Tag: மாயன் நாகரிகம்

  • மாயன் நாகரிகம் – பயணக் கட்டுரை – பாகம் – 5

    உஷ்மாலிலிருந்து கிளம்பி கம்பச்சே சென்றோம். யுகாட்டனிலேயே வளம்மிக்க ஊராக கம்பச்சே இருக்கிறது. 1700களில் கரீபிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி கம்பச்சேவை தாக்கி சூரையாடியுள்ளார்கள். ஊருக்கு வெளியே கண்கானிப்பு

    கம்பச்சே கரகாட்டம்

    கோபுரம் கட்டப்பட்ட பின் கடற்கொள்ளையர்கள் கட்டுப்படுத்தப்பட்டார்கள். நாட்டுப்புர நடனம் ஒன்றை பார்த்துவிட்டு, குரங்கு விடுதி (தங்குபவர்கள் குரங்கா ? நடத்துபவர் குரங்கா ?)  என்ற மாணவர் விடுதியில் இரவு தங்கினோம். அங்கு கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த சக பயணி ஒருவனை சந்தித்தோம். வட அமெரிக்காவின் வடகோடியான அலாஸ்காவில் தொடங்கி, தென் அமெரிக்காவின் தென் கோடி வரை, ஆறு மாதங்களில் பயணம் செல்வது அவன் திட்டமாம். (நினைச்சாலே மூச்சு முட்டுது…யாருடா நீங்கெல்லாம் ?)  ‘பத்திரமா போய்ட்டு வா ராசா’ என்று அவனுக்கு விடை கொடுத்துவிட்டு செட்டுமால் நோக்கி புறப்பட்டோம்.

    கம்பச்சே – செட்டுமால் கிட்டத்தட்ட 500 கிலோமீட்டர் தொலைவு. காலையில் கிளம்பி, இரவில் செட்டுமால் செல்வதுதான் அன்றைய திட்டம். கார் ஓட்டப்போவது அருண், அதனால் எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. வழியில் எந்த ஊரையும் பார்க்கும் திட்டம் இல்லை. கலக்மூல் காடுகள் வழியில் உள்ளன. இந்தக் காடுகள் மெக்ஸிக்கோவின் கம்பச்சே மாகானத்தில் தொடங்கி, குவாத்தமாலா நாட்டின் பீட்டன் மாகானம்வரை பரவியுள்ளது. கலக்மூல் மாயாக்களின் சங்க காலத்தை (ஐந்தாம் நூற்றாண்டு) சேர்ந்த ஊர். சங்க கால சோழ – பாண்டியர்களைப் போல, கலக்மூலுக்கும், சில நூறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் (தற்போது, குவாத்தமாலா நாட்டிலுள்ள) திக்காலுக்கும் எப்போழுதும் தீராப் பகை. கலக்மூல் எங்கள் பயண திட்டத்தில் இல்லை. இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், போய் பார்ப்போம் என்று சென்றோம். மதிய வேளையிலே, சுற்றியிருந்த அடர் காடுகளால், இருட்டத் துவங்கிவிட்டது. மாயா பிரமிடுகளிலே உயரமான (145 அடி உயரம்) பிரமிட் கலக்மூல் பிரமிட். ஆறாம் நூறாண்டில் கட்டப்பட்டது. அதிக நேரம் செலவிடவில்லை. (காடு ஒரு பீதியை உண்டுபன்னத்தான் செய்கிறது). செட்டுமாலுக்கு இரவு வந்து சேர்ந்தோம்.

    கலக்மூல் பிரமிடுகள்

    மெக்ஸிக்கோ விசா வாங்கச் செல்லும் போது, அண்டை நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மெக்ஸிக்கோவின் மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று விசா கொடுத்த அம்மாள் அறிவுருத்தினாள். கலக்மூல் காடுகள் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு இடம். அவள் சொல்லியதன் தீவிரம் அப்போது எங்களுக்கு புரியவில்லை. நாங்கள் சென்று வந்த சில மாதங்களில், கலக்மூல் காடுகள் வழியாக, இருநூறு பேர் கொண்ட ஒரு போதை மருந்து கடத்தல் கும்பல் (லாஸ் ஜீட்டாஸ்), குவாத்தமாலாவின் பீட்டனுக்கு சென்று, போதை மருந்து கடத்தலுக்கு உடன்படாத முப்பது விவசாயிகளை கொடூரமாக கொன்றுவிட்டது. மெக்ஸிக்கோவின் தற்போதைய பெரிய பிரச்சனை போதை மருந்து குழுக்களிடையே நடைபெறும் அதிகாரச் போர்கள் (Gang Wars). இவற்றை சமாளிக்க முடியாமல் லத்தீன் அமெரிக்க நாடுகளின் ராணுவங்கள் திணறுகின்றன.  வருடந்தோறும், ஆயிரக்கணக்கில் மக்கள் இச்சண்டைகளில் மடிகிறார்கள்.

    அமெரிக்காதான் உலகிலேயே பெரிய போதை மருந்து கன்ஸ்யூமர் மார்கட். அமெரிக்காவிற்கு போதை மருந்து கடத்துவதற்கு இரண்டு வழிகள் இருந்தன. கரீபிய தீவுகள் வழியாக, கடல் மார்கமாக கடத்துவது ஒரு வழி. மெக்ஸிகோ – அமெரிக்கா எல்லை வழியாகக் கடத்துவது இன்னோரு வழி. கரீபியத் தீவின் போதை மருந்து குழுக்களை அமெரிக்கா அழித்துவிட்டது. மிச்சம் இருப்பது மெக்ஸிக்கோ தான். மெக்ஸிக்கோவின் போதை மருந்து குழுக்கள் தங்களுக்கென தனி ஆயுதப்படைகள் வைத்திருக்கின்றன (இதில் பலர் முன்னாள் ராணுவ சிறப்புப் படையை சேர்ந்தவர்கள்). மெக்ஸிக்கோவின் ராணுவத்தை எதிர்க்குமளவிற்கு அவை ஆயுத / பண பலம் பொருந்தியவை. இவை தவிர காசு கொடுத்தால், அவர்களுடன் இனைந்து போரிடும் கூலிப்படைகளும் உள்ளன. மெக்ஸிக்கோ அரசு, போதை குழுக்களை அழிக்க, அமெரிக்கா தன படையை அனுப்ப வேண்டும் என்று கெஞ்சுகிறது. (அமெரிக்காவில் சட்டப்படி கஞ்சா, பாப்பி செடிகளை வளர்க்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது). நாங்கள் சென்ற எல்லா ஊர்களிலும் எங்கள் காரை நிறுத்தி சோதனையிட்டார்கள். எங்கிருந்து வருகிறோம், எங்கு செல்கிறோம் போன்ற விவரங்களை கேட்பார்கள். சொல்வோம். அதற்குமேல் கேட்டால், ஸ்பானிய மொழி தெரியாததால் முழிப்போம். ‘போங்க’ என்று அனுப்பிவிடுவார்கள்.

