காந்தி : ‘இங்கிலாந்து பணக்கார நாடாக, இந்தியா தேவைப்பட்டது. இந்தியா இங்கிலாந்தைப் போல் ஆக, நாலைந்து உலகம் பத்தாது’.
ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இரண்டு நாட்களுக்குமுன் உலகின் மிகப்பெரிய வேலி என்ற கட்டுரை வந்தது. ராய் மாக்சம் எழுதிய ‘The Great Hedge of India’ என்ற புத்தகத்தை பற்றியும், அதை ஒட்டிய தன் கருத்துகளையும் பதிவுசெய்திருந்தார். அருகிலிருந்த நூலகத்திலிருந்து புத்தகத்தை எடுத்துவந்து படித்தேன். அவரைவிட என்னால், சிறப்பாக சொல்ல முடியாவிட்டாலும், என் கருத்துகளை பதிவிடுகிறேன்.
கேள்வி : 1850ஆம் ஆண்டு, வங்காள மாகானத்தில் பயன்படுத்தப் பட்ட உப்பில் 50% இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆம், சமயல் உப்புதான். இயந்திரங்களால் மலிவாக தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடைகள் இல்லை, வெறும் உப்பு. உங்களால் நம்ப முடிகிறதா ? இந்தியாவில் இல்லாத கடலா, உப்பளங்களா? பிறகு உப்பை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன ?
பதில் : லாபம். இந்தியாவில் (குஜராத்தில்) விளையும் உப்பிற்கு அநியாய வரிகள் போடப்பட்டு, இறக்குமதி உப்பு, உள்ளூர் உப்பைவிட குறைந்த விலைக்கு விற்கப்பட்டது !!.
இங்கிலாந்திலிருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டு, கம்பெனி லாபம் அடைகிறது என்றால், இங்கே என்ன தான் நடக்கிறது? முகமது கஜினி, நாதிர் ஷா, தைமூர் எல்லாம் இந்தியாவை கொள்ளை அடித்தார்கள். அவை வழிப்பறி போன்றது. கையிலிருப்பது தான் களவாடப்படும், வங்கியிலிருப்பது அவர்களுக்கு தெரியாது. கிழக்கிந்தியக் கம்பெனியின் கொள்ளை, திட்டமிட்டு சுரண்டப்பட்ட கொள்ளை. பணம் மட்டுமல்ல கட்டிய கோமணம், சிறுநீரகம் உட்பட சகலத்தையும் உருவிவிட்டார்கள். முகலாய அரசு வலுவிழக்க ஆரம்பித்த பின், கம்பெனி வணிகத்தை மட்டும் செய்யாமல், இந்திய அரசியலிலும் தலையிட ஆரம்பிக்கிறது. 1756இல், வங்காள நவாப், கம்பெனியை கல்கத்தாவிலிருந்து விரட்டுகிறார். அடுத்த வருடம், ராபர்ட் கிளைவ் தலைமையில், பிளாசிப் போரில் நவாப் தோற்கடிக்கப்படுகிறார். (போரெல்லாம் இல்லை.லஞ்சம் வாங்கிக்கொண்டு நவாப் படைகள் எதிரணிக்கு விலைபோய்விட்டன ). வென்ற கம்பெனி, வங்கத்தில், எல்லா ஊர்களிலும் வரி விலக்கு அளிக்கப்பட்ட கடைகள் (பேக்டரி அவுட்லட்) திறக்கிறார்கள். உப்பு, புளி, சக்கரை, தானியம், புகையிலை, கஞ்சா என எல்லா பொருட்களுக்கும் கம்பெனி கடையில் வரியில்லை. விவசாயிகள், வியாபாரிகள் மூலப்பொருட்களை கம்பெனிக்கு விற்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கொஞ்ச நாளில், உள்ளூர் வியாபாரிகளின் கடைகள் படுத்துவிட்டது. பின்பு கிளைவ், கம்பெனியின் சில முக்கியஸ்தர்களுடன் சேர்ந்து ‘பிரத்தியேக சங்கம்’ (எக்ஸ்குலுசிவ் கிளப்) ஆரம்பித்து, புகையிலை, வெற்றிலை, உப்பு ஆகியவற்றை விற்கிறார். பிரத்தியேக சங்கத்தினால், கம்பெனி வருமானம் குறைகிறது. கம்பெனியின் ‘மற்ற’ பங்குதாரர்கள் இங்கிலாந்து பாராளுமன்றைத்தின் மூலம் சங்கத்தை கலைத்துவிட்டார்கள். இங்கிலாந்தில் ஊர், பேர் தெரியாது இருந்த கிளைவ், மிகச் சில வருடங்களில் ‘பிளாசி கோமான்’ ஆகிறார். மற்ற ‘கோமான்கள்’ கிளைவ் மீது, விசாரனை கமிஷன் அமைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கோருகிறார்கள். கமிஷன், விசாரனையின் முடிவில் ‘கிளைவ் ஒரு தியாகி. அவரையா குற்றம் சொன்னீர், இது அடுக்குமா?’ என்று தீர்ப்பு வழங்கியது. [பிரச்சனை, மிகக் குறுகிய காலத்தில் எப்படி இப்படி என்பதுதான். டாட்டா, நூறு வருடம் சேர்த்ததை, அம்பானி இருவது வருடத்தில் சேர்க்கவில்லையா ? பொறாமை பிடித்த உலகம்..சே..].கிளைவ் தற்கொலை செய்து கொண்ட பின், வாரன் ஹேஸ்டிங்ஸ் மதராஸ், பம்பாய், கல்கத்தா மூன்றையும் ஒன்றினைத்து வைசிராயகிறார். சுரண்டல் தொடர்கிறது.
