[Delighted to share that my short story “Pietermaritzburg” has been published in the January 2024 issue, the 60th edition of Kaalam magazine – a literary publication from Canada, founded by Kaalam Selvam. கனடாவில் இருந்து வெளிவரும் காலம் 60ஆவது இதழில் வந்த என்னுடைய சிறுகதை.]
“டேய்…நீயே 2005ல தான காலேஜ் முடிச்ச…வேலைக்கு சேந்து ஒரு வருஷம் கூட ஆகல…உனக்கு என்ன தெரியும்னு சிஸ்கோ சிஸ்டம்ஸ்ல உன்ன இத்தாலிக்கு அனுப்புறாங்க?” கப்பலில் ஃபோர்த் இஞ்ஜினியராக இருக்கும் என் அண்ணன் கேட்டான். கப்பல்துறையில் ஒவ்வொரு பதவி உயர்விற்கும் சில வருடங்கள் கப்பலில் பணியாற்றியபின்,பதவி உயர்வுக்கான தேர்வுக்கு ஆறு மாதங்கள் படித்து, எழுத்துத்தேர்விலும், நேர்முகத்தேர்விலும் வெற்றி பெற வேண்டும். “போறவன்வெல்லாம் தெரிஞ்சா போறான்? போய் தெரிஞ்சுக்கறதுதான்…சீனியருக்கு குழந்தை பொறக்கப்போகுது. அதனால அவரால போக முடியலை…இதெல்லாம் டப்பா மெயிண்டனஸ் பிராஜக்ட்ன்னு யாருமே கிட்ட வரலை…யாராவது பண்ணனுமில்ல…வீக்எண்ட்ல எடுத்து ஆறு மாசமா நோண்டிட்டு இருந்தேன்…”
“போய் தெரிந்துகொள்ளும்” திராணி உள்ள அனைத்து உயிரினங்களையும் உண்டிவில்லில் வைத்து வெளிநாடுகள் நோக்கி ஏவிக்கொண்டிருந்தன பெங்களூரின் மென்பொருள் நிறுவனங்கள். முதல் விமானப்பயணம். முதல் நட்சத்திர விடுதி. முதல் முதல்கள். இத்தாலியின் மிலான் நகரம். ஃபேஷன் டிவியில் பார்த்த பெயர். மூன்று வாரப் பயணம். நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்துச் சொல்லிக்கொண்டிருந்தேன்.
மிலானில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம் மிலான் டூமோ என்றது கூகிள். ஐரோப்பாவின் மிகப்பெரிய கத்தீட்ரல். கோதிக் பாணி தேவாலயம். அறுநூறு வருடங்களானதாம் கட்டி முடிக்க. நாற்பதாயிரம் பேர் கூடலாமாம். “இப்படித்தான் லூவ்ர ம்யூசியத்தை பத்தியும் ஆ..வூ..ன்னாங்க…பாக்கறதுக்கு ஒரு வாரம் போதாதாமே… இரண்டு மணி நேரத்துல பாத்தாச்சு…எல்லாம் ஒரே அம்மணக்குண்டியா வரஞ்சு வைச்சுருக்கானுங்க…ஒன்ன பாத்தா எல்லாம் அதேதான்…” எனக்கு முன்பே பிரான்ஸுக்குச் சென்று திரும்பிய கல்லூரி நண்பன் ராஜா சொன்னான்.
“ச்சாவ். வெல்கம் டு மிலான். என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் அழைக்கவும் – ஸ்டெஃபனோ.” இத்தாலி அணியின் மேலாளர் இமெயில் அனுப்பியிருந்தார். டிசம்பரின் கடைசி வாரத்தில், அந்தக்கால அரசு பள்ளிக்கூடம் போன்று இருந்த பெங்களூர் விமானநிலையத்தில் ஏறி எதிர்கால விண்வெளி நிலையம் போன்று இருந்த மிலான் விமானநிலையத்தில் இறங்கினேன். மிலான் நகரின் பிரேலி சிஸ்டம்ஸ் என்ற ஃபைபர் ஆப்ட்டிகல் நெட்வொர்க்கிங் நிறுவனத்தை நான் வேலை செய்யும் அமெரிக்க நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியிருந்தது. இணையப் பயன்பாடு பல்கிப்பெருகும் என்ற எதிர்பார்ப்பு 2000த்தில் பொய்த்தது. அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் வேலைகள் மெல்ல இந்தியாவிற்கு மாறத்துவங்கின. குளத்தில் எறியப்பட்ட கல்போல இந்திய அலுவலகத்தில் இருந்து மிலான் அலுவலகத்திற்கு வந்த முதல் நபர் நான். முதல்நாள் அலுவலகத்தில் ஆர்வம், குறுகுறுப்பு, உற்சாகம் என அலையலையாக அறிமுகங்கள். ஆர்குட் வலைதளத்தில் வாழும் நகரத்தை “மிலான்” என அப்டேட் செய்துகொண்டேன்.
“பெங்களூரில் மீட்டிங் எல்லாம் ஆங்கிலமாமே…இந்தியனில் இல்லையா?” என்று கேட்டாள் சின்ஜியா. நூறு ரூபாய் நோட்டை எடுத்து பதினைந்து இந்திய மொழிகளின் வரிவடிவங்களை காட்டினேன். “அ” வை தமிழில், இந்தியில், கன்னடத்தில் எழுதினேன். சட்டென இந்தியா அவர்களுக்கு முப்பரிமாணத்தில் தெரிந்தது. காந்தியை எல்லோருமே அடையாளம் கண்டது எனக்கு ஆச்சரியம். உணவு இடைவேளையில் உலகப்போர், ரோமப்பேரரசு, இந்தியா, இந்து மதம், காந்தி, சோனியா காந்தி என உரையாடல்கள் நீண்டன. மதிய உணவிற்குப்பின் எல்லோருமே கருப்பு காபி குடித்தார்கள். நான் பால் கலந்து டீ குடிப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். “வெண்டிடுவே” என என் வயதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி. “வார இறுதியில் நீச்சல் போட்டியில் கலந்து கொள்கிறேன்” என்றார் நாற்பது வயது மரியோ. பருமனானவர்களே அலுவலகத்தில் இல்லை. காலையில் ஒன்பது மணிக்கு வந்து ஆறு மணிக்குக் கிளம்பினார்கள். நேர்த்தியும் ஒழுங்கும் என வேலையை மிகப்பொறுப்பாக செய்தார்கள்.
இங்கே டாக்ஸியே பி.எம்.டபுள்யு, ஆடி, பென்ஸ் கார்கள்தான். டாக்ஸி எல்லாம் கட்டுப்படியே ஆகாது. செல்போன் ரோமிங் கட்டணமும் மிக அதிகம். சர்வீஸஸ் கம்பெனிகளில் வெளிநாட்டில் தனி சம்பளம் தருவார்கள். பிராடக்ட் கம்பெனிகளில் உணவு, போக்குவரத்து என தினப்படிகளோடு சரி. “இந்தியாவிலிருந்தே ஒரு மாசத்துக்கான சாப்பாட்ட எடுத்துட்டு வந்துட்டு, இங்க ஹோட்டல்ல, கிராசரி ஸ்டோர்ல கீழே கிடக்குற ரிசீப்டெல்லாம் பொறுக்கி டெய்லி பேட்டா வாங்குறான்டா என் லீட்” என்றான் ஜெர்மனியில் இருந்த அருண்பரத். “இந்த காச நீ தருவியான்னு கேக்குறான்.” “வெளிநாட்டில் போய் பக்கி மாதிரி நடந்துகொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் உங்களுக்கு இங்கேயே ஸ்டார் ஹோட்டல் மாதிரி அறைகள். ஹாட் ஷவர். வெஸ்டர்ன் டாய்லட். தினமும் உங்கள் அறைகளை சுத்தப்படுத்துகிறோம். புல் ஹேண்ட் ஷர்ட், டை, ஷூ…” முன்பு வேலை செய்த மைசூர் பயிற்சி மையத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் சொன்னார். பட்டொளி வீசி பறக்குது பாரீர்…
“நாளை நீ கண்டிப்பாக டூமோவிற்கு போகவேண்டும். என்ன பிரம்மாண்டம்! என்ன அழகு!” வெள்ளிக்கிழமை மதியம் சொன்னாள் சின்ஜியா. “ஆம். ஏற்கனவே திட்டமிட்டிருக்கிறேன்” என்றேன் உற்சாகமாக. விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. அல்லது உறங்கவே இல்லை. ஜெட்லாக் இன்னும் இருந்தது. வெந்நீர் தொட்டியின் கதகதப்பையும் வெம்மையையும் விட்டு எழுந்துவர மனமே இல்லை. எப்படியும் முதல் பேருந்து ஐந்து மணிக்குத்தான். Z321. கடைசி நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து டூமோவிற்கு மெட்ரோ ரயில். விடுதி வரவேற்பாளர் உடைந்த ஆங்கிலத்தில் சொல்லியிருந்தான். சிவப்புநிற சிட்டி டூர் பஸ் டூமோ, நகர்சதுக்கம், கோட்டை எல்லாவற்றிற்கும் போகும்.
கம்பளி கையுறை, முட்டி நீளமுள்ள அங்கி எல்லாம் அணிந்துகொண்டு அதிகாலை நான்கே முக்கால் மணிக்கு விடுதியில் இருந்து கிளம்பினேன். தெரு விளக்கொளியின் மங்கிய வெளிச்சம். இருள். விடுதியின் பளீர் ஒளியில் இருந்து கண்கள் பழக சில நிமிடங்கள் எடுத்தது. வலது சுண்டு விரல் குளிரை உணர்ந்தது. கைகளை பாக்கெட்டிற்குள் விட்டுக்கொண்டு பேருந்து நிறுத்தத்தை அடைந்தேன்.
Z321 என மஞ்சள் எழுத்துக்கள் மின்ன பேருந்து வந்தது. ஏறினேன். “பிக்லெட்டி…பிக்லெட்டி” என்றார் ஓட்டுநர். ம்ம்? கிரெடிட் கார்டை நீட்டினேன். இல்லை என தலையசைத்தார். “கோயிங் டூ மெட்ரோ ஸ்டேஷன்?” என்று கேட்டேன். “நோ இங்லீஸ்” என்றார். ஏதோ முணுமுணுத்தபடி வண்டியை எடுத்தார். உயிரற்ற கண்களுடன் ஒரு பாட்டி அமர்ந்திருந்தாள். “டிரெயின் ஸ்டேஷன்?” என கைகளால் ரயில் ஓடுவதைப்போல செய்கை செய்தேன். பொக்கை வாய் திறந்தது. பதில் எதுவும் வரவில்லை. சிலர் கண்களை மூடி தலை சாய்த்திருந்தனர்.
ஏதோ சரியில்லை என்று தோன்றியபடி இருந்தது. அதை உணர்ந்தவர் போல ஒரு நடுத்தர வயதுக்காரர் விழித்துக்கொண்டார். அவருடன் பேசி தவறான திசையில் ஏறிவிட்டேன் என புரிவதற்கு மேலும் இருபது நிமிடங்கள் ஆகிவிட்டது. ஒரு பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுப் போய்விட்டார்கள்.
கருஞ்சாம்பல் நிற வானம். தொலைவில் இலைகள் இல்லாத மரங்கள் காற்றில் வேகமாக அசைந்தன. ஒரு குளிர் காற்று முகத்தில் படீரென அறைந்தது. மூக்கு எரிந்து கண்களில் நீர் கொட்டியது. அப்போதுதான் சட்டென ஒன்றை உணர்ந்தேன். இந்த ஒரு வாரமாக அலுவலகம், டாக்ஸி, விடுதி என வெம்மையில் மட்டுமே இருந்திருக்கிறேன். குளிரை அறியவே இல்லை. “ஜன்னல் ஓரத்துல உக்காராத…குளிரும்” என்று அம்மா சொல்லும் “குளிரிற்கும்” இந்த “குளிரிற்கும்” உள்ள தூரம், நான் வேலை செய்துகொண்டிருந்த பெங்களூரிற்கும் இப்போது ஒரு மாத வேலைக்காக வந்திருக்கும் மிலான் நகரத்திற்கும் உள்ள தூரத்தை விடப் பல ஆயிரம் மடங்கு.
உடல் வெடவெடக்க துவங்கியது. பற்கள் தன்னிச்சையாக தடதடத்தது. அப்படியே தரையில் உட்கார்ந்து உடலை இறுக்கி தலையை கால்களின் இடையே குறுக்கிக்கொண்டேன். ஆரவாரத்துடன் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென பாதாளத்தில் உருண்டதுபோல அந்த பேருந்து நிலையத்தில் அதிகாலையில் மாட்டிக்கொண்டேன். அது எந்த இடம் என்றே தெரியவில்லை. கடைகள் எதுவும் திறக்கவில்லை. டாக்சியும் எதுவும் இல்லை. செல்போனும் ரோமிங்கில் “நோ சர்வீஸ்” என்று காட்டியது.
பெருங்குளிரை அறியும் முதல் அனுபவத்தை ஒரு தமிழ் உடல் என்றுமே மறக்காது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைதான் நம் இலக்கணமே. பனியும் பனிசார்ந்த இடமும் அதில் இல்லையே. தமிழ் என ஒரு மொழியே உருவாகாத கடைசி பனியுகக்காலத்தில்தான் குளிரை அறிந்திருப்போம். “புடிச்சானுங்க பாரு நம்ம ஆளுங்க புளியங்கொம்புமாதிரி பூமில ஒரு இடத்த…கட்டின கோமணத்தோட காலம்பூரா கட்டையா நீட்டிட்டு கிடக்கலாம்.” என்னென்னவோ எண்ணங்கள். கூடவே தனியாக ஒரு எண்ணம் “தம்பி தமிழ்நாடு…அந்த பெருமையெல்லாம் இருக்கட்டும்…இங்கிருந்து எப்படி போவ?”
உதடுகளை நாக்கால் தடவியபோது வெடிப்புகள் இடையே உப்புச்சுவை. மூக்கின் நுனியில் எந்த உணர்வும் இருப்பதுபோல தெரியவில்லை. முகமே மரத்திருந்தது. சுண்டு விரலில் ஊசியால் குத்துவது போல இருந்தது. விரல்களை பார்த்தேன். கம்பளி கையுறையில் நூல் பிரிந்து ஒரு ஓட்டை. எனக்கு முன்பே ஐரோப்பாவிற்கு ஆன்சைட் வந்த அருண்பரத் தோல்கையுறை வாங்கச்சொன்னான். நான்தான் விலைகுறைவு என கம்பளிகையுறை வாங்கினேன். கைவிரல்களை விரித்து மடக்கி, முகத்தை தொட்டுப்பார்த்தேன். யாரோ தொடுவது போல இருந்தது.
தலையை தூக்கி பார்த்தபோது சிறிது தொலைவில் ஒரு இத்தாலிய பெண் நின்று கொண்டிருந்தாள். தோல் கையுறை. முட்டி வரை வரும் தோல் சப்பாத்து. நேர்த்தியான குதிரைவால் சடை. வாயில் சிகரட். எழுந்து சென்று “எக்ஸ்கியூஸ் மீ…” என அழைத்தேன். கவனிக்கவில்லை. மீண்டும் சத்தமாக அழைத்தேன். அவள் தலையை இடம் வலமாக அசைத்து, திரும்பி சிகரட் புகையை ஊதினாள். யாரோ பின்னந்தலையில் அடித்தது போல ஒன்றை உணர்ந்தேன். மிலான் நகரத்தில் வெள்ளை இல்லாத எல்லா நிறமுமே – கருப்பு, பழுப்பு, மஞ்சள் – தெருவில்தான் இருந்தன. பிச்சை எடுத்தன. ரோட்டோரத்தில் கடை விரித்திருந்தன. இந்திய முகங்கள் இருந்தன. திருட்டுப்படகில் வரும் பங்களாதேசிகள் என்று படித்திருக்கிறேன். பரதேசிகள். நான் கிளம்புவதற்குமுன் பேசிய ஒருவர்கூட இத்தாலிக்கு ஆன்சைட் சென்றதில்லை.
“நான் அந்த பஞ்சப்பரதேசிகளில் ஒருவன் இல்லை…படித்தவன். சாப்ட்வேர் இஞ்ஜினியர்”. அவளிடம் எப்படி சொல்வது? ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் யாருமற்ற பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறாள் என்றால் ஏதோ ஷிஃப்ட் வேலை செய்கிறாள். விடுதி, மருத்துவமனை, எதுவோ. இத்தாலியில் எண்பது சதவீதம் பேரிடம் கார் உள்ளது. அவளிடம் இல்லையா? போடி பிச்சக்காரி…உன்னைவிட படித்தவன் நான். ஆத்திரமான மூன்றாவது “எக்ஸ்கியூஸ் மீ”க்கும் பதில் இல்லை.
ஒரு மணிநேரம் முன்புதான் இதமான வெந்நீர் குளியல் என்பதை நம்பவே முடியவில்லை. இங்கிருந்து எப்படியாவது போனால் போதும். கால் விரல்களும் மரக்கத்துவங்கின. “இந்த குளிரிலா உலகை வென்று இவ்வளவு உச்சங்களை உருவாக்கியிருக்கிறது மேற்கத்திய பண்பாடு?” கெஞ்சும் மெல்லிய குரல் “எக்ஸ்க்யூஸ் மீ…”, நடப்பது நடக்கட்டும் போ என்ற தீனமான “எக்ஸ்க்யூஸ் மீ…” எதற்கும் பதில் இல்லை. அவளுடைய சிகரட் தீர்ந்திருந்தது. கவிழ்த்துப்போடப்பட்ட கரப்பான் பூச்சி போல அந்த பேருந்து நிலையத்தில் ஓய்ந்திருந்தேன். என் விரல் நுனிகளில் தோலுரிந்து ரத்தம் வந்தது. நகக்கண்களில் விண்வினண் என்ற வலி.
எல்லாவிதமான வேண்டுதல்களும் முடிந்திருந்தன. கால்களில் முழுதாகவே உணர்ச்சிகள் இல்லாமல் கட்டை என தோன்றிய போது ஒரு பேருந்து வந்தது. அவள் ஏறினாள். நானும் தடுமாறி நொண்டிச்சென்று ஏறினேன். கீழே இருக்கவே முடியாத குளிர். பேருந்து எங்கே போனால் என்ன? “பிக்லெட்டி…பிக்லெட்டி” என்றார் ஓட்டுநர். அவரை பார்த்தேன். எதிரே மூடியிருந்த கியோஸ்க் ஒன்றை காட்டி “பிக்லெட்டி” என்றார். “எக்ஸ்க்யூஸ் மீ”, “பிக்லெட்டி” என்ற இரண்டே வார்த்தைகளில் மொத்த உரையாடல்களும் அடங்கியது. யூரோ நோட்டுகள், காயின்கள், கிரெடிட் கார்ட், பாஸ்போர்ட், கம்பெனி ஐடி கார்ட், காந்தி சிரிக்கும் ரூபாய் நோட்டுகள் என ஒவ்வொன்றாக காட்டினேன். “பிக்லெட்டி” என்றார் தீர்க்கமாக. பொருளற்ற வெற்று காகிதங்கள். கீழே இறங்கினேன். பேருந்து புறப்பட்டுவிட்டது. அட பிக்லெட்டிகளா!
ஒரு குரல் கேட்டது. திரும்பி பார்த்தேன். “நீ இலங்கையா?” என்னை நோக்கி வந்த அந்த கரிய மனிதர் ஆங்கிலத்தில் கேட்டார். ஆங்கிலம்! ஆங்கிலம்! கெட்டியாக பிடித்துக்கொள். இந்திய முகச்சாயல். சராசரி உயரம். மீசை.
“இல்லை. இந்தியா.” என்றேன். ஆனால் இவர் யார்? சிங்களரா? ஈழத்தமிழரா? புலியா? பாஸ்போர்ட்டையும், பணத்தையும் என் கை அநிச்சையாக கெட்டியாக பிடித்துக்கொண்டது.
“இந்தியாவில் எங்கே?” பயில்வானுக்குரிய உடல். கையுறைகள். சப்பாத்துகள். பெரிய அங்கி. தெளிவான குரல். ஐம்பது வயது இருக்கும். குளிர் அவரை எதுவும் செய்யவில்லை.
“தமிழ்நாடு” என தொண்டை வரை வந்த சொல், அவர் கண்களைப் பார்த்து சில நொடிகள் தயங்கியபின் “பெங்களூர்” என்று மாறியது. வாய் நடுங்கி குளறியது. நடுக்கத்தையும் மீறிய எச்சரிக்கை உணர்வு.
“நீயும் வாட்ச்மேனா?”
என்னது? வாட்ச்மேனா? “இல்லை…இல்லை…சாப்ட்வேர் இஞ்ஜினியர்.” பற்கள் தடதடத்தன. நான் சொன்னது அவருக்கு புரியவில்லை என அவர் கண்கள் காட்டியது. “கம்ப்யூட்டர்” என்று சொல்லி கைகளால் டைப் அடித்து காட்டினேன். சாப்ட்வேர் என்பது தொட்டு உணரக்கூடிய ஒரு பொருள் இல்லை. வரலாற்றில் இதற்கு முன்பு கண்ணால் பார்க்கக்கூடிய ஒரு பொருளை உருவாக்காத துறை ஒன்று இருந்திருக்கிறதா? எப்படி விளக்குவது?
மெல்ல தலையை அசைத்து புன்னகையுடன் ஆமோதித்தார். எந்த தயக்கமும் இல்லாமல் அவரை பற்றி சொன்னார். இங்கே ஒரு வங்கியில் காவலாளியாக பணிபுரிகிறார். இரவு ஷிஃப்ட் முடிந்து தன்னுடைய அறைக்கு திரும்புகிறார். மெல்ல நான் தமிழ்நாடு என்று சொன்னேன். இரண்டு தெரு தள்ளி ஒரு கடைக்கு அழைத்து சென்று, சரளமாக இத்தாலியன் பேசி எனக்கு பிக்லெட்டி வாங்கி தந்தார். பயணச்சீட்டு. பேருந்தில் ஏறியபின் பயணச்சீட்டு வாங்கமுடியாதாம். பெட்டிகடைகளில் முன்பே வாங்க வேண்டுமாம். அடுத்த பேருந்தில் ஏறினோம். கதகதப்பாக இருந்தது.
அவர் பேசிக்கொண்டே வந்தார். அவர் இலங்கை. காலி கடற்கரையில் ஒரு கடை வைத்திருந்தார். 2004 சுனாமியில் கடை அழிந்துவிட்டது. அவர் அம்மாவும் சுனாமியில் இறந்துவிட்டார். பின்பு ஒரு வருடம் இத்தாலி மொழி கற்று, தேர்வு எழுதி, மிலான் நகரத்திற்கு வந்தார்.
பேருந்தில் இறங்கி டூமோவிற்கான மெட்ரோ ரயிலில் ஏறினோம்.
“புலிகளால் எங்களுக்கு நிறைய பிரச்சனைகள்” என்று முகம் சுளித்தபடி சொன்னார்.
“இந்தியாவில் நாங்கள் பற்பல மொழி பேசி ஒன்றாக இருக்கிறோமே?” என்றேன்.
“நீங்கள் பெரிய நாடு. நாங்கள் கையளவு. இரண்டாக எப்படி பிரிய முடியும்?” என்று கேட்டார்.
உரையாடல் தொடர்ந்தது. வாதம். எதிர்வாதம். அனல்வாதம். புனல்வாதம். வெம்மையும். கதகதப்பும் கூடியபடி வந்தது.
பூமியின் அடியில் இருந்த மெட்ரோ ரெயிலில் இருந்து மேலே ஏறி வந்தோம். சூரிய ஒளியில் நகரம் துல்லியமாக தெரிந்தது. அருகே ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றார். ஒரு க்ரொஸாந்தும் காபியும் வாங்கினேன். என் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும் முன், உணவிற்கு அவரே பணம் தந்தார். என் கையில் ஒரு இருபது யூரோ நோட்டை திணித்தார். தொலைபேசி எண் தந்து அழைப்பதற்கு தயங்காதே என்றார். பார்ப்போம் என சொல்லி பிரிந்தோம்.
நமக்கெல்லாம் பல வருடங்கள் முன்பு தென்ஆப்ரிக்காவிற்கு ஆன்சைட் போன லண்டன் எஜுக்கேட்டட் வக்கீலிடம் கேட்க தோன்றியது, “மோகன்தாஸ், டர்பனில் அந்த முதல் வகுப்பு டிரெயின் டிக்கட்டை எடுக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றியது?”
ஒரு புன்னகையுடன் எதிரே தெரிந்த பிரம்மாண்டமான கத்தீட்ரலை நோக்கி நடந்ததேன்.
1 Comment
Comments are closed.