Tag: #IruKadalOruNilam

  • இரு கடல் ஒரு நிலம் – முத்து பிரகாஷ் (ஜப்பான்) கடிதம்

    [ஜப்பானில் இருந்து நண்பர் முத்து பிரகாஷ் எழுதிய கடிதம். அவரது அனுமதியுடன் பிரசுரிக்கிறேன்.]

    அன்பு நண்பர் விசு,

    என் பெயர் முத்து. சென்னையில் பிறந்து பின் சாப்ட்வேர் இன்ஜினியராகி , ஜப்பானில் வேலை பார்க்க சென்றேன். 12 வருடங்களாகிறது ஜப்பான் வந்து . வெகுநாள் ஜெ வாசகன். 2015 இல் வெண்முரசு வாசித்து கொண்டிருக்கிறேன். 2019 இல் ஜெ ஜப்பான் வந்த போது நடந்த வாசகர் சந்திப்பில் ஜெ வை முதல் முறை சந்தித்தேன். பின்பு 2025 புத்தாண்டு அன்று நித்தியவனத்தில் ஜெ மற்றும் நண்பர்களோடு இரு நாள், பின்பு சென்னை புத்தக திருவிழாவில் மறுமுறை ஜெ யுடன் பேசும் சிறுவாய்ப்பு கிடைத்தது. அப்போது ஜெ விடம் “இரு கடல் ஒரு நிலம் வாங்கிருக்கேன் ஜெ , விசு உங்களை அமெரிக்கா முழுக்க அழைத்து சென்றது போல, முழு ஜப்பானிற்கும் உங்களை கூட்டி செல்ல வேண்டும் என்பது என் கனவு. அதற்காகவே இந்த நூலை வாங்கினேன். கையொப்பம் போட்டு தாங்க” என்றேன். ஜெ மகிழ்ச்சியுடன் கையொப்பமிட்டு தந்தார். ஜப்பானை பற்றி யோசிக்கிறேன் என்றார். 

    இந்தியாவில் இருந்து திரும்ப வந்த பிறகு வேலையில் மும்முரமாகி படிக்க நேரமில்லாமல் அலைந்து கொண்டிருந்தேன். ஜூன் மாதம் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஒரு கான்பரன்ஸ் இருப்பதால், அமெரிக்க செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதுவே எனது முதல் அமெரிக்க பயணம். டோக்கியோவில் இருந்து லாஸ் ஏஞ்ஜெல்ஸ், அங்கிருந்து பிலடெல்பியா என விமான சீட்டு பதிவு செய்தேன். பதிவு செய்தபின் முதல் வேலையாக உங்கள் நூலை எடுத்து பெட்டிக்குள் வைத்தேன். லாஸ் ஏஞ்ஜெல்ஸ் இல் இருந்து பிலடெல்பியா செல்லும் விமானத்தில் முழு நூலையும் படித்துவிட வேண்டும் என திட்டம். உங்கள் நூலின் வழியாக அமெரிக்காவை அறியப்போகிறேன் என்பது ஒரு கிளர்ச்சியான அனுபவமாக இருந்தது. 

    விமானம் புறப்படும் முன் முன்னுரை மற்றும் படங்களை மட்டும் ஒரு புரட்டு புரட்டினேன். இது போன்ற Travelogue நூல்களுக்கு படங்கள் முக்கியமானவை. படித்து நாம் அடைந்த கற்பனையை படங்களுடன் ஒப்பிட்டு கொள்ளலாம். முதல் பார்வையில் ஈர்த்தது இரண்டு படங்கள். ஒன்று Grand canyon. அப்படத்தில் தெரியும் சிவப்பும், வெள்ளையுமான குடைவு செய்யப்பட்டது போலான மலைகள் ஒரு பேரியற்கைச் சித்திரம். இயற்கையின் பெருவெளி தரிசனம். இவ்வளவும் கொலராடோ ஆறு அரித்து உருவானவை என படித்தபோது, அந்த ஆற்றின் வலிமை முன் மிக சிறிதாக உணர்ந்தேன் . மற்றோரு படம் கூகிள் மேப்பில் வரையப்பட்ட உங்கள் கிராஸ் கண்டரி பயணத்தின் வரை படம். அமெரிக்காவின் ஊடாக ஒரு கோடு. இந்த வரை படம் ஒன்றே பலதரப்பட்ட நிலக்காட்சிகளையும், பலதரப்பட்ட மக்களையும், கலாச்சாரங்களையும், மொழிகளையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. 

    அருணா அக்காவின்(என்னையும் இப்படி விளிக்க அனுமதிக்க வேணும்) முன்னுரை செறிவானது. ஆரம்பத்தில் அவர் சொல்லும் இமயமலை பொங்கல் வாழ்த்து அட்டை பற்றிய அனுபவமே இந்நூலுக்கு ஒரு முன்னோட்டத்தை கொடுத்து விடுகிறது. எங்கள் வீட்டில் சிங்கப்பூரின் சின்னமாகிய merlion சிம்மம் தண்ணீரை பயீச்சி அடிக்கும் படத்துடன் ஒரு காலண்டர் இருந்தது. சிறு வயதில் அக்காட்சி ஒரு அறை கூவலை போன்று தோன்றும். 2022 இல் சிங்கப்பூர் சென்று பார்த்த போது நினைத்துக்கொண்டேன் , Merlion நிஜமாகவே இவ்வுலகத்துக்கு சிங்கப்பூரின் அறை கூவல் தான் என. வெறும் ஐம்பது சொச்ச கிலோமீட்டர் பரப்பளவு உள்ள ஒரு நாடு, உலக வர்த்தகத்தின் ஒரு மையமாக வளர்ந்து நின்று கொண்டிருக்கிறது . இமயம் எதிர்பாராத ஒரு தருணத்தில் கண்முன்னே பல அடுக்காக விரிந்த போது கண்ணீர்வந்ததாக எழுதி இருந்தார். எனக்கும் ஜப்பானின் மவுண்ட் ஃபுஜியில் இது போன்ற ஒரு அனுபவம் உண்டு. மலைகள் தங்கள் அசைவிண்மையால் நம்மில் ஒரு பெரும் நிலைக்குலைவை நிகழ்த்தி விடுகின்றன 

    பூண் முகாம் போன்ற ஒன்றை ஜெ அமெரிக்காவில் தொடங்குவது என்பது அதிதேவையான செயல். இந்தியர்கள் நாம் நன்கு படித்து கார்ப்பரே ட் உலகத்திற்கு ஏற்றவாறு வேலை செய்ய பழகி கொண்டோம். ஆனால் இந்த ஓட்டத்தின் பயன் என்ன என்ற கேள்வி நம்மை துரத்தி கொண்டே இருக்கிறது . அதற்கு விடையளிக்கும் தத்துவ பின்புலம் நமக்கோ நம்மை சுற்றி உள்ளவர்களுக்கோ கிடையாது. சரி இவ்வளவு எல்லாம் யோசிக்காமல் செயல்தான் யோகமென எண்ணி, புதுசாக ஒரு கலையோ, தத்துவமோ, விளையாட்டோ கற்று கொண்டு எழலாம் என நினைத்தால், சுற்றி உள்ள மொண்ணை கூட்டம் அதற்கும் பெருங்கூச்சல் போடும். அவ்வளவு கேலியும் கிண்டலும் உண்டு. நாங்க சினிமா,சீரியல், அரசியல்னு பேசிட்டு இருப்பபோம், நீ மட்டும் எதோ தீவிரமா சுத்திட்டு இருக்கியே என்று சீண்டுவார்கள். அதை சமாளிப்பதற்கே அபாரமான மனவலிமை தேவைப்படும். இவற்றை சமாளிக்க ஆரம்பித்ததே ஜெ வின் கட்டுரைகளை படிக்க ஆரம்பித்த பிறகுதான். ஜப்பான் போன்ற நாடுகளில் புதிதாக ஒன்றை கற்று கொள்ள அவர்களுக்கான சமூக தடைகள் மிக குறைவு . குறைந்தபட்சம் யாரும் உங்களை கேலி செய்ய துணிவதில்லை . என்னுடன் வேலை செய்யும் நண்பர் தன் 60வது வயதில் தான் Scuba Diving ஆரம்பித்தார். 40 வயதிற்கு மேல் பேட்மிண்டன் ஆரம்பித்த பல நண்பர்களை அறிவேன். இந்திய சமயல்களை பற்றி ஜப்பானிய சமுகதிற்கு அறிமுகம் செய்யும் எழுத்தாளர், கேன்சர் நோய் இருந்தும் Badminton விளையாடும் 60 வயதுக்காரர் என செயலே யோகமென இந்த சமூகம் என்னை ஊக்கப்படுத்தி கொண்டே இருக்கிறது . அந்த வகையில் புலம்பெயர் நாடுகளில் ஜெ இது போன்ற ஒரு அறிவியக்க செயலை நடத்தி வருவது நமக்கு செயல் குறித்த விழிப்புணர்வை தரும். அரசியல், சினிமா என மேலோட்டமாக இயங்காமல் செய்யும் செயல்களின் ஆழத்தை நோக்கி நம்மை செலுத்தும். பூண் முகாமிற்க்கு அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நம் மக்கள் பயணித்து வந்து இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. 

    கிராஸ் கண்டரி பயணம் என்ற சொல்லே ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஜப்பானில் இது போன்ற நிறைய பயணங்கள் செய்து இருக்கிறேன். கிழக்கு எல்லையான டோக்கியோவில் இருந்து மேற்கு எல்லையான கணசவா வரை ஒரு பயணம் மேற்கொண்டேன். மொத்த பயண தூரமே ஆயிரம் கிமீதான் வரும். இதே போன்று கியுஷு மாகாணத்தை ஒரு சுற்று வருவது , ஹொக்கைடோவின் தெற்க்கு பகுதியை சுற்றி வருவது போன்ற பயணங்கள் சென்று இருக்கிறேன். அனைத்துமே ஆயிரம் கிமீக்குள் தான். ஆனால் நீங்கள் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கே ஆயிரம் கிமீபயணம் செய்ய வேண்டுமென எழுதியிருப்பது மிகவும் ஆச்சரியம் அளித்தது. ஒரு நாளில் ஆயிரம் கிமீபயணிக்க முடியுமென்றால் அந்நாட்டின் சாலைகள் எவ்வளவு பெரியதாக, நேர்த்தியாக செய்யபட்டிருக்கவேண்டும், கார்கள் இந்த நெடிய பயனங்களுக்காகவே வடிவமைக்க பட்டிருக்கவேண்டும். கற்பனை செய்து பார்க்கவே பிரமாண்டமாக உள்ளது. விமானத்தில் நூலை படித்து கொண்டிருக்கும் போது அமெரிக்கா ஜப்பானை விட நூறு மடங்கு பெரியதாக இருக்கும் என கற்பனை செய்து கொண்டேன். லாஸ் ஏஞ்ஜெல்ஸ் விமானநிலயத்தில் இறங்கியதும் அதை உறுதி செய்து கொண்டேன். பன்னாட்டு முனையத்தில் இருந்து உள்நாட்டு முனையத்திற்கு நடக்கவே 45 நிமிடம் எடுத்தது. காபி கோப்பை ஜப்பானில் குடிப்பதை விட இரு மடங்கு பெரியது . ஒரு சாண்ட்விச்சை முழுசா கடிக்க ஒரு வாய் போதாது. நூலை படித்து முடித்த போது அமெரிக்காவின் அகண்ட தன்மை ஒரு நினைவாகவே தங்கிப்போனது. 

    மைக்ரோசாப்ட் கதை, வேகாஸ், நெடுஞ்சாலைகளின் விளம்பர பலகைகள், கான்யன்களின் வரலாற்று செய்திகள், கலிஃபோர்னியாவின் கோல்ட் ரஷ் என பொதுவான அமெரிக்க செய்திகளை உங்கள் சுவாரசியமான அவதானிப்புகள் மூலமாக கூர்மை படுத்தியிருக்கிறீர்கள். ஒரு இடம் செல்லும்போது அந்த இடத்தின் வரலாற்றை ஒன்று தொட்டு ஒன்றென விரித்து கொள்வது நுண்ணுணர்வு உள்ள எல்லோரும் செய்வது. ஒரு காட்சியின் தொடர்புடைய வரலாற்றை நீங்கள் எப்படி யோசிப்பீர்களோ அதே போலவே எழுத்திலும் வந்து இருப்பதாக எனக்கு பட்டது. 

    மெம்பிஸ் நகரத்துக்கு வந்த போது கறுப்பின மக்களின் சொந்த இசையான ஜாஸ் மற்றும் ராக் &ரோல் பற்றிய வரலாறும் கறுப்பின மக்களின் இசையை உலகறிய செய்ய எப்படி ஒரு வெள்ளையரின் துணை தேவைபட்டது என்பதும் சுவாரிசயமான தகவல்கள். பிலடெல்பியாவில் இருக்கும் போது அமெரிக்க சுதந்திர மியூசியம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஐரோப்பிய குடியேறிகளும், அடிமை படுத்தப்பட்ட கறுப்பின மக்களும் , இந்தியன்ஸ் என்று அழைக்கப்பட்ட பூர்வகுடி மக்களும் எவ்வாறு பிரிட்டிஷை எதிர்த்து போரிட்டு வென்றனர் என்பதை மிக உணர்வுபூர்வமாக விளக்கும் மியூசியம் அது. இந்நூலில் ராக் & ரோல் பற்றி படித்து விட்டு அந்த மியூசியம் சென்ற போது ஒன்று தோணியது. அடிமைகளாக இருந்தும் கறுப்பின மக்கள் தங்கள் பண்பாடு, இசை, உணவு, அரசியல் பிரதிநிதித்துவம் என சிலவற்றை போராடி தக்க வைத்து கொண்டுள்ளனர் எனப்பட்டது. ஆனால் பூர்வகுடிகளான இந்தியன்ஸின் நிலை அங்கு இப்பொழுது என்னவாக உள்ளது. அவர்களது இசையோ ,உணவு பண்பாடோ ஆவண படுத்த பட்டுள்ளதா ? 1800களில் Tear of trails என பூர்வகுடி மக்கள் கொத்து கொத்தாக மிஸிஸிபி ஆற்றின் மேற்க்கை நோக்கி இடம் பெயரவைக்க பட்டிருக்கின்றனர். Mt Rushmore எனப்படும் பூர்வகுடிகளின் புனிதமான பிளாக்ஹில்சை குடைந்து வெள்ளையின தலைவர்களின் முகங்களை செதுக்கி அதை ஒரு பிரபல சுற்றுலா தலமாக மாற்றி விட்டனர். நிறைய Cow Boy திரைப்படங்களில் பூர்வ குடிகளே வில்லன்களாக சித்தரிக்கப்பட்டதாகவும் அறிகிறேன். இவையெல்லாம் நான் வெறும் படித்து அறிந்தவை மட்டுமே . நீங்கள் பார்த்த வரையில் அங்குள்ள பூர்வகுடிகள் வாழ்வு எப்படி உள்ளது. அவர்களுக்கென அரசியல் பிரதிநிதித்துவம் உண்டா ? குறைந்தபட்சம் ஒரு இசையோ, உணவோ பொது சமூகத்தின் புழக்கத்திற்கு வந்துள்ளதா ? 

    ஜப்பானிலும் இது போன்ற பொது வெளிக்கு வராமலே அழிந்துபோன பண்பாடுகள் உண்டு. வடக்கு தீவான ஹொக்கைடோவின் அய்னு இனமக்களை ஒற்றை ஜப்பானிய அடையாளத்தின் கீழ் கொண்டு வரும் பொருட்டு, தங்கள் மொழியை கைவிட்டு ஜப்பானிய மொழியை கட்டாயமாக படிக்கும்படி பணிக்கப்பட்டார்கள். அது போலவே தெற்கு தீவான ஒகினாவாவின் ரியூகியு இன மக்கள். அய்னுக்களுக்காவது 15 வருடங்களுக்கு முன்பு ஒரு மியூசியம் கட்டப்பட்டது, ரியூகியுக்களுக்கு அதுகூட கிடையாது.

    ஒவ்வொரு நகரத்திற்கு செல்லும் போதும் அந்நகரத்தின் நிலக்காட்சிகள் அழகாக வர்ணிக்க பட்டுள்ளது. நூலை படித்து முடித்த பின் அமெரிக்க நிலங்களின் நிறங்களை இப்படி கற்பனை செய்து கொண்டேன். நாஷ்வில்லில் இருக்கும் பச்சை, ஆஸ்டின் வரை சென்று அதன் பின் வைல்ட் வெஸ்டின் பாலை நிலங்கள் ஒருவித மஞ்சளாக மாறி, கன்யான்களின் நிலங்களில் ஆரஞ்சாக கண் நிறைத்து , வெஸ்ட் கரையோர மலைகளின் பிரவுனாக நிலை கொள்கிறது . வண்ணக்கடலில் இளநாகன் இந்திய நகரங்களில் வழியாக பயணம் செய்வதும் அவன் கண் வழியாக இந்திய நிலக்காட்சிகள் மாறுவதும் எழுதப்பட்டிருக்கும். நான் திரும்ப திரும்ப படிக்கும் வெண்முரசு அத்தியாயங்கள் அவை. ஜப்பானில் இது போன்ற நிலங்களின் நிறங்கள் மாறுவது அரிது. எங்கு சென்றாலும் பச்சை போர்த்திய மலைகள். மலைகளின் இடை வெளியில் உள்ள சமவெளிகளில் டோக்யோ, ஒசாகா, நகயோ போன்ற பெருநகரங்கள். பிலடெல்பியாவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்ப வரும் விமானப்பயணம் பகல் நேர பயணம் என்பதால் விமானத்தின் ஜன்னல் வழியாக நிலங்களின் நிறங்கள் மாறுவதை வேடிக்கை பார்த்து கொண்டே வந்தேன். புது அனுபவமாக இருந்தது. 

    மான்யுமண்ட் வேலியின் புகைப்படமே நான் கற்பனை செய்து வைத்திருந்த ஊரக அமெரிக்கா. பிரேக்கிங் பேட் போன்ற வெப் சீரிஸ்கள் வழியாக அமெரிக்காவை தெரிந்து கொண்டதால் இருக்கலாம். ஆள் அரவமற்ற அகண்ட சாலைகள், தூரத்தில் பெருமலைகள், எத்திசையில் காணினும் விரிவு. இம்மலைகள் மற்றும் சூரிய அஸ்தமனத்தை பற்றிய உங்கள் வர்ணனைகள் அந்த காட்சிகளுக்கே எனை கொண்டு சென்றது. மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தது கிராண்ட் கன்யான்களை பற்றிய அத்தியாயங்களுக்காகவே. திருஇடஞ்சுழி சரியான ஆரம்பம். ஸ்லாட் கன்யான்கள் விண்டோஸ் வால்பேப்பர்களாக புகழ் பெற்றவை. என்றாவது நேரில் சென்று பார்க்கும் அனுபவம் கிடைக்குமென நம்புகிறேன். கன்யான்களை பற்றி எழுதும் போது “பெரிய என்ற சொல்லின் அர்த்தம் உங்களுக்குள் விரிவடையும் அளவிற்கு மிகப்பெரிதாக இருக்கிறது” என்று எழுதி இருந்தீர்கள். அந்த அனுபவத்தை ஒரு துளி சொல்லாக மாற்றியது போல இருந்தது. கிராண்ட் கன்யான்களை பிளம் கேக்குடன் ஒப்பிடுவது, சுடாமல் குளிர்ந்து நிற்பது, ஜூனிப்பர் மரங்களின் வயதை கன்யான்களின் வயதுடன் ஒப்பிட்டது என கூர்மையான அவதானிப்புகள். இருளில் மலைகளுக்கு அருகில் பயணிக்கும் போது உள்ள அழுத்த உணர்வு பற்றி எழுதியிருக்கிறீர்கள் , எனக்கும் அதே போல ஒரு அனுபவம் உண்டு. இருளில் ஏதோவொன்று கூடவே பயணிப்பது போல இருந்தது, காலையில் எழுந்து பார்த்தபோதே தெரிந்தது மிக அருகில் மலைகளென. இருளில் மலைகளின் நிழல்கள் பெருகிவிடும் போல. 

    இந்நூலில் மிக அதிகமான எழுதப்பட்ட சொல் சாண்ட்விச் ஆகவே இருக்குமென நினைக்கிறேன். நான் சென்ற போதும் அமேரிக்காவில் எங்கு காணினும் சாண்ட்விச்தான். விதவிதமான வகைகள். பிலடெல்பியாவில் பிரசித்தம் என சொல்லப்பட்ட Philly Cheese Steak சுவைத்து பார்க்கலாம் என வாங்கினேன். அந்த பிரட் எனது முழங்கை அளவானது . கிட்டத்தட்ட அரை கிலோ கறி இருந்திருக்கும் . இரு வேளைக்கு வைத்து சாப்பிட வேண்டியதாகியது. அமெரிக்கர்களின் சாண்ட்விச் மோகத்திற்கு ஏதோவொரு வரலாறு இருக்க வேண்டும். அவசர உலகில் செய்வதற்கு எளிமையாக இருப்பதாக இருக்கலாம். ஆனால் அதை விட ஆழமான வரலாறு ஒன்று இருந்திருக்கவேண்டும். ஐரோப்பிய குடியேறிகளும் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்களின் உணவு பண்பாடுகள் அதிக முரண்கள் இல்லாமல் சந்திக்கும் இடம் சாண்ட்விச் ஆக இருந்திருக்கலாம். 

    கலிபோர்னியாவின் கோல்டு ரஷை உங்கள் வாழ்வுடன் இணைத்த இடம் அருமை . “கணினி தந்த திரு”, சத்தியமான வார்த்தை . நானும் உங்களை போலவே, எலிவளை வாழ்வில் ஆரம்பித்து படிப்படியாக வளர்ந்தவன். தொழில்நுட்ப கல்லூரிகளும், கணினி துறையும் இப்படி பல பேரை வாழ வைத்து இருக்கிறது. பொருளாதாரத்தில் வளர்ந்து விட்டோம். ஆனால் ஜெ சொல்வது போல பண்பாட்டு அறிவோ, கலையறிவோ சிறிதும் அற்று ஒரு நுகர்வு அடிமை குழுமமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம். நம் தலைமுறையில் இந்த விழிப்புணர்வு கொஞ்சம் பெருகி அடுத்த தலைமுறையாவது வாசிப்பு, கலையறிவு என சிறந்து விளங்கும் என நம்புவோம். 

    ஜெ போன்ற ஒரு அறிவாளுமையுடன் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது செறிவான அனுபவமாக இருந்திருக்கும் என நினைக்கிறன். அவருடன் பயனிப்பவர்கள் அர்த்தமுள்ள ஒரு செயலை நோக்கி செலுத்தப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். இன்று அவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு அறிவியக்கமாக வளர்ந்து இருக்கிறார்கள். உங்கள் அலுவலக நண்பர் சொல்வது போல “ஓ … ஃபார் ஷியூர் கல்டிஷ் ”, ஆம் அறிவு தேடலுக்கான கல்ட் இது. 

    ஒரு நூல் வாசித்து முடித்த பின், பல வித உணர்வுகள் எழும். இந்நூல் எனக்குள் ஒரு அமெரிக்க சித்திரத்தை வரைவதற்கு மிக உதவியாக இருந்தது. நீங்கள் சொல்லும் ஒரு வரலாற்று செய்தி இன்னொரு வரலாற்றை பத்தி என்னை யோசிக்க வைத்தது. உதாரணமாக கறுப்பின இசையில் இருந்து பூர்வகுடிகளின் வாழ்வு வரை பயணிக்க முடிந்தது. கோல்டு ரஷ் படித்தபோது, லாஸ் ஏஞ்செல்ஸ் எவ்வாறு அமெரிக்க சினிமாவின் தலைநகரமாகியது என தேட ஆரம்பித்தேன். ஒட்டுமொத்தமாக அங்கங்கு வந்து செல்லும் நகைச்சுவை சிரிப்பு வரவைப்பைவையாகவும், சமகாலத்தவையாகவும் தோன்றியது. உங்களது சமூக அவதானிப்பும், மெல்லிய நகைச்சுவை கலந்த எழுத்தும் இன்னும் நிறைய படைப்புகளில் வருமென ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறேன். 

    நீங்கள் அவசியம் ஜப்பான் வர வேண்டும். நுண்ணுணர்வு உள்ளவர்களை கொண்டாடும் நாடு இது. ஜப்பானிய பயணக்கட்டுரையான “கீற்றோவியம்” நூலில் ஜெ ஜப்பானை பற்றி “நுண்மையில் விரிவு காணும் நாடு” என்று எழுதியிருப்பார். நூறு சதவிகிதம் பொருத்தமான சொல். அமெரிக்கா விரிவின் நாடு, சாலைகள், வியாபாரம் மட்டுமல்ல மக்கள் யோசிக்கும் விதம்கூட பெரும் விரிவு கொண்டவை. ஜப்பான் நுணுக்கங்களில் இருந்து விரிவை நோக்கி செல்லும் நாடு. ஓரிகாமி போல நுணுக்கமாக, கைக்கு அடக்கமாக ஒன்றை செய்து, தேவை வரும்போது மடிப்பு தெரியாமல் விரித்து எடுக்கும் கலை தெரிந்தவர்கள். வாய்ப்பு கிடைக்கும் போது அவசியம் சந்திப்போம், இன்னும் உரையாடுவோம்.

    ##

    அன்புள்ள நண்பர் முத்து,

    உங்கள் கடிதம் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது.  நீங்களும் ஜெ.வின் தீவிர வாசகர், வெண்முரசு வாசித்தவர், வெள்ளிமலைக்கு சென்றிருக்கிறீர்கள், ஜப்பானில் ஜெ.வுடன் ஒரு பெரிய பயண திட்டம், மென்பொருள் துறை என எல்லாவற்றிலும் ஒரு இணை மனதை கண்டு கொண்ட ஒரு பரவசம்.  

    உங்கள் தனிப்பட்ட ஜப்பான் பயணங்களை பற்றி அறிவதற்கும் மேலும் ஆர்வமாக இருக்கிறேன். மௌண்ட் ப்யூஜியில் உங்ககளுடைய அனுபவம், நீங்கள் ஜப்பானில் பார்த்த இடங்கள், ஜப்பானிய பண்பாடு, அய்னு, ரீயூகியு போன்ற பழங்குடிகள் என வாய்ப்பிருந்தால் விரிவாக (அல்லது கட்டுரைத்தொடராக எழுதவும்.)  நீங்கள் அமெரிக்க சாலைகளை பற்றி சொல்வதைப் போலவே எனக்கு ஜப்பானின் அதிவிரைவு ரயில்கள் மேல் பெரிய காதல் உண்டு.  

    இன்னும் சில வருடங்களில் கண்டிப்பாக ஜப்பான் வரும் திட்டம் இருக்கிறது.  நீங்களும் சான் பிரான்சிஸ்கோ வந்தால் தெரியப்படுத்தவும், கண்டிப்பாக நேரிலும் சந்திப்போம்.

    அன்புடன்,

    விசு

    இரு கடல் ஒரு நிலம் புத்தகம் வாங்க : https://vishnupurampublications.com/index.php?route=product/product&product_id=445

    கிண்டில் பதிப்பு வாங்க: https://a.co/d/00m5cpHa

  • வயதாகாத நூல் – அ.முத்துலிங்கம் அவர்கள் கடிதம்

    [எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் கடிதம் எனக்கு ஒரு ஆசிர்வாதம்.]

    ##

    Buy Hardcopy

    Buy Ebook

    ஒரு புத்தகம் என்னிடம் வந்தது. ‘இரு கடல், ஒரு நிலம்’ என்ற தலைப்பு. தலைப்பே வித்தியாசமாக ஆர்வத்தை தூண்டியது. எழுதியவர் பெயர் விஸ்வநாதன். ஆனால் அது பயண நூல். நான் பயண நூல்கள் படிப்பதில்லை. ’இங்கே போனோம், இவரிடம் சாப்பிட்டோம். இன்று இதைப் பார்த்தோம். இன்னது சாப்பிட்டோம்’ என்று போய்க்கொண்டே இருக்கும். வாசிக்கத் தொடங்கும்போதே அலுப்பைக் கொடுக்கும். ஏ.கே செட்டியாரின் பயண நூல்கள் அத்தனையும் படித்திருக்கிறேன். அவை ஆயிரம் பக்கங்களுக்கு மேலே வரும் சுவையான எழுத்து; சுவாரஸ்யமான தகவல்கள். அப்படி ஒருவரும் இப்போவெல்லாம் எழுதுவதில்லை.

    புத்தகத்தை அசட்டையாகப் புரட்டிப் பார்த்தேன். அமர்ந்த இடத்தில் இருந்து படிக்கத் தொடங்கினேன். நீண்ட காலத்திற்கு பிறகு ஒரே அமர்வில் படித்து முடித்த புத்தகம். என்ன எழுத்து, என்ன நடை, என்ன வாக்கிய அமைப்பு, எத்தனை விதவிதமான சம்பவங்கள். புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை.

    அமெரிக்காவின் கிழக்கு கிரையிலிருந்து மேற்கு கடற்கரை வரைக்கும் பயணம். அதாவது அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து பசிபிக் சமுத்திரம் வரை. மே மாதம் 2022ல் தொடங்கி 15 நாட்கள் பயணம், 13 மாகாணங்கள், 4000 க்கும் அதிகமான மைல்கள். அட்டகாசமான இந்தப் பயணத்தை ஆறு பேர் ஒரு காரில் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

    முதன் முதலில் கிழக்கில் இருந்து நிலப்பாதை வழியாக மேற்கு எல்லைக்கு பயணம் செய்தது 1804ல். அதற்கு Lewis and Clark பயணம் என்று பேர். 45 பேர் 12 குதிரைகளுடன் புறப்பட்டார்கள். பாதை இல்லை ஆகையால் பாதைகளை உண்டாக்கித்தான் பயணம் செய்ய வேண்டும். 18 மாதங்களில் அந்தப்  பயணம் வெற்றிகரமான முடிவுக்கு வந்தது.

    200 வருடங்கள் கழித்து இப்போது எத்தனை முன்னேற்றங்கள் வந்திருந்தாலும் 4000 மைல்கள் பயணம் இலகுவானது இல்லை. தினம் ஏதாவது எதிர்பாராதது நடக்கும். முன்னர் போயிருக்காத பாதை, பார்த்திராத மனிதர்கள், புதுவிதமான உணவுகள், கால நிலை மாற்றம், நேர வித்தியாசம் என பலவிதமான இடைஞ்சல்கள். எத்தனை நேர்த்தியாக திட்டமிட்டாலும் அடுத்து என்ன நடக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. இப்படியான பயணங்களைச் சுவையாக்குவது திட்டத்தில் இல்லாத ஏதோ ஒன்று நடந்து அதைக் குழப்புவது; பயணத்தை சுவாரஸ்யம் ஆக்குவதும் அதுதான்.

    ஒரு கட்டத்தில் பயணக் குழுவின் ஜி.பி.எஸ் வேலை செய்யவில்லை. இவர்கள் கார் பிழையான திசையில் ஓடியது. பின்னர் அதைக் கண்டு பிடித்து சரிசெய்தார்கள். நான் படித்த கதை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. இரண்டு நண்பர்கள் அமெரிக்காவில் ஒரு மாகாணத்திலிருந்து மற்ற மாகாணத்துக்கு தெற்குப் பக்கமாகப் பயணம் செய்தார்கள். ஒருவர் ஓட்ட, நண்பர் பக்கத்தில் அமர்ந்து வரைபடத்தைப் பார்த்து வழி சொல்லிக்கொண்டே வந்தார். ஓர் இடம் வந்ததும் ‘ஐயோ, இது என்ன? கனடா வந்துவிட்டது’ என்று அலறினார். காரை ஓட்டியவர் நண்பர் பக்கம் பார்த்துவிட்டு ’இடியட், நீ வரைபடத்தை தலைகீழாக அல்லவோ பிடித்திருக்கிறாய்’ என்றார். அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்து சிரிப்பை வரவழைத்தது.

    கார் விபத்திலே போலீசிடம் மாட்டினாலோ, லைசென்ஸ் காலாவதியாகி பிடிபட்டாலோ அவமானம். ஆனால் வேக வரம்பை தாண்டி ஓட்டி போலீசிடம் பிடிபட்டால் அது பெருமையானது. பிற நண்பர்களிடம் சொல்லலாம். அது உங்கள் வீரத்தையும், தைரியத்தையும் பிரகடனப்படுத்தும். இரண்டு தரம் வேகத்தடையை மீறி ஓட்டி போலீசிடம் பிடிபட்டு தண்டக் கட்டணமும் கட்டவேண்டி வந்தது. இந்தப் பயணத்தில் நேர்ந்த ஒரே வீர சாகச நிகழ்ச்சி இதுதான்.

