சிச்சன் இட்சாவிலிருந்து கிளம்பி மெரிடா வந்து சேர்ந்தோம். மெரிடாவில் முகுய் என்ற விடுதியில் தங்கினோம். அடுத்த மூன்று நாட்கள் இங்குதான் வாசம். விடுதி உரிமையாளர் பாட்டி ஒரளவு ஆங்கிலம் பேசினார். அவரும், அவருடைய மகளின் குடும்பமும் விடுதியின் கீழ் பகுதியில் தங்கியிருந்தனர். மேல் மாடி முழுவதும் அறைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். அவர்களின் வீடு ஊரின் நடுவில் அமைந்திருந்தது . ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்த குடும்பமாக இருந்திருக்க வேண்டும். வரவேற்பு மேசையில், அவருடைய விருந்தோம்பலையும், விடுதியையும் மெச்சி அனுப்பட்ட கடிதங்களை ஒட்டிவைத்திருந்தார். பத்து, பதினைந்து வருடங்கள் பழைய கடிதங்களில் இருந்து ஐந்து வருடங்களுக்கு முந்தைய கடிதங்கள் வரை ஒட்டிவைத்திருந்தார். இமெயில் காலத்தில் யார் கடிதம் எழுதுவார்களோ தெரியவில்லை. கடிதங்கள் ஓவ்வொன்றும் அவருடைய நினைவு நூலகத்தின் catalogue index என்று எண்ணிக்கொண்டேன். அதே விடுதியில் ஒரு பிரெஞ்சு பாட்டி தங்கியிருந்தார். அங்கே குளிரைத் தவிர்ப்பதற்காக இங்கு இரண்டு மாதங்கள் தங்கியிருக்கிறேன் என்றார். பேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, ஏதேதொ கதை சொல்ல ஆரம்பித்தார். அவர் அருகில் நிற்கும் போதே ஒரே சாராய வீச்சம். சிறிது நேரம் கழித்து அவரிடமிருந்து கழன்றுகொண்டோம். மூப்பும், தனிமையும் மனிதனை மீண்டும் குழந்தைகளாக்கிவிடுகின்றன போலும். ஆனால் குழந்தைகளைக் பார்க்கும்போது வரும் உற்சாகம், முதியோர்களைப் பார்க்கும் போது வருவதில்லையே ஏன்? பேசியே கொல்வார்கள் என்பதாலா? இருக்காது.. இளமை நீடிக்காது, நாமும் ஒரு நாள் மூப்படைவோம் என்ற உண்மையை உணர்வதால் இருக்கலாம்.

ஜிபில்சால்துன் (Dzibilchaltun) ஒரளவு பெரிய மாயா ஊர். அங்கு செல்லும் போதே மதியமாகிவிட்டது. மறுநாள் கிறிஸ்துமஸாதலால், மூன்று மணிக்கே மூடிவிடுவோம் என்றார்கள். ஏழு பொம்மைகள் கோயில் (Temple of Seven Dolls) தான் இங்கு பார்ப்பதற்கு ஒரு பெரிய கட்டிடம். நாங்கள் சென்ற எல்லா மாயா ஊர்களும் கைவிடப்பட்டிருந்த ஊர்கள். முக்கால்வாசி இடங்களில் உள்ள புராதான இடங்கள், கட்டடங்கள் எதை குறிக்கின்றன என்றே தெரியவில்லை. இந்த பொம்மைகள் (!!) கோயில், யாரால் கட்டப்பட்டது, அந்தச் சிலைகள் எதன் குறியீடு, ஒரு தகவலும் இல்லை. கிரகங்களுக்கு உரிய கோயிலாக இருக்கலாம், மாயாக்கள் வாழ்ந்துணர்ந்த விழுமியங்களுக்கு கொடுத்த வடிவங்களாக இருக்கலாம் (அஷ்ட லட்சுமிகளோ, சப்த கன்னியர்களோ) என்று நாங்களாக நினைத்துக்கொண்டோம். சம இரவு நாளன்று, இக்கோயிலின் வாசலும், சூரியனும் ஒரே நேர்கோட்டில் தெரியும் என்றார்கள். அங்கிருந்த சினோட்டில் ஒரு கூட்டம் குளித்துக்கொண்டிருந்தது. சிறிது நேரம் சுற்றிவிட்டு, மீண்டும் மெரிடாவிற்கு திரும்பிவிட்டோம்.

மெரிடா, ஊருக்கு நடுவே ஒரு பெரிய தேவாலயம், அருகிலெயே கவர்னர் மாளிகை, அதைச்சுற்றி ஒரு பூங்கா, என்று வழக்கமான ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்ட நகரம். வரிசையாக குதிரை வண்டிகள் சுற்றுலாப் பயணிகளுக்காக காத்துக்கொண்டிருந்தன. குறுகிய சாலைகள் அனைத்துமே எண்களால் அடையாளப் படுத்தப்பட்டிருந்தது. (காந்தி, நேரு, காமராஜ் மாதிரி உங்களுக்கு தலைவர்கள் இல்லையா?) அதுபோலவே, தெருவுக்குத் தெரு, இயற்கை உபாதையை சுட்டிக்காட்டும் (நன்றி : நாஞ்சில் நாடன்) சிலைகளும் இல்லை. (என்ன கலாச்சாரமோ.. அடபோங்கப்பா). இரவு ஏழு மணி வாக்கில், தெருக்களில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, தெருவே, மக்களின் ஆடல், பாடல்களுக்கான மேடைகளாயின. பல இடங்களில், தெருவோர இசைக்கலைஞர்கள், உற்சாகம் கொப்பளிக்க, லத்தீன் அமெரிக்க இசையை வாசித்துக்கொண்டிருந்தார்கள். (ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களின் பல மெட்டுக்கள் நினைவுக்கு வந்தது. முன்பு தேவா. இப்பொழுது இவர்). அத்தெருக்களில் இசைக் கலைஞர்கள் நிரப்பாத இடைவெளியை, அங்கே உள்ள உணவகங்களின் மேசை, நாற்காலிகள் நிரப்பின. ஒரு மேசைத் தேடி உட்கார்ந்துகொண்டோம். மூன்று நாட்களாக, உணவகங்களில் ஒரு பிரச்சனை வந்தது. மது அருந்தும் பழக்கம் இல்லாததால், குடிப்பதற்கு வெறும் தண்ணீர் கேட்போம். மினரல் வாட்டர் கொண்டுவந்துவைப்பார்கள். மினரல் வாட்டர் வேண்டாம், குழாய் நீரே போதும் என்று சொல்லத் தெரியவில்லை. என்னென்னவோ செய்கை எல்லாம் செய்து காட்டினாலும் அவர்களுக்கு புரியவில்லை. துரை டம்ப்ளரில் நீர் கேட்கிறார் போல் என்று நினைத்து, மினரல் வாட்டரை டம்ப்ளரில் கொண்டுவந்தார்கள். (அதற்கு உணவுப்பதார்த்தங்களுக்கு இணையாக பில்லும் போட்டார்கள்). பிறகு, விடுதி உரிமையாளர் பாட்டி துண்டு சீட்டில் எழுதிக்கொடுத்தார். (dos vasso agua naturalle. non agua mineralle, non agua bottelle :-)). ஸ்பானிய புலமையைகாட்டுவதற்காக, உணவகங்களில், எங்கள் இருவருக்கும் மேசையை ரிசர்வ் செய்யகற்றுகொண்டோம். ஆனால், மனனம் செய்த வாக்கியங்களைக் கூறிய அடுத்த நொடி,அவர்கள் சரளமான ஆங்கிலத்தில் என்ன வேண்டும் என்று கேட்பார்கள். (பெங்களூரில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் கன்னடத்தில் பேசும்போது ‘இன்னா சார், தமிலா, எங்கபோவனும்’ என்று கேட்டது நினைவுக்கு வந்தது.)


மூன்று நாட்களாக தொடர்ந்து பயணம் செய்தலால், இன்று கிட்டத்தட்ட ஓய்வுதான். அருகிலுள்ள சிற்றூர்களுக்கு செல்வது இன்றைய திட்டம். முதலில் ப்ராகிரஸோ (Progresso) என்ற கடற்கரை கிராமத்திற்கு சென்றோம். பிளமிங்கோ என்ற உணவு விடுதியில் பொறித்த மீன் சாப்பிட்டோம். செம ருசி. லோன்லி பிளானட் பொய் சொல்லவில்லை. சிறிது நேரம் கடற்கரையில் செலவிட்டுவிட்டு, மாயர்களின் கடற்கரை ஊராகிய ஷாம்போவிற்கு (Xcambo) சென்றோம். மற்ற பெரிய மாயா நகரங்களுக்கு இங்கிருந்துதான் உப்பு அனுப்பப்பட்டது. செல்லும் வழியெங்கும் சதுப்பு நிலக் காடுகள்தான். வெளிர் பிங்க், ஆரஞ்ச் நிறம் கலந்த பிளமிங்கோக்கள் நிறைய இருந்தன. பார்ப்பதற்கு, ஆரஞ்சு நிற பலூன்கள் மிதப்பது போல இருந்தது. அவற்றை, எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காது. ஆசைதீர பார்த்துவிட்டு, ஷாம்போ சென்றோம். கிட்டத்தட்ட வெறிச்சோடியிருந்தது. இங்கு வந்த ஸ்பானியர் ஒருவருக்கு கன்னி மேரி கனவில் வந்து, தனக்கு தேவாலயம் கட்டுமாறு கூறவே, ஒரு சிறிய தேவாலயம் கட்டியுள்ளார்கள். இப்போழுது யாரும் இல்லை. நாங்கள் பார்த்த பல மாயா ஊர்களில், சிற்பங்களே இல்லை. காரணம், நீண்ட காலத்திற்கு, கல்லை செதுக்கும் திறனுள்ள உலோகத்தை மாயர்கள் கண்டுபிடிக்கவில்லை.
- ஷாம்போ
(தொடரும்)