2025

2025ஆம் ஆண்டு செயல் நிறைந்த ஆண்டாக இருந்தது. மகிழ்வான வருடம். 

  • விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களின் உதவியுடன் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் 2025 அமெரிக்க பயணத்தில் பல நிகழ்வுகளை ஒருங்கிணைத்தோம். அவற்றை பற்றிய என் எண்ணங்களை கீழே தொகுத்திருக்கிறேன்.
  • வாசிப்பு குழுமம்: “வெண்முரசு” ஆவணப்படத்தை ஃப்ரீமாண்ட் நகரில் நண்பர் சுதர்ஷனுடன் இணைந்து 2021 கோவிட் காலகட்டத்தில் திரையிட்டேன். சாரதா, பிரசாத், சாரதி, சுதா, கண்ணப்பன், அண்ணாதுரை ஆகியோரை முதலில் அந்த திரையிடலில்தான் சந்தித்தேன். பழைய நண்பர்கள் ஆர்.வி.யும், பத்மநாபனும் வந்திருந்தார்கள். அதன்பிறகு பூன் முகாமில் விஜய் ரங்கராஜன், ஜெர்ரி லூயிஸ், அசோக் உள்ளிட்டோரை சந்தித்தாலும் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கலிபோர்னிய நண்பர்கள் நேரில் சந்தித்தோம். சாரதாவும், பிரசாத்தும் இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்தே பே ஏரியாவில் ஒரு வாசிப்பு குழுமம் தொடங்கலாம் என்றார்கள். உண்மையில் எனக்கு மிக தயக்கமாக இருந்தது. நேர மேலாண்மை, ஒருங்கிணைப்பு, வாசிப்பு பட்டியலை தயாரித்தல் என அதற்கு ஒரு தீவிரம் தேவையாகிறது. வாசிப்பு குழுமங்களின் “பயன் மதிப்பு” என்ன என்பது எனக்கு ஒரு கேள்வியாக இருந்தது. பத்து வருடங்கள் முன்பு வாசிப்பு குழுமங்களை ஒருங்கிணைத்து இருக்கிறேன். சில பழைய அனுபவங்களும் தயக்கத்திற்கான காரணம். ஆனால் அதேசமயம் எனக்கு தமிழ் / இந்திய இலக்கியத்திற்கான அறிமுகமும் அந்த குழுமத்தால்தான் சாத்தியமானது. வாசிப்பு குழுமத்தை மீண்டும் துவங்கலாம் என சாரதா ஆர்வமாக இருந்தார். சென்ற ஆண்டு ஜெ கலிஃபோர்னியா வந்தபோது அவருடைய ஆலோசனைகளை கேட்டோம். மாதம் ஒரு முறை சந்திக்கவேண்டும்; யார் வந்தாலும், வராவிட்டாலும் தொடர்ந்து நடத்துங்கள்; சரியான நேரத்திற்கு துவங்கி முடிக்கவேண்டும்; ஏழு நிமிட உரை வடிவம்; உரைகளை காணொளியாக பதிவு செய்து யூடியூப் தளத்தில் பதிவேற்றுங்கள் (உரையாற்றுபவர் அனுமதியுடன்), வாசிப்பு குழுமத்திற்கான வலைதளம் ஒன்று இருப்பது நல்லது; புதிதாக யாராவது வந்தால் அவர்களுக்கு இந்த குழுமம் எப்படி செயல்படுகிறது என்பது புரியும்; சிறுகதைகளுடன் துவங்குங்கள்; அவ்வப்போது ‘டிராமடிக் ரீடிங்’ (ஒரு சிறுகதையை எடுத்து வெவ்வேறு கதாப்பாத்திரங்களை வெவ்வேறு நபர்கள் உணர்ச்சியுடன் வாசிப்பது, பின்னனியை ஒருவர் வாசிப்பது), ஒப்பனையற்ற நாடகம் போன்றவற்றையும் முயற்சிக்கலாம் என்றார். சென்ற ஆண்டு ஜெ.வின் “கேள்வி பதில்” நிகழ்விற்கு வந்தவர்களை எங்கள் வாசிப்புக்கான வாட்ஸ்-ஆப் குழுமத்தில் சேர்த்துக்கொண்டு, 2024 நவம்பரில் வாசிப்பு குழுமத்தை துவங்கினோம்.  ஜெ.வின் சிறுகதை “விமர்சகன் பரிந்துரை” பட்டியலில் இருந்து கதைகளை பத்மநாபன் தேர்ந்தெடுக்கிறார். முதல் இரண்டு சந்திப்பிலே பிரசாத்தின் ஒருங்கிணைக்கும் திறனை கண்டு வியந்தேன். நேர மேலாண்மைக்கு பிரசாத்தான் சரியான ஆள் என்று தோன்றிவிட்டது. பேச்சுக்கலையை வளர்க்கும் “டோஸ்ட் மாஸ்டர்ஸ்” குழும அனுபவம் அவருக்கு உள்ளது. மூன்றாவது சந்திப்பிற்கு மௌனியின் கதைகளை(!) படித்து அதற்கு அடுத்த சந்திப்பிற்கும் வாசகர்கள் வந்தவுடனே, சரி நம் ஆட்கள் தொடர்ந்து வருவார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. மாதம்தோறும் முதல் சனிக்கிழமை 10:00 மணிமுதல் 12:00 மணிவரை ப்ரீமாண்ட் நூலகத்தில் சந்திக்கிறோம். முதல் வருட முடிவில் பனிரெண்டாவது சந்திப்பில் அசோகமித்ரனின் கதைகளை வாசித்து, விவாதித்தோம். ஜெ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்வில் சாரதி, சத்யாநாராயணன், பாலாஜி குருமூர்த்தி சிறப்பாக உரையாற்றினார்கள். குழுமத்திற்கான சில ஆலோசனைகளை ஜெ சொன்னார். முதன்மையாக குழுமம் என்பது நண்பர்கள் கூடிக்களித்து மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரு இடம் (உவப்பத்தலைகூடி உள்ளப்பிரிதல்); இரண்டாவது குழுமம் “வாழும் குழுமம்” ஆக இருக்க வேண்டும். “Breathing” என்பது முக்கியம். புதிய நண்பர்களுக்கான வாசல் எப்போதும் திறந்து இருக்க வேண்டும், புதியவர்களை சேர்த்து குழுமம் வளர்ந்தபடியும் இருக்க வேண்டும்; ஓரளவிற்கு மேல் நெகட்டிவ்வாக தொடர்ந்து பங்களிப்பவர்களை குழுமத்தைவிட்டு விலக்கிவிடவும் சொன்னார். புத்தக குழுமத்தின் “பயன் மதிப்பு” தெளிவாக தெரிந்தது. நாவல் பட்டறைக்கான பங்கேற்பாளர்கள், புத்தக சந்திப்பிற்கு ஏற்பாடுகள் என குழுமத்தின் நண்பர்கள் உதவி இல்லாமல் நிகழ்ந்திருக்காது. நாங்கள் துவங்கிய அதே காலகட்டத்தில் டெக்சஸ் டலாஸ் நகரிலும் பிரதீப், மூர்த்தி ஒருங்கிணைப்பில் வாசிப்பு குழுமம் துவங்கி சிறப்பாக செயல்படுகிறது. புத்தகம் வாங்குபவர்கள், வாசிப்பவர்கள், எழுதுபவர்கள், இலக்கிய செயல்பாடுகளுக்கு நிதி அளிப்பவர்கள் என எவ்வகையிலும் நேர்மறையாக பங்களிப்பவர்களை குழுமத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
  • நாவல் பட்டறை: ஆகஸ்ட் மாதம் நடந்த க.நா.சு இணையவழி  கலந்துரையாடலில் மலேசிய எழுத்தாளர் ம.நவீன் பங்கேற்றார். சியமந்தகம் தொகுப்பில் நவீனுடைய “பெருங்களிறின் வருகை” கட்டுரையை வாசிக்குபோது, எப்படி பத்து-பதிணைந்து வருடங்களில் மலேசியாவில் ஒரு பல எழுத்தாளர்கள் உருவாகி நாவல்கள், சிறுகதைகள் என தரமான படைப்புகள் வெளிவந்திருக்கிறது என்பது புரிந்தது. 2016இல் ஜெ நடத்திய சிறுகதை பட்டறை, 2017இல் ஜெ.வும், நாஞ்சில் நாடனும் இணைந்து நடத்திய குறுநாவல் பட்டறை, நவீன் நடத்திவரும் வல்லினம் இலக்கிய இதழும் மலேசியாவின் இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவி இருக்கிறது. ஆசிரியர்களின் வருகையை எப்படி சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் தெரிந்தது. கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் பூன் குன்றில் இலக்கிய முகாமும், தத்துவ முகாமும் நடைபெறுகிறது. அதன் நீட்சியாக இந்தமுறை  ஜெ வரும்போது எழுத்து பட்டறைகள் நடத்த வேண்டும் என்றும் தோன்றியது. சமீபத்தில் சென்னையில் மானசா பதிப்பகத்தின் நாவல் போட்டிக்காக பெண்களுக்கான ஒரு நாள் நாவல் பட்டறையை ஜெ நடத்தினார். அமெரிக்காவிலும் அதேபோல ஒரு நாவல் பட்டறையை நடத்த வேண்டும் என கலிஃபோர்னியா நண்பர்களிடம் கலந்துபேசி ஒரு சிறிய குழு திரண்ட உடனே, ஜெ.விடம் நாவல் பட்டறைக்கான ஒப்புதல் வாங்கினேன். மேற்குக்கரையின் பெருநகரங்கள் (சான் பிராண்சிஸ்கோ பே ஏரியா, சாக்ரமண்டோ, சியாட்டில், போர்ட்லாண்ட், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் டியாகோ) அனைத்தில் இருந்தும் முப்பது நண்பர்கள் கலந்துகொண்டார்கள். பழனி ஜோதியும், நிர்மலும் கிழக்குக்கரையிலும் ஒரு ‘நாவல் பட்டறை’யை அடுத்த சில வாரங்களில் ஒருங்கிணைத்தார்கள். அமெரிக்க தமிழ் எழுத்தாளார்களில் நல்ல சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியவர்கள் உண்டு. என் பார்வையில் அர்விந்த் எழுதிய “சீர்மை” மட்டுமே சிறப்பான குறுநாவல். அமெரிக்காவில் இருந்து தமிழில் நல்ல நாவல் என எதுவும் இதுவரை வந்ததில்லை. சிறுகதைகள், கட்டுரைகள் முக்கியமானவை என்றாலும் நாவல் எழுதும் வரை ஒருவர் உண்மையில் எழுத்தாளர் இல்லை. “நாவல் பட்டறை” அந்த வகையில் ஒரு முக்கியமான தொடக்கம். இனிவரும் காலங்களில் சிறுகதை பட்டறைகள், வாசிப்பு பட்டறைகள், முழுமையறிவு வகுப்புகளை அமெரிக்காவில் ஒருங்கிணைப்போம்.       
  • புக் டூர்”:  பிரமோதினி இரண்டு வாரத்திற்கு ஒரு ஆங்கில நாவல் என வாசித்து தள்ளுவாள். அவளுக்கு பிடித்த ஆலி ஹேசல்வுட் வீட்டிற்கு அருகே ஒரு ‘புக் டூரு’க்காக வந்தார். புத்தக கடைகள், நூலகங்கள் என அமெரிக்க எழுத்தாளர்கள் ‘புக் டூர்’ போகிறார்கள். ஜெ.வின் “ஸ்டோரீஸ் ஆஃப் தி ட்ரூ” (‘அறம்’ சிறுகதை தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு – பிரியம்வதா) இந்த வருடம் FSG பதிப்பகம் மூலமாக அமெரிக்காவில் வெளிவந்து இருக்கிறது. பதிப்பகம், விஷ்ணுபுர நண்பர்கள் உதவியுடன் ‘புக் டூரை” அமெரிக்கா முழுவதும் பத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் ஏற்பாடு செய்தோம். நாங்கள் நினைத்தைவிட சிறப்பாக நடந்தது. கலிஃபோர்னியாவில் புத்தக சந்திப்பை ஏற்பாடு செய்ய சில கடைகளை தொடர்புகொண்டு அவர்கள் ஏற்கனவே வேறு நிகழ்வுகளுக்கு முன்பதிவு செய்துவிட்டதால் சோர்வடைந்த போது, மாதாந்திர புத்தக சந்திப்பில் நண்பர்களிடம் உதவி கேட்டேன். இந்த பகுதியிலே பெரிய புத்தக கடைகளில் ஒன்றான சான் மாட்டேயோ பார்ன்ஸ் & நோபில் புத்தக கடையை பாலாஜி குருமூர்த்தி தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தார். அஞ்சலி பிரசாத் நிகழ்வை சிறப்பாக தொகுத்துவழங்கினார். எப்போதும் எதையாவது திட்டமிடும்போது பிளான் ஏ, பிளான் பி, பிளான் சி என்று போட்டு வைத்திருப்பேன். ஆனால் ‘கச்சிதமாக’ நடக்கவேண்டும் என்பதில்லை, சில பிழைகள் நிகழ்ந்தாலும் பரவாயில்லை, யோசனைகளை உரிய முறையில் சொன்னால் போதும், உதவிக்கு நண்பர்கள் வருவார்கள், நிகழ்வுகள் நன்றாக நடக்கும் என இந்தமுறை அனுபவபூர்வமாக கண்டுகொண்டேன். பிழைகளை குறித்துவைத்துக்கொண்டு அடுத்த முறை திருத்திவிடலாம். இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிதல் எனக்கு இதுதான்.      
  • “தத்துவ வகுப்புகள்”: ஜெ நடத்திய எமர்சன் பூன் முகாமின் இரண்டு தத்துவ வகுப்புகளிலும் நானும் பிரமோதினியும் கலந்துகொண்டோம். ‘இந்திய தத்துவ அறிமுகம்’, ‘வேதங்கள்’ என இரண்டு வகுப்புகள். ஏற்கனவே முதல் வகுப்பில் சென்ற ஆண்டு கலந்து கொண்டோம். ஒட்டுமொத்த இந்தியாவும் செயலின்மையில் சிக்கி வில்லை கீழே போட்ட தருணத்தில் கீதை சொல்லப்பட்டிருக்கும்; அதேபோல படையெடுப்பகளால் இந்திய ஆலயங்கள் இடிந்துகிடந்த போது “மகிழ்ச்சியாக இரு” என்ற தத்துவத்துடன் வல்லபரின் “புஷ்டி மார்க்கம்” தோன்றியது என பலவற்றை ஜெ சொன்னார். தத்துவ வகுப்பின் குறிப்புகளை வீட்டிற்கு வந்து மீண்டும் விரிவாக தட்டச்சு செய்து வைத்துக்கொண்டேன்.     
  • “இந்தியா பயணம்”: கோவிட், விசா சிக்கல்கள், சில காரணங்களால் ஆறு வருடங்களாக இந்தியாவிற்கு போக முடியவில்லை. இந்த வருடம் கோடையில் இரண்டு மாதங்கள் இந்தியாவில் இருந்தோம். அலுவலக வேலைக்காக மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் ஆறு வாரங்களும், தமிழ்நாட்டில் இரண்டு வாரங்களும் இருந்தேன். என் அப்பாவும், அம்மாவும் பூனே வந்து உடன் தங்கியிருந்ததும், சென்னை, திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை என உறவினர்களை சந்தித்ததும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. பல வருடங்கள் கழித்து வருவதால் கோயில்கள், குலதெய்வ வேண்டுதல்கள், உறவினர் சந்திப்புகள் என எல்லா நாட்களும் பயணங்கள்தான். விரிவாக பிறகு எழுதவேண்டும். யோகா குருஜி சௌந்தர், எழுத்தாளர் அஜிதன், ஜெ மூவரையும் சென்னையில் சந்தித்தோம். 2026இல் விஷ்ணுபுர நிகழ்வுகளுக்கு வரவேண்டும்.    
  • நிரல் போட்டி”: நான்கு வருடங்களாக கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் கணினி நிரல் போட்டியை நான், மகேந்திரராஜன், அருள்ராஜ் நடத்தியிருக்கிறோம். கல்லூரியில் மெஷின் லேர்னிங் சார்ந்து ஒரு ஓப்பன் சோர்ஸ் டீமை உருவாக்கவேண்டும் என்பது நோக்கம். 2023 ஆம் ஆண்டு இலங்கை மொரட்டுவா பல்கலைகழக மாணவர்களும் பங்கேற்றார்கள். திறன்வாய்ந்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை குறைவாக இருக்கிறது. மற்றவர்களுக்கு “சர்டிபிகேட்” வாங்கிக்கொள்வதில் இருக்கும் ஆர்வம் தொடர்ந்து ஆறு மாதம் செயலாற்றுவதில் இல்லை. பணம் பிரச்சனையே இல்லை. ஆனால் உண்மையான ஆர்வம் இருக்கிறதா? நாங்கள் செலவிடும் நேரம் மதிப்புடையதாக இருக்கிறதா? என்பதே கேள்வி. எனக்கு நேரமும் குறைவாக இருக்கிறது.  ஏ.ஐ தொழில்நுட்பத்திற்கு பிறகு நிரல் போட்டிகளை நடத்துவதும் சிக்கல். ஏ.ஐ எழுதிய நிரலா என்றும் கண்டுபிடிக்க முடியாது. இந்த வருடம் ஒரு பிராஜக்ட் செய்யலாம் என கல்லூரியில் கேட்டுக்கொண்டதால், டிசம்பர் மாதம் இறுதியில் ஒரு யோசனையை தெரிவித்து இருக்கிறேன். சில மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்திருக்கிறார்கள்.
  • தினமும் ஒரு மணி நேரம் எழுதும் குழுமம்”: எழுத்தாளர்கள் தினமும் எழுத வேண்டும் என ஜெ சொன்னார். ஒரு குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட இடம் தேர்வு செய்து, தினமும் எழுதினால் அந்த இடத்தில் போய் அமர்ந்தால் எழுதும் மனநிலை அமையும் என்றார். மராத்தான் ஓடுவதற்கு தினமும் பயிற்சி எடுப்பதுபோல. பூன் முகாமிற்கு பின்பு, தினமும் ஒரு மணி நேரமாவது எழுதும் குழுமம் ஒன்றை சில நண்பர்களுடன் பரிட்சார்த்த முறையில் வாட்ஸ்-ஆப்பில் தொடங்கியிருக்கிறோம். என்ன வேண்டுமாலும் எழுதலாம். தினமும் எவ்வளவு நேரம் எழுதியிருக்கிறீர்கள், எத்தனை வார்த்தைகள் எழுதியிருக்கிறீர்கள் என்பதை மட்டும் பதிவிட்டால் போதும். எழுதியதை பகிரவேண்டும் என்று அவசியம் இல்லை. எழுத்துக்கு மட்டும் இல்லை, இசை உள்ளிட்ட கலைகளுக்கும் இது பொருந்தும் என்ற இசையமைப்பாளர் ராலே ராஜன் “மலைமேலெ ஒரு பாறையை உருட்டிப்போவது” என்ற உவமையை சொன்னார். ஒரு நாள் பயிற்சி செய்யவில்லை என்றாலும், திரும்பிப்போனால் பாறை விட்ட இடத்தில் இருக்காது, கீழே போயிருக்கும், மீண்டும் கீழே இருந்து மேலே தள்ள வேண்டும் என்றார். யோகா குருஜி சௌந்தர் ஒரு செயலை 90 நாட்கள் இடைவிடாமல் செய்தால் மனம் அதை இயல்பாக செய்யத்துவங்கும் என்கிறார். குழுமம் துவங்கியதில் இருந்து 60 நாட்களும் தினமும் ஒரு மணி நேரம் தமிழில் எழுதியிருக்கிறேன்.  2026க்கான  இலக்குகளில் ஒன்று 365 நாளும் எழுத வேண்டும் என்பது. 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.