VLC Bay Area – Feb 2026 Monthly Meet

https://livingtamillitfest.org/ – வாழும்தமிழ் நியூயார்க் மாநாட்டிற்கு வருகை தரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை பற்றி ‘விஷ்ணுபுர இலக்கிய வட்டம் – பே ஏரியா’ மாதாந்திர கூடுகையில் உரையாடுகிறோம்.

மட்டுறுத்துனர்: நண்பர் பிரசாத் வெங்கட்

சிறுகதைகள் குறித்த என் வாசிப்பு:

சிறுகதை : வைரம் – ம.நவீன்

குமாரசாமியும் லட்சுமணனும் வகுப்பு தோழர்கள். குமாரசாமி பணக்காரன், நன்றாக படிக்கக்கூடியவன். ரப்பர் தோட்டத்தில் குமாரசாமியின் அப்பா பெரிய நிலம் வைத்திருந்தவர். லட்சுணண் அவர்கள் தோட்டத்தில் வேலை செய்தவரின் மகன். பள்ளி நாட்களில் லட்சுமணனை கோலிகுண்டு விளையாட அழைத்து, இருட்டில் ஒளிரும் அந்த குண்டின் மீது பொறாமைப்பட்டு, அந்த கோலிகுண்டு வைரமாகும் என ஒரு மரத்தடியில் புதைக்க சொல்கிறான் குமாரசாமி. ஐம்பது வருடங்கள் கழித்து, தன் மகன் திருமணத்திற்காக குமாரசாமிக்கு பத்திரிக்கை வைக்க வருகிறார் லட்சுமணன். லட்சுமணண் சொந்தமாக தையற்கடை வைத்திருக்கிறார். குமாரசாமி வக்கீலாகி, பெரிய பணக்கரனாக இருக்கிறார். பென்ஸ் கார் வைத்திருக்கிறார். லட்சுமணனை சீண்டுவதற்காக அந்த குண்டை தோண்டிப்பார்க்க விரும்புகிறார். லட்சுமணன் தோண்டும்போது வைரம் போல ஏதோ மின்னுகிறது. குண்டு வைரமாயிருப்பதை தாங்கமுடியாமல் அதன் மீது மண் அள்ளிப்போட்டு மூடுகிறார் குமாரசாமி.

இந்த கதையில் அந்த வைரம் என்பது என்ன ? என் வாசிப்பில் அது லட்சுமணனின் வாழ்க்கை என்று தோன்றுகிறது. தையற்கலைஞராக எளிய வாழ்க்கையாக இருந்தாலும், அது சுதந்திரமான வாழ்க்கை. மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார். அந்த சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் குமாரசாமியால் தாளமுடியவில்லை என்று படுகிறது.

சிறுகதை: அறைக்குள் புகுந்த தனிமை: சந்திரா தங்கராஜ்

தனிமையிலும், வெறுமையிலும் இருக்கும் ஒரு பெண் தன் தோழியை சந்திக்க செல்கிறாள். தோழியும் தனிமையில்தான் இருக்கிறாள். இருவரும் கடற்கரைக்கு செல்கிறார்கள். ஆழமான விஷயத்தை பேசாமல் வேலை, சினிமா, இலக்கியம், வாழ்வின் இருப்பு என ஏதேதோ மேலோட்டமாக பேசிவிட்டு பிரிகிறார்கள். அவள் தன்னுடைய இருசக்கர வண்டியை எடுக்க வரும்போது வயதில் இளைய ஒரு “ரோமியோ”வை பார்க்கிறாள். ஒரு டீ கடையில் அவளை பின் தொடர்ந்து வந்து போலியாக அறிமுகப்படுத்திக்கொள்கிறான். அவன் போலித்தனம் அவளை எரிச்சலடைய வைக்கிறது. கல்லூரியில் படிப்பதாக சொல்கிறாள். சிறிது நேரத்திற்குபின் அவனை சீண்டும்விதமாக, தான் மாணவி இல்லை, “பிராஸ்டியூசன்” செய்கிறேன் என்கிறாள். அவன் தோனி மாறுகிறது. “நீங்கள்” என அதுவரை அழைத்தவன், “நீ” என அவளை அவமதிக்கும் நோக்கோடு “எவ்வளவு?” என்கிறான். அவளும் “இரண்டாயிரம் ரூபாய்” என்கிறாள். அவனை வீட்டிற்கு அழைத்து வந்து, ஏமாற்றி ஒரு அறையில் பூட்டி வைக்கிறாள். அவன் இரவு முழுதும் அழுது, மிரண்டு, கதறி, காலையில் அரண்டு ஓடிவிடுகிறான். அவள் அறையில் தனிமையில் இருக்கிறாள்.

சந்திரா தங்கராஜ் எழுத்தில் நான் படிக்கும் முதல் கதை. எனக்கு பிடித்திருந்தது. “அவன்”, “அவள்” “தோழி” என யாருக்கும் பெயர் இல்லாத, வாழ்வின் இருப்பை, அதன் வெறுமையை ஆராயும் நவீனத்துவ பாணியிலான கதைகள் என்னுடைய விருப்பமான கதைகள் இல்லை. கதையின் முதல் சில பத்திகள் படித்தபோது, இதுவும் அப்படிப்பட்ட ஒரு கதை என நினைத்தேன். ஆனால் அந்த ஆண் வந்தவுடன் கதை விறுவிறுப்படைகிறது. “காதல்” என நாம் பொதுவாக சொல்லும் ஆண்-பெண் கற்பனாவாத லட்சிய உறவின் நேர் தலைகீழாக்கம் இந்த கதை. காமத்திற்காக அவன் ஆடும் நாடகம், அவனுடைய நாடகத்தை கலைப்பதற்காக அவள் சொல்லும் பொய், அந்த பொய் உருவாக்கும் சிறுமை உருவாக்கும் சிறுமையும் கசப்பும், அந்த பொய்யை நீட்டிப்பதில் உருவாகும் அபாயம், கடைசியில் வேட்டைக்காரன் வேட்டையாடப்படுகிறான். ஏன் அந்த பெண்களுக்குள் ஆழமான எதையும் பேசமுடியவில்லை ? அறைக்குள் புகுந்த தனிமை எது ? வெறுப்பும், கசப்பும், தனிமையும் உருவாகும் புள்ளி எது ? என நிறைய யோசிக்க வைக்கும் ஆற்புதமான கதை.

அம்புப் படுக்கை : சுனில் கிருஷ்ணன்

பர்மாவில் இருந்து பல்வேறு ஆபாயங்களில் மயிரிழையில் தப்பி வந்த ஆனாரூனா செட்டியார் மரணப்படுக்கையில் இருக்கிறார். அவர் தப்பி வந்ததாக சொல்லும் கதைகள் பெரும்பாலும் அவரே சொல்லும் புளுகுகள். செட்டியாரின் மரணத்தை எதிர்பார்த்து சுற்றமும் நட்பும் “சீக்கிரம் முடிஞ்சா வேறு வேலைய பார்ப்போம்” என்ற பாவனையில் காத்திருக்கிறது. ஆயுர்வேத மருத்துக்கல்லூரியில் படிக்கும் சுதர்ஷனை ஆனாரூனாவின் நாடி பார்க்க அழைத்து வருகிறார்கள். சுதர்ஷனின் தாத்தா ஆயுர்வேத வைத்தியர். ஆனாரூனாவின் புளுகுகளை ரசித்துக்கேட்டவர். நாடி பார்த்து யார் எப்போது மரணிப்பார்கள் என சரியாக கணித்த வைத்தியர் தாத்தா, முதுகுத்தண்டுவட டி.பி. வந்து அம்புப்படுக்கையில் படுத்தைப்போல கொடுரமான வலியில் இறக்கிறார். நாடி பார்ப்பது, ஆயுர்வேதமே கப்சா என நினைக்கும் பேரன் ஆனாரூனாவின் நாடியை பார்க்கிறார். நாடி பார்த்து என்ன சொன்னார் என்பதுதான் கதை.

சுனில் கிருஷ்ணனின் “அம்புப் படுக்கை” தொகுப்பில் இருக்கும் தலைப்பு கதை. ஆயுர்வேதத்தை குடும்ப பாரம்பரியமாக கொண்ட ஒருவன், ஆனால் ஆயுர்வேதம் மேல் நம்பிக்கை இல்லாமல் இருப்பவன் அடையும் அறிதல்தான் கதை. மரணத்தருவாயில் இருக்கும் நோயாளியிடம் என்ன சொல்ல வேண்டும் ? நோயாளி நம்ப விரும்பும் கடைசி ஆசையா ? அல்லது “உண்மையா” ? ஆயுர்வேத நாடி வர்ணணைகள் பிரமாதமாக இருந்தது.

சொல்ல முடிந்தது: சு.வேணுகோபால்

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ரகுராம் தன் அம்மா வரதம்மாளை வேற்றாளான தர்மராஜுடன் உறவில் இருக்கும்போது பார்த்துவிடுகிறான். அவள் தலைமுடியை பிடித்து இழுத்து, அடித்து ஊர் முன்பே அவமானப்படுத்துகிறான். தர்மராஜை கொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. சந்தர்ப்பம் அமையவில்லை. ரகுராம் ஊரை விட்டு ஓடி, எச்சில் தட்டு கழுவி, திரும்பிவந்து, மில் வேலைக்கு போகிறான். தர்மராஜ் வயதாகி இறக்கிறார். “ஏம்பா, அந்த எழவு வீட்டில் போய் ஒரு பாட்டம் அழுதிட்டு வந்திரட்டுமா?” என அவன் அம்மா ரகுராமிடம் கேட்க, அவன் திடுக்கிட்டு சரி என்கிறான்.

பதின்பருவத்தில் இருக்கும் ஒரு சிறுவன் வயதானபின் உறவுகளை புரிந்து கொள்ளும் உணர்ச்சிகரமான கதை. தனியாக வருவான் என கறிக்குழம்பு வைத்து காத்திருந்த ரெஜினா அக்காள், சீக்கு வந்து சாவும் பெரியம்மாவின் மகள், உறவு மீறல்கள் வாழ்வின் ஒரு பகுதி என எடுத்துக்கொள்ளும் கண்ணம்மா கிழவி என பல பெண்களை பார்த்து ரகுராமன் அடையும் மாற்றம்தான் கதை.

Comments

2 responses to “VLC Bay Area – Feb 2026 Monthly Meet”

  1. […] Visu’s take on all four short stories can be read here. […]

  2. […] நான்கு சிறுகதைகளையும் பற்றி விசு […]

Discover more from Viswanathan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading