நேர்முகம் 3 : ஜெகதீஷ் குமார்

ஜெகதீஷ் குமார் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அமெரிக்காவின் தெற்கு கரோலைனா மாகாணம் சார்ல்ஸ்டன் நகரில் வசிக்கிறார். தமிழ் விக்கி: https://tamil.wiki/wiki/ஜெகதீஷ்குமார்.

எமர்சன் இலக்கிய முகாம், பூன்(2022) இல் ஜெகதீஷை முதலில் சந்திதேன். சிறுகதை அமர்வில் எழுத்தாளர் அசோகமித்ரனின் “பிரயாணம்” கதை குறித்து உரை ஆற்றினார். தெளிவான உச்சரிப்பு, கச்சிதமான உரை. அவர்மீது எனக்கு உடனடியாக ஒரு மதிப்பும், அன்பும் உருவானது. கடந்த மூன்று வருடங்களில் மொழிபெயர்ப்பு, சிறுகதை தொகுதி, தொகுப்பாசிரியர் என தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆறு நூல்கள் வெளிவந்துள்ளன. ஜெகதீஷின் வலைதளம்: https://jegadeeshk.blogspot.com

“Swaying, Flowing”, Turiya Press (2026) ஆங்கில சிறுகதை தொகுதி சமீபத்தில் வெளியானது.

 

உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், பின்புலம் பற்றி ?

பிறந்த ஊர் கோயம்புத்தூர். ஆனால் வளர்ந்து சில காலம் ஆன பிறகுதான் அங்கு மீண்டு திரும்பி சில ஆண்டுகள் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தேன். ஒரு தம்பி, ஒரு தங்கை. சிறுவயதில் தம்பியும், நானும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதால் எங்களைப் பிரித்து வைப்பதற்காக என்னை என் அப்பாவழி தாத்தா வீட்டில் குளித்தலையில் விட்டு விட்டு எங்கள் குடும்பம் சென்னையில் இருந்தது. தாத்தா வீட்டில் இருப்பதை நான்தான் தேர்ந்தெடுத்தேன் என்று பலகாலம் நம்பவைக்கப்பட்டிருக்கிறேன். தாத்தா குளித்தலையில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராக இருந்தவர். அவர் பணிக்காலத்தில் கட்டிய ஏதோ கட்டிடத் திறப்பு விழாவுக்கு அப்போதைய எம்.எல்.ஏ கருணாநிதி வந்து திறந்து வைக்க, கண்ணதாசன் வாழ்த்துக் கவிதை எழுதிக் கொடுத்ததையும், விழாவில் கே.பி. சுந்தராம்பாளின் பாட்டுக் கச்சேரி நடந்ததையும் தாத்தா என்னிடம் கதைகதையாகச் சொல்லியிருக்கிறார். புனைவு எழுதும் திறன் எனக்கு அவரிடம் இருந்து கூட வந்திருக்கலாம். அவர் பணி ஓய்வு பெற்றதும் அவருடன் கோவை சென்று அவரது மகன்கள் (என் சித்தப்பாக்கள்) ஆதரவுடன் சில காலம் வாழ்ந்தோம். பின் ஒன்பதாம் வகுப்பின் முடிவில் என் பெற்றோருடன் இணைந்து கொண்டேன். அப்பாவின் பணி காரணமாக அரியலூரில் மேநிலைப் படிப்பு, ஈரோட்டில் இளங்கலை படிப்பு என்று பல ஊர்களில் வாசம் நிகழ்ந்திருக்கிறது. இப்போது என் பெற்றோர் ஈரோடு மாவட்டம் குப்பாண்டபாளையத்தில் வசித்து வருகின்றனர்.

இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ? 

அம்மாவுக்கு வாசிக்கப் பிடிக்கும். நான் வயிற்றில் இருந்த போது நாவல்களாக வாசித்துத் தள்ளியிருக்கிறார்கள். சாண்டில்யன், கல்கி ஆகியோரின் நாவல்கள். நான் மிகச் சிறுவயதிலேயே வாசிக்கத் துவங்கி விட்டேன். நாலு அல்லது ஐந்து வயதிலேயே அம்புலிமாமா, படக்கதைகள், மாயாஜால நாவல்கள், என்று வாசித்துக் கொண்டிருந்தேன். ராஜாஜியின் சக்ரவர்த்தித் திருமகன் நினைவு தெரிந்து வாசித்த பெரிய நூல். விகடன், கல்கி ஆகிய இதழ்களின் தீபாவளி மலர்களில் எண்பதுகளின் இறுதியில் வாசித்த கதைகளில் சில இன்னும் நினைவிருக்கின்றன. வயது ஏற ஏற ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பிகேபி, சுபா என்று கிரைம் நாவல்களாக வாசித்துக் கொண்டிருந்தேன்.

உண்மையான இலக்கிய அறிமுகம் என்பது அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு நாவல் மூலமாகத்தான் நிகழ்ந்தது. அது இலக்கியப் புனைவு என்றெல்லாம் தரம் பிரிக்கத் தெரியாத பதினாலு வயதில் அதை வாசித்தேன். அ.மி ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்தினார். நான் அறிந்த உலகம்தான். ஆனால் நான் பார்க்காத கோணம். அந்த வயதடைதல் நாவல்தான் உண்மையில் இலக்கியத்தில் நான் வயதடைவதற்கும் காரணமாக இருந்தது என்று இப்போது தோன்றுகிறது.

இலக்கியத்தில் தொடர்ந்து ஈடுபடத்தொடங்கியது கல்லூரி முதலாண்டின் போதுதான். அப்போதும் நிறைய வாசித்துக் கொண்டிருந்தேன். சாண்டில்யனிலிருந்து முன்னேறி சுஜாதா, பாலகுமாரன், வைரமுத்து, போன்றோர்களை வாசித்துக் கொண்டிருந்த காலம். என் ஆங்கிலப் பேராசிரியர் எத்திராஜ் அகிலன் (காலச்சுவடுக்காக ஓரான் பாமுக் நாவலை மொழிபெயர்த்தவர்) எனக்கு நவீன இலக்கியம் பற்றி அறிமுகம் செய்தார். கணையாழி, சுபமங்களா போன்ற இதழ்களை எனக்குத் தந்து வாசிக்கச் செய்தார். தீவிர இலக்கியம் குறித்த அறிமுகம் நிகழ்ந்தது.

உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள் யார் ?

தமிழில் அசோகமித்திரன், தி. ஜானகிராமன், சுஜாதா, லா.ச.ரா, பிரபஞ்சன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர். அசோகமித்திரன்தான் ஆதர்சம். பிறமொழிகளில் ஹெர்மென் ஹெஸ், டால்ஸ்டாய், தாஸ்தாவ்ஸ்கி, ஜோசஃப் கான்ராட், கஸூவோ இஷிகுரோ, கார்மாக் மெக்கார்த்தி, இயன் மக்யூவன், அமோர் டவல்ஸ், அலிஸ் மன்ரோ என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். பிடித்த எழுத்தாளர்கள் என்பதைவிட பிடித்த நூல்கள் என்ன என்பதுதான் சரியான கேள்வியாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு எழுத்தாளரின் மாஸ்டர்பீஸை வாசிக்கும்போது அந்த எழுத்தாளர் மனதுக்குப் பிடித்தவராகி விடுகிறார்.

முதல் சிறுகதை எப்போது வெளியானது ? 

எது முதல் சிறுகதை என்பதில் குழப்பம் இருக்கிறது. கல்லூரி முதலாண்டு படிக்கும்போது பாக்யா இதழில் “என் உயிர்த்தோழி” என்ற சுமாரான ஒரு கதை வெளிவந்தது (எழுதியபோது நான் அப்படி நினைத்திருக்கவில்லை). அதே ஆண்டு இலங்கையில் இருந்து வெளிவந்த கலைக்கதிர் இதழ் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் நான் எழுதிய ந்யூமாவின் நகல்” என்ற சிறுகதை இரண்டாம் பரிசு இரண்டாயிரம் ரூபாய் வென்றது. இவ்விரண்டில் ஒன்றுதான் முதலில் வெளிவந்த கதையாக இருக்கலாம். இந்தக் கதை இப்போது கேரளத்தில் ஒரு பல்கலை கழகத்தில் தமிழ்ப்பாடத்தில் இருப்பதாக பாஸ்டன்பாலா ஆதாரத்தை எனக்கு அனுப்பி இருந்தார். நான் அப்படியே ஆடிப்போயிட்டேன்! கல்லூரிக்காலத்தில் மிக தைரியமாக நிறைய கவிதைகளும் எழுதியிருக்கிறேன். கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் மாநில அளவில் இரண்டாமிடம் (முதலிடம் பெற்றவர் “பெண்ணல்ல பெண்ணல்ல ரோசாப்பூ” எழுதியவர்) பெற்று அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கையால் இரண்டு பவுன் தங்கச் சங்கிலி பெற்றேன். அதே ஆண்டு எதிர்கட்சித் தலைவர் கருணாநிதி எங்கள் கல்லூரிக்கு வருகை தந்தார். அவருக்கு வரவேற்பு கவிதை வாசிக்கச் சொல்லி என்னைத்தான் கேட்டுக் கொண்டார்கள். ஒரே ஆண்டில் இரு பெரும் தலைவர்களைச் சந்தித்ததை இப்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

இலக்கியத்தரமான சிறுகதை முதலில் வெளியானது என்றால் உயிரோசை (அல்லது உயிரெழுத்தா?) இதழில் வெளியான நல்லசிவம் சிறுகதைதான். 2008 வாக்கில் இருக்கலாம்.

“பொற்குகை ரகசியம்” – உங்கள் முதல் சிறுகதை தொகுதி 2024 இல் வெளியாகி இருக்கிறது. அந்த தொகுப்பில் “கல்லளை” எனக்கு பிடித்த கதை. இந்த சிறுகதை எழுதிய அனுபவம் குறித்து சொல்லுங்கள்.

வெவ்வேறு களங்களில் கதைகள் எழுதிப்பார்க்க வேண்டும் என்ற ஆவலில் ஒரு வரலாற்றுப் புனைவும் எழுத வேண்டும் என்று உந்தப்பட்டு எழுதியதுதான் “கல்லளை.” இந்தச் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டபோது இக்கதை குறித்துப் பேசிய ஜெயமோகன் புறசாம்ராஜ்யத்தை வெல்வதற்காக ஒருவனும், அகசாம்ராஜ்யத்தை வெல்வதற்கான ஒருவனும் போராடுவது குறித்த கதை இது என்று குறிப்பிட்டார். அப்படி ஒரு கதையை எழுத வேண்டும் என்ற ஆவலில் எழுதியதுதான் இந்தக் கதை. வரலாற்றிலிருந்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு முழுக்க முழுக்க புனைவாகவே கதையை எழுத வேண்டும் என்று திட்டமிட்டு எழுதினேன். கங்காமூலாவின் மலைக்காடுகளில் வாழும் ஐந்து குடிகள் பற்றி நிறைய தகவல்கள் சேகரித்தேன். ஐந்து பெரும் மலைக்குடியினரின் பழக்க வழக்கங்கள், அவர்கள் பயன்படுத்தும் கருவிகள், உண்ணும் உணவு, கங்காமூலாவின் மரம், செடிகொடிகளின் பெயர்கள் இவை குறித்து நிறைய சேகரிக்க வேண்டியிருந்தது. அம்மக்களின் பெயர்களை அறிந்து கொள்வது மிகுந்த சிரமமாக இருந்தது. இப்போதெல்லாம் சாதாரணமான பெயர்கள்தாம் வைத்துக் கொள்கிறார்கள். பஸ்தாவா என்ற பெயரைக் கண்டுபிடித்ததும் பாதி கதையை எழுதி விட்டதைப் போல மகிழ்ச்சியாக இருந்தது. 

கதையில் ஒரு வேதாந்த ஆசிரியர் வருகிறார். கதையை எழுதிய காலத்தில் நான் ஜீவன் முக்தி விவேகம் என்ற நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். வித்யாரண்யர் எழுதியது. கதையின் குருசாமியை அவர் நினைவாகத்தான் அமைத்தேன். வித்யாரண்யகர் என்று பெயர் மாற்றி அமைத்தேன். எனக்கு ஏற்கனவே இருந்த வேதாந்தம் குறித்த அறிவு இக்கதையின் போக்குக்கு உதவியாக இருந்தது. கதைக்கான குறிப்புகளைச் சேகரிப்பதற்குத்தான் எனக்கு நாட்கள் பலவானது. கதையை இரண்டே நாட்களில் எழுதி முடித்து விட்டேன்.

வேதாந்தம் குறித்த தொடர் ஒன்றை சொல்வனத்தில் எழுதுகிறீர்கள். உங்கள் சிறுகதைகளில் வேதாந்தம் பேசுபொருளாகவும் இருக்கிறது. வேதாந்தத்தின் மீது எப்போது ஈடுபாடு வந்தது ?

இளம்வயதிலிருந்தே ஆன்மிகத்தின் மீது ஒரு கவர்ச்சி இருந்தது. கல்லூரிப் பருவத்தில் ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை வாசித்திருக்கிறேன். கிட்டத்தட்ட ஓஷோவின் மாணவனைப் போலவே என்னை உணர்ந்திருந்தேன். அவர் சொல்வதை செயலில் நடத்திக் காட்டுவதுபோல ஜகி வாசுதேவின் ஈஷா யோக மையம் ஆன்மிகப் பயிற்சிகளை அளிக்கத் துவங்கியிருந்த காலம். அம்மையத்தில் இணைந்து சகஜ ஸ்திதி யோகா, ஹடயோகா, பாவஸ்பந்தனா போன்ற பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். இதில் பாவஸ்பந்தனா வகுப்பை அப்போதெல்லாம் ஜகியே முன்னின்று நடத்துவார். மிகக் குறைந்த நபர்களே கலந்து கொண்ட அந்த வகுப்பில் அவருடன் உரையாடிய பொழுதுகள் இனிமையானவை. இரண்டு வருடம் தீவிரமாக ஹடயோக, தியான, பிராணாயாமப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

ஆனால் அவை போதாமலிருந்தன. என்னுள்ளிருந்த கேள்விகள் அப்படியே இருந்தன. எனக்குத் திருமணமான புதிது. என் மனைவி அனுஷாவின் பெற்றோர் இருவருமே வேதாந்த மாணவர்கள். கொமாரபாளையத்தில் அவர்கள் வீட்டுக்கு அருகிலிருந்த, கோவிலூர் மரபில் வந்த வேதாந்த மடம் ஒன்றில் உள்ள ஆசிரியரிடம் கைவல்ய நவனீதம் என்ற நூலை முறையாகக் கற்றவர்கள். சங்கரரின் தத்துவபோதம் என்ற வேதாந்த அறிமுக நூலுக்கு இணையானது இந்த நூல். வேதாந்தம் என்றாலே வறட்டு வேதாந்தம் என்று புரிந்து கொண்டிருந்த எனக்கு, ஆனந்தா என்று முடியும் எந்தச் சாமியாரையும் சந்தேகக் கண்ணோடே பார்க்க வேண்டும் என்ற அவ நம்பிக்கையிலிருந்த எனக்கு, அனுவின் பெற்றோர் மூலம் வேதாந்தத்தை முறையாகக் கற்பதற்கான அமைப்புகள் உள்ளன என்று தெரிய வந்தது.

ஆனால் அவர்கள் மூலம் வேதாந்த அறிமுகம் ஏற்படவில்லை. அனுவுக்கே கூட தன் பெற்றோர் மூலம் வேதாந்தத்தின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. அனு தன்னுடைய வழியில் ஒரு ஆன்மிகப் பாதையை அப்போது தேர்ந்தெடுத்திருந்தாள். சிவன் மீது பக்தி செலுத்துவதன் மூலம் பிறப்பற்றுப் போக வேண்டும் என்பது அவளது விருப்பமாக இருந்தது. இருவருக்குமே ஆன்மிகத்தில் நாட்டம். ஆனால் சரியான பாதை எது என்பதில் எனக்குக் குழப்பமிருந்தது. என் கல்லூரி நண்பன் ஜெயச்சந்திரன் விவேக சூடாமணி என்ற நூலை என்னிடம் வாசிக்கக் கொடுத்தான். சங்கரர் எழுதிய விவேக சூடாமணி என்ற நூலிலிருந்து தேர்ந்தெடுத்த 101 பாடல்களை எடுத்துக் கொண்டு சுவாமி தயானந்த சரஸ்வதி அளித்த விளக்கம்தான் அந்த நூல். அந்த நூலை வாசித்தபோது அத்வைதம் குறித்தும், இறுதி உண்மையைப் பற்றிய அறிதலின் வழிமுறைகள் குறித்தும் தெளிவாக அறிந்து கொண்டேன். அந்த நூல்தான் நான் அத்வைத வேதாந்தம் கற்க வேண்டும் என்று முடிவு செய்ததற்குத் தூண்டுதலாக இருந்தது. அதன்பின் ஜெயச்சந்திரனுடைய அறிமுகத்தின் பேரில் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த வகுப்புகளை ஒலி வடிவில் கேட்கத் துவங்கினேன். அப்போது நாங்கள் மாலத்தீவுகளில் வசித்து வந்தோம். இந்தியாவுக்கு விடுமுறையில் சென்றபோது, குருபரானந்தரின் வேதாந்த வகுப்புகளை குறுந்தகடுகளில் பதிந்து எடுத்துக் கொண்டு வந்து, மாலத்தீவுகளில் அவ்வகுப்புகளைக் கேட்போம். ஒரு மணி நேர வகுப்புகள். கையில் நோட்டுப் புத்தங்களுடன் ஒலிப்பேழையின் அருகில் அமர்ந்து குறிப்பெடுத்தபடி ஆண்டுக்கணக்கில் வகுப்புகளைக் கேட்டோம். இப்போது அமெரிக்காவிலிருப்பதால் இங்குள்ள அர்ஷவித்யா குருகுலம் சென்று சுவாமி தத்துவவிதானந்தா, சுவாமி முக்தாத்மானந்தா போன்ற வேதாந்த ஆசிரியர்களிடம் நேரடியாகவே வேதாந்தம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்தியா செல்லும்போது ஆனைக்கட்டியிலுள்ள அர்ஷவித்யா குருகுலம் செல்வோம். அங்கு சுவாமி சதாத்மானந்தா என்ற அற்புதமான ஆசிரியர் இருக்கிறார்.

வேதாந்தத்தை கருப்பொருளாக வைத்து கதைகள் எழுதுவதில் உள்ள சவால் என்ன?

ஒரு பெரிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் எழுதலாம் என்ற தூண்டுதல் வந்தபோது, என்னுடைய புனைவுகளில் வேதாந்தத்தை உசாவ வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. வேதாந்தத்தை கருப்பொருளாக வைத்துக் கதைகள் எழுதுவதில் உள்ள முக்கியமான சவால் அந்தக் கதை வேதாந்தப் பிண்ணனி கொண்ட இன்னொருவருக்குத்தான் முழுமையாகப் புரியும் என்பதுதான். நேரடியான வேதாந்தக் கருத்துக்களை புனைவில் பேசும்போது கட்டுரைத் தன்மை வந்து விடுகின்றது என்று வாசகர் எண்ணுவதற்கு இடமுண்டு. குறிப்பாக சிறுகதை என்னும் வடிவத்துக்குள் தத்துவ விவாதங்களைக் கொண்டு வருதல் சவாலானது. அசைவும், பெருக்கும், கல்லளை ஆகிய இரு கதைகளும் வேதாந்தத்தைக் கருப்பொருளாக கொண்டவை. ஆனால் அவை சிறுகதை வடிவத்துக்குள் அமைந்தமையால்தான் வாசகருக்கு நெருடல் அளிக்காத வாசிப்பு அனுபவம் கிடைத்தது. வானப்ரஸ்தம் என்ற இன்னொரு கதை தினமணி தீபாவளி மலருக்காக எழுதினேன். அக்கதை வேதாந்த அறிமுகம் கொண்டவருக்கே முழுக்க ஈடுபட்டு வாசிக்கும் அனுபவம் அளிக்கும். நவீன இலக்கிய வாசகர்கள் பெரும்பாலும் மேலைத் தத்துவப் பிரிவுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வேதாந்தத்துக்கு அளிப்பதில்லை. எனவே புனைவில் மறைமுகமாகக் குறிப்பிடப்படும் பல வேதாந்தக் குறிப்புகளை அவர்கள் தவறவிடக்கூடும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் நமது நவீன எழுத்தாளர்களில் பலர் வேதாந்திகள்தாம். பாரதி, க.நா.சு, பிரமிள், தேவதேவன், ஜெயமோகன் போல. அவர்களது படைப்புகளில் பலவற்றில் வேதாந்தம் பயின்று வந்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் நான் புனைவு எழுதுவது எனக்காகத்தான். என் படைப்புகளில் வேதாந்தத்தைக் கருப்பொருளாக வைக்க வேண்டும் என்பது நான் விரும்பி எடுத்த முடிவு. இன்னொரு வாசகரும் அப்படைப்பை படைக்கையில் நான் அடைந்த அதே அனுபவத்தைப் பெற முடிந்தால் மகிழ்வேன். 

மொழிபெயர்ப்பில் எப்படி ஆர்வம் வந்தது ? முதல் மொழிபெயர்ப்பு என்ன?

மீண்டும் எழுத வேண்டும் என்ற தூண்டுதல் வந்தபோது புனைவுப் பரப்பில் என்னுடைய போதாமைகளை உணர்ந்தேன். சரளமான, தெளிவான மொழி எனக்கு இயல்பாக வந்தது. ஆனால் புனைவுக்கு அது மட்டும் போதாது. புனைவின் கட்டுமானம், புனைவினூடாகக் கதாபாத்திரங்களின் வளர்ச்சி, கதை சொல்லும் முறை, ஒரு கரு எவ்வாறு புனைவில் விரிவடைந்து பரிணமிக்கிறது போன்ற புனைவுத் தொழில் நுட்பங்கள் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். கோவிட் காலத்தில் நிறைய நாவல்கள் வாசித்தேன். கிட்டத்தட்ட டால்ஸ்டாய், தஸ்தாவ்ஸ்கியின் முக்கியமான அனைத்து நாவல்களையும் ஆங்கிலத்தில் வாசித்தேன். நிறைய ஆங்கிலத்தில் வாசித்தது ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. அதற்கு முதல் படியாகவும், நான் மேலே சொன்ன புனைவுத் தொழில் நுட்பங்களை கற்பதற்குண்டான ஒரு வாயிலாகவும் நான் மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்தேன். ஜானதன் ஃப்ரான்ஸன் என்ற எனக்குப் பிடித்த அமெரிக்க எழுத்தாளர் (ஃப்ரீடம், கரெக்ஷன்ஸ் போன்ற நாவல்களின் ஆசிரியர்) முதலில் தன் தாய்மொழியான ஜெர்மனியிலிருந்து இரு நூல்களை மொழிபெயர்த்த பின்னரே ஆங்கிலத்தில் புனைவெழுத வந்திருக்கிறார். ஜெயமோகனும் தான் முதலில் டி.எஸ். எலியட்டின் வேஸ்ட்லேண்டை மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவர்களின் அடியொட்டி நானும் முதலில் மொழிபெயர்ப்பில் துவங்கலாம் என்று முடிவெடுத்தேன்.

முதல் மொழிபெயர்ப்பு ஜெயமோகனின் குமிழிகள் என்ற சிறுகதை. ஒரு முறை நானும், விஷ்ணுபுரம் அமெரிக்கக் கிளையின் வ. சௌந்தரராஜனும் பேசும்போது இந்தக் கதை குறித்து சிலாகித்துக் கொண்டோம். அவரிடம் என் மொழிபெயர்ப்புத் திட்டம் பற்றிச் சொன்னபோது, இதை ஏன் நீ மொழிபெயர்க்கக் கூடாது என்று சொன்னார். இரண்டே நாட்களில் அந்தக் கதையை மொழிபெயர்த்தேன். ஆனால் அதைத் திருத்த ஒருமாதம் எடுத்துக் கொண்டேன். அந்த முதல் மொழிபெயர்ப்பு எனக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. குமிழிகளின் மொழிபெயர்ப்பு தி இண்டியன் பீரியாடிகல் என்ற இதழில் வெளியானது. அதே நாளில் நான் மொழிபெயர்த்த இன்னொரு சிறுகதையான மலைகளின் உரையாடல் ப்ரொமிதியஸ் டிரீமிங் என்ற அமெரிக்க இலக்கிய இதழில் வெளியானது. அதைத் தொடர்ந்து ஜெயமோகன் மற்றும் அ. முத்துலிங்கம் ஆகியோரது சிறுகதைகள் என் மொழிபெயர்ப்பில் அமெரிக்க மற்றும் ப்ரிட்டிஷ் இலக்கிய இதழ்களில் தொடர்ந்து வெளியாயின.

“Writers who write” என்ற அமைப்பில் நீங்கள் உறுப்பினராக இருக்கிறீர்கள். இந்த அமைப்பு குறித்து ?

Writers who write என்ற அமைப்பு பால்மெட்டோ ஸ்டேட் லோகன்ட்ரி எனப்படும் தெற்கு கரோலைனாவின் தாழ்வுப்பகுதியைச் சேர்ந்த படைப்பாளிகளுக்கான அமைப்பு. என்னுடைய மொழிபெயர்ப்பு முயற்சிகளையும், இலக்கிய இதழ்களில் வெளியான என் கதைகளையும் வாசித்து விட்டு என்னை இக்குழுவில் இணைத்துக் கொண்டனர். பதினைந்து பேர் மட்டுமே கொண்ட இந்தக் குழுவில் ஏழு நாவலாசிரியர்கள், நான்கு கவிஞர்கள், இரண்டு அபுனைவு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஒரு அட்டர்னி கூட இருக்கிறார். நான் மட்டுமே மொழிபெயர்ப்பாளன். மாதம் ஒருமுறை வால்டர்பரோ நூலகத்தில் சந்தித்துக் கொள்வோம். குழுவின் தலைவர் பிகே பாட்ஸ் முன்னின்று புனைவு குறித்த பயிற்சிப் பட்டறைகளை நடத்துவார். எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் குறித்த பிறருடைய கருத்துக்களைக் கேட்டுப் பெறலாம். எழுதுவது குறித்த பல நுட்பங்களை இந்தக் குழுவில் இணைந்தபின் நான் அறிந்து கொண்டேன். இப்போது இந்தக் குழுவிலிருந்து “துரீயா லிடரரி ரிவ்யூ” என்ற இலக்கியக் காலாண்டிதழ் துவங்கப்பட்டுள்ளது (துரீயா என்ற பெயர் நான் பரிந்துரைத்தது. நான்காவது நிலை என்று பொருள். உறக்கம், கனவு, விழிப்பு இந்த மூன்று நிலைகளுக்கும் சாட்சியாக இருக்கும் நான்காவது நிலை). இதன் புனைவு மற்றும் மொழிபெயர்ப்புப் பிரிவின் ஆசிரியராக நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன். சென்ற அக்டோபரின் இந்தக் குழுவுக்கு ஜெயமோகன் வருகை தந்து இந்திய இலக்கியம் குறித்துப் பேசினார். எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் ஜெயமோகன் பிடித்தமான எழுத்தாளராகி விட்டார். கவிஞர் ஜெரால்டின் ஜெ-யின் பேச்சைக் கேட்டு, நீண்ட நாள் தன் மனதில் அரித்துக் கொண்டிருந்த ஓர் ஐயம் தீர்ந்தது என்றார். அவர் அமெரிக்காவின் கூலாகீச்சி என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர், ஆனால் அமெரிக்காவின் மையப் பண்பாட்டுடன்தான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வளர்ந்திருக்கிறார். தன் வேர்களை, தன் பண்பாட்டுக் கூறுகளை எழுத்தில் கொண்டு வருவதில் அவருக்குத் தயக்கமிருந்தது. ஜெ அன்று பேசியதன் சாராம்சம் “உங்கள் குரலைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்பதுதான். அன்றிலிருந்து தன் எழுத்து குறித்து சுதந்திரமாக உணர்வதாக அவர் என்னிடம் தெரிவித்தார். ஜெரால்டின் வாழும் தமிழ் விழாவின் ஒரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“எதற்காக எழுதுகிறேன்?” என்றால் உங்கள் பதில் என்ன ?

என் சிறுகதைத் தொகுப்புக்கு புனைவெனும் அறாக்கனவு என்ற தலைப்பில் எழுதிய முன்னுரையில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்.

“ஒரு மொழியில் தீவிரமாக இயங்குகையில் அடையும் விடுதலை உணர்வு; மொழி என்னும் கருவியைக் கொண்டு வாழ்வு குறித்த அடிப்படையான ஐயங்களுக்கும், வியப்புகளுக்கும் ஆதாரமான ஒன்றைத் தொட்டு விட எத்தனிக்கும் முயற்சிகள் தரும் கிளர்ச்சியும்,சிலிர்ப்பும்; மொழியில் சமைக்கச் சாத்தியமான உலகங்களும், மாந்தர்களும் நம் கண்முன் உருக்கொள்கையில் ஏற்படும் உவகை; இவைதான் நான் எழுத்தில் இயங்குவதற்கான அடிப்படையான காரணங்கள்.”

எழுத்தை நான் வாசிப்பின் நீட்சியாகவே பார்க்கிறேன். இந்த இடத்தில் எழுத்து என்று பெரும்பாலும் புனைவெழுத்தைத்தான் குறிப்பிடுகிறோம் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் எழுதும்போதோ, என் வகுப்புகளுக்கென பக்கம் பக்கமாகத் தயாரிக்கும்போதோ, அல்லது நான் இப்போதுதான் முடித்த என் முதுகலைப் பட்டத்துக்கான ஆய்வுத்தாள்களை எழுதும்போதோ எழுத்தாளன் என்ற பெருமிதம் எனக்கு உருவானதில்லை. இலக்கியம் புனையும்போது மட்டுமே அந்தப் பெருமிதம் தோன்றுகிறது. நானும் புனைவை மட்டுமே நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். நான் வாசிக்கும் புனைவுகளில் ஒரு கட்டத்தில் நானும் எழுத்தாளரோடு இணைந்து ஒரு சக படைப்பாளியாக மாறி விடுவதை உணர்கிறேன். அந்த உணர்வு கொடுத்த சிலிர்ப்பு எழுதத் தூண்டுகிறது. நான் வாசித்த இலக்கிய நாவல்களைப் போல நாமும் நாவல்கள் எழுதிவிட வேண்டும் என்ற நப்பாசையால் எழுதுகிறேன். மேலும் வாசிப்பும், எழுதுதலும் எனக்கு இயல்பாகவே வருகின்றது என்பதை உணர்கிறேன். எனவே இவை இரண்டையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற உந்துதல் இயல்பாகவே என்னிடம் உள்ளது. எனவே எழுதுகிறேன். எதற்காக எழுதவில்லை என்பதையும் இங்கு கூறிவிட வேண்டும் என்று நினைக்கிறேன். புகழுக்காகவோ, வரலாற்றில் நிலைப்பதற்காகவோ, நாலுபேர் என்னை எழுத்தாளன் என்று அழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோ எழுதவில்லை. 

உங்களுடைய எழுதும் முறை என்ன ? (இடம், நேரம், ஒரே அமர்வில் எழுதிவிடுவீர்களா? )

வாசிப்பு, எழுத்து இரண்டு செயல்களுமே மிகுந்த உழைப்பையும், காலத்தையும், ஒழுக்கத்தையும் கோருபவை. என்னிடம் இந்த மூன்றுமே குறைவாக இருப்பதைக் காண்கிறேன். எனவே நான் நினைத்த அளவுக்கு என்னால் தினசரி எழுத முடிவதில்லை என்பதுதான் உண்மை. வீட்டில் எழுதுவதெற்கென்று ஒரு அறை இருக்கிறது. என் மடிக்கணினியுடன் இணைந்த மானிட்டர் ஒன்றும் இருக்கிறது. ஆனால் அங்கு நான் அமர்ந்து எழுதும் நேரம் குறைவுதான். எங்கள் படுக்கையறையில் ஒரு ரிக்லைனர் சோஃபா உள்ளது. இப்போது அதில் அமர்ந்துதான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் அங்கு அமர்ந்து எழுதுகிறேன். பள்ளியில் எனக்கு ஒன்றரை மணி நேரம் கிடைக்கும். அப்போது எழுதுவேன். எப்படியும் ஒரு நாளைக்கு ஒன்றிலிருந்து ஒன்றரை மணிநேரம் எழுதுவேன். தொடர்ந்து ஒரே அமர்வில் எழுதுவதென்பது சிரமமாகத்தான் இருக்கிறது. விட்டு விட்டுத்தான் எழுதுகிறேன். ஆனால் நான் எழுதும் வேகம் சற்று அதிகமானது. ஒரு மணிநேரத்தில் ஆயிரம் சொற்கள்; ஆங்கிலத்தில் என்றால் இரண்டாயிரம் வரை கூட எழுத முடியும். எழுதுவதற்கு மூடு அமைய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. சோம்பலை வென்று விட்டால் எழுத்து அது பாட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் விடும். என்னுடைய முதுகலைப் படிப்புக்காக ஒரு வாரத்தில் எழுபது, எண்பது பக்கங்கள் வரை எழுதியிருக்கிறேன். ஆனால் புனைவை அவ்வளவு விரைவாக எழுதிவிட முடியுமா என்று தெரியவில்லை. நான் மேற்சொன்ன உழைப்பு, ஒழுக்கம், காலம் இவை மூன்றையும் அளித்தால் எழுத்து கைகூடி விடும் என்றே நம்புகிறேன். இந்த ஆண்டிலிருந்து தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என்ற உறுதியோடு உள்ளேன்.

நாவல் எழுதும் திட்டம் உண்டா ? களம் என்ன?

The Rising Land என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். வேதாந்தத்தைப் பிண்ணனியாகக் கொண்ட நாவலாக இது இருக்கும். நான் வாழ்ந்த கொமாரபாளையத்தின் நெசவாளர்களின் வாழ்க்கையும், அந்த மக்களிடமிருந்து தன் விடுதலையின் மீது தாகம் கொண்ட சிலரின் பயணத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து விடுவேன் என்று நம்புகிறேன்.

#

குறிப்பு: இந்த நேர்முகத்தில் ஏ.ஐ பயன்பாடு குறித்த கேள்வி மொழிபெயர்ப்பாளர்கள் இடையே கண்டனங்களை உருவாக்கியிருக்கிறது. “நான் தெரிவித்த கருத்துக்கள் இப்படி மொழிபெயர்ப்பாளர்கள் மாண்பைக் குலைக்கும் வண்ணம் அமைந்து விட்டதை எண்ணி வருந்துகிறேன். அவர்கள் அனைவரிடமும் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கிறேன் – ஜெகதீஷ் ” என ஜெகதீஷ் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் வேண்டுகோளை ஏற்று அந்த பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்றன.

Comments

2 responses to “நேர்முகம் 3 : ஜெகதீஷ் குமார்”

  1. […] நான் அண்மையில் அளித்த பேட்டியில் மொழிபெயர்ப்பில் ஏ.ஐ பயன்பாடு […]

  2. […] ஜெகதீஷ் குமார் தன்னுடைய நேர்காணலில் மொழியாக்கத்தில் செயற்கை […]

Discover more from Viswanathan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading