பேதை – கி ராஜநாராயணன்

[விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – கலிஃபோர்னியா மாதாந்திர கூடுகையில் ஆகஸ்ட், 2 – 2025 அன்று எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் சிறுகதைகள் குறித்து உரையாடினோம். அந்த கூட்டத்தில் கி.ரா.வின்  “பேதை” சிறுகதை குறித்த என் உரையின் எழுத்து வடிவம். நன்றி: கூடுகை மட்டுறுத்துனர் நண்பர் பிரசாத் வெங்கட், போஸ்டர் உதவி மற்றும் ஃப்ரீமாண்ட் நூலக முன்பதிவு: ரவி]

பேதை:  

நண்பர்களுக்கு வணக்கம். எழுத்தாளர் ஜெயமோகன் தன் “இலக்கிய முன்னோடிகள் வரிசை” விமர்சன கட்டுரைகளில், அவருடைய காலகட்டத்திற்கு முன்பு எழுதப்பட்ட சிறுகதைகளில், தமிழ் மொழியின் சாதனைகள் என எட்டு சிறுகதைகளை பட்டியிலிடுகிறார்:

  • கயிற்றரவு – புதுமைப்பித்தன்
  • கபாடபுரம் – புதுமைப்பித்தன்
  • தாய் – ந. பிச்சமூர்த்தி
  • பரதேசி வந்தான் – தி. ஜானகிராமன்
  • பாற்கடல் – லா. சா. ராமாமிர்தம்
  • ராஜா வந்திருக்கிறார் – கு. அழகிரிசாமி
  • விழுதுகள் – ஜெயகாந்தன்
  • பேதை – கி.ரா

“பேதை” சிறுகதையை இந்தப்பட்டியலில் வருவதால் பேசுவதற்கு தேர்ந்தெடுத்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். இப்போது இருமுறை மறுவாசிப்பு செய்தேன். 

#

கதைச்சுருக்கம்:

“பேதை” – ஒரு கரிசல் கிராமத்தில் பருத்தி வெடிக்கும் காலத்தில், பருத்தி பறிப்பதற்கு விவசாய கூலித்தொழிலாளர்கள்  வலசை வருகிறார்கள். அந்த கூட்டத்தில் நாம் பொதுவாக கோட்டி / கிறுக்கு / பைத்தியம் என சொல்லக்கூடிய ஒரு பெண்ணும் வருகிறாள். ஒரு கோயிலின் முற்றத்தில் இரவு நிலா வெளிச்சத்தில் படுத்து பேச்சி ஒரு இன்பமான கனவு காண்கிறாள். அந்த கனவில் ஒரு குழந்தை ஒரு கதவை திறந்து மூடி விளையாடுகிறது. கனவில் குழந்தைக்கு முத்தங்கள் தருகிறாள். கனவின் முடிவில் யாரோ அவளை அழுத்துவது போலவும், அந்த குழந்தை மிக கனமாக ஆனது போலவும் தோன்ற கனவு கலைந்து எழுந்து பார்க்கிறாள். யாரோ ஒரு ஆண் தூரத்தில் ஓடுகிறான். சில மாதங்களில் அவள் கர்ப்பமாகிறாள். அவள் முகத்தில் பைத்தியக்கார களை மறையத்துவங்கி, ஒருவித அழகு குடிகொள்கிறது. ஆனால், “யாராக இருக்கும்” என ஊரெல்லாம் புரளி பரவுகிறது. “யார்ன்னு சொல்லு” என அவள் குடும்பத்தினர் வந்து அடித்து கேட்டும் அவள் சொல்லவில்லை. அவளுக்கு உண்மையிலே தெரியவும் இல்லை. பின்பு ஊர் பேறுகால உதவி செய்ய, முத்துக்குட்டி போல ஒரு மகனை பெற்றெடுக்கிறாள். கோயில் சிலைகளில் உள்ள ஸ்தனங்களை விட அழகான அவளுடைய மார்பில் பால் சுரந்து கொட்டி வழிகிறது. அவள் முகத்தில் முற்றிலும் பைத்தியக்கார களை மறைந்துவிடுகிறது.

யார் கண் பட்டதோ, திடீரென குழந்தை டிப்தீரியா கண்டு இறந்துவிடுகிறது. அவள் இறந்த குழந்தையை தர மறுக்கிறாள். அவளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறித்து குழந்தையை புதைத்துவிடுகிறார்கள். அவளுக்கு திரும்ப கோட்டி வந்துவிடுகிறது. அவளை அவளுடைய ஊருக்கி அழைத்துப்போய்விடுகிறார்கள். அவள் சில நாட்களில், ஓட்டை பிரித்துக்கொண்டு ஓடி வந்து, சுடுகாட்டில் இருக்கும் தன் குழந்தையின் பிணத்தை தோண்டி எடுத்து மார்போடு அணைத்துக்கொள்கிறாள். திடீரென தாளமுடியாத பசி எடுக்க, சீனிக்கிழங்கை பிய்த்து சாப்பிடுவதுபோல அங்கே  சுடுகாட்டில் எரியும் சடலத்தை பிய்த்து தின்கிறாள். ஊரெல்லாம் துர்நாற்றம் வீசுகிறது. உறக்கத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் மயிர் கூச்செரியும்படியாக குலவை சத்தம் கேட்கிறது. நடுராத்தியிரில் ஒரு சிறு எலும்பு கோர்வையை மாரோடு அனைத்தபடி அவள் தட் தட் என நடந்துவருகிறாள். உடங்காட்டில் பாம்புப்புற்றின் நடுவேதான் அவள் வாழ்கிறாள். 

காத்தாடி காலம்போய், மழைக்காலம் போய், பனிக்காலமும் போய், வேனில் காலம் வந்துபோது, அந்த ஊருக்கு விருந்தாடி வந்த இளவட்டம் ஒருவன் வேப்பமர நிழலில் அயர்ந்து தூங்குகிறான். பேச்சி அவனை நெருங்கிறாள். மீண்டும் கனவில் ஒரு குழந்தை வருகிறது. பல மாதங்கள் கழித்து பிறந்த மேனியாக, நிறைமாத கர்ப்பினியாய், பூமி அதிர திட்திட் என நடந்து போகிறாள்.

#  

இந்த கதையில் எனக்கு மிக முக்கியமாகப்பட்டவை:

  1. ஒரு பண்பாட்டின் மையமாக இருக்கும் படிமம்:  

என் அம்மாவின் ஊர் உளுந்தூர்பேட்டை. உளுந்தூரிலே இரண்டு அங்காளம்மன் கோயில் இருக்கிறது. பாளையப்பட்டு அங்காளம்மன் ஜனம் பெருத்தது. செட்டித்தெரு அங்காளம்மன் பணம் பெருத்தது. இரண்டும் அக்கா தங்கைகள். நாட்டார் (மீனவர்), நயினார், வன்னியர், பறையர் என எல்லா ஜாதிகளுக்கும் குலதெய்வமாக இருக்கும் அங்காளம்மனுக்கு முக்கியமான திருவிழா “மயான கொள்ளை”தான். கோயில் பூசாரியாக இருந்த ஆதி நாட்டார் அங்காளிக்கு பாடும் ஒரு பாடல் 

“கனுக்காலு எலும்பையெல்லாம்

நீ கரும்பெனவே தின்னவளே

முழங்காலு எலும்பையெல்லாம்

நீ முறுக்கனவே தின்னவளே

பச்சப்பொணத்தெயெல்லாம்

பால்வடிய தின்னவளே

சுட்டப்பொணத்தையெல்லாம்

சுடுகாட்டில் தின்னவளே”

இதில் ஒரு மையப்படிமம் இருக்கிறதில்லையா? இதைப்போலவே பேய்ச்சியம்மன், சாமுண்டி என பல பெண் தெய்வங்கள் நம் நாட்டார் மரபில் உண்டு. “பிணம் தின்னும் அங்காளி” என்ற படிமத்தை வைத்து கி.ரா எழுதியிருக்கும் கதை பேதை. கற்பு என்னும் விழுமியத்தைவிட தாய்மை என்ற விழுமியம் நம் பண்பாட்டில் மேலும் அடிப்படையான ஒரு கருதுகோள். “ஒரு பெண்ணிற்கு இருக்கும் ஆதாரமான விழைவு என்பது குழந்தை” அல்லது இன்னும் விரிந்த பொருளில் “ஒரு பெண்ணிற்கு இருக்கும் ஆதாரமான விழைவு தாய்மை” என்ற பார்வையில் அந்த பெண் ஒரு பைத்தியமாக இருந்தால்? பேயாக இருந்தால்? என்ற கேள்வியை “பேதை” கதை ஆராய்கிறது. [அந்த பெண் தாசியாக இருந்தால்? துறவியாக இருந்தால்? என்ற கேள்வியே கொற்றவை நாவலில் வரும் சிலப்பதிகார மாதவியும், மணிமேகலையும்.]  

  1. வர்ணணை / விவரிப்பு (narration) மற்றும் உரையாடல் (dialogue).

2023 பூன் முகாமில் ஜெ விடம் ஒரு நண்பர் கேள்வி கேட்டார். ஒரு கதையில் எத்தனை சதவீதம் விவரிப்பையும், எத்தனை சதவீதம் உரையாடலையும் பயன்படுத்துவது? ஜெ.வின் பதில்: பொதுவான விதி என எதுவும் இல்லை. காட்சிகளை உருவாக்குவதற்கு (படிமங்கள் / Poetic Images) விவரிப்பும், கதைமாந்தருடைய குணாதிசியங்களை (personality / psyche) காட்டுவதற்கு உரையாடல்களையும் சிறப்பாக பயண்படுத்த முடியும் என்றார். இந்த கதை அதற்கு சிறந்த உதாரணம்.

பேச்சி கர்ப்பமானதை குறித்து ஊரில் பேசிக்கொள்பவர்களில்: “எனக்கும் இவ்வளவு வயசாச்சி; இப்படி ஒரு வங்கொடுமைய நடந்து இந்தக் கண்ணால நான் பார்த்தில்லை தாயே” என உணர்ச்சிவசப்பட்டு கண்களில் பொங்கிய கண்ணீரை துடைக்காமல் வைத்துக்கொண்டே பளீரென சிரித்து “ஆமம்ம, அப்பவும் ஒரு பொம்பளைக்கு ‘இது’ கூடவா தெரியாமலா போய்விட்டது” என கேட்டு மேலும் சிரித்தாள். – குடிமகள் காளி. ஊர்வம்பின் ஊற்றுமுகம்.

  1. புராண யதார்த்தவாதம்:

நவீன இலக்கியத்தின் நீண்ட காலம் இருந்த கதை சொல்லும் முறை “யதார்த்தவாதம்” (realism) என்பதுதான். நடந்தை நடந்தது போல சொல்வது. ஆசிரியரின் கற்பனைக்கான இடம் என்பது நிகழ்வுகளை தொகுக்கும் முறைக்கு மட்டுமே பயன்படும். யதார்த்தவாதம் கொஞ்சம் “போர்” அடிக்கவே, அதற்கு அடுத்து வந்த அலை மாய-யதார்த்தவாதம். மாயமும் யதார்த்தமும் பின்னிப்பினைந்தது. இங்கே மாயம் என்பது வேறொன்றை குறிக்கிறது. மாய-யதார்த்த அலை மேற்கில் நீண்ட காலம் இருந்தது. “அவள் தன்னுடைய போர்வையால் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி கொண்டு இறந்தாள்” என்பது யதார்த்தவாதம். “போர்வையை உதறி சட்டனெ வானில் பறந்துபோய்விட்டாள். அதற்குப்பின் அவளை யாரும் பார்க்கவில்லை” என்பது மாய-யதார்த்தவாதம் (ரெமெதியஸ் தி பியூட்டி – நூற்றாண்டு கால தனிமை நாவல் – காப்ரியேல் கார்சியா மார்குவெஸ் – 1967). 

இந்திய/தமிழ் பண்பாட்டின் கூறுமுறையே மாய-யதார்த்தவாதம் தான். அல்லது புராண யதார்த்தவாதம். நமது புராணங்கள் எல்லாமே இப்படி மாயத்தையும், யதார்த்தத்தையும் கலந்து சொல்லும் முறைதான். இந்த புராணங்கள் தோன்றி நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அடைந்த உருமாற்றத்தில் யதார்த்தம் குறைந்து, மறைந்து மாயம் ஓங்கி நிற்கிறது. (உதாரணம்: வானரர்கள் என்பவர்கள் குரங்கு-மனிதர்கள் இல்லை குரங்குக்கொடி உடைய மனிதர்கள். புலிக்கொடி உடையை படையை விடுதலைப்புலிகள் என்று சொல்வதைப்போல.)

தமிழ் நவீன இலக்கியத்தில் புதுமைப்பித்தன் “கபாடபுரம்” போன்ற கதை எழுதியிருந்தாலும், இந்த புராண-யதார்த்தவாத கதை சொல்லும்முறையை விரிவாக பயண்படுத்தியவர் கி.ரா. மைய படிமான பேச்சி மட்டுமல்ல, இந்த புராண கதை சொல்லும் முறைக்கு கதையில் நிறைய உதாரணங்கள் உள்ளன. 

  • “வரிசையாகக்‌ கூடார’வண்டிகள்‌ சாலையில்‌, வண்டியின்‌ அடியில்‌ லைட்டைக்‌ கட்டிக்கொண்டு போவது கொள்ளிவாய்ப்‌ பிசாசுகள்‌ நீளமாகப்‌ போகிறதுபோல்‌ இருந்தது”
  • மேற்குக்‌ கருமலையில்‌ ஒரு பெரிய கணவாய்‌ இருக்கிறது. அதில்‌ யார்‌ கண்ணுக்கும்‌ தெரியாத ஒரு பிரமாண்டமான ராக்ஷ்ச மதகுப்‌ பலகையால்‌ அடைக்கப்பட்டிருக்‌கிறது. சித்திரை மாசம்‌ பத்தாம்‌ தேதி அதை யாரோ திறந்து விடுகிறார்‌கள்‌! கடல்‌ மடை திறந்ததுபோல்‌ உடனே காற்று ஒஹோ என்று கொந்தளித்துக்கொண்டு ஒரு நதி ஓட்டமாக அந்தக்‌ குறிப்பிட்ட பிரதேசத்தைக்‌ கடந்துகொண்டு ஓடி வருகிறது.

மைய படிமம், புராண யதார்த்தவாத கூறுகள், காட்சி விவரிப்பு ஆகியவற்றால் பேதை எனக்கு பிடித்த சிறுகதையாகிறது. 

நன்றி.

[“பேதை”க்கு ஒரு இரண்டாம் பாகம் இருக்கும் என்றால், பேச்சியின் இரண்டாவது குழந்தை வளர்ந்து, பேச்சிக்கும் அந்த குழந்தைக்குமான உறவு என யோசித்தால் எனக்கு “நூறு நாற்காலிகள்” கதை நினைவிற்கு வருகிறது.]