பால் கிரஹாம் ஸ்டார்ட்-அப் உலகில் நன்கு தெரிந்த பெயர். பால் கிரஹாமுக்கு முந்தைய காலகட்டத்தில் [2000 ஆம் ஆண்டுக்கு முன்பு], ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் குறைந்தபட்ச முதலீடு சில மில்லியன் டாலர்கள். முதலீடு அதிகமாக இருந்ததால், குறைவான நிறுவனங்களே ஆரம்பிக்கப்பட்டன. வங்கிகளுக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் எப்படி முதலீடு செய்வது என்று புரியவில்லை. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஆரம்பிக்கக்கூடிய இருவது வயதில் இருந்த இளைஞர்களுக்கும் சரியான வழிகாட்டிகள் இல்லை.
பால் கிரஹாம் ஒரு மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பித்து, வளர்த்து, பின்பு யாகூ நிறுவனத்திடம் விற்றார். அதில் கிடைத்த பணத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஒரு வென்ச்சர் கேப்பிடல் நிறுவனத்தை ஆரம்பித்தார். வொய் காம்பினேட்டர் (Y Combinator) என்ற அந்த முதலீட்டு நிறுவனம், ஒரே நேரத்தில், குறைந்த முதலீட்டில் பல ஸ்டார்ட்-அப்களை ஆரம்பிக்கும் ஒரு மாதிரியை உருவாக்கியது. கிட்டத்தட்ட ஸ்டார்ட்-அப் உலகில் முதலீடு செய்யும் அனைத்து முதலீட்டு நிறுவனங்களும், பின்பு பால் கிரஹாமின் மாடலைப் பின்பற்றின.
Y Combinator, ஸ்டார்ட்-அப் ஆரம்பிக்கும் இளைஞர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தது. வருடா வருடம் வொய் காம்பினேட்டர் ஐம்பது-நூறு மென்பொருள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஆரம்பிக்க உதவியது. அதில் சேர்ந்த நிறுவனர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி, ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக்கொண்டார்கள். தாங்கள் ஆரம்பித்த நிறுவனங்கள் சரியாக ஓடவில்லை என்றால், நிறுவனங்களை மூடிவிட்டு, நன்றாகச் செயல்படும் நிறுவனங்களில் போய் இணைந்துகொண்டார்கள்.
மேலும், பால் கிரகாம் ‘ஹேக்கர் நியூஸ்’ – https://news.ycombinator.com/news என்ற வலைதளத்தையும் நடத்துகிறார். தன் தளத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுகிறார் – http://www.paulgraham.com/articles.html – மென்பொருள் துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஆரம்பித்த பலருக்கும் இவரது கட்டுரைகளும் வலைதளங்களும் மிக பயனுள்ளவையாக இருந்தன.
http://www.paulgraham.com/worked.html – பெப்ரவரி 2021இல் பால் கிரஹாம் எழுதிய நீண்ட கட்டுரையின் ஒரு சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

[1]
எனக்கு பள்ளி நாட்களில் கணினிநிரல்களை எழுத பிடித்து இருந்தாலும், கார்னல் பல்கலையில் நான் படிக்க தேர்ந்து எடுத்தது (மேற்கத்திய) தத்துவம். என்னுடைய எளிய இளமனதிற்கு தத்துவம் வாழ்வின் உண்மைகளை பற்றிய கல்வியாக தோன்றியது. மற்ற அனைத்தும் சாதாரண அறிவுத்துறைகளாக இருந்தன. ஆனால் கல்லூரில் சேர்ந்த பின்பே, தத்துவத்தின் பரப்பை மற்ற அனைத்து துறைகளும் ஆக்ரமித்து, தத்துவத்திற்கு மட்டுமே உரிய பரப்பு சுருங்கிவிட்டதை உணர்ந்தேன்.
பதினெட்டு வயதில் எனக்கு இதை சரியாக சொல்ல தெரியவில்லை. தொடர்ந்து தத்துவ பாடங்களை எடுத்துப் படித்தேன். அவை என் ஆர்வத்தை தொடர்ந்து சோதித்தன. அதனால் நான் செயற்கை நுண்ணறிவிற்கு (AI) என் கவனத்தை திருப்பினேன்.
1980களில் செயற்கை நுண்ணறிவு துறை ஓரளவு பிரபலமானது. அந்த துறையை நான் தேர்ந்தெடுக்க காரணமாக இரண்டு விஷயங்கள் இருந்தன: தி மூன் இஸ் எ ஹார்ஷ் மிஸ்டிரஸ் – ஹென்லெயினின் நாவலில் வரும் ‘மைக்’ என்னும் அறிவாளியான கணினி மற்றும் பிபிஸ் (PBS) தொலைகாட்சி ஆவணப்படத்தில் டெர்ரி வின்னொகிராட் பயன்படுத்தும் SHRDLU என்ற செயற்கை நுண்ணறிவு நிரல். நாவலை நான் மீண்டும் படிக்கவில்லை. அதனால் மீள்வாசிப்பில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அன்று படித்தபோது அது தன் உலகிற்கு என்னை முழுதும் இழுத்துக்கொண்டது. வின்னோகிராட் SHRDLU வை பயன்படுத்தவதை பார்த்தபோது, மேலும் சில வருடங்களிலிலே, நான் புனைவில் படித்த ‘மைக்’ பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று தோன்றியது. SHRDLU க்கு மேலும் சில சொற்களை சொல்லித்தரவேண்டும். அவ்வளவுதான்.
கார்னல் பல்கலையில் அப்போது செயற்கை நுண்ணறிவைப் பற்றிய வகுப்புகள் எதுவுமில்லை. அதனால் நானே கற்று கொள்ள துவங்கினேன். செயற்கை நுண்ணறிவின் அன்றைய நிரல்மொழியான லிஸ்ப் (Lisp) படித்தேன். அன்று பயன்பாட்டில் இருந்த நிரல்மொழிகள் எளியவை. என்னுடைய இளங்கலை ஆய்விற்கு SHRDLU வை பகுத்துப் புரிந்து கொண்டேன். நான் மிகவும் விரும்பிச் செய்த செயல் அது. அந்த நிரல் எனக்குப் பிடிக்கக் காரணம் நான் அறிவின் அடிவாரத்தில் ஏறத் துவங்கிவிட்டேன் என்ற எண்ணம்தான்.
கார்னல் பல்கலையில் நான் சேர்ந்த படிப்பு எந்த குறிப்பிட்ட துறையையும் சேர்ந்தது இல்லை. பல்கலையில் நீங்கள் எந்த பாடத்தையும் படிக்கலாம். நீங்கள் எந்த பட்டத்தை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். “செயற்கை நுண்ணறிவு” என்று நான் போட்டு கொண்டேன். அடைப்பு குறிகளையும் (“ “) சேர்த்தே என் பட்டத்தில் போட்டிருந்ததை பார்த்த போது கடுப்பானேன். அடைப்புக்குறிகள் என்னை தொந்தரவு செய்தன. ஆனால் அது மிகச்சரியானது என்று பின்னால் நான் கண்டுகொண்ட காரணங்கள் உணர்த்தின.
இளநிலை படிப்பிற்கு பின்னர் முதுநிலை படிப்பிற்காக நான் மூன்று பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பித்து இருந்தேன்: செயற்கை நுண்ணறிவிற்கு புகழ் பெற்றிருந்த எம்.ஐ.டி மற்றும் யேல் மற்றும் ஹார்வேர்ட் பல்கலைகழகம். மேலும் நான் நகலெடுத்திருந்த SHRDLUவின் பகுப்பானை (parser) கண்டுபிடித்திருந்த பில் வுட்ஸ் ஹார்வேர்ட்டில் இருந்தார். ஹார்வேர்ட் மட்டுமே என் விண்ணப்பத்தை ஏற்றது.
எனக்கு எப்போழுது தோன்றியது என்று தெரியவில்லை, அல்லது ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிகழ்வா என்றும் நினைவில் இல்லை. ஆனால் என்னுடைய முதுநிலை படிப்பின் முதல் வருடத்தில், அன்றைய செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு ஏமாற்று என்பதை நான் உணர்ந்தேன். “ஒரு நாய் தன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறது” என்ற சொற்றொடரை பகுத்து, தன் அறிதல்களில் ஒன்றாக சேர்த்துக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவு கணினிநிரல்களைப்பற்றி சொல்கிறேன்.இயற்கை மொழியை உண்மையிலே புரிந்து கொள்வதற்கும், இந்த கணினிநிரல்கள் செய்தவற்றிற்கும் ஒரு நிரப்பவே முடியாத இடைவெளி உள்ளது என்பது எனக்கு தெளிவாகியது.
அது SHRDLU க்கு மேலும் சில சொற்களை சொல்லித்தருவது மட்டுமல்ல. தகவல் கட்டமைப்பை உருவாக்குதல், சில கொள்கைகளை வடிவமைத்தல் என செயற்கை நுண்ணறிவை உருவாக்கிக்கொண்டிருந்த மொத்த வழிகளும் தவறென்று தோன்றியது. நிறைய வெற்று ஆய்வுகளையும், பல்வேறு பிளாஸ்திரி ஒட்டுகளை போடுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கினவே தவிர, அறிவாளி கணினியான “மைக்” ஒருநாளும் உருவாக்கப்போவதில்லை என்று தெளிவானது.
என்னுடைய தோல்வி அடைந்த திட்டத்தில் எது மிஞ்சும் என பார்த்தேன். லிஸ்ப் நிரல்மொழி மட்டும் இருந்தது. அன்று மக்கள் அதை பொருட்படுத்தியது செயற்கை நுண்ணறிவிற்காகத்தான். லிஸ்ப்பில் வேலை செய்த அனுபவத்திலிருந்து, அது தன்னளவிலேயே பயனுள்ள நிரல்மொழி என்பதும் செயற்கை நுண்ணறிவைத்தவிர மற்றவற்றிற்கும் பயன்படும் என்றும் தெரிந்தது. அதனால் லிஸ்ப்பில் கவனத்தை திருப்பினேன். உண்மையில் லிஸ்ப்பை பற்றி ஒரு புத்தகம் எழுத தீர்மானித்தேன். லிஸ்ப் பற்றிய என் அறிவு மிக குறைவானது. லிஸ்ப் ஹாக்கிங் பற்றிய புத்தகம் என்ற எண்ணமே எனக்கு திகிலை ஏற்படுத்தியது. ஆனால் ஒன்றை கற்றுக்கொள்வதற்கு அதைப்பற்றிய புத்தகம் எழுதுவது மிகச்சிறந்த வழி. “ஆன் லிஸ்ப்” (On Lisp) என்ற அந்த புத்தகம் 1993 வரை வெளிவரவில்லை. ஆனால் அதன் பெரும்பகுதியை நான் முதுகலை கல்வியின் போதே எழுதிவிட்டேன்.
