சா.ராம்குமார் மேகாலயா மாநிலத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருக்கிறார். “அகதி” அவர் எழுதிய முதல் சிறுகதை தொகுப்பு.
அகதி தொகுப்பில் மொத்தம் பத்து சிறுகதைகள் இருக்கிறது.
கருவி: அலுவலகத்திலும் வீட்டிலும் வெறும் கருவியாக இருக்கும் முதியவர் பூபாலன் தன்னை காரியகர்த்தா என நினைத்துக்கொள்வதால் வாழ்க்கை அவருக்கு கசக்கிறது. உணரச்சிகள் நன்றாக வந்துள்ளது.
கசப்பு: ஒரு அரசாங்க உத்யோகஸ்தரின் மகனுக்கு அவரை மிகப்பிடிக்கிறது. மகன் ஐ.ஏ.எஸ் ஆகிறான். வெள்ளை உடை அணியும் அப்பா வாட்ச்மேன் என்று தெரியும்போது ஒரு கசப்பு உருவாகிறது. அந்த அமைப்பை வென்று அதன் உச்சியில் ஏறிய ஐ.ஏ.எஸ் ஆன பின்பும், அதன் நடைமுறைகளை மீற முடியவில்லை. மறக்கவும் முடியவில்லை.
சமரசம்: திமுக உருவான காலத்தில் திமுக ஆதரவு மாணவன் பள்ளியில் கையேடு விற்கும் ஆசிரியரை எதிர்க்கிறான். ஆசிரியர் மாற்றல் வாங்கி சென்றுவிடுகிறார். பல வருடங்களுக்கு பிறகு அந்த மாணவனின் மகள் இதே ஆசிரியரிடம் காசு கொடுத்து கையேடு வாங்கிக்கொள்கிறாள். அவன் வயது, ஸ்டேஷனரி கடை வைத்து வியாபாரம் செய்யும் அனுபவம் ஒரு “சமரசத்திற்கு” அவனை வரச்செய்துவிட்டது.
லெனின்: லெனின் என்ற குமாஸ்தா நேர்மையாக இருந்தவரை ஐ.ஏ.எஸ் அதிகாரியை “சார்” என்று கூப்பிடுவதில்லை. முதல்முறையாக பஞ்சப்படியில் ஒரு சிறு கோல்மால் செய்கிறார். உபயோகப்படுத்தாத பயணப்படியை பெற்றுக்கொள்கிறார். அன்று முதல் நிமிர்வு குறைகிறது. “சார்” என அழைக்கிறார். உயர பறக்கும் பட்டத்தின் கயிரை சிறுவர்கள் பிடித்திருக்கிறார்கள். ஒரு குதிரையை “உடைத்து” சொல்லும் வேலையை செய்ய வைக்கப்படுகிறது.
பெருச்சாளி: ஒரே வயதுடைய ஏழை மாமனும் பணக்கார மச்சானும் ஒன்றாக வளர்கிறார்கள். ஒரு சண்டையில் பிரிகிறார்கள். பண வசூலின்போது கறாராக இல்லாமல், கொஞ்சம் விட்டுகுடுத்ததால், வீட்டோடு வேலைக்கு வந்த ஏழை மாமனை விரட்டிவிடுகிறார்கள். அவன் கோவை சென்று நன்றாக சம்பாதித்து வாழ்கிறான். ஊரில் வியாபாரம் தேக்கம் அடைகிறது. நீண்ட நாள் கழித்து உதவி தேடி மச்சான் கோவை வருகிறார். பெருச்சாளி போன்ற ஒரு வியாபாரியிடம் முடங்கிய பணத்தை வசூல்செய்து தருகிறார் மாமன். ஒரு சிரிப்பை வரவழைக்கும் நேர்நிலை முடிவு.
அகதி: இரண்டு அகதிகளை மாற்றிக்கொள்கிறார்கள். எதிரி நாட்டு அகதியும் தன் சகோதரன் என்று உணரும் கதை. தன்னைப்போல அவனையும் அடித்திருக்கிறார்களா என்று பார்க்கிறான் கதைசொல்லி.
கான்கிரீட் நிழல்கள்: கதைசொல்லி ஐ.டி கம்பெனியில் வேலை பார்கிறான். போட்டி நிறைந்த உலகம், ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்தி முந்தும் உலகம்.
பொன்னகரம்: பிரமோஷனுக்காக மேனேஜருடன் சல்லாபம் செய்வதை பற்றிய கதை.
ரோஜா: ரோஜாபூவில் மயங்கும் ஒரு கிராமத்து பெண்ணின் கதை. பள்ளியில் அவளுக்கு மிக பிடித்த ரோஜாவை திருடி தின்னும் சுப்பையா அவளை மணந்து கொள்ள போகிறான். அவன் தட்டு சின்னத்திற்கு ஓட்டு போட சொல்கிறான், அவள் திருட்டுத்தனமாக ரோஜாவிற்கு போட்டுவிடுகிறாள். எல்லோருமே தட்டை தேர்ந்தெடுக்கும்போது கோதை ரோஜாவை தேர்ந்தெடுக்கிறாள். சூடிக்கொடுத்த சுடர்கொடி.
பதக்கம்: ராணுவம், தீவிரவாதிகள், போலீஸ் – மூன்று குழுக்களிடையே சிக்கியிருக்கும் அசாம்/வட கிழக்கு மக்களின் கதை.
##
இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அசோகமித்ரனின் தாக்கம் உள்ளவை. யதார்த்தவாத கதைகள். “அகதி” விவரணை மட்டுமேயான கதை. மனவோட்டத்தையும், “காலத்தை”யும் நீட்டித்திருக்கிறார். “சமரசம்” கதையும், “லெனின்” கதையும் ஒன்றுதான். “சமரசம்” கதை லட்சியவாதத்தின் வீழ்ச்சி என்று தோன்றினாலும் “சமரசம்” என்ற தலைப்பே அது வீழ்ச்சியா என்றும் யோசிக்க வைக்கிறது. “கசப்பு” கதையை உணர்வதற்கு அப்பா வாட்ச்மேனாக இருக்க வேண்டும் என்பதில்லை. அப்பாவைவிட பெரிய அதிகாரத்தில் இருப்பவர்களிடம் “சார்…” என்று பதறும் அப்பா சூப்பர்மேன் இல்லை என்று முதலில் உணரும் பிள்ளைகளுக்கு தோன்றும் கசப்பு அது.
இந்த சிறுகதை தொகுப்பில் உள்ள முக்கியமான கதை “பதக்கம்”. மற்ற கதைகள் ஏற்கனவே நமக்கு பழகிய சூழலில் நடப்பதால் அவை தரும் உணர்வுகள் “தெரிந்தவை”யாக இருக்கின்றன. பதக்கம் கதையின் கரு ஒரு நாவலாக விரித்து எழுதும் அளவிற்கு பெரியது. நூலின் ஆசிரியர் வடகிழக்கில் ஆட்சிப்பணியில் இருப்பதால் இந்த கதை உருவாக்கும் சித்திரம் மிகுந்த நம்பத்தகுந்ததாக இருக்கிறது. இன்னொருவர் எளிதில் எழுதிவிட முடியாது.
பதக்கம்:
“பதக்கம்” கதையின் களம் அசாம். சோஹன் என்ற தீவிரவாதி பிரியா என்ற பெண்ணை கொன்றுவிடுகிறான். பிரியா தன் குழுவை சேர்ந்த உத்பலை ராணுவத்திடம் சிக்க வைத்தாள் என்ற சந்தேகம்தான் கொலைக்கு சொல்லப்படும் காரணம். பிரியா சோஹனை நிராகரித்து உத்பலை காதலித்தவள். ராணுவமும், போலீசும் உள்ளூர் மக்களை தூண்டிலாக பயன்படுத்தி தீவிரவாதிகளை நெருங்க முயற்சிக்கிறார்கள். உத்பலை ராணுவம் கொண்டுசென்று அவன் திரும்பவில்லை. உத்பலை என்ன ஆனான் ? தெரியவில்லை. ஆனால் உத்பலை அங்கே / இங்கே பார்த்ததாக கதைகள் இருக்கின்றன.
உத்பல் படித்தவன். பிரியா அந்த நிலம். அது தீவிரவாதத்தை வெறுத்து மிதவாதத்தை, கல்வியை விரும்புகிறது. ஆனால் தீவிரவாதம் அந்த நிலத்தை விடவில்லை. ராணுவத்தினர் தங்கள் பதவி உயர்வுக்காக ஆட்களை கொன்று கணக்குகாட்டி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, பதக்கம் பெறவே முயல்கிறார்கள்.
இந்த கதையை படிக்கும் வரை ஒரு சிக்கலை தீர்ப்பதில் போலீசிற்கும் ராணுவத்திற்கும் இருக்கும் வேறுபாடு எனக்கு புரிந்ததில்லை. இரண்டுமே அரசின் ஆயுதம் ஏந்திய கரங்கள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அரசு அதிகாரத்தின் அடுக்களிலும் மக்களுடன் தொடர்பில் இருக்கும் உள்ளூர் தரப்பிற்கும், வெளியில் இருந்து வருபவர்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. அதேபோல தீவிரவாதிகள் தரப்பில் இருக்கும் உத்கல் போன்ற மக்கள் தொடர்பாளர்கள்தான் வளர்ந்து அரசியல்வாதிகள் ஆகிறார்கள்.
“எல்லாருக்கும் ஒரு சின்ன கனவு உலகம் இருக்கும் சார். அத அவனுக்கு காட்டிக்கொடுத்துட்டா, என்னத்துக்கு இந்த கஷ்டம் எல்லாம். காட்டுல வாழ்றத ஏதோ பெரிய சாகசம்னு வெளிய இருக்கிறவங்க நினைப்பாங்க. எங்க கூட இருந்தா தெரியும். மலேரியா, காலரான்னு உங்க துப்பாக்கியைவிட அதுவே அதிகமா கொன்னுடும்” – என சரணடையும் தீவிரவாதிகளின் மனநிலையை பற்றி அவர்களுடைய செய்தி தொடர்பாளர் உத்பல் சொல்கிறான்.
எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கிய நதி எனக்கு பிடித்த நாவல். அசாம் மாநிலத்தின் பின்புலத்தில் “This street has no other side” என்ற நாவலை எழுதும் அரசு அதிகாரி தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஒரு ஊழியரை மீட்கப்போராடுகிறார், அவர் கண்டுபிடிக்கும் தொலைதொடர்புத்துறை சார்ந்த ஊழல், அவருடைய தனிவாழ்க்கை என மூன்று சரடுகள். இந்த மூன்றும் அஸ்ஸாமின் இருந்த தீவிரவாதத்தின் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும். “This street has no other side” என்பது தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் மட்டுமல்ல மொத்த வடகிழக்கை குறிப்பதாகவே எனக்கு தோன்றியது. பி.ஏ.கிருஷ்ணன் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இந்த நாவலின் காலகட்டம் குறிப்பிடப்படவில்லை என்றாலும் தோராயமாக முப்பது-நாற்பது வருடங்களுக்கு முன்பு நடப்பதாக சொல்லலாம். அன்று வடகிழக்கில் பெரிய அளவில் உட்கட்டமைப்பு இல்லை. ஆனால் கடந்த பத்து வருடங்களில் இந்திய அரசு வடகிழக்கில் சாலை, பாலம் என உட்கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். சாலையால் சந்தை உருவாகிறது. மணிப்பூர் தவிர மற்ற வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்திருக்கிறது.
வடகிழக்கில் இனக்குழு சண்டைகள் தீர்வதற்கும், அந்த பகுதி வளர்வதற்கும் உட்கட்டமைப்பு மட்டும் போதுமா என்று தெரியவில்லை. ஆனால் “பதக்கம்” போன்ற கதைகள் “This street has other side” என்று தோன்றவைக்கின்றன.
அகதி நூலை – கிண்டிலில் வாங்க – https://www.amazon.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-Agathi-Tamil-Ramkumar-S-ebook/dp/B084FJFF4R
