாவல் – எம்.டி.வாசுதேவன் நாயர் 1984 (தமிழில்: இரண்டாம் இடம் – குறிஞ்சிவேலன்) – 464 பக்கங்கள்
    3. இனி ஞான் உறங்கட்டே – மலையாள நாவல் – பி.கே.பாலகிருஷ்ணன். 1973 (தமிழில்: இனி நான் உறங்கட்டும் – ஆ.மாதவன் மொழிபெயர்ப்பு – 2000) – 273 பக்கங்கள்
    4. உப பாண்டவம் – தமிழ் நாவல் – எஸ்.ராமகிருஷ்ணன் – 2000 – 384 பக்கங்கள்
    5. யுகாந்தா – மராத்தி ஆய்வுக்கட்டுரை – ஐராவதி கார்வே – 1967 (தமிழில்:  இராக.விவேகானந்த கோபால்) – 272 பக்கங்கள். இணையத்தில் archive.org தளத்தில் உள்ளது.
    6. கிருஷ்ணா கிருஷ்ணா – தமிழ் நாவல் – இந்திரா பார்த்தசாரதி – 1994 – 216 பக்கங்கள்.
    7. கொம்மை – தமிழ் நாவல் – பூமணி – 2018 – 802 பக்கங்கள். கிண்டில் பதிப்பில் படித்தேன்.

    யுகாந்தா:

    மராத்தி எழுத்தாளர் ஐராவதி கார்வே மகாபாரதத்தை பற்றி எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு யுகாந்தா. இந்த கட்டுரைகளில் சில பகுதிகள் மகாபாரதத்தை பற்றிய விமர்சன பார்வை, சில பகுதிகள் புனைவு. 1968ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது. இணையத்தில் ஆங்கில நூல் கிடைக்கிறது.  

    யுகாந்தா மகாபாரதத்தை மார்க்சிய நோக்கில் பொருளியல் சார்ந்த நிலப்பிரச்சனையாக மட்டுமே பார்க்கிறது. மகாபாரதத்தின் தத்துவ சிக்கல்களில் ஒரு குழுவிற்கு மட்டுமே உரியவை, போலியானவை, ஆழமற்றவை என்று மறுக்கிறது. மகாபாரதத்தின் மையம் ஒரு கூட்டுக் குடும்பத்தின் நிலப்பிரச்சனை. மேலோட்டமாக இது நிலப்பிரச்சனை கதையாக இருந்தாலும், அதன் அடியில் உள்ளது பாண்டவர்களுக்கும் நாகர்களுக்கும் உள்ள பகை – நாகர்களிடமிருந்து ஆரியர்கள் இந்திய வடபகுதி நிலங்களை தங்கள் காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததின் கதை. கிருஷ்ணனும் அர்ஜுனனும் அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் செய்த இன அழிப்பிற்கு முன்னோடிகள். நில அபகரிப்பும், நாகர்களின் முற்றழிப்பும் மட்டுமே ஒரே குறிக்கோள். ஆனால் அந்த கொடூர எண்ணம் தோற்கடிப்பட்டுவிட்டது. ஹிட்லர் ஒரு இனத்தை முற்றழிப்பது சாத்தியமில்லை என்று அறிந்ததைப்போல, பாண்டவர்கள் நாகர்களை அழிப்பது இயலாது என்று இறுதியில் அறிந்தார்கள். நாகர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு பதிலாக அவர்கள் அடைந்தது பலரின் சாபங்களும், மூன்று தலைமுறை பகையும்.  

    மகாபாரத காலகட்டம் வரையில் இந்திய பெண் தெய்வங்களுக்கோ, கடவுளின் மனைவியருக்கோ ஒரு தனித்த இடம் இல்லை. இந்திய, கிரேக்க சமூகங்கள் இரண்டுமே தந்தைவழி சமூகங்களாக இருந்தாலும், கிரேக்க பெண்களின் சமூக பங்களிப்பு இந்திய பெண்களை விட சிறந்ததாகும். இந்திய பெண்கள் தாய் மற்றும் மனைவி என்ற வரையறைக்குள்ளேயே அடங்கிவிடுகிறார்கள். ஆனால் கிரேக்கர்கள், தங்கள் புராணங்களில் பெண்களை என்றென்றும் நினைவில் நிற்கும் அளவில் தாய், காதலி, மனைவி, தங்கை, மகள் என பல்வேறு வடிவங்களில் சித்தரித்துள்ளார்கள் என யுகாந்தாவில் கார்வே தீர்ப்பு எழுதுகிறார்! 

    கிரேக்க புராணங்கள் சிறந்தவை என்பதும், அதில் பெண்கள் பல்வேறு சிறப்பியல்புகளுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மகாபாரதம் கிரேக்க புராணங்களுக்கு இணையானதாகவோ, ஒரு படி மேலானதாகவோதான் நான் கருதுகிறேன். 

    மகாபாரதமே காண்டவ பிரஸ்தத்தில் நடைபெற்ற நாகர்களின் அழிவையும், அந்த அழிவு தலைமுறைகளாக தொடரும் சாபத்தையும், ஏகலைவன் கட்டை விரலை காணிக்கையாக்கியதையும், வாரணவதத்தில் தன் ஐந்து மகன்களுடன் எரிந்தழிந்த காட்டுவாசிப் பெண்ணின் கதையும், போரில் பாண்டவர் தரப்பு செய்த சூழ்ச்சிகளையும் பதிவு செய்கிறது. கௌரவர்களும், பாண்டவர்களும் பேரழிவை சந்திக்கிறார்கள். கடவுளாக கருதப்படும் கிருஷ்ணனுக்கு “ஒரு நல்ல சாவு” அமையவில்லை. தன் குலமான யாதவர்களுடனும் தான் கட்டமைத்து பொலிந்த நகரத்தோடும் முற்றழிகிறார். தெய்வமே ஆனாலும் ஊழிற் பெருவலி யாவுள? குருதி உறவுகளையும், குலத்தையும், வர்ணத்தையும், காலத்தையும் தாண்டிய அறம் என்று ஒன்றுண்டா? எனும் பெரும் கேள்விகளை வியாசர் முன்வைக்கிறார். யுகாந்தா இந்தக் கேள்விகள் பக்கமே போகாமல் ஒரு வறட்டு மார்க்சிய கட்டுடைப்பாகவே நின்றுவிடுகிறது. 

    திருவிவிலியத்தின் தொடக்க நூலிலிருந்து  Lot of Zoar, Abraham – Sarah – Abimelech கதைகளை எடுத்து தந்தை-மகள்கள், சகோதர-சகோதரி என முறை மீறிய பாலியல் உறவுகளை சொல்லும் நூல் எப்படி ஒரு புனித நூலாக இருக்க முடியும் என்று எழுதினால் அதற்கு மேற்கத்திய அறிவுப்புலத்தில் என்ன மதிப்பிருக்கும்? அதற்குப்பின் உள்ள உளவியல் என்ன? சகோதர-சகோதரி மண உறவு வரலாற்றில் அடைந்த பரிணாம மாற்றத்தில் விவிலியத்தின் பங்கு என்ன? (உதா: மாபெரும் பிரமிடுகளை கட்டிய எகிப்தியர்கள் சகோதர-சகோதரி மண உறவு உடையவர்கள் – கிளியோபாட்ரா-டாலமி) ; ஒழுக்கம் என்பது என்ன ? ஒழுக்கத்திற்கும் அறத்திற்கும் உள்ள முரண்பாடென்ன ? காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப வரலாற்றில் ஒழுக்கமென்பதும், அறமென்பதும் எப்படி வளர்ந்து வந்திருக்கின்றன ?  போன்ற கேள்விகளல்லவா பொருட்படுத்தத்தக்கவை. 

    யுகாந்தாவில் பொருட்படுத்தக்கூடிய ஒரே பகுதி தருமனுக்கும் விதுரருக்கும் இருக்கும் உறவு தந்தை-மகன் உறவாக இருக்கலாம் என்ற ஊகம். விதுரர் யமனின் அவதாரமாக மண்ணில் தோன்றியவர். தருமரின் தந்தையாக குறிப்பிடப்படும் தெய்வம் யமதர்மன். விதுரர் இறக்கும் தருவாயில் தருமனும் விதுரரும் சந்திக்கும் இடம் போன்றவற்றின் மூலம் யுகாந்தா இந்த ஊகத்தை முன்வைக்கிறது. ‘இரண்டாம் இடம்’, ‘உப பாண்டவம்’, ‘கொம்மை’ என பிற்காலத்திய படைப்புகளும் இந்த கோணத்தை சொல்கின்றன. 

    மறுஆக்கம் என்பது ஒரு நூலையோ, புராணத்தையோ குறித்து இருக்கும் தோற்றங்களை கலைத்து, அதன் கருத்தியலமைப்பை மீண்டும் அடுக்கிக்காட்டுதலாக இருக்கவேண்டும். அந்த மீள்கட்டமைப்பு ஏற்கனவே இருப்பற்றின் ஏற்பாகவோ மறுப்பாகவோ இருக்கலாம். வெறுமே ‘கலைத்தலாக’  இருக்கும் படைப்பு முதலில் ஒரு அதிர்ச்சியை உருவாக்கும், பிறகு காலப்போக்கில் அதற்கு பெரிதாக மதிப்பெதுவும் இல்லை. யுகாந்தா அப்படி ‘கலைத்தலை’ மட்டுமே செய்து காலத்தில் பின் நகர்ந்து விட்ட ஒரு படைப்பு. 

    இனி ஞான் உறங்கட்டே:

    “இனி ஞான் உறங்கட்டே” – மலையாள எழுத்தாளர் பி கே பாலகிருஷ்ணன் திரௌபதியின் பார்வையில் கர்ணனைப் பற்றி எழுதிய நாவல். “இனி நான் உறங்கட்டும்” என தமிழில் எழுத்தாளர் ஆ.மாதவன் மொழிபெயர்த்துள்ளார். வாழ்வே துயராதல், கடவுளால் / விதியால் / உறவுகளால் கைவிடப்படுதல், அந்நியமாதல், இருத்தலே துயரம் என இருத்தலியல் தத்துவத்திற்கு இந்திய பண்பாட்டில் கர்ணனையோ அம்பையையோ விட வேறு படிமத்தை சொல்லிவிட முடியாது. தேர்ந்த வாசகர்களால் ‘இனி நான் உறங்கட்டே’ சிறந்த இருத்தியலியல் நாவலாக கருதப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் இலட்சியவாத கனவு கலைதல், பொருளாதார மந்த நிலை, அவசர நிலையை இந்திய அரசு அறிவித்தல், ஊழல், வேலையில்லா திண்டாட்டம் என 1960-1980 காலகட்டத்தில் இந்தியாவில் பெருவாரியான இளைஞர்கள் தங்களை எல்லா திறமைகளும் இருந்தும் விதியால் தோற்கடிக்கப்பட்ட கர்ணனுடன் அடையாளப்படுத்திக்கொண்டார்கள். அந்த காலகட்டத்தின் பிரதிபலிப்பாக 1974 ஆம் ஆண்டு வெளிவந்த “இனி நான் உறங்கட்டே”விற்கு கேரள சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. 

    தமிழ் மொழிபெயர்ப்பில் பல இடங்களில் சமஸ்கிருத, மலையாள சொற்கள் அப்படியே உள்ளன. நினைவுகளாக விரியும் ஒரு நாவலில் வாசகர் அந்த நினைவுகளில் ஒன்றி வாசிக்க முடியாமல் போவதற்கு இந்த மொழி ஒரு தடையாக உள்ளது. உதாரணமாக: “ஈஸ்வரஹிதம் நீக்குபோக்கற்றது”,  “சுயாபிமான உணர்வுகளால் சூடேறிய..”, “சர்ப்பதம்சனமேற்ற காந்தாரி, மயக்கத்தில் வீழ்ந்து கிடந்தாள்”, “நீ ஒரு நாஸ்திகை போல விதியிடம் கோபங்கொண்டு யுக்தி போதனை செய்கிறாய்.”  மொழிபெயர்ப்பில் விருப்பமுள்ளவர்கள் ‘இனி நான் உறங்கட்டும்’ மொழிபெயர்ப்பை பாவண்ணனின் ‘பர்வா’ மொழிபெயர்ப்புடன் ஒப்பிட வேண்டும். பாவண்ணன், ஆ.மாதவனைவிட வயதிலும், மொழியிலும் அடுத்த தலைமுறையை சேர்ந்தவர். ஆகவே மொழியும் நவீனமாக இருப்பது இயல்பே. ‘பருவம்’ வாசிக்கும்போது ஒரு தமிழ் நாவலை வாசிக்கும் அனுபவமே ஏற்படுகிறது. ‘பருவம்’ நாவல் பதிப்பில் நிறைய எழுத்துப் பிழைகள் இருந்தாலும், அவற்றை கடந்து எளிதாக வாசிக்க முடிகிறது. கன்னட / சமஸ்கிருத சொற்கள் மிகக் குறைவு. ‘இனி ஞான் உறங்கட்டே’ நாவலுக்கு மீண்டும் தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு வரவேண்டும். 

    கர்ணனின் மீது கடும் வெறுப்பில் இருக்கும் திரௌபதியின் நினைவுகளாக துவங்கும் நாவல், குந்தி, கிருஷ்ணன், சஞ்சயன் உள்ளிட்டோர் திரௌபதியிடம் கர்ணனைப் பற்றி சொல்பவற்றின் வழியாக, கர்ணனைப் பற்றிய அவளது பார்வை மாறுகிறது. ‘இனி நான் உறங்கட்டும்’ மகாபாரத நிகழ்வுகளை மூலத்திலிருந்து மாற்றவில்லை. உதாரணமாக கர்ணனின் தந்தை சூரியன்தான். கர்ணன் இறந்த பிறகே பாண்டவர்களுக்கு கர்ணன் தங்கள் மூத்த அண்ணன் என்பது தெரிகிறது. மைய நிகழ்வுகள் எதையும் மாற்றவில்லை. முகவுரை குறிப்புகளிலும் தான் மூலத்தை அடியொற்றியே எழுதியுள்ளதாக குறிப்பிடுகிறார் பாலகிருஷ்ணன். 

    நாவலாசிரியர் கர்ணனை எங்குமே விட்டுக்கொடுக்கவில்லை. சூதனை மாலையிட மாட்டேன் என நிலை மறந்து கூவுகிறாள் திரௌபதி. திரௌபதியை துகிலுரியுமாறு சொன்ன கர்ணன், தன் செயலுக்கு பின்பு வெட்கப்படும் போது அது பீமார்ஜுனர்களை அவமானப்படுத்தவே எனவும், திரௌபதியை அவமதிக்கும் நோக்கில் இல்லை என்று ‘கெத்து’  குறையாமலேயே வருத்தப் பட்டுக் கொள்கிறான். 

    “பீமார்ஜுனர்களின் வீரத்தைதான் நான் சிரித்தேன். யாரைப் பார்த்து நான் நரியைப் போல பயந்து ஓடுவேன் என்று பீஷ்மர் சொன்னாரோ, அந்த அர்ஜுனன் தன் மனைவி ஆடையிழந்து, செயலற்று நிற்கும் காட்சியைத்தான் நான் சிரித்தேன். அந்த திரௌபதியை, நான் சுடு சொற்களால் சுட்டபோது, சுசரிதயான ராஜகுமாரியின் மனநிலை பற்றி எண்ணவே இல்லை! பீஷ்மரைத்தான் நான் கண்டேன். கர்ணனால் இகழப்படும் அர்ஜுன வீரத்தை தான் கண்டேன். இன்று அதற்காக வெட்கப்படுகிறேன் கிருஷ்ணா. என் ஆயுட்காலத்தில் – நிவாரணம் காண இயலாத வண்ணம் – என் புகழிலும் மனதிலும் களங்கம் சேர்த்திட்ட நிகழ்ச்சியாக நான் அறிகிறேன். அதற்காக நான் வெட்கி, வேதனைப்படுகிறேன்..”   

    அம்புப்படுக்கையில் நிகழும் கர்ண-பீஷ்மர் சந்திப்பு — அதுவரை பீஷ்மர் கர்ணனை கடிந்தது பேரன்பின் வெளிப்பாடே உண்மையான வெறுப்பல்ல என்ற கோணம் – ஜெயமோகனின் ‘வடக்கு முகம்’ நாடகத்திலும், வெண்முரசிலும் இதே பார்வை எடுத்தாளப்பட்டுள்ளது; திரௌபதி-கர்ண உறவு அடையும் பரிணாமத்தை சுட்டும் நாவலின் இறுதியில் வரும் திரௌபதியின் கனவும் முக்கியமான பகுதிகள். 

    “அர்ஜுனனது சரங்களுக்கு இலட்சிய குறியாக உள்ள கர்ணனின் விரிந்த தோள்களில் அமைதியாக வீற்றிருக்கும், தன் குழந்தைச் செல்வங்களின் உருவத்தை ஆவலோடு, பயத்தோடு, நான் கண்டேன்! அவன் வலது தோள் மேல் அலட்டாது அமர்ந்திருக்கும் பிரதிவிந்தியனையும் சுதசோமனையும் கூட காணலானேன். மறுதோள் மேல் வீற்றிருக்கும் கிருதவர்மன், சதானீகன், சுருதசேனன் முகங்களை தெளிவாகவே காணமுடிந்தது…ஆறு சிரங்களை கொண்ட கர்ணனின் தோள்களை குறிவைத்து, அந்த தோள்களில் வீற்றிருக்கும் எல்லா சிரங்களையும் இலட்சியமிட்டு காண்டீவியின் சரங்கள் சீறிக்கொண்டு செல்கின்றன…”வேண்டாம் அர்ஜுனா, வேண்டாம் அர்ஜுனா” என்ற அழுகை ஓலம், பிளவுபட்ட கழுத்து வழியாக வெளிவந்தது எனவும், அந்த ஓசை தெறிப்பில் தான் பொடிப்பொடியாக உடைந்து சிதறியதாகவும் அவளுக்கு தோன்றியது” .     

    ரண்டாமூழம்:

    தீவிர இலக்கிய அறிமுகமில்லாத ஒரு பொதுவாசகர் விறுவிறுப்பாக வாசித்து முடிக்கக்கூடிய நாவல் ரண்டாமூழம்.  எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள நாவல். தமிழில் குறிஞ்சிவேலனின் சரளமான மொழிபெயர்ப்பில் ‘இரண்டாம் இடம்’ என சாகித்ய அகாடமி பிரசுரமாக 2000ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. ‘இனி நான் உறங்கட்டும்’ கர்ணன் எனும் சிம்மத்தின் கதை என்றால், ‘இரண்டாம் இடம்’ பீமன் எனும் வேழத்தின் பார்வையில் விரியும் நாவல். பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதத் தொடர் மற்றும் மணிரத்தினத்தின் தளபதி படத்தில் குந்தி சாயலில் வரும் ஶ்ரீவித்யா கதாப்பாத்திரம் மூலமாக குந்தி குறித்து அபலை; ஆண்களின் அரசியலில் பகடைக்காயாக அலைக்கழிக்கப்படும் பெண் என்று எனக்கு ஒரு தோற்றம் இருந்தது. தமிழக பொது மனநிலையும் அதுவே. மகாபாரத மறுஆக்கங்களில் நான் முதலில் வாசித்த ‘இரண்டாம் இடம்’ என் மனதில் குந்தி குறித்த தோற்றத்தை கலைத்தது. குந்தி ஒரு ‘அபலை’ இல்லை, பாண்டவர்களை வழிநடத்திச் செல்லும் வலுவான பிடி யானை என எனக்கு உணர்த்தியது. 

    கௌரவர்கள் நூற்றுவரையும் கொன்றது பீமன். ஆனால் தர்மனுக்கே முடி சூடுகிறார்கள். பாண்டவர்களில் திரௌபதியை மிகவும் விரும்புவது பீமன் — பகடைக்களத்தில் துரியோதனாதிகளை கொல்வேன் என்று சபதமிட்டது பீமன்; கீசகனை கொன்றது பீமன்; ஜெயத்ரதனை அடித்து அவமானப்படுத்தியது பீமன்; சௌகந்திக மலரை கொய்து வந்தவன் பீமன்; இறுதியில் இமையத்தின் நெடும் பயணத்தில் திரௌபதி கீழே விழக்கண்டு துயறுருபவன் பீமன் — ஆனால் திரௌபதியின் மனதில் என்றுமே அர்ஜுனனுக்கே முதலிடம். வாரணவதத்தில் அனைவரையும் தோளில் ஏற்றிக் கொண்டு தப்பித்து, இடும்பனையும், பகாசூரனையும் கொன்று திரௌபதி சுயம்வரம் வரை தன் தம்பிகளையும், குந்தியையும் காத்தது பீமன். ஜராசந்தனை  கொன்றது பீமன்; பாண்டவர்களின் ராஜசுயத்திற்கு வித்திட்டது பீமன். ஆனால் வீரத்தில் அர்ஜுனனுக்கு அடுத்த இரண்டாமிடத்திலே பீமனை வைக்கிறார்கள். கடோத்கஜனும், அபிமன்யுவும் போரில் வீரமரணமடைந்தாலும் அபிமன்யுவின் மரணத்திற்கே கிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் அழுகிறார்கள். கடோத்கஜனின் மரணத்திற்கு இரண்டாமிடமே. இந்த பார்வையில், தனக்கு எப்போதும் இரண்டாம் இடம் கிடைப்பதின் கசப்பை சொல்வது ‘இரண்டாம் இடம்’. 

    விதியின் மேல் இருக்கும் கசப்பு என்பதற்கப்பால் விரியவில்லை நாவல். இந்த கட்டுரைக்காக இரண்டாம் இடம் நாவலை இரண்டாம் முறை வாசிக்கும்போது, முதல் முறை வாசித்த பரவசம் இல்லை. கிளாஸிக் என்பது பல வாசிப்புகளுக்கு இடம் கொடுத்து, ஒவ்வொரு வாசிப்பிலும் புதிதாக கண்டுகொள்வதற்குரிய சாத்தியங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும்.

    கிருஷ்ணா கிருஷ்ணா:

    இந்திரா பார்த்தசாரதி எழுதிய தமிழ் நாவல். 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்திரா பார்த்தசாரதி எழுத்தில் நான் வாசித்த முதல் நாவல். நாவலின் முன்னுரையிலேயே “உலக இலக்கியங்களில் காண முடியாத பன்முக கதாபாத்திரம் கிருஷ்ணன்.. கிருஷ்ணனை எந்த யுகத்திலும், அந்தந்த காலத்திய மதிப்பீடுகளுக்கேற்ப அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும் என்பதே அவன் தனிச்சிறப்பு…ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் படைப்பாக கிருஷ்ணனைக் கொள்ள முடியாது. அவன் சமுதாயத்தின் கனவு.. உலக இலக்கியங்களில் அறிய முடியாத இப்படிப்பட்ட ஒரு கதாப்பாத்திரத்தின் செய்தியை நாவல் வடிவில் எழுத வேண்டும் என்று தோன்றிற்று. இக்காலத்திற்கும் அர்த்தப்படுகின்ற ஒருவனாக அவனை காட்ட வேண்டும் என்பதே விருப்பம்” என்கிறார் ஆசிரியர். 

    கிருஷ்ணா கிருஷ்ணா நாவலில் கிருஷ்ணன் என்ற படிமம் நித்ய பாலகனாகவும், நித்ய காதலனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார். பரிபூரண வெறுப்பும் (கம்சன் – கிருஷ்ணனைத் தவிர வேறு நினைவே இல்லாததால் கம்ஸன் – ஸம்பரம யோகம் செய்தவன்- வைகுண்டத்தில் இருக்கிறான்), பரிபூரண காதலும் (ராதை) சந்திக்கும் புள்ளி, ராதையின் முக்கியத்துவம், கிருஷ்ணர் இறுதியில் ராதையை பார்க்க வருவது என வெண்முரசு வரிசையின் நான்காவது நாவலான நீலத்திற்கும் கிருஷ்ணா கிருஷ்ணாவிற்கும் ஒப்புமைகள் உண்டு. ஆனால் நீலம் ராதையை / பெண்மையை கிருஷ்ணனை விட உயர்த்திக் காட்டுகிறது. கிருஷ்ணா கிருஷ்ணாவின் இறுதியில் ராதையை சந்திக்க வரும் இடத்தில் அந்த கிராமத்தில் எட்டு வயது வரை இருக்கும் சிறுவர்கள் அனைவருக்கும் கிருஷ்ணன் என பெயரிடுகிறார்கள், ராதை “பாட்டியாக” இருக்கிறார். நீலத்தில் ராதை என தலைமுறைகளாக பெயரிடுகிறார்கள். சிறுமி ராதை குழல் வைத்திருக்கிறாள், ஆற்றியது ஆற்றி அமைந்த நெஞ்சத்தோடு வரும் “தாத்தா” கிருஷ்ணன், நீலக்கடம்பின் கீழ் நித்ய கன்னியாக நின்று கண் திறக்கும் கற்சிலை ராதையை காண்கிறார். 

    கிருஷ்ணா கிருஷ்ணாவில் எல்லா பெண்களும் கிருஷ்ணனை விரும்புகிறார்கள். கிருஷ்ணன் ஒரு கையால் முலைக்காம்பை நெருடிக்கொண்டே, பால் குடிக்கும் நிலையில் பூதனையின் முகத்தில் ஒரு தாயின் பேரன்பு தோன்றுகிறது, பின்பு அது சிறிது சிறிதாக மறைந்து, அவள் மைதுனத்தின் உச்சகட்டத்தில் இருப்பதுபோல, சந்தோஷ ஆரவாரம் செய்து, சம்போக ஆனந்தத்தின் எல்லை நிலமான மரணத்தை சேர்கிறாள். நீலத்தில் கம்சனின் ஆணையால் பிறந்த குழந்தைகள் கொல்லப்பட, அதில் தன் மகனை பறிகொடுத்து பிச்சியான பூதனை, கண்ணனுக்கு பாலூட்டும் போது அண்டம் அறிகிறது, தேவகியும், யசோதையும், ராதையும் அறிகிறார்கள் – ஒரு போதும் ஒரு மதுவும் அவனுக்கு அது போல அத்தனை தித்தித்ததில்லை என. இங்கே பூதனை ராதையும் விட ஒரு படி மேலாக சித்தரிக்கப்பட்டுள்ளார். ஒரு வகையில் கிருஷ்ணா கிருஷ்ணாவில் உள்ள கிருஷ்ணர் ‘எஜமான்’ ரஜினிகாந்த் என்றால், வெண்முரசில் உள்ள கிருஷ்ணர் ‘கபாலி’ ரஜினிகாந்த். இரண்டு ரஜினிகாந்துகளின் அடிப்படையே வேறு.

    கண்ணனை அரசியலாளன், வஞ்சகன், பெண் பித்தன் என எப்படியும் எழுதலாம். அப்படி எழுதுவதற்கு மொழியோ / வடிவமோ ஒரு தடையில்லை. ஆனால் ஒரு பண்பாட்டின் பெருந்தெய்வம் என, ஞானி என, பெருங்காதலன் என, பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் வாழ்க என நம் மொழி வாழ்த்திய மணிவண்ணனை சித்தரிக்க வேண்டும் என்றால், அந்த உணர்வுகளை வாசகர்களில் எழுப்பவேண்டும் என்றால் அதற்குரிய நடையும்,  வடிவமும் வேண்டும். மேக்பத், ஹிட்லர், journalist, Freud, strip tease industry psychology, killjoys, etc, etc என்று ஆங்கிலமும், தமிழும் கலந்த கிருஷ்ணா கிருஷ்ணாவின் ‘அடித்து தூள்’ கிளப்பும் நடையில் சுஜாதா நாவல்களில் வரும் விடலைகளை எழுப்பமுடியும், தெய்வங்களை அல்ல. கிருஷ்ணன் போன்ற மாபெரும் மர்மம் நிறைந்த, ஒரு பண்பாட்டால் கடவுளாகவே கருதப்படுகிற ஒரு படிமத்தை நவீன எழுத்தாளர்கள் தங்கள் மொழியில் எழுதுவது என்பதே கம்பன் அவையடக்க பாடலாக சொல்வதைப்போல

    “ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு

    பூசை முற்றவும் நக்குபு புக்கென”

    ஒரு பூனை பாற்கடலை முழுவதும் நக்கி குடித்து விட முடியும் என நினைக்கும் முயற்சி. பாற்கடலை பூதங்களே குடிக்க முடியும். ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ யானை பிழைத்த வேல். அதை ஏந்துவது பெருமையே. அதை ஏந்தியதாலேயே இந்திரா பார்த்தசாரதி எனக்கு பிடித்தவராகிறார். 

    உப பாண்டவம்: 

    எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் 2000 ஆம் ஆண்டு எழுதிய தமிழ் நாவல். எஸ்.ராவின் முதல் நாவல். நாட்டார் பாரதமும்  செவ்வியல் மகாபாரதமும் சந்திக்கும் புள்ளியாக எழுதப்பட்ட முயற்சி. ‘இரண்டாம் இடம்’ நாவலுக்கு பின் நான் வாசித்த இரண்டாவது மகாபாரத மறுஆக்க நாவல். சகுனி மற்றும் கௌரவர்கள் தரப்பு நியாயங்களை மேலதிக வெளிச்சத்துடன் காட்டும் நாவல். உப பாண்டவம் கதை நிகழ்வுகளை மாற்றவில்லை. கதையின் அடுக்கை மாற்றுகிறது. உதாரணமாக நாவலின் சூல் மற்றும் பால்ய விருட்சம் பகுதிகள் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பல கதைமாந்தர்களின் பிறப்பு மற்றும் வளர்ப்பை சொல்கிறது.  அவர்களிடையே உள்ள ஒற்றுமைகளை கோடிட்டு காட்டுகிறது. இந்த ‘அடுக்கிக் காட்டும்’ முயற்சி மற்ற மறுஆக்கங்களில் இருந்து உபபாண்டவத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. ஆனால், இது நாவலின் முதல் சில பகுதிகளோடு நின்றுவிடுகிறது. பைபிள் தமிழ் மொழியாக்கத்தில் ஏவாள் விருட்ச ஸ்த்ரீ என குறிப்பிடப்படுகிறாள். இங்கே திரௌபதி விருட்ச ஸ்திரீயாக வருகிறாள். சமஸ்கிருத பைபிள் நடை, வாக்கிய அமைப்பு என வாசிப்பு எனக்கு கடுமையாக இருந்தது.  

    உபபாண்டவத்தில் யுகாந்தாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. ஒருவகையில் மகாபாரத மைய சிக்கல்களை பங்காளி சண்டையாக மட்டுமே பார்க்கிறது. உதாரணமாக, உபபாண்டவத்தின் ஜரா விருஷ்ணிகளில் ஒருவன், கிருஷ்ணனின் ஒன்றுவிட்ட சகோதரன், வர்ண கலப்பில் பிறந்தவன், ஜராவுக்கும் கிருஷ்ணனுக்கும் இருக்கும் பகை நிலத்தகராறில் வரும் பங்காளிச் சண்டையில் வருவது. அதுபோல மூல மகாபாரத கதை மாந்தர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் உள்ள ‘உன்னதமாக்கல்’ தலைகீழாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சத்யவதி-பீஷ்மர் உறவு பாலசந்தர் திரைப்படம் போல முன்னாள் காதலி சிற்றன்னை ஆகும் உறவு. சத்தியவதியான பரிமளகந்தி கங்கையில் அம்பு பயிற்சியில் ஈடுபடும் பீஷ்மர் மேல் காதல் கொள்கிறாள். அவன் வருவான் என்று காத்திருக்கிறாள். வருவதோ அதே முகமுடைய வயதான பீஷ்மரின் தந்தை. பிஷ்மர் அந்த சொல்லாத காதலை தன்னுள் புதைத்து கொள்கிறார். மச்சகந்தியின் கலையாத நேசத்தின் மீது எவர் பிரியமும் ஈடு வைக்க வேண்டாம் என முடிவு செய்தால் பீஷ்மர் நித்ய பிரம்மச்சாரியாக சபதமேற்கிறார். காந்தாரியின் பாத்திரப்படைப்பும் மகாபாரதத்திற்கு நேரெதிர்.  உபபாண்டவத்தில் திருதராஷ்டிர ஆலிங்கனத்திற்கு தூண்டுவது காந்தாரி. பீமனுக்கு பதில் உடைபடுவது தர்மனின் சிலை. விதுரர் தர்மனிடம் தன் மன மொழியை ஒரு கூழாங்கல்லாக தருகிறார். குந்தி திருதராஷ்டிர-காந்தாரியை தொடர்ந்து கானேகுவது குற்றவுணர்வினால். அஸ்வத்தாமன் குடிகாரனாக ஒரு தாமரை மலரை கையில் வைத்து ‘திரௌபதி! திரௌபதி!’ என அரற்றுகிறான். 

    காட்டெரி சூழ பாறையில் பிள்ளைகளுடன் தவிக்கும் திருதிராஷ்டிர-காந்தாரியை மறுபக்கத்திலிருந்து தாக்கும் ஓநாய்களிடமிருந்து காக்க முயலும் சகுனியின் கனவு,  ஒரு பிராமணனிடம் விலை மதிப்பில்லாத வெண்ணிற பசுக்களை மூன்றே ஆட்டத்தில் தோற்கும் தர்மன் என சில பகுதிகள் எனக்குப் பிடித்திருந்தது. முழு நாவலும் அடுக்கிக்காட்டுதலாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

    பர்வா:

    ஏற்கனவே குறிப்பிட்டது போல, நாம் சிறு வயதில் கேட்டு வளர்ந்த இதிகாசத்தை ‘கட்டுடைத்து’ அதன் மறுபக்கத்தை காட்டும் படைப்பு முதலில் ஒரு பரவசத்தை தரும். ஆனால், ஒரு கட்டத்தில் வெறும் கட்டுடைப்பு போதாமலாகிறது. அந்த ‘மறுபக்கத்தின்’ போதாமைகளை உணர்கிறோம். மறுபக்கத்தின் மறுபக்கத்தை காண விரும்புகிறோம். அதுவும் மகாபாரதம் போன்ற பெருங்காப்பியத்தை தன் நோக்கிற்கேற்ப சுருக்காமல், பாரதத்தை நோக்கி விரியும் படைப்பை காணும்போது மனதில் பேருவகையும், நாவில் பெரும் தித்திப்பும் உருவாகிறது. வெண்முரசிற்கு முந்தையவற்றில் விரிவிலும், தரிசனத்திலும் முதன்மையான “பர்வா” அப்படிப்பட்ட ஒரு நாவல். 

    “இனி ஞான் உறங்கட்டே” வெளிவந்து ஐந்து ஆண்டுகள் கழித்து 1979 ஆம் ஆண்டு வெளிவந்த பர்வா, ‘கலைத்தல்’ + ‘மீண்டும் ஆக்குதல்’ என “மறு ஆக்கம்” என்ற சொல்லின் முழுமையான பொருளில் வந்த முதல் படைப்பு. 

    பர்வா மகாபாரதத்தின்  தொன்மங்கள் இல்லாத, எவ்வித மாயங்களும் இல்லாத நவீனத்துவ மறுஆக்கம். எழுத்தாளர் பாவண்ணன் கன்னட மூலத்திலிருந்து தமிழில் ‘பருவம்’ என மொழிபெயர்த்துள்ளார். அவருக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.  உப பாண்டவம், கிருஷ்ணா கிருஷ்ணாவை சேர்த்தே இந்த நாவல்களில் வாசிக்க சரளமான மொழியில் அமைந்துள்ளது பருவம்.

    யதார்த்தவாத நாவல்களை படித்து சலிப்புற்றிருந்த மேற்கத்திய வாசகர்களுக்கு காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் “தனிமையின் நூறாண்டுகள்” மூலம் மாய யதார்த்தவாதத்தை அறிமுகப்படுத்தி பெரும் பரவசத்திற்கு உள்ளாக்கினார். தினமும் வெண்பொங்கல் சாப்பிட்டவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டது போல் அது தித்தித்தது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், மாய யதார்த்த சர்க்கரைப்பொங்கல் புராணங்களில் திகட்டத் திகட்ட மூழ்கி திளைத்த இந்தியர்களுக்கு, வெண்பொங்கலை சுவைத்த பரவசம் பர்வா.

    சல்யர், குந்தி, பீமன், திரௌபதி, அர்ஜுனன், சாத்யகி, கர்ணன், பீஷ்மர், யுயுத்சு, துரோணர் ஆகியோரின் நினைவுகளாக விரிகிறது பர்வா. ‘தருமம் என்றால் என்ன’ என்ற கேள்வி அனைவரின் அகத்தையும் துளைக்கிறது. அதன் புற வெளிப்பாடாக நாவல் முழுவதும் புழுக்கமும், வெக்கையும் அனைவரையும் வாட்டுகின்றன. 

    பகாசூரனை பீமன் கொன்றதற்கு பழிவாங்குவதற்கு ராட்சச குலம் போரிட வேண்டும் என கடோத்கஜனை நெருக்கிறார்கள். ராட்ஸச குலம் இரண்டாக பிரிந்து நிற்கிறது – ‘அம்மா, எது தர்மம் என்று எனக்கு எதுவும் புரியவில்லை. நீயே விளக்கமாக சொல்’ என கடோத்கஜன் இடும்பியை கேட்கிறான். 

    “பாண்டவர்கள் இமயமலைப் பகுதியில் பிறந்தவர்கள். சகோதரர்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் பழக்கத்தை துவக்கியிருக்கிறார்கள். அந்த பழக்க வழக்கங்களை முழு ஆரிய சமூகத்தின் மேல் சுமத்தப்பார்க்கிறார்கள். நீங்கள் எந்தப் பக்கம்? ஆரியரா? அல்லாதவர்களா?” என வேத சாஸ்திரிகள் அனைவர் முன்னிலையிலும் கேட்கிறார்கள். அம்மா, உண்மையான ஆரிய தருமம் என்றால் என்ன?” என்று பிரதிவிந்தியன் தன் அம்மா திரௌபதியிடம் கேட்கிறான். ஆரிய தருமம் என்றால் வேட்டை, சூது, மது, பெண்களுடன் சல்லாபம் என நினைத்து சிரித்து கொள்கிறாள் திரௌபதி.

    பங்காளிகளுக்கிடையே உள்ள நிலப்பிரச்சனையாக மட்டும் இருந்தால் அது உலகியல் சார்ந்தது. ஆனால் ‘நியோகமாக இருந்தால் அஸ்தினாவதியிலேயே, புரோகிதர்கள் மூலம் ஒரே ஒரு மகனைப்பெற்றிருக்க வேண்டும். காட்டில் சென்று பல மகன்களைப் பெற்றதன் மூலம் குந்தியின் நியோகம் செல்லாதது, பாண்டவர்கள் குருவம்சமே இல்லை, மலைக்குடிகளின் தருமத்தை முன்வைத்து ஆரிய தருமத்தை அழிக்கிறார்கள். ஆகவே யுத்தமே நிலத்திற்கானது அல்ல, அறத்திற்கானது’ என்கிறான் துரியோதனன். 

    ஆசிரியர்களையும், உறவினர்களையும் எதிர்க்க வேண்டுமா என்று நினைத்தாலும், போர் புரிய மறுப்பதற்கு ஆரிய பெண்களின் கற்பு சார்ந்து எழும் சிக்கலே அர்ஜுனனை தயங்க வைக்கிறது. 

    “போரில் யார் வென்றாலும் தோற்றாலும் ஆரியவர்த்தத்தின் பாதிக்கும் மேற்பட்ட சத்ரிய ஆண்கள் இறந்து விடுவார்கள். நம் தூய்மையான சத்ரிய பெண்களை மற்ற கீழ் குலத்தார் – குறிப்பாக ஆரியரல்லாதவர்கள் — தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள். ஆண் துணை இல்லாமல் நம் பெண்களே அவர்களை தேடிச் சென்றாலும் சென்றுவிடக்கூடும். அப்போது வர்ணங்கள் குழம்பி, அதருமம் தலையெடுக்கும்.” என நினைக்கும் அர்ஜுனன், துரியோதனனே ஆளட்டும், நமக்கும் வயதாகிறது, காட்டில் ஆசிரமம் கட்டிக்கொண்டு இருந்து விடுவோம், போர் புரிய மாட்டேன் என்கிறான்.

    கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதை உபதேசிக்கிறான். கற்பு என்ற பேசுபொருளை முன்வைத்து தர்மம் என்றால் என்ன என்ற கேள்விக்கு விடையாக அமைகிறது பர்வாவின் கீதை.

    “யுத்தத்தில் ஆண்கள் இறந்து பெண்கள் ஆதரவற்றவர்களாக மாறுவது சகஜம்தான். அதற்கப்புறம் அப்பெண்கள் அடுத்த ஆண்களோடு சேருவதும் சகஜம்தான். பலாத்காரத்தாலோ அல்லது விருப்பத்தின்பேரிலோ இது நடந்துவிடும். ஆனால் நம் சத்ரியப் பெண்களுக்கு நடந்தால் மட்டும் இது அநியாயம் என ஏன் எண்ணவேண்டும்? கற்பும் புனிதமும் வெறும் ஆரிய பெண்களுக்கு மட்டும் உரியவையா? உன் மூத்த பாட்டி சத்யவதி ஆரியப்பெண்ணா? பீஷ்மரின் தாய் கங்கை ஆரியப்பெண்ணா?… கற்பு என்று சொல்ல வந்தால் அது அவர்களுக்கும் உண்டு, இவர்களுக்கும் உண்டு. இதில் வித்யாசமாகப் பார்ப்பது நமது அகங்காரத்தைத்தான் காட்டும்….நீங்கள்  அனைவரும் பாண்டுவுக்கு பிறந்தர்களே இல்லை என்று துரியோதனன் சொல்கிறான். பீஷ்மனும் துரோணரும் அவர்கள் பக்கத்தில் இருப்பதால் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றே பொருள்படும். அவர்களிருவரும் தரும நெறியில் சிறந்தவர்கள் என்பதையும், உன் தாய் திருமணத்திற்கு புறம்பான முறையில் பிள்ளைகளைப் பெற்றவள் என்பதையும் நீங்கள் ஏற்றுக் கொண்டது போல் ஆகும். நீ அதை ஏற்கிறாயா? ” 

    சஞ்சயன் மூலம் கீதையை கேட்கும் காந்தாரி, தன்னையும் குந்தியையும் ஒரே தட்டில் வைப்பதா என நினைத்து, கிருஷ்ணனை தந்திரக்காரன் என்கிறாள். போர் முடிந்த பின் கிருஷ்ணனிடம் சொல்லும்போது, ஒரு குருடனை திருமணம் செய்துகொள்வதை எதிர்த்தே கண்களை கட்டிக்கொண்டேன் என்கிறாள். பதிவிரதை என்று பீஷ்மரும், மற்றவர்களும் அழைக்க ஆரம்பித்ததனால், அவளே அதை நம்ப ஆரம்பித்ததாக சொல்கிறாள். அவளுடைய கற்பினாலேயே கௌரவர்கள் செல்வமும் வெற்றியும் அடைகிறார்கள் என நினைக்கிறாள். கிருஷ்ணர் அவளுடைய கண் கட்டை அவிழ்க்கிறார். கற்பு என்று சொன்னவை எல்லாம் போலி என உணர்கிறாள் காந்தாரி. பின்பு குந்தியும் காந்தாரியும் இணைந்து போரில் இறந்த மகன்களின் பிணங்களை காணச் செல்கிறார்கள். தன் மகன்களின் பிணங்களுக்கும், மற்ற பிணங்களுக்கும் வித்தியாசம் இல்லை. எல்லா பிணமும் ஒன்றே என்பதை உணர்கிறார்கள். நாவலின் உச்சங்களில் ஒன்று இந்த இடம். நாவல் இங்கேயே முடிந்திருக்க வேண்டும். ஆனால், அடுத்து ஒரு 15 பக்கங்கள் நீள்கிறது. அதன் நவீனத்துவ வடிவம் கதைத்தருணங்களோ மாந்தர்களோ மண்ணை மீறி விண்ணில் பறந்தாலும் அதை மீண்டும் தரையிரக்க வேண்டும் இல்லையா? காந்தாரிக்கு கண் பார்வை பறிபோய் உண்மையிலேயே குருடியாகிவிடுகிறாள். கிருஷ்ணன் செய்வதறியாமல் திகைக்கிறார். உத்திரையின் மகன் இறந்தே பிறக்கிறான். வாரிசு வேண்டும், குழந்தை பெற்றுத்தா என திரௌபதியை குந்தி நிர்பந்திக்கிறாள். போரில் கணவனை இழந்தவர்கள் எங்களுக்கு ஒரு பதில் சொல் என தர்மனை நெருக்குகிறார்கள்.

    உன்னதமாக்கல், கற்பனை அம்சம், கனவுகள், நாடகீய உச்சங்களை பர்வாவின் நாவல் வடிவம் அனுமதிப்பதில்லை. பாண்டவர்கள் வனவாசம் சென்ற பின், துச்சாதனன் நான் இந்திரபிரஸ்தத்தை ஆள்கிறேன் என்று துரியோதனனிடம் கேட்கிறான். துரியோதனன் அப்படி தந்தால் துச்சாதனன் என்றாவது தனக்குப் போட்டியாக வந்துவிடுவான் என்பதால், வேண்டாம் அதை மீண்டும் காண்டவ வனமாகவே மாற்றிவிடுவோம் என்கிறான். ஆயிரம் பக்க நாவலில் இரண்டு சிறு கனவுகள் வருகிறது. துரோணருக்கு ஒரு ஆசிரமம் கட்ட வேண்டும் என்று. கர்ணனுக்கு வரும் கனவில் அவனுடைய மூன்று  மகன்களான சுஷேணன், சித்திரசேனன், சுஷர்மன் அனைவரும் சூரிய மண்டலத்தை சென்று  சேர்ந்தார்கள். இதமான வெளிச்சம். கீழே அகன்ற நதி, அதில் ஒரு படகு. சூரிய வெளிச்சமே ஒரு குழந்தையாக அந்தப் படகில் வந்து இறங்கியது. நதியில் பெருகும் வெள்ளத்தால் படகு மெல்ல அசைந்து அதன் போக்கில் போகிறது. 

    பறவைகளும், பாய் புலியும், சிம்மமும் வேழமும் அதன் அதன் கூண்டுக்குள் வாழ்வதைப் பார்ப்பது போன்றது பர்வாவை வாசிப்பது. அந்த விலங்குகள் எல்லை கட்டப்பட்டிருந்தாலும், அவற்றிற்கு கூர் உகிர்களும், பற்களும் உள்ளன என்பதை நாம் உணர்கிறோம். அவற்றின் கர்ஜனைகளையும், பிளிறல்களையும் நாம் கேட்கிறோம். பர்வா எனும் மிருகக்காட்சி சாலையை கண்டு வியந்திருந்தேன் வெண்முரசென்னும் பெருங்காடே கண்முன் விரியும் வரை.

    கொம்மை:

    “கொம்மை” – எழுத்தாளர் பூமணி எழுதிய நாவல். 2018 இல் வெளிவந்துள்ளது. பெரும்பாலான நவீன மறுஆக்கங்கள் மூலத்தின் செவ்வியல் வடிவத்தை பிரதிபலிக்கின்றன. வெண்முரசு மூலத்திற்கு இணையான செவ்வியல் மாற்று உலகை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.  “கொம்மை” நேர் எதிர்.  உரையாடல்கள், பாடல்கள், என முழுக்க முழுக்க அன்றாட பேச்சு மொழியில் எழுதப்பட்டுள்ளது. கொம்மை என்றால் மார்பகம் / கொங்கை என்று பொருள். புராணங்களை பேச்சு மொழியில் சொல்லி பார்த்தாலே அது பெண்களின் துயர்பாடும் காவியம்தான். அதனால் சில முக்கியமான மாற்றங்களை தவிர்த்து மூலத்தை ஒட்டியே பெரும்பாலான நிகழ்வுகள் உள்ளன.  வெண்முரசு நாவல் வரிசையை போலவே எண்ணற்ற கிளைக்கதைகளின் சுருங்கிய வடிவங்களை உள்ளடக்கியது. கொம்மையில் சங்க இலக்கிய, திருக்குறள் குறிப்புகள் உள்ளன. வெண்முரசில் இந்த குறிப்புகள் மானுடத்தின் அறிதல்களாக, உச்சங்களாக  வெளிப்படும். கொம்மையில் இந்த  வரிகளின் தலைகீழாக்கங்கள் உள்ளது. துயரத்தையும் கேலி, கிண்டல் மொழியில் சொல்லி செல்கிறது. 

    உதாரணமாக “காமம் காமம் என்ப” என்ற சங்கபாடல் வரிகள் முதலில் கிழட்டுப்பசுவான சாந்தனுவின் பார்வையிலும், பின்பு சத்யவதி / கங்கையின் பார்வையிலும் சொல்லப்படுகிறது. மேலோக கூத்தும், புலோக கூத்தும் ஒன்றிற்கு ஒன்று சளைத்ததில்லை என்கிறது.

    சாந்தனு தன் வயதான காலத்தில் மச்சகந்தியின் மீது  காமுறுவதை தன் சாரதியிடம் சொல்கிறான்: “காமத்துக்கு ஏதுடா மூப்பும் பிணியும். அட மடையா நல்லாத் தெரிஞ்சுக்கோ. காமம் காமம்னு ஏளனமாச் சொல்றாங்களே அப்படி இல்லடா. அது பேயுமில்ல நோயுமில்ல. மழைக்குத் தளுத்த எளம்புல்ல கெழட்டுப்பசு கரும்பி நமட்டுமே அந்த மாதிரி தீராத பெரிய விருந்தாக்கும்.” “அது சரி. அனுபவம் பேசச் சொல்லுது. அப்படின்னா இனியும் விருந்து தீராதுன்னு சொல்லுங்க”. “புல்லு தளுக்கிறதும் மாடு புசிக்கிறதும், எண்ணைக்குமே தீராதுடா.”

    பீஷ்மரை விரும்புகிறாள் சத்யவதி. கங்கைக்கும் மச்சகந்தியை மருமகளாக்கும் ஆசை இருக்கிறது. சாந்தனு சத்யவதியை திருமணம் செய்துகொண்டு தனக்கு சக்களத்தியாக வந்தபின் கங்கையும், சத்யவதிக்குமான உரையாடல்: 

    “ஒனக்கென்ன ஒரு புருசனோட காலத்த முடிச்சுக்கிருவ. என்னச் சொல்லு. பேருதான் தேவத. செய்றதென்னமோ தேவடியாத்தனம். என்னப் போல ஊர்வசி ரம்பை திலோத்தமை மேனகை கிருதாசின்னு ஒரு அடிமைக் கூட்டமே இருக்குது. இந்திரனோட அமராவதியிலயும்  ஆத்துத் தண்ணியிலயுமாக் குடியிருக்கொம். கூப்புட்ட கொரலுக்கு ஓடணும். ஏவுன வேலையச் செஞ்சு முடிக்கணும்.’’

    “அப்படியென்ன வேலம்மா.’’

    “இன்னதுன்னு கெடையாது. ராசாக்களுக்குப் பொண்டாட்டியா இருக்கணும். இல்ல வப்பாட்டியா வச்சுக்கிருவாக. முனிவருக்குத் தொண்டுசெய்யணும். அவுகளுக்கு அரிப்பெடுத்த நேரம் கூடப் படுத்துக் காம இச்சைக்குத் தீனியாகணும். கொழந்த பெத்துக்குடுக்கணும்.’’

    “எங்க பெழப்பும் அப்படித்தான். பராசர முனிக்கு துவைபாயனனப் பெத்துக் குடுத்தனே அப்படி.’’

    “யாராச்சும் வரங் கேட்டுத் தவமிருந்தாகன்னா இந்திரனுக்குக் கொடலு பதறும்.’’

    “ஏன் அப்படி.’’

    “எல்லாம் பதவியத் தக்கவச்சுக்கிறத்தான். தவமிருக்கிறவனுக்கு ஏறுக்கு மாறா வரத்தக் குடுத்துப்புட்டுப் பெறகு குத்துதே கொடையிதேன்னு அடிச்சுக்கிருவாக. வரம் வாங்குனதும் மொதக் காரியமா இந்திரன் தலையிலதான் கைவப்பாக.’’ “அப்படிச் சொல்லு.’’ “இந்திரன் பதறியடிச்சு ஒடனே எங்கள ஏவிவுட்டு தவத்தக் கலைக்கச் சொல்லுவாரு. அவுகளுக்கு முன்னால ஆடணும் பாடணும். அவுத்துப்போட்டுக் குளிக்கணும். கூடப் படுக்கவும் செய்யணும். எப்படியோ அவுக தவத்தக் கலச்சாச் சரி. காமம் கட்டுப்பாட்ட மீறிக் கரையொடச்சுக்கிட்டா வீரியத்தப் பீச்சி அங்கங்க செடிகொடியில புடிச்சுவச்சிட்டுப் போயிருவாக. அது கருவாகி வளந்து கொழந்த பெறக்கும். அத யாராச்சும் எடுத்து வளக்கிறதும் உண்டு. காட்ல அனாதையா அலையவுடுறதும் உண்டு. ஈவெரக்கங் கெடையாது. கேட்டா ஆயிரம் நியாயம் சொல்லுவாக.’’

    “எங் கதையும் அப்படித்தான். மச்சத்தோட வயித்துல பெறந்தென். நதியில முனிவருக்குப் புள்ளையப் பெத்துக் குடுத்தென்.’’

    “நீ கன்னியாயிருந்த. ஒருத்தருக்கு மனைவியாருந்து தாயாகப்போற. பேரப் புள்ளைகளையும் கண்குளிரப் பாக்கப்போற. ஒனக்குப் பிணி உண்டு. மூப்பு உண்டு. மரணமும் உண்டு. எனக்கு எதுவுமே கெடையாது. எல்லாரையும் சந்தோசப்படுத்துற நித்தியக்கன்னி. ஒன்னப்போல இருக்கணும்னு எனக்கும் ஆச இருக்குமில்ல. நானும் பொண்ணுதான. பொண்ணுகளோட மனசப் புரிஞ்சுக்கிறாம இந்திர சபையில கூடி ஆடிப்பாடி அளவுக்கு மீறிச் சோமரசமும் சுரா பானமும் குடிச்சுக் கூத்தடிக்கிறத நெனச்சுப் புழுங்கிக்கிட்டே எங்காலமும் ஓடுது.’’ 

    “மேலோகத்துக் கூத்துக்குப் பூலோகக் கூத்து ஒண்ணும் கொறஞ்சதில்ல.’’ 

    “இப்பத்தான் மனசு லேசாருக்குடி.. வாறென். அடுத்து என்ன வேல வச்சிருக்காகளோ.’’

    அர்ஜுனன் கிருஷ்ணனை “டேய் மாட்டுகார பயலே”, “கருத்த மச்சான் கிச்சு” என்று கூப்பிட, கிருஷ்ணன் அர்ஜுனனை “அட பரதேசி அச்சு” என்கிறான். எல்லா மகாபாரத மறுஆக்கங்களிலும் சூதுக்களத்தில் திரௌபதிக்கு யாரவது உதவுகிறார்கள். கொம்மையில் திரௌபதியே துச்சாதனனை அடித்து உதைத்து தன்னை காப்பாற்றி கொள்கிறாள். உங்களை நீங்களேதான் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற பார்வை இது. “செஞ்ச பாவத்தை அனுபவிக்கனும்” என்பதை தாண்டி கொம்மை தத்துவங்களை நோக்கி போவதில்லை. தர்மன் குறித்து வரும் வரிகள், நாவலின் பார்வையை பிரதிபலிக்கின்றன.

    இப்போது தருமன் முற்றிலும் புதிய மனிதனாக மாறியிருந்தான். எதார்த்த வாழ்க்கையும் தத்துவங்களும் அவனை ஞானவானாக்கிவிட்டன. புதிய அனுபவங்கள் புடம்போட்டதில் புத்தொளி பெற்றிருந்தான். மனிதனின் மதிப்பைத் தெளிவாகப் புரிந்திருந்தான். வாழ்க்கைப் பொறுப்புக்களை அறிந்துணர்ந்தான். மாய மந்திரச் சக்திகளைப் பெறுவதைவிட உலகத்தின் இயக்கத்தைப் புரிந்துகொண்டாலே போதும். மனஅமைதி தானே வருமெனக் கண்டுகொண்டான். செல்வத்தில் வறியவனாக இருந்த அவன் ஆன்மிகப்பலத்தால் செல்வந்தனாகிவிட்டான். பிறரைத் தண்டிப்பதைவிட மன்னிப்பதில்தான் அதிக இன்பம் கிட்டும் என்பதை அறிந்துகொண்டான்.

    இந்த நாவலின் தனித்த அடையாளமாக நான் கருதுவது தாளத்துடன் கூடிய ஏராளமான நாட்டார் பாடல்கள். ஒரு உதாரணம்: 

    “அண்டம் நடுங்கிடத்
    தண்டு முறிந்திடச்
    சண்டை நடந்ததடா –
    சூரன் மண்டை பிளந்ததடா.
    கண்டவர் அஞ்சிடக்
    கானவர் ஓடிட
    வென்றவன் வீரனடா – பகனைக் கொன்றவன் பீமனடா.’

    வெண்முரசு:

    வெண்முரசிற்கு முந்தைய மகாபாரத மறுஆக்கங்களில் பர்வாவும், கொம்மையும் அளவிலும், உள்ளடக்கத்திலும் பெரிய நாவல்கள். கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள். வெண்முரசு அதைவிட இருபத்தி ஐந்து மடங்கு பெரியது. வெண்முரசை எல்லாம் யாரும் படித்துவிட்டேன் என சொல்ல முடியாது. ஒரு முறை வாசித்துள்ளேன். சில பகுதிகளை மீளமீள வாசித்துள்ளேன். வெண்முரசு மூல மகாபாரத்திற்கு இணையான ஒரு நவீன புராணத்தை உருவாக்கி காட்டுகிறது. 

    பெரிய நூல் தரமான நூலாக இருக்காது என்பது பொது புரிதல். விரிவும், அழகும், உன்னதமும் ஒருசேர இருக்க முடியும் என்பதற்கு தமிழ் இலக்கிய மரபில் கம்பராமாயணம் முன் உதாரணமாக இருக்கிறது. என் வாசிப்பில் வெண்முரசை கம்பராமாயணத்தோடு மட்டுமே ஒப்பிட முடியும். திருக்குறள், பக்தி இலக்கியங்கள் என அன்றைய “உலகம் யாவையும்” உள்ளிழுத்து கம்பர் காவியம் படைத்தார் என்றால், இதுவரை வந்த மொத்த தமிழ் இலக்கியங்கள், இந்திய மற்றும் மேற்கத்திய நவீன நாவல்கள் என இன்றைய “உலகம் யாவையும்” செரித்து படைக்கப்பட்டது வெண்முரசு. 

    வெண்முரசின் சுருக்கமான உள்ளடக்கம் எல்லாம் ஒரு கட்டுரையில் எழுதிவிட முடியாது. என் வாசிப்பில் வெண்முரசின் முக்கியத்துவம் என்பது:

    1. இந்திய தொன்மங்களுக்கு இடையே இருக்கும் ஆச்சிரியம் தரும் ஒற்றுமை (தாட்சாயனி-அம்பை, கத்ரு-வினதை காந்தாரி-குந்தி). ஒன்று போல இருக்கும் தொன்மங்களை அடுக்கி காட்டுதலின் மூலம் உருவாகும் ஆழம், காலத்தின் சுழற்சி. மற்ற எந்த நவீன மகாபாரத மறுஆக்கங்களிலும் இந்த அடுக்குகள் இல்லை. சம்வகை போன்ற புதிய கதைமாந்தர்களை உருவாக்கி தேவயானி, தமயந்தி, சத்யவதி, குந்தி, திரௌபதி அடுக்குகளில் இணைக்கிறது. ஒற்றைப்படையாக நாம் அறிந்த புராணங்கள் பல அடுக்குகளாக விரியும்போது, இன்றைய உலகும், நாளைய உலகும் அதில் சொல்லப்படாத அடுக்குகளாக இணைகின்றன.  
    2. மகாபாரத தொன்மங்கள் தர்க்கத்தை மீறாத, நடக்க சாத்தியம் உள்ள வரலாற்று நிகழ்வாக மாறுதல். ஜெயமோகன் வரலாற்று நிகழ்வுகளை தொன்மங்களாக மாற்றும் படைப்புகளை எழுதியுள்ளார் (உதா:படுகை). கொற்றவையிலும், வெண்முரசிலும் தொன்மங்களை ஒரு நிகழ சாத்தியமான வரலாற்று நிகழ்வாக மாற்றி காட்டியுள்ளார். யதார்த்த நிகழ்வுகள் தொன்மங்களாக பரிணாமம் அடையும் சித்திரமும் உள்ளது. உதா: கன்றுகளை பலியிடும் வேள்விகள் தேவையில்லை என்பதால் இந்திரன் ஆயர்களின்மீது கோபம் கொண்டு பெருமழை வெள்ளத்தால் ஆயர்களை அழிக்க முற்படுகிறான். கண்ணன் தன் சுண்டுவிரலால் ஆயர்மலையை தூக்கி வெள்ளத்தில் இருந்து யாதவர்களை காப்பாற்றினான் என்பது தொன்மம். வெண்முரசில் யாதவர்தம் பேரரசனாக இருக்கும் கண்ணன், மாமழை பெய்து வெள்ளம் ஏற்படும் ஆற்றின் குறுக்கே, ஆயர்மலை கற்களை கொண்டு அணை கட்டுவதற்கு கையொப்பம் இடுகிறார். வருடந்தோறும் ஏற்படும் வெள்ளத்திலிருந்து அணை மக்களை காக்கிறது. ஒற்றை விரல் ஆணையால், மலையை தூக்கி மழைக்கடவுள் இந்திரனிடம் இருந்து காத்ததாக சூதர்கள் பாடுகிறார்கள்.
    3. இந்திய தத்துவங்களின் விளக்கங்கள். உதா: கீதையின் மூன்றாவது பகுதியான கர்ம யோகத்தில், கண்ணன் பார்த்தனுக்கு உரைப்பதாக உள்ள வரிகளின் வழக்கமான மொழிபெயர்ப்பு [“இந்து ஞான மரபு – ஒரு எளிய அறிமுகம்” நூல் பின்-இணைப்பு – அறிஞர் ஜடாயு]: “விதிக்கப்பட்ட தொழிலை நீ செய். தொழில் தொழிலின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ? தொழிலின்றி இருப்பதால் உடம்பைக் கொண்டு செலுத்துதல் கூட உனக்கில்லாமல் போய்விடும். வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் தொழில் மனிதருக்குத் தளையாகிறது. ஆதலால், குந்தி மகனே, பற்றைக் களைந்து தொழில் செய்து கொண்டிரு.” வெண்முரசு நாவல் வரிசையில் இமைக்கணம் நாவலின் இறுதிப்பகுதியில் கீதையின் தமிழாக்கம் உள்ளது. அதில் – https://venmurasu.in/imaikkanam/chapter-48/: “உனக்கான செயலை செய்க! ஏனென்றால் செயலின்மையை விடவும் செயல் மேன்மை உடையது. செயலின்மை கொண்டாயென்றால் உடலைப் பேணவே இயலாதவனாவாய். வேள்வியென ஆற்றப்படும் செயல்கள் தவிர்த்த பிறவற்றால் இவ்வுலகம் செயற்சுழலில் சிக்கியிருக்கிறது. ஆகவே குந்தியின் மகனே, அவ்வாறான செயலை பற்றில்லாது செய்க!” . “விதிக்கப்பட்ட தொழில்” என்பதற்கும் “உனக்கான செயல்” என்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. அதுபோலவே, “வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர” என்பதற்கும் “வேள்வியென ஆற்றப்படும் செயல்கள் தவிர்த்த“  என்பதற்கும் பெரும் வித்யாசம் உள்ளது. முந்தைய சொற்கள் வேள்வியை மட்டுமே குறிக்கும்போது, “வேள்வியென ஆற்றப்படும் செயல்கள்” என்பது விவசாயம், ஆய்வு, கலை, தொழில்முனைவு என ஒருவர் முழுமூச்சாக ஈடுபடும் அனைத்து செயல்களையும் குறிக்கிறது. வேள்விக்கு எதிராக எழுந்த கீதையின் முனைகள் ஆயிரம் வருடங்களாக மழுங்கடிக்கப்பட்டு மீண்டும் வேள்வியிலே கொண்டு கட்டப்பட்ட முயற்சிக்கு எதிராக கீதையை “சரியான ஒளியில்” காட்டும் முயற்சி வெண்முரசு.
    4. மொழி, புதிய சொற்கள், உவமைகள். ஜெ. பல நடைகளில் எழுதக்கூடியவர். தமிழ் நாவல்களை தொடர்ந்து வாசித்தவர்கள் கொற்றவை நடை தமிழ் புனைவில் ஒரு பெரும்பாய்ச்சல் என்பதை உணர்ந்திருப்பார்கள். வெண்முரசு அந்த நடையின் அடுத்தக்கட்டம். நீலம் அதன் உச்சம்.
    5. எண்ணற்ற கதைமாந்தர்கள்: திரௌபதியின் பாத்திரப்படைப்பு. வெண்முரசை தவிர எல்லா மகாபாரத மறு ஆக்கங்களிலும் குந்தி திரௌபதியைவிட பெரிய ஆளுமை. வெண்முரசில் திரௌபதி குந்தியைவிட பெரிய, கிருஷ்ணனுக்கு இணையான ஆளுமை. மேலும் மற்ற படைப்புகளில் கர்ணன் அர்ஜுனனைவிட பெரிய ஆளுமை. தர்மனுக்கு பெரிய இடம் இல்லை. வெண்முரசில் தர்மன், அர்ஜுனன் உள்ளிட்ட மைய பாத்திரங்கள் மட்டும் அல்ல, மூலத்தில் ஒரு வரியில் வரும் கதைமாந்தர்கள், புதிய கதை மாந்தர்கள் என நூற்றுக்கணக்கான ஆளுமைகள் வருகிறார்கள்.

    [5] மகாபாரத மைய நிகழ்வுகள் – மறுஆக்கங்கள் ஒரு ஒப்பீடு: 

    வெண்முரசின் பல அடுக்குகளை விட்டுவிட்டு மூல கதையில் உள்ள மையமான நிகழ்வுகள் – பாண்டவர் பிறப்பு, திரௌபதி சுயம்வரம், சூதுக்களம் –  எப்படி எல்லா நவீன மகாபாரத நாவல்களிலும் மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளன என்று ஒப்பிட்டு பார்க்கலாம். 

    பாண்டவர் பிறப்பு:

    திருதராஷ்டிரனின் நூறு பிள்ளைகளும் “கௌரவர்கள்”. கௌரவர் என்ற சொல்லே குரு வம்சத்தவர் என்பதை குறிக்கிறது. பாண்டுவின் பிள்ளைகளை கௌரவர் என்று அழைக்காமல் “பாண்டவர்கள்” என்று அழைக்கிறார்கள். பாண்டவர்களுக்கு குரு நாட்டில் உரிமை உண்டா என்பது மகாபாரதத்தில் முன்வைக்கப்படும் ஒரு மைய கேள்வி. கர்ணன் சூரியனுக்கும், தர்மன் யமனுக்கும், பீமன் வாயுவிற்கும், அர்ஜுனன் இந்திரனுக்கும், நகுல, சகாதேவன் அஸ்வினி தேவர்களுக்கும் பிறந்தவர்கள் என நாம் அறிந்ததே. 

    திருதராஷ்டிரனும், பாண்டுவும் வியாசர் மூலம் நியோகத்தில் பிறந்தவர்கள். விசித்திரவீர்யனின் தாயான சத்யவதிக்கு சாந்தனுவுடன் திருமணம் ஆவதற்கு முன்பே வியாசர் மைந்தனாக உள்ளார். நியோகம் தொன்மையாக ஏற்கப்பட்ட முறை. திருதாவும், பாண்டுவும் எப்படி குரு வம்சமோ, பாண்டவர்களும் அப்படித்தான் குரு வம்சம். அவர்களுக்கு குரு நாட்டில் உரிமை உண்டு என மூல மகாபாரதமே சொல்கிறது.

    குந்தி மைந்தர்களின் உயிரியல் ரீதியான தந்தை இன்னார் என்று நவீன எழுத்தாளர்கள் சொல்லலாமா என்றால் அது அவர்கள் உரிமை. ஜனநாயகத்தின் அடிப்படையான தனிநபர் உரிமையும், கருத்து சுதந்திரமும் அது. இந்து மதத்தில் கேள்விகளை தாண்டிய எந்த புனித நூலோ, ஞானியோ, தத்துவமோ இல்லை. கேள்வி கேட்பவருடைய தகுதி என்ன என்பது வேறு விவாதம்.  அதே நேரத்தில் இன்னார் என்று சொல்வதற்கு மூலத்தில் ஏதேனும் குறிப்புகள் உள்ளதா? இன்னார் என்று சொல்வதால் கட்டமைக்கப்படும் புனைவுவெளி என்ன? அந்த ஆசிரியரின் தரிசனம் (பார்வை அல்லது நோக்கம்) என்ன ? போன்ற கேள்விகளை வாசகர்களும், விமர்சகர்களும் ஆராயந்து படைப்புகளை ஏற்கவோ, நிராகரிக்கவோ செய்யலாம். 

    என் வாசிப்பில், நவீன மகாபாரத நாவல்களில், குந்தி, மாத்ரி மைந்தர்களின் உயிரியல் தந்தைகள்:

    இனி ஞான் உறங்கட்டே & கிருஷ்ணா கிருஷ்ணா: மூல மகாபாரதத்தில் மாற்றம் இல்லை.

    யுகாந்தா: கர்ணன் – துர்வாசர்; தருமன் – விதுரர்;  

    ரண்டாமூழம்: கர்ணன் – குந்திபோஜனின் தேரோட்டி; தருமன் – விதுரர்; பீமன் – பெயரற்ற ஒரு காட்டாளன்; 

    உபபாண்டவம்: தர்மன் – விதுரர் (ஊகம்)

    கொம்மை: தர்மன் – விதுரர்; பீமன் – திருதராஷ்டிரர்; அர்ஜுனன் – கிருபர்; நகுல சகாதேவர்கள் – குருகுல புரோகிதர் தௌமியர். கர்ணன் – சொல்வதில்லை. (பீஷ்மரோ என்று நினைக்கிறேன்!)

    பர்வா: கர்ணன் – துர்வாசர்; இமயமலையில் தேவர்கள் எனும் ஆரிய தொல் பழங்குடிகள் வாழ்கிறார்கள். தர்மர் – பழங்குடிகளின் தலைமை புரோகிதர் யமன்; பீமன் – பழங்குடிகளின் சேனாதிபதி; அர்ஜுனன் –  பழங்குடிகளின் அரசன் இந்திரன்; நகுல-சகாதேவர்கள் – பழங்குடிகளின் மருத்துவர்கள்.  

    வெண்முரசு: கர்ணன் – சல்லியர்; தர்மன் – துர்வாசர்; பீமன் – பால்ஹீக நாட்டை சேர்ந்த பலாஹாஸ்வ முனிவர்; அர்ஜுனன் – வில்வித்தையில் தேர்ந்த சரத்வான் முனிவர்; நகுல-சகாதேவர்கள் – சரத்வான் குடிலில் உள்ள மருத்துவர்கள்.

    மறுஆக்கங்களில் மூலத்தில் உள்ளதில் மாற்றம் இல்லாத படைப்புகள் கிருஷ்ணா கிருஷ்ணா & இனி ஞான் உறங்கட்டே. இனி நான் உறங்கட்டே நாவலுக்கு கர்ணணின் இருத்தியல் துயரம் மட்டுமே இலக்கு. மூலத்திலே கர்ணன் மாபெரும் இருத்தியல் படிமம்தான் என்பதால், வேறு எந்த மாற்றத்தையும் அது முயலவில்லை. கிருஷ்ணா கிருஷ்ணா “கட்டுடைப்புகளுக்கு” மாற்றாக கிருஷ்ணன் என்ற மாபெரும் மர்மத்தை மையப்படுத்திய நாவல். அதனால் மூலத்தில் அதுவும் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

    தர்மனின் தந்தை விதுரர் என்று யுகாந்தா வைக்கும் கோணத்தை ஏற்ற படைப்புகள் “உப பாண்டவம்”, “ரண்டாமூழம்” மற்றும் “கொம்மை”. உபபாண்டவத்தில் சகுனிக்கு மேலதிக வெளிச்சம் தந்து, மூலத்தில் உள்ள உன்னதமாக்கல்கள் தலைகீழாகப்பட்டுள்ளன. வெவ்வேறு சமூக குழுக்களுடைய மோதல்கள் கூட பங்காளி சண்டையாக சுருக்கப்பட்டுள்ளது. உபபாண்டவத்தில் கிருஷ்ணனை கொல்லும் வேடன் ஜரா கிருஷ்ணனின் பங்காளி. 

    மேலும், தர்மரின் தந்தை விதுரர் எனும் கோணத்தை ஏற்கும் போது அதைத்தாண்டிய “பெரிய கேள்விகளை” நோக்கி அந்த படைப்புகள் விரிவதில்லை. உதா: நியோகம் என்பது என்ன? நியோகத்திற்கு யார் ஒப்புதல் வேண்டும்? நியோகம் என்ற கருதுகோள் எப்படி உருவாகி இருக்கும்? பழங்குடிகளில் “பல்கி பெருகவேண்டும்”, “குலம் தழைக்கவேண்டும்” என்ற நோக்கத்திலிருது நியோகம் என்ற கருதுகோள் உருவாகி இருக்கலாம். பழங்குடி வாழ்வு முறையிலிருந்து தந்தை வழி சமூகமான நில பிரபுத்துவ காலகட்டத்திற்கு மாறும்போது நியோகத்தின் பொருள் எப்படி மாறுகின்றது ? காலப்போக்கில் ஸ்மிருதிகள் (அல்லது நவீன பார்வையில் சட்டம்) எப்படி மாறுகின்றன?  மாறாத அறம் என்று ஒன்று உண்டா? 

    பர்வாவும், வெண்முரசும் நியோகம் என்ற கருதுகோளை மையப்படுத்துகின்றன. அதற்கான உலகங்களை அவை உருவாக்குகின்றன. மேலே எழுப்பிய கேள்விகளை விரிவாக புனைவில் கேட்டு கொள்கின்றன. பைரப்பா வம்ச விருக்ஷா என்ற நவீன நாவலில் எழுப்பிய இதே கேள்வியை புராணத்தில் பொருத்தி ஆராய்கிறார். பர்வாவின் மொத்த நாவலுமே இந்த ஒரு கேள்வியை வெவ்வேறு குலங்கள் கேட்பதிலும், அதன்மூலம் திருமணம், கற்பு என்ற கருதுகோள்கள் உருவான விதத்தையும் ஆராய்கிறது. பர்வாவில் கீதையே பெண்களின் கற்பு என்ற பேசுபொருளை குறித்துதான். பர்வாவில் “கற்பு”, “தர்மம்” குறித்த கேள்வி எல்லோரையும் வாட்டுகிறது. நாவல் முழுதுமே எல்லோருக்கும் வெட்கையும், புழுக்கமுமாக இருக்கிறது. பர்வா இந்த ஒரே ஒரு பெரிய கேள்வியில் மையம் கொள்வதால், மற்ற பெரிய தத்துவ கேள்விகளை பொருட்படுத்துவது இல்லை. வெண்முரசு அந்த கேள்விகளையும் சேர்த்து கேட்பதால் அது மகாபாரதத்தின் இணை-புராணமாக விரிகிறது. 

    மேலும் பர்வாவில் தர்மன், பீமன், அர்ஜுனன் ஒரு ஆரிய தொல் பழங்குடியில் பிறக்கும்போது, வெண்முரசில் வெவ்வேறு குடிகளில் இருந்து வரும் ரிஷிகளில் நியோகத்தின் மூலம் பிறக்கிறார்கள். பர்வாவில் காந்தார தேசம், மத்திர தேசம் இருக்கும் பிரம்மவர்த்தம் ஏழை நாடுகள். யாதவர்கள் பணக்காரர்கள். பாண்டுவிற்கு சீதனம் தந்து குந்தியை மணம் முடிக்கிறார்கள். திருதா காந்தாரிக்கு சீதனம் தருகிறார். வெண்முரசு பர்வா உலகில் இருந்து வேறுபட்டது. பாலை தேசங்கள் வணிகத்தால் செல்வம் சேர்த்துள்ளன. அவை சத்ரியர் என்ற குல அடையாளத்திற்காக குருதேசத்துடன் பெரிய செல்வம் தந்து மண உறவு ஏற்படுத்தி கொள்கின்றன. மேய்ச்சல் நில யாதவர்கள் அரை பழங்குடிகள். பர்வாவில் “நமக்கு முன் திருதராஷ்டிரன் தந்தையானால், நமக்கு எதிர்காலமே இல்லை” என பாண்டு குந்தியிடம் சொல்லி, குந்தியை நியோகத்திற்கு ஏற்க செய்கிறான். கர்ணனின் இருப்பை குந்திபோஜர் மறைக்கிறார். 

    கர்ணனுடைய தந்தையாக சில படைப்புகள் துர்வாசர் என்கின்றன. பர்வாவில் துர்வாசரிடம் “குழந்தைகள் எப்படி பிறக்கின்றன” என்று கேள்வி கேட்கும் சிறுமி குந்திக்கு துர்வாசர் சொல்லித்தருவதால் கர்ணன் பிறக்கிறான். இது ஒரு வகையில் குந்திக்கு “அபலை” சாயம் பூசி, குந்தியின் ஆளுமையை சிறிது குறைத்து காட்டுகிறது. வெண்முரசு கர்ணனின் தந்தை சல்லியர் என்கிறது. இதுவரை எந்த படைப்பிலும் இல்லாத கோணம் இது. பீஷ்ம பருவம், துரோண பர்வம், சல்லிய பர்வம் என்பவை மகாபாரத பர்வங்களின் பெயர்கள். பீஷ்மர் மற்றும் துரோணர் அளவிற்கு சல்லியர் பெரிய ஆளுமை இல்லை. ஆனால் சல்லியரின் பெயரில் ஒரு பர்வம் உள்ளது. அதைவிட மூலபாரதத்தில் சல்லியர் கர்ணனுக்கு இறுதியில் தேரோட்டியாக வரும்போது, கர்ணனின் பிறப்பை இழிவுசெய்து கொண்டே வருகிறார். இப்படி யோசித்தால் சல்லியர் கர்ணனுக்கு தந்தையாக இருக்கலாம். வெண்முரசு கர்ணன்-சல்லியர் கோணத்தை பல இடங்களில் அபாரமாக பயன்படுத்தியுள்ளது. 

    மற்ற படைப்புகளில் கர்ணன் குந்தி மைந்தன் என்பது கிருஷ்ணன், பீஷ்மர் உள்ளிட்ட ஒரு சிலருக்கு தெரிகிறது. ரகசியம் காக்கப்பட்டு இறுதி போரின் போதே மற்றவர்களுக்கு தெரிகிறது. வெண்முரசில் கர்ணன் குந்தி மைந்தன் என்பது ஆரம்பத்தில் இருந்தே எல்லோருக்கும் தெரியும். குந்தி அதிகாரபூர்வமாக சொல்லவில்லை என்பதால் கர்ணணுக்கு அங்கீகாரம் இல்லை. பொதுவில் யாரும் கேட்பதும் இல்லை. வெண்முரசின் உச்ச நாடகீய தருணங்களில்  ஒன்று குந்தி-கர்ணன் சந்திக்கும் இடங்கள். 

    நியோகம் என்ற கருதுகோளை முன்வைத்தாலும் குந்தி-விதுரர் உறவின் பரிணாமத்தையும் விரிவாக வெண்முரசு சொல்கிறது. குந்தி-பாண்டு, குந்தி-துர்வாசர் உறவும் மாற்றம் அடைகின்றன. குந்தி-கம்சன், குந்தி-சல்லியன் என புதிய கோணங்களையும் ஆராய்கிறது.  பேரரசியாக நாடாள வேண்டும் என்ற விழைவால் குந்தி கர்ணணை கைவிடுகிறாள். அந்த விழைவே சல்லியர், விதுரர், கம்சன் உள்ளிட்டோரையும் வெவ்வேறு தருணங்களில் கைவிட செய்கிறது. குந்தி அவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறாள். ஆனால் ஏற்பதில்லை. தான் விரும்பிய மொத்த பாரதவர்ஷத்த்தையும் தன் மைந்தர்கள் வென்றபின், மாபெரும் உலகியல் வெற்றிக்கு பின், குந்தி பெரும் வெறுமையை அடைகிறாள். கர்ணனுடைய நீர்கடனின் போதே கர்ணனை அதிகாரபூர்மாக மைந்தனாக அறிவிக்கிறாள். தன் உண்மையான இணை என எப்போதும் அவள் ஆழ்மனம் உணர்ந்த விதுரருடன் அவள் காட்டிற்கு செல்கிறாள். காந்தாரி-திருதராஷ்டிரரை தன் மூத்தவர்கள் என உண்மையில் ஏற்கிறாள். சத்யவதி-அம்பிகை-அம்பாலிகை வனவாசத்தில் தீயில் எரிந்தது போல திருதாராஷ்டிரர்-காந்தாரி-குந்தி எரியில் மறைகிறார்கள். காலம் சுழல்கிறது. 

    திரௌபதி சுயம்வரம்:

    வாரணவதத்திற்கு பிறகு மறைவு வாழ்க்கை வாழும் பாண்டவர்கள், பிராமணர்களாக வேடம் பூண்டு திரௌபதியின் சுயம்வரத்தில் பங்கு கொள்கிறார்கள். அர்ஜுனன் வில் போட்டியில் வெல்கிறான். கர்ணனை திரௌபதி அவன் பிறப்பை காட்டி சுயம்வரத்தில் பங்கேற்க கூடாது என்றாள் என்பது பொதுவான புரிதல். இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து மகாபாரத மூல சுவடிகளை சேர்த்து ஆராய்ந்த பூனே பண்டார்க்கர் நிறுவனத்தின் “ஆய்வாளர் பதிப்பில்” திரௌபதி கர்ணனை பங்கேற்க கூடாது என்று சொன்னது பிற்சேர்க்கை என்கிறது. கிருஷ்ணர் சுயம்வரத்தில் பங்கேற்றாலும், போட்டியில் பங்குகொள்ள வில்லை. குந்தி பிச்சையை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பதை ஏற்று ஐவரும் திரௌபதியை மனம் செய்துகொள்கிறார்கள்.

    சில கேள்விகள் எழுகின்றன:

    1. கர்ணன் – திரௌபதி கோணம் குறித்து நவீன நாவல்கள் என்ன சொல்கின்றன ?
    2. சுயம்வரத்திற்கு வந்த கிருஷ்ணன் ஏன் போட்டியில் பங்குகொள்ளவில்லை?
    3. பிச்சையை பகிர்ந்து கொள்ளுங்கள் என குந்தி சொன்னவுடன் திரௌபதி, பாண்டவர்கள், பாஞ்சால அரசன் ஏற்றுக்கொண்டார்களா ? 

    இந்த கேள்விகளுக்கு நவீன மகாபாரத புனைவுகள் என்ன சொல்கின்றன? திரௌபதி என்ற படிமத்தை குறித்து அவை அளிக்கும் சித்திரம் என்ன?

    வெண்முரசை தவிர அனைத்து நவீன நாவல்களிலும் திரௌபதியைவிட குந்தி பெரிய ஆளுமை. உபபாண்டவம் சுயம்வரம் குறித்து பெரிதாக ஒன்றும் சொல்வதில்லை. தர்மன் வில்லின் நான் ஏற்றிட வேண்டும் என எழும்போது, அர்ஜுனன் அவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறான். கிருஷ்ணா கிருஷ்ணாவில் திரௌபதி கிருஷ்ணரை விரும்புகிறாள். அர்ஜுனனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணர் சொன்னவுடன் திரௌபதி ஏற்றுக்கொள்கிறாள். கர்ணன் போட்டியில் பங்கேற்க தடையில்லை என்கிறார் கிருஷ்ணன். கிருஷ்ணா கிருஷ்ணாவில் கிருஷ்ணர் சொல்வதால், பலரும் கேட்டுக்கொள்வார்கள். சொன்னது கிருஷ்ணர் என்ற பக்தி விளக்கம் மட்டுமே போதும். வேறு லாஜிக் எல்லாம் கேட்க கூடாது. கர்ணனுக்கு அர்ஜுனன் குறித்த பயத்தால் தலைவலி ஏற்பட்டு, வில்லை தொடாமல் திரும்பிவிடுகிறான். இரண்டாம் இடம் நாவலில், நம்மால் தான் சுயம்வரத்தில் இருந்து எல்லோரும் பத்திரமாக வந்து சேர்ந்தார்கள், ஆனால் அதை பெரிதாக யாரும் பேசவில்லையே என்ற கசப்புடன் இருக்கிறான் பீமன். மேலே குறிப்பிடப்படும் கேள்விகளுக்கு மேலோட்டமான விளக்கங்கள் தவிர இந்த நாவல்களில் ஒன்றும் இல்லை. 

    கர்ணன் சுயம்வரத்தில் பங்குகொள்வதை திரௌபதி தடுத்தாள் என பர்வா, கொம்மை உள்ளிட்ட நாவல்கள் சொல்கின்றன.  “கர்ணன் பாஞ்சாலி மீது ஆழமான காதல் கொண்டு கற்பனையில் திளைத்திருந்தான். அவளும் அவனை நேசித்தாள். அவனது சாதியை அறிந்தபோது மனம் மாறிவிட்டாள். பாஞ்சாலி  நறுக்கென்று நாலு வார்த்தை கூறி அவனை புறக்கணித்தாள். கர்ணன் நெஞ்சில் ஈட்டி பாய்ந்த வலி. அவமானத்துடன் திரும்பினான்.” என்கிறது கொம்மை. 

    பர்வா நாவலில் திரௌபதியை வென்றது நான், எனக்கு திரௌபதியை திருமணம் செய்து வை என குந்தியை நெருக்குகிறான் அர்ஜுனன். விற்போட்டியில் நீ ஜெயித்திருக்கலாம், ஆனால் கௌரவர்களிடம் இருந்து காப்பாற்றியது நான் என்கிறான் பீமன். அர்ஜுனனும் பீமனும் அடித்துக்கொள்ள தயாராகிறார்கள்.பர்வாவில் என் ஐந்து பிள்ளைகளையும் மொத்தமாக நீ திருமணம் செய்துகொள். ஐவருமே வீர புருஷர்கள். உனக்கு நிறைய சுகம் கிடைக்கும். உன்னைப்போல தாம்பத்ய சுகம் அனுபவிக்கப்போகிறவள் யாருமே இல்லை என திரௌபதியை குந்தி ஏற்கச்செய்கிறாள். தர்மனும் துருபதனும் திருமணம் குறித்து விவாதிக்கிறார்கள். ஆரியர் அல்லாத குடிகளின் வழக்கம் ஒரு பெண்ணிற்கு பல கணவர்கள் என துருபதன் தயங்க, தொல் ஆரிய குடியான தேவர்களிடமும் இந்த வழக்கம் உள்ளது  என துருபதனை தர்மன் ஏற்க செய்கிறான். கொம்மை நாவலில் வியாசன் துருபதனை ஏற்க செய்கிறான். “துருபதனே ஒரே பெண் பல கணவரோட குடும்பம் நடத்துன காலமும் உண்டு. பத்துப் பேருக்குக்கூடஒருத்தி மனைவியா இருந்துருக்கா. ஏன் இப்போதும் பழங்குடியினருட்ட அந்த வழக்கம் உண்டு. பாண்டவர் அஞ்சு பேரும் பாஞ்சாலிக்குக் கணவராகுறது சாத்தரப்படி சரிதான். நீ அனுமதிக்கணும்.’’

    வெண்முரசில் குரு குலத்தின் முதல் பேரரசியான தேவயானியின் மணிமுடியை எப்படியாவது அடைய வேண்டும் என இளமை முதல் கனவு காண்கிறாள் காட்டில் மாடுமேய்க்கும் யாதவ சிறுமி குந்தி. எனக்கு இரண்டாம் தேவயானி என்ற பட்டம் வேண்டாம், நானே முதலாமவள் என்கிறாள் திரௌபதி. வெண்முரசிலும் திரௌபதி கர்ணணை ஏற்கவில்லை. அதற்கு காரணம் கர்ணன் கீழ் குலம் என்பதால் அல்ல. கர்ணண் தன்னை துரியனுக்கு கடமைப்பட்டவன் என்று அறிவித்துவிட்டதால், அவன் பாரதவர்ஷத்தை வென்று ஆளப்போவதில்லை என்பதால். விற்போட்டி ஏற்பாடு செய்வதே அர்ஜுனனையும் பாண்டவர்களையும் பொறி வைத்து பிடிப்பதற்காகத்தான் என்கிறாள் திரௌபதி. 

    திரௌபதி அறிமுகம் ஆகும் சில அத்யாங்களிலே அவள் கர்ணனை பற்றி தன் தோழியிடம் வினவுகிறாள். அவனை சுயம்வரத்தில் முதலில் காணும்போது இருவரும் உள்ளம் நெகிழ்கிறார்கள். துரியோதனனுக்கும் ஆசை இருந்தாலும் அவன் கர்ணணுக்கு விட்டு குடுக்கிறான். சுயமவரத்தில் கர்ணனை யாரும் தடுப்பதில்லை. ஐந்து கிளிகள் கொண்ட கூண்டில் , நான்கை சரியாக குறிபார்த்து அடித்த பிறகு, முக்கியமான தருணத்தில் மந்திரம் மறந்து போகும் என பரசுராமர் இட்ட சாபமும், திரௌபதியின் முகம் மலராததை கண்டு அவளுக்கு விருப்பம் இல்லை என்பதை அறிந்ததும், ஐந்தாவது கிளிக்கான கர்ணனின் குறி தவறுகிறது. கிருஷ்ணன் போட்டியில் பங்கேற்று நான்கு கிளிகளை அடித்த பிறகு, ஐந்தாவது கிளியை அடிக்காமலே போட்டியில் இருந்து விலகி விடுகிறான். பீமன் அந்த வில்லின் ரகசியத்தை அர்ஜுனனுக்கு சொல்கிறான். கடைசியாக அர்ஜுனன் போட்டியில் வெல்கிறான்.