இங்கே, நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, கம்பெனிக்கு முன், இங்கே வரியே இல்லையா என்றால், இருந்தது. பஞ்ச காலத்தில், வரி குறைக்கப்பட்டது / வசூலிக்கப்படவில்லை. தொடர்ந்து சில ஆண்டுகள் நல்ல விளைச்சல் இருந்தால், அடுத்து பஞ்சம் வரும் என்று எல்லோருக்கும் தெரியும். தானியங்கள் கோயில்களில், மற்ற பொது இடங்களில் சேமிக்கப்படுகிறது; பஞ்ச காலத்தில் மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. கம்பெனி ஆட்சியில், பஞ்ச காலத்திலும் நில வரியும், மற்ற வரிகளும் கறாராக வசூலிக்கப்பட்டன. வரி கட்ட முடியாதவர்கள் நிலத்தை உழ அனுமதிக்கப்படவில்லை. நிலம் மீண்டும் காடாகியது. பஞ்சத்தின் போதும், தானிய ஏற்றுமதி நடைபெறுகிறது. வங்கத்தில், ஆங்கிலேய ஆட்சியின் காலகட்டத்தில் வந்த பஞ்சங்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மடிந்துவிட்டார்கள். (சுதந்திர இந்தியாவின் முதல் சாதனை, உலக நாடுகளிடம் பிச்சை எடுத்தாவது, நம் மக்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றியதுதான்.)
வங்கக் கடலில், கங்கை, பிரம்மபுத்ரா நதிகளின் நன்னீர் கலப்பதால், வங்கத்தில் உப்பு மிக குறைவாக கிடைக்கிறது. குஜராத்தில் தான் பெரிய உப்பளங்கள் உள்ளன. (இன்றும், இந்தியாவின் மொத்த உப்பு உற்பத்தியில் 70% குஜராத்திலிருந்துதான்). மேற்கிலிருந்து உப்பு, வட இந்தியாவிற்கும், வங்க எல்லைக்கும் வரும்பொழுது, சுங்கச் சாவடிகளில் வரி வசூல் செய்யப்படுகிறது. உப்பின் மீது விதிக்கப்படும் உள்நாட்டு வரிதான், கம்பெனியின் வருவாயில் முக்கிய பங்கு. (டாஸ்மாக் வருவாயைப்போல்). ஆனால், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உப்பு, பல்வேறு வகையில் கடத்தப்படுகிறது. எப்படி தடுக்கலாம் என்று எண்ணும்போதுதான், வேலி கட்டலாம் என்ற யோசனை தோன்றுகிறது. அப்போது, கம்பெனி, மேற்கில் மேலும் விரிவடைந்துவிட்டது.

வட மேற்கு எல்லை பிராந்தியத்தில் ஆரம்பித்து, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகராஷ்டிரா என்று 2500 மைல் நீள வேலி அமைக்கப்படுகிறது. முதலில் கழிகளால் அமைக்கப்பட்ட வேலி, பராமரிப்பு செலவுகளை காரணம் காட்டி, பின்பு மரக்கன்றுகளால் அமைக்கப்படுகிறது. ( வளமான மன் இல்லாத இடங்களில் கற்களாலும், சப்பாத்தி கள்ளியாலும் வேலி கட்டப்படுகிறது). வேலியை காவல் காக்க ஒரு காவல் படை அமைக்கப்படுகிறது. 1870இல் 14000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். கடை நிலை ஊழியருக்கு சம்பளம் மிக குறைவு. லஞ்சம், கடத்தலுக்கு உடந்தை, பொய் கேஸ் ஆகியவற்றின் மூலமே அவர்கள் சம்பாதிக்கிறார்கள். விவசாயிகள் வீட்டில், உப்பு மூட்டையை இவர்களே போட்டுவிட்டு, “நீ, உப்பை, சட்டத்தை மீறி பதுக்கினாய்” என்று குற்றம்சாட்டி லஞ்சம் வாங்குகிறார்கள். (நம்ம போலீஸ், கஞ்சா கேஸ் போடுவதுபோல. அவங்க தான இவங்களோட முன்னோடி). அப்படியும், மக்கள் தலைச்சுமையில் உப்பு கடத்துகிறார்கள் (கடத்துகிறார்கள் – சரியான வார்த்தையா?). 1873இல் மட்டும் 6700 பேர், தலையில் உப்பு மூட்டைகள் கடத்தி பிடிபட்டுள்ளார்கள்.
