அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளிவந்துள்ளன. என்னுடைய கதை வலசை இறுதிப்பட்டியலில் தேர்வானது குறித்து தனிப்பட்ட முறையில் மிக்க மகிழ்ச்சி.
தீவிர இலக்கியத்தில் அறிவியல் புனைவுகள் அடங்குமா? என்ற விவாதம் ஓய்ந்து இப்பொழுது அறிவியல் புனைவும் இலக்கியமே என ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் அறிவியல் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கிய ஒரு நிஜமான ஊகப்புனைவை விட எவ்வளவு நல்ல கதையாக இருந்தாலும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட கதைகளுக்கு அறிவியல் புனைவுகளில் இரண்டாம் இடமே. அதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. “வலசை” ஒரு வகையில் ஒரு தொழில்நுட்ப விந்தை கதைதான். அதே நேரத்தில் தொழில்நுட்ப கதைகள் ஒரு அறிவியல் புனைவு சூழலுக்கு அவசியம் என நினைக்கிறேன்.(வாசகர் பங்கேற்பு, கலைச்சொல் அறிமுகம்).
தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான யுவன் சந்திரசேகர் நடுவராக இருந்து, மொத்தம் வந்த 94 கதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கதைகளை வாசித்து அவருடைய கருத்தை பகிர்ந்துள்ளார். போட்டி முடிவுகள் குறித்த அறிவிப்பும் ஜெயமோகன் தளத்தில் வெளிவந்துள்ளது. சென்ற ஆண்டு நடுவராக இருந்த சாரு அவருடைய கருத்தையும் கடுமையாகவே பதிவிட்டுள்ளார்.
பத்து வருடங்களாக கதை எழுத இருந்த தயக்கத்தை விட்டு நான் எழுதிய முதல் கதைக்கு யுவன் அவர்களின் கட்டுரையில் உள்ள ஒரு சிறு பாராட்டு குறிப்பு உற்சாகமூட்டினாலும், யுவன் வெளிவந்துள்ள கதைகள் குறித்து பொதுவாக கடுமையாகவே எழுதியுள்ளார். சுசித்ரா அவருடைய ப்ளாக்கில் ஒரு எதிர்வினை ஆற்றியிருக்கிறார். சுசித்ராவின் கருத்தில் எனக்கு பெரும்பாலும் உடன்பாடே.
ஒருவருடைய முதல் கதையை ஒரு மொழியின் சிறந்த எழுத்தாளர்கள் வாசித்து கருத்து தெரிவிப்பதை ஆங்கில சூழலில் நினைத்துக்கூட பார்க்க முடியாது. கனத்த மௌனத்தை பதிலாக பெறுவதைவிட வேறு எவ்வகை எதிர்வினையும் நன்றே. அதன் பொருள் நாம் அந்த கருத்துக்கள் அனைத்தையும் ஏற்கிறோம் என்றல்ல, ஆனால் அந்த எதிர்வினைகளை பெறுவது முக்கியம்.
யுவனுடைய கருத்தை ஒட்டி சில எண்ணங்கள்:
1. கதைகளில் சொற்பிழைகள், இலக்கணப் பிழைகள் மலிந்துள்ளன: நான் கதையை google docs – spelling & grammar மட்டுமே உபயோகித்தேன். இப்போது தளத்தில் வாசிக்கும்போது பல சொற்பிழைகள் இருக்கின்றன. அடுத்தமுறை கதையை ஒரு சிறிய நண்பர் வட்டத்திற்கு முன்பே அனுப்பி உதவி கோருவது பயனளிக்கும் என்று நினைக்கிறேன்.
2. ஜெயமோகனின் தாக்கம் மற்றும் வெண்முரசு நடையை நகல் செய்வது குறித்து: யுவன் ஒரே கதையில் பற்பல நடையில் எழுதக்கூடியவர். யுவன் கதைகளே கதை மாலைகள் தான். சாருவும் அவருடைய பதிவில் இந்த குற்றச்சாட்டை கூறியிருந்தார் — “ஜெயமோகனே அனைத்து கதைகளையும் எழுதியது போல இருக்கிறது என”. இதில் சில மாற்றுக் கருத்துகள் உண்டு. வலசை கதையில் சொற்கள், கதை தருணங்கள், நடை உட்பட வலுவான ஜெயமோகன் சாயல் உண்டு. அதில் உள்ள வீடியோ கேம் நடை வெண்முரசு நடை தான். வெண்முரசு போன்ற ஒரு மாபெரும் படைப்பு எழுதப்பட்டுள்ள சூழலில் அதன் தாக்கம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். டிராகன் என்ற சொல் வெண்முரசில் ‘சிம்மநாகம்’ என்ற புதிய சொல்லாக உள்ளது, அது எனக்குப் பிடித்திருக்கிறது. எதிர்காலத்தில் எழுதி, எழுதி ஒரு தனித்த நடையை அடைந்தாலும், வெண்முரசில் ஜெ. உருவாக்கியுள்ள சொற்களஞ்சியத்தை கண்டிப்பாக பயன்படுத்துவேன். யுவன் உங்கள் நண்பரின் நடையை நாங்கள் நகல் செய்வது குறித்த உங்கள் தார்மீகக் கோபம் புரிகிறது. ஆனால் ஒரு எழுத்தாளரின் நடை அடுத்த தலைமுறையை ஆள்கிறது என்பது அவருக்கு பெருமைதானே? பாரதி, சுஜாதா என அவர்களின் அடுத்த தலைமுறையின் நடையை பெரிதும் மாற்றியமைத்த மாஸ்டர்கள் தமிழில் தொடர்ந்து உண்டல்லவா ?
மேலும் வெண்முரசு வரை ஜெயமோகனுடைய அனைத்து படைப்புகளையும் வாசித்துள்ளேன். அவருடைய ஆரம்பகால கதையான “நதி” அசோகமித்திரன் பாணியிலான நடை; படுகை, மாடன் மோட்சம் ஒரு நடை என்றால், விஷ்ணுபுரம் வேரொன்று; “காடு”, “பின் தொடரும் நிழலின் குரல்” வேறு வகை; ஆனால் கொற்றவையும், வெண்முரசும் உருவாக்கிய நடை அதுவரை இருந்த நடைகளை விட முற்றிலும் புதிதல்லவா? சில ஆண்டுகளுக்கு முன்பு விவேகானந்தர் குறித்த ஒரு கட்டுரை தமிழ் இந்து நாளிதழில் வெளியாகி இருந்தது. விவேகானந்தரின் உபநிடத வரி – “Arise, awake and stop not till the goal is reached” தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது. இவ்வரியின் வழமையான மொழியாக்கம் “எழுமின், விழிமின், காரியம் கைகூடும் வரை ஓயாது செல்மின்” ஆனால் அந்த கட்டுரையில் “எழுக! விழித்தெழுக! குறிக்கோள் வரை ஓயாது செல்க!” என்று இருந்தது. “எழுக! விழித்தெழுக!” என்ற இரு சொற்களிலேயே அந்த கட்டுரை ஜெயமோகன் எழுதியது என்று கண்டு கொண்டேன். (ஆசிரியர் பெயர் கட்டுரையின் அடியில் கொடுக்கப்பட்டுள்ளது). அந்த இரு சொற்களில் ஜெயமோகனின் கையொப்பம் உள்ளது. தனக்கென ஒரு தனித்த நடையை உருவாக்குவதே எந்த ஒரு எழுத்தாளனின் கனவல்லவா? ஆனால் அதை எழுதி எழுதித்தான் அடையமுடியும் என்றே நினைக்கிறேன்.
உங்கள் நேரத்திற்கும், கருத்துக்களுக்கும் நன்றி யுவன். மேலும் சிறந்த கதைகளை எழுத அவை உதவும். இரண்டு நாட்களாக உங்கள் கருத்தை ஒட்டியே சிந்தித்துக்கொண்டிருந்ததில் அரூவில் வெளிவந்துள்ள மற்ற கதைகளை இன்னும் வாசிக்கவில்லை. மற்ற கதைகள் குறித்து தனித்த பதிவில். நண்பர்கள் கதைகளை வாசித்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.