    திரௌபதி பாரதத்தின் இணையற்ற பேரரசியாக ஆக வேண்டும் என்ற பெருவிருப்பு இருக்கிறது. நான் பிறந்ததே பேரரசி ஆவதற்குதான், அதற்கு என்ன விலை வேண்டும் ஆனாலும் தருவேன் என்கிறாள். துரியோதனனுக்கும் பேரரசன் ஆகும் வேட்கை இருக்கிறது. ஏன் துரியோததனை தேர்வு செய்யவில்லை என்றால், அவனால் கிருஷ்ணனை வெல்ல முடியாது என்கிறாள். கிருஷ்ணன் பாரதவர்ஷத்தை ஆள விரும்பவில்லை, அதனால் கிருஷ்ணனை தேர்வு செய்யவில்லை என்கிறாள். கிருஷ்ணனை நாராயணன் என்று சூதர்கள் பாடுவதைப்போல, அர்ஜுனனை இந்திரன் என சூதர்கள் பாடுகிறார்கள். இந்திரனால் நாராயணனை தேவை ஏற்பட்டால் வெல்ல முடியும் என்பது அவள் கணக்கு. தன்னால் பாரதவர்ஷத்தை வெல்ல முடியும், ஆனால் தொடர்ந்து ஆள முடியாது, யாதவ குலத்தை மற்ற சத்ரியர்கள் ஏற்க மாட்டார்கள், சத்ரியர்களின் ஏற்பு இல்லையென்றால் பெருங்குருதி பெருகும் என திரௌபதியிடம் சொல்கிறான் கிருஷ்ணன். இரண்டு தலைமுறைகள் சத்ரியர்களுடன் மண உறவுகளுக்கு பிறகு வேண்டுமானால் யாதவர்கள் பாரதவர்ஷத்தை ஆள்வது சாத்தியம் என்கிறான். 

    பாண்டவர்கள் நாடற்றவர்கள். பழங்காலத்தில் பாஞ்சாலத்தில் ஒரு பெண் பல கணவர்களை திருமணம் செய்யும் முறை இருந்திருக்கிறது. பாண்டவர்களுக்கு பாஞ்சாலத்தின் உதவி தேவை. யாதவ குடியில் பின்னர் பாண்டவர்கள் திருமணம் செய்தால் திரௌபதியின் முக்கியத்துவம் குறையலாம், ஆகையால் ஒருவருக்கு பதில் ஐவரையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என திரௌபதி தரப்பிலிருந்து கோரிக்கை வருகிறது. குந்தி ரிஷிகளிடம் கலந்து அந்த முடிவை ஏற்கிறாள். அரசியல் கணக்குகள் தாண்டி, திரௌபதியை ஏற்பது குறித்த பாண்டவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், கர்ணன்-அர்ஜுனன் இருவரையும் ஒப்பிடும் திரௌபதி, சூதர் பாடல்கள் என திரௌபதி சுயம்வரம் சார்ந்த பகுதிகள் வெண்முரசின் மிகச்சிறந்த பகுதிகளில் ஒன்று. வெண்முரசு திரௌபதிக்கு அளிக்கும் வண்ணம் இதுவரை எந்த படைப்பிலும் இல்லாதது. இந்திய பண்பாட்டின் மையமான கருவறை தெய்வம் என திரௌபதியை முன் வைக்கிறது. 

    சூதுக்களம்: 

    கங்குலியின் மூல மகாபாரதம்: விதுரர் திருதராஷ்டிரரின் சார்பில் கௌரவர்களுடன் சூதாட பாண்டவர்களை அழைக்கிறார். முதல் முறை சூதாடி தோற்றபின், துச்சாதனன் அந்தப்புரத்தில் இருந்து திரௌபதியை இழுத்துவருகிறான். கர்ணன் துச்சாதனனை தூண்ட திரௌபதி துகில் உரியப்படுகிறாள். திரௌபதி கிருஷ்ணனை வேண்டிக்கொள்கிறாள். தர்மதேவன் ஆடை தந்து காக்கிறார். தன்னை வைத்து ஆட தர்மனுக்கு உரிமை உண்டா ? என்று திரௌபதி கேள்வி எழுப்புகிறாள். கௌரவர்களை கொல்வேன் என பீமனும், கௌரவர்களில் குருதி பூசி கூந்தல் முடிப்பேன் என திரௌபதியும் சபதம் செய்கிறார்கள். காந்தாரி அறிவுரை சொல்லி, திருதராஷ்டிரர் திரௌபதியையும், பாண்டவர்களையும் விடுவிக்கிறார். மீண்டும் இரண்டாம் முறை சூதாடி தோற்று பதிமூன்று ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செல்கிறார்கள். 

    1. சூதாடுபவனுக்கு தர்மன் என்று பட்டமா?
    2. ஆடை தந்த தர்மதேவன்/கிருஷ்ணன் அப்படியே கௌரவர்களை எரித்திருக்கலாமே?
    3. சூதாடும்போது கிருஷ்ணன் சால்வனுடன் போரில் இருந்தேன், அதனால் அஸ்தினபுரத்திற்கு வரமுடியவில்லை என்று வன பர்வத்தில் சொல்கிறான். சால்வன் யார்? 
    4. “இது அறமா?” என்ற திரௌபதியின் கேள்விக்கு பீஷ்மர், துரோணர் உள்ளிட்டோர் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?  எப்படி பெரும்பாலான சத்ரிய அரசர்கள் குருஷேத்திர போரில் துரியோதனன் பக்கம் இருக்கிறார்கள்?
    5. கர்ணன் ஏன் தூண்டுகிறான்?

    போன்ற நிறைய கேள்விகள் எழுகின்றன. வெவ்வேறு மகாபாரத படைப்புகள் சொல்லும் விடைகள் என்ன என்று பார்க்கலாம். (மூல பாரதத்தில் துகில் உரிதலே பிற்சேர்க்கை என்று ஒரு தரப்பு உண்டு).

    இரண்டாம் இடம் நாவலில் பீமன், துச்சாதனனின் ஆடையில் கை வைத்ததை பார்த்து, பீமன் முன்னோக்கி தாவுகிறான். நியதிகளை மறந்து பீமன் தன்னை தாக்குவான் பயந்து துச்சாதனன் துகில் உரிதலை நிறுத்திக்கொள்கிறான். திரௌபதி துச்சாதனனின் கைப்பிடியை உதறிக்கொண்டு, திருதராஷ்டிரரின் காலில் விழுந்து ஏதோ சொல்கிறாள். திருதராஷ்டிரர் விடுதலை செய்கிறார். “சகாதேவா, தீக்கட்டையை எடுத்து வா! நானே என் கையை பொசுக்கிக்கொள்ள வேண்டும். என்னை நானே தண்டித்து கொள்ளத்தான் இப்போது என்னால் முடியும்” என்கிறான் பீமன். சால்வனுடன் போரில் இருந்தேன். “நான் மட்டும் இருந்திருந்தால் சூதாட்டத்தை நடத்தவே அனுமதித்திருக்க மாட்டேன்” என்கிறான் கிருஷ்ணன். மேலே உள்ள கேள்விகளுக்கு விடைகளே இல்லை.

    கிருஷ்ணா கிருஷ்ணாவில், சால்வன் போர் சூதாட்டத்திற்கு முன்பே நடந்துவிடுகிறது. கிருஷ்ணர் சூதக்கள “script”ஐ பயன்படுத்தி துரியோதனனுக்கு “end card” போட நினைக்கிறார். எல்லாம் கிருஷ்ண லீலை. உபபாண்டவத்தில் பகடையின் வெற்றிக்கு பின்பு, சகுனி “துரியோதனா, வெற்றிக்கு பின் இவை உன் உரிமைகள். உரிமைகளை அனுபவித்துவிட வேண்டும்” என்கிறான். காந்தாரி தன் தமையனின் அந்த குரலை வெகுவாக ரசிக்கிறாள். முன்பே சொன்னதுபோல உன்னதமாக்கலின் தலைகீழாக்கம் உபபாண்டம். “திரௌபதியின் உடலில் ஒளி நீண்டு வஸ்திரமாக விரிகிறது. உலகம் தோன்றிய நாள் முதல் பெரிய வஸ்திரம் ஒளிதானே. அதுதானே பகல் என தினமும் பற்றி இழுக்க இழுக்க முடிவற்று வந்து கொண்டேயிருக்கிறது. கிருஷ்ணையில் உள் ஒளிந்து உயிர் சக்தி ஒளி வஸ்திரமென நீண்டுகொண்டிருந்தது”. நகுலன் திரௌபதியை பற்றி, “அவள் ஒரு விருட்சத்தைப் போல தன் உடலின் அடுக்குகளை களைந்து கொண்டே இருந்தாள். விருட்சம் நிர்வாணமற்றது. அவளுக்குள் கைப்பு சரசரசரத்து ஓடுகிறது. அவள் ஒரு விருட்ச ஸ்திரீ” என பைபிள் ஏவால், ஒளி என ஏதோதோ வருகிறது. யாராவது விளக்கலாம். எனக்கு புரியவில்லை. ஒரு பெண்ணால் மீட்கப்பட்டான் என்பதை காட்டிலும் அடிமையாவதே சிறந்தது என தர்மன் நினைப்பதால் இரண்டாம் முறை சூதாடுகிறான் என்கிறாள் பாஞ்சாலி.

    பர்வா நாவலில் கிருஷ்ணனின் பெயரை திரௌபதி சொன்னவுடன் துரியோதனன் பயந்து விட்டு விடுகிறான். “இப்போது நீ எங்கள் அடிமை, வா, வந்து எங்களோடு படு” என்று துரியோதனன் கூப்பிடும்போது, அப்படி கூப்பிடுவதற்கு அவனுக்கு உரிமை இருக்கிறது என்பதை போல எல்லோரும் ஊமையாக உட்கார்ந்திருந்தார்கள். தருமன் சூதாடியது தப்பு என்று யாருமே சொல்லவில்லை. தருமம் என்றால் என்ன என்று தெரிந்தவன் ஒருவன் தான். துவாரகை கிருஷ்ணன். கிருஷ்ணன் வந்துதமே, அவன் தருமனை பார்த்த பார்வையை நீங்கள் பார்த்திருக்கவேண்டுமே. ஆரிய தருமத்திற்கு எல்லாம் நான் தான் அதிபதி என்பதைபோல இருக்கும் தருமன் கூனி குறுகிபோனான்” என திரௌபதி சொல்கிறாள். சால்வன் பெரிய படைகளை கொண்டு தாக்கியதால், என்னால் வரமுடியவில்லை. வந்திருந்தால் சூதாட்டத்தை தடுத்திருப்பேன் என்கிறான் கிருஷ்ணன். சூதாடுவதற்கு ஒப்புக்கொண்ட உன் கைகளைத்தான் முதலில் வெட்டியிருப்பேன் என தர்மனை திட்டுகிறான். ஆரிய தருமம் என்றால் என்ன என்ற கேள்விக்கு மது, சூது, வேட்டை என்கிறாள் திரௌபதி. 

    கொம்மை நாவலில் பாஞ்சாலி துச்சாததனை காலால் மிதித்து தன்னை தானே காப்பாற்றிக்கொள்கிறாள். காப்பாற்ற எல்லாம் யாரும் வரமாட்டார்கள். நீங்களே உங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற கோணம் இது. “பாஞ்சாலி வெடித்தாள். “கிட்ட வாடா வச்சுக்கிறென்.’’ சூறாவளிக் காற்றாக இருமுறை சுழன்று உடம்புமுழுக்க மூடிக்கொண்டு ஆடையின் விளிம்பைப் பலங்கொண்ட மட்டும் படக்கென்று சுண்டி இழுத்தாள். நிலைகுலைந்துபோன துச்சாதனன் தட்டுத்தடுமாறி அவள் காலடியில் மண்டியிட்டு விழுந்தான். அவனைஒரு காலால் எட்டித் தள்ளிவிட்டாள். “சீச்சீ பெழச்சுப்போடா மூடனே.’’ அவனுக்கு அபயமளித்து முழுஆடையில் உடம்பை மறைத்துக்கொண்டாள். சபையினரைக் காளியின் ருத்திரக் கோலத்தில் கம்பீரமாகப்பார்த்தாள். அவர்களின் கரவொலியில் அரங்கமே அதிர்ந்தது.”  மேலும் சுயம்வரத்தில் கர்ணனை அவமானப்படுத்தியதற்காக பிரதிபலான அவள் சூதுகளத்தில் அவனமானப்படுகிறாள் என்கிறான் கிருஷ்ணன். “பாஞ்சாலி ஒனக்கு நெனவிருக்கா. ஒஞ் சுயம்வரத்துல தேரோட்டி மகன்னு இழிவாப் பேசிக் கர்ணன நெராகரிச்ச இல்லையா.’’ “உண்மதான்.’’ “ஒன் வார்த்தைகளால அவன் மனசு எவ்வளவு புண்பட்ருக்கும்தெரியுமா. அவன் தன்னிகரில்லாற மாவீரன். அவனுக்கு நீ மாலையிட்ருந்தா சூதாட்டத்துல ஒன்னப்பணயம் வச்சிருக்க மாட்டான். அந்தணர் வேசத்துல வந்த அர்ச்சுனனத்தான நீ தேர்ந்தெடுத்த. முன்னாலயே அவன் அரசகுமாரன்னு தெரியாதில்லையா.’’ “தெரியாது.’’ “ஒனக்குப் பாதுகாப்புன்னுதான அஞ்சு ராச குமாரர்களக் கைப்புடிச்ச. இந்தா பாரு அவங்களால ஒன்னக் காப்பாத்த முடியாமத் திக்குத்தெரியாற காட்ல கொண்டுவந்து நிறுத்தீருக்காங்க. நீ அவமானத்துல தனியா நிக்கிற. ஒன்ன அறியாமயே உருவான இந்தப் பரிதாப நெலமைக்கு நீயும் பெறுப்பேற்கத்தான் வேணும் பாஞ்சாலி.’’ பாஞ்சாலி குற்றவுணர்வில் கதறினாள். “நான் மகா பாவி……’’ கிருஷ்ணன் அவளை அரவணைத்துக்கொண்டான். அவனாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை.’ 

    எல்லா மகாபாரத மறுஆக்கங்களும் மேலே கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல ஓரளவு முயன்று இருக்கின்றன.  என் வாசிப்பில் இந்த கேள்விகளுக்கு மிக விரிவான சித்திரத்தை அளித்து வெண்முரசு அளிக்கும் விடைகளே சிறந்தவை. பெரும்பாலான மறுஆக்கங்களில் நான் அங்கிருந்தால் தடுத்திருப்பேன் என்கிறார் கிருஷ்ணர். வெண்முரசில் பாண்டவர்களை சூதாட்டத்திற்கு அழைக்கும் போதே, அஸ்தினபுரியும் அதன் நட்பு நாடுகளும் ஒரு பெரிய படையை திரட்டி, சால்வனை ஒரு முகமூடியாக கொண்டு துவாரகையை தாக்குகின்றன. பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்கும்போது, துவாரகையும் அழிந்திருக்க வேண்டும் என்பது சகுனி மற்றும் சகுனியின் அலோசகர் கனிகரின் கணக்கு. மொத்த மகாபாரதம் சொல்லும் நீதிக்கு எதிரான சொல்லாக இருப்பது கனிக நீதி. மூல பாரததித்தில் வாரணவதத்தில் பாண்டவர்களை எரித்தழக்க சொல்பவர் கனிகர். வெண்முரசில் கனிகர் பெரும் எதிர்பாத்திரம். சூழ்ச்சியில் கிருஷ்ணனுக்கு நிகராக சித்தரிக்கப்பட்டுள்ளார்.

    சால்வனுடைய போரில் கிட்டத்தட்ட துவாரகை அழிகிறது. வெண்முரசில் முன்பு அம்பையை கைவிட்ட அதே சால்வனுக்கும் கிருஷ்ணனுக்குமான போர் புதிய கோணங்களை காட்டுகிறது. திரௌபதியிடம் அனைத்தும் இவ்வளவு விரைவாக நிகழும் என தான் எண்னவில்லை என்கிறார் கிருஷ்ணர்.  ஊழ் தன்னைவிட பெரியது. நான் மானுடன். தெய்வம் அல்ல என்கிறார். வெண்முரசு சொல்வளர்காடு நாவலில் வரும் கிருஷ்ண-திரௌபதி உரையாடலும், அடுத்து வரும் சில பகுதிகளும் மேலே எழுப்பிய கேள்விகளுக்கு விடைசொல்கிறது. 

    வெண்முரசில் திரௌபதிக்கு பாரதவர்ஷத்தை முழுதாளும் பெரும்விழைவு இருக்கிறது. துரியோதனன், கர்ணனை அவள் சுயம்வரத்தில் ஏற்காமல் பாண்டவர்களை ஏற்பதே பாரதத்தின் பேரரசியாக ஆவதன் பொருட்டு. வெண்முரசில் இந்திரபிரஸ்தம் திரௌபதியின் கனவு. ராஜசுயம் அவள் நடத்துவது. மேலும் குருகுலத்தின் முதல் பேரரசியான தேவயானியின் மணிமுடி வேண்டாம், இரண்டாம் தேவயானி என அறியப்படுவதில் தனக்கு விருப்பம் இல்லை என துரியோதனன் தரும் மணிமுடியை நிராகரிப்பதின் மூலம் தன்னையும், தன் மூதாதையர்களையும் அவமதித்துவிட்டதாக துரியோதனன் எண்ணுகிறான். வெண்முரசு காட்டும் உலகில் சத்ரிய நாடுகளிடையே சூதாட்டம் என்பது ஒரு வகை போரேதான். உண்மையான போரின் அழிவை தவிர்த்து வெற்றி தோல்விகளை முடிவு செய்துகொள்வதற்காக சூதாட்டம் நிகழ்கிறது. அதனால் தர்மன் சூதாட்ட அழைப்பை ஏற்கிறான். திரௌபதியின் சுயத்தை உடைக்காமல் இந்திரபிரஸ்தத்தின் மீது உண்மையான வெற்றி அமையாது என்பதால் துரியோதனன் எல்லை மீறுகிறான். 

    வெண்முரசில் திரௌபதி அறிமுகத்தில் பாஞ்சாலத்திற்கு பட்டத்து இளவரசாக யாரை நியமிக்கலாம் என துருபதன் சிறுமி திரௌபதியிடம் கேட்கிறான். பாஞ்சாலத்தின் ஐந்து குலங்களும் சேர்ந்து ஒப்புதல் அளித்து அரசனை தேர்வு செய்யும் தொல் மரபு இருக்கிறது. குல அவை அரசனை தேர்வு செய்து, நீக்கும் அதிகாரம் இருந்தால் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படும். குல ஏற்பெல்லாம் தேவையில்லை, பிறப்பின் அடிப்படையில் மூத்த மைந்தனுக்கு பட்டம் சூட்டுங்கள் என்கிறாள் திரௌபதி. பாரத வர்ஷத்தை ஆள்வதற்கு கிருஷ்ணனுக்கு விருப்பம் இல்லை என்கிறாள் திரௌபதி. கிருஷ்ணன் தான் பாரதவர்ஷத்தை வெல்லலாம், ஆள முடியாது, தான் வெல்லும் நாடுகள் தன்னை ஏற்காது என்கிறான். “குலங்களின் ஏற்பு”, “வெல்லும் நாடுகளின் ஏற்பு” என்ற கருதுகோளை முதலில் திரௌபதி ஏற்பதில்லை. 

    இது அறமா? என்ற திரௌபதியின் கேள்விக்கு வெண்முரசு காட்டும் அன்றைய சத்ரிய நாடுகளின் சட்டத்தின்படி, அந்த சத்ரிய சட்டம் அமைந்த வேத மரபின்படியும் அது சரியானதுதான். அதனால் பீஷ்மரும், துரோணரும் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த மானுட அறத்தின் படி அது தவறு. எப்படி அம்பைக்கு நிகழ்ந்த அநீதி சத்ரிய சட்டத்தின்படி சரி, ஆனால் மானுட அறத்தின்படி தவறோ அதேபோல. அரசியல் அமைப்பு, சட்டம் என்பதை போல வேத மரபு, சத்ரிய அறம் வருகிறது. சட்டங்கள் தவறென்றால் அந்த சட்டங்கள் நின்றிருக்கும் அரசியல் அமைப்பு காலாவதி ஆகிவிட்டது, புதிய யுகத்திற்கு ஒரு புதிய அரசியல் அமைப்பு தேவை என்பதை போல, வேத மரபு முடிந்து கிருஷ்ணனின் புதிய சொல் எழ வேண்டும் என்கிறாள் திரௌபதி. “கண்ணா, எழுக உன் சொல், எழுக புதிய வேதம்” என்கிறாள். கண்ணனின் பெயர் அங்குள்ள கௌரவர் குல பெண்களின் மனதை தொட, அவர்கள் ஆடை தந்து திரௌபதியை காக்கிறார்கள். சூதாடும் களம், ஊழின் முன் திகைக்கும் தெய்வங்கள் என வெண்முரசின் உச்சம் சூதுக்களம். 

    திரௌபதியின் கூந்தல் அன்றைய “அமைப்பின்” குறியீடாக வருகிறது. திரௌபதி சுயம்வரத்தின் பகுதியாக பாஞ்சாலத்தின் ஐந்து குலங்களும் குருதி பலி தந்து, அந்த குருதி திரௌபதியின் ஐந்து புரி கூந்தலில் பூசி கட்டப்படுகிறது. சூதுகளத்தில் கூந்தல் அவிழ்ந்து, பெரும் போரின் முடிவில், கிருஷ்ணனின் சொல்லாக வேதாந்தம் எழுந்து புதிய அறம் / அமைப்பு உருவாகி, திரௌபதியின் கூந்தல் மீண்டும் முடியப்படுகிறது. வேதத்தரப்பில் இருந்து வேதமுடிபு தரப்பிற்கு நகர்கிறாள் திரௌபதி. திரௌபதியே பாரதவர்ஷத்தின் குறியீடாக வருவதால், குருதியால் நிறுவப்பட்ட சொல்லாக பாரதவர்ஷம் வேதமுடிபு தரப்பை ஏற்கிறது. 

    கொற்றவை நாவலில் ஏற்கனவே கொந்தளித்து கொண்டிருக்கும் மதுரை பற்றி எரிய பாண்டியனின் அவை புகும் கண்ணகி ஒரு நிமித்தமோ, அதுபோல வெண்முரசில் வேத மரபு முடிந்து வேதாந்த மரபு எழுவதற்கான ஒரு நிமித்தம் சூதுக்களத்தில் திரௌபதி உரைத்த வஞ்சினம். வெண்முரசு தனி நபர், இனக்குழு, தத்துவ மோதல்கள் என பலபடிகளாக விரியும் பெரும் படைப்பு.

    —-

    மேலும் பெண்களின் துயரத்தை பேசும் கொம்மை, கற்பு எனும் கருப்பொருளை விரிவாக பேசும் பர்வா உட்பட எல்லா மகாபாரத மறுஆக்கங்களும் ஒருவகையில் ஆண் பார்வையில் சொல்லப்படுகிறது. குந்தி வலுவான பாத்திரம். ஆனால் காந்தாரி, திரௌபதி உள்ளிட்ட மற்ற பெண் கதாப்பாத்திரங்கள் தங்களின் நிலைக்கு வேறு யாரையாவது காரணம் என சொல்கின்றன.  வெண்முரசின் உலகில் மட்டுமே மையமான பெண் கதாப்பாதிரங்கள் அனைத்தும் தங்களின் நிலைக்கு தாங்களே பொறுப்பாகின்றன. எல்லா நாவல்களிலும் காந்தாரி-திருதராஷ்டிரனின் கல்யாணம், காந்தாரி கண்ணை கட்டிக்கொண்டதை விவரிக்கும் இடங்களை கவனித்தால் இது தெரியும். 

    சகுனிக்கு அதிக வெளிச்சம் தரும் உப பாண்டவத்தில் “ஒரு சகோதரனாக இல்லை, ஒரு தகப்பனாக உன்னை நான் அஸ்தினாபுரத்தின் மணமகளாக கொண்டுவந்தேன்” என காந்தாரியிடம் சொல்கிறான் சகுனி. சகுனி காந்தாரியின் மூத்த சகோதரன். வெண்முரசில் சகுனி பாரத வர்ஷத்தை வென்று காந்தாரியின் காலடியில் படையலாக வைக்க வேண்டும் என நினைக்கிறான். காந்தாரி மூத்த சகோதரி. சகுனியின் மனதில் காந்தாரி தெய்வம். மூல பாரதத்தைவிட காந்தாரியை ஒரு படி உயரமாகவே வைக்கும் வெண்முரசில் காந்தாரி கண்ணை கட்டிக்கொள்வது அவள் எடுக்கும் முடிவு. திரௌபதிக்கு பாரதவர்ஷத்தை வென்று பேரரசியாக ஆகும் விழைவு இருப்பதுபோல, காந்தாரிக்கு கண்ணை கட்டி கொண்டு  கற்புக்கரசி, பேரன்னை என தெய்வம் ஆகும் விழைவு இருக்கிறது. தன் பிள்ளைகள், சகோதரன், தந்தை என அனைவரையும் இழந்து திரௌபதி பேரரசி ஆனதுபோல, காந்தாரியும் தன் சுற்றத்தை இழந்து பேரன்னை ஆகிறாள். 

    இன்றைய காலகட்டத்திற்கு பேரரசுகளிடமிருந்து தொலைவில் பாலைநிலத்தில் தன் அரசை அமைத்த கிருஷ்ணன்களும், செயலே யோகம் என கொள்ளும் அர்ஜுனன்களும், தன் செயலுக்கு தானே பொறுப்பேற்கும் திரௌபதிகளும் தான் தேவை.  நவீன மகாபாரத மறுஆக்கங்கள் இதழிதழாக விரியும் தாமரை என்றால், வெண்முரசு தாமரைத்தடாகம். கமல காடு. கற்பக கான். “செயல் புரிக” என்பதே எக்காலத்திற்குமான சொல்லாக இருக்க முடியும்.


    கட்டுரையை படித்து திருத்தங்கள் சொன்ன நண்பர்கள் விஜய் ரங்கராஜன், மகேந்திரராஜன் சந்திரசேகரன், வேங்கட பிரசாத், வேல்முருகன் பெரியசாமி ஆகியோருக்கு நன்றி.

  • காவிய மறுஆக்கங்கள் – ஒரு பார்வை

    காவிய மறுஆக்கங்கள் – ஒரு பார்வை

    “கம்பராமாயணம், வெண்முரசு, காவிய மறுஆக்கங்கள் – ஒரு பார்வை” — விரைவில்…

    ….

    [I took these pictures @ Mount Diablo State Park, Walnut Creek, California – July 3rd 2021.]

  • Venmurasu Programming Team – Endowment Fund

    [Note: The venmurasu coding contest was conducted at PSG College of Technology, Coimbatore, India during July / August 2020. I am posting it late, as we got formal approval to start an endowment fund recently. Post covid, we will create a dedicated website.]

    I gave two webinars at PSG Tech in July/August 2020. As part of the webinars, I announced a coding challenge for PSG Tech students. Three of my classmates agreed to be judges for the coding challenge.

    Judges:

    Arun Bharath Gomathinayagam –  Engineering Manager, The NewYork Times, New York

    Rajendran Thirupugalsamy  – Senior Software Engineer, Google, Seattle

    Sridharan Venkataramanan – Senior Software Engineer, Microsoft, Seattle 

    Around 13 students (including 5 women) successfully solved the challenge and submitted their code in GitHub with some of them hosting their code in heroku and attaching demo videos. I was quite surprised with the speed in which the students solved the challenges, gave minimal instructions (ex: host in heroku) and they googled their way in short time. Judges are very impressed with the submissions and we decided to increase the total prize money from ₹10K to ₹21K.

    Judging Criteria:

    1. Solving the original challenge (finding 10 longest words) → 25%
    2. Design, Coding style → 35%
    3. Going above and beyond (additional features, hosting in heroku, etc) → 30%
    4. Documentation, Demos → 10%

    Submissions:

    Aaron Joshua Team: (Aaron Joshua, Roshini)

    https://github.com/AarhonJoshuaa/Challenge.git

    Aishwarya Team (Aishwarya B, Narmatha.R, ThamilVani.S)

    https://github.com/Aishwaryabalasundaram/venmurasu_contest

    Demo Video: https://drive.google.com/file/d/1BPVbWUeDfv3HXA01LBf3-VNx6g3MBD5l/view?usp=sharing

    Gokul Team: (Gokul Kumar, Keerthana S, Kevin P)

    https://venmurasu-webscrape.herokuapp.com/

    https://github.com/kevinpaul00/venmurasu-webscrape

    https://github.com/gokul-bhoomi/venmurasu-webapp

    Harish: https://github.com/harish-k-s/Venmurasu-Solved-HARISH-KS-IT-Dept-19I316-PSG-Tech

    Hariharan Team: (Nithin C, Mohamed Murshith, Hariharan K) – https://github.com/HariharanK16/Venmurasu

    NaveenRaj:

    Github link for modularised python code: https://github.com/naveeen684/Venmurasu-Final

    Github link for Django app: https://github.com/naveeen684/Venmurasu_django

    Deployed app: https://venmurasu.herokuapp.com/

    Results:

    First Prize: Split between two teams: Naveenraj & Aishwarya Team (Aishwarya B, Narmatha.R, ThamilVani.S) –  7000 for each team

    Second Prize: Gokul Kumar Team (Gokul Kumar, Keerthana S, Kevin P) – 4000

    Third prize: Aaron Joshua Team (Aaron Joshua, Roshini), Harish & Hariharan Team ( Nithin C, Mohamed Murshith, Hariharan K)  – 1000 for each team

    Venmurasu Programming Team – Endowment Fund

    We plan to conduct similar coding contests every year. We worked with the college’s alumni association and created an endowment fund. The interest generated every year from the fund will be used to conduct the coding contests. We requested that we name the endowment fund as “Venmurasu Programming Team” in the honor of Tamil Writer B.Jeyamohan, who had written, Venmurasu – modern re-narration of Indian Epic Mahabharatham.

    Two faculty members from PSG Tech, Dr.S.Sarathambigai and Dr.T.Vairam are appointed to conduct the coding contests, with alumni being the judges. The winners of the contests will be working on few interesting open source projects (more details to follow). Our sincere thanks to Dr.K.Uma Maheswari, Head of Department, Information Technology & Dr.Arasu, Alumni Coordinator at PSG Technology in helping us to create the endowment funds.

