தமிழர்களுக்கு சோழப் பேரரசு இருந்தது போல, மாயா நிலப்பகுதிகளை உள்ளடக்கிய பேரரசு என்று ஒன்று இல்லை. பண்டைய கிரேக்கர்களின் ஸ்பார்டா, ஏதன்ஸ் போல, ஒவ்வோரு மாயா ஊரும் ஒரு தனி நாடு. அவற்றுள், சிச்சன் இட்சா (chichen itza), உஷ்மால் (uxmal), மாயப்பன் (mayappan) என்ற மூன்று ஊர்-அரசுகளும் பெரியவை. உஷ்மால் இளவரசியை மாயப்பன் அரசனுக்கு மணமுடிக்க இருந்தனர். ஆனால், அவளை சிச்சன் மன்னர் கடத்திச் சென்று களவு மணம் செய்து கொண்டார். பெண் கடத்தலை ஒரு சாக்காக வைத்து, உஷ்மாலும் மாயப்பனும் கூட்டுச்சேர்ந்து சிச்சன் மேல் போரிட்டு அழித்துவிட்டனர். (பெண்னைக் கடத்தி, அதன் விளைவுகளால் அழிந்த இலங்கை, ட்ராய் வரிசையில் சிச்சனையும் சேர்த்துக் கொள்ளலாம்). மேலே சொன்ன கதை, உஷ்மால் ஒலி ஒளி காட்சியில் சொன்னார்கள். அது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், ஸ்பானியர்கள் வருகைக்கு முன்பே, சிச்சன் கைவிடப்பட்டுவிட்டது. ஸ்பானியர்கள் வரவுக்குப்பின், உஷ்மால் அவர்களுடன் சேர்ந்து, மாயப்பன்னை அழித்தது. பின்பு, ஸ்பானியர்கள் உஷ்மாலை அழித்தனர். உஷ்மாலிலிருந்து தப்பிய மாயாக்கள் அருகிலுள்ள லால்துன் குகைகளில் பதுங்கினார்கள். அங்கும் வேட்டை தொடர்ந்தது. எல்லா மாயா ஊர்களும் கைவிடப்பட்டு, ஸ்பானியர்கள் உருவாக்கிய நகரங்களுக்கு மாயாக்கள் அடிமைகளாக கொண்டுசெல்லப்பட்டார்கள். மாயாக்களின் பிரமிடுகள், கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, மெரிடா, கம்பச்சே நகரங்களில் தேவாலயங்கள், மதில்சுவர்கள் கட்டப்பட்டன (இந்த கதைய எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே?). முந்நூறு வருடங்கள் கவனிப்பாரற்று கிடந்த மாயா நகரங்கள், 1840 களில், தொல்லியலாய்வாளர்களால் ‘கண்டுபிடிக்கப்பட்டது’. தற்போது, யுனஸ்கோ நிதி உதவியுடன், மீண்டும் புணரமைக்கப்பட்டுள்ளது.

Puuc என்ற மாயா வார்த்தைக்கு ‘மலை’ என்று அர்த்தம். மெரிடாவிலிருந்து மாயாக்களின் மலை பிரதேசத்திற்கு சென்று மலை வழியில் (Ruta Puuc) உள்ள மாயா ஊர்களை பார்ப்பது திட்டம். லால்துன் குகைகள், காபா, சாயில், லப்னா, உஷ்மால் என்று பல முக்கிய ஊர்கள் மலை வழியில் உள்ளன. உஷ்மாலைத் தவிர மற்ற இடங்களை முதல் நாளிலும், உஷ்மாலை அடுத்த நாளும் சென்று பார்த்தோம். லால்துன் குகைகளுக்குள் டூர் அழைத்துச்சென்றார்கள். லப்னா, சாயில் போன்றவற்றை கண்டு ரசித்தோம் என்றால், உஷ்மாலைக் கண்டு பிரமித்துவிட்டோம். பிரமாண்டமான பிரமிடுகளும், தோரண வாயில்களும், மதில் சுவர்களும் ஒரு தீவிர மன எழுச்சியை ஏற்படுத்தியது. இந்த ஊரைப் பார்த்தவுடன் எனக்கு ஹம்பி நினைவுக்கு வந்தது. இடிந்த வழிபாட்டு மையங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், கணக்கற்ற வரலாற்றுச் சின்னங்கள்… நிறைய கட்டிடங்களில் இன்னும் புதர் மண்டிக் கிடக்கிறது. நிதிப் பற்றாக்குறை என்றார்கள். அங்கிருந்த கட்டிடங்கள் எதற்கு பயன்பட்டன என்று தெரியவில்லை.

