கேள்வி : ‘இந்தியா ஏன் ஒரே நாடாக உள்ளது?’, ‘எவ்வளவு நாள் ஒரே நாடாக இருக்கும்?’, ‘இந்தியாவிற்கு ஜனநாயகம் ஒத்துவருமா?’
பதில்: ‘காந்திக்குப் பின் இந்தியா’, ராமச்சந்திர குகா அவர்கள் 2007 ஆம் ஆண்டு எழுதிய முக்கியமான நூல். நவின இந்தியாவின் வரலாறை 900 பக்கங்களில், மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, விரிவான விடையாக எழுதியுள்ளார்.
********

“இந்தியாவிற்கு மக்களாட்சி ஒத்துவராது, கம்யூனிசமோ அல்லது ராணுவ ஆட்சியோ தான் சரிப்படும்”, “ஐரோப்பாகூட ஒரு நாள், ஒரே நாடாகலாம், இந்தியா கண்டிப்பாக ஆகமுடியாது”, “மதராசிக்கும் பஞ்ஞாபிக்கும் இருக்கும் இடைவெளி ஐரிஷ்க்கும் ஸ்பானியர்களுக்கும் உள்ள இடைவெளியை விட அதிகம். அவர்களாவது ஒரே நாடாவாவது, நடப்பதை பேசுங்கள்” என்று அன்றைய அறிவுஜிவிகள் (வேற யார், அமெரிக்க/ஐரோப்பியர்கள் தான்) மீண்டும் மீண்டும் கவலைப் படுகிறார்கள். “இந்தியாவிலிருந்து வெள்ளையர்கள் நீங்கினால், பிராமன ஆதிக்கம் ஒங்கி, இந்தியாவை ஒரு 500 வருடம் பின்நோக்கி கொண்டுசெல்வார்கள், நீதிமன்றம், ரயில்வே உட்பட ஆங்கிலேயருடைய சாதனைகளை அழித்துவிடுவார்கள். தேவைப்பட்டால், ஜெர்மானியர்களின் துனைகொண்டு இந்தக் கூட்டத்தை அடக்க வேண்டும்” என்று வின்ச்டன் சர்ச்சில் ஒரு படி மேலே போய் ஆதங்கப்படுகிறார்.
டைம், நியுயார்க் டைம்ஸ், கார்டியன் போன்ற பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக அவநம்பிக்கை எழுதிக்குவிக்கப்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடையும் போது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு பிரதமர் இறக்கும் போதும், கலவரங்களின் போதும் இந்த அச்சங்கள், அவநம்பிக்கைகள் மீண்டும் உயிர்கொள்கின்றன. ஒவ்வொரு தச ஆண்டின் முடிவிலும், இந்தியா சந்தித்த மோசமான தச ஆண்டு இதுதான் என்றும், இந்தியாவின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறி என்றும் எழுதப்படுகிறது. இவற்றை எல்லாம் மீறி இந்தியா எழுந்து நின்றதின் கதை இந்தப் புத்தகம்.
குகா, இந்நூலில் தன் கருத்துக்களை, மிகக்குறைந்த இடங்களில் மட்டுமே நேரிடையாகக் கூறுகிறார். பெரும்பாலான இடங்களில் அன்றைய சூழ்நிலையில் வெளிவந்த பத்திரிக்கை செய்திகள், தலைவர்களின் பேட்டிகள், அறிஞர்களின் கருத்துக்கள் அகியவற்றை தொகுத்து அளிப்பதின் மூலம், தன் கருத்துகளை முன்வைக்கிறார். ஊகங்களின் மேல் இல்லாமல், உறுதிபடுத்தப்படக்கூடிய தகவல்களின் மேல் மட்டுமே நூலைக் கட்டமைத்துள்ளதால், நூலின் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. நூலில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை மிக அழகாக கோர்த்துக்காட்டியதே குகாவின் சாதனை.
*****——-*****

நூலை ஐந்து பிரிவாகப் பிரித்துள்ளார். முதல் பிரிவில், சுதந்திரம் முதல் 1950 வரையிலான மிக முக்கியமான காலகட்டத்தை விவரிக்கிறார். “இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துள்ளது, காங்கிரஸ்க்கு அல்ல” என்ற காந்தியின் அறிவுரையின் பேரில், நேரு, எதிர்கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் தருகிறார். அவர்களில் முக்கியமானவர் அம்பேத்கர். நேரு, படேல், அம்பேத்கர் மூவரையும் “இந்தியாவின் மும்மூர்த்திகள்” என்று வர்னிக்கிறார். காந்தி நட்ட செடியை, வாடாமல் காத்த மும்மூர்த்திகளின் செயல்கள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்த 500 குறுநில மன்னர்களை வழிக்கு கொண்டுவந்தது, இந்தியா-பாக் பிரிவினையின்போது, எற்பட்ட கலவரத்தை அடக்க ரானுவத்தை பயன்படுத்தாமல், வெள்ளையர்களின் குடியிருப்புகளைக் காக்க பயன்படுத்தியது (அப்போது, இந்தியாவிலேயே பாதுகாப்பானவர்கள் வெள்ளையர்கள்தான் என்கிறார் குகா)., மவுண்ட்பேட்டன் இந்தியாவிலிருந்து சென்றவுடன், கூலிக்கு ஆட்களை அமர்த்தி, தன் கோனத்தில் இந்தியாவைப் பற்றியும், தன்னைப்பற்றியும் பல்வேறு புத்தகங்களை எழுதுக்கொள்வது பொன்ற நகைச்சுவை (dark humor) காட்சிகளும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. காஷ்மீர், நாகலாந்து பிரச்சனைகளைப் பற்றி விரிவாக விவாதிக்கிறார். (இவற்றைப் பற்றி தனியாக ஒரு பதிவிடலாம் என்றிருக்கிறேன்).
இரண்டாவது பிரிவில், 1952 இல் நடைபெற்ற முதல் தேர்தலிலிருந்து நேருவின் மறைவு வரை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவிக்கு “நேருவின் இந்தியா” என்று சரியாக பெயரிட்டுள்ளார். “உலக வரலாறின் மிகப் பெரிய சூதாட்டம்” என்று இந்தியாவின் முதல் தேர்தல் வர்னிக்கப்படுகிறது. ஓட்டுப்பெட்டியை பர்க்காவிற்குள் மறைத்து எடுத்துச்சென்ற பெண், பனிக்காலம் வந்துவிடும் என்பதால், ஆறு மாதத்திற்கு முன்பே ஓட்டுப் போட்ட ஊர், என்பது போல பல்வேறு குட்டித் தகவல்களின் மூலம் தேர்தலை சுவாரஸ்யமாக கூறிச்செல்கிறார். மதச்சார்பின்மை, ஜனநாயகம், அணி சேராமை, கருத்துச் சுதந்திரம் ஆகிவற்றின் மேல் அபார நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார் நேரு. மொழி வாரியாக மாநிலங்கள் அமைத்தல், பல்வெறு சிறு சட்டங்களாக நிறைவேற்றப்பட்ட இந்து சிவில் சட்டம், நேரு / மஹானுலொபிஸ் கூட்டணியின் ஐந்து ஆண்டுத்திட்டங்கள் ஆகிவை இதில் இடம்பெறுகின்றன. படேல் மறைவிற்குபின், நேருவின் கருத்துக்களை எதிர்ப்பதற்கு யாரும் இல்லை, இருப்பினும் நேரு சர்வாதிகாரியாக நடந்துகொள்ளவில்லை என்கிறார் குகா.1957 இல், உலகிலேயே முதன்முதலாக கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிச அரசு பதவியேற்கிறது. நேரு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர் என்ற எண்ணம், அவர் கேரள அரசை டிஸ்மிஸ் செய்யும் பொழுது சிதைகிறது. சீனா-இந்தியப் போரால் நேருவுடைய வெளியுறக்கொள்கைக்கும், அவருடைய ஆளுமைக்கும், பெருத்த அடி விழுகிறது.
நேருவின் மறைவிற்கு பின், சாஸ்திரி பிரதமராகிறார். இந்தியா உனவு உற்பத்தியில் தன்நிறைவு அடைவது, இந்தி திணிப்பை திரும்பப்பெறுவது ஆகியவை இளம் இந்தியாவின் மெல் உள்ள நம்பிக்கையை துளிர்க்கச்செய்யும் அம்சங்கள். மற்றபடி மூன்றாம் பிரிவிலும் இந்தியா சந்தித்த சவால்கள் ஏராளம்.
நான்கவது பிரிவை பற்றி சுருக்கமாக சொல்வதென்றால், நேருவின் இந்தியாவை அசைத்துப்பார்த்த இந்திரா காந்தியின்

செயல்களின் தொகுப்பு எனலாம். குகா தொகுத்திருக்கும் நிகழ்வுகளை பார்க்கும் பொழுது, காந்தி மற்றும் நேரு இந்தியாவிற்கு கிடைத்தது, இந்தியாவின் நல்லூழ் என்பதைத்தவிர வேறு என்ன சொல்வது ?. இந்திரா காந்தி காலகட்டத்தில், இந்தியப் பொருளாதாரம், முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அரசுகள் கலைக்கப்படுகிறது. உச்சகட்டமாக அவசரநிலை கொண்டுவரப்படுகிறது, காங்கிரஸின் உட்கட்சி ஜனநாயகம் அடியோடு அழிக்கப்படுகிறது. கொள்கைகளின் மேல் நடத்தப்பட்ட ஆட்சி மாறி தனி நபர் துதி பாடும் அமைப்பாக ஆட்சி மாறுகிறது. 1971 போரில் தெளிவாக முடிவெடுத்தது மட்டுமெ இந்திராவின் சாதனையாக குகா குறிப்பிடுகிறார். இவருடைய காலத்தில் நான் ஆரம்பத்தில் கூறிய அவநம்பிக்கைகள் மேற்குலக அறிவுஜீவிகளிடம் மட்டுமின்றி இந்தியர்களிடமும் பரவுகிறது. ஒரு சோக நாவலைப் படிக்கும் உணர்வுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
கடைசி பிரிவு 1990 – தற்சமயம் வறை கால அடிப்படையில் (chronological order) இல்லாமல் , முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளது. மண்டல் கமிஷன், ஊழல், தாராளமயமாக்கல், நவீன இந்தியாவின் எழுச்சி ஆகியவற்றை விரிவாக ஆராய்கிறார்.
மதக்கலவரம் எங்கே யாரால் ஆரம்பிக்கப்பட்டாலும், கடைசியில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது முஸ்லீம்களே என்பதை தகவல்களின் மூலம் நிறுவுகிறார். சுதந்திர இந்தியாவில், தலித்துகளுக்கு ஒரு அம்பேத்கர் கிடைத்தைப்போல், முஸ்லீம்களுக்கு ஒரு தலைவர் இல்லாததின் விளைவையும் கோடிட்டு காட்டுகிறார். இந்துக்களை, ஒரு சின்ன நிலப் பிரச்சனையால் பா.ஜ.க. எவ்வாறு ஒருங்கினைத்து அரசியல் ஆதாயம் அடைந்தது என்பதையும் விளக்குகிறார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததிக்கு பிறகு தலித்துகளின் மேல், வன்முறை அதிகரிப்பதையும், பின் தங்கிய வகுப்புகளுக்கு அதிகாரம் கிடைத்தபின், அது மேலும் அதிகரிப்பதையும் குறிப்பிடுகிறார். தலித்துக்கள் புதிய எழுச்சியுடன் போராட ஆரம்பித்ததன் விளைவுகளே அவர்களின் மேல் ஏற்படும் வன்முறை என்பதை தெளிவுபடுத்துகிறார்.
புத்தகம் முழுவதும் ஊடுபாவாக இந்திய அயலுறவுக்கொள்கை விவாதிக்கப்படுகிறது. கடைசியில் சினிமா, க்ரிக்கட் போன்றவற்றின் பங்களிப்பையும் குறிப்பிடத்தவறவில்லை.

**** —– ****
இந்தப் புத்தகத்தை படித்தபின், “இந்தியாவிற்கு ஜனநாயகம் காந்தியின் கொடை” என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறுவது எவ்வகை மிகைப்படுத்துத்துதலும் இல்லை என்றே எனக்குப்படுகிறது. ஜனநாயகத்தின் மூலமே இந்தியா தான் சந்தித்த சவால்களை வென்று வீறு நடை போடுகிறது என்பதை தெள்ளத் தெளிவாக இதை விட எழுத முடியுமா என்று தெரியவில்லை. வரலாறின் மேல் காதல் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.