    We need to start small, as such initiatives do consume our time. So, for time being, the competition is going to be limited to students from PSG Tech. Based on our learnings and logistics, we do plan to increase the scale and scope of the contest (within and outside India).

    [summary in Tamil:]

    வெண்முரசு நிரல் குழு – அறக்கட்டளை

    நான் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் 2001-2005 B.Tech IT பயின்றேன். PSG Tech network + brand பின்னர் அமெரிக்காவில் மேற்படிப்பு படிப்பதற்கும், என் வேலைக்கும் உதவியது. என் வகுப்பில் படித்தவர்களில் இப்போது 75% வெளிநாட்டில் தான் இருக்கிறோம். கல்லூரிக்கு மீண்டும் ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பாற்ற வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக தோன்றியது. சென்ற ஆண்டு கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் மூலமாக இரண்டு இணையவழி கலந்துரையாடலில் பங்கேற்றேன். அதன் தொடர்ச்சியாக ரூ.10,000 நிரல் போட்டி ஒன்றை அறிவித்தோம். இப்பொழுது அமெரிக்காவில் கூகிள், மைக்ரோசாப்ட்டில் பணிபுரியும் என் கல்லூரி நண்பர்கள் போட்டி நடுவர்களாக இருந்தார்கள். போட்டி: கல்லூரி முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கானது. வெண்முரசு நாவலில் உள்ள நீளமான பத்து வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும். (வெண்முரசு இனையதளத்தை மொத்தமாக சொல் சொல்லாக பிரித்து, அடுக்கி, வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும்.) இது ஒரு வகையில் சூப்பர் சிங்கர், கராத்தே போட்டி போலத்தான். இவற்றால் உடனடியான பலன் இல்லாவிட்டாலும், இவை போன்ற ஹாக்கத்தான், நிரல் போட்டிகள் ஒரு வளமான கணினி தொழில்நுட்ப சூழலுக்கு முக்கியம். 13 மாணவர்கள் (5 மாணவிகள் உட்பட) பரிசு பெற்றார்கள். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் போட்டியில் வென்றதால், பரிசுத்தொகையை ரூ.21,000 ஆக அதிகரித்தோம்.

    வருடா வருடம் இது போல ஒரு போட்டி நடத்த வேண்டும் என கல்லூரியில் கேட்டு, அதை வெண்முரசு நாவல் வரிசையை தமிழ் சமூகத்திற்கு இலவசமாக அளித்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை கௌரவிக்கும் பொருட்டு “Venmurasu Programming Team Endowment Fund”  என நாங்கள் அளித்த நிதிக்கு பெயரிட வேண்டும் என கேட்டுக் கொண்டோம். கல்லூரியிலும் ஏற்றுக்கொண்டார்கள். நோய் தொற்று காலம் முடிந்தபின் இதற்குண்டான தளம் துவங்கப்படும். இனி வரும் ஆண்டுகளில் போட்டி சீனியர் மாணவர்களால் ஜூனியர்களுக்கு நடத்தப்படும். முன்னாள் மாணவர்கள் நடுவர்களாக இருப்பார்கள். முதலில் பி.எஸ்.ஜி கல்லூரிக்குள் போட்டியை நடத்தி விட்டு, ஓரளவு பிடி கிடைத்தபின் மற்ற கல்லூரிகளுக்கும் போட்டியை விரிவு படுத்தும் திட்டம் இருக்கிறது.


    [First 16 novels out of the 26 novels, which I have]

    More about Venmurasu: 

    Tamil writer B.Jeyamohan has finished writing his novel series titled “Venmurasu” (The White Drum) on July 16, 2020. The scope of the work is breathtaking. 26 separate standard fiction length novels, over 25000 pages in print, written over roughly 6.5 years. The author serialised the novels, a chapter a day, since 2014. Venmurasu is based on the Indian epic, the Vyasa-Mahabharatham.

    Broadly, what Venmurasu does to the Mahabharatham is what Shakespeare did with the story of Donwald to create Macbeth, or what Wagner did with the Norse myths to create the Ring cycle. It refashions the original with artistic purpose to create a greater whole, a parallel, modern epic.

    Venmurasu is a modern literary text, a novel series or roman fleuve like Romain Rolland’s Jean Cristophe or Emilie Zola’s Les Rougon-Macquart. However Venmurasu differs in that each novel in the series has its own aesthetic, narrative form and vision. There are Tolstoyan multigenerational epics, romantic comedies, poetic novels in versified prose, philosophical novels, fantasies, travel and war novels The entire series traverses a whole gamut of characters, major, minor, mythical and invented, running into several hundreds. They abound with all the delight of novelistic detail – landscapes, histories, mythologies and genealogies, recipes and rituals, technical descriptions of iron-age ships, war implements and Chinese telescopes, forays into various philosophical, religious and artistic schools.

    Familiar tales are told and retold and subverted in a variety of voices, juxtaposed against each other to create new readings. Folk and subaltern tales, orthodox narratives, modern and ancient myths, women’s stories, children’s stories and animal stories in a single tapestry. They are layered with the main narrative, resulting in astonishing interpretations and insights into the original epic, that’s still living fabric in India. Then, this insight swings the reader’s gaze back into contemporary society, where much of the same tensions still exist.

  • Venmurasu Tribute Documentary

    We are organizing a 90 min documentary screening on June 19, Saturday 3:00 pm in Fremont bay area.

    Eventbrite link to register for tickets:

    https://tinyurl.com/venmurasu-BayArea

    Contact: Sudarshan Pattabiraman – +1-209-890-5072 (Fremont CA) (Call/Whatsapp/Text)

    Email: suchan87@gmail.com

    Theatre: Century at Pacific commons XD, Fremont, CA

    Date: June 19, Saturday 3:00 PM

    Ticket: $20 (venmo/paypal – visumrs@gmail.com)

    Teaser: https://youtu.be/Wc7G3j-4YV4

    As of 06/08 7:00 AM, Fremont is in Orange tier. We will follow the Covid guidelines issued by Alameda county and fill only 50% of the capacity. [55 seats out of 110 seats]. We request everyone to follow Covid safety protocols as well.

    Venmurasu:

    Tamil writer Jeyamohan has finished writing his novel series titled “Venmurasu” (The White Drum) on July 16, 2020. The scope of the work is breathtaking. 26 separate standard fiction length novels, over 25000 pages in print, written over roughly 6.5 years. The author serialised the novels, a chapter a day, since 2014. Venmurasu is based on the Indian epic, the Vyasa-Mahabharatham.

    Broadly, what Venmurasu does to the Mahabharatham is what Shakespeare did with the story of Donwald to create Macbeth, or what Wagner did with the Norse myths to create the Ring cycle. It refashions the original with artistic purpose to create a greater whole, a parallel, modern epic.

    Venmurasu is a modern literary text, a novel series or roman fleuve like Romain Rolland’s Jean Cristophe or Emilie Zola’s Les Rougon-Macquart. However Venmurasu differs in that each novel in the series has its own aesthetic, narrative form and vision. There are Tolstoyan multigenerational epics, romantic comedies, poetic novels in versified prose, philosophical novels, fantasies, travel and war novels The entire series traverses a whole gamut of characters, major, minor, mythical and invented, running into several hundreds. They abound with all the delight of novelistic detail – landscapes, histories, mythologies and genealogies, recipes and rituals, technical descriptions of iron-age ships, war implements and Chinese telescopes, forays into various philosophical, religious and artistic schools.

    Familiar tales are told and retold and subverted in a variety of voices, juxtaposed against each other to create new readings. Folk and subaltern tales, orthodox narratives, modern and ancient myths, women’s stories, children’s stories and animal stories in a single tapestry. They are layered with the main narrative, resulting in astonishing interpretations and insights into the original epic, that’s still living fabric in India. Then, this insight swings the reader’s gaze back into contemporary society, where much of the same tensions still exist.

    Venmurasu Tribute Documentary:

    Readers of Venmurasu have created a 90 minutes documentary as a tribute to Venmurasu, to celebrate the astonishing achievement of writer Jeyamohan. Actor Kamal Hassan, Maestro Ilayaraja, Director Vasantha Balan, Tamil Writers – A.Muthulingam, Nanjil Nadan, Su.Venugopal, Paavannan and readers of Venmurasu have shared their views on Venmurasu. The documentary also includes an operatic poem composed by Musician Rajan Somasundaram of North Carolina using verses from “Neelam” novel of Venmurasu sung by Kamal Hassan, Saindavi, Sriram Parthasarathy in collaboration with North Carolina Symphony.

    —-

    அன்புள்ள நண்பர்களுக்கு,

    ஜனவரி 2014ல் துவங்கி, தினமும் ஒரு அத்தியாயமாக, 7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது. மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது. உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் தரிசனங்களையும் விரிவாக்கம் செய்கிறது. புராணம் இன்றைய நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச்செயல்பாடு இது. 

    வெண்முரசு நிறைவை சிறப்பிக்கும் விதமாக, ‘வெண்முரசு கொண்டாட்டம்’ ஆவணப்படம் வரும் ஜூன் 19-ம் தேதி ஃப்ரீமாண்ட் நகரில் திரையிடப்பட உள்ளது. எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், நாஞ்சில் நாடன், பாவண்ணன், சு.வேணுகோபால், எம். கோபாலகிருஷ்ணன், லக்ஷ்மி மணிவண்ணன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும், கமல் ஹாசன், இளையராஜா, வசந்தபாலன் உள்ளிட்ட கலையுலகப் பிரமுகர்களும், வாசகர்களும் ஒன்றுகூடி, இது தமிழ் இலக்கியத்தில் ஏன் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுத் தருணம் என்றும், உலக இலக்கியத்தில் வெண்முரசின் இடம் என்ன என்றும், வெண்முரசில் இருந்து அவர்கள் பெற்றதென்ன என்றும் பேசியிருக்கிறார்கள்.

    கமல் ஹாசன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி ஆகியோர் நீலம் நாவலில் இருந்து எடுத்த சில அற்புதமான வரிகளை ராஜன் சோமசுந்தரம் இசையில் அபாரமாக பாடியிருக்கிறார்கள். சித்தார் ரிஷப் ஷர்மா, சாரங்கி மாயங்க் ரத்தோர், வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசைக் கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து இந்த இசைத்தொகுப்பை வேறொரு உயரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

    மேலும், வெண்முரசு மகாபாரதத்தின் விரிவை உணர்த்தும் படி, ஜெர்மன் பிராஸ் இசைக்குழுவும், வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசைக் கலைஞர்களும் சேர்ந்து வாசித்திருக்கும் ஒரு பிரம்மாண்ட இசைத்தொகுப்பும் (Epic Theme) உண்டு. 

    திரையிடலில் பங்குபெறுபவர்கள் அரசாங்க, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் திரைஅரங்கத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற அறிவுறுத்தபடுகிறார்கள். திரைஅரங்க விதிமுறைகளின் படி திரையரங்கில் 55 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள். 

    Ideal for 12 years or older

    வெண்முரசை பற்றி மேலும் அறிந்து கொள்ள: https://en.m.wikipedia.org/wiki/Venmurasu

    வெண்முரசை ஆன்லைனில் படிக்க: https://venmurasu.in/

    [Credit for the above write up on Venmurasu (english) goes to Suchitra – https://suchitra.blog/2020/08/19/some-notes-on-venmurasu/ and Tamil write up goes to Rajan Somasundaram]

    [First sixteen novels of Venmurasu series, which I have]

    To buy tickets: https://tinyurl.com/venmurasu-BayArea

  • சில கடிதங்கள்

    எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய கடிதங்களும், அவருடைய தளத்தில் வந்த பதில்களும்.

    தெய்வத்தின் முகங்கள்

    தெய்வத்தின் முகங்கள்

    April 10, 2012

    அன்புள்ள ஜெ,

    நலமா ?

    உங்கள் ‘திருமுகப்பில்’ கதையை ஒருமுறை படித்திருக்கிறேன். அப்போது, எனக்கு அது சரியாகப் புரியவில்லை.

    என் நண்பன் ஜோசப், பல சமயங்களில் தன்னை, ‘மூன்றாம் உலகக் கிறித்தவன்’ என்று சொல்லிக்கொள்வான். அவனுடன், எட்டு வருடங்களுக்குமுன், தலைக்காவேரி அருகே உள்ள பைலாகூப்பேவிலுள்ள திபேத்திய மடாலயத்திற்கு சென்றிருந்தேன்.

    சீன முகமுடைய புத்தரைப்பற்றி அவன் பேசியபோது, “புத்தருக்கு எப்படி சீன முகம் இருக்கலாம்? இந்திய முகந்தான் இருக்கணும்” என்று நான் சொல்ல, அவன் சிறிது நேரம் பார்த்துவிட்டு, ஒன்றும் சொல்லவில்லை.

    சில மாதங்களுக்குமுன் ஜோசப்புடன் அங்கோர்வாட் சென்றிருந்தேன். கடைசிநாள், அங்குள்ள அருங்காட்சியகத்திற்குச் சென்றபோது, ஒரு கூடத்தில், கட்டைவிரலளவு முதல் ஆளுயர புத்தர்கள் என ஆயிரம் புத்தர் சிலைகள் இருந்தன.

    கிரேக்கச் சாயல் கொண்ட காந்தார புத்தர், இடுங்கிய கண்களுடைய சீன புத்தர், தடித்த உதடுகளுடைய கம்போடிய புத்தர், பெரிய கண்களுடைய இந்திய புத்தர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை.

    அந்தச் சிலைகளை பார்த்துக்கொண்டிருந்த போது, ஏதோ ஒரு கணத்தில், சட்டென்று, உங்கள் ‘திருமுகப்பில்’ புரிந்தது. உங்கள் கதையையும், பைலாகூப்பேவையும் அவனுக்கு நினைவூட்டியபோது, ஆயிரம் புத்தர்களுடன் சேர்ந்து அவனும் புன்னகைத்தான்.

    ஏசுபிரான் சிலைகளில் ஏன் மங்கோலிய ஏசுவோ, காப்பிரி ஏசுவோ இல்லை என்று நீண்டநேரம் பேசிக் கொண்டே வந்தோம்.

    நீங்கள் கண்டிப்பாக கம்போடியா செல்லவேண்டும் சார். நிச்சயம் ரசிப்பீர்கள்.

    நன்றி,

    விசு.

    [விஷ்ணுபுரம் விமர்சனம்]

    அன்புள்ள விசு,

    ஒரு தெய்வம் எப்படி முகம் மாறும் என்பதற்கு புத்தர்தான் உதாரணம். காந்தார புத்தர் கிரேக்க சாயல் கொண்டவர். தென்னக புத்தர் தெற்கத்திய முகம் கொண்டவர். திபெத்திய புத்தரின் கண் இடுங்கலானது. ஆனால் பர்மியபுத்தரின் கண் அப்படி இல்லை.

    என் மகனின் கல்லூரி நண்பர்கள் பலர் வடகிழக்கைச் சேர்ந்தவர்கள். தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது விரல்களால் கண்களை விரித்துக் கொட்டைவிழி போல ஆக்கிக் காட்டி நம்மைக் கிண்டலடிப்பார்களாம். அவர்களுக்குப் பெரிய கண் என்பது ராட்சதத்தன்மை கொண்டது. சிறிய இடுங்கிய கண் அழகானது, தெய்வீகமானது.

    கடவுளைப் பெருமாள் என்பதுண்டு. விஷ்ணு, முருகன் எல்லாமே பெருமாள்கள். பெரும் ஆள். நாம் சிறிய ஆட்கள். குறையானவர்கள். நம்மைப்போன்ற, ஆனால் முழுமையான, வடிவம் கொண்டவரே நம் தெய்வம். நாம் தேடும் முழுமையின் சின்னம்.

    இன்று நாம் காணும் ஏசு இத்தாலிய ஏசு. அவரது யூத முகம் வேறாக இருந்திருக்கலாம். அதுவும் அன்று அபிசீனியாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த ஜுடாயாவின் யூதர்கள் இந்தியர்களைப்போல மாநிறமாக, பெரிய கண்களுடன் இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம்,

    இந்தியாவிலேயே வட இந்தியர்களுக்குக் கன்னங்கருமையாக இருக்கும் நம்முடைய தெய்வங்கள் பீதியைத்தான் கிளப்புகின்றன. வெண்சலவைக்கல் சிலைகளே அவர்களுக்கு தெய்வ உருவமாகப் படுகின்றன. நமக்கு வெண்சிலைகள் ஏதோ பொம்மைகளாகத் தோன்றுகின்றன.

    சமணப்பயணத்தில் ஒரு விஷயத்தை கவனித்தேன். பல ஊர்களில் புராதனமான சமண தீர்த்தங்கரர் சிலைகள் கரியவை. அவை ஓரமாக சிறு அறைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டபின் கடந்த முந்நூறாண்டுகளில் வெண்சலவைக்கல் சிலைகள் கருவறையில் அமர்த்தப்பட்டுள்ளன.

    குறிப்பாக, ராஜஸ்தானின் தில்வாராவில் சலவைக்கல் சிற்பங்கள் மண்டிய கோயிலில் பூட்டப்பட்ட பழைய கருவறை ஒன்றின் இருளுக்குள் இருந்த ஆறடி உயரமான கன்னங்கரிய தீர்த்தங்கரர் சிலை நம் ஆழ்மனத்தில் அமர்ந்திருப்பதாகவே தோன்றியது.

    புத்தரின் உடம்பு தர்மகாயம் என்று சொல்லப்படுகிறது. பிரபஞ்சத்தை இயக்கும் மகாதர்மத்தை ஓர் உடம்பாகக் காண்பதே அது. ஏனென்றால் இப்பிரபஞ்சத்தின் ஒரு சரியான துளி நம் உடல். பிரபஞ்ச விசையே இதையும் இயக்குகிறது. ஆகவே இதுவும் தர்மத்தின் தோற்றமே.

    அதையே விசுவரூபம் என்கிறோம். விசுவம் என்றால் பிரபஞ்சம். உடலின் பிரபஞ்சத்தோற்றம் மட்டுமல்ல பிரபஞ்சத்தின் உடல்தோற்றமும் முடிவற்றதே.

    எல்லா இறையுருவங்களும் நம் உடம்பை நாமே காண்பதுதான்.

    ஜெ

    பெயர்ந்தோர்


    பெயர்ந்தோர்

    April 25, 2013

    அன்புள்ள ஜெ,

    உங்கள் வாழும் தமிழ் பதிவு, http://www.jeyamohan.in/?p=29570, மனதை நெகிழவைத்தது.
    இந்த வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு. ( பிரஞ்சு – கரீபியத் தீவுகளில் உள்ள தமிழர்களை / இந்தியர்களைப் பற்றிய ஆவணம்).

    https://www.youtube.com/watch?v=CZ11YjOMp4o
    https://www.youtube.com/watch?v=ZR1zisa_N-o&feature=relmfu

    பாண்டிச்சேரியிலிருந்தும், காரைக்காலிலிருந்தும் கொத்தடிமைகளாக சென்றவர்களின் வம்சாவளியினர் பற்றிய ஆவணம்.
    இவர்களுக்குத் தமிழ் மறந்துவிட்டது. ஆனால் மாரியம்மனும், மதுரைவீரனும் மறக்கவில்லை.
    பிரெஞ்ச் பேசிக்கொண்டு, இலைபோட்டு சாப்பிடும் இவர்களைக் காணும்போது, உங்கள் கொற்றவை நினைவிற்கு வருகிறது.
    இவர்கள், ஆழி அடித்துச்சென்ற கன்னியன்னையின் மெட்டி தானே.

    தொடர்பான கட்டுரை :
    http://independent.academia.edu/SureshPillai/Papers/392416/Hindu_Indian_cultural_Diaspora_in_French_Caribbean_islands_of_Guadeloupe_and_Martinique

    ஹென்ரி சிதம்பரம் என்பவரை குவாதலூப்பின் காந்தி என்கிறார்கள். இவரைபற்றி அதிகம் தெரியவில்லை.
    கரீபிய, பிஜி தீவுகளுக்கு கொத்தடிமைகளாக சென்றவர்களைப்பற்றித் தமிழிலோ, இந்திய மொழிகளிலோ ஆவணமோ/ நூலோ வந்துள்ளதா ?

    ஆப்ரிக்க அடிமைகளைப்பற்றியும், யூத படுகொலைகளைப்பற்றியும் ஆயிரக்கணக்கில் நூல்கள் உள்ளன.
    இந்திய பஞ்சங்களையும், கொத்தடிமைகளையும் பற்றி ஐம்பது புத்தகங்கள் வந்திருக்குமா ஜெ ?

    விசு

    அன்புள்ள விசு

    மிகவும் பேராசைப்படுகிறீர்கள்

    எனக்குத்தெரிந்து ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றவர்களைப்பற்றி அனேகமாக எதுவுமே எழுதப்பட்டதில்லை. எந்த ஆராய்ச்சியும் நடத்தப்பட்டதில்லை. அதற்காக ஒரு பைசாகூட செலவழிக்கப்பட்டதில்லை.

    ஓரளவேனும் பதிவுகள் உள்ளது இலக்கியத்தில். குறிப்பாக இலங்கை மலையகத் தமிழர்களைப்பற்றியும் மலேசியத்தோட்டத்தொழிலாளர்கள் பற்றியும் ஒரு சில ஆக்கங்கள். தெளிவத்தை ஜோசப், மாத்தளை சோமு முதலிய சில இலங்கை எழுத்தாளர்களை குறிப்பாகச் சொல்லலாம்

    ஜெ

    —-

    https://www.jeyamohan.in/21403/ – முதல் வாசகர் கடிதம்

    கடிதங்கள்

    October 21, 2011

    அன்புள்ள ஜெமோ,

    நலமா ? நீங்கள், “நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்” நூலில் கூறிய, “ஆங்கில வழி கல்விகற்று, இன்டர்நெட் மூலம், இலக்கியத்தைக் கண்டடயும் நான்காவது வகையை”ச்சார்ந்த ஒரு
    இளைய வாசகன். நண்பர் ஒருவர் உங்களுடைய “கன்னி நிலம்” கதையை அனுப்பினார். காதலை இவ்வளவு தீவிரத்துடன் இதற்குமுன் நான் படித்ததில்லை. உங்கள் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு உங்கள் வலைத்தளத்தை விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன்.

    “நான் ஒரு அறிவாளி, ஒருவர் எழுதி எனக்குப் புரியாதா?” என்ற அகந்தை எனக்கு இருந்தது. நீங்கள் எழுதிய விஷ்ணுபுரம், இந்து மரபின் ஆறு தரிசனம், பின் தொடரும்
    நிழலின் குரல், நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம், கொடும்பாளூர் கண்ணகி ஆகியவற்றை வாங்கினேன். [ நான் அமெரிக்காவில் வேலை செய்கிறேன். சமீபத்தில் விடுமுறைக்கு
    சென்னை வந்தேன். ஹிக்கின் பாதம்ஸ் சென்று உங்கள் புத்தகங்களைக் கேட்டால் “அவருதுலாம் இங்க இல்லைங்க” என்றார் ஒருவர்.]

    விஷ்ணுபுரத்தை ஒருமுறை படித்துவிட்டு ஒரு பெரும் அயர்ச்சி ஏற்பட்டது. [தர்க்க விவாதப் பகுதிகள், கவிதைகள், ஆகிவற்றைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு என் வாசிப்பு அனுபவம் இல்லை என்ற ஒரு உண்மையை உணர்ந்து கொண்டேன்]. மேலும், நான் சிறு வயதில் இருந்து நம்பிய பல விஷயங்களில் எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது.யோசித்து, யோசித்து, எனக்கு மூளை குழம்ப ஆரம்பித்தது. seriously, I was confused. [இப்ப கொஞ்சம் பரவாயில்லை :-)].

    உங்கள் மூலமாக நவீனத் தமிழ் இலக்கியம் அறிமுகமாகி உள்ளது. இதற்குமுன் விகடன், சுஜாதா என்ற அளவுக்கு தமிழில் இருந்த என் வாசிப்பு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருகிறது. அதற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.

    நன்றி,
    விசு.

    அன்புள்ள விசு

    ஒரு புதிய கலைவடிவுக்குள் ஒரு புதிய அறிவுத்துறைக்குள் நுழையும்போது உருவாகும் ஆரம்ப அயர்ச்சியும் பிரமிப்பும் ஆச்சரியமும்தான் இவை. மெல்ல இவை விலகி உங்களுக்கான ரசனையும் உங்களுக்கான தேர்வுகளும் உருவாகிவிடும். அதிகபட்சம் ஒருவருடம்.விஷ்ணுபுரம் எடுத்துக்கொண்டபொருள் அதைக் கொஞ்சம் கடினமாக்குகிறது.அதைவிட அது போடக்கூடிய விரிவான கோலம். முன்னும்பின்னும் கதை பின்னிச்செல்லும் விதம். சற்று கவனமாக நினைவில் வைத்துக்கொண்டு வாசித்தால் பெரியவிஷயம் அல்ல.
    தொடர்ந்து விவாதிப்போம்

    ஜெ

  • விஷ்ணுபுரம் நாவல் – ஒரு பார்வை

    நான் கண்ட விஷ்ணுபுரம்

    Post originally written in March 2012 in siliconshelf site

    https://vishnupuram.com/tag/விசு/

    இந்த பதிவை மார்ச் 2012 இல் எழுதினேன். அப்பொழுது இணையத்தில் விஷ்ணுபுரம் நாவல் குறித்த பதிவுகள் மிகக்குறைவு. எழுத்தாளர் கடலூர் சீனு ஜெ. தளத்தில் விஷ்ணுபுரம் வாசிப்பை குறித்த அருமையான கடிதங்களை எழுதியிருந்தார். அந்த கடிதங்களை தவிர்த்தால் நேர்மறையான பதிவுகள் மிக குறைவாக இருந்தன. நாவலை வாசிக்காமலே எழுதப்பட்ட பதிவுகள், காழ்ப்புகளே மிகுதி. நண்பர் சுனில் கிருஷ்ணன் காரைக்குடியில் விஷ்ணுபுரத்திற்கான வாசிப்பரங்கை மேலும் சில மாதங்கள் கழித்து ஒருங்கினைத்தார். என்னுடைய பதிவையெல்லாம் விட மிகத்தீவிரமான வாசிப்பனுபங்களை கொண்ட கட்டுரைகளை நண்பர்கள் அந்த கருத்தரங்கில் வாசித்தார்கள். https://vishnupuram.com/category/காரைக்குடி-கருத்தரங்கு/. விஷ்ணுபுரம் நான்காம் பதிப்பு முன்னுரையில் ஜெ. இப்படி எழுதியிருந்தார்:

    சென்ற பதினைந்து வருடங்களில் அனேகமாக எல்லா மாதங்களிலும் ஒரு விமர்சனமாவது விஷ்ணுபுரத்துக்கு வெளியாகியிருக்கிறது. பல விமர்சனங்கள் கூர்மையானவைதான். ஆனால், என் கருத்தில் விஷ்ணுபுரத்துக்கு மிக முக்கியமான விமர்சனங்கள், அந்நாவலை மிகநெருங்கிச்சென்று ஆன்மாவைத் தீண்டிப்பார்க்கும் விமர்சனங்கள் இந்த 2012ல் தான் வெளிவந்துள்ளன. அவை எனக்கு ஆழமான நம்பிக்கையை அளிக்கின்றன. பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் விஷ்ணுபுரம் வெளிவந்த போது அன்றைய சிற்றிதழ்ச் சூழலில் ஒரு விசித்திரமான சலசலப்பு மட்டுமே உருவாகியது. அன்றைய இலக்கிய மதிப்பீடுகளை அது மீறிச்சென்றது. அதன்மீது வழக்கமான அன்றாட அரசியல் சார்ந்த வாசிப்பு ஒன்றும், நவீனத்துவ வடிவப்பிரக்ஞை சார்ந்த வாசிப்பு ஒன்றும் மட்டுமே நிகழ்ந்தன. அன்று அந்த ஆரம்பநாட்களில் நாவலின் கைப்பிரதியை வாசித்து அது ஒரு செவ்வியல் ஆக்கம் என்ற வரியை என்னிடம் சொன்னவர் சி.மோகன். அது வெளிவரவும் அவர் காரணமாக இருந்தார். அந்த இளம்வயதில் அச்சொற்கள் அளித்த ஊக்கம் அளப்பரியது. இப்போது அவரை மீண்டும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். விஷ்ணுபுரம் பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் அதைப் புரிந்துகொள்வதற்குரிய பிற தகவல்களும் தொகுக்கப்பட்டு vishnupuram.com என்ற இணையதளம் நடந்துகொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக அதில் இந்நாவல் விவாதிக்கப்பட்டபடி இருக்கிறது. அதில் எழுதிவரும் பலரும் இந்நாவல் எழுதப்பட்ட போது சிறுவர்களாக இருந்தவர்கள். உலக இலக்கியத்தில் ஆழ்ந்த வாசிப்புடன் தமிழுக்குள் நுழைந்தவர்கள். அவர்கள் வாசிக்கும் விஷ்ணுபுரம் அதிநவீனத் தொழில்நுட்ப யுகத்துக்காகத் தன்னைப் புதியதாக உருவாக்கிக்கொண்ட ஒன்றாக இருப்பதைக் காண்கிறேன்.

    ——————————————————————-

    2015 ஆம் ஆண்டிற்கு பிறகு மேலும் சிறந்த வாசகர் கடிதங்கள் வெளிவந்துள்ளன. ஒரு வகையில் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்கள் மேலும் சிறப்பாகவே விஷ்ணுபுரம் நாவலை வாசிக்கிறார்கள்.

    —–

    நான் கண்ட விஷ்ணுபுரம் – வாசகர் பார்வை:

    “யுகத்துக்கு ஒருமுறை விஷ்ணு புரண்டு படுப்பார். ஒரு யுகமென்றால், எத்தனை கோடி கனவுகள், எத்தனை கோடி சிந்தனைகள். நான் கவிஞன். காலத்தை சொல்லால் அளப்பவன். எனது காவியம் ஒரு யுகத்தை பிரதிபலித்துக்காட்டும். ” – சங்கர்ஷணன்.