    புத்தகத்தில் நான் விரும்பும் தகவல்கள் இருந்தன. வாய்விட்டுச் சிரிக்கும் இடங்களுக்கு குறைவில்லை. பழைய தமிழ் இலக்கியங்கள் சொல்லும் செய்திகள் அங்கங்கே காணப்பட்டன. ஆங்கில எழுத்தாளர்கள் பற்றியும், அவர்கள் புத்தகங்கள் பற்றிய குறிப்புகளும் இருந்தன. அமெரிக்காவின் மாறுபட்ட நில அமைப்புகள், நேர வித்தியாசங்கள், கால நிலை மாற்றம் ஆகியவை அரிய தகவல்களாக கிடைத்தன, புத்தகத்தில் அடிக்கோடிட்டு, அடிக்கோடிட்டு புத்தகமே கிழிந்துவிட்டது.

    காரில் பயணம் செய்தவர்கள் ஜெமோ, அருண்மொழி நங்கை, ஸ்ரீராம், ராஜன், ஆசிரியர் விஸ்வநாதன், அவர் மனைவி பிரமோதினி. பயணம் முழுக்க மனைவி குறிப்பெடுக்க அதை புத்தகமாக எழுதியவர் விஸ்வநாதன். இந்த நூலை அவர் எழுதிவிட்டு மனைவியிடம் காட்டியிருக்கிறார். இது என்ன ’வள வள’ என்று ஓர் அன்பான வார்த்தையை சொல்லிவிட்டு முழு நூலையும் அழித்து மறுபடி எழுத வைத்தார். ஒரு முறை அல்ல இரண்டு தரம். அதுதான் பிரமோதினி.

    இந்த நூலுக்கு அருண்மொழி நங்கை முன்னுரை எழுதியிருக்கிறார். ஒரு முன்னுரை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக அது இருக்கிறது. ’பயணத்தில் புற உலகம் விரிகிறது என்பது நம் அக உலகம் விரிகிறது என்பதுதான்’ என்கிறார். ஆசிரியருக்கு பிரத்தியேகமான எழுத்து வடிவமும் மொழிநடையும் வாய்த்திருக்கிறது என்று கூறுகிறார். மிகச் சரியான கணிப்பு.

    பயணக் குழுவில் இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம் இருந்தது பெரும் அதிர்ஷ்டம். பயணம் முழுக்க அவ்வப்போது இசை நுட்பங்கள் பற்றி அவர் பேசினார். மொழி தொடமுடியாத இடங்களை இசை தொடும் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை. கருப்பர்களின் ரொக் அண்ட் ரோல் இசையை பிரபலமடைய வைக்க எல்விஸ் பிரஸ்லி போன்ற ஒரு வெள்ளைக்கார முகம் தேவைப்பட்டிருக்கிறது என்று விளக்கம் அளிக்கிறார்.

    புத்தகத்தில் வரும் ஒரு சம்பவத்தை ஜெமோ மொழியில் சொல்லியே ஆகவேண்டும். ஒரு விடுதியின் வெளியே ஜெமோ சந்தோஷ் சிவனுடன் நின்றிருந்தார். ’சிவன் கிழிந்த பேண்ட் அணிந்திருந்தார். ஒரு இளம் தம்பதி வந்து சிவனிடம் மொபைலைத் தந்து புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள். அவர்களுக்கு சிவன் ஒரு புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் என்பது தெரியாது. சிவன் அந்த மொபைலை வாங்கிப் பார்த்தார். தன் மணிக்கட்டைத் திருப்பி தோலில் எவ்வளவு சூரிய ஒளி விழுகிறது என்று பார்த்தார். போஸ் தரவேண்டாம் சும்மா பேசுங்கள் என்று சொல்லி புகைப்படங்கள் எடுத்து தந்தார். வாங்கி சென்றுவிட்டார்கள். சிறிது நேரம் கழித்து என்னிடம் வந்து ‘சார் யார்?’ என்று பரவசத்துடன் கேட்டார்கள். அந்தப் பெண் இதுவரை யாரும் இவ்வளவு அழகாக தன்னை புகைப்படம் எடுத்ததில்லை என்றாள். அந்தப் படம் பின்பு குங்குமத்தில் அட்டைப் படமாக வந்தது. இன்னொரு புகைப்படக் கலைஞர் அழைத்து இது சந்தோஷ் சிவன் எடுத்த படமா என்று விசாரித்திருக்கிறார்.’ கலைஞர்களின் கையொப்பம் அவர்கள் கைவைக்கும் எல்லாவற்றிலும் எப்படியோ தெரிந்துவிடும்.

    ஆசிரியர்  விவரித்த இன்னொரு சம்பவத்தை நான் ஒரு முறையல்ல, பல முறை படித்தேன். மணமுடித்து அமெரிக்கா வந்த புதிதில் இவருடைய மனைவி ஒரு கேள்வி கேட்டார். ‘டெயிலர் ஸ்விஃப்ட் யார்ன்னு தெரியாதா? அமெரிக்கால தான் ஆறு வருஷம் இருந்த?’ இவருக்கு அவமானமாகப் போய்விட்டது. டெயிலர் ஸ்விஃப்ட் உலகின் நம்பர் ஒன் பாடகி. இவர் அமெரிக்காவுக்கு படிக்க வந்த காலத்தில் அமெரிக்கா பெரும் பொருளியல் வீழ்ச்சியில் இருந்தது. சாப்பாட்டில் பறந்துவிழும் கரப்பான் பூச்சிகளைத் தள்ளிவைத்து சாப்பிட வேண்டும். வெளியே பெய்த பனி உருகி ஊறி தரையில் உள்ள படுக்கை விரிப்பை  நனைத்துவிடும். சப்பாத்து பிய்ந்து நடக்கும்போது டக் டக் என்று வினோதமான ஒலி எழுப்பும். இப்படியான அவல வாழ்க்கையில் டெயிலர் ஸ்விஃப்டாவது, மயிலர் ஸ்விஃப்டாவது என்று அவருடைய மனம் அங்கலாய்த்தது. இந்த இடத்தை நூலில் படித்தபோது நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன்.

    ஆசிரியருடைய எழுத்தில் அருமையான உவமைகள் அடிக்கடி வந்து விழும்.. ஓர் இடத்தில் இப்படி எழுதுகிறார். ‘ஜெ உடனடியாக சூழலைக் கவனிக்கக் கூடியவர். தீவிரமான உரையாடல்கள் சபையிலே சென்று சேராது என்று தெரிந்தால் உடனே தீவிரத்தை குறைத்துக் கொள்வார். சச்சின் டெண்டுல்கரை சிறப்பு விருந்தினராக அழைத்து ஒரு தெரு முனையில் கிரிக்கெட்  ஆடுவதுபோல இருக்கும்.

    வேறு ஓர் இடத்தில் இப்படி எழுதுகிறார். ‘பள்ளியில் ஷூவைக் கழட்டிவிட்டு செல்லும் இன்னொரு இடம் கணினிக்கூடம்.. இருபது கணினிகள் இருக்கும். அப்போது (1995) விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில்கூட 20 கணினிகள் இருந்திருக்குமா தெரியாது. கோயில் யானையிடம் ஒரு ரூபா தந்து ஆசி வாங்குவதுபோல அந்த கணினிகளில் LT40, RT90  என தட்டுவோம்.

    இவருடை எழுத்து நடை என்னைக் கவர்ந்தது என்று சொல்லவே தேவையில்லை. நியூ மெக்சிகோ மணல் குன்றுகளை வரை மருள் நெடுமணல் என்று வர்ணிக்கிறார். அமெரிக்காவில் அவர் வாழ்ந்த ஆரம்பகாலத்தை விருந்துண்ணும் பெருஞ்செம்மல் வாழ்க்கையை கனவு காணும் இரந்துண்ணும் இள மாணாக்கன் வாழ்க்கை என்று சொல்கிறார். நண்பனின் குறட்டையை ‘நள்ளென யாமம் முழுதும் ஒலித்தது’ என்கிறார். இன்னோர் இடத்தில் ‘கடைசித் துளி ஒளியையும் இருள் விழுங்கியபோது பேஜ் நகருக்குள் நுழைந்து விட்டோம்’ என்று எழுதுகிறார்.

    இவருடைய எழுத்தில் நகைச்சுவை வந்தபடியே இருக்கும். பயணத்தின்போது கண்ணால் பார்த்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். அதை அவருடைய வார்த்தைகளில் சொன்னால்தான் சுவை முழுமையாக வெளிப்படும். ‘அருகில் ஒரு ஆசிய ஜோடி இருந்தார்கள். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அந்தப் பெண் கையடக்க சிறிய கண்ணாடியில் பார்த்து, காற்றில் கலைந்த மேக்கப்பை சரிசெய்துகொண்டாள். நாங்கள் அங்கு அரை மணிநேரம் இருந்திருப்போம். அவர்கள் நகரவே இல்லை. ஷூட்டிங் தொடர்ந்தபடியே இருந்தது. இத்தனைக்கும் பெரிய கேமராவெல்லாம் இல்லை. எல்லாமே வெறும் மொபைலில்தான். சமூக வலைத்தள லைக்குகளை அள்ளப்போகும் ஒரு இன்ஸ்டா போட்டோ வரும்வரை அவள் ஓயப் போவதில்லை. அதல பாதாள விளிம்பில் அவள் அமர்ந்திருந்தாள். ‘வாழ்வின் விளிம்பிற்கே சென்றாலும் மேக்கப் போடுவதை விடமாட்டாள்’ என்றார் ஜெ.’

    புத்தகத்திலே ஒரு சுவாரஸ்யமான புதிர் வருகிறது. ‘புதிதாக ஒரு பழம் அறிமுகமாகிறது. அந்தப் பழத்தை சாப்பிட்டால் இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் ஆயிரம் வருடங்கள் கழித்து பழத்தை சாப்பிட்ட அனைவரின் சந்ததிகளையும் அந்தப் பழம் அழித்துவிடும் என வைத்துக்கொள்வோம். நீங்கள் இந்தப் பழத்தை இப்போது சாப்பிடலாமா வேண்டாமா என்று எப்படி முடிவு செய்வீர்கள்?’ இதுதான் புதிர். இதற்கு விடை தெரிய வேண்டுமானால் நீங்கள் புத்தகத்தை வாங்கி படிக்கவேண்டும்.

    இந்த நீண்ட பயணத்தில் ஜெமோவின் தினசரி பணிகளில் ஒரு குறையும் ஏற்படவில்லை. கடிதங்களுக்கு பதில் எழுதினார். கட்டுரைகள் வரைந்தார். காத்துக் கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கு திரைக்கதை முன்வரைவுகள் எழுதி அனுப்பினார். எப்படியோ அந்த இடத்து கடவுச்சொல்லை பெற்று ஒரு நாள்கூட தவறாமல் தமிழ் விக்கி பதிவுகளை எழுதி அனுப்பிவிடுவார்.

    அடிக்கடி ஏற்பட்ட பிரச்சினை நல்ல தேநீர் தயாரிப்பது. ஜெமோ தேநீர் தயாரிப்பதற்கு அவராகவே கண்டுபிடித்த ஒரு செய்முறையை வைத்திருந்தார். உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளரின் ரகஸ்யக் கண்டுபிடிப்பு. பாதி பால், பாதி தண்ணீர். இதில் மூன்று தேநீர் பைகளைப் போட்டு இரண்டு நிமிடம் மைக்ரோவேவில் கொதிக்க விடவேண்டும். அவ்வளவுதான், தேநீர் தயார். நானும் மனைவியும் இந்த முறையில் வீட்டில் தேநீர் தயாரித்து அருந்தினோம். மனைவி இரண்டு நாட்களாக என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

    இந்த நூலில் பல இடங்களில் ஆசிரியரின் வாழ்க்கையின் சில கூறுகளையும் படிக்க முடிகிறது. கல்வியின் மேன்மை பற்றிக் கூறும் உருக்கமான பகுதியும் உண்டு. அமெரிக்காவில் அவர் அனுபவித்த கஷ்டமான வாழ்க்கை பற்றி பதிவு செய்கிறார். பளபளப்பான முகங்கள் கொண்ட அமெரிக்க மாணவர்களுடன் இவர் படிக்கிறார். அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லை. திடீரென்று வங்கி திவால் ஆனால் என்ன செய்வது என்ற கவலை  மட்டும் கிடையாது. ஏனென்றால் இவர்தான் வங்கிக்கு 20 டொலர் கடனை திருப்பித் தரவேண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து தங்கப் புதையல் எடுக்கும் கனவு இவருக்கு அடிக்கடி வருகிறது. ஒருநாள் வேலை கிடைக்கிறது. முகத்தில் பளபளப்பு ஏறுகிறது. மூன்று மாதத்தில் வீட்டுக்கு பத்தாயிரம் டொலர் அனுப்பி கல்விக் கடனை முற்றிலுமாக அழிக்கிறார். கல்வியின் அவசியத்தை, மேன்மையை இதனிலும் சிறப்பாக எப்படி சொல்லமுடியும்?