கணினி இயல் என்பது இரண்டு பொருந்தாத பகுதிகளின் கூட்டு — கோட்பாடு (theory) மற்றும் தொழில்நுட்பம் (system/technology). கோட்பாட்டாளர்கள் நிறுவதை தொழில்நுட்பத்தினர் வடிவமைப்பார்கள். எனக்கு கோட்பாட்டாளர்கள் மீது மிகுந்த மதிப்பிருந்தாலும், இரண்டில் மதிக்கத்தக்கது கோட்பாடே என்று உள்ளூர குடையும் ஓர் எண்ணமிருந்தாலும் எனக்கு தொழில்நுட்ப வடிவமைப்புதான் மிக பிடித்திருந்தது.
தொழில்நுட்பத்தின் பிரச்சனை என்னவென்றால் அதன் ஆயுள் குறைவு. இன்று நீங்கள் எந்த கணினிநிரலை எழுதினாலும், அது எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், அதிகபட்சம் சில தசாப்தங்களில் அது காலாவதி ஆகிவிடும். உங்கள் மென்பொருள் எங்கோ ஒரு அடிக்குறிப்பாக மிஞ்சலாம். ஆனால் அதை யாரும் பயன்படுத்த மாட்டார்கள். மேலும் காலம் செல்லச்செல்ல அது மிக சிறியதாக ஆகும். அந்த துறையின் வரலாற்றில் ஆர்வமுள்ள யாரோ ஒருவர் வேண்டுமானால் அதன் காலத்தில் அது சிறந்ததாக இருந்தது என்று நினைக்கலாம்.
எங்கள் கணினி ஆய்வகத்தில் தேவைக்கு அதிகமான சில ஜெராக்ஸ் மெஷின்கள் இருந்தன. யாருக்காவது அவை தேவையென்றால் உபயோகப்படுத்தி கொள்ளலாம். எனக்குக்கூட அவற்றைப் பயன்படுத்தலாம் என்று தோன்றியது. ஆனால் அன்றைய காலத்திற்கே அது மிகவும் மெதுவாக வேலைசெய்தது. அதனால் என்ன பயன்? யாருக்கும் அது தேவைப்படவில்லை. அதனால் அவை குப்பை கூடைக்கு சென்றன. தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டவற்றின் நிலை அதுதான்.
எனக்கு ஏதோ ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மட்டும் தோன்றவில்லை. காலத்தால் நிலைத்து நிற்கக்கூடிய ஒன்றை உருவாக்கவேண்டும் என்றும் தோன்றியது.
திருப்தியற்ற இந்த நிலையில், 1988இல் என் நண்பன் ரிச் டேவிஸை அவன் முதுநிலை படித்துக்கொண்டிருந்த CMU பல்கலையில் சந்திக்கச்சென்றேன். ஒரு நாள், நான் இளமையில் நிறைய நேரம் செலவழித்த கார்னகி இன்ஸ்டிட்யூட்டிற்கு சென்றேன்.
அங்கு ஒரு ஓவியத்தை அன்று பார்த்துக்கொண்டிருந்தபோது மிக அப்பட்டமான ஒரு எண்ணம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்தச் சுவரில், நீங்கள் உருவாக்ககூடிய ஒன்று, நீண்ட நாள் நிலைத்து நிற்கக்கூடிய ஒன்று இருந்தது. ஓவியங்கள் அழிவதில்லை. மிகச்சிறந்த ஓவியங்கள் பல நூற்றாண்டுகளை தாண்டியும் நிலைத்து நிற்கக்கூடியவை.
மேலும், ஓவியம் வரைந்தால் வருமானமும் வரலாம். மென்பொருள் எழுதும் அளவிற்கு எளிமையாக வருமானம் வராது என்றாலும், தொடர்ந்து உழைத்தால், மிகச்சிக்கனமாக இருந்தால், சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஒரு கலைஞனாக உண்மையிலேயே சுதந்திரமாகவும் இருக்கலாம். எனக்கு ஒரு மேலாளர் இருக்கமாட்டார் அல்லது நான் ஆய்வுநிதிக்காக அலைய தேவையில்லை.
எனக்கு எப்பொழுதுமே ஓவியங்களை பார்க்கப் பிடிக்கும். என்னால் அவற்றை உருவாக்க முடியுமா? தெரியவில்லை. முடியும் என ஒருநாளும் கற்பனைகூட செய்தது இல்லை. கலைஞர்கள் கலையை உருவாக்குகிறார்கள் என்று எனக்கு தெரியும். கலை “தானாக” தோன்றுவதில்லை. ஆனால் அந்த கலைஞர்கள் வேறு ஒரு இனம் என்று தோன்றியது. அவர்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் அல்லது அவர்கள் ஏதோ ஒரு மர்மமான அதிபுத்திசாலிகள். வாழ்வில் ஏதோ வித்தியாசமாக செய்து கொண்டிருந்தார்கள். “கலையை உருவாக்குதல்” – கலை என்ற பெயர்ச்சொல்லை தொடர்ந்து வரும் ‘உருவாக்குதல்’ என்ற வினைச்சொல்லே ஒரு அற்புதம் போல தோன்றியது.
அடுத்த செமஸ்டரில் ஹார்வேர்டில் நான் கலையைப் பற்றிய வகுப்புகளில் சேர்ந்தேன். அங்கு முதுநிலை மாணவர்கள் எந்த துறையிலும் எந்த வகுப்புகளிலும் சேரலாம். நான் சேர்ந்த வகுப்புகளை பற்றி என் வழிகாட்டி என் வழிகாட்டி பேராசிரியர் டாம் சேத்தம் அறிந்தாலும் அவர் ஒன்றும் சொன்னதில்லை.