    ************

    விஷ்ணுபுரத்தை, முதல்முறை படிக்கும்பொழுது, முதல் ஐம்பது பக்கங்கள் கடினமாக இருந்தது. மொழியும், நடையும் பழகியபின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தைபோல் விஷ்ணுபுரத்தில் தொலைந்து போய்விட்டேன். கதையின் ஓட்டத்தை தெரிந்துகொள்வதற்காக, அவசர, அவசரமாகப் படித்தேன். கவிதைகள், தர்க்க விவாதங்கள் (இரண்டாம் பகுதி), பல பக்கங்களுக்கு நீளும் எண்ண ஓட்டங்கள் போன்றவற்றை தவிர்த்துவிட்டேன். படித்துமுடித்த பின், ஒன்று தெரிந்தது. நான் படித்த மற்ற தமிழ் நாவல்கள் போல இது இல்லை. (கண்டிப்பாக, டைம் பாஸ் நாவல் இல்லை).  குழப்பமும் பிரமிப்பும் அடைந்தேன். (குழப்பம் ஏனென்றால், நாவல் எனக்கு புனைவு என்பதைத்தாண்டி, உண்மை என்று தோன்றியதால்.) பத்துவரிகளில், ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.  (http://www.jeyamohan.in/?p=21403). சில மாதங்கள் கழித்து பதில் எழுதினார். 

    “ஒரு புதிய கலைவடிவுக்குள் ஒரு புதிய அறிவுத்துறைக்குள் நுழையும்போது உருவாகும் ஆரம்ப அயர்ச்சியும் பிரமிப்பும் ஆச்சரியமும்தான் இவை. மெல்ல இவை விலகி உங்களுக்கான ரசனையும் உங்களுக்கான தேர்வுகளும் உருவாகிவிடும். அதிகபட்சம் ஒருவருடம்.விஷ்ணுபுரம் எடுத்துக்கொண்டபொருள் அதைக் கொஞ்சம் கடினமாக்குகிறது.அதைவிட அது போடக்கூடிய விரிவான கோலம். முன்னும்பின்னும் கதை பின்னிச்செல்லும் விதம். சற்று கவனமாக நினைவில் வைத்துக்கொண்டு வாசித்தால் பெரியவிஷயம் அல்ல.”

    கடந்த ஒன்றரை வருடத்தில் அவர் எழுதிய பலநூல்களை ஒருமுறை படித்திருக்கிறேன். மீண்டும் பலமுறை படிக்கவேண்டும். விஷ்ணுபுரத்தை இரண்டாம்முறை படித்துவிட்டு, அதைப் பற்றி ஒரு விரிவான பதிவு எழுதி ஆர்.விக்கு அனுப்புகிறேன் என்று சொல்லியிருந்தேன். இந்தப் பதிவு நாவலின் விமர்சனம் இல்லை. நாவலை மேலும் புரிந்துகொள்ள ஒரு முயற்சி. [இந்தப் பதிவை பல நாட்களாக, பல மனநிலைகளில் எழுதியதால், கட்டுரையின் நடை திடீரென்று தாவினால், சற்று பொறுத்தருள்க.]

    நாவலை, இரண்டாவது முறை படிக்கும்பொழுது, பரபரப்பில்லாமல் பொறுமையாகப் படித்தேன். உணர்ச்சிகரத் தருணங்களை தவிர்த்துவிட்டேன் (லலிதாங்கி – வல்லாளன்), பல இடங்களில் குறிப்பெடுத்துக்கொண்டது, மிக வசதியாக இருந்தது. வழக்கமான பானியில், ‘கதை என்னனா ?’ , ‘அதாவது இவரு இன்னா சொல்ராருன்னா ‘ என்று மட்டும் ஆராயாமல்,  நாவலின் பல பரிணாமங்களை, எனக்குத் தெரிந்த அளவு, தொட்டுக்காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்.  அதன்படி விஷ்ணுபுரத்தை, கீழ்கண்ட பிரிவுகளில் வகைப்படுத்துகிறேன். 

    விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்

    விஷ்ணுபுரம் – வரலாறு

    விஷ்ணுபுரம் – தத்துவம்

    விஷ்ணுபுரம் – கவித்துவம், காவிய மரபு

    விஷ்ணுபுரம் – மொழி

    விஷ்ணுபுரம் – கதை மாந்தர்கள் 

    விஷ்ணுபுரம் – கதைக்களம் – கம்போடியா – ஓர் ஒப்பீடு

    விஷ்ணுபுரம் – மாயா யதார்த்தவாதம்

    *******************************

    விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்

    ——————————————–

    விஷ்ணுபுரத்தின் ‘கதை’ பற்றி, இரண்டு பக்கங்களுக்கு மிகாமல், சிறுகுறிப்பு வரைக, என்று பரிட்சையில் கேள்விகேட்டால், கீழ்கண்டவாறு எழுதுவேன். (விஷ்ணுபுர நாவல் மூன்று பகுதிகளாக ஆனது.). 

    விஷ்ணு யுகத்திற்கு ஒருமுறை புரண்டு படுப்பார் என்பது ஐதீகம். தென்னாட்டின் தென்கோடியில் உள்ள ஊர் விஷ்ணுபுரம். காலாகாலமாக, விஷ்ணுபுரத்தை  நோக்கி தாந்திரீகர், வைதீகர், சமணர், பௌத்தர், காளாமுகர், வேதாந்திகள் என எல்லா மரபினரும் ஞானத்தைத் தேடி வந்தவன்னம் உள்ளனர். பல நூற்றாண்டுகளுக்குமுன் தென்னாட்டில் நடந்த ஞான விவாத சபையில், மற்ற மரபுகளை வென்று விஷ்ணுபுரத்தின் சொல்லாக வைதீக மரபை நிலைநாட்டியவர், வடநாட்டினரான அக்னிதத்தர். நான்காம் நூற்றாண்டில், அக்னிதத்தரின் வழித்தோன்றலான பவதத்தரை வாதத்தில் வென்று விஷ்ணுபுரத்தின் சொல்லாக பௌத்தத்தை நிலைநாட்டியவர் அஜிதர். பௌத்தத்திலிருந்து சமணம். பின்பு மீண்டும் வைதீகம். விஷ்ணுபுரத்தின் சொல் எதுவோ, அதற்குக் கட்டுப்பட்டது, மதுரையை ஆளும் பாண்டியனின் கோல்.     

    நாவலுடைய முதல் பகுதியின் காலம், பக்திமரபு ஓங்கியிருந்த பத்தாம் நூற்றாண்டு. கதைக்களம், விஷ்ணுபுரத்தில் பண்ணிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஶ்ரீபாத திருவிழா. பத்தாம் நூற்றாண்டில், விஷ்ணுபுரத்தின் சொல்லாக இருக்கும் வைதீக மரபின் காவலராக இருப்பவர் சூர்யதத்தர். திருவிழாவின் ஒரு பகுதியாக கூடும் தர்க்க விவாத சபையில், தான் இயற்றிய காவியத்தை அரங்கேற்றி, பெறும் பரிசில் மூலம், தன் வறுமை நீங்கும் என்ற கனவோடு,  தன் மனைவி, மக்களுடன் வரும் சங்கர்ஷணன், சூர்யதத்தரால் அவமதிக்கப்பட்டு, காவியக் கனவு கலைந்து, ஒரு விபத்தில் மகனைப் பறிகொடுத்து, கணிகையர் வீதியில், பத்மாட்சி எனும் கணிகையிடம், சென்று சேர்கிறான். விஷ்ணுபுரத்தில் உள்ள வைதீக குருகுலத்தைச் சேர்ந்த பிங்கலன் என்ற இளம் சீடன், வைதீகத்திலும், தன் குருகுலத்திலும் நம்பிக்கை இழந்து, குருகுலத்தை விட்டு வெளியேறி, சாருகேசி எனும் கணிகையிடம் தஞ்சமடைந்து, போகத்தின் எல்லைக்கும், ஞானத்தேடலின் எல்லைக்கும் இடையே முடிவின்றி அலைகழிக்கபடுகிறான். சங்கர்ஷனனின் மனைவியான லட்சுமி, மகனை இழந்த துக்கதிலிருந்து மீள, ஒரு பஜனைகோஷ்டியில் சேர்ந்து, பின்பு பிங்கலனில் தன் மகனை ‘கண்டடைந்து’, துக்கத்திலிருந்து மீள்கிறாள். சூர்யதத்தரால் அவமதிக்கப்பட்ட சங்கர்ஷணன், அதிகார பகடையாட்டத்தின் ஒரு பகுதியாக, சூர்யதத்தராலேயே ஞான சபையில் காவியம் அரங்கேற்ற அழைக்கப்படுகிறான். ஞான சபையை அவமதிக்க, பத்மாட்சி இல்லாமல் காவியம் அரங்கேறாது என்கிறான் சங்கர்ஷணன். கணிகையான அவளின் தூய்மையை சோதிக்க நடக்கும் அக்னிப்பரிட்சையில் ‘வெல்லும்’ பத்மாட்சியை காவிய தேவதையாக்கி, சிலை வைக்க உத்தரவிடுகிறார், விஷ்ணுபுரத்தில் ‘புதிதாக எதுவும் நிகழ்ந்துவிடாமல்’ பார்த்துக்கொள்ளும் சூர்யதத்தர். தன் காவியத்தை அரங்கேற்றியபின், லட்சுமியுடன் மீண்டும் இனைந்து, விஷ்ணுபுரத்தில் நடக்கும் கேலிக்கூத்துகளால் மனம் வெறுத்து, விஷ்ணுபுரத்தை விட்டுச் செல்கிறான் சங்கர்ஷணன்.  

    கணிகையர் குலத்தில் பிறந்த லலிதாங்கியிடம் காதல் வயப்படும் வாத்தியக்காரனான திருவடி, கணிகையர் வீதியில் அவளுக்காக காத்திருந்து, காத்திருந்து, பித்தேறி, தன்னிலை இழந்த நிலையில், திருவிழாவில் பங்கேற்க வந்த கிழ ஆழ்வார், குதிரைமீதேறி ‘வைகுந்தம்’ போய்ச்சேர்ந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, அவன் உறவினர்களால், திருவடி ஆழ்வாராக ஆக்கப்பட்டு, விஷ்ணுபுரத்தில் கைவிடப்பட்ட கடையனிலும் கடையர்களுக்கு ரட்சகனாகிறான்.  ஹரிதுங்கா மலையிலுள்ள செங்கழல் கொற்றவையின் ரூபமான, விஷ்ணுபுரத்தின் பத்தினித்தெய்வத்திடம் ‘உன் குலக் கொழுந்தாவாய்’ என்று ஆசிபெற்ற சித்திரை எனும் பதின்பருவச் சிறுமி, ஒரு மாயத் தருணத்தில், தீயினால் உண்ணப்பட்டு, தன் குலத்தின் தெய்வமாகிறாள். விஷ்ணுபுரத்தின் தலைமை அதிகாரியான நரசிங்கரிடம் இருந்து, சதி மூலம், பாண்டிய மன்னன் ஆதரவுடன், தலைமைப் பொறுப்பை அடைகிறான் காவலாலியான வில்லாளன். விஷ்ணுபுரத்தின் அடையாளமான விஷ்ணு கோவிலின் தலைமைச்சிற்பியான பிரசேனர், காளாமுகர்களால் உந்தப்பட்டு, விஷ்ணுபுரக் கோவிலை இடித்துவிட எண்ணி, ராஜகோபுரத்தின் மீது ஏறி, மனம் பேதலித்து, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்.  

    பத்தாம் நூற்றாண்டிலிருந்து, கதை நான்காம் நூற்றாண்டுக்குத் தாவுகிறது. (நாவலின் இரண்டாம் பகுதி) அப்போது, விஷ்ணுபுரத்தின் சொல்லாக, வைதீக மரபின் காவலராக இருப்பவர் பவதத்தர். இளம் பௌத்த பிக்குவான அஜிதனின் வாதத்திற்கான அறைகூவலை ஏற்று, பவதத்தர் விஷ்ணுபுர ஞான சபையை கூட்டுகிறார். பவதத்தர் தன் வாதத் திறமையால், சமணர்களையும், சைவர்களையும், திபேத்திய பௌத்தர்களையும் வெல்கிறார். பவதத்தரின் மருமகனாகிய விஷ்ணுதத்தன் என்ற பண்டிதன், தான் கற்ற ஞானமனைத்தையும் துறந்து, உடலெங்கும் சாம்பல் பூசி, பெருச்சாளித் தோலில் செய்த கௌபீனம் அனிந்து, சுடுகாட்டுச் சித்தனாகி விஷ்ணுபுர வீதிகளில் கூத்தாடுகிறான். சித்தனும் அவன் சீடனும் விவாதத்தில் பங்கேற்காமல், வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள். பவதத்தர், வேதத்தை மூல நூலாக ஏற்க மறுக்கும் அஜிதனிடன் தோல்வியுறுகிறார். அதிகாரத்தை விட மனமில்லாதவர்கள், பௌத்த மரபை விஷ்ணுபுரத்தின் சொல்லாக ஏற்க மறுத்து கலகம் செய்கிறார்கள். தாந்ரீக பௌத்தர்களின் துனையுடன், சந்திரகீர்த்தி எனும் வணிகன், கலகத்தை அடக்குகிறான். விஷ்ணுபுரத்தின் அதிகாரம் வைதீகர்களிடமிருந்து, வணிகர்களின் கைகளுக்குப் போகிறது. வாதத்தில் வென்றபின் அதிகாரத்திற்கான போட்டியை நினைத்தும், சித்தனை நினைத்தும் அஜிதன் துணுக்குறுகிறான். விஷ்ணுபுரத்தின் சொல்லாக பௌத்த மரபு மாறியதே தவிர, வேறொன்றும் மாறவில்லை. தன் குருவின் சொல்லை ஏற்று, பௌத்தமரபைக் கற்க,  நரோபா என்ற திபேத்திய பௌத்தன், அஜிதனின் கடைசிக் காலத்தில், விஷ்ணுபுரத்திற்கு வருகிறான். நரோபா, அஜிதரின் அறையில் நுழையும்போது, அவர் தனிமையில் மரணமடைகிறார். அஜிதரின் மரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டாம் என்ற சங்ககீர்த்தியின் ஆனையை அறிந்து, பதறி, மனம் வெறுத்து, நரோபா விஷ்ணுபுரத்தை விட்டு விலகி ஓடுகிறான்.  

    நாவலின் கடைசிப்பகுதி, கிட்டத்தட்ட பதிமூன்றாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. விஷ்ணுபுரத்தின் கோவில் இடிந்து, கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. நரோபாவின் திபேத்திய நூலிலிருந்து, விஷ்ணுபுரத்தை பற்றி அறிந்து, அதைத்தேடி வருகிறார் காசியைச்சேர்ந்த யோகவிரதர். பத்மாட்சி யட்சியும், கொன்றைவனத்தம்மனும் (சித்திரை), மகாபத்மபுராணமும் விஷ்ணுபுர மக்களின் வாழ்வில் கலந்துவிட்டிருக்கின்றன. எந்தப் புராணத்தை யார் இயற்றினார்கள் என்று பண்டிதர்கள் முரண்பட்டுக்கொள்கிறார்கள். வைதீக மரபின் காவலராக இருக்கும் ஆரியதத்தர் இறந்தபின் அவருடைய பைத்தியக்கார மகனைக்கு பட்டம் சூட்டுவதன்மூலம், விஷ்ணுபுர சர்வக்ஞப் பதவி ஒரு பைத்தியத்திடம் சென்று சேருகிறது. திருவடி மடத்தின் குருமகா சன்னிதானம், தன் சீடனுடன் மதுரைக்குப் போய்விடுகிறார். சில நூற்றாண்டுகளுக்குமுன் விஷ்ணுபுரத்தின்மீது படையெடுத்து வந்த முகமதியர்களுடன் சேர்ந்து, விஷ்ணுபுரத்தைச் சேர்ந்த சூத்திரர்களின் ஒரு பிரிவினரும், ஹரிதுங்கா மலையிலுள்ள பழங்குடியினரும் விஷ்ணுபுரக் கோவிலை இடித்துவிடுகிறார்கள். ததாதகராகவும், விஷ்ணுவாகவும் அறியப்படும் விஷ்ணுபுரத்தின் மூலவிக்ரகம், தங்களுடைய பெருமூப்பனின் சிலை என்று நம்புகிறார்கள் பசுங்குன்றத்திலுள்ள (ஹரிதுங்கா) பழங்குடிகள். நாட்கள் செல்ல செல்ல, பிரளயத்துக்கான அறிகுறிகள் தென்படுகிறது. விஷ்ணுபுரத்தின் கோயிலைச் சுற்றி ஓடும் சோனா நதியில் மீன்கள் செத்துமிதக்கின்றன; எங்கிருந்தோ பறவைகள் வந்து கோவிலில் முட்டிச் சாகின்றன. பழங்குடிகளில் சிலர் மட்டும், குறத்தியான நீலி வழிகாட்ட, பிழைக்கிறார்கள். குறத்தியான நீலி பேருருவம் கொண்டு சோனாவில் பெருவெள்ளமாக மாறி விஷ்ணுபுரத்தை அழிக்கிறாள். பெருமூப்பன் புரண்டு படுக்கிறார்.  

    யுகம் முடிவுக்கு வந்தது. அடுத்த யுகம் தோன்றும்போது, விஷ்ணு மீண்டும் குழந்தையாக ஆலிலையில் மிதக்கிறார் என்று விஷ்ணுபுரக் கதையை சொல்லும் பாணன் பாடுகிறான். 

    **********************

    **********************

    விஷ்ணுபுரம் – வரலாறு

    ——————————

    “வரலாறு என்பதே காவியம் உருவாக்குவதுதானே” – கோபிலபட்டர்

    நம்மை ஆண்டுகொண்டிருக்கும் கழக ஆட்சியாளர்களின் துதிபாடிகள் அவர்களைப் பற்றி மிகையாகப் புகழ்கிறார்கள்.  சில நூற்றாண்டுகள் கழித்து நம் எதிர்கால சந்ததியினர் இந்தத்  துதிகளைப் படித்து இவர்களை தமிழினம் காத்த தாரகை என்றும், செம்மொழி காத்த வீரன் என்றும் நினைத்தால் ? நினைத்தாலே சிரிப்பாக இல்லை?.. சரி, இதே லாஜிக்கின்படி, நாம் நம்மை ஆண்ட மன்னர்களைப் பற்றியும், புராணங்களைப் பற்றியும் யோசித்தால் ?..ஆழமான அதிர்ச்சி ஏற்படுகிறது.     (நன்றி : நாஞ்சில் நாடன்). [ “இல்ல, அப்படி இல்ல.. நாம லெமூரியாவுல..” ] 

    இந்தியா, புராணங்களின் விளை நிலம். எத்தனை கோடி கடவுள்கள் நம்மிடையே உண்டோ அத்தனை கோடி புராணங்கள், தொன்மங்கள் (Myth) உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவை திரைக்காவியங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்து நம் மனதை கொள்ளைகொண்டன. பின்னர், அவற்றில் நடித்தவர்கள் அரசியல்வாதிகளாக வந்து நம் கஜானாவை கொள்ளைகொண்டார்கள்.  புராணங்கள் கடவுளால் அருளப்பட்டது, அவை ஆராய்ச்சிக்கு உரிவை அல்ல, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு தரப்பு. புராணம் எல்லாம் வெறும் கட்டுக்கதை, பிராமண தந்திரம், இவற்றையெல்லாம் அழித்தால்தான் நமக்கு விடிவு என்று இன்னோரு தரப்பு. இவைகளுக்குள் ஓயாத சண்டை. (அதுவே ஒரு தனி காவியம்). இந்த இரண்டிற்கும் மாற்றாக, நம் வரலாறை தொன்மங்களைக் கொண்டு ஆராயலாம் என்றார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். டிடி கோசம்பி, மார்க்ஸிய முரணியக்கத்தை அடிப்படையாக வைத்து தொன்மங்களை ஆராய்ந்து இந்திய வரலாறை பற்றி எழுதிய நூல்கள் முக்கியமானவை. ( youtube-இல் ஒரு டாக்குமெண்டரி இருந்தது..தற்போது காணவில்லை). ஆனால் மார்க்ஸிய முரணியக்கத்தின் வரலாற்றுப் பார்வை முழுமையான பார்வை அல்ல, அதனால் சமூக பொருளியல் கட்டுமானத்தை விளக்கமுடியுமே தவிர, காந்தி போன்ற தனிமனிதரின் சிந்தனைகள், சமூகத்தின் கூட்டுமனத்தின் மேல் செலுத்திய ஆதிக்கம், அதன் மூலம் சமூகம் அடைந்த மாற்றம் போன்றவற்றை விளக்கமுடியாது என்கிறார்கள் அறிஞர்கள். எது எப்படியோ, ஐதீகங்களை ஆராயவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

    வரலாற்று ஆய்வாளர்களுக்கு இனையாக இலக்கியவாதிகளும் இந்தத் கருவில் கதைகள், நாவல்கள் படைத்துள்ளார்கள். நவீனத் தமிழ் இலக்கியத்தில் புதுமைப்பித்தன் எழுதிய கபாடபுரம் அதில் முதல் முயற்சி. (கபாடபுரம் – http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D ). அதர்மம் அதிகரிக்கும்போது, ஈசன் சினங்கொள்வான், நெற்றிக்கண்ணைத் திறப்பான், உலகம் அழிந்து மீண்டும் பிறக்கும் என்ற தொன்மத்தை மையப்படுத்தி எழுதியது கபாடபுரம். அக்கதையில், இயற்கையே கடவுளாக, ஒரு எரிமலையை பிறைசூடியாக உருவகிக்கிறார். கடல் கொண்ட பழந்தமிழகத்தின் வரலாறு மட்டுமல்லாது தத்துவத் தளத்தையும் தொடுகிறது கபாடபுரம். விஷ்ணுபுரம், புதுமைப்பித்தன் எழுதிய கபாடபுரத்தின் நீட்சி என்கிறார் ஜெயமோகன். உண்மைதான். கபாடபுரம் தொட்டுக்காட்டும் புள்ளிகளை இனைத்து விஷ்ணுபுரமென மிக விரிவான சித்திரமொன்றை வரைந்திருக்கிறார். கபாடபுரத்திற்கும் (1945) விஷ்ணுபுரத்திற்கும் (1997) ஐம்பதாண்டு காலம் இடைவெளி உள்ளது. எனக்குத் தெரிந்து, வேறுயாரும் இந்தக் கருவில் நாவல் எழுதவில்லை. யதார்த்தவாத கதை சொல்லும் முறை ஓங்கியிருந்த காலம் என்பதால் வேறு யாரும் முயற்சி செய்யவில்லை என்று நினைக்கிறேன். 

    யுகத்துக்கு ஒருமுறை விஷ்ணு புரண்டுபடுப்பார் என்ற தொன்மத்தை வைத்து எழுதப்பட்டது இந்நாவல். நாவலில், யுகம் எப்போது துவங்கியது என்று தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால், முடிவு, பதிநாண்காம் நூற்றாண்டு (கான் படையெடுப்புக்குப்பின் அதிகபட்சம் நூறாண்டுகள்) என்று வருகிறது. ஒரு யுகம் என்று இந்தக் காலத்தை ஏன் உருவகித்தார் ஆசிரியர் ? ஒரு யுகம் என்பது இங்கு எதன் குறியீடு ? நிலப்பிரபுத்துவத்தின் காலம் என்றால் இருபதாம் நூற்றாண்டுவரை வந்திருக்கவேண்டும். என் யூகம், (*) இந்திய நிலமெங்கும் கீழை மதங்கள் தம் தனிப்பெரும் செல்வாக்கை இழந்த காலகட்டம். (*) சொல்லால் நிலைநின்ற ஆட்சிபோய், வேலால் மட்டுமே நிலைநின்ற ஆட்சி மாற்றத்தின் குறியீடு (*) தத்துவ யுகம் முடிந்து விஞ்ஞான யுகத்தின் துவக்கம், போன்ற காரணங்கள் இருந்தாலும்,  “மாற்றுத்தரப்பு சிந்தனைகளோடு உரையாடிய தளம் இல்லாமலாவதன் குறியீடு ; கொண்டும் கொடுத்தும் சிந்தனைகள் வளர்ந்த சூழ்நிலை அழிந்து, இந்தியச் சிந்தனைகள் தேக்கமுறுவதன் குறியீடு” என்றே எண்ணுகிறேன்.  நாவலின் நீட்சியாக நாம் அடுத்த யுகமாக எந்தக்காலத்தை கருதுவது ? ஆலிலையில் மீண்டும் பிறக்கும் விஷ்ணு மீண்டும் எப்போது புரண்டு படுப்பார் ?  (இல்லை புரண்டு படித்துவிட்டாரா?)

    விஷ்ணுபுரம் அளவிற்கு தொன்மங்கள், புராணங்கள் உருவாகும் விதம், காலப்போக்கில் அவை அடையும் மாற்றம் போன்றவற்றை நம்பகத்தன்மையோடு சித்தரிக்கும் வேறோரு இந்திய நாவல் இல்லை. நாவலின் மிகப்பெரிய பலம் இது. பத்மாட்சி யட்சி உருவாவது போலவே, கொன்றைவனத்தம்மனும் உருவாகிறாள். (அதுவும் கொன்றைவனத்தம்மன் உருவான புராணம் பற்றி சாத்தனுக்கு அவன் தந்தை சொல்வது, கி.ரா.வின் கோபல்ல கிராமத்தில் வரும் புராணகதையின் சாயல் கொண்டது. இதுபோலவே நானும் சில கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். template மாறாது போல).

    கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற கற்பனாவாத நாவல்களால், தமிழக வாசகர் மனதில், தமிழ் மன்னர்கள், சந்தனக்காப்பு அலங்காரங்களுடன் அமர்ந்திருக்கிறார்கள். விஷ்ணுபுரத்தில் வரும் பாண்டிய மன்னனின் சித்தரிப்பு மூலம், ஜெயமோகன், கருவறை புகுந்து, சந்தனக்காப்பு விக்ரகங்களை வெளியில் தூக்கிப்போட்டு உடைக்கிறார். இது தேவையான ஒன்றுதான்.இது புனைவு என்பவர்கள், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’ படிக்க வேண்டுகிறேன். நிலபிரபுத்துவ அறத்தை இப்போதைய மக்களாட்சி அறத்தோடு ஒப்பிடக் கூடாதுதான்,  இருந்தாலும், நல்ல குரு அமையாத மன்னர்கள், கொடும் சர்வாதிகாரிகள் என்பதை மறக்க வேண்டாம். [இன்றைய ஜெயமோகன் ஃபேமஸ்.. 1997 ஜெயமோகன் அப்படி இல்லையே… தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதவர்கள்தானே நாம்..தமிழ் வேறு பாண்டியன் வேறா ?..இதை எழுதியதற்கு, எப்படி அடிவாங்காமல் தப்பித்தார் என்றே தெரியவில்லை :-)..அது சரி, இது புனைவுதானே :-). ]. 

    நாவலில், நரோபா என்ற திபேத்திய பௌத்தர் விஷ்ணுபுரத்திற்கு வந்து மூலநூல்களை மொழிபெயர்க்கிறார். பின்னாளில், யோகவிரதர், நரோபாவின் நூல்களிலிருந்து விஷ்ணுபுரத்தைப் பற்றியும், தத்துவங்களையும் தெரிந்துகொள்கிறார். நரோபா கிட்டத்தட்ட ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியா வந்த சுவான்சாங்(யுவான் சுவாங்) தான். அவர் கொண்டுசென்றதின் மொழியாக்கத்திலிருந்து நாம் பலவற்றை மீட்டெடுத்தோம். வெள்ளையர்கள் எழுதிய இந்திய வரலாறு தவிர, நாம் இன்னும் நம் வரலாறை எழுதவே இல்லை என்றே நினைக்கிறேன். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களை, அதன் சமகால சீன, திபேத்திய, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் காப்பியங்களோடு ஒப்பிட்டும், முக்கியமாக நம் தொன்மங்களை அவர்களின் தொன்மங்களோடு ஒப்பிட்டும் ஆராய்ந்தால் மேலுன் பல திறப்புகள் கிடைக்கலாம். 

    விஷ்ணுபுரம் – தத்துவம் –  [இந்தப் பகுதியை எழுத எனக்குப் போதாமைகள் பல உண்டு..தெரிந்தவரை எழுதுகிறேன்].

    ——————————

    “நிறுவப்படும் தோறும் உண்மை பொய்யாகிறது. நிறுவப்படாத உண்மையை யாரும் அறிவதில்லை”  – விஷ்ணுபுரத்தில் யாரோ.

     மார்க்ஸிய தத்துவங்களின் தாக்கம் நாவலில் நிறையவே இருக்கிறது. 1. “இந்த நகரம் மாற்றங்களை வெறுக்கிறது. எல்லா மாற்றங்களையும் அது ஐதீகங்களாக மாற்றி தன்னுள் இழுத்துக்கொள்ளும்”, 2. தந்திர சமுச்சயம் விஷ்ணு வேறு, நாராயணன் வேறு என்கிறது, 3. காட்டில் செங்கழல் கொற்றவையாக இருக்கும் தாய் தெய்வம், நிலத்திற்கு வரும்போது பத்தினித் தெய்வமாகிறது, 4.”உள்ளூர் பண்டிதர்கள் , ஞானம் என்றால் வைகைக் கரை நானல் போல என்று நினைத்துக் கொள்கிறார்கள். பார்த்தான் பாண்டியன், அக்னிதத்தனை குலகுருவாக ஏற்று, விஷ்ணுபுரத்தை கட்ட ஆனையிட்டு, மற்ற பாண்டியர்களின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டான்”.. தன் இனையதளத்தில் விரிவாகவே இதைப் பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர். இந்துமதம் போன்ற தொன்மையான மதங்களை ஆய்வதற்கு நம்மிடையே இருக்கும் சிறந்த கருவி மார்க்ஸிய முரணியக்கம் என்கிறார்.  ஒரே நேரத்தில் விஷ்ணுபுரத்தை ஹிந்துத்துவ நூல் என்றும், மார்க்ஸிய நூல் என்றும் சொல்கிறார்கள். (அரவிந்தன் நீலகண்டன், விஷ்ணுபுரத்தில் சேவைசாதிப்பது, விஷ்ணுவோ, ததாதகரோ, பெருமூப்பனோ இல்லை, அது மார்க்ஸ் என்கிறார் 🙂 ). ஆனால், நாவலின் மையம் தாந்திர சமுச்சையம் சொல்லும் ‘செய்தி’ அல்ல. ஒரு முனையில், எல்லாம் வல்ல பரம்பொருளோ, அறியவேமுடியாத இருள்சூழ்ந்த சூன்யமோ, ஏதோ ஒன்று இருக்கிறது. மறுமுனையிலிருந்து அதை அறிவதற்கு விட்டில் பூச்சிகள் போல, மனிதர்கள் கிளம்பி வந்துகொண்டே இருக்கிறார்கள். யுக யுகமாக தொடரும் இந்தப் பயணத்தை அள்ள முயலும் நாவலே விஷ்ணுபுரம். 