கிட்டத்தட்ட பாதிக்கு மேல் இந்தியா வெள்ளையர்களிடம் வந்த பின், இந்த வேலி, உள்னாட்டு வணிகத்துக்கு பெரிய தடையாக மாறுகிறது. வேலி வேண்டாம், ஆனால் உப்பின் சுங்க வரி வேண்டும், என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது, தயாரிக்கும் இடத்திலேயே வரி வசூல் செய்ய முடிவு செய்கிறார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த உப்பு உற்பத்தியும், அரசின் ஏகபோக (மொனொபாலி) உரிமையாகிறது. ராஜஸ்தான் சாம்பா ஏரி மற்றொரு உப்பு கிடைக்குமிடம். ஜோத்பூர் மன்னரிடம் இருந்து மிரட்டி குத்தகைக்கு வாங்குகிறார்கள். பின்பு வேலி தேவைப்படவில்லை, கைவிடப்படுகிறது.
மக்கள் உப்பு பயன்படுத்துவதை குறைக்கிறார்கள். உப்பு சத்தில்லாமல், பல்வேறு நோய் தாக்கி, பலர் உயிரிழக்கிறார்கள். 1930 இல், உப்பு வரி பல மடங்கு குறைந்துவிட்டாலும், மக்கள் ஆழ்மனதில் நீங்கா வடு ஏற்படுத்திவிட்டது. காந்தி அதை கண்டுகொள்கிறார். நேருவும், மற்றவர்களும் நில வரியை எதிர்த்து போராடலாம் என்கிறார்கள். காந்தி உப்பையே தேர்ந்தெடுக்கிறார். உப்பு சத்தியாகிரகம் தொடங்குகிறார். அது, மக்களுக்கு ஆங்கிலேய சுரண்டலை ஒரு எளிய போராட்டம் மூலம் உணர்த்துகிறது. 1946இல் நேருவின் இடைக்கால அரசு பதவியேற்றவுடன், உப்பு வரி முழுமையாக நீக்கப்படுகிறது.
லண்டன் நூலகத்தில் வேலை செய்யும் ராய், வேலியைப் பற்றி ஏதோ ஒரு சிறு குறிப்பை காண்கிறார். யாரிடம் கேட்டாலும் அது பற்றி தெரியவில்லை. சில வருடங்கள் தீவிர அராய்ச்சிக்குபின், மூன்று முறை இந்தியா வந்து, கடைசியில் சம்பல் பள்ளத்தாக்கில் அதன் எச்சங்களை கண்டு பிடிக்கிறார். (தற்போது, வேலியின் மேல் சாலை அமைத்துவிட்டார்கள்.)
ராய் மாக்ஸ்காம் எழுதிய ‘The Great Hedge of India’ புத்தகம் கண்டிப்பாய் படியுங்கள். இந்தப் புத்தகம் வரும் வரை, இப்படி ஒரு வேலி இருந்தது பற்றிய செய்தியே தெரியவில்லை. நம்மிடம் எதிர்வினையே உருவாகவில்லை. இந்திய வரலாற்று ‘ஆய்’வாளர்களே, நீங்கள் என்னதான் செய்கிறீர் ? இது மாதிரி எத்தனை வேலிகளும், வலைகளும் இருந்தனவோ தெரியவில்லை. [ஜெயமோகன் எழுதும்வரை, இப்படி ஒரு புத்தகம் வந்ததும் எனக்கு தெரியவில்லை 😦 ].

இனி நான், ஒவ்வொரு முறை உப்பை பயன்படுத்தும் போது, நம் மக்கள் மனதில் கட்டப்பட்ட வேலியை நினைவு கூறுவேன். அதை உடைத்த தாத்தாவை நினைவு கூறுவேன். நாம் பெற்ற சுதந்திரத்தை நினைவு கூறுவேன். காந்திஜி கீ ஜெய். [இன்று காந்தியின் பிறந்த நாள்.]