எழுத்தாளர் அ.முத்துலிங்கம் – அறிமுக உரை

விஷ்ணுபுர இலக்கிய வட்டம் – பே ஏரியா கிளையின் மாதாந்திர சந்திப்பில் (நவம்பர் 2025 – பதிமூன்றாவது கூட்டம்) எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களை பற்றி ஆற்றிய அறிமுக உரையின் கட்டுரை வடிவம்.

நண்பர்களுக்கு வணக்கம்.

குங்ஃபு பாண்டா படத்தில் ஒரு ஆமை வரும். மாஸ்டர் ஊகுவே. மூத்த மடாதிபதி. எனக்கு எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களை நினைக்கும்போதெல்லாம் மாஸ்டர் ஊகுவேதான் நினைவிற்கு வருவார்.  

எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் பங்களிப்பு என்பது முன்று வகைகளில் முக்கியமானது.

  1. முதல் பங்களிப்பு என்பது ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், ஆப்ரிக்க, அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட தமிழில் எழுதப்படாத வெவ்வேறு நிலப்பகுதிகளையும், அந்த பண்பாட்டின் பின்புலத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளும் கட்டுரைகளும் தான். இரண்டு பண்பாடுகள் சந்திக்கும் போது, ஒன்றுடன் ஒன்று மேற்கொள்ளும் உரையாடல்களும், மதிப்பீடுகளும் நம்மை நாமே பார்த்துக்கொள்ள உதவுபவை. உதாரணமாக:
    • ஆப்ரிக்காவில் வைர சுரங்களில் வேலை செய்யும் பெண்களை புகைப்படம் எடுக்க விரும்புகிறார். அவர்கள் மிகவும் வெட்கப்படுகிறார்கள். அவர்கள் பொதுவாக வெட்கப்படமாட்டார்கள். பிறகு ஒரு மரத்திற்கு பின்பு சென்று டி.ஷர்ட்டை கழட்டிவிட்டு பிறந்த மேனியாக வந்து சிரித்தபடி போஸ் தருகிறார்கள். அசிங்கமான டிஷர்ட் போட்டிருப்பதற்காக வெட்கப்பட்டிருக்கிறார்கள். (நாம் தொப்பியை கழட்டி, கலைந்த தலைமுடியை கைகளால் அழகுபடித்திக்கொண்டு போஸ் தருகிறோம் இல்லையா?). அப்படியென்றால் “வெட்கம்”, “அழகு” என்றால் என்ன? 
    • இந்தியர்கள் இறந்தவர்களை எரிக்கிறோம் என்பதை தெரிந்து “அட கொடூரர்களா” என்று ஆப்ரிக்கர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். ஆப்ரிக்க சடங்குகளில் இறந்தவர்களின் சிறிய பகுதியை அறுத்து உண்கிறார்கள். இறந்தவர்கள் நம் உடலின் பகுதியாக ஆகி என்றென்றும் நம்மோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை அது. இயேசு கிறித்துவின் உடலாக அப்பமும், அவர் ரத்தமாக வைனும் பருகும் சடங்கின் மூல வடிவம் அல்லவா?
    • ஏற்கனவே பிள்ளை பெற்ற பெண்களை திருமணம் செய்வதற்கு போட்டி நிலவுகிறது. ‘கற்பை காப்பாற்றிக்கொள்ளும் பெண்’ என்ற நம் தமிழ் சினிமாக்கள் அவர்களுக்கு மிக அந்நியமாக இருக்கிறது. சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் அ.முத்துலிங்கம் தமிழின் “முதல் உலக எழுத்தாளர்”.  
  2. இரண்டாவது பங்களிப்பு என்பது அவருடைய அமைப்புச்செயல்பாடுகள். எழுத்தாளர்களில் இருவகை உண்டு. எழுத்து மட்டுமே வாழ்க்கை என இருப்பவர்கள் ஒருவகை. எழுத்தும், எழுத்து சார்ந்த பண்பாட்டு அமைப்புகளையும் உருவாக்கியர்கள் இரண்டாம் வகை.
    • கனடா இலக்கிய தோட்டம் என்னும் அமைப்பை உருவாக்கி “இயல்” விருது (வாழ்நாள் சாதனையாளர் விருது), கவிதை, கணிமை, சிறந்த புனைவு உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்குகிறார். “கனடா இலக்கிய தோட்டம்” இருபது வருடங்களாக செயல்பட்டு வருகிறது. தமிழில் ஒரு தலைமுறைக்காலம் செயல்பட்டு வரும் பண்பாட்டு அமைப்புகள் குறைவு. தமிழில் விஷ்ணுபுரம் விருதிற்கு அடுத்து இயல் விருது முக்கியமானது.
    • ஹார்வேர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை, டொராண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பாற்றியவர். இந்த இருக்கைகள் எட்டு மில்லியன் டாலர் நன்கொடைகள் மூலம் உருவாக்கப்பட்டவை. செல்வந்தர்கள், அரசாங்கம், $50 நன்கொடை தருபவர் என எல்லா தரப்பிடம் இருந்தும் திரட்டப்பட்ட நன்கொடை. ஏழு பேரிடம் கேளுங்கள் ஒருவர் தருவார் என்கிறார். கேட்டுக்கொண்டே இருங்கள் கிடைக்கும் என்பார். தமிழ் சூழலில் கோயில், மதம் சாராத நன்கொடை திரட்டல்களில் இந்த நன்கொடையே பெரியது என்று நினைக்கிறேன். எதிர்கால நன்கொடை திரட்டல்களுக்கு இது ஒரு முன்னுதாரணம். 
  3. மற்ற இரண்டு பங்களிப்பளவிற்கு இல்லையென்றாலும், மூன்றாவது பங்களிப்பு என்பது வெவ்வேறு ஆங்கில எழுத்தாளர்கள், அறிஞர்களை சந்தித்து இவர் எடுத்த நேர்காணல்கள். “வியத்தலும் இலமே” என கட்டுரை தொகுப்பாக வந்துள்ளது. நோபல் பரிசு பெற்ற ஆலிஸ் மன்றோ போன்றவர்களை சந்திப்பதற்கு இரண்டு வருடங்கள் ஆகியிருக்கிறது. நிறைய “எழுத்தாளர் சந்திப்பு”களில் இவர் மட்டுமே பழுப்பு நிறத்தவர். எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதினால், முகவர்களை தொடர்புகொண்டால் பதில் வராது.  எழுத்தாளர்களின் மனைவிகளை சந்திப்பதன் மூலம் எழுத்தாளர்களை நெருங்கமுடியும் என்கிறார். பண்பாட்டு உரையாடல் என்ற அளவில் இது முக்கியமானது. நம் பண்பாட்டு சூழலை சாராத அறிவியல் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், சாதனையாளர்களை சந்தித்து நேர்காணல் எடுக்கவிரும்புவர்களுக்கு இவருடைய அணுகுமுறை உதவிகரமானது. 

“6:30 மணிக்கு உங்களை சந்திக்கிறேன் என்று சொன்னார் என்றால் 6:25 க்கு போனாலும் அவர் வீட்டு கதவு திறக்காது. 6:35க்கு போனால் கதவு மூடிவிடும்” என அவருடன் தொடர்ந்து பல வருடங்களாக பணியாற்றும் கனடா “தமிழ் இலக்கிய தோட்டம்” அமைப்பாளர் ஒருவர் என்னிடம் சொன்னார். யோசித்துப்பார்த்தால் அப்படி ஒரு நேர மேலாண்மை இருந்தால் மட்டுமே அவர் ஆற்றியிருக்கும் செயல்களை செய்ய முடியும். 

சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், மொழிபெயர்ப்பு, இலக்கிய அமைப்பு உருவாக்கம், நிதி திரட்டல் அமைப்பு என அயல்நிலத்தில் உள்ள ஒரு தமிழ் எழுத்தாளர் ஒருவர் என்னவெல்லாம் செய்யமுடிமோ அத்தனையையும் செயலாக்கிய முன்னோடி. என்னுடைய முதல் நூலை [இரு கடல் ஒரு நிலம்] அ.முத்துலிங்கம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

[விஷ்ணுபுர வாசக வட்டத்தினர் – பே ஏரியா கிளை. 26 பேர் வந்திருந்தார்கள். வழக்கம்போல பிரசாத் வெங்கட் மட்டுறுத்துனர். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை ஃப்ரீமாண்ட் நூலகத்தில் காலை 10:00 – 12:00 வரை சந்தித்து உரையாடுகிறோம்.

கூட்டத்தின் வடிவம்: எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் “சிறுகதை திறனாய்வாளன் பட்டியிலில்” இருந்து ஒரு மாதம் முன்பே எழுத்தாளரையும், கதைகளையும் தேர்வு செய்து, பேச்சாளார்களையும் முடிவு செய்துவிடுவோம். மூன்று பேச்சாளர்கள். ஒருவருக்கு ஏழு நிமிடம். அதன்பின் கதை குறித்த சிறிய உரையாடல். உரைகள் https://www.youtube.com/@VLCBayArea பதிவுசெய்யப்படும். பேச்சாளர்களிலும், கருத்துப்பகிர்விலும் புதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.]

கலந்துகொள்ள விருப்பமுள்ள நண்பர்கள் – vishnupurambayarea@gmail.com இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.]


Comments

3 responses to “எழுத்தாளர் அ.முத்துலிங்கம் – அறிமுக உரை”

  1. […] Visu gave the author introduction and highlighted three major contributions of writer A. Muttulingam. He was the first to write in Tamil about unexplored foreign land and cultures – not just describing them, but exploring how two cultures interact – making him a true “world-class writer.” His second contribution was the creation of literary organizations, and the third was his interviews with important people. His full speech can be read here. […]

  2. […] Visu gave the author introduction and highlighted three major contributions of writer A. Muttulingam. He was the first to write in Tamil about unexplored foreign land and cultures – not just describing them, but exploring how two cultures interact – making him a true “world-class writer.” His second contribution was the creation of literary organizations, and the third was his interviews with important people. His full speech can be read here. […]

  3. […] விசு அ. முத்துலிங்கத்தின் மூன்று முக்கிய பங்களிப்புகளைச் சுட்டிக் காட்டினார். தமிழில் முதன்முதலில் வெளிநாட்டு நிலங்கள் மற்றும் பண்பாடுகளை, இரண்டு வேறு வேறு பண்பாடுகள் எப்படி ஒன்றின் மீது மற்றொன்று தாக்கம் செலுத்துகின்றன என்பதை புனைவுகள் வழியாக சித்தரித்தவர் என்பதால், அவர் உண்மையில் ஒரு உலகத் தரம் வாய்ந்த எழுத்தாளராக பரிணமித்திருக்கிறார் என்ற கருத்தை முன்வைத்தார். முத்துலிங்கத்தின் இரண்டாவது முக்கியமான பங்களிப்பாக இலக்கிய அமைப்புகளை உருவாக்கியதைக் குறிப்பிட்டார். மூன்றாவது முக்கிய பங்களிப்பாக பெரும் ஆளுமைகளுடனான அவரின் நேர்காணல்களைக் குறிப்பிட்டார்.. அவரது முழு உரையை இங்கே படிக்கலாம். […]