    நான் அமெரிக்காவில் மூன்று வருடமாக இருக்கிறேன். இதற்கு முன் இத்தாலியில் ஒரு மாதம் வேலை நிமித்தமாக, தங்கியிருந்தேன். இந்த இரண்டு நாடுகளிலும், அங்குள்ளவர்கள் நிறைய இந்தியர்களை பார்த்திருக்கிறார்கள். நான், அலுவலகங்களில் வேலை செய்பவர்களுடன் நிறைய இந்தியாவைப் பற்றி பேசியிருக்கிறேன் என்றாலும், அறிமுகம் இல்லாதவர்கள், பொதுவாக என்னை கண்டுகொண்டதில்லை. தெருவில் பார்ப்பவர்கள், பல சமயம் புன்னகையோடு கடந்து சென்றுவிடுவார்கள். (இத்தாலியில் எதிர்மறை அனுபவம் உண்டு). ஆனால், மெக்ஸிக்கோவில் கிடைத்த வரவேற்பு இதற்குமுன் நான் கண்டதில்லை.  மெக்ஸிக்கோவில் இந்தியர்களை மிகக் குறைவாகப் பார்த்திருக்கிறார்கள். அதனால், நிறைய இடங்களில் எங்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். சில இடங்களில் ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டார்கள். (தற்காலிக) பச்சை குத்திக்கொள்ள, அவர்கள் பெயரை தமிழில் எழுதித் தந்தேன். சீனாவிலும் நிறைய பேர் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள் என்று நன்பர் ஒருவர் சொல்லியிருக்கிறார். உலகில், இந்தியர்கள் அதிக அளவில் போகாத இடம் குறைவு. அங்கேல்லாம் சிறப்பு வரவேற்பு/ விருந்தோம்பல் மிச்சம் இருக்கிறது. [அது கண்டிப்பாக பணக்கார மேற்கத்திய நாடுகளில் இல்லை].

    அருணுடைய ரசிகர் பட்டாளம்.

    லால்துன் குகை முன்பு, ஒரு பெண்மணி, ஒரு கருப்பு துண்டை என்னிடம் நீட்டினார். நான், ஏதோ விற்க வருகிறார் என்று நினைத்து, எனக்கு வேண்டாம் என்றேன். மீண்டும், இரண்டு முறை வந்தார். அவருக்கு, தலைப்பாகை கட்டிவிடச் சொல்கிறார் என்று புரிந்தது. இந்தியர்கள் என்றால் தலைப்பாகை கட்டியிருப்பார்கள் என்று எப்படி தோன்றியதோ தெரியவில்லை. (மன்மோகன் சிங்கை செய்திகளில் பார்த்திருக்கலாம்). கையில் வைத்திருந்த பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து, இந்தியாவைப் பற்றி விளக்குவதை ஒரு கலையாகவே கற்றுக்கொண்டேன். நம் ருபாய் நோட்டில் உள்ள பல்வேறு மொழிகளின் வரி வடிவங்களே, இந்தியா ஒரு பன்மைச் சமூகம் என்றுணர்த்த ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவ்வரி வடிவங்களில், தமிழைக் காட்டி, இது, என் மொழி என்று சொல்வதில், எனக்கு ஒரு தனி பெருமை. [ஆர்வமாக கேட்பது போல தோன்றினால் ‘கல்தோன்றி மண்தோன்றா’ பெருமைகளை விளக்காமல் விடமாட்டேன்). இந்திய ரூபாய் நோட்டை பார்த்தவுடன் காந்தி தாத்தாவை எல்லோரும் அடையாளம் கண்டுகொண்டார்கள். (உஷ்மாலில், ஒரு பதின்பருவ குழு, எங்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு, ‘காந்தீ’, ‘இந்தியா’ என்று கத்தியது). பயணத்தின் போது, செட்டுமால் என்ற ஊரில் தங்கினோம்.  ‘ஹீரோஸ் அவென்யூ’ (Heroes Avenue) என்ற தெருதான் அவ்வூரின் முக்கியத் தெரு. அதில் பிரிந்த பத்து குட்டித் தெருக்களுக்கு பல்வேறு உலகத் தலைவர்களின் பெயரைச் சூட்டியிருந்தார்கள். அதில், ‘காந்தி’ தெருவும் ஒன்று. உலகத் தலைவர்கள் பெயரை வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றியிருக்கிறதே..அதிலும் , காந்தி பெயரை சூட்ட வேண்டும் என்று தோன்றியிருக்கிறதே… இத்தனைக்கும் செட்டுமால் என்ற ஊர், சுற்றுலா நகரம் இல்லை. மிகச் சின்ன ஊர். காந்தி, உலகத்தின் மூலையில், ஏதோ ஒரு பெயர் தெரியாத ஊரின், மக்கள் மனதில் வாழ்கிறார் என்று உணர்ந்த போது, காந்தியையும், செட்டுமாலையும் நினைத்து பெருமைப்பட்டேன். (ஒப்புனோக்க, நம் ஊரில், இந்தியத் தலைவர்கள் பெயர்களைத் தவிர உலகத் தலைவர்கள் பெயரை தெருக்களுக்கு சூட்டியுள்ளோமா என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், உள்ளூர் கவுன்சிலர் மறைந்தவுடன் அவர் பெயர் சூட்டப்பட்டுவிடும் ).

    காந்தி தெரு – செட்டுமால்

    செட்டுமாலுக்கு அருகிலிருந்த மஹவால் என்ற கடற்கரைக்குச் சென்றோம். நீல நிற கரீபியக்கடல். பவழப் பாறைகளையும், பல வண்ண மீன்களையும் பார்க்க ஸ்கூபா டைவிங் (ஆழ்கடல் நீச்சல்) செய்தோம். முதல் முறையாதலால் பயம் எனக்கு. கடலில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கட்டிக்கொண்டு குதித்தது வித்தியாசமாக இருந்தது. குதிக்கும்போதே அருணுடைய முகமூடியை தட்டிவிட்டுவிட்டேன். கண்ணாடி போடாததால், தொலைவில் இருந்தது ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. கொஞ்சம் ஏமாற்றம்தான்.

    துலும் தீம் பார்க்

    துலும் என்ற கடற்கரை ஊர் மாயர்களின் முக்கிய துறைமுக நகரம். துலும் சென்று பார்த்தால், தீம் பார்க்கிற்கு உரிய அனைத்து அம்சங்களுடன், ஏதோ கிஷ்கிந்தாவுக்கோ, மாயாஜாலுக்கோ போனது போல இருந்தது. அங்கிருந்த கூட்டத்தை பார்த்து பயந்து, துலும் பிரமிடை பார்க்காமலே கிளம்பிவிட்டோம்.  துலுமிலிருந்து கேன்கூன் கடற்கரை வரை மாயா ரீவேரா என்று அழைக்கப்படுகிறது. நூறு கிலோ மீட்டர் நீளமுள்ள மிக அழகான நீல நிற கடற்கரை. ஆனால், முழுக்க முழுக்க தனியார் வணிக சுற்றுலா நிறுவனங்களால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. ரிசார்ட்டுகளுக்குள் நுழையாமல், கடற்கரைக்கு போகவே முடியாது. தொலைவிலிருந்தே வேடிக்கை பார்த்துவிட்டு, விடுதிக்கு திரும்பினோம். மறுநாள் காலையில் கேன்கூனிலிருந்து கிளம்பி அட்லாண்டவிற்கு வந்து சேர்ந்தோம்.

    நாங்கள் இதுவரை பார்த்த ஊர்களில்,

    கலக்மூல் – சங்க காலம்

    சிச்சன் இட்சா, உஷ்மால் – பிந்தைய சங்க காலம்

    மெரிடா, கம்பச்சே, செட்டுமால் – ஸ்பானிய ஆக்ரமிப்பு கால கட்டம் / தற்காலம்

    கேன்கூன் –  தற்காலம்.

    ஒரு கலாசாரத்தை உள்வாங்க பத்து நாள் போதாதுதான் என்றாலும், எனக்கு மிக நிறைவான பயணமாக அமைந்தது. என்றோ ஒருநாள், மாயாக்களை அவர்களுக்கு உண்டான உரிய மரியாதையுடன், முறையான ஆராய்ச்சியில் , அவர்களின் ஞானத்தை, தத்துவத்தின் ஆழத்தை, கலாச்சாரத்தை உலகம் உணர்ந்துகொள்ளும். [ இதை மேலை நாட்டினர் செய்ய முடியாது. செவ்விந்தியர்களாலோ,  கீழை சிந்தனையாளர்களாலோதான் செய்ய முடியும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை].

  • மாயன் நாகரிகம் – பயணக் கட்டுரை – பாகம் – 4

    தமிழர்களுக்கு சோழப் பேரரசு இருந்தது போல, மாயா நிலப்பகுதிகளை உள்ளடக்கிய பேரரசு என்று ஒன்று இல்லை. பண்டைய கிரேக்கர்களின் ஸ்பார்டா, ஏதன்ஸ் போல, ஒவ்வோரு மாயா ஊரும் ஒரு தனி நாடு. அவற்றுள், சிச்சன் இட்சா (chichen itza),  உஷ்மால் (uxmal), மாயப்பன் (mayappan) என்ற மூன்று ஊர்-அரசுகளும் பெரியவை. உஷ்மால் இளவரசியை மாயப்பன் அரசனுக்கு மணமுடிக்க இருந்தனர். ஆனால், அவளை சிச்சன் மன்னர் கடத்திச் சென்று களவு மணம் செய்து கொண்டார். பெண் கடத்தலை ஒரு சாக்காக வைத்து, உஷ்மாலும் மாயப்பனும் கூட்டுச்சேர்ந்து சிச்சன் மேல் போரிட்டு அழித்துவிட்டனர். (பெண்னைக் கடத்தி, அதன் விளைவுகளால் அழிந்த இலங்கை, ட்ராய் வரிசையில் சிச்சனையும் சேர்த்துக் கொள்ளலாம்). மேலே சொன்ன கதை, உஷ்மால் ஒலி ஒளி காட்சியில் சொன்னார்கள். அது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், ஸ்பானியர்கள் வருகைக்கு முன்பே, சிச்சன் கைவிடப்பட்டுவிட்டது. ஸ்பானியர்கள் வரவுக்குப்பின், உஷ்மால் அவர்களுடன் சேர்ந்து, மாயப்பன்னை அழித்தது. பின்பு, ஸ்பானியர்கள் உஷ்மாலை அழித்தனர். உஷ்மாலிலிருந்து தப்பிய மாயாக்கள் அருகிலுள்ள லால்துன் குகைகளில் பதுங்கினார்கள். அங்கும் வேட்டை தொடர்ந்தது. எல்லா மாயா ஊர்களும் கைவிடப்பட்டு, ஸ்பானியர்கள் உருவாக்கிய நகரங்களுக்கு மாயாக்கள் அடிமைகளாக கொண்டுசெல்லப்பட்டார்கள். மாயாக்களின் பிரமிடுகள், கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, மெரிடா, கம்பச்சே நகரங்களில் தேவாலயங்கள், மதில்சுவர்கள் கட்டப்பட்டன (இந்த கதைய எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே?). முந்நூறு வருடங்கள் கவனிப்பாரற்று கிடந்த மாயா நகரங்கள், 1840 களில், தொல்லியலாய்வாளர்களால் ‘கண்டுபிடிக்கப்பட்டது’. தற்போது, யுனஸ்கோ நிதி உதவியுடன், மீண்டும் புணரமைக்கப்பட்டுள்ளது.

    லப்னா தோரணவாயில்

    Puuc என்ற மாயா வார்த்தைக்கு ‘மலை’ என்று அர்த்தம்.  மெரிடாவிலிருந்து மாயாக்களின் மலை பிரதேசத்திற்கு சென்று மலை வழியில் (Ruta Puuc) உள்ள மாயா ஊர்களை பார்ப்பது திட்டம்.  லால்துன் குகைகள், காபா, சாயில், லப்னா, உஷ்மால் என்று பல முக்கிய ஊர்கள் மலை வழியில் உள்ளன. உஷ்மாலைத் தவிர மற்ற இடங்களை முதல் நாளிலும், உஷ்மாலை அடுத்த நாளும் சென்று பார்த்தோம். லால்துன் குகைகளுக்குள் டூர் அழைத்துச்சென்றார்கள்.  லப்னா, சாயில் போன்றவற்றை கண்டு ரசித்தோம் என்றால், உஷ்மாலைக் கண்டு பிரமித்துவிட்டோம். பிரமாண்டமான பிரமிடுகளும், தோரண வாயில்களும், மதில் சுவர்களும் ஒரு தீவிர மன எழுச்சியை ஏற்படுத்தியது. இந்த ஊரைப் பார்த்தவுடன் எனக்கு ஹம்பி நினைவுக்கு வந்தது. இடிந்த வழிபாட்டு மையங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், கணக்கற்ற வரலாற்றுச் சின்னங்கள்…  நிறைய கட்டிடங்களில் இன்னும் புதர் மண்டிக் கிடக்கிறது. நிதிப் பற்றாக்குறை என்றார்கள்.  அங்கிருந்த கட்டிடங்கள் எதற்கு பயன்பட்டன என்று தெரியவில்லை.

    உஷ்மால் பிரமிட் முன் அருண்

    ‘உன் முன்னோர்கள் முட்டாள்கள், உன் மதம் ஒரு காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கை, உன் மொழியில் இலக்கியமே இல்லை, உங்களுக்கு மீட்பே எங்கள் மூலமாகத்தான்’ என்று திரும்பத் திரும்ப நம்மை நம்ப வைக்க ஆங்கிலேயன் முயல்கிறான். அதில் அவன் வெற்றியடைந்தால், அதன்பின் நாம் வெறும் நடைபிணம். அந்த நாளில் நாம் முற்றாக அடிமைப்படுத்தப்பட்டுவிட்டோம் என்று அர்த்தம்.’ – விவேகானந்தர்

    உஷ்மாலைப் பார்க்கும்போது, அவன் இங்கே வென்றுவிட்டான் என்று தோன்றுகிறது. கல்லும், கட்டைகளும், வில்லும் வைத்திருந்த மாயாக்கள், துப்பாக்கிகள் வைத்திருந்த ஸ்பானியர்கள் முன் என் செய்திருக்க முடியும் ? கூட்டம் கூட்டமாக பூச்சிகளைப் போல அழித்தொழிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையேல்லாம் பார்க்கும் போது, அறம் என்று ஒன்று இருக்கிறதா? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? என்ற தோன்றுகிறது.

