இரண்டு வருடங்களுக்கு முன் மெக்சிகோ சென்று வந்தேன். அப்பொழுதே அதைப் பற்றி விரிவான ஒரு பயணக் கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்ததால், நேரமில்லை. இப்பொழுது கூட எழுதாவிட்டால் மறந்துவிடும். அதனால், இந்தப் பதிவு.
எனக்கு மாயன் நாகரிகத்தை சென்று பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அதுவும் அப்போகலிப்டோ படம் பார்த்த பிறகு மேலும் அதிகமாகியது. நான், அமெரிக்காவின் அட்லான்டா நகரில் உள்ள ஜார்ஜியா டெக்கில் முதுநிலை கணிப்பொறியியல் படித்துக்கொண்டிருந்தேன். மெக்சிகோ செல்லலாமா என்று கேட்டாலே, நண்பர்கள் அலறினார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தினம் செய்திகளில் மெக்சிகோவின் போதைப் பொருள் கடத்தல் குழுக்களிடையே நடக்கும் கலவரம், அதில் பலியானோர் எண்ணிக்கை, இன்ன பிற மோசமான செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது. அது, எல்லோருடைய மனதிலும் ஒரு பய உணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நண்பர் அருண் (அருண்குமார் இளங்கோவன்) வருவதாகச் சொன்னார். விடுமுறையில் சில நண்பர்கள் இந்தியா சென்றுவிட்டனர். வரலாற்றைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல், குடி, கேளிக்கையில் மட்டுமே ஈடுபடும் மற்றவர்களை அழைக்க மனமில்லை.

நானும், அருணும் சேர்ந்து பயணத்திட்டம் வகுத்தோம். மாயா நாகரிகத்தை, தோற்றம், சங்க காலம், சங்கம் மருவிய காலம், ஸ்பானிய ஆக்ரமிப்பு, நிகழ்காலம் என்று விரிவாகப் பிரிக்கலாம். சில ஊர்கள் சில காலகட்டங்களுக்கு உரியவை. அடுத்த காலகட்டத்தில், அது பல்வேறு காரணங்களுக்காக கைவிடப்பட்டிருக்கும். மாயா நாகரிகத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அறிய வேண்டும் என்ற விருப்பத்தால், எல்லா கால கட்டங்களுக்கும் உரிய ஒரு ஊரையாவது பார்க்க முடிவு செய்தோம். முடிந்த வரை சுற்றுலாப் பயணிகள் செல்லாத சிறிய ஊர்களுக்கும் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டோம். எனக்கு செமஸ்டர், டிசம்பர் முதல் வாரத்திலேயே முடிந்துவிட்டது. டிசம்பர் 10 – 20 வரை சென்று வந்தால் விமான செலவுகள், தங்கும் விடுதி வாடகை, இதர செலவுகள் குறையும் என்றேன். (கிருஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நாட்களில் பயணம் செய்தால், எல்லாவற்றுக்கும் விலை அதிகம்.) அருணுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. சரி, டிசம்பர் கடைசி வாரமே போய் வருவோம் என்று முடிவு செய்தோம். மாயா நாகரிகம், மெக்சிகோவின் யுகாட்டன் தீபகற்பத்தை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ளது. கேன்கூன் நகரம் தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலா நகரம். அங்கே விமானத்தில் சென்று, பிற பகுதிகளுக்கு காரில் செல்லலாம் என்று திட்டம். கல்லூரி நூலகத்திலிருந்து மாயா நாகரிகத்தை பற்றிய சில நூல்கள், ஸ்பானிய – ஆங்கில அகராதி, வரைபடம், பயணத்துக்கு தேவையான பொருட்களுடன் எல்லாம் தயார்.
டிசம்பர் 22, அட்லாண்டாவில் கிளம்பி கேன்கூனுக்கு சென்றோம். விமானத்தில் என் அருகில் ‘பேரிளம் பெண்’ ஒருவர் வந்தார். பேசுவதற்கு ஒன்றும் இருக்காது என்று எண்ணி சிறிது கண்ணயர்ந்தேன். அவள் வைத்திருந்த லோன்லி பிளானட் புத்தகம் பேச தூண்டியது. இத்தாலியர், கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர், போன்ற விவரங்கள் அறிந்த பின்னர், இன்று / நாளை என்ன திட்டம் என்று விசாரித்தேன். ஒன்றும் இல்லை என்றாள். தங்கும் விடுதி உட்பட எதுவும் தெரியாதாம் அவளுக்கு. பத்து நாளும் என்ன செய்யவேண்டும், எங்கு தங்கவேண்டும், இன்ன பிறவற்றையும் திட்டமிட்டிருந்த எனக்கு ஆச்சிரியம். அருண், இவள் கேன்கூன் கடற்கரையில் விடுமுறை முழுதும் குடித்துவிட்டு கவிழப்போகிறாள், அதற்கு ஒரு திட்டமும் தேவையில்லை என்றார். அவள் எங்களுடன் சேர்ந்துகொண்டாள். கேன்கூனில் இறங்கி வாடகை கார் எடுக்கும் இடம் சென்றோம். முதல் அதிர்ச்சி காத்திருந்ததது. ஆட்டொமெட்டிக் கார் பதிவு செய்திருந்தோம். மானுவல் தான் உள்ளது, வேண்டுமானால், காலையில் வா, மாற்றித்தருகிறேன் என்றான். வேறு வழியில்லை. இருப்பதைக் குடு என்றோம். மெக்சிக்கோ, இந்தியாவைப் போலவே இருந்தது. கொஞ்சம் தட்டுத்தடுமாறி ஓட்டி விடுதி போய் சேர்ந்தோம்.
கேன்கூன் (cancun) என்ற கடற்கரை நகரம் உல்லாச பேர்விழிகளுக்காகவே கட்டப்பட்ட ஒரு நகரம். ஊரே, ஒரு பெரிய கேளிக்கை விடுதி போல இருந்தது. இரவு கேன்கூன் கடற்கரையை பார்க்க மூவரும் சென்றோம். நடுநிசி ஆகிவிட்டதால் இன்னும் இருவது நிமிடத்தில் விடுதிக்கு செல்வோம் என்றேன். கடற்கரையில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்று பிளான் போடுகிறதே இது, என்று அவள் என்னை முறைக்க, முன்பின் தெரியாதவர்களுடன் ஊர் சுத்துதே இது, என்று நானும் வெறித்தேன்.
மறுநாள் காலை சிற்றுண்டிக்கு பின் அவளிடம் விடை பெற்று மாயன் நகரங்களை நோக்கி பயணித்தோம்.