
விலாஸம் – பா.திருச்செந்தாழை
[https://livingtamillitfest.org/– வாழும்தமிழ் நியூயார்க் மாநாட்டிற்கு வருகை தரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை பற்றி ‘விஷ்ணுபுர இலக்கிய வட்டம் – பே ஏரியா’ மாதாந்திர கூடுகையில் தொடர்ந்து உரையாடுகிறோம். மார்ச் 14, 2026 இல் பா.திருச்செந்தாழை எழுதிய விலாஸம் குறித்த என் ஏழு நிமிட உரையின் எழுத்து வடிவம். மட்டுறுத்துனர்: நண்பர் பிரசாத் வெங்கட் ]
நண்பர்களுக்கு வணக்கம்.
சீத்தலை சாத்தனாரை நமக்கு தெரியும். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை எழுதியவர். இளங்கோவடிகளிடம் கண்ணகியின் கதையை சொல்லி சிலப்பதிகாரத்தை எழுதத்தூண்டியவர். சேரன் செங்குட்டுவன் கண்ணகி கோவிலை கட்டுவதற்கு தூண்டுதலாக இருந்தவர். சீத்தலை சாத்தனாரின் முழு பெயர் – மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தன். மதுரையில் கூலவாணிகம் செய்தவர். நெல்லரிசி, புல்லரிசி, வரகு, தினை, சாமை, சோளம் என எட்டுவகை தாணியங்களின் வணிகம்தான் கூலவாணிகம். தமிழ் விக்கியில் மேலும் படிக்கலாம்.
மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனாரின் வழியில் வந்த மதுரை நவதானிய வணிகர் பா.திருச்செந்தாழை எழுதிய விலாஸம் சிறுகதை குறித்த சிறிய உரை இது. திருச்செந்தாழை மதுரையில் நவதானிய வணிக நிறுவனம் நடத்துகிறார். 2008 இல் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவந்தது. மீண்டும் கோவிட் காலத்தில்தான் (2021 இல்) இணைய இதழ்களில் சிறந்த சிறுகதைகள் எழுதியிருக்கிறார். கோவிட் காலத்தில் எழுதிய கதைகள் “விலாஸம்” என்ற பெயரில் இரண்டாவது சிறுகதை தொகுப்பாக வெளிவந்தது. அந்த தொகுப்பின் முகப்பு கதை “விலாஸம்”.
கதை என்ன ?
யானை உயர காம்பவுண்டுக்குள் சாரட் வண்டி வீடு என்று அழைக்கப்பட்ட ராமவிலாஸ் இருக்கிறது. தேக்கினாலும், மொசைக்கினாலும் கட்டப்பட்ட பங்களா. பெருங்காட்டில் பாய்ந்தோடுகிற ஒற்றை பேராறைப்போல தேனியில் பணம் நுழைகின்ற எல்லாவழியிலும் ராமவிலாஸ் மட்டுமே இருந்தது. பொன்கொண்ட பெருமாள் என்ற பெரிய வணிகரின் வீடு அது. ஆனால் நாற்பது வருடங்களில் வணிகம் சுருங்கி ராமவிலாஸ் வெறும் ராமபவனம் ஆக தேய்கிறது. உடற்குறை கொண்ட ஒரு மகள் பிறந்ததால் மருமகன் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார். ராமவிலாஸ் குடும்பம் நடத்திய பள்ளிக்கூடத்தை ஜாதி சங்கம் எடுத்து நடத்துகிறது. இப்போது பள்ளிக்கூடத்தில் மகள் கல்யாணி சம்பளத்துக்கு வேலை செய்கிறாள். முழுமையான வீழ்ச்சி.
அந்த பெரிய வணிகரின் எண்ணற்ற வணிகங்களின் ஒன்றில் ஒரு எடுபிடி சிறுவனாக நுழைந்து, அவர்கள் கீழே இருபது வருடங்கள் நசுங்கி வேலை செய்து, ஒரு சிறிய விதையை கைக்கொண்டு அந்த பேராற்றின் இழுவிசையை மீறி கடலை அடைந்த வலிய மீன் தன்ராஜ். பொன்கொண்ட பெருமாளிடம் வணிகத்தின் சூட்சமத்தை கற்றுக்கொண்டு வென்றவர். ராமவிலாஸில் இருந்து ஒரு சிறு நெருப்பை கையளவு வைக்கோலில் பற்றிக்கொண்டு வந்து ஒரு மலையையே பற்றவைத்த புதிய பணக்காரர் தன்ராஜ்.
தன்ராஜின் விரிவடையும் வணிகத்தின் ஒரு பகுதியாக அவர் புதுதாக துவங்கிய ஒரு மில்லின் அழைப்பிதழுடன் வாழ்ந்து கெட்ட தன் முதலாளியை பார்க்க போகிறார். தன்ராஜுக்கும் பொன்கொண்ட பெருமாளுக்குமான உரையாடல், அதன்பின்னான நிகழ்வுகள், தன்ராஜின் வாழ்க்கை, புகழேந்தி, அய்யாவு போன்ற கடை சிப்பந்திகளின் வாழ்க்கை என தன்ராஜின் மகனான கதைசொல்லியின் பார்வையில் விரியும் சிறுகதை.
கதையில் எனக்கு பிடித்தது:
- கதையின் புதிய களம்: நவீன தமிழ் இலக்கியத்தில் ஆண்-பெண் உறவுதான் பெரும்பாலான கதைகளின் பேசுபொருள். நம் குழுமத்தில் விவாதிக்கப்பட்ட சிறுகதைகளிலே பொரும்பாலும் இந்த பின்புலம்தான். எழுதாத களங்கள் நிறைய இருக்கிறது. வணிக பின்புலத்தில் எழுதப்பட்ட இந்த சிறுகதை ஒரு புதிய உலகை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
- சிறுகதையில் இருக்கும் இருக்கும் நுண்தகவல்களும், நிகர்வாழ்வும்:
- தன்ராஜ் போன்ற வெற்றிகரமான வியாபாரியை “எல்லாம் அங்க இருந்து திருடிட்டு வந்துட்டான்” என்றே பொதுவாக சொல்வார்கள். தன்ராஜின் கடுமையான உழைப்பு, மாறும் சூழல், அந்த மாறும் சூழலை பயன்படுத்தும் அவருடைய கூர்மையான அறிவு என விவரிக்கப்படுகிறது. இருபது வருடங்கள் முன்பு ஆரம்பத்தில் “முன்ன பின்ன தெரியாத உன்னை எப்படி நம்புவது?” என சம்சாரிகள் தன்ராஜை ஒரு தாசியை போல அவமானப்படுத்துகிறார்கள். பொறுமையாக இருக்கிறார். அப்போது சர்க்கரை நோய் இன்னும் பெரிதாக பரவவில்லை. வரகரிசி போன்ற சிறுதானியங்களுக்கு இன்னும் சந்தையில் விலை இல்லை. ஆனால் தன்ராஜ் சிறுதானியத்தின் மீது கவனம் செலுத்துகிறார். கழிவு என குப்பையில் கொட்டப்பட்ட தவிடில் இருந்து எண்ணை எடுக்கலாம், மறுசுழற்சி செய்து அந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம், அதை விற்று லாபம் பார்க்கலாம் என்பதை கண்டுகொள்கிறார் தன்ராஜ். தவிட்டு எண்ணெய் லாபத்தில் ஒரு பங்கை வைத்து, வடக்கு வியாபாரிகளைவிட குறைவான விலைக்கு சிறுதாணியங்களை விற்று, மொத்த சிறுதாணிய சந்தையையும் பிடிக்கிறார். சர்க்கரைநோய் பெருகி, ராமவிலாசில் இருந்து, பத்தோடு பதினொன்றாக “தாய்ப்பால் மறந்த சிறு குழந்தையை” போல இருந்த சிறுதாணிய வியாபாரத்தை பிடிங்கிக்கொண்டு வந்தவர், அதனை ஒரு யானையை போல வளர்த்தெடுக்கிறார்.
- சிறுகதையில் வெளிப்படும் தத்துவ பார்வை:
- மகிழ்ச்சி என்பது என்ன ? நிறைவு என்பது என்ன ? என்ற கேள்வியை சிறுகதை முன்வைக்கிறது.
- வணிகத்தின் வெற்றியின் உச்சத்தில் இருக்கும் தன்ராஜ் மகிழ்ச்சியாக இருக்கிறாரா ? வணிக வெற்றி என்பது சூதில் வெல்லும் ஒரு போதை. தன்ராஜ் துயரத்துடன் வரும்போதும் சரி, வெற்றியின் உச்சத்திலும் சரி, வெறும் நீரையும் உணவையும் தரும் மனைவியிடம் ஒரு இணை-மனதை எதிர்பார்த்து ஏமாறும் தனிமையில் இருக்கிறார். ஒரு நொடியில் ஆறில் ஒரு பங்கு நேரத்திற்கும் மேலாக அவரால் சிரிக்கவே முடியவில்லை.
- முழுமையான வீழ்ச்சியை சந்தித்த பழைய முதலாளி “மாப்பா” பொன்கொண்ட பெருமாள் துயரத்தில் இருக்கிறாரா ? போலி பவ்யத்துடன், ஒரு சீண்டலை எதிர்பார்த்து தன் வீட்டிற்கு வந்திருக்கும் தன்ராஜிடம், வேட்டையின் வாசலுக்கே வராமால் கடந்து செல்லும் முதிய யானை போல இருக்கிறார். “எத்தனை பேர் காலை ஒடச்சிட்டு இவன் முன்னால ஓடுறான்” என தன்ராஜை வன்மத்துடன் புகழேந்தி சொல்லும்போதும், “வியாபாரம் என்பது போர்தான். போரில் தலையென்ன, காலென்ன ? பள்ளத்துக்கு அருகில்தான் மேடு உருவாகிறது” என்கிறார். அவரின் கடந்தகால துயரம் தரும் சோர்வு படர்ந்து, குழந்தைத்தனமான சிரிப்பு குறையும்போது வரும் உடற்குறை கொண்ட பேத்தி நங்கவல்லி அவரை மீண்டும் மகிழ்ச்சிக்கு கொண்டுவருகிறாள்.
- “புத்தகத்தை அப்பப்ப மூடி வைச்சுகிட்டு, பொறுமையா மூணாறுல வாங்குன இலைகளை நுணுக்கிபோட்டு தானா சிரிச்சுகிட்டு மொதலாளி ஒரு டீ போடுறீங்களே…பாத்துருக்கேன். சாய்ங்கால தூத்தல் மாதிரி முகம் குளுந்து நிக்கும்” என கதைசொல்லியிடம் சொல்கிறார் அய்யாவு. கலையும், இலக்கியமும், ரசனையும் தரும் இன்பம் அது. தேனி தமிழ்நாட்டின் அழகிய மாவட்டத்தில் ஒன்று. முழுக்க வணிகத்தில் இருப்பவர்களுக்கு குளிர்ந்த மழைச்சாரலே தீப்பற்றிக்கொண்டதை போல இருக்கிறது. மழையில் தினை காயவைக்கும் களம் குளிர்ந்துவிடக்கூடாது என தவிட்டை பரப்பி, தார்ப்பாய் போட்டு மூடுவதற்கு ஓடுகிறார்கள். அவர்களுக்கு மழையையும், முகில்களையும், மலையையும் நின்று ரசிப்பதெற்கெல்லாம் நேரமும் இல்லை. அதற்குரிய மனமும் இல்லை. ஆனால் கதைசொல்லி லௌகீக உலகத்தில் வெல்பவர்களை ஒரு மேட்டிமை மனநிலையில் நின்று இளக்காரமாக பார்க்கவில்லை. அவர்களின் லௌகீக உலகில் வெல்லும் திறனை ஒருவித பயத்துடனும், வியப்புடனுமே பார்க்கிறார். ரசனையும், மகிழ்ச்சியையும் அனுபவியுங்களேன் என ஒருவித ஏக்கத்துடனேதான் சொல்கிறார்.
- குரு-சீட உறவு: முந்தைய தலைமுறையை வென்றே அடுத்த தலைமுறை வளர்கிறது. ராமவிலாஸ் தன்னுடைய கிட்டங்கிகளை தன்ராஜுக்கு லீஸுக்கு தருவதில் தன்ராஜ் முழுமையாக ராமவிலாஸை வெல்கிறார். ஆனால் தன்ராஜ் அந்த வெற்றியை கொண்டாடவில்லை. பொன் கொண்ட பெருமாளுக்கும் – தன்ராஜுக்குமான உறவு, புகழேந்திக்கும் – தன்ராஜுக்குமான உறவு, அய்யாவு – கதைசொல்லுக்குமான உரையாடல் என இந்த குரு-சீட உறவு விவரிக்கபடுகிறது.
- மகிழ்ச்சி என்பது என்ன ? நிறைவு என்பது என்ன ? என்ற கேள்வியை சிறுகதை முன்வைக்கிறது.
கதை எனக்கு மிகப்பிடித்திருந்தது. நன்றி.