    ‘நாம கூட்டம் ஜாஸ்தி மச்சி, இல்லேன்னா, வெள்ளக்காரன் காலி பன்னியிருப்பான்’ என்றார் அருண். உண்மைதான். ஒரு கற்பனைக்கு, மதுரை, தஞ்சை எல்லாம் சூறையாடப்பட்டு, நம் மக்கள் மெட்ராஸுக்கு அடிமைகளாக கொண்டுசெல்லப்பட்டால் எப்படி இருந்திருக்கும் ? மதுரையை மீண்டும் ‘கண்டுபிடித்து’ ஆங்கிலேயன் வரலாறு எழுதினால் ‘ உயரமான டவர்கள் இருக்கிறது, எதற்கு என்று தெரியவில்லை. டவரில் நிறைய பொம்மைகள் இருக்கிறது. மன்னர்களுக்கு  பிடிக்காதவனை மேலே இருந்து தள்ளி விடுவார்களாயிருக்கும், அதற்கு ஒன்று போதுமே, எதற்கு நாலு டவர்? கட்டிடங்கள் கட்டுவதற்குமுன், போர்களுக்குமுன் நரபலி குடுத்துள்ளார்கள், கோயில்களில் குளங்கள் உள்ளன. அதில் பக்தர்களில் நாலு பேரை தள்ளிவிட்டு, மீண்டு வருபவர்கள் குறிசொல்லிகளாகி இருப்பார்கள், உச்ச கட்ட கேவலம், இவர்கள் ஆண் குறிகளை வணங்குகிறார்கள். குழந்தை பிறப்பதற்கு ஆண் குறி காரணம் என்று கண்டுபிடித்ததால் இருக்கும்..”

    திகம்பரர்களையும், அகோரிகளையும், நாகா சாதுக்களையும் அவர்களுடைய ஞானம் / தத்துவம் எதுவுமே தெரியாமல், வெளியிலிருந்து வேடிக்கை பார்த்தவனிடம் அவர்களைப் பற்றி கேட்டால் என்ன சொல்வானோ, அதே மாதிரி ஒரு கருத்துதான் மாயாக்களைப் பற்றி பரப்பியுள்ளார்கள் (அப்போகலிப்டோ படம் ஒரு நல்ல உதாரணம். முடிந்தால்  ‘Other Conquest’  பாருங்கள்.) மாயாக்களுக்கு என்று ஒரு சிந்தனை இருந்திருக்குமே, அவர்கள் கண்டுணர்ந்த ஞானம் இருந்திருக்குமே, எல்லாம் மண்ணோடு மண்ணாய் போய்விட்டதோ? மாயாக்கள் பல்வேறு துறைகளில் அடைந்த உயரங்களை மீண்டும் அடைய மனித குலத்திற்கு எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை. உஷ்மாலை பார்க்க வரும் இன்றைய செவ்விந்தியப் பழங்குடிகளைத் தவிர, வெள்ளையர்கள் எத்தனை பேர் இவற்றை உணர்கிறார்கள் என்றே தெரியவில்லை.

    உஷ்மால் நகரம்

  • மாயன் நாகரிகம் – பயணக் கட்டுரை – பாகம் – 3

    சிச்சன் இட்சாவிலிருந்து கிளம்பி மெரிடா வந்து சேர்ந்தோம். மெரிடாவில் முகுய் என்ற விடுதியில் தங்கினோம். அடுத்த மூன்று நாட்கள் இங்குதான் வாசம். விடுதி உரிமையாளர் பாட்டி ஒரளவு ஆங்கிலம் பேசினார். அவரும், அவருடைய மகளின் குடும்பமும் விடுதியின் கீழ் பகுதியில் தங்கியிருந்தனர். மேல் மாடி முழுவதும் அறைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். அவர்களின் வீடு ஊரின் நடுவில் அமைந்திருந்தது . ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்த குடும்பமாக இருந்திருக்க வேண்டும். வரவேற்பு மேசையில், அவருடைய விருந்தோம்பலையும், விடுதியையும் மெச்சி அனுப்பட்ட கடிதங்களை ஒட்டிவைத்திருந்தார். பத்து, பதினைந்து வருடங்கள் பழைய கடிதங்களில் இருந்து ஐந்து வருடங்களுக்கு முந்தைய கடிதங்கள் வரை ஒட்டிவைத்திருந்தார். இமெயில் காலத்தில் யார் கடிதம் எழுதுவார்களோ தெரியவில்லை. கடிதங்கள் ஓவ்வொன்றும் அவருடைய நினைவு நூலகத்தின் catalogue index என்று எண்ணிக்கொண்டேன்.  அதே விடுதியில் ஒரு பிரெஞ்சு பாட்டி தங்கியிருந்தார். அங்கே குளிரைத் தவிர்ப்பதற்காக இங்கு இரண்டு மாதங்கள் தங்கியிருக்கிறேன் என்றார். பேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, ஏதேதொ கதை சொல்ல ஆரம்பித்தார். அவர் அருகில் நிற்கும் போதே ஒரே சாராய வீச்சம். சிறிது நேரம் கழித்து அவரிடமிருந்து கழன்றுகொண்டோம். மூப்பும், தனிமையும் மனிதனை மீண்டும் குழந்தைகளாக்கிவிடுகின்றன போலும். ஆனால் குழந்தைகளைக் பார்க்கும்போது வரும் உற்சாகம், முதியோர்களைப் பார்க்கும் போது வருவதில்லையே ஏன்? பேசியே கொல்வார்கள் என்பதாலா? இருக்காது.. இளமை நீடிக்காது, நாமும் ஒரு நாள் மூப்படைவோம் என்ற உண்மையை உணர்வதால் இருக்கலாம்.

    ஏழு பொம்மைகள் கோயில்

    ஜிபில்சால்துன் (Dzibilchaltun) ஒரளவு பெரிய மாயா ஊர். அங்கு செல்லும் போதே மதியமாகிவிட்டது. மறுநாள் கிறிஸ்துமஸாதலால், மூன்று மணிக்கே மூடிவிடுவோம் என்றார்கள். ஏழு பொம்மைகள் கோயில் (Temple of Seven Dolls) தான் இங்கு பார்ப்பதற்கு ஒரு பெரிய கட்டிடம். நாங்கள் சென்ற எல்லா மாயா ஊர்களும் கைவிடப்பட்டிருந்த ஊர்கள். முக்கால்வாசி இடங்களில் உள்ள புராதான இடங்கள், கட்டடங்கள் எதை குறிக்கின்றன என்றே தெரியவில்லை. இந்த பொம்மைகள் (!!) கோயில், யாரால் கட்டப்பட்டது, அந்தச் சிலைகள் எதன் குறியீடு, ஒரு தகவலும் இல்லை. கிரகங்களுக்கு உரிய கோயிலாக இருக்கலாம், மாயாக்கள் வாழ்ந்துணர்ந்த விழுமியங்களுக்கு கொடுத்த வடிவங்களாக இருக்கலாம் (அஷ்ட லட்சுமிகளோ, சப்த கன்னியர்களோ)  என்று நாங்களாக நினைத்துக்கொண்டோம். சம இரவு நாளன்று, இக்கோயிலின் வாசலும், சூரியனும் ஒரே நேர்கோட்டில் தெரியும் என்றார்கள். அங்கிருந்த சினோட்டில் ஒரு கூட்டம் குளித்துக்கொண்டிருந்தது. சிறிது நேரம் சுற்றிவிட்டு, மீண்டும் மெரிடாவிற்கு திரும்பிவிட்டோம்.

    ஏழு பொம்மைகள் கோயில் – சம இரவு நாளில்.

    மெரிடா, ஊருக்கு நடுவே ஒரு பெரிய தேவாலயம், அருகிலெயே கவர்னர் மாளிகை, அதைச்சுற்றி ஒரு பூங்கா, என்று வழக்கமான ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்ட நகரம். வரிசையாக குதிரை வண்டிகள் சுற்றுலாப் பயணிகளுக்காக காத்துக்கொண்டிருந்தன. குறுகிய சாலைகள் அனைத்துமே எண்களால் அடையாளப் படுத்தப்பட்டிருந்தது. (காந்தி, நேரு, காமராஜ் மாதிரி உங்களுக்கு தலைவர்கள் இல்லையா?) அதுபோலவே, தெருவுக்குத் தெரு, இயற்கை உபாதையை சுட்டிக்காட்டும் (நன்றி : நாஞ்சில் நாடன்)  சிலைகளும் இல்லை. (என்ன கலாச்சாரமோ.. அடபோங்கப்பா).  இரவு ஏழு மணி வாக்கில், தெருக்களில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு,  தெருவே, மக்களின் ஆடல், பாடல்களுக்கான மேடைகளாயின. பல இடங்களில், தெருவோர இசைக்கலைஞர்கள், உற்சாகம் கொப்பளிக்க, லத்தீன் அமெரிக்க இசையை  வாசித்துக்கொண்டிருந்தார்கள். (ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களின் பல மெட்டுக்கள் நினைவுக்கு வந்தது. முன்பு தேவா. இப்பொழுது இவர்). அத்தெருக்களில் இசைக் கலைஞர்கள் நிரப்பாத இடைவெளியை, அங்கே உள்ள உணவகங்களின் மேசை, நாற்காலிகள் நிரப்பின. ஒரு மேசைத் தேடி உட்கார்ந்துகொண்டோம்.  மூன்று நாட்களாக, உணவகங்களில் ஒரு பிரச்சனை வந்தது. மது அருந்தும் பழக்கம் இல்லாததால், குடிப்பதற்கு வெறும் தண்ணீர் கேட்போம். மினரல் வாட்டர் கொண்டுவந்துவைப்பார்கள். மினரல் வாட்டர் வேண்டாம், குழாய் நீரே போதும் என்று சொல்லத் தெரியவில்லை. என்னென்னவோ செய்கை எல்லாம் செய்து காட்டினாலும் அவர்களுக்கு புரியவில்லை.  துரை டம்ப்ளரில் நீர் கேட்கிறார் போல் என்று நினைத்து, மினரல் வாட்டரை டம்ப்ளரில் கொண்டுவந்தார்கள். (அதற்கு உணவுப்பதார்த்தங்களுக்கு இணையாக பில்லும் போட்டார்கள்). பிறகு, விடுதி உரிமையாளர் பாட்டி துண்டு சீட்டில் எழுதிக்கொடுத்தார். (dos vasso agua naturalle. non agua mineralle, non agua bottelle :-)). ஸ்பானிய புலமையைகாட்டுவதற்காக, உணவகங்களில், எங்கள் இருவருக்கும் மேசையை ரிசர்வ் செய்யகற்றுகொண்டோம். ஆனால், மனனம் செய்த வாக்கியங்களைக் கூறிய அடுத்த நொடி,அவர்கள் சரளமான ஆங்கிலத்தில் என்ன வேண்டும் என்று கேட்பார்கள். (பெங்களூரில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் கன்னடத்தில் பேசும்போது ‘இன்னா சார், தமிலா, எங்கபோவனும்’ என்று கேட்டது நினைவுக்கு வந்தது.)

    பூங்காவில் இசைக் கலைஞர்கள் – மெரிடா
    பிளமிங்கோ

    மூன்று நாட்களாக தொடர்ந்து பயணம் செய்தலால், இன்று கிட்டத்தட்ட ஓய்வுதான். அருகிலுள்ள சிற்றூர்களுக்கு செல்வது இன்றைய திட்டம். முதலில் ப்ராகிரஸோ (Progresso)  என்ற கடற்கரை கிராமத்திற்கு சென்றோம். பிளமிங்கோ என்ற உணவு விடுதியில் பொறித்த மீன் சாப்பிட்டோம். செம ருசி. லோன்லி பிளானட் பொய் சொல்லவில்லை. சிறிது நேரம் கடற்கரையில் செலவிட்டுவிட்டு, மாயர்களின் கடற்கரை ஊராகிய ஷாம்போவிற்கு (Xcambo) சென்றோம். மற்ற பெரிய மாயா நகரங்களுக்கு இங்கிருந்துதான் உப்பு அனுப்பப்பட்டது. செல்லும் வழியெங்கும் சதுப்பு நிலக் காடுகள்தான். வெளிர் பிங்க், ஆரஞ்ச் நிறம் கலந்த பிளமிங்கோக்கள் நிறைய இருந்தன. பார்ப்பதற்கு, ஆரஞ்சு நிற பலூன்கள் மிதப்பது போல இருந்தது. அவற்றை, எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காது. ஆசைதீர பார்த்துவிட்டு, ஷாம்போ சென்றோம். கிட்டத்தட்ட வெறிச்சோடியிருந்தது. இங்கு வந்த ஸ்பானியர் ஒருவருக்கு கன்னி மேரி கனவில் வந்து, தனக்கு தேவாலயம் கட்டுமாறு கூறவே, ஒரு சிறிய தேவாலயம் கட்டியுள்ளார்கள். இப்போழுது யாரும் இல்லை.  நாங்கள் பார்த்த பல மாயா ஊர்களில், சிற்பங்களே இல்லை. காரணம், நீண்ட காலத்திற்கு, கல்லை செதுக்கும் திறனுள்ள உலோகத்தை மாயர்கள் கண்டுபிடிக்கவில்லை.

    ஷாம்போ

    (தொடரும்)

  • மாயன் நாகரிகம் – பயணக் கட்டுரை – பாகம் – 2

    கேன்கூன் கடந்த இரு தச ஆண்டில் உருவான ஒரு சுற்றுலா நகரம். அது தற்போதைய நுகர்ச்சிக் கலாச்சாரத்தின் அடையாளம். ஊரின் முக்கியத் தொழிலே சுற்றுலா தான். ஒப்புநோக்க அதை மெக்சிகோவின் கோவா என்று அழைக்கலாம்.

    யுகாட்டன் தீபகற்பத்தில் பெரிய நகரம் மெரிடா. ஸ்பானியர்கள் யுகாட்டனில் வந்து இறங்கி மாயர்களை வென்று, இந்தப் பகுதியின் தலைநகராக மெரிடாவை  கட்டமைத்தார்கள். கேன்கூனிலிருந்து மெரிடா செல்லும் வழியில் அமைந்துள்ளது சிச்சன் இட்சா.

    இன்றைய திட்டம் சிச்சன் இட்சா செல்வது. கேன்கூனிலிருந்து சிச்சன் இட்சா செல்வதற்கு இரு வழிகள் உன்டென அறிந்தோம். ஒன்று சுங்கச் சாலை, மற்றொன்று பொது. சுற்றுலாப் பயணிகளை நம்பி சுங்கச் சாலை அமைத்துள்ளார்கள்.  பொது வழியாகச் சென்றால், கிராமப்புறங்களை காணலாம் என்பதால், அவ்வழியில் செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.  பயனம் முழுமைக்கும் கார் ஓட்டியது அருண். மனுஷனுக்கு கார் ஓட்டுவது அலுப்பே தட்டாத ஒன்று.

    ஓரிடத்தில் இரு வேறு திசைகளில் ‘மெரிடா’ என்று எழுதப்படிருந்தது. ஒன்றில் ‘மெரிடா’,’லிப்ரே’ என்றும், மற்றொன்றில் ‘மெரிடா’,’சிச்சன் இட்சா’,’கோட’ என்றும் எழுதி இருந்தார்கள். வரைபடத்தை பார்த்து ‘லிப்ரே’ என்ற ஊர் இதில் இல்லை, அது எதோ சுத்து வழி போல, நாம் ‘சிச்சன் இட்சா’ என்று காட்டும் திசையில் செல்வோம் என்றேன். பிறகு, மாயனை பற்றி பேசிக்கொண்டே சென்றோம். வழியில் ஈ, காக்கை இல்லை. அருண் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை என் கதையை இடைமறித்து சுங்க வழி, சுங்கமிலா வழி பிரிவு எப்போது வரும், கிராமங்களை காணோமே, மற்ற வண்டிகள் எங்கே என்று கேட்டுகொண்டே வந்தார். நான் கதை சொல்லுகிற ஆர்வத்தில் எல்லாம் கூடிய விரைவில் வரும், நம்மைப் போல சுற்றுலாப் பயணிகளைத் தவிர அனைவரும் சுங்கச் சாலையில் சென்றுவிட்டனர், அதனால் தான் ரோடு வெறிச்சோடி உள்ளது போன்று ஒவ்வொரு முறையும் ஒரு விளக்கத்தை கொடுத்து அவரை சமாளித்தேன். ஒரு மணிநேரம் சென்ற பிறகு எனக்கும் சந்தேகம் வந்தது. தூரத்தில் toll-plaza வும் தெரிந்தது. ‘ஹி ஹி ‘ என்று அருணை பார்த்தேன். 20 USD கட்டிய பிறகு ‘லிப்ரே’ என்றால் ‘இலவசம்’ என்றும் ‘கோட’ என்றால் ‘காசு’ என்றும் புரிந்தது.

    சிச்சன் இட்சாவுக்கு மதியம் போய்ச்சேர்ந்தோம். தங்கும் விடுதியில் (குறைந்த செலவில், அருமையான அறைகள். உணவும் நன்றாக இருந்தது) சிறிது ஓய்வெடுத்துவிட்டு, பிரமிடுகளையும், கட்டடங்களையும் பார்க்கச் சென்றோம். விடுதியில் இருந்து இலவச சேவையாக எங்களை தொல்பொருள் கட்டடங்களின் அருகில், காரில் இறக்கிவிட்டு சென்றார்கள். அங்கே பார்த்த இடங்கள், மிகச் சிறிதாக இருந்தன. நான் போட்டோவில் பார்த்த இடங்களின் மாதிரி வடிவம் போல இருந்தது. ஒரு மணி நேரம் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தோம். வேறு எந்த கட்டிடமும் இருப்பது போலத் தெரியவில்லை.

    “தல ஏமாத்திட்டானுங்க.. இத பாக்கவா இவ்வளவு தூரம் வந்தோம் ?”

    “டேய், நீ தானடா, அப்பிடி இருக்கும், இப்பிடி இருக்கும்னு பில்டப் குடுத்த..”

    “பெருசாத்தான இருந்துச்சு… ஒரு வேள, கேமரா டிரிக்கா..சரி, வந்தது வந்தாச்சு, நான் இங்க உக்கார்ரேன்… உங்க கேமராவுல, இதெல்லாம், பெருசாத் தெரியர மாதிரி எடுங்க…நின்னுகிட்டே எடுத்தா, சின்னதா தெரியும். ஊர்ல போய் காட்டினா சிரிப்பானுங்க ..”

    மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில், ஒரு வெள்ளைக்கார கூட்டம், ஒரு சந்தில் இருந்து வந்தது. அங்கே சென்று பார்த்தால், ஒரு நகரமே கண்முன் விரிந்தது. ஒரு பெரிய பிரமிட், ஆய்வுக்கூடம், ஆயிரம் தூண் அடங்கிய கோவில், சுற்றிலும் மதில் சுவர் அடங்கிய ஒரு விளையாட்டு மைதானம், நிறைய மேடைகள் என்று அந்த இடமே பிரம்மாண்டமாக இருந்தது.  (எங்களை இறக்கிவிட்டவன், தொல்பொருள் கட்டடங்களின் பெருவாசலில் இறக்காமல், கடைக்கோடி வாசலில் இறக்கிவிட்டுள்ளான். அதனால், இடக் குழப்பம்.)

    முதலில், அங்கே இருந்த வானவியல் ஆய்வுக்கூடத்தை (எல் கராகோல்) பார்த்தோம். 902 கி.பி. இல் கட்டப்பட்ட ஆய்வுக்கூடம். மாயா கேலண்டருக்கு அளித்த முக்கியத்துவம், அதில் அவர்களுக்கு இருந்த தேர்ச்சி நாம் அறிந்ததே.

    மாயா கடவுள்களில், முக்கியமான கடவுள் ‘சாக்’ எனப்படும் மழைக்கடவுள். மாயா குடுக்கும் பலிகளில் முக்கால்வாசி அவருக்குத்தான். காரணம், மாயா நிலப்பகுதியில் நிலத்தின் மேல் ஓடும் ஆறு எதுவும் இல்லை. நிலத்துக்கடியில் ஓடும் ஆறுகள் உண்டு. நிரந்தர தண்ணீர் பஞ்சம். ஆங்காங்கே, நிலத்துக்கடியில் ஓடும் ஆறுகளை இணைக்கும், இயற்கையாக உருவான கினறுகள் உள்ளன. அவை ‘சினோட்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கும் ஒரு புனிதக்குளம் இருந்தது. ‘ஜாக்குவார்’ மிருகம் மாயர்களுக்கு புனிதமான மிருகம். வீரமரணம் அடையும் வீரர்கள் ஜாக்குவார் ஆகிவிடுவார்கள் என்பது அவர்களுடைய புராதான நம்பிக்கை. அங்கே ஒரு ஜாக்குவார் ஆசனம் (சிம்மாசனம்?) இருந்தது. (ஆமா, நம்ம ஜாக்குவார் தங்கத்துக்கு யாருங்க ‘ஜாக்குவார்’னு பேர் வச்சா?”) . குக்குலுக்கான் என்ற இறக்கை வைத்த நாக தேவதையும் முக்கியமான தேவதை. இவர் மத்திய மெக்ஸிக்கோவைச் சேர்ந்த ஆஸ்டெக்குகளின் தேவதை, இங்கே வணிகர்களால் இறக்குமதி செய்யப்பட்டார் என்று விக்கிப்பீடியா சொல்கிறது. பின்னர் ஒரு ஊரில், ஆண் குறி சிலைகளை (லிங்கம்) கண்டோம். நல்ல இந்திய ஆராய்ச்சியாளர் யாராவது, மாயார்களின் கடவுளையும், நம் கடவுள்களையும் பற்றி ஆராய்ந்தால், பழங்குடி மனம் செயல்படும் விதம் பற்றி மேலும் சில புரிதல்களைக் கண்டடையலாம்.பழங்குடிகளின் மனம் ஒன்று போல இயங்குமோ என்னவோ?. [கேரளாவில் யாரோ ஒரு ‘ஆராய்ச்சியாளர்’ இந்துக்களுடைய ‘பாதாள லொகம்’ மெக்ஸிகொ என்றிருக்கிறார். இங்கே வந்து இரண்டு மாதம் தங்கினாராம். அதன் மூலம் கண்டுபிடித்தாராம். மகாபாரதத்தில் மயாசபை கட்டிய மயன் தான், இங்கே வந்து மாயா நாகரிகம் தோன்றக் காரணம் என்றிருக்கிறார். அவருக்கு பாராட்டுவிழா எல்லாம் எடுத்திருக்கிறார்கள். மயன் எப்படி இங்கே வந்தார் என்றால் ‘லெமூரியாக் கண்டம்’ மூலமாம். புரிந்துவிட்டது.)

    சாக் மூல் கோயில்.

    நிறைய மாயா சிறுவர்கள் நிறைய குட்டி சிலை, ஊசிமணி, பாசிமணிகளை விற்றுக்கொண்டிருந்தார்கள். நான் ஒன்றும் வாங்கவில்லை. மகாபலிபுரம் நியாபகம் வந்தது. மாயாக்கள் உருவத்தில் சிறியவர்கள். பெண்கள் நான்கரை அடி, ஆண்கள் ஐந்து அடி. மாயா நகரங்களுக்கு இடையே நடந்த சகோதர யுத்தத்தில், சிச்சன் இத்சா அழிந்தது என்றார்கள். நீண்ட நாள் வறட்சியும் ஒரு காரணமாக இருக்கலாம். (மாயா நகரங்களைப் பற்றி, அடுத்த பகுதிகளில் பார்ப்போம்).

    ஆயிரம் கால் மண்டபம் முன் கைகுட்டை விற்கும் ஒரு மாயா பாட்டி

    பிறகு, புகழ் பெற்ற ‘எல் காஸ்டிலோ’ பிரமிடை பார்த்தோம். (குக்குலுக்கான் கோயில் என்று அழைக்கப்படுகிறது). சம இரவு நாளன்று, (equinox) குக்குலுக்கான் படிகளில் இறங்கி வருவது போல் தெரியும் என்றார்கள். அன்று இரவு நடை பெற்ற ஒலி ஒளிக் காட்சியில், ஒளியில் ஒரு பாம்பு, இறங்கி வருவது போல் காட்டினார்கள். (அந்த ஒலிஒளிக் காட்சியில், ஒரு வித அங்கதத்துடனே மாயர்களை காட்டியது போல எனக்குத் தோன்றியது. மொத்தம் ஒரு மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில், பத்து நிமிடம் அவர்களைப் பற்றி சிறப்பாகச் சொல்லியிருந்தால் அதிகம். அன்றைய காலகட்டத்தை இன்றைய நியாய / அநியாய நோக்கில் விளக்கியது போலவும் இருந்தது. “பூசாரிகள் தான் மன்னர்களை ஆட்டிவைத்தார்கள். நாட்டில் நடக்கும் குழப்பங்களுக்கெல்லாம், கடவுளின் கோபம் தான் காரணம். குறி சொல்லிகளை தேர்ந்தெடுப்பது எப்படி என்றால், சினோட்டில் சிறுமிகளை தள்ளிவிடுவார்களாம். அதில் பிழைத்து வருபவர்களை ‘ஆரக்கிள்’ என்று அறிவித்து, தெய்வமாக்கிவிடுவார்களாம். ஆதாரமாக சினோட்டில் எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன என்றார்கள். மழை பெய்யவில்லையென்றால், ஆயிரக்கணக்கில் நரபலி கொடுக்கப்படும் என்றார்கள். மாயா கூடைப்பந்தாட்டத்தில் தோற்றால், பலிதான். “சரியான காட்டாண்கள்.. நாம வந்து இதுங்கள காப்பாத்தினோம்… இல்லன்னா..” என்கிற தோரனைதான். அவற்றில் சில உண்மைகள் இருந்தாலும், வெளி உலக தொடர்பே இல்லாமல், எவ்வாறு வானவியலில் சிறந்து விளங்கினார்கள், பெரிய கட்டிடங்களை கட்டினார்கள் என்று ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

    மாயா எழுத்துரு ‘வரைபட எழுத்துரு’  (heiroglypyic) வகையைச் சார்ந்தது. இப்பொழுது, மாயா மொழி பேச்சு வழக்கில் இருந்தாலும், எழுத்து வழக்கில் இல்லை. லத்தீன் எழுத்துக்கள் தான் உபயோகத்தில் உள்ளது. பின்னர் ஒரு ஊரில், எங்களிடம் நன்றாகப் பேசிய ஒரு மாயனிடம், என் பெயரை மாயனில் எழுதித் தரும்படிக்கேட்டேன். அவன் ஆங்கிலத்திலேயெ எழுதினான். இரண்டு, மூன்று முறை கேட்டபின்னும் அவன் எந்தப் படமும் வரையவில்லை. ஒரிஜினல் மாய எழுத்துருவில், அவனுக்குத் தெரிந்த எந்த மாயருக்கும் வரையத் தெரியாது, அதெல்லாம், அமெரிக்கப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் யாராவது கொஞ்சப் பேருக்குத் தெரியலாம் என்றான். மாயாக்களிடமே இருந்து யாராவது ஒருவர் வந்து அவர்கள் குலப்பாடல்கள், கிராமியக் கதைகள், தொன்மங்கள் போன்றவற்றை வைத்து ஆராய்ந்தால், நமக்கு அவர்களை பற்றி இன்னும் நிறைய தெரியலாம். (‘லேமூரியாக் கண்டம், ‘கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே’ போன்ற வகையில் இல்லாமல் இருக்க, குக்குலுக்கானிடம் பிரார்த்திப்போம்).

    மதியம் வரும்பொழுது, விடுதியைச் சேர்ந்தவர்கள் எங்களை காரில் இறக்கிவிட்டு சென்றார்கள். ஒலி ஒளிக்காட்சி முடியும் பொழுது, நன்றாகவே இருட்டிவிட்டது. இருட்டிலேயே, டார்ச் உதவியுடன் நாலு மைல் நடந்து வந்தோம். அங்கே சாப்பிட்ட பொரித்த கோழி நன்றாகச் செரித்திவிட்டது. வந்து படுத்தது தெரியவில்லை, மறுநாள் அருண் எழுப்பி விட்டு கிளம்பு தம்பி, போவொம் என்றார். அடுத்த இடம், மெரிடா.

  • மாயன் நாகரிகம் – பயணக் கட்டுரை – பாகம் – 1

    இரண்டு வருடங்களுக்கு முன் மெக்சிகோ சென்று வந்தேன். அப்பொழுதே அதைப் பற்றி விரிவான ஒரு பயணக் கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்ததால், நேரமில்லை. இப்பொழுது கூட எழுதாவிட்டால் மறந்துவிடும். அதனால், இந்தப் பதிவு.

    எனக்கு மாயன் நாகரிகத்தை சென்று பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அதுவும் அப்போகலிப்டோ படம் பார்த்த பிறகு மேலும் அதிகமாகியது. நான், அமெரிக்காவின் அட்லான்டா நகரில் உள்ள ஜார்ஜியா டெக்கில் முதுநிலை கணிப்பொறியியல் படித்துக்கொண்டிருந்தேன். மெக்சிகோ செல்லலாமா என்று கேட்டாலே, நண்பர்கள் அலறினார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தினம் செய்திகளில் மெக்சிகோவின் போதைப் பொருள் கடத்தல் குழுக்களிடையே நடக்கும் கலவரம், அதில் பலியானோர் எண்ணிக்கை, இன்ன பிற மோசமான செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது. அது, எல்லோருடைய மனதிலும் ஒரு பய உணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நண்பர் அருண் (அருண்குமார் இளங்கோவன்) வருவதாகச் சொன்னார். விடுமுறையில் சில நண்பர்கள் இந்தியா சென்றுவிட்டனர். வரலாற்றைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல், குடி, கேளிக்கையில் மட்டுமே ஈடுபடும் மற்றவர்களை அழைக்க மனமில்லை.

    மாயன் பகுதிகள்

    நானும், அருணும்  சேர்ந்து பயணத்திட்டம் வகுத்தோம். மாயா நாகரிகத்தை, தோற்றம், சங்க காலம், சங்கம் மருவிய காலம், ஸ்பானிய ஆக்ரமிப்பு, நிகழ்காலம் என்று விரிவாகப் பிரிக்கலாம். சில ஊர்கள் சில காலகட்டங்களுக்கு உரியவை. அடுத்த காலகட்டத்தில், அது பல்வேறு காரணங்களுக்காக கைவிடப்பட்டிருக்கும். மாயா நாகரிகத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அறிய வேண்டும் என்ற விருப்பத்தால், எல்லா கால கட்டங்களுக்கும் உரிய ஒரு ஊரையாவது பார்க்க முடிவு செய்தோம். முடிந்த வரை சுற்றுலாப் பயணிகள் செல்லாத சிறிய ஊர்களுக்கும் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டோம். எனக்கு செமஸ்டர், டிசம்பர் முதல் வாரத்திலேயே முடிந்துவிட்டது. டிசம்பர் 10 – 20 வரை சென்று வந்தால் விமான செலவுகள், தங்கும் விடுதி வாடகை, இதர செலவுகள் குறையும் என்றேன். (கிருஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நாட்களில் பயணம் செய்தால், எல்லாவற்றுக்கும்  விலை அதிகம்.) அருணுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. சரி, டிசம்பர் கடைசி வாரமே போய் வருவோம் என்று முடிவு செய்தோம். மாயா நாகரிகம், மெக்சிகோவின் யுகாட்டன் தீபகற்பத்தை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ளது. கேன்கூன் நகரம் தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலா நகரம். அங்கே விமானத்தில் சென்று, பிற பகுதிகளுக்கு காரில் செல்லலாம் என்று திட்டம். கல்லூரி நூலகத்திலிருந்து மாயா நாகரிகத்தை பற்றிய சில நூல்கள், ஸ்பானிய – ஆங்கில அகராதி, வரைபடம், பயணத்துக்கு தேவையான பொருட்களுடன் எல்லாம் தயார்.

    டிசம்பர் 22, அட்லாண்டாவில் கிளம்பி கேன்கூனுக்கு சென்றோம். விமானத்தில் என் அருகில் ‘பேரிளம் பெண்’ ஒருவர் வந்தார். பேசுவதற்கு ஒன்றும் இருக்காது என்று எண்ணி சிறிது கண்ணயர்ந்தேன். அவள் வைத்திருந்த லோன்லி பிளானட் புத்தகம் பேச தூண்டியது. இத்தாலியர், கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர், போன்ற விவரங்கள் அறிந்த பின்னர், இன்று / நாளை என்ன திட்டம் என்று விசாரித்தேன். ஒன்றும் இல்லை என்றாள். தங்கும் விடுதி உட்பட எதுவும் தெரியாதாம் அவளுக்கு. பத்து நாளும் என்ன செய்யவேண்டும், எங்கு தங்கவேண்டும், இன்ன பிறவற்றையும் திட்டமிட்டிருந்த எனக்கு ஆச்சிரியம். அருண், இவள் கேன்கூன் கடற்கரையில் விடுமுறை முழுதும் குடித்துவிட்டு கவிழப்போகிறாள், அதற்கு ஒரு திட்டமும் தேவையில்லை என்றார். அவள் எங்களுடன் சேர்ந்துகொண்டாள். கேன்கூனில் இறங்கி வாடகை கார் எடுக்கும் இடம் சென்றோம். முதல் அதிர்ச்சி காத்திருந்ததது. ஆட்டொமெட்டிக் கார் பதிவு செய்திருந்தோம். மானுவல் தான் உள்ளது, வேண்டுமானால், காலையில் வா, மாற்றித்தருகிறேன் என்றான். வேறு வழியில்லை. இருப்பதைக் குடு என்றோம். மெக்சிக்கோ, இந்தியாவைப் போலவே இருந்தது. கொஞ்சம் தட்டுத்தடுமாறி ஓட்டி விடுதி போய் சேர்ந்தோம்.

    கேன்கூன் (cancun) என்ற கடற்கரை நகரம் உல்லாச பேர்விழிகளுக்காகவே கட்டப்பட்ட ஒரு நகரம். ஊரே, ஒரு பெரிய கேளிக்கை விடுதி போல இருந்தது. இரவு கேன்கூன் கடற்கரையை பார்க்க மூவரும் சென்றோம். நடுநிசி ஆகிவிட்டதால் இன்னும் இருவது நிமிடத்தில் விடுதிக்கு செல்வோம் என்றேன். கடற்கரையில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்று பிளான் போடுகிறதே இது, என்று அவள் என்னை முறைக்க, முன்பின் தெரியாதவர்களுடன் ஊர் சுத்துதே இது, என்று நானும் வெறித்தேன்.

    மறுநாள் காலை சிற்றுண்டிக்கு பின் அவளிடம் விடை பெற்று மாயன் நகரங்களை நோக்கி பயணித்தோம்.