கேன்கூன் கடந்த இரு தச ஆண்டில் உருவான ஒரு சுற்றுலா நகரம். அது தற்போதைய நுகர்ச்சிக் கலாச்சாரத்தின் அடையாளம். ஊரின் முக்கியத் தொழிலே சுற்றுலா தான். ஒப்புநோக்க அதை மெக்சிகோவின் கோவா என்று அழைக்கலாம்.
யுகாட்டன் தீபகற்பத்தில் பெரிய நகரம் மெரிடா. ஸ்பானியர்கள் யுகாட்டனில் வந்து இறங்கி மாயர்களை வென்று, இந்தப் பகுதியின் தலைநகராக மெரிடாவை கட்டமைத்தார்கள். கேன்கூனிலிருந்து மெரிடா செல்லும் வழியில் அமைந்துள்ளது சிச்சன் இட்சா.
இன்றைய திட்டம் சிச்சன் இட்சா செல்வது. கேன்கூனிலிருந்து சிச்சன் இட்சா செல்வதற்கு இரு வழிகள் உன்டென அறிந்தோம். ஒன்று சுங்கச் சாலை, மற்றொன்று பொது. சுற்றுலாப் பயணிகளை நம்பி சுங்கச் சாலை அமைத்துள்ளார்கள். பொது வழியாகச் சென்றால், கிராமப்புறங்களை காணலாம் என்பதால், அவ்வழியில் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். பயனம் முழுமைக்கும் கார் ஓட்டியது அருண். மனுஷனுக்கு கார் ஓட்டுவது அலுப்பே தட்டாத ஒன்று.
ஓரிடத்தில் இரு வேறு திசைகளில் ‘மெரிடா’ என்று எழுதப்படிருந்தது. ஒன்றில் ‘மெரிடா’,’லிப்ரே’ என்றும், மற்றொன்றில் ‘மெரிடா’,’சிச்சன் இட்சா’,’கோட’ என்றும் எழுதி இருந்தார்கள். வரைபடத்தை பார்த்து ‘லிப்ரே’ என்ற ஊர் இதில் இல்லை, அது எதோ சுத்து வழி போல, நாம் ‘சிச்சன் இட்சா’ என்று காட்டும் திசையில் செல்வோம் என்றேன். பிறகு, மாயனை பற்றி பேசிக்கொண்டே சென்றோம். வழியில் ஈ, காக்கை இல்லை. அருண் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை என் கதையை இடைமறித்து சுங்க வழி, சுங்கமிலா வழி பிரிவு எப்போது வரும், கிராமங்களை காணோமே, மற்ற வண்டிகள் எங்கே என்று கேட்டுகொண்டே வந்தார். நான் கதை சொல்லுகிற ஆர்வத்தில் எல்லாம் கூடிய விரைவில் வரும், நம்மைப் போல சுற்றுலாப் பயணிகளைத் தவிர அனைவரும் சுங்கச் சாலையில் சென்றுவிட்டனர், அதனால் தான் ரோடு வெறிச்சோடி உள்ளது போன்று ஒவ்வொரு முறையும் ஒரு விளக்கத்தை கொடுத்து அவரை சமாளித்தேன். ஒரு மணிநேரம் சென்ற பிறகு எனக்கும் சந்தேகம் வந்தது. தூரத்தில் toll-plaza வும் தெரிந்தது. ‘ஹி ஹி ‘ என்று அருணை பார்த்தேன். 20 USD கட்டிய பிறகு ‘லிப்ரே’ என்றால் ‘இலவசம்’ என்றும் ‘கோட’ என்றால் ‘காசு’ என்றும் புரிந்தது.
சிச்சன் இட்சாவுக்கு மதியம் போய்ச்சேர்ந்தோம். தங்கும் விடுதியில் (குறைந்த செலவில், அருமையான அறைகள். உணவும் நன்றாக இருந்தது) சிறிது ஓய்வெடுத்துவிட்டு, பிரமிடுகளையும், கட்டடங்களையும் பார்க்கச் சென்றோம். விடுதியில் இருந்து இலவச சேவையாக எங்களை தொல்பொருள் கட்டடங்களின் அருகில், காரில் இறக்கிவிட்டு சென்றார்கள். அங்கே பார்த்த இடங்கள், மிகச் சிறிதாக இருந்தன. நான் போட்டோவில் பார்த்த இடங்களின் மாதிரி வடிவம் போல இருந்தது. ஒரு மணி நேரம் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தோம். வேறு எந்த கட்டிடமும் இருப்பது போலத் தெரியவில்லை.
“தல ஏமாத்திட்டானுங்க.. இத பாக்கவா இவ்வளவு தூரம் வந்தோம் ?”
“டேய், நீ தானடா, அப்பிடி இருக்கும், இப்பிடி இருக்கும்னு பில்டப் குடுத்த..”
“பெருசாத்தான இருந்துச்சு… ஒரு வேள, கேமரா டிரிக்கா..சரி, வந்தது வந்தாச்சு, நான் இங்க உக்கார்ரேன்… உங்க கேமராவுல, இதெல்லாம், பெருசாத் தெரியர மாதிரி எடுங்க…நின்னுகிட்டே எடுத்தா, சின்னதா தெரியும். ஊர்ல போய் காட்டினா சிரிப்பானுங்க ..”
மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில், ஒரு வெள்ளைக்கார கூட்டம், ஒரு சந்தில் இருந்து வந்தது. அங்கே சென்று பார்த்தால், ஒரு நகரமே கண்முன் விரிந்தது. ஒரு பெரிய பிரமிட், ஆய்வுக்கூடம், ஆயிரம் தூண் அடங்கிய கோவில், சுற்றிலும் மதில் சுவர் அடங்கிய ஒரு விளையாட்டு மைதானம், நிறைய மேடைகள் என்று அந்த இடமே பிரம்மாண்டமாக இருந்தது. (எங்களை இறக்கிவிட்டவன், தொல்பொருள் கட்டடங்களின் பெருவாசலில் இறக்காமல், கடைக்கோடி வாசலில் இறக்கிவிட்டுள்ளான். அதனால், இடக் குழப்பம்.)

முதலில், அங்கே இருந்த வானவியல்
ஆய்வுக்கூடத்தை (எல் கராகோல்) பார்த்தோம். 902 கி.பி. இல் கட்டப்பட்ட ஆய்வுக்கூடம். மாயா கேலண்டருக்கு அளித்த முக்கியத்துவம், அதில் அவர்களுக்கு இருந்த தேர்ச்சி நாம் அறிந்ததே.
மாயா கடவுள்களில், முக்கியமான கடவுள் ‘சாக்’ எனப்படும் மழைக்கடவுள். மாயா குடுக்கும் பலிகளில் முக்கால்வாசி அவருக்குத்தான். காரணம், மாயா நிலப்பகுதியில் நிலத்தின் மேல் ஓடும் ஆறு எதுவும் இல்லை. நிலத்துக்கடியில் ஓடும் ஆறுகள் உண்டு. நிரந்தர தண்ணீர் பஞ்சம். ஆங்காங்கே, நிலத்துக்கடியில் ஓடும் ஆறுகளை இணைக்கும், இயற்கையாக உருவான கினறுகள் உள்ளன. அவை ‘சினோட்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கும் ஒரு புனிதக்குளம் இருந்தது. ‘ஜாக்குவார்’ மிருகம் மாயர்களுக்கு புனிதமான மிருகம். வீரமரணம் அடையும் வீரர்கள் ஜாக்குவார் ஆகிவிடுவார்கள் என்பது அவர்களுடைய புராதான நம்பிக்கை. அங்கே ஒரு ஜாக்குவார் ஆசனம் (சிம்மாசனம்?) இருந்தது. (ஆமா, நம்ம ஜாக்குவார் தங்கத்துக்கு யாருங்க ‘ஜாக்குவார்’னு பேர் வச்சா?”) . குக்குலுக்கான் என்ற இறக்கை வைத்த நாக தேவதையும் முக்கியமான தேவதை. இவர் மத்திய மெக்ஸிக்கோவைச் சேர்ந்த ஆஸ்டெக்குகளின் தேவதை, இங்கே வணிகர்களால் இறக்குமதி செய்யப்பட்டார் என்று விக்கிப்பீடியா சொல்கிறது. பின்னர் ஒரு ஊரில், ஆண் குறி சிலைகளை (லிங்கம்) கண்டோம். நல்ல இந்திய ஆராய்ச்சியாளர் யாராவது, மாயார்களின் கடவுளையும், நம் கடவுள்களையும் பற்றி ஆராய்ந்தால், பழங்குடி மனம் செயல்படும் விதம் பற்றி மேலும் சில புரிதல்களைக் கண்டடையலாம்.பழங்குடிகளின் மனம் ஒன்று போல இயங்குமோ என்னவோ?. [கேரளாவில் யாரோ ஒரு ‘ஆராய்ச்சியாளர்’ இந்துக்களுடைய ‘பாதாள லொகம்’ மெக்ஸிகொ என்றிருக்கிறார். இங்கே வந்து இரண்டு மாதம் தங்கினாராம். அதன் மூலம் கண்டுபிடித்தாராம். மகாபாரதத்தில் மயாசபை கட்டிய மயன் தான், இங்கே வந்து மாயா நாகரிகம் தோன்றக் காரணம் என்றிருக்கிறார். அவருக்கு பாராட்டுவிழா எல்லாம் எடுத்திருக்கிறார்கள். மயன் எப்படி இங்கே வந்தார் என்றால் ‘லெமூரியாக் கண்டம்’ மூலமாம். புரிந்துவிட்டது.)

நிறைய மாயா சிறுவர்கள் நிறைய குட்டி சிலை, ஊசிமணி, பாசிமணிகளை விற்றுக்கொண்டிருந்தார்கள். நான் ஒன்றும் வாங்கவில்லை. மகாபலிபுரம் நியாபகம் வந்தது. மாயாக்கள் உருவத்தில் சிறியவர்கள். பெண்கள் நான்கரை அடி, ஆண்கள் ஐந்து அடி. மாயா நகரங்களுக்கு இடையே நடந்த சகோதர யுத்தத்தில், சிச்சன் இத்சா அழிந்தது என்றார்கள். நீண்ட நாள் வறட்சியும் ஒரு காரணமாக இருக்கலாம். (மாயா நகரங்களைப் பற்றி, அடுத்த பகுதிகளில் பார்ப்போம்).

பிறகு, புகழ் பெற்ற ‘எல் காஸ்டிலோ’ பிரமிடை பார்த்தோம். (குக்குலுக்கான் கோயில் என்று அழைக்கப்படுகிறது). சம இரவு நாளன்று, (equinox) குக்குலுக்கான் படிகளில் இறங்கி வருவது போல் தெரியும் என்றார்கள். அன்று இரவு நடை பெற்ற ஒலி ஒளிக் காட்சியில், ஒளியில் ஒரு பாம்பு, இறங்கி வருவது போல் காட்டினார்கள். (அந்த ஒலிஒளிக் காட்சியில், ஒரு வித அங்கதத்துடனே மாயர்களை காட்டியது போல எனக்குத் தோன்றியது. மொத்தம் ஒரு மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில், பத்து நிமிடம் அவர்களைப் பற்றி சிறப்பாகச் சொல்லியிருந்தால் அதிகம். அன்றைய காலகட்டத்தை இன்றைய நியாய / அநியாய நோக்கில் விளக்கியது போலவும் இருந்தது. “பூசாரிகள் தான் மன்னர்களை ஆட்டிவைத்தார்கள். நாட்டில் நடக்கும் குழப்பங்களுக்கெல்லாம், கடவுளின் கோபம் தான் காரணம். குறி சொல்லிகளை தேர்ந்தெடுப்பது எப்படி என்றால், சினோட்டில் சிறுமிகளை தள்ளிவிடுவார்களாம். அதில் பிழைத்து வருபவர்களை ‘ஆரக்கிள்’ என்று அறிவித்து, தெய்வமாக்கிவிடுவார்களாம். ஆதாரமாக சினோட்டில் எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன என்றார்கள். மழை பெய்யவில்லையென்றால், ஆயிரக்கணக்கில் நரபலி கொடுக்கப்படும் என்றார்கள். மாயா கூடைப்பந்தாட்டத்தில் தோற்றால், பலிதான். “சரியான காட்டாண்கள்.. நாம வந்து இதுங்கள காப்பாத்தினோம்… இல்லன்னா..” என்கிற தோரனைதான். அவற்றில் சில உண்மைகள் இருந்தாலும், வெளி உலக தொடர்பே இல்லாமல், எவ்வாறு வானவியலில் சிறந்து விளங்கினார்கள், பெரிய கட்டிடங்களை கட்டினார்கள் என்று ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.
மாயா எழுத்துரு ‘வரைபட எழுத்துரு’ (heiroglypyic) வகையைச் சார்ந்தது. இப்பொழுது, மாயா மொழி பேச்சு வழக்கில் இருந்தாலும், எழுத்து வழக்கில் இல்லை. லத்தீன் எழுத்துக்கள் தான் உபயோகத்தில் உள்ளது. பின்னர் ஒரு ஊரில், எங்களிடம் நன்றாகப் பேசிய ஒரு மாயனிடம், என் பெயரை மாயனில் எழுதித் தரும்படிக்கேட்டேன். அவன் ஆங்கிலத்திலேயெ எழுதினான். இரண்டு, மூன்று முறை கேட்டபின்னும் அவன் எந்தப் படமும் வரையவில்லை. ஒரிஜினல் மாய எழுத்துருவில், அவனுக்குத் தெரிந்த எந்த மாயருக்கும் வரையத் தெரியாது, அதெல்லாம், அமெரிக்கப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் யாராவது கொஞ்சப் பேருக்குத் தெரியலாம் என்றான். மாயாக்களிடமே இருந்து யாராவது ஒருவர் வந்து அவர்கள் குலப்பாடல்கள், கிராமியக் கதைகள், தொன்மங்கள் போன்றவற்றை வைத்து ஆராய்ந்தால், நமக்கு அவர்களை பற்றி இன்னும் நிறைய தெரியலாம். (‘லேமூரியாக் கண்டம், ‘கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே’ போன்ற வகையில் இல்லாமல் இருக்க, குக்குலுக்கானிடம் பிரார்த்திப்போம்).
மதியம் வரும்பொழுது, விடுதியைச் சேர்ந்தவர்கள் எங்களை காரில் இறக்கிவிட்டு சென்றார்கள். ஒலி ஒளிக்காட்சி முடியும் பொழுது, நன்றாகவே இருட்டிவிட்டது. இருட்டிலேயே, டார்ச் உதவியுடன் நாலு மைல் நடந்து வந்தோம். அங்கே சாப்பிட்ட பொரித்த கோழி நன்றாகச் செரித்திவிட்டது. வந்து படுத்தது தெரியவில்லை, மறுநாள் அருண் எழுப்பி விட்டு கிளம்பு தம்பி, போவொம் என்றார். அடுத்த இடம், மெரிடா.