இப்படியாக நான் கணிப்பொறி துறையில் முனைவர் ஆய்வில் இருந்தாலும், ஒரு ஓவியனாக ஆக திட்டமிட்டிருந்த போதே, லிஸ்ப் ஹாக்கிங்கிலும் அதிவிருப்பத்துடன் “ஆன் லிஸ்ப்”(On Lisp) புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்தேன். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், நிறைய முதுநிலை மாணவர்கள் போல, என் ஆய்வைத்தவிர நிறைய விஷயங்களில் மிகுந்த ஊக்கத்தோடு ஈடுபட்டேன்.
இந்த சூழலில் இருந்து எப்படி வெளிவருவது என்று தெரியவில்லை. முதுகலை படிப்பில் இருந்து வெளியேற விரும்பவில்லை. ஆனால் வேறெப்படி வெளியேறுவதாம்? 1988இல் இணையத்தை ஸ்தம்பிக்க செய்த இண்டெர்னெட் வார்மை (internet worm) எழுதியமைக்காக என் நண்பன் ராபர்ட் மோரிஸ் கார்னெலில் இருந்து வெளியேற்றப்பட்டது நினைவிற்கு எழுந்தது. அதுபோல பொறாமைப்படக்கூடிய வெளியேறும் வழி எதுவும் எனக்கு தோன்றவில்லை.
பின்பு 1990 ஏப்ரலில் ஒரு நாள் சுவரில் ஒரு விரிசல் தோன்றியது. பேராசிரியர் சேத்தமை சந்திக்க நேர்ந்தது. அவர் அந்த ஜூன் மாதத்தில் நான் ஆய்வை முடித்து பட்டம் பெறுவேனா என்று கேட்டார். என் ஆய்வுக்கட்டுரையில் ஒரு வரி கூட நான் எழுதியிருக்கவில்லை. ஆனால் என் வாழ்வின் மிகக்குறுகிய காலத்தில் எடுத்த முடிவு அது. “ஆன் லிஸ்ப்” புத்தகத்திற்காக நான் ஏற்கனவே செய்த ஆராய்ச்சியை பயன்படுத்தி ஐந்து வாரத்தில், காலக்கெடுவிற்கு முன்பு, ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்து விடலாம் என்று நினைத்தேன். அவருடைய கேள்விக்கு சிறிதும் தாமதிக்காமல் “ஆம் என்று நினைக்கிறேன். இன்னும் சில நாட்களில் உங்களின் பார்வைக்கு கட்டுரையை அனுப்புகிறேன்” என்றேன்.
என் கட்டுரையின் தலைப்பாக ‘செயல்வடிவங்களின் தொடர்ச்சி’யை தேர்ந்தெடுத்தேன். யாருமே தொடாத ஆராய்ச்சிக்குரிய ஒரு முழு உலகம் அதில் ஒளிந்திருந்தது. ஆனால் என்னுடைய நோக்கமெல்லாம் எப்படியாவது முதுகலை பட்டத்தோடு பல்கலையில் இருந்து வெளியேற வேண்டும் என்றுதான். நான் அவரசமாக எழுதிய ஆய்வுக்கட்டுரை அதற்கு போதுமானதாக இருந்தது.
அதே நேரம் நான் கலைக்கல்லூரிகளுக்கும் விண்ணப்பித்து கொண்டிருந்தேன். இரண்டு கல்லூரிகள்: அமெரிக்காவில் RISD, இத்தாலி ஃப்ளாரென்ஸ் நகரின் அகடெமியா டி பெல்லி ஆர்டி. இத்தாலி கல்லூரிதான் கலைக்கல்லூரியில் மிக பழமையானது, அதனால் அது சிறப்பானதாக இருக்கும் என்று நினைத்தேன். RISD என்னை ஏற்று கொண்டது. அகடெமியாவில் இருந்து எந்த தகவலும் இல்லை. அமெரிக்காவின் பிராவிடண்ஸ் மாகாணத்திலிருந்த RISDக்கு சென்றேன்.
RISD இன் இளங்கலை (BFA) படிப்பில் சேர்ந்திருந்தேன். இருபத்தி ஐந்தாவது வயதில் மீண்டும் கல்லூரிக்கு சென்றது அப்படியொன்றும் வித்யாசமாக இல்லை. ஏனென்றால் கலைக்கல்லூரியில் எல்லா வயதிலும் மாணவர்கள் இருந்தார்கள். RISD என்னை வேறு கல்லூரியில் இருந்து மாற்றலாகி வந்த இரண்டாம் ஆண்டு மாணவனாக கருதியது. வரைதல், நிறங்கள் மற்றும் வடிவமைப்பு போன்ற அடிப்படை வகுப்புகளை நான் கோடை விடுமுறை வகுப்பில் கற்றுத்தேர வேண்டும்.
கோடை வகுப்பின் முடிவில் எனக்கு பெரிய ஆச்சிரியம் காத்திருந்தது: இத்தாலியின் அகடெமியாவிலிருந்து வந்த ஒரு கடிதம். கடிதத்தின் தாமதத்திற்கான காரணம் – அமெரிக்காவின் மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜிற்கு பதில் அவர்கள் கடிதத்தை இங்கிலாந்திலிருந்த கேம்பிரிட்ஜிற்கு அனுப்பிவிட்டார்கள். அந்த கடிதத்தில் என்னை ஃப்ளாரென்ஸ் நகரில் நடைபெறும் நுழைவுத்தேர்விற்கு அழைத்திருந்தார்கள். அதற்கு இன்னும் சில வாரங்களே இருந்தன. என் வீட்டு உரிமையாளர் அவருடைய வீட்டில் என்னுடைய பொருட்களை விட்டுச் செல்ல சம்மதித்தார். முதுநிலை பயிலும் காலத்தில் நான் செய்த சில ஒப்பந்தப் பணிகளால் என்னிடம் கொஞ்சம் பணம் இருந்தது. சிக்கனமாக இருந்தால் ஒரு வருடம் தாங்கும். நான் இத்தாலிய மொழியைக் கற்று கொள்ள வேண்டும்.
வெளிநாட்டினருக்கு மட்டுமே நுழைவு தேர்வு. வெளிநாட்டினரை தவிர்ப்பதற்கான ஒரு வழி என்று தோன்றியது. ஏனென்றால் இத்தாலி ஃப்ளாரென்ஸில் கலையைப்பற்றி படிக்க ஏகப்பட்ட வெளிநாட்டினர் குவிந்தால் உள்ளூர் இத்தாலியர்களுக்கு இடமில்லாமல் போய்விடும். RISDஇல் சில மாதங்களில் நான் கற்ற ஓவிய அடிப்படை கல்வி எனக்கு உதவியது. இருந்தும் அந்த நுழைவுத்தேர்வில் எப்படி தேர்வானேன் என்பது எனக்கும் ஆச்சிரியம்தான். சிஸேன் பற்றிய கட்டுரை எழுதினேன் என்று நினைவில் உள்ளது. என்னுடைய குறைவான இத்தாலிய சொற்களைக்கொண்டு, முடிந்தவரை என் அறிவை அதிகபட்சமாக பயன்படுத்தி அந்த கட்டுரையை எழுதியிருந்தேன்.
எனக்கு 25 வயதுதான் ஆகியிருந்தது. ஆனால் அதற்குள்ளேயே சில விஷயங்கள் மீள நிகழ்ந்தன. இதோ மீண்டும் ஒரு பெருமைமிக்க கல்வி நிறுவனத்தில் ஒரு மதிப்புமிக்க ஒரு பாடத்தை கற்கப்போகிறேன், ஆனால் ஏமாற்றமடையப்போகிறேன். அகடெமியாவின் ஓவியத்துறையில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் நான் சந்தித்தவர்களில் அருமையானவர்களாக இருந்தாலும், அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே ஓர் ஒப்பந்தத்திற்கு வந்துவிட்டார்கள். அதாவது மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து ஏதுவும் கற்று கொள்வது இல்லை. ஆசிரியர்களும் மாணவர்களுக்கு எதுவும் கற்று கொடுப்பதும் இல்லை. வெளிப்பார்வைக்கு அனைவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கலைக்கூடத்தின் முறைமைகளை கடைபிடித்தார்கள். அங்கே உண்மையிலே பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஓவிய அறையில் இருக்கும் சிறிய அடுப்புகள் இருந்தன. ஒரு நிர்வாண மாடல் சூடுபட்டு கொள்ளாமல் கவனமாக அதன் அருகில் அமர்ந்திருப்பாள். என்னை தவிர வேறு யாரும் அவளை வரையவில்லை. மற்ற மாணவர்கள் எல்லாம் தங்களுக்குள் அரட்டை அடித்துக்கொண்டும், எப்பொழுதாவது அமெரிக்க கலை இதழ்களில் பார்த்தவற்றை நகலெடுத்து கொண்டும் இருந்தார்கள்.
அந்த மாடல் எனக்கு அடுத்த தெருவில் தான் வசித்தாள். மாடலிங் மற்றும் அங்கிருந்த ஒரு பழைய கலைவிற்பனருக்கு ஓவியங்களை நகல் செய்து கொடுத்தும் சம்பாதித்தாள். பிரபலமில்லாத ஓவியத்தை ஏதோ ஒரு பழைய புத்தகத்திலிருந்து நகலெடுத்து விற்பனரிடம் தருவாள். அவன் அதை மீண்டும் நகலெடுத்து, சிறிது சிதைத்து பழையது போல மாற்றி விற்பான்.
நான் அக்கடெமியாவில் மாணவனாக இருந்தபோது, இரவில் என் அறையில் ஸ்டில் லைஃப் ஓவியங்களை வரைய துவங்கினேன். அந்த ஓவியங்கள் மிகச் சிறியவை. ஏனென்றால் என் அறையும் மிகச் சிறியது. மிச்சம் மீதியாக கிடைத்த கான்வாஸில் தான் வரையமுடியும். எனக்கு அதுதான் கட்டுபடியானது. மனிதர்களை வரைவதை விட பொருட்களை வரைவது வேறு. மனிதர்களால் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் அசையாமல் அமர்ந்திருக்க முடியாது. பொது வடிவத்தை வரைந்து, அதன் பின் நீங்கள் வரைபவருக்கு ஏற்ப உங்கள் ஓவியத்தை மாற்றிக்கொள்வதுதான் பொதுவான முறை. இந்த சிக்கல் இல்லாமல், நிலைபொருட்களை துளித்துளியாக அப்படியே வரைந்து கொள்ளலாம். அதோடு நிறுத்திக்கொண்டால் ஒரு புகைப்பட துல்லியத்தை வரைந்திருப்பீர்கள். ஆனால் நிலை பொருள் ஓவியம் எதனால் சுவாரஸ்யமானது என்றால், அது உங்கள் தலை வழியாக கடந்து சென்றிருக்கிறது. காட்சி நுணுக்கங்களை நீங்கள் உயர்த்திக்காட்ட முயல்வீர்கள் – உதாரணமாக ஒரு இடத்தில் நிறம் சட்டென்று மாறுகிறது என்றால், அது அந்த பொருளின் விளிம்பு என்று பொருள். இப்படி சில நுணுக்கங்களின் மூலம் ஓவியத்தை புகைப்படத்தைவிட மேலும் ரியலிஸ்டிக்காக ஆக்க முடியும். இதை உருவகமாகச் சொல்லவில்லை, தகவல் கோட்பாட்டின் அடிப்படையில் சொல்கிறேன்.
எனக்கு நிலைபொருட்களை வரைவது பிடித்திருந்தது. நான் எதைக் காண்கிறேன் என்று தெரிந்து கொள்வதற்காக. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் எதை பார்க்கிறோம் என்று நினைவில் வைத்து கொள்வதில்லை. முக்கால்வாசி காட்சி உணர்வுகள் மூளைக்கு வெறும் தகவலாக அனுப்பப்படும் – உதாரணத்திற்கு “அது ஒரு நீர்த்துளி” என்ற தகவலாக போய் சேரும். எங்கே ஒளி அதிகமாக உள்ளது, எங்கே இருளாக உள்ளது என்ற விரிவான தகவல்களை அனுப்பாது. “அது ஒரு புதர்” என்ற செய்தி அதன் ஒவ்வொரு இலையின் வடிவத்தையோ அல்லது இடத்தையோ அனுப்பாது. இது நம் மூளை செயல்படும் விதம். இது ஒரு கோளாறல்ல. ஆனால் நீங்கள் ஒன்றை ஓவியமாக வரையவேண்டும் என்றால், நீங்கள் மேலும் உற்று நோக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் கவனித்தீர்களென்றால், அதில் நிறைய விஷயங்கள் உள்ளன. அனைவருக்கும் பொதுவாக தெரிந்தவற்றிலே பல நாட்கள் வரைந்தபின்பும் நீங்கள் புதியவற்றை கவனிப்பீர்கள். எல்லோருக்கும் தெரிந்தவற்றையே கட்டுரையாக பல நாட்கள் எழுதும்பொது புதியவற்றை கவனிப்பதைப்போல.
இது மட்டுமே ஓவியம் வரைவதற்கான வழி இல்லை. ஓவியம் வரைவதற்கு இது சரியான முறையா என எனக்கு நூறு சதவீதம் தெரியவில்லை. ஆனால் முயற்சி செய்யும் அளவிற்கு நன்றாக இருந்தது.
என்னுடைய பேராசிரியர் உலிவி நல்ல மனிதர். நான் கடினமாக உழைக்கிறேன் என்பது அவருக்கு தெரிந்தது. எல்லா மாணவர்களிடமும் இருந்த ஒரு பாஸ்போர்ட் அளவுள்ள குறிப்பேட்டில் எனக்கு நல்ல மதிப்பெண்களை எழுதித்தந்தார். ஆனால் அகெடெமியா எனக்கு இத்தாலி மொழியைத்தவிர வேறொன்றையும் கற்றுக் கொடுக்கவில்லை. பணமும் காலியாகிக்கொண்டிருந்தது. அதனால் முதல்வருட முடிவில் நான் அமெரிக்காவிற்கு திரும்பி வந்துவிட்டேன்.
நான் RISD கல்லூரிக்கு திரும்பிப்போக முயன்றேன். ஆனால் என்னிடம் பணம் இல்லை. RISDயின் கல்வி கட்டணம் மிக அதிகம். அதனால் ஒரு வருடம் வேலைக்குச்சென்ற பின், அடுத்த ஆண்டு மீண்டும் RISDக்கு செல்லலாம் என திட்டமிட்டேன். இண்டெர்லீஃப் என்ற மென்பொருள் நிறுவனத்தில் ஒரு வேலை கிடைத்தது. மைக்ரோஸாப்ட் வேர்ட் போல கோப்புகள் (documents) உருவாக்கக்கூடிய மென்பொருள் நிறுவனம். விலை குறைந்த மென்பொருள் எப்படி விலை உயர்ந்த மென்பொருளை விழுங்குகிறது என்பதை நான் அங்கேதான் அறிந்து கொண்டேன். அப்போதைக்கு இண்டெர்லீஃப் மேலும் சில வருடங்கள் உயிருடன் இருந்தது.[5]
இண்டெர்லீஃப் நிறுவனத்திற்கு ஒரு லிஸ்ப் கொந்தர் தேவைப்பட்டார். பொதுவாக ‘வேலை’ என எல்லோரும் சொல்வதற்கு அருகில் வந்த ஒன்றை நான் செய்தது அப்போழுதுதான். அங்கு ஒரு மோசமான ஊழியராக இருந்ததிற்கு என் மேலாளரிடமும், சக ஊழியர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பெரிய கேக்கில் தடவப்பட்ட சிறிய கிரீமைப்போல, மென்பொருள் முழுவதும் C மொழியில் எழுதப்பட்டு, Lisp மொழி மிகக்குறைவாக பயன்படுத்தப்பட்டிருந்தது. C மொழி எனக்கு தெரியாததாலும், கற்க விரும்பாததாலும் அந்த மென்பொருள் என்னவென்றே எனக்கு புரியவில்லை. மேலும் மிக ஊதாரியாக இருந்தேன். அன்று மென்பொருள் வேலை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வர வேண்டும் என்று இருந்தது. எனக்கு அது மிக செயற்கையாக இருந்தது. நான் யோசித்ததை போலவே மென்பொருள் உலகம் யோசித்து வருவதற்கு கொஞ்ச காலம் ஆனாலும், அன்று நிறைய சிக்கல்களை ஏற்படுத்தியது. ஒரு வருட முடிவில் நான் பெரும்பாலும் ‘ஆன் லிஸ்ப்’ புத்தகத்தில் வெளியே சொல்லாமல் எழுதிக் கொண்டிருந்தேன். அந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்க ஒரு ஒப்பந்தமும் கிடைத்தது.
இதில் நல்ல விஷயம் எனக்கு நிறைய பணம் தந்தார்கள். ஓர் ஓவியத்துறை மாணவனின் கணக்கில் அது பெரிய தொகை. இத்தாலியின் ஃப்ளாரென்ஸில் வாடகை போக, ஒரு நாளிற்கான என் பட்ஜெட் ஏழு டாலர். இப்பொழுது சும்மா மீட்டிங்கில் உட்கார்ந்திருந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு அதைவிட நான்கு மடங்கு சம்பளம் தந்தார்கள். சிக்கனமாக இருந்ததால் RISDக்கு திரும்பிச்செல்ல மட்டுமல்ல, என்னுடைய கல்விக் கடன்களையும் அடைக்க முடிந்தது.
இண்டெர்லீஃப் நிறுவனத்தில் என்ன செய்யக்கூடாது என்று கற்றுக்கொண்டேன். ஒரு தொழில்நுட்ப நிறுவனம் விற்பனையாளர்களைவிட (sales), மென்பொருளை உருவாக்குபவர்களால் (product) நடத்தப்பட வேண்டும்; நிறைய பேர் மென்பொருளில் கை வைத்தார்கள் என்றால், அதில் நிறைய பிழைகள் உருவாகும்; வாடகை குறைவான அலுவலகக் கட்டிடம் மனச்சோர்வை உருவாக்கும்; திட்டமிட்ட மீட்டிங்குகளைவிட அறைகளுக்கு வெளியே நடக்கும் உரையாடல்கள் பயனுள்ளவை; பெரிய சிவப்பு நாடா கஸ்டமர்களிடமிருந்து வரும் பணம் அபாயகரமானது.
ஆனால் நான் கற்றவற்றில் மிக முக்கியமானது – வியாவெப்பிலும் Y Combinator லும் பயன்படுத்தியது – கடைநிலை மேல்நிலையை உண்டுவிடும் என்பது: நீங்கள் விற்கும் பொருள் எளிமையான, விலை குறைவானதாக இருப்பது பெருமையாக இல்லையென்றாலும் நல்லது. இல்லையென்றால், வேறொருவர் வந்து உங்களை சுவரோடு சேர்த்து சாத்தி விடுவார்கள். பெருமை என்பது அபாயகரமானது.
1992 இன் பின்பகுதியில் நான் மீண்டும் பிராவிடன்ஸ் மாநிலத்தின் RISD கல்லூரிக்கு திரும்பி சென்றேன். ஏற்கனவே கற்று கொண்ட ஓவிய அடிப்படைகள் மிகவும் ஆரம்ப நிலை பாடங்களாகவும், இத்தாலியின் அகடெமியா ஓவியகல்லூரி சுத்த டுபாக்கூராகவும் இருந்தது. இப்போது உண்மையான கலைக்கல்லூரி எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளப்போகிறேன். ஆனால் RISDயும் அகெடெமியாவை போன்றே இருந்தது. கண்டிப்பாக அதிக செலவு பிடித்தது. மருத்துவத்திற்கும் மருத்துவ கல்லூரிக்கும் உள்ள தொடர்பு கலை கல்லூரிக்கும் கலைக்கும் கண்டிப்பாக இல்லை என்று தெளிவாக தெரிந்தது. குறைந்தபட்சம் ஓவியதுறைக்கும் ஓவியத்திற்கும் சம்பந்தமில்லை. என் பக்கத்து அறை நண்பர் படித்த நெசவுத்துறை மிகக்கடினமாக இருந்தது. கட்டிடத்துறையும் அவ்வாறே. ஆனால் ஓவியம் அதைத்தாண்டியதாக இருந்தது. ஓவியக்கல்லூரி மாணவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதனாலோ என்னவோ, தங்களுக்கான “சிக்னேச்சர் ஸ்டைல்” எனும் தனித்த ஒரு அடையாளத்தை போலியாக உருவாக்க முயற்சி செய்து கொண்டே இருந்தார்கள்.
“சிக்னேச்சர் ஸ்டைல்” என்பது ஒரு ஓவியத்தை பார்த்தவுடன் இந்த ஓவியருடையது என்று அடையாளம் காட்டக்கூடியது. இலக்கியத்தில் தனித்த நடை என்பதைப்போல. ஒரு கார்ட்டூன் போல இருக்கும் ஒரு ஓவியத்தை பார்த்த உடன் அது ராய் லிச்டன்ஸ்டீன் என்று தெரியும். ஒரு பங்குச்சந்தை தரகரின் அலுவலக சுவரில் அதை போன்ற பெரிய ஓவியம் ஒன்று மாட்டப்பட்டிருந்தால், அதற்காக அவர் பல மில்லியன் டாலர்களை செலவழித்திருப்பார் என்று உங்களுக்கு தெரியும். ஓவியர்கள் பணத்திற்காக ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள மாட்டார்கள் என்றாலும், வாங்குபவர்கள் தனித்த அடையாளத்திற்குத்தான் பெரும் பணம் செலவிடுவார்கள்.
உண்மையிலே சின்சியரான நிறைய மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் பள்ளியிலே மிகச்சிறப்பாக வரைந்தவர்கள். இன்னும் சிறப்பாக வரைவதற்காக நாட்டிலேயே உள்ள சிறந்த ஓவியக்கல்லூரிக்கு வந்தவர்கள். ஆனால் RISD அவர்களை குழப்பியும், அவர்களின் தன்னம்பிக்கையை இழக்கவும் வைத்தது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து வரைந்தார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஓவியத்தை தவிர வேறொன்றும் தெரியாது. பள்ளியில் நான் வரைந்ததில்லை என்றாலும், அவர்களோடுதான் நான் இருந்தேன். தனித்த அடையாளத்தை தேடிய கூட்டத்தோடு இல்லை.
RISD இல் நிறங்கள் வகுப்பில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் மற்றபடி நானேதான் ஓவியம் கற்றுக்கொண்டிருந்தேன். அதற்கு எதற்கு கல்லூரிக்கு காசு கொடுக்க வேண்டும்? அதனால் 1993 இல் கல்லூரியில் இருந்து விலகி விட்டேன். பிராவிடன்ஸ் மாநிலத்தில் சிறிது நாள் சுற்றி கொண்டிருந்த போது, என் கல்லூரி நண்பர் நான்சி பார்மட் எனக்கு ஒரு பெரிய உதவி செய்தாள். அவளின் அம்மாவுடைய வீடு ஒன்று நியூயார்க்கில் காலியாகிறது. அந்த வீடு உனக்கு வேண்டுமா ? என்றாள். வாடகை-சட்டத்திற்கு உட்பட்ட அந்த வீட்டின் வாடகையை அரசாங்கம் நிர்ணயிக்கும். என்னுடைய அப்போதைய வீட்டு வாடகையை விட அது அதிகமில்லை. மேலும் கலைஞர்கள் எல்லாம் நியூயார்க்கில் தான் இருந்தார்கள். அதனால் அந்த வீடு எனக்கு தேவைப்பட்டது.
ஆஸ்டிரிக்ஸ் காமிக்ஸ் ரோமன் கவுல் (Roman Gaul) ஒரு மூலையிலிருந்து துவங்கும். அது ரோமன்களின் ஆளுகைக்குக் கீழ் இருக்காது. அதுபோல நியூயார்க் நகரின் வட கிழக்குப் பகுதியின் ஒரு சிறிய மூலை பணக்காரர்களுடையது அல்ல. 1993இல் அது பணக்கார ஏரியா இல்லை. யார்க்வில் என்ற அந்த ஏரியாவில் தான் என் வீடு இருந்தது. இப்போது நான் ஒரு நியூயார்க்க நகர ஓவிய கலைஞனாகி விட்டேன்.
எனக்கு பணத்தைப் பற்றிய பதற்றம் உண்டாக துவங்கியது. இன்டெர்லீஃப் ஊத்தி மூடிக்கொண்டிருந்தது. லிஸ்ப் நிரல்மொழியில் ஒப்பந்த பணிகள் குறைந்து கொண்டிருந்தது. எனக்கு வேறு நிரல்மொழிகளை பயன்படுத்தப் பிடிக்கவில்லை. அதனால் தெளிவான பணத்தேவைக்காக இன்னொரு லிஸ்ப் புத்தகம் எழுத முடிவு செய்தேன். இது ஒரு பாப்புலரான புத்தகமாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். பாடப்புத்தகமாக வைக்க கூடியதாக இருக்க வேண்டும். கிடைக்கும் ராயல்டியில் சிக்கனமாக வாழ்ந்து, மிச்ச நேரத்தையெல்லாம் ஓவியத்தில் செலவிடலாம் என கற்பனையில் மிதந்தேன். “ANSI காமன் லிஸ்ப்” புத்தகத்தின் அட்டைப்பட ஓவியம் அப்போது நான் வரைந்தது.

நியூயார்க் நகரில் ஐடில் மற்றும் ஜூலியன் வெப்பருடன் செலவிட்ட நேரம் நிறைவானது. ஐடில் வெப்பர் ஒரு ஓவியர். பெண். ஃபோட்டோ ரியலிச வகைமையில் வரையக்கூடியர். ஹார்வெர்ட் பல்கலையில் அவருடைய வகுப்புகளில் நான் அமர்ந்துள்ளேன். நிறைய முன்னாள் மாணவர்கள் அவருடன் தொடர்பில் இருந்தார்கள். நியூயார்க்கிற்கு வந்த பின்பு அவருடைய உதவியாளராக ஆனேன்.
நான்கடி அல்லது ஐந்தடி சதுர பெரிய கான்வாசில் வரைவது அவருக்கு படிக்கும். 1994 இல், ஒரு பெரிய கான்வாசை பிரித்துக்கொண்டிருந்தபோது, ரேடியோவில் ஒரு புகழ்பெற்ற பங்குச்சந்தை தரகரைப்பற்றி ஏதோ சொல்லி கொண்டிருந்தார்கள். அவருக்கு என்னுடைய வயதிருக்கலாம். ஆனால் பெரிய பணக்காரர். திடீரென்று எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. நான் ஏன் பணக்காரனாக ஆகக்கூடாது ? பணக்காரனாகி விட்டால் அப்புறம் நான் எனக்கு பிடித்த எதில் வேண்டுமானாலும் ஈடுபடலாமே.
[கட்டுரையின் அடுத்த இரண்டு பகுதிகள் அடுத்த இரண்டு நாட்களில் வெளிவரும்.]
Comments
3 responses to “பால் கிரஹாம் – வாழ்க்கை வரலாறு – 1 ”
[…] பால் கிரஹாம் – வாழ்க்கை வரலாறு – 1 […]
[…] முதல் பகுதி […]
[…] முதல் பகுதி […]