‘உன் முன்னோர்கள் முட்டாள்கள், உன் மதம் ஒரு காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கை, உன் மொழியில் இலக்கியமே இல்லை, உங்களுக்கு மீட்பே எங்கள் மூலமாகத்தான்’ என்று திரும்பத் திரும்ப நம்மை நம்ப வைக்க ஆங்கிலேயன் முயல்கிறான். அதில் அவன் வெற்றியடைந்தால், அதன்பின் நாம் வெறும் நடைபிணம். அந்த நாளில் நாம் முற்றாக அடிமைப்படுத்தப்பட்டுவிட்டோம் என்று அர்த்தம்.’ – விவேகானந்தர்
உஷ்மாலைப் பார்க்கும்போது, அவன் இங்கே வென்றுவிட்டான் என்று தோன்றுகிறது. கல்லும், கட்டைகளும், வில்லும் வைத்திருந்த மாயாக்கள், துப்பாக்கிகள் வைத்திருந்த ஸ்பானியர்கள் முன் என் செய்திருக்க முடியும் ? கூட்டம் கூட்டமாக பூச்சிகளைப் போல அழித்தொழிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையேல்லாம் பார்க்கும் போது, அறம் என்று ஒன்று இருக்கிறதா? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? என்ற தோன்றுகிறது.
‘நாம கூட்டம் ஜாஸ்தி மச்சி, இல்லேன்னா, வெள்ளக்காரன் காலி பன்னியிருப்பான்’ என்றார் அருண். உண்மைதான். ஒரு கற்பனைக்கு, மதுரை, தஞ்சை எல்லாம் சூறையாடப்பட்டு, நம் மக்கள் மெட்ராஸுக்கு அடிமைகளாக கொண்டுசெல்லப்பட்டால் எப்படி இருந்திருக்கும் ? மதுரையை மீண்டும் ‘கண்டுபிடித்து’ ஆங்கிலேயன் வரலாறு எழுதினால் ‘ உயரமான டவர்கள் இருக்கிறது, எதற்கு என்று தெரியவில்லை. டவரில் நிறைய பொம்மைகள் இருக்கிறது. மன்னர்களுக்கு பிடிக்காதவனை மேலே இருந்து தள்ளி விடுவார்களாயிருக்கும், அதற்கு ஒன்று போதுமே, எதற்கு நாலு டவர்? கட்டிடங்கள் கட்டுவதற்குமுன், போர்களுக்குமுன் நரபலி குடுத்துள்ளார்கள், கோயில்களில் குளங்கள் உள்ளன. அதில் பக்தர்களில் நாலு பேரை தள்ளிவிட்டு, மீண்டு வருபவர்கள் குறிசொல்லிகளாகி இருப்பார்கள், உச்ச கட்ட கேவலம், இவர்கள் ஆண் குறிகளை வணங்குகிறார்கள். குழந்தை பிறப்பதற்கு ஆண் குறி காரணம் என்று கண்டுபிடித்ததால் இருக்கும்..”
திகம்பரர்களையும், அகோரிகளையும், நாகா சாதுக்களையும் அவர்களுடைய ஞானம் / தத்துவம் எதுவுமே தெரியாமல், வெளியிலிருந்து வேடிக்கை பார்த்தவனிடம் அவர்களைப் பற்றி கேட்டால் என்ன சொல்வானோ, அதே மாதிரி ஒரு கருத்துதான் மாயாக்களைப் பற்றி பரப்பியுள்ளார்கள் (அப்போகலிப்டோ படம் ஒரு நல்ல உதாரணம். முடிந்தால் ‘Other Conquest’ பாருங்கள்.) மாயாக்களுக்கு என்று ஒரு சிந்தனை இருந்திருக்குமே, அவர்கள் கண்டுணர்ந்த ஞானம் இருந்திருக்குமே, எல்லாம் மண்ணோடு மண்ணாய் போய்விட்டதோ? மாயாக்கள் பல்வேறு துறைகளில் அடைந்த உயரங்களை மீண்டும் அடைய மனித குலத்திற்கு எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை. உஷ்மாலை பார்க்க வரும் இன்றைய செவ்விந்தியப் பழங்குடிகளைத் தவிர, வெள்ளையர்கள் எத்தனை பேர் இவற்றை உணர்கிறார்கள் என்றே தெரியவில்லை.