    ஆயிரக் கணக்கான பக்கங்கள் கொண்ட பயண நூல்கள் எழுதிய ஏ.கே செட்டியார் ’பயண நூல்களுக்கு இரண்டாம் பதிப்பு வேண்டாம், அவை காலாவதியாகிவிடும்’ என்று சொல்வார்.  அது முற்றிலும் தவறு. வயது கூடக்கூட சுவை அதிகரிக்கும் வைன்போல பயண நூல்களின் சுவாரஸ்யம் காலம் செல்லச் செல்ல அதிகரிக்கும். அவருடைய நூலிலேயே சான்று உள்ளது. ஏ.கே செட்டியார் கனடாவில் பயணம் செய்த  சமயம் ஒரு சம்பவம் நடந்தது. அவர் விக்டோரியா ஸ்டேசனுக்கு  ரயில் டிக்கட் வாங்கினார். பயணச் சீட்டையும் மீதிப் பணத்தையும் கொடுத்த டிக்கட் கிளார்க் எழுந்து நின்று ‘உங்களுக்கு மிக்க வந்தனம்’ என்றார். ரயில் டிக்கட் வாங்கியதற்கு தனக்கு வந்தனம் இதுவரை யாரும் செலுத்தியதில்லை என்று செட்டியார் வியப்புடன் எழுதுகிறார்.. கனடாவில் வசிக்கும் எனக்கு இந்தச் சம்பவம் இன்றும் அளவில்லாத ஆச்சரியத்தை தந்தது.

    அ.முத்துலிங்கம்

    விசு என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஸ்வநாதன் எழுதிய ‘இரு கடல், ஒரு நிலம்’ பயண நூலை ஐம்பது வருடத்திற்கு பின்னர்  படிக்கும் ஒருவருடைய உணர்வு நிலை எப்படி இருக்கும் என்று இப்போது நினைக்கிறேன். படிப்பவருக்கு அது எத்தனை ஆச்சரியத்தையும், சுவாரஸ்யத்தையும், தகவலையும் கடத்தும்.

    ஆசிரியருடைய முதல் புத்தகம் இது. சிலர் ஏணிப்படிகளில் முதல் படி, இரண்டாம் படி என்று ஏறுவதில்லை. ஆரம்பத்திலேயே எட்டி நாலாம் படியில் கால் வைத்து விடுவார்கள். விஸ்வநாதன் அப்படித்தான் செய்திருக்கிறார். ஜெயமோகனின் ’புறப்பாடு’ நாவலை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அது விரைவில் வெளிவர இருக்கிறது. இப்பொழுது இவருடைய பயண நூலும் வெளிவந்துவிட்டது. இன்னும் பல நூல்களை ஆசிரியரிடம் எதிர்பார்க்கலாம். அவருக்கு என் வாழ்த்துகள்.

    அ.முத்துலிங்கம்

    ——————

    அ.முத்துலிங்கம் அவர்களின் கடிதம் ஜெ தளத்தில் வெளியான கடந்த இரு நாட்களாக புத்தகம் அமேசான் தளத்தில் பயண கட்டுரைகள் பிரிவில் மீண்டும் “பெஸ்ட் செல்லர்” ஆகியுள்ளது 🙂

    Buy Hardcopy

    Buy Ebook

  • இரு கடல் ஒரு நிலம் – நூல் வெளியீடு

    இரு கடல் ஒரு நிலம் – நூல் வெளியீடு

    “இரு கடல் ஒரு நிலம்” நூல் கடந்த வாரம் [Oct-19-2024] எழுத்தாளர்கள் ஜெயமோகன், அருண்மொழி நங்கை அவர்களால் நியூஜெர்சி நகரில் வெளியிடப்பட்டது.

    “Iru-Kadal-Oru-Nilam” – My first book, a travelogue about our cross-country trip with writer Jeyamohan, was released recently. Book release photos from New Jersey.

    [Books shipped from Vishnupuram Publications . புத்தகத்தை பதிப்பித்த விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும், மீனாம்பிகை அவர்களுக்கும் நன்றி]

    Writer Jeyamohan, Writer Arunmozhi Nangai & my friend Pazhani releasing the book at an event in New Jersey.

    நிகழ்வை ஒருங்கிணைத்த நண்பர் பழனிஜோதி, ஒவியர் மகேஸ்வரி, புகைப்பட கலைஞர் பிரேம்மாயாவிற்கு நன்றிகள்.

    Link to buy a copy of the book [India]: https://www.vishnupurampublications.com/product/irukadalorunilam/

    Kindle E-book Link: https://www.amazon.com/dp/B0DKJNGPRJ

    ###

    கலிஃபோர்னியா லிவர்மோர் நகரில் நண்பர் சாரதா இல்லத்தில் நவம்பர் 2, 2024 அன்று விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் சந்திப்பு நடந்தது. நண்பர் கண்ணப்பன் நூல் குறித்த ஒரு சிறிய அறிமுக உரை ஆற்றினார்.

    The book was a trending #HotNewRelease on Amazon in Travel, Tamil eBooks, and All Other Foreign Languages. All credits to the visibility generated through Je’s website – https://www.jeyamohan.in/207430/ 🙂

    #இருகடல்ஒருநிலம் #IruKadalOruNilam

  • இரு கடல் ஒரு நிலம்

    இரு கடல் ஒரு நிலம் நூல்

    இரு கடல் ஒரு நிலம் மின்னூல்

    நான் இந்தியாவை குறுக்கும் நெடுக்குமாக கடந்து பல பயணங்கள் செய்திருக்கிறேன், அவற்றை பயணநூல்களாக எழுதியிருக்கிறேன். நான் செய்த ஒரு பயணம் இன்னொரு எழுத்தாளரால் முழுமையாக பதிவுசெய்யப்பட்ட இந்த நூல் எனக்குப் புதிய அனுபவம். அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை முதல் மேற்குக் கடற்கரை வரை நாங்கள் நடத்திய ஒரு நீண்ட பயணத்தின் பதிவு இது. பயணக்கதை என்பது பண்பாட்டு விவரிப்பாகவும், நுண்ணிய அனுபவச் சித்தரிப்பாகவும் ஒரே சமயம் திகழ்கையிலேயே அது இலக்கியத்தகுதி கொள்கிறது. இந்நூல் நம் பயண இலக்கியங்களில் என்றும் அழியாத ஓர் இடத்தை வகிக்கவிருப்பது


    — ஜெயமோகன்