    விஷ்ணுபுரம் ஒரு தத்துவ நூலும் கூட. முதல் பகுதியில் வரும் பிங்கலன் – சிரவணமகாபிரபு , பிங்கலன் – சாருகேசி, சங்கர்ஷணன் – பத்மாட்சி உரையாடல்களும், நாவலின் இரண்டாம் பகுதியும் தத்துவச்செறிவு நிறைந்தவை. விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரம் சாமானியர்களின் கண்களுக்கு முப்பது அடுக்குகளுக்கு மேல் தெரிவதில்லை. ராஜகோபுரத்தின் மேல் ஏறியவர்கள் யாரும் திரும்பி வருவதில்லை. விஷ்ணுபுரத்திலே, சுடுகாட்டுச்சித்தன் மட்டும்தான் ராஜகோபுரம் மேல் ஏறி இறங்கியவன். விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரத்தை மனிதன் கண்டடைந்த ஞானம் என்று உருவகித்தால், கோபுரத்தின் பின்னால் உள்ள ஹரிதுங்கா மலையை ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக உருவகிக்கலாம். ஒருவேளை, சித்தன் ராஜகோபுரத்தின் மீதேறி, ஹரிதுங்காவைக் கண்டதால்தான், கோபுரத்திலிருந்து இறங்கி வந்தவுடன் ஞானநூல்களை எரித்துவிட்டானோ ?  

    வைதீக மரபை உயர்த்தியோ, பௌத்தத்தை உயர்த்தியோ நாவல் பேசவில்லை. மொத்த நாவலில், சித்தனும், நீலியும் மட்டுமே மிஞ்சுகிறார்கள். அனைத்தையும் கற்று, அனைத்தையும் உதறி, சூன்யத்தை உணர்ந்தவன் சித்தனென்றால், செங்கழல்கொற்றவையின் பேருருவம் கொள்பவள் நீலி. ஜெயமோகனின் கதைப்புலத்தில் நீலிக்கும் சித்தனுக்கும் தனி இடமுண்டு. காடு, விஷ்ணுபுரம், கொற்றவை, என்னற்ற சிறுகதைகளில் வரும் பெண் தெய்வமாக நீலியும், ஏழாம் உலகம் மற்றும் விஷ்ணுபுரத்தில் சித்தனும் அவர் நாவல்களைப் பினைக்கும் சங்கிலி என மீளமீள வருகிறார்கள். (நான் காந்தியை பித்தனாகக் கருதுவதால் சித்தன் வரிசையில் இன்றைய காந்தியையும் சேர்த்துக்கொள்வேன்). 

    இன்னொன்றையும் கவனித்தேன்..விஷ்ணுபுரத்தில் வரும் சில வரிகளைக்கூட சாராம்சமாகக் கொண்டு தன் தளத்தில் விரிவான கட்டுரைகள் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். ஒரு வகையில் அவர் மீளமீள விஷ்ணுபுரத்தைத்தான் தன் கட்டுரைகளில், கதைகளில் வேவ்வேறு வடிவங்களில் எழுதுகிறார். பேரிலக்கியவாதிகளும் அதைத்தான் செய்தார்களா ?. என்னால், தர்க்கத்தை விடவும் முடியவில்லை, அதேசமயம் தர்க்கத்தை தாண்டிய ஏதோ ஒன்று உள்ளது என்றும் அகம் இடைவிடாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இருவது வயதில் எல்லோரும் தேடுகிறார்கள், நாற்பது வயதில் கண்டடைகிறார்கள் என்று இந்நாவலில் ஒரு வரிவேறு வருகிறது!! ). (ஆர்.வி, தத்துவ விவாதெமெல்லாம் தியரிடிக்கல் எக்ஸைஸ் என்கிறார் :-)).  

    அறிய முடியாமை (சூன்யம்) என்பதை எப்படி பதிலாக ஏற்க முடியும் ? அடுத்தவேளை உணவில்லையென்றால் ஞானத்தை பற்றியெல்லாம் யோசிப்போமா? என்றெல்லாம் யோசித்தாலும், இதுவரை பொருளாதார ரீதியாக அடைந்தவற்றில் சிறிதைக்கூட துறக்கத் தயாரில்லாமல் ‘அறிவது’ என்பதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கே எந்தத் தகுதியும் இல்லை என்று உணர்ந்து என் மனம் சிறுமைகொள்கிறது. இலக்கியம், அறிதல் என்றெல்லாம் பேசினாலும், ஆழ்மனதில், என் ஊழ், பொருள் ஈட்டுவதுதான் என்று அறிந்தே இருக்கிறேன். நாளை, ஒருவேளை பெரும் பணம் ஈட்டினால், புண்ணியம் / மறுபிறவி என்றெல்லாம் யோசித்து, எந்த மடத்திற்கோ, மடாதிபதிக்கோ, கோவிலுக்கோ ஒரு பைசா கொடுக்கப்போவதில்லை. ஏனோ, விஷ்ணுபுரம், இந்தக் கருத்தை என்னுள் வலுப்படுத்துகிறது.

    விஷ்ணுபுரம் – கவித்துவம், காவிய மரபு

    ———————————————-

    “வெண்பனி படர்ந்த இமயமலைச் சிகரங்களை கண்டபோது, விஷ்ணுவின் விஸ்வரூபத்தைக் கண்டேன்” – சங்கர்ஷணன்.

    சிந்தனைகளில் கணிதம், நியாயம் (லாஜிக்) ஒரு முனை என்றால், கவிதை அதற்கு நேரெதிர் முனை. எதையும் தர்க்கரீதியாக ஆராயும் கணித மூளை உடையவர்களுக்கு, கவிதைகள் என்றுமே எட்டாக்கனி. மேலும் லாஜிக்கை ஒருவர் விளக்கி நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் கவித்துவத்தை விளக்கிப் புரிய வைக்க முடியாது, அது உணரப்பட வேண்டும் என்கிறார்கள். எனக்கு கவிதைகள் இப்போதைக்கு புரியாது. விஷ்ணுபுர நாவலில் உள்ள கவித்துவத்தை கவிஞர்கள் யாராவது விளக்குவதுதான் சரியாக இருக்கும். இருப்பினும், காலத்தையும், இருப்பையும் பற்றிய கவிதையில் உள்ள இந்த வரிகள் அபாரமான மனக்காட்சியை அளிக்கிறது.

    “…..

    ஓய்வெனும் மரணம்

    இரவெனும் இடைவெளி

    ஒருநூறு பாதங்கள் ஊன்றி

    வானாகிக் கவிழ்ந்து

    வெளியில் தலைதூக்கி

    எண்ணற்ற முலைநுனிகளால்

    அமுதூட்டும் கருணை.  

    …….”   

    தோத்திரப் பாடல்கள், வேதப் பாடல்கள், சித்தர் பாடல், பழங்குடிப் பாடல் என பல பாடல்கள், கவிதைகள் நாவலில் வருகின்றன. 

    *******

    இந்திய காவிய மரபின் வளமைகள் அனைத்தையும் உள்வாங்கி எழுதப்பட்டது இந்த நாவல் என்கிறார் ஆசிரியர். இந்திய காவிய மரபைப் பற்றியெல்லாம் எனக்கு இப்போதைக்கு ஒன்றும் தெரியாது. அதனால் இந்தப் பகுதி ‘skip’.

    விஷ்ணுபுரம் – மாயா யதார்த்தவாதம்

    ————————————————–

    நவீன இலக்கியத்தில், யதார்த்தவாத கதை சொல்லும் முறைக்கு மாற்றாக, மாயா யதார்த்தவாதத்தை லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தியதாக அறியபடுகிறார்கள். காப்ரியேல் கார்ஸிய மார்குயஸ் எழுதிய ‘One Hundred Years of Solitude’ அதில் புகழ் பெற்றது. ஆனால், லத்தீன் அமெரிக்காவில் மாயா யதார்த்தவாதம் அறிமுகம் ஆவதற்கு கால் நூற்றாண்டு முன்னரே, வங்க எழுத்தாளர் அதீன் பந்த்யோபாத்யாய, தன் ‘நீலகண்ட பறவையைத் தேடி’ நாவலில் அந்த உத்திகளை பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார் ஜெயமோகன். (கண்ணீரைப் பின்தொடர்தல் – http://www.jeyamohan.in/?p=185 ). அதிலிருந்து, 

    “காட்சி சார்ந்த நுட்பம் மூலம் மாயத்தை நிஜமாக்குவது மாய யதார்த்த ஆசிரியர்களின் பாணி. அதீன் அதை திறம்படச்செய்கிறார். பைத்தியக்கார பாபு கடைசியில் நாணல்பூக்கள் வெண்பனி போல கொட்டும் நிலப்பரப்பை அடைகிறார். அங்கு வருகிறது மதம் கொண்ட யானை. அதன் மீது நாணல்மலர்கள் கொட்டி அது இந்திரனின் வெண்ணிற யானை போல இருக்கிறது. பைத்தியக்கார பாபு அதன் மீது ஆரோகணித்துக் கொள்கிறார். ” Still still to hear her tender-taken breath and to live ever or else swoon to death ! death ! death !” மரணம் மரணம் என்று சொன்னபடியே வெள்ளையானை மீதேறிய தேவன் காட்டுக்குள் சென்று மறைகிறார். மீண்டுவரவேயில்லை.”

    ஹெர்மான் ஹெஸ்ஸி எழுதிய சித்தார்த்தா ‘மானுடத் தேடல்’ என்ற கருவில் எழுதப்பட்ட யதார்த்தவாதபானிக் கதை. யதார்த்தவாத பானியினாலேயே, என்னால் அக்கதையில் ஒன்ற முடியவில்லை. இரண்டாவது முறை படிக்க முயற்சி செய்து, மூடி வைத்துவிட்டேன். ( ஜெயமோகனை படித்ததால் எனக்கு இருக்கும் இன்னோரு பிரச்சனை, யதார்த்தவாத கதைகளில் நுழைய முடியாமை. கோபல்ல கிராமம், பதினெட்டாம் அட்சக்கோடு போன்றவற்றை ஏன் சிறந்த நாவல் என்று சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை. எனக்கு இந்நாவல்கள் பின்பு எப்போதாவது திறக்கலாம்.)  

    விஷ்ணுபுரம் போன்ற, யுகயுகமாக முடிவின்றி ஓயாது சுழன்றலையும் மானுடத் தேடலை அள்ள முயலும் நாவலை, யதார்த்தவாத பாணியில் எழுதியிருந்தால் சொதப்பியிருக்கும். நாவலில் வரும் மாயா யதார்த்தவாத கூறுகள் வாசகனை நாவலில் ஒன்றச்செய்கின்றன; வாசிப்பு அனுபவத்தை பலமடங்கு உயர்த்துகின்றன.  நாவலில் வரும் மா.யதா.திற்கு  சில உதாரணங்கள் : ஞானத் தேடலின் அதிதேவதையாக வரும் பச்சை நிற பார்வை கொண்ட மிருகநயனி, மரணத்தின் குறீயீடாக வரும் கரிய நாய், ஞான சபை விவாதத்தின் போது, ஞானஸ்தம்பத்தில் ஒவ்வொன்றாக எரியும் சுடர், வெற்றியை அறிவிக்க வரும் கிருஷ்னப் பருந்து, சித்திரைக்கு பத்தினித்தெய்வம் கொடுக்கும் செஞ்சுடர்..சொல்லிக்கொண்டே போகலாம்.

    அதேசமயம் பத்மாட்சி அக்னிப்பரிட்சையில் ‘வெல்வதை’ யதார்த்தவாதமாக (தந்திரமாக) சித்தரிக்கும் ஆசிரியர், அஜிதன் ஞானவிவாதங்களில் வெல்வதை மாய யதார்த்தவாதமாக சித்தரிப்பது நாம் வாசிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. 

    கார்ஸியாவின் நூறாண்டுகாலத் தனிமைக்கும், விஷ்ணுபுரத்திற்கும் மேலோட்டமாக சில ஒற்றுமைகள் உள்ளது. அந்த நாவலிலும், ஒரு ஊர் (மாசாண்டோ) தோன்றி அழிவதின் சித்திரம் உள்ளது. மாசாண்டோவின் கதை, பூயந்தியா என்ற கொலம்பியக் குடும்பத்தின் ஆறு தலைமுறைகளின் கதை. மேலும் கார்ஸியாவின் நாவலில், மாசாண்டோவின் அழிவைப் பற்றி கடைசியில் மெல்சியாடஸ் எழுதி வைத்த சமஸ்கிருத குறிப்பை (ஜோசியம் ?) படிக்கும் போதுதான் தெரிகிறது.  மீண்டும் மாசாண்டோவோ, புயந்தியாக்களோ பிறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால், நூறாண்டுகளை தனிமையில் கழித்தவர்களுக்கு மண்ணில் வாழ மீண்டுமொரு வாய்ப்பில்லை.. கடவுள் அவர்களை தண்டித்துவிட்டார் என்கிறார் கார்ஸியா. இது ஓரளவு கிறித்தவ விழுமியம் சார்ந்த நோக்கு. விஷ்ணுபுரத்தில் பிரளயத்தை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. பலமுறை விஷ்ணுபுரம் தோன்றி அழிந்துள்ளதாக கதைகள், காவியங்கள் கூறுகின்றன. விஷ்ணுபுரம் கீழை மரபின் தரிசனங்களை ஒட்டியே எழுதப்பட்டுள்ளது.  வடிவ ஒப்புமையில் ‘நூற்றாண்டுகாலத் தனிமை’, தமிழ் நாவல்களில் பி.ஏ.கிருஷ்ணனின் ‘புலி நகக் கொன்றை’யுடன் தான் பெரிதும் ஒத்திருக்கிறது. (அதுவும் வடிவத்தில் மட்டும்தான்.. உள்ளடக்கத்திலோ, பேசு பொருளிலோ இல்லை).

    விஷ்ணுபுரம் – மொழி

    —————————-

    உண்மையில் இந்த நாவலை பெரும்பகுதி சமஸ்கிருதத்திலும், மீதி தமிழிலும் எழுதியிருக்க வேண்டும். பெயர்கள்கூட கதை நிகழும் இடங்களுக்கு ஏற்ப சமஸ்கிருதத்திலும், தமிழிலும் மாறிமாறி வருகிறது.  (உதாரணம் : விஷ்ணுபுரம் – அகல்வள நாடு ; ஹரிதுங்கா – பசுங்குன்றம் ; பிரியதாரா – முத்தாறு; அக்னிதத்தன் – செந்தலைப் பட்டன் ; வராகபிருஷ்டம் – பன்றிமலை; கஜபிருஷ்டம் – ஆனைக்கண்டி).

    எல்லா காலத்திலும் விஷ்ணுபுரத்தின் அதிகார மொழியாக இருப்பது சம்ஸ்கிருதமே. ஞான விவாத சபையில் நரோபா உட்பட சமஸ்கிருதம்தான் பேசுகிறார்கள்.  விஷ்ணுபுரத்தின் மறவர் குடிகளும், காணியக்காரர்களும் தமிழ் பெயருள்ளவர்கள், மற்றவர்கள் சமஸ்கிருதப்பெயருள்ளவர்கள். பழங்குடிகள் தமிழ் பேசுகிறார்கள். 

    அக்னிதத்தன் வட தேசத்தில் எங்கிருந்தோ வந்தவன் என்று விஷ்ணுபுரம் சொல்கிறது. கிட்டத்தட்ட நாவலிலே விஷ்ணுபுரத்தைப் பற்றிய நான்கு தோற்றக்கதைகள் வருகின்றது..நான்கிலுமே, அக்னிதத்தன் வடதேசமென்றும், பாண்டியன் தென்னவன் என்றும் சொல்கிறார்கள்..தோற்றக் கதைகள் வெறும் கதைகள் மட்டுமல்ல, ஒவ்வொன்றும் ஒவ்வொரு தியரி. ( “தென்னவன் தன் அதிகாரத்திற்காக அக்னிதத்தனை உபயோகித்துக்கொண்டான்” – சிற்பி , “செந்தலையன் பூசைகள் போட்டு பெருமூப்பனை கட்டிவைத்துள்ளான்” – மூப்பன், “பாண்டியன் மிலேச்சன். அவன் ஷத்திரியனானது யமஸ்மிருதி மூலம்” – பட்டர், “சமணக் குடும்பங்களிலிருந்து வைணவத்திற்கு மாறியவர்கள், வடமொழிக்கு உடன்பட மறுத்துவிட்டார்களாம். தனி கோயில் கட்டிக்கொண்டார்களாம்..ஏன் நமக்கு அந்த கலை வராதோ ?” – பீதாம்பரம் ).. இதுபற்றி, நாவலில் மேலும் படித்து தெரிந்துகொள்க..இங்கே எழுத இடம் போதாது. நாவலில் ஆரிய – திராவிட இனங்கள் , மொழிகள் பற்றி நிறைய புனைவு உண்மைகளை ஆசிரியர் எழுதியுள்ளார். அவை உண்மையாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ( அதாவது, ஆரிய – திராவிட என இரு இனங்கள் கலந்தனவேதவிர .. ஆரிய – திராவிட ஆக்ரமிப்பெல்லாம் இல்லை..ஒன்றோடொன்று உரையாடுகிறது..அதிகாரத் தேவைகளுக்காக ஒன்றை ஒன்று ஏற்கிறது..கொண்டும் கொடுத்தும் வளர்கிறது..)

    இங்கேயே ஒன்றை சொல்லிவிடுகிறேன்..நாவல், சமஸ்கிருதத்தையோ, தமிழையோ உயர்த்திப்பேசவில்லை..எல்லாமும் வெறும் அதிகார ஆட்டமாகிப்போகிறது. உதாரணம் :  சூர்யதத்தரை அவமதிக்க, பாண்டியனின் அவைப்புலவரும், தமிழ் புலவருமான ஆலாலசுந்தரர் கோபிலபட்டரின் சமஸ்கிருதக்காப்பியத்தை அரங்கேற்ற உதவுகிறார்.

    விஷ்ணுபுரம் – கதை மாந்தர்கள் 

    ——————————————

    விஷ்ணுபுரத்தில் இருநூறு கதை மாந்தர்களாவது வருகிறார்கள். ஒவ்வொருவரும், அவர்கள் சில பக்கங்களே வந்தாலும், மிக நுண்மையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் யுகங்கள் தாண்டி வேறு பெயர்களில் மீண்டும் வருகிறார்கள். (மறுபிறவி ? ). அதுபோலவே காட்சிகளும் ஒரு திரைப்படம் போல மிக விரிவாக சித்தரிக்கட்டிருக்கின்றன. ( * பதின்ம வயதுடைய சித்திரை தண்ணீரில் இறங்கும் பொழுது அவளுக்கு சிலிர்க்கிறது, புல்லரிக்கிறது. ஆனால், அவள் தாத்தா நிதானமாக நீர் அருகே வந்து இறங்குகிறார். * கதையில் வரும் கண்டாமணி, முதல் பகுதியின் ஆரம்பத்தில் ஓங்காரமிடுகிறது, அதன் இறுதியில் டங்காரமிடுகிறது..கடைசி பகுதியில் விளிம்புகள் உடந்து சுரீலென்கிறது..)

    முதல் பகுதியில் வரும் கதைமாந்தர்கள் கடைசி பகுதியில் தொன்மங்களாக வருகிறார்கள். (பிரம்மராயர், சித்திரை…) ; இரண்டாம் பகுதியில் வரும் கதை மாந்தர்கள் முதல் பகுதியில் தொன்மங்களாகவும், மூன்றாம் பகுதியில் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிடுகிறார்கள். (அஜிதன்) ; கவனமாகப் படித்தாலன்றி, இவைகளை நாம் தொடரமுடியாது. கதைமாந்தர்கள் மட்டுமல்ல நிகழ்வுகளும் அந்தந்த காலத்திற்கேற்ப திரிபடைகின்றன. நாவலின் முதல் பகுதியில், தத்துவத் தளத்திற்கு நிகராகவே காமமும் நிறைந்திருக்கிறது. பெரும் அலைக்கழிப்பிற்கும் , ஏமாற்றத்திற்கும் உள்ளானவர்கள் கணிகையரிடமே தஞ்சமடைகிறார்கள். திருவிழா முடிந்தபின் தெருவெங்கும் காமம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

    இரண்டாம் பகுதியில் ஏன் பெண் கதாப்பாத்திரங்கள் யாரும் வருவதில்லை ?

    அடுத்தமுறை விஷ்ணுபுரத்தை படிக்கும்போது, கதை மாந்தர்களை ஒட்டி வாசிக்கவேண்டும். வெகு சிலரைப்பற்றி மட்டும் சொல்கிறேன் .சங்கர்ஷணன் சில இடங்களில் ஆசிரியரின் குரலாகவே ஒலிக்கிறான். (தான் ஏன் காவியம் படைக்க வந்தேன்..என்று அவன் விளக்கும் இடங்கள்.)  லட்சுமி தன் மகன் அனிருத்தன் இறந்தபின் அடையும் வெறுமைகளையும், சங்கர்ஷணனின் மேல் அடையும் வெறுப்பையும், பின் பிங்கலனில் அனிருத்தனைக் கண்டடையும் தருணத்தையும் உளவியல் ரீதியாக ஆராயவேண்டும் என நினைக்கிறேன். (ஃபிராய்டிய நெடி ? இல்லை யோகமரபு சொல்லும் ஆழ்மனதின் காரிருள்?). ஏழாம் உலகம் நாவலின் முடிவில்வரும் ‘ஒத்த விரலு’ காட்சியையும், காடு நாவலில், கிரிதரனின் தாய் அவன் வளர்ந்துவிட்டான் என்று உணர்த்தும் தருணமும், லட்சுமி – பிங்கலனோடு ஒப்பிடத்தக்கது..ஆனால், மற்ற இரண்டு நாவல்களின் தருணங்களையும்விட இது மிகத் தீவிரமானது.  

    இந்நாவலில் வரும் ஜாதிகள் பற்றி சில வார்த்தைகள் சொல்லவேண்டும். “சூர்யதத்தரோட சித்தரிப்பு..ஞான விவாதங்களில் பங்கேற்கும் அளவிற்கு அறிவுவிருக்கறவங்கள, சோத்துக்கு அடிச்சிக்கறது போல சித்தரிப்பது..” போன்றவற்றை காரணம் காட்டி, விஷ்ணுபுரம் அய்யர்களை கிண்டலடிக்கிறது என்றார் என் நண்பர். (அவர் பாலக்காடு ஐய்யர்). திட்டிக்கொண்டே, நாவலை படித்துமுடித்துவிட்டார். இவராவது நாவலை படித்துவிட்டு திட்டினார். இன்னொருவர், நாவலை படிக்கவேயில்லை..நான் சொன்ன கதைகளை வைத்தே, ‘ஒரு ‘வந்தேறி’ எப்படி தமிழர்களக் கேவலப்படுத்தலாம்னு கேக்காம, இதுமாதிரி  ‘புல்லுருவிகள்’ தலைல தூக்கிவச்சி ஆடுதுங்க.”.. என்று எனக்கும் வசை விழுந்தது. ஆமாம், பிராமணர்களை மட்டுமல்ல, ஆழ்வார்கள், மறக்குலம், பௌத்தர்கள், வணிக குலங்கள், பழங்குடிகள் என்று ஒருவரும் ஜெயமோகனின் அங்கதத்திலிருந்து தப்பவில்லை. (சுஜாதா, திருவடியின் சித்தரிப்பை படித்துவிட்டு, மேலும் நாவலை படிக்க மறுத்துவிட்டார் என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியதாக ஞாபகம்.) இதை எழுதத்தேவையில்லை, இருந்தாலும் சொல்கிறேன். நான் பிராமணனோ, ‘வந்தேறி’யோ இல்லை. ‘அசல்’ தமிழன்தான் :-). இப்போதய தேவை, குல, ஜாதி அடிப்படையிலெல்லாம் பார்க்காமல், ‘பொதிகைமலை பெருமை’ யெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, நம் வரலாறை கறாரான பார்வையுடன் ஆய்ந்துவிட்டு கடந்துசெல்லவேண்டும். விஷ்ணுபுரம், புனைவு என்ற பெயரில் இருக்கும் ஒரு வரலாற்று நூல். ( பிராமண காழ்ப்பு, வெள்ளையர்களின் ஆரிய-திராவிட ஆக்ரமிப்பு தியரி போன்றவை காலாவதியாகிவிட்டது.  தமிழின் சிறந்த படைப்பாளியை ‘வந்தேறி’ என்று சொல்லும் மனநிலையை என்ன சொல்ல ?. இருவரும் என் நண்பர்கள்தான். என்றாவது புரியும் என்று நம்புகிறேன்.)

    விஷ்ணுபுரம் – கதைக்களம் – தாய்லாந்து / கம்போடியா – ஓர் ஒப்பீடு

    —————————————————————————————– 

     விஷ்ணுபுரம் என்றொரு ஊர் இருந்தால், அது எந்த ஊராக இருக்கும்? காசியா?  ஶ்ரீரங்கமா? திருவட்டாரா? அங்கோர் வாட்டா?.. பதில் எல்லாமுந்தான். கிட்டத்தட்ட விஷ்ணுபுரம் நாவலை, இந்து / பௌத்த மதங்கள் பரவிய அனைத்து நிலங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஒரு ஒப்பீட்டிற்காக, நாவலின் கதைக்களத்தை கம்போடியாவில் பொருத்திப்பார்ப்போம். (சமீபத்தில், வரலாறில் ஆர்வமுள்ள இரு நன்பர்களுடன் கம்போடியாவிற்கு பத்து நாட்கள் சென்று வந்தேன். படங்கள் : https://picasaweb.google.com/102323202491074157394/Cambodia_Thailand?authkey=Gv1sRgCP6k6pLp0MyrVA# . அருகருகே விஷ்ணுபுரத்தையும், பின் தொடரும் நிழலின் குரலையும் நேரில் கண்டதுபோல இருந்தது.). கம்போடியா பயணம் பற்றி, நேரம் கிடைக்கும்போது விரிவான பயணக் கட்டுரையாக  எழுதிகிறேன். 

    கம்போடியாவில் பல நூற்றாண்டுகள் இந்து மதம் தழைத்திருந்தது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பௌத்தம் ஓங்கியிருக்கிறது. கம்போடியாவில் அரச அதிகாரத்தின் / மதத்தின் / தத்துவத்தளத்தின் மொழி சம்ஸ்கிருதம். மக்களின் மொழி குமெர்.  இந்து மதம் எப்படி அங்கே வந்தது ? (ஆங்கில, பிரெஞ்சு ஆய்வாளர்கள் வணிகர்களின் மூலம் வந்தது என்கிறார்கள்).  கம்போடியர்களின் தொன்மத்தின்படி, நாக வம்சத்தைச் சேர்ந்த சோமா என்ற இளவரசியும், கௌடின்யர் என்ற பிராமணனும் காதல் வயப்படுகிறார்கள்; பின்பு அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் கம்போஜதேசத்தை சேர்ந்தவர்கள். ( விஷ்ணுபுரத்தில் செம்பி- அக்னிதத்தன் கதை). அதுபோலவே, பாண்டியனுக்குப் பதில் குமெர் மன்னர்களைப் பொருத்திப்பார்த்தாலும், கதை சரியாகவே வருகிறது. 

    பாங்காக் அருங்காட்சியகத்தில் இருந்த ஒரு ஓவியத்தில், விஷ்ணு புத்தரை வணங்குகிறார். (பார்க்க படம் – picasa – 67 ). தாய்லாந்திலும், கம்போடியாவிலும் ராமர் புத்தரின் அவதாரம். தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் (ஒன்பதாம் ராமர்) ராமர் பரம்பரையைச் சேர்ந்தவர். (உண்மையிலேயே அப்படித்தான் சொன்னார்கள்). அவர்களின் முந்தைய தலைநகரம் பாங்க்காக்கிற்கு 80 கி.மீ தொலைவிலுள்ள அயுத்தாயா (அயோத்யா). அதேசமயம், இந்தியாவின் சில இடங்களில் புத்தர் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறார். இங்கு கேள்வி விஷ்ணுவா ? புத்தரா ? என்பதில்லை.. நாம் கவனிக்கவேண்டியது ஒரு மரபு ஓங்கும்பொழுது, இன்னொன்றை அழிக்கமுற்படவில்லை..தன்னுள் இழுத்துக்கொள்ளவே முற்படுகிறது. (விஷ்ணுவின் சிலைகளோ, புத்தரின் சிலைகளோ உடைக்கப்படவில்லை..அவதரமாக மாற்றிக்கொள்ளப்படுகிறது). இந்த ‘இழுத்துக்கொள்ளல்’ எவ்வாறு நடைபெறுகிறது, என்று விஷ்ணுபுரம் தெளிவாகவே விளக்குகிறது. 

    இதேபோல சோட்டா நாக்பூர் மன்னர், தங்களை நாக வம்ச ராஜபுத்திரர்கள் என்கிறார். தொன்மங்களில் நாகங்களின் அரசனான கார்கோடகனுக்கும், காசியைச் சேர்ந்த பிராமன பெண்ணுக்கும் பிறந்து, மக்களால், அரச வம்சமாக கருதப்பட்டவர்கள் அவர்கள்.  எல்லா இடங்களிலும் கதை ஒன்றுதான். மன்னர் ஷத்திரியராகி தர்மபரிபாலனம்பன்ன யமஸ்மிருதியோ, நாரதஸ்மிருதியோ இயற்றப்படுகிறது..பதிலுக்கு மன்னர் ஸ்மிருதி இயற்றிய அக்னிதத்தரையோ, ஆர்யதத்தரையோ, கௌடின்யரையோ குலகுருவாக ஏற்று கோயில் கட்டுகிறார். இதன்மூலம் பெரிய அளவில் வன்முறையின்றி குலங்கள் தொகுப்பட்டு பேரரசாகின்றன. 

    ஒருவகையில் “சிறுகுடிகளை ஒன்றினைத்து, பேரரசுகள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் தத்துவத்தின் அங்கீகாரம்; பின்பு அடைந்த அதிகாரத்தை தக்க வைக்க ஆடுப்படும் பகடையாட்டம்; இதற்கிடையில் மரணத்திற்கு பிறகென்ன ? வாழ்க்கையின் பொருளென்ன ?  என்ற கேள்வியோடு ஓயாமல் தேடுபவர்கள் கண்டடைவதென்ன ?”   என்பதே விஷ்ணுபுரத்தின் மையக்கரு.  

    முடிவுரை:

    ————-

    “அனுபவ வட்டத்திற்குள் கொண்டுவந்து யோசி”  — விஷ்ணுபுரம்

    இந்நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமல் இருப்பது படைப்பாளிகளுக்கு பொருளியல் ரீதியாகயும், அங்கீகார ரீதியாகவும் இழப்புதான்..மொழி பெயர்த்தாலும் புரியாது போகவே வாய்ப்பு அதிகம்.. ஆனால் மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும்..கன்னடர்களுக்கும், மலையாளிகளுக்கும், வங்காளிகளுக்கும் கண்டிப்பாக  புரியும். மொழி பெயர்ப்பது இருக்கட்டும்..நம்மிடையே சிறந்தவற்றை நாம் முதலில் படிக்க வேண்டும். இந்த நாவலை ஒரு ஐந்தாயிரம் பேர் படித்திருப்பார்களா என்று தெரியவில்லை..இனையத்திலும் மிகச் சிலரே விரிவாக எழுதியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின்மீது ஆர்வம் இருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நாவல் இது..சந்தேகமில்லாமல் உரக்கச் சொல்வேன்..இந்திய இலக்கியத்தில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த நாவல்களில் விஷ்ணுபுரமும் ஒன்று. (நான் படித்தவைகளில் முதன்மையானது).

    மீண்டும் ஒருமுறை விஷ்ணுபுரத்தை – அக்னி நதியோடும் (இன்னும் படிக்கவில்லை) , போரும் அமைதியோடும் (ஒருமுறை படித்திருக்கிறேன்) ஒப்பிட்டு எப்போதாவது எழுதவேண்டும்.

    *********************

    நான் படித்த பொறியியல் கல்லூரியில், நண்பர்களுக்கிடையே புத்தகங்கள் பரிமாறிக்கொள்வோம். பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்கள் தான். (ஹாரி பாட்டர், சிட்னி ஷெல்டனில் துவங்கி அயண் ராண்ட், சிக்மண்ட் ப்ராய்டு வரை) [டால்ஸ்டாய், தஸ்த்தயேவ்ஸ்கி எல்லாம் தெரியாது]. தமிழைப் பொறுத்தவரை நாவல் என்றால் பொன்னியின் செல்வன் தான். தமிழ் இலக்கியவாதிகள் யார் என்றால் கல்கி, சுஜாதா, வைரமுத்து. சிற்றிதழ்கள் என்று ஒன்று இருக்கிறதென்றே தெரியாது. கிடைப்பதையெல்லாம் படிக்கும் ஆர்வம் இருந்தாலும், தமிழில் சிறந்தவை எது என்று தெரியாது. ‘modern literature ல தமிழ்ல ஒன்னும் பெருசா இல்லைபோல’ என்று நம்பிக்கொண்டிருந்தேன். இரண்டு வருடங்களுக்குமுன், நண்பர் அருண் பரத், ஜெயமோகனின் இணைய தளத்தை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து அவர் தளத்தை படித்ததின் மூலம், மற்ற எழுத்தாளர்கள், பிற மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. ஜெயமோகன் போன்றவர்கள் இனையத்தில் எழுத ஆரம்பித்தது, எழுத்தாளர் – வாசகர் உறவில் நடந்த மிகப் பெரிய பாய்ச்சல்; தமிழ் இலக்கியத்தின் நல்லூழ். அதுவும் என்னைப்போன்ற வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு, மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டிருக்கும் இளைய தலைமுறைக்கு தவமின்றி கிடைத்த வரம். ஜெயமோகனுக்கு என் நன்றிகள்.

    ஜெயமோகனின் சொல்புதிது குழுமம் மூலமாக, சிலிக்கான் ஷெல்ஃப் வட்டத்தினர் அறிமுகமானார்கள். (ராஜன், ஆர்.வி, பக்ஸ், பாலாஜி, அருணகிரி, நித்யா, அருணா, காவேரி). இவர்களிடம்  உள்ள தமிழ் நாவல்களை வைத்தே ஒரு சிறந்த நூலகத்தை உருவாக்கலாம். ஐந்நூறு புத்தகங்களாவது வைத்திருப்பார்கள். இவர்களுடன் உரையாடுவதின் மூலம் தமிழின் சிறந்த நாவல்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக நண்பர்களுக்கும் என் நன்றி. 

    நண்பர் ஒருவர் பொன்னியின் செல்வன் வகையறாவைத் தவிர, வேறு இலக்கியங்கள் படித்ததில்லை. நான் விஷ்ணுபுரம் படித்த பிரமிப்பில், அவருக்கு கொற்றவையை வாங்கி அனுப்பிவிட்டேன். திக்கித் திணறி, அழுதுகொண்டே படித்து முடித்தார். (இதுமாதிரிதான் இலக்கியம் இருக்குமென்றால், இலக்கியமே வேண்டாம் என்று ஓடிவிட்டார் :-). இப்போதுதான், நான் கொற்றவையை படித்துக்கொண்டிருக்கிறேன். (அடுத்து கொற்றவையைப் பற்றி எழுதுகிறேன்.) ஆனால், ஜெயமோகனின் கதைப்புலம், மொழி போன்றவற்றில் பரிச்சயம் இல்லாமல் கொற்றவையை படிப்பது கடினம் என்று தோன்றுகிறது. அவருக்கு கொற்றவையை வாங்கி அனுப்பியது என் தவறு.) இன்னொருவர் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் தமிழில் எதுவும் படித்ததில்லை. அவர் காடு நாவலை ரசித்துப் படித்தார். என் வாசிப்பு அனுபவத்தில், ஜெயமோகனின் நாவல்களை வாசிக்க கீழ்கண்ட வரிசையை சிபாரிசு செய்வேன். (நான் படித்ததில்..)

    புனைவு – காடு, ஏழாம் உலகம், பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை.

    சிறுகதைத் தொகுப்புகளை எந்த வரிசையிலும் படிக்கலாம். அபுனைவும் அப்படித்தான், இருந்தாலும் எனக்குப் பிடித்த வரிசையிது.

    அபுனைவு – இன்றைய காந்தி, நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம், கண்ணீரைப் பின்தொடர்தல், இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்.

    ————–

    [1] மார்க்ஸிய முரணியக்கம் – Marxist Dialectics.

  • எழுத்தாளர் பிஏ கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு

    Original post written in siliconshelf website July 2012

    [“கலங்கிய நதி” நாவல் பற்றிய ஒரு சிறிய உரை]

    நண்பர்களுக்கு வணக்கம். திரு. பி.ஏ. கிருஷ்ணன்எழுதிய கலங்கிய நதிநாவலைப் பற்றி பேச வந்திருக்கிறேன். பி.ஏ. கிருஷ்ணன், அரசு அதிகாரியாக அஸ்ஸாமில் பணியாற்றியபோது நடந்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு கலங்கிய நதி. இதன் ஆங்கில வடிவமான ‘Muddy River‘ படித்திருக்கிறேன். கிருஷ்ணனின் முதல் நாவலான ‘புலிநகக் கொன்றை‘யை ஒப்பிடும்போது, ‘கலங்கிய நதி’ ஒரு அமர்வில் வாசித்துவிடக்கூடிய எளிய நாவல். கதை நடக்கும் காலம் அதிகபட்சம் சில வருடங்கள், கதையின் களம் பெரும்பகுதி அஸ்ஸாம்.

    பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசு அதிகாரி, ஒரு விபத்தில் சிக்கிக்கொள்கிறார். குணமடைந்து கொண்டிருக்கும் ஓய்வு நேரத்தில், தன் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் ‘This street has no other side’ என்ற நாவலை எழுதுகிறார். ‘This street has no other side’ நாவல், அந்த நாவலில் சொல்லப்படாத நிகழ்வுகள் மற்றும் நாவலின் விமர்சனத்தை உள்ளடக்கியதே ‘கலங்கிய நதி’. இந்த நாவலுக்குள் நாவல் வடிவத்தில், எது புனைவு, எது நிஜம் என்று வாசகர்களை சிந்திக்க வைக்கிறார். நாவலில் மூன்று சரடுகள் உள்ளன. (அவை)

    1. அஸ்ஸாமிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பொறியாளரை மீட்கப் போராடும் அரசு அதிகாரி ரமேஷ் சந்திரன்
    2. Transmission tower கட்டுமானத்தில் நடைபெறும் நுண்மையான ஊழலை கண்டுபிடித்து ஆராயும் ரமேஷ் சந்திரன்
    3. ரமேஷ் சந்திரனுக்கும் அவர் மனைவி சுகன்யா, செக்ரட்டரி அனுபமா, திருமதி. கோஷ் உள்ளிட்ட மற்ற பெண் கதாபாத்திரங்களுக்குமான உறவு

    அரசு அதிகார வரைமுறைகளில் உள்ள அபத்தத்தை, தமிழ் நாவல்களிலேயே, இந்நாவல் அளவிற்கு சிறப்பாக சித்தரிக்கும் வேறோரு நாவல் இல்லை என்கிறார்கள் விமர்சகர்கள். அரசு அதிகாரிகளின் தோரனை, ஜூனியர் அதிகாரிகளை ஏவலர்களாக நடத்தும் மனப்பாங்கு போன்றவற்றை சித்தரிக்கும் பகுதிகள் சிறந்த நகைச்சுவை கதைகள் போல உள்ளன. இதில் உள்ள அங்கத அம்சத்திற்கு ஒரு உதாரணம்: உயர் அதிகாரியின் தேநீர் ஆறிப்போவதை அவருக்கு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை நினைவுபடுத்த அலாரம் நிறுவ பரிந்துரைக்கும் பகுதி. அதே சமயம், இந்தக் கூட்டம்தான் இந்தியாவை ஆள்கிறது என நினைக்கும்போது, comedy, dark comedyயாக மாறுகிறது.

    நாவலின் ஒரு சரடான ஊழல் பற்றி பார்ப்போம். விஞ்ஞான ரீதியான ஊழல் என்ற சொல்லாட்சியை கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட ஒரு ஊழலை இந்நாவலில் கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். ஒரு முறைக்கு இரு முறை படித்தால்தான், Transmission tower கட்டுமான ஊழல் எவ்வாறு நடைபெற்றிருக்கிறது என்றே புரிகிறது. அஸ்ஸாமிய மின்பகிர்மான கம்பெனிக்காக, Transmission towerகள் கட்டுவதை குத்தகைக்கெடுத்த நிறுவனம், அதற்காக இறக்குமதி செய்யப்பட்ட எஃகிற்கு வரிவிலக்கு பெறுகிறது. ஆனால், வரிவிலக்கு பெற்ற தொகையை வரி கட்டியதாக கணக்குகாட்டி ஊழல் செய்கிறார்கள். ஊழலின் அளவு முப்பது கோடிதான். 2ஜி காலத்தில் இந்த ஊழல் ஒரு பெரிய தொகை இல்லையென்றாலும், மிக நுட்பமான முறையில், சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி எவ்வாறு ஊழல் செய்கிறார்கள் என்பதையும், அந்த சிறிய தொகையை வசூலிப்பதில் உள்ள சிக்கலையும் நம்பகத்தன்மையோடு சித்தரித்திருக்கிறார். (இதுவும் ஒரு உண்மையில் நடைபெற்ற ஊழலின் புனைவு வடிவமே).

    அடுத்ததாக தீவிரவாதப் பிரச்சனை. உல்ஃபா தீவிரவாதிகள், அஸ்ஸாமிய மின் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பொறியாளரை கடத்தி பணயக் கைதியாக வைத்திருக்கிறார்கள். அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த ரமேஷ் நியமிக்கப்படுகிறார். பிரச்சனை சூடாக இருக்கும் வரை ஊடங்களும், அரசும் மீட்பில் முனைப்பாக இருக்கின்றனர். பின்பு, ரமேஷைத் தவிர யாரும் வேறு யாரும் கண்டுகொள்விதில்லை. கடைசியில், யாரும் கண்டு கொள்ளாமல் போவதாலேயே, தீவிரவாதிகள் முதலில் கேட்ட பணயத் தொகையில் இருபது மடங்கு குறைவான தொகைக்கு விடுவிக்கின்றனர். இந்நாவலில், பகதத்தனின் கதை, ஜதிங்காவில் பறக்க மறந்து கூட்டமாக கொல்லப்படும் பறவைகள், அழித்தொழிக்கப்படும் மூங்கில் காட்டு எலிகள், சிம்மாச்சல கோவிலுக்கு நேர்ந்துவிடப்படும் கன்றுகள் என பல்வேறு விதமாக தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டு மடியும் அஸ்ஸாமிய இளைஞர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். என்னைப் போன்ற இளைய தலைமுறை, லட்சியவாதம், சித்தாந்தம் என்றால் பூச்சிக்கொல்லிகளில் வீரியமான ரகங்கள் என்றே நினைக்கிறோம். சித்தாந்தத்தினாலோ, லட்சியத்தாலோ ஈர்க்கப்படுதல் என்றால் என்னவென்றே புரியவில்லை. சென்ற ஆண்டு கம்போடியா சென்று வந்தேன். மார்க்சிய சித்தாந்தம் நடைமுறை படுத்தப்பட்டபோது ஏற்பட்ட பிழையின் வடுவாக, கம்போடியத் தலைநகர் ப்னோம்பென்னில் ஐந்து மாடி கட்டிட உயரத்திற்கு, மண்டையோடுகளால் ஆன ஒரு நினைவுச் சின்னம் உள்ளது. அதைப்பார்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கம்போடிய கொலைக்களங்கள், நாஜிக்களின் ஆஸ்விட்ச் கொலைமுகாம், இலங்கையில் நடைபெறும் அழிவுகள் போன்றவற்றை பார்க்கும்போது, எந்த காரணத்திற்காக தொடங்கப்பட்டாலும், நாளடைவில் அழிவிற்கு இட்டுச்செல்லாத சித்தாந்தங்களே இல்லையோ என்று தோன்றுகிறது. விதிவிலக்காக காந்தி இருக்கிறார். காந்தியால் ஈர்க்கப்பட்டு மக்கள் சேவைக்காக வந்த அஸ்ஸாமின் முன்னாள் முதலமைச்சர் சரத் சந்திர சின்ஹா சாயலில் அமைக்கப்பட்ட ராஜவன்ஷி, இந்நாவலில் உள்ள ஒளிமிக்க பாத்திரம். சரத் சந்திர சின்ஹா பற்றி, ‘கிழவருடன் இரண்டு நாட்கள்‘ என்று காலச்சுவடில் கட்டுரை எழுதியிருக்கிறார் கிருஷ்ணன். சின்ஹாவை பற்றி படிக்கும்போது, இப்படி ஒருவர் இருந்தாரா என்று மனம் நம்ப மறுக்கிறது; அவ்வையின் ‘நல்லார் ஒருவர் உளரேல், அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ தான் நினைவிற்கு வருகிறது.

    நாவலில் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வை அடையும் வழியாக காந்தியம் குறிப்பிடப்படுகிறது. இந்திய மதப் பிரிவினையின் கோர தாண்டவத்தின் நடுவிலும், தான் சுடப்படுவதற்கு முந்தைய நாள் கூட காந்தி நம்பிக்கையோடு சொல்கிறார், “வெள்ளம் வரும்போது, நதி மிகக் கலங்கலாக இருக்கும், வெள்ளம் வடிந்த பின் நதி தெளிவாகிவிடும், முன்பை விட மிகத் தெளிவாக” என்று. கலங்கிய நதி தெளிவடையும் என்ற நம்பிக்கையோடு, திரு. கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

    சிலிக்கன் ஷெல்ஃப் மே கூட்டம் – பாகம் 2 (பி.ஏ.கே.யுடன் ஒரு சந்திப்பு)

    திரு. பகவதி பெருமாளின் (பக்ஸ்) இல்லத்தில் ஜுன் 9, சனிக்கிழமை மதியம் (2.00 – 7.00 ) ‘கலங்கிய நதி‘ நாவலை எழுதிய எழுத்தாளர் திரு. P.A.கிருஷ்ணனுடன் ஒரு இனிமையான சந்திப்பு நிகழ்ந்தது. முதல் இரண்டு மணிநேரம் கலங்கிய நதி நாவலைப் பற்றியும், பின்பு பொதுவாகவும் விவாதம் இருந்தது.

    சரியாக இரண்டு மணிக்கு கிருஷ்ணன் ராஜனுடன் வந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் 10-15 பேர் வந்தபின் கலந்துரையாடல் ஆரம்பித்தது. கடந்த இருவது வருடங்களில், இந்திய இலக்கியச் சூழலில், தமிழ் அளவிற்கு மற்ற மொழிகளில் படைப்புகள் வருவதில்லை; புத்தக விற்பனையில் மட்டுமல்லாது, இலக்கியத் தரமான படைப்புகளிலும் தமிழ்தான் முதலிடம் என்றார் கிருஷ்ணன்.

    பக்ஸ், நான், பாலாஜி உட்பட சிலர், கலங்கிய நதியின் ஆங்கில வடிவத்தை ( ‘Muddy River’ ) படித்திருந்தோம். ஆர்.வி, சுந்தரேஷ் உள்ளிட்டோர் தமிழ் வடிவத்தை ( ‘கலங்கிய நதி’ ) படித்திருந்தார்கள். கலங்கிய நதி பற்றி நாவலை படித்தவர்கள், மற்றவர்களுக்காக,  சுருக்கமாக நாவலைப் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.

    நாவலில் வரும் அங்கத அம்சத்தை முதலில் பேசினோம். அரசு அலுவலக வரைமுறைகளின் சித்தரிப்பில் உள்ள அங்கதம் மிக அருமை என்றனர் அனைவரும். நாவலில் வரும் தேநீர் – அலாரம் பகுதியை ஒரு முறை கிருஷ்ணன் படித்துக்காட்டினார். அப்பொழுதே உரையாடல் களைகட்டத் தொடங்கியது.

    அடுத்து, நாவலின் ஒரு சரடான, மின்செலுத்தீட்டு கோபுர (transmission tower 🙂 ) ஊழலை பற்றி பேசினோம். 2ஜி காலத்தில், முப்பது கோடி ஒரு ஊழலா, இதைவிட பெரிய ஊழல் (!!) இல்லையா என்றனர் ஆர்.வியும், பாலாஜியும். ஊழலின் அளவை கூட்டி எழுதியிருக்கலாம், நம்பர் முக்கியமில்லை, எவ்வளவு நூதனமான முறையில் ஊழல் செய்கிறார்கள், சிறிய தொகையாக இருந்தாலும், அதைக்கூட வசூலிக்கமுடியவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதே தன் நோக்கம் என்றார். ஆனால், இனி வரும் காலங்களில், தகவல் அறியும் உரிமை போன்ற சட்டங்களால் ஊழல் குறையும் என்பதில் தனக்குச் சந்தேகமில்லை என்றார். ஊழலை ஒட்டிய விவாதத்தில், அன்னா ஹசாரே இயக்கத்தில் பிழைகள் பல இருப்பினும்,  அது தோல்வி அடைந்திருப்பினும், its a right step in the right direction என்றார்.

    பகதத்தனின் கதை, ஜத்திங்காவில் பறக்க மறந்து கூட்டமாக கொல்லப்படும் பறவைகள், அழித்தொழிக்கப்படும் மூங்கில் காட்டு எலிகள், சிம்மாச்சல / காமாக்யா கோவில்களுக்கு நேர்ந்துவிடப்படும் ஆடுகள் என பலவாறாக, தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டு மடியும் அஸ்ஸாமிய இளைஞர்கள் நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளதை நானும், ராஜனும் குறிப்பிட்டோம். பின்பு, அதையொட்டி விவாதம் தொடர்ந்தது. அஸ்ஸாமிய தீவிரவாதத்தின் தோற்றுவாயைப்பற்றி விளக்கினார் கிருஷ்ணன். 1971 வங்கதேசப் போரின் விளைவாக, வங்கதேச இஸ்லாமிய அகதிகள் அதிக அளவில் அஸ்ஸாமில் குடியேறினர். இது, அஸ்ஸாமிய மக்கள்பரவலில் (demography) பெரும் மாற்றத்தை உருவாக்கியது; மேலும், வளமான பிரம்மபுத்திரா நதிப்படுகையில் குடியேறிய அகதிகள், தங்கள் கடின உழைப்பால் முன்னேறினர்; தன்னைவிட ஏழையாக இருந்த அண்டைவீட்டான் வளமானதை பொருக்காமல், ‘அஸ்ஸாம் அஸ்ஸாமியருக்கே’ என்ற போராட்டம் ஆரம்பித்தது. சமூகப்பிரச்சனையை, மத்திய அரசு சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகக் கருதி, ஆயுதம் கொண்டு அடக்கமுற்பட்டமையே, அஸ்ஸாம் பற்றி எரிய காரணமானது; இந்திய அரசின் ‘பெரிய அண்ணன்’ தனத்தினால், இஸ்லாமிய அகதிகளுக்கெதிராக உருவான உல்ஃபா, இந்தியாவிற்கெதிராக திரும்பியது என்றார். (நாவலில், காந்தியவாதியான முன்னாள் முதலமைச்சரின் கூற்றாக இவை வரும்).

    எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் உயர்ந்த லட்சியவாதத்தின் அடிப்படையில் தொடங்கப்படும், பின்பு, நாளடைவில், அதிகாரப்போட்டியின் விளைவாகவோ, வேறு காரணங்களுக்காகவோ, தன் கொள்கையிலிருந்து இறங்கி, தாழ்ந்து, அழிவை நோக்கிச் செல்லும் என்றே நமக்கு வரலாறு சொல்கிறது.  சமீபத்திய உதாரணம் LTTE என்றார். (‘கலங்கிய நதி’ இலங்கை தமிழ் உறவுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ‘Muddy River’ அஸ்ஸாமிய மக்களுக்கும், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, திரும்பிவராத திரு.கோஷிற்கும் சமர்பிக்கப்பட்டிருக்கிறது ). உல்ஃபாவிற்கும் அதுவே கதி என்றார். சீனா, மியான்மர் போன்ற நாடுகள் உல்ஃபாவிற்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டமை போன்றவற்றை காரணம் காட்டி, உல்ஃபாவோ, வேறு வடகிழக்குத் தீவிரவாத குழுக்களோ இனி threat இல்லையென்றார்.

    நாவலில், சமூகப்பிரச்சனைகளுக்கு தீவிரவாதத்திற்கு மாற்றாக காந்தியம் குறிப்பிடப்பட்டிருக்கிறதே என்ற கேள்விக்கு, காந்தியம் மட்டுமே தீர்வல்ல, ஆனால், அது தீர்விற்கு நல்ல வழிமுறையாக இருக்கலாம் என்றே சொல்கிறேன் என்றார். சுதந்திர போராட்டத்தின்போது, அம்பேத்கரோ, ஜின்னாவோ ஒரு தரப்பிற்காக மட்டுமே பேசினார்கள்; காந்தி மட்டுமே அனைவருக்காவும் பேசினார்; காந்தியின் கடைசி முப்பது நாட்கள், இயேசுநாதரின் கடைசி நாட்களைப் போன்றதே; தான் சுடப்படுவதற்கு முந்தைய நாள் கூட காந்தி சொல்கிறார், “வெள்ளம் வரும்போது, நதி மிகக் கலங்கலாக இருக்கும், வெள்ளம் வடிந்தபின் தெளிவாகிவிடும், முன்பைவிட மிகத்தெளிவாக ” – பிரிவினையின்  கோர தாண்டவத்தின் நடுவிலும்கூட, காந்தி எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார் பாருங்கள்; காந்தியின் optimism பிரமிக்கவைக்கிறது என்றார். ‘கலங்கிய நதி ..’ வரிகளை படித்துக்காட்டினார். நதி எப்போது தெளிவடையும் என்று தெரியாது என்றார்.

    மேலும், தமிழ்நாட்டைப்போல் இல்லாமல், அஸ்ஸாமிய முதல்வர்களை எளிதாக நேரில் சந்திக்கமுடியும் என்ற கிருஷ்ணன், நாவலைப் பற்றி, அஸ்ஸாமிலிருந்து பாஸிட்டிவ்வாகவே விமர்சனங்கள் வந்தன என்றார்.

    விவாதம் மார்க்ஸியத்தை நோக்கித் திரும்பியது. சுந்தரேஷ், திரு.சந்திரா [சிம்மக் குரலோன் என்ற பட்டத்தை கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட குரலுடைய ஒருவரை அன்றுதான் சந்தித்தேன் :-).] , அருண் உள்ளிட்டோர் மார்க்ஸியம் காலாவதியாகிவிட்டது என்றனர். சிறிது நேரம் சூடாக விவாதம் நிகழ்ந்தது. மார்க்ஸிய சித்தாந்தம் காலாவதியானாலும், மார்க்ஸிய கருவிகள் (பொருள்முதல்வாத முரணியக்கம்,..)  இன்றும் முக்கியமானது என்ற கிருஷ்ணன், மேற்கொண்டு விவாதத்தை எழுத்தில் தொடரலாம் என்றார்.

    பின்பு நாவலின் வடிவம் பற்றி பேசினோம். நாவலின் கதை எளிமையானது [தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவரை மீட்கப் போராடும் ஒரு எளிய அரசு அதிகாரி, மற்றும் அந்த அதிகாரி வெளிக்கொணரும் ஊழல்.] முதல் வடிவம் எழுதியபின், அது தட்டையானதாக இருந்தது. ஆகவே, அனுபமா உள்ளிட்ட கதாபாத்திரங்களை சேர்த்தேன்; நாவலுக்குள் நாவலை விமர்சிக்கும் வடிவத்தில் எழுதினேன் என்றார். புதிதாக வந்திருந்த செந்தில், இரண்டு வரி எழுதுவதே கடினமாக இருக்கிறது, எப்படித்தான் பக்கம்பக்கமாக நாவல் எழுதுகிறீர்களோ என்று கேட்டார். அதற்குத்தான் நாவலை எழுத ஏழு வருடம் எடுத்துக்கொண்டேன் என்றார் கிருஷ்ணன். கடத்தப்பட்டவரை மீட்பதில், சந்திரனுக்கு தெரியாமல் சில நிகழ்வுகள் நடந்ததாக சித்தரித்ததன் மூலம், சந்திரனை ஒரு ‘சூப்பர் ஹீரோ’ ஆக்காமல், மிக இயல்பாக சித்தரித்திருந்தீர்கள் என்றார் ஆர்.வி.

    ஆர்.வி, பாலாஜி, சுந்தரேஷ் உள்ளிட்டோர், கலங்கிய நதியைவிட புலிநகக் கொன்றை தங்களை மிகவும் கவர்ந்தது என்றனர். புலிநகக் கொன்றையின் கதைக்களம், தமிழகமாக இருப்பதாலோ என்னவோ உங்களுக்கு பிடித்திருக்கலாம், வட இந்திய நண்பர்களுக்கு கலங்கிய நதி பிடித்திருந்தது; அதை வாசகர்களிடம் விட்டுவிடுகிறேன் என்றார்.

    தன் இரு நாவல்களுமே அரசியல் நாவல்கள் என்ற கிருஷ்ணனிடன், 1970களோடு தமிழ்நாட்டில் கல்லூரிகள் apolitical ஆகி, 1970களுக்கு பிந்தய மாணவர்களுக்கு அரசியல் ஆர்வம் போய்விட்டதை குறிப்பிட்ட பாலாஜி, அதற்கேற்றார்போல, 200 வருட கதையைச் சொல்லும் புலிநகக் கொன்றையை 1970களில் முடித்தீர்களா என்று கேட்டார். அதை ஆமோதித்த கிருஷ்ணன், 1970களுக்கு பின் நடந்தவை என, புலிநகக் கொன்றை – 2 எழுத ஒரு திட்டமிருக்கிறது என்றார்.

    தன் அடுத்த புத்தகத்தை பற்றியும் சில தகவல்களை பகிர்ந்தார். தமிழர்/இந்தியர்களுக்கு வரலாற்றை பதிவு செய்வதில் அக்கறை இல்லை, வெள்ளையர் பதிவுசெய்தவற்றையும் நாம் முழுமையாக ஆராயவில்லை என்றார். மருது பாண்டியர், ஊமைத்துரை, வெள்ளையர்கள் பின்னனியில் கதை இருக்கலாம், அதிகபட்சம் நானூறு பக்கங்கள் இருக்கும் என்றார். ( தலையனை சைஸ் புத்தகங்கள் எழுதுவதில் தனக்கு உடன்பாடில்லை என்றார்!!).

    புதிதாக வந்தவர்கள் மாலை ஐந்து மணி வாக்கில் கிளம்பிச் சென்றபின், சிலிக்கான் ஷெல்ஃப் குழும நண்பர்கள் மேலும் இரண்டு மணி நேரம் கிருஷ்ணனுடன் செலவிட்டோம். அவரை கவர்ந்த நாவல்களைப் பற்றியும், அரசியல், சினிமா என்று பல தளங்களிலும்  உரையாடினோம்.

    ஐந்து மணிநேரம், சிறிது கூட சோர்வடையாமல் எங்களுடன் பேசிக்கொண்டிருந்த திரு.கிருஷ்ணன் அவர்களுக்கு சிலிக்கான் செஷ்ஃப் சார்பாக நன்றிகள். சிறப்பான உணவு மற்றும் இடம் ஏற்பாடு செய்த பக்ஸ் மற்றும் சித்ரா தம்பதிகளுக்கு ம் நன்றிகள். கலிஃபோர்னியாவிற்கு வருகை தரும் தமிழ் எழுத்தாளுமைகளையும், வாசகர்களையும் இனைக்கும் பாலமாக செயல்படும் அண்ணன் ராஜன் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஜே.