நவம்பர் 2024 நீலி இதழ் கவிஞர், எழுத்தாளர் பெருந்தேவியின் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.
செப்டம்பர் 14, 2024 விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் பெருந்தேவி அவர்களுடன் ஒரு இணையவழி கலந்துரையாடல் நிகழ்த்தினோம். க.நா.சு கலந்துரையாடல் நிகழ்வு குறித்த குறிப்பும், பெருந்தேவியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள “மூச்சே நறுமணமானால்” கவிதை தொகுப்பின் மொழிபெயர்ப்பு குறித்த ஒரு பார்வையும், நிகழ்வில் பேசிய நண்பர் ஜெயஶ்ரீயின் உரையும் நீலி இதழில் ஒரு கட்டுரையாக வெளிவந்துள்ளது : https://neeli.co.in/4331/
12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட வீரசைவ மரபை சேர்ந்த அக்கா மகாதேவியின் வசனகவிதைகளின் மொழிபெயர்ப்பு “மூச்சே நறுமணமானால்”.
தமிழ் பக்தி இயக்கத்தின் விளைநிலம். இந்த தொகுப்பை படிப்பதற்கு முன்பு நமக்குத்தான் ஏற்கனவே ஆழ்வார்கள், நாயன்மார்கள், தேவாரம், திருவாசகம் என திகட்ட திகட்ட இருக்கிறதே என தோன்றியது. பாசுபதாஸ்திரத்தை வேண்டி அர்ஜுனன் தவம் இருக்கிறான். வேடனின் வடிவில் வந்து சிவன் அவனை வம்புக்கிழுக்கிறார். சிவனை நோக்கி அர்ஜுனன் எறியும் கூரிய அம்புகளை மென்மல்லிகைச்சரமாக மாற்றுகிறாள் தேவி. சென்னமல்லிகார்ச்சுனனை (அழகிய மல்லிகார்ச்சுனன்) கவிமுத்திரையாக கொண்ட அக்கா மகாதேவியின் வசனகவிதைகள் இவை. இந்த வசனகவிதைகள் நம் தர்க்க மனதை அம்புகளின் வன்மையோடு பிளந்து மென்மல்லிகையாக ஆன்மாவுடன் உரையாடும் வசனங்கள் இவை என உணர்ந்தேன்.
இந்திய கலையின் சாரம்சமான செயல்பாடே இறையை யாவர்க்கும் விளங்கவைப்பதுதான் என்கிறார் ஆனந்த குமாரசாமி. கலை என்பது ஒரு தனிநபரின் வெளிப்பாடு இல்லை, அது அந்த பண்பாட்டின் சாரம்சமான வெளிப்பாடு என்கிறார். [இந்திய கலையின் நோக்கங்கள் – தமிழில்: தாமரைக்கண்ணன் அவிநாசி].
என் அப்பா வடகர்நாடகத்தில் பாகல்கோட் மாவட்டத்தில் ஒரு சர்க்கரை ஆலையில் வேலை செய்தார். பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு புத்தாண்டு விடுமுறையில் அருகே இருந்த சாளுக்கிய மன்னர்கள் கட்டிய பட்டடக்கல் கைலாசநாதர் கோயில், பாதாமி (வாதாபி) செம்பாறை குகைவரை கோயில்களை பார்த்துவிட்டு கிருஷ்ணா நதியும் மல்லபிரபா நதியும் இணையும் இடத்தில் இருக்கும் “கூடல சங்கமேஸ்வரர்” கோயிலுக்கு போனோம். கடல் போன்று இருந்த நதிக்கரையில் மண்ணுக்கு கீழே இருந்தது அந்த கோயில். அங்குதான் முதன்முறையாக அந்த பளிங்கு சிலையை பார்த்தேன். ஆடைகள் இல்லாத இளம் பெண். சிரித்த முகம். தீத்தழல் போன்ற கூந்தல் உடலை மறைத்திருந்தது. அன்று அக்கமகாதேவியை பற்றி கண்ணப்ப நாயனார் போல ஒரு அதிதீவிர சிவபக்தர் என்றே நினைத்தேன். அன்று கிடைக்காத அக்கா மகாதேவியின் தரிசனம் பெருந்தேவியின் மொழியில், கவிதை தேர்வில் இன்று கிடைக்கும் பேறு பெற்றேன்.
மூச்சே நறுமணமானால் மின்னூல் வாங்க
[பெருந்தேவி]
கோலின் நுனியில் குரங்காக
நூலின் அந்தத்தில் பாவையாக
ஆடினேன் ஐயா நீ ஆட்டுவித்தபடி
பேசினேன் ஐயா நீ பேசுவித்தபடி
இருந்தேன் ஐயா நீ இருத்தியபடி
உலகத்தின் எந்திரக்காரன் சென்னமல்லிகார்ச்சுனன்
போதும் போதுமென்றவரை.

[அக்கா மகாதேவியின் வசனகவிதைகளின் மொழிபெயர்ப்புகள் குறித்த பார்வை https://neeli.co.in/4331/ இதழில் இடம் பெற்றுள்ளது. We are working to fix minor formatting errors in AK Ramanujan’s poems. WordPress removed the indents